top of page
library_1.jpg
Writer's pictureTamil Bookshelf

அடிமனம் - II

கவிஞர் பெரியசாமித்தூரன்



பொருளடக்கம்

7. அடிமனம் வகுத்த வாய்க்கால்

8. அதீத அகம்

9. அடிமன விந்தைகள்

10. இயல்பூக்கம்

11. கவலை

12. கனவு

13. அரக்கனின் ஆதிக்கம்



அடிமனம் வகுத்த வாய்க்கால்


சில பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிகமாக அன்புகாட்டுவதில்லை. குழந்தைகளிடம் அன்பிருந்தாலும் சாதாரணமாக அதை வெளிக்குக் காட்டுவதில்லை. ஆனால் குழந்தைகள் நோய்வாய்ப் பட்டால் அப்பொழுது அவற்றினிடம் விசேஷமான அன்பும் கவனமும் செலுத்துவார்கள். நோய் வந்துவிட்டதே என்று பெரிதும் கவலைப் படுவார்கள். இதைக் கண்டு ஒரு சில குழந்தைகள் அந்த அன்பையும் கவனத்தையும் பெறுவதற்காகவே நோயாகப் படுத்து விடுவதுண்டு. குழந்தை தெரிந்தே அவ்வாறு செய்வதாகக் கருத வேண்டியதில்லை. எப்படியோ அந்த நிலைமை உண்டாகுமாறு இந்த மாய மனம் செய்து விடுகிறது.


சிலருக்கு எதிர்பாராத ஒரு துரதிஷ்டம் அல்லது துன்பம் வந்துவிடுகிறது. அவர்களில் ஒரு சிலர் ஏதாவது ஒரு துறையில் தங்கள் மனத்தை முழுவதும் செலுத்தி அந்தத் துன்பத்தை மெதுவாக மறக்கிறார்கள். ஒருவர் சமூக சேவையிலே ஈடுபடலாம்; ஒருவர் கலைத் துறையிலே இறங்கலாம்; ஒருவர் ஒரு பெரிய தொழில் முறையிலே செல்லலாம். இவ்வாறு ஏதாவது ஒரு துறையில் சென்று தங்கள் துன்பத்தை மறக்கிறார்கள். மற்றும் சிலருக்கு இவ்வாறு ஒன்றும் செய்ய முடிகிறதில்லை. துன்பத்தை மறக்கவும் முடியாமல் அதை எதிர்த்துப் போராடி உண்மையை உணர்ந்து துணிவோடு நிற்கவும் முடியாமல் அவர்கள் தடுமாறுகிறார்கள். இப்படிப் பட்டவர்களிடந்தான் மனக்கோளாறுகள் தோன்றுகின்றன.


வேறொரு வகையில் மனக் கோளாறுகள் தோன்றுவதையும் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். மனத்திலே ஏதாவதொரு இச்சை தோன்றுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அது இழிந்ததாக இருக்கலாம் அல்லது சமூகம் ஏற்காததாக இருக்கலாம். அதே சமயத்தில் அந்த இச்சையை எதிர்த்து வேறொரு சக்தி மனத்தில் தோன்றுகிறது. இரண்டிற்கும் நனவு மனத்திலேயே போராட்டம் நடைபெறுகிறது. “அந்த இச்சைப்படி நடக்கக் கூடாது; அது இழிந்தது” என்கிற சக்தி வலுவடைந்து விடுகிறதென்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அந்த இச்சையின் வலுக் குறைந்து மறைந்து போகிறது. இவ்விதம்தான் சாதாரணமாக வாழ்க்கையில் பெரும்பாலும் நடைபெறுகிறது.


இந்தச் சமயத்திலே பிராய்டு மனத்தை எவ்வாறு பகுத்து நோக்குகிறார் என்பதைச் சற்று விரிவாக நாம் தெரிந்து கொள்ளுவது நல்லது. நனவு மனம், நனவடி மனம், நனவிலிமனம் என்று மனத்தைப் பிரிப்பது ஒருவகை. இன்னொருவகையான பிரிவினையை அடுத்த பக்கத்தில் காட்டியுள்ள படம் விளக்குகிறது.

குழந்தை பிறக்கின்றபோது அதற்கு இயல்பூக்கமாக அமைந்துள்ள சில உந்தல்களும் ஆசைகளுமே இருக்கின்றன. இவைகளெல்லாம் குழந்தைக்கு ஏதாவது ஒருவகையில் இன்பங் கொடுக்கக்கூடியனவாகவே அமைந்தவை. அதாவது குழந்தையின் மனம் பெரும்பாலும் இன்பம் தரும் செயல்களைத் தூண்டும் உந்தல்களைக் கொண்டதாகவே முதலில் அமைந்திருக்கிறது என்று பிராய்டு கூறுகிறார். இதற்கு இத் (Id) என்று பெயர். இது நனவிலி மனப்பாகமுமாகும். இதுதான் லிபிடோவின் நிலைக்களம். இங்குதான் இயல்பூக்கங்களும், இச்சைகளும் கூத்தடிக்கின்றன. இங்கே இன்பம் என்ற தத்துவமே ஆட்சி புரிகின்றது. இதற்கு நியாய அநியாயம் தெரியாது. இதற்குள்ளேதான் அடக்கப்பட்ட இச்சைகள் வந்து சேர்கின்றன. ஆனால் வாழ்க்கை என்பது வெறும் இன்பம் நாடும் செயல்களாகவே இருக்க முடியாது என்று விரைவில் குழந்தை தெரிந்து கொள்ளத் தொடங்குகிறது. தாய் தந்தையரின் நடத்தையும், சூழ்நிலை அநுபவங்களும் இந்த உணர்வு பிறப்பதற்கு உதவியாக நிற்கின்றன. இவ்வாறு உணர்வு பிறக்கப் பிறக்கக் குழந்தை தனது இன்பத்தையே நாடுவதைச் சிறிது சிறிதாக விட்டுக்கொடுத்து சமூக ஒழுங்குக்கு உட்படுவதற்குத் தயாராகிறது. அதன் காரணமாக இத் என்னும் மனப் பகுதியில் தனது இச்சைகளையே நாடும் பகுதி ஒன்றும், சமூக ஒழுங்குகளின் வலிமையால் தோன்றும் ஒரு பகுதியுமாக இரண்டு பிரிவுகள் தோன்றுகின்றன. இந்தப் புதிய பகுதியே அகம் (Ego) என்பது. ஆனால் இது இத் என்பதிலிருந்து முற்றிலும் தனிப் பட்டிருப்பதில்லை. இதன் அடிப்பகுதி இத்துடன் கலந்திருக்கிறது. இதன் ஒரு பகுதி நனவு நிலையோடும் மற்றப்பகுதி நனவிலி நிலையோடும் தொடர்புடையது என்றும் கூறலாம். இதிலிருந்துதான் அடக்கப்பட்ட இச்சைகள் இத்துக்குச் செல்கின்றன. இச்சையானது தூய்மையடைந்து சமூகத்திற்கு ஏற்றதான உந்தலாக மாறுவதும் இங்கேதான். இவ்வாறு இழிந்த இச்சைகள் தூய்மையடைவதை உயர்மடை மாற்றம் என்று கூறுவார்கள். இயல்பான உந்தல்கள் அதாவது இயல்பூக்கங்கள் இத்திலிருந்து முக்கியமாக வேலை செய்வதுபோல புலக்காட்சி (Perception) அல்லது புலன் உணர்வு அகத்திலிருந்து முக்கியமான வேலை செய்கிறது. இது நன்னெறியைப் பின்பற்ற முயல்கிறது என்று கூறலாம். ஆனால் தூங்கிப் போவதும் உண்டு. அகம் மூன்று விதமான சக்திகளால் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. வெளியுலகம் அல்லது சமுதாயத்திற்கு அது கட்டுப் படவேண்டும். அதீத அகத்தின் (Super Ego) ஆணையையும் கவனிக்க வேண்டும்; அதே சமயத்தில் இத்திலிருந்து கூத்தாடும் லிபிடோவின் ஆதிக்கத்திற்கும் உட்பட வேண்டும்.


இத்திலிருந்து கிளம்பும் உந்தல்களையும் இச்சைகளையும் திருப்திப் படுத்த இந்த அகம் தக்க சமயம் பார்த்துக் கொண்டிருக்கும்; தீமையேற்படாத முறையிலே இந்தத் திருப்தியுண்டாக்குவதற்கு அது முயலும். அப்படிச் செய்யாமல் வேறு சில சமயங்களிலே இத்தின் இச்சைகளை விட்டொழிக்கும் படியோ அல்லது அவற்றை மாற்றியமைத்துக் கொள்ளும்படியோ தூண்டும்; அல்லது அந்த இச்சைகளைத் திருப்தி செய்யும் காலத்தைத் தள்ளிப் போடவாவது முயலும்.


இத்துக்கும் அகத்திற்கும் இடையே போராட்டம் நிகழும். அகத்தால் அடக்கப்பட்ட இச்சை இத்தில் அமிழும்போதுதான் சிக்கலும் மனக் கோளாறும் ஏற்படக் காரணமாகின்றது.


அதீத அகம் என்பது அகத்தினின்று தோன்றியதாகும். இது பெரும்பாலும் நனவிலி நிலையிலிருந்து வேலை செய்கிறது. இதற்கு அகத்தின் மேல் ஆதிக்கம் செலுத்தும் வல்லமையுண்டு. இது அவ்வப்போது அகத்தினிடமுள்ள குறைகளைக் கண்டு இடித்துக் கூறுகிறது. அதீத அகத்தை மனச்சான்று என்று கூறலாம். இது சமூகம் வகுக்கின்ற ஒழுக்க முறையை ஏற்றுக் கொண்டு அகத்தை அதற் கேற்றவாறு நன்னெறியில் நிறுத்த முயல்கின்றது. அகம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற போதுதான் அடக்கப் பட்ட இச்சைகள் இத்துக்குச் சென்று பலவித மனக் கோளாறுகளுக்குக் காரணமாகின்றன.

இங்கு நாம் அடக்கலுக்கும் ஒடுக்கலுக்கும் (Suppression) உள்ள வித்தியாசத்தை நன்கு மனத்திற் கொள்ள வேண்டும். அடக்கல் என்பது நனவிலி நிலையில் நடப்பது; அடக்கப்பட்ட இச்சை இத்துக்குச் சென்று கோளாறுகளை உண்டாக்கக் காரணமாக இருக்கும். ஆனால் ஒடுக்கல் என்பது நனவு நிலையில் நடப்பது. என்னென்னவோ ஆசைகள் நம்மை அடிக்கடி பீடிக்கத் தொடங்குகின்றன; அவற்றை நாம் ஒடுக்க வேண்டியிருக்கிறது. இது நியாயமானதும் இயல்பானதுமான செயலாகும். இப்படி ஒடுக்குவதால் எவ்விதத் தீங்கும் விளைவதில்லை. நாகரிகமான ஒரு சமூகத்தில் வாழும் ஒருவனுக்கு இது அவசியமுமாகும்; இதனால் அவன் நன்மையே அடைகிறான்; சமூகமும் அமைதியோடு இருக்கின்றது.






அதீத அகம்



மனத்திலே நனவிலி மனம் என்ற ஒரு பெரும்பகுதி இருக்கிறதென்று பிராய்டு தமது ஆராய்ச்சியின் மூலம் கூறினாரல்லவா? அதிலே இயல் பூக்கங்களும், நிறைவேறாத இச்சைகளும், அடக்கப்பட்ட உந்தல்களும் அழுந்திக்கிடக்கின்றன. இவையெல்லாம் மறைமுகமாகவாவது வெளியே வந்து திருப்தியடைய முயலும்போது தான் மனக் கோளாறுகள் ஏற்படுகின்றன என்று பிராய்டு முதலில் விளக்கியபோது பொதுவாக அனைவரும் அவரை ஆமோதித்தார்கள். ஆனால் அவர் அந்த அடிமன உந்தல்களின் அடிப்படையான வேகம் பாலியல்பிலிருந்துதான் தோன்றுகிறது என்று கூறத் தொடங்கியதும் அவருக்கு எதிர்ப்பு உண்டாயிற்று.

இந்த இடத்தில் நாம் ‘பால்’ என்று எதைக் குறிப்பிடுகிறோம் என்பதை மீண்டும் சற்று விரிவாக ஆராய்ந்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதைப்பற்றிய ஒரு புதிய விளக்கத்தையும் இங்கு தெரிந்து கொள்ள வேண்டும்.


ஆண் பெண்ணின் உடல் சம்பந்தமான கலவி வேட்கையைக் காமம் என்ற சொல்லால் குறிப்பிடலாம். அந்தச் சொல்லை வழங்கும்போது அது உடலுறவையே முக்கியமாகக் குறிப்பதாக நாம் இன்று கருதுகிறோம். பிராய்டு கூறுவது இந்தக் காமமாகிய உடலுறவு மட்டுமல்ல. சில சமயங்களிலே பிராய்டு குறிப்பதை ‘அன்பு வாழ்வு’ என்று சொல்லுவதுண்டு. ஆனால் ‘அன்பு’ என்கிற சொல் பொதுப்படையானது. அதைக் கொண்டு பிராய்டின் கருத்தை விளக்க முயல்வதும் பல சமயங்களிலே குழப்பத்தை உண்டாக்கிவிடும். ஆகையால்தான் ‘பால்’ என்ற சொல்லைக் கையாள நேர்ந்திருக்கிறது. ஆங்கிலத்திலேயுள்ள செக்ஸ் (Sex) என்ற சொல்லுக்குச் சமமான சொல்லாகப் ‘பால்’ என்பதைக் கருதலாம். அவ்வாறு கொள்ளும்போது ‘பால் வாழ்க்கை’ (Sex life), ‘பாலுந்தல் (Sex drive) என்ற தொடர்கள் பிராய்டு கூறுவதை நன்கு விளக்குவனவாக ஏற்படும். எனவே பாலுந்தல் என்பது வெறும் காமம் மட்டும் அல்ல; ஆனால் அது காமத்தையும் அறவே விலக்குவதில்லை. அது அன்பின் அம்சங்களையும் கொண்ட ஒருவேகம் என்பதாக நாம் அறிய வேண்டும்.


நனவிலி மனம் என்பதை பிராய்டு பிற்காலத்தில் ‘இத்’ என்ற சொல்லால் குறிப்பிடலானார். இந்த இத்திலிருந்து கிளம்பும் வேகத்தை லிபிடோ என்று அவர் விளக்குவதையும் நாம் அறிவோம். லிபிடோவின் சக்தியாக அமைவது ‘பாலுந்தல்’ என்கிறார் பிராய்டு. இக்கருத்தையும் யுங் போன்றவர்கள் ஏற்றுக்கொள்வதில்லையென்பதையும் நாம் முன்பே அறிவோம்.


இத்திலிருந்து அகம் பிறக்கின்றது. அகத்திலிருந்து அதீத அகம் தோன்றி அதன்மேல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறது. அகம் என்பது இத்துக்கும் அதீத அகத்துக்கும் இடையிலே அகப்பட்டுக்கொண்டு தடுமாறுகிறது என்றுகூடச் சொல்லலாம். இத்துக்குத் தனது திருப்திதான் பிரதானம். அதற்கு அறநெறியைப் பற்றி யெல்லாம் கவலையில்லை. அது மனிதனுக்குள்ளேயிருக்கும் மிருகம். அதீத அகம் என்பதை மனச்சான்று என்று முன்பே கூறினேன். எது ஒழுங்கானது, எது ஒழுங்கற்றது என்று அது தீர்மானிக்கிறது. மனிதனுடைய செயல்களை மட்டுமல்லாமல் அவனுடைய எண்ணங்கள், ஆசைகள், மனோபாவங்கள் முதலியவற்றையும் சரியா தவறா என்று சீர்தூக்கிப் பார்க்கிறது. அகத்திற்கு இரண்டு பக்கத்திலும் தாக்குதல் நேரும். “இத்தின் தூண்டுதலுக்கும், அதீத அகத்தின் குற்றச்சாட்டுக்கும் இடையிலே அகம் தன்னைக் காத்துக்கொள்ள முயல்கிறது” என்று பிராய்டு அகமும் இத்தும் என்னும் தமது நூலில் கூறுகிறார்.


அகத்திலிருந்து அதீத அகம் தோன்றுவதைப் பற்றி பிராய்டு கூறும் விளக்கந்தான் மிகுந்த பரபரப்பையும் ஆட்சேபங்களையும் உண்டாக்கியது. குழந்தையின் வாழ்வு தொடங்கும்போது குழந்தை தனது இன்பத்தையே நாடும் மனப்பாங்குடையதாக இருக்கிறது. ஆண் குழந்தை தாயிடம் மிகுந்த அன்பும், பெண் குழந்தை தந்தையிடம் மிகுந்த அன்பும் கொள்ளுகின்றன. இந்த அன்பு பாலியல்பு கொண்டது என்பது பிராய்டின் கருத்து. ஆண் குழந்தை தாயிடம் அன்பு செலுத்தும்போது அதற்குப் போட்டியாக இருக்கும் தந்தையிடம் பகைமை உணர்ச்சி கொள்ளுகிறது. தந்தையின் ஸ்தானத்தை அது கைப்பற்ற முயல்கிறது. தந்தையைப்போல நடக்கவும் விரும்புகிறது. இவையெல்லாம் கைகூடாமற் போவதால் தந்தையிடம் வெறுப்புக் கொண்டு அவனை ஒழித்துவிடவும் முயல்கிறதாம். இம்மாதிரியான மனக் கோளாறை பிராய்டு ஈடிப்பஸ் மனக்கோட்டம் (Oedipus Complex) என்ற பெயரால் குறிப்பிடுகிறார்.


ஈடிப்பஸ் என்பது ஒருவனுடைய பெயர். அவனைப் பற்றிய சுவையான கதை கிரேக்க நாட்டுப் புராணங்களிலே சொல்லப்பட்டிருக்கிறது. தீப்ஸ் என்பது பண்டைக் கால கிரீஸ் தேசத்தில் ஒரு நகரம். அதை ஒரு காலத்தில் லேயஸ் என்பவன் ஆண்டு வந்ததாகப் புராணம் கூறுகிறது. லேயஸூக்கும் அவன் மனைவி ஜொக்காஸ்ட்டா என்பவளுக்கும் புத்திரனாக ஈடிப்பஸ் பிறந்தான். ஈடிப்பஸ் தனது தந்தையைக் கொல்வதோடல்லாமல் தாயையே மணப்பான் என்று அவனைப் பற்றித் தெய்வ மொழியாக வாக்குக் கூறினார்கள். அதனால் லேயஸ் அந்தக் குழந்தையை ஓர் அடிமையிடம் கொடுத்து அதைக் கொன்று விடும்படி உத்தரவிட்டான். அந்த அடிமை குழந்தையைக் கொல்லாமல் மலைக்காட்டிலே எறிந்துவிட்டு வந்துவிட்டான். ஈடிப்பஸின் கால்களில் மட்டும் காயம் உண்டாக்கினானாம். ஈடிப்பஸை இடையர்கள் கண்டெடுத்துத் தங்கள் அரசனான பாலிப்பஸ் என்பவனிடம் கொடுத்தார்கள். ஊர், பெயர் தெரியாத அந்தக் குழந்தையை அவன் தன் குழந்தையைப் போலவே வளர்த்து வருகிறான். அதன் கால்களில் ஏற்பட்ட காயத்தால் பாதங்கள் வீங்கியிருந்தமையால் வீங்கிய பாதம் என்று பொருள்படக்கூடிய ஈடிப்பஸ் என்ற பெயரால் அக்குழந்தையை அழைக்கலானார்கள். அதுவே அதன் பெயராக அமைந்துவிட்டது. ஈடிப்பஸ் இளைஞனாக வளர்ந்து வந்த காலத்தில் முன்னால் கூறிய வாக்கையே தெய்வ மொழி அவனிடமும் கூறிற்று. அவன் பாலிப்பஸே தனது தந்தையென்று நினைத்து அவனைக் கொல்லாமலிருப்பதற்காக ஊரைவிட்டு வெளியேறினான். வழியிலே அவன் தனது உண்மைத் தந்தையாகிய லேயஸைச் சந்திக்கும்படி ஏற்பட்டது. இருவருக்கும் சண்டையும் மூண்டது. அதிலே ஈடிப்பஸ் தனது தந்தையென்று தெரிந்து கொள்ளாமலேயே அவனைக் கொன்றுவிட்டான். பிறகு ஈடிப்பஸ் தீப்ஸ் நாட்டுக்குச் சென்று அந்த நாட்டுக்கு ஏற்பட்டிருந்த தீமையைப் போக்கி மக்களை மகிழ்வித்தான். அவன் செய்த உதவிக்காக மக்கள் தங்கள் ராணியாகிய ஜொக்காஸ்ட்டாவையே அவனுக்கு மணம் செய்து கொடுத்தார்கள். அதன் பிறகு திடீரென்று தீப்ஸில் கொள்ளை நோய் பாவி மக்களை வாட்டி வதைத்தது. லேயஸைக் கொன்றவன் யாரென்று கண்டு பிடிக்கும் வரையில் அந்த நோய் மக்களை வாட்டும் என்று தெய்வ மொழி கூறிற்று. அந்தக் கொலைகாரனைக் கண்டு பிடிக்க ஈடிப்பஸ் தானே புறப்பட்டான். அப்படி அவன் முயற்சி செய்யும்போது ஒரு தீர்க்கதரிசியின் மூலம் அவனுக்கு உண்மை தெரிந்தது. ஈடிப்பஸ் தன் கண்களையே குத்திக் கொண்டான். கடைசியில் காட்டில் புகுந்து மறைந்துவிட்டான். ஜொக்காஸ்ட்டா தூக்குப் போட்டுக்கொண்டு உயிர் துறந்தாள்.


இவ்வாறு தந்தையைக் கொன்று தாயை மணந்த ஒருவன் பெயரைக் கொண்டு பிராய்டு குழந்தையின் மனக் கோட்டத்திற்கு ஈடிப்பஸ் மனக்கோட்டம் என்று பெயர் வைத்தார். இத்தகைய மனக்கோட்டம் ஏற்படக்கூடிய நிலைமை எல்லோருக்கும் குழந்தைப் பருவத்தில் ஏற்படுகிறதென்று பிராய்டு சொல்லுகிறார்.

ஆனால் தந்தையை ஒழித்துவிடக் குழந்தையால் முடியுமா? அதற்குத் தாயும் இடம் கொடுப்பதில்லை; தந்தையும் இடம் கொடுப்பதில்லை. அதனால் குழந்தை தன்னுடைய வெறுப்பைத் தனக்குள்ளேயே அடக்கிக் கொள்ள வேண்டியதாகிறது. இதன் விளைவாக “தந்தை போல் ஆக வேண்டும்” என்கிற லட்சியமும், “தந்தையை ஒழித்துவிட்டுத் தாயின் அன்பு முழுவதையும் தானே அடைய முயலக்கூடாது” என்கிற எண்ணமும் உடைய அதீத அகம் தோன்றுகிறது. நாளடைவில் இந்த அதீத அகம், “இதைச் செய், இதைச் செய்யாதே” என்று அகத்திற்கு ஆணையிடத் தொடங்கி விடுகிறது. அது தந்தையின் ஸ்தானத்தையே எடுத்துக் கொள்ளுவதாகக் கூறலாம். ஆசிரியனுடைய ஸ்தானத்தையும் கொள்ளுவதாகக் கூறலாம். இவ்வாறு அது அற வாழ்க்கைக்குத் தணிக்கை அதிகாரியான மனச்சான்றாகி விடுகிறது. அதீத அகம் தவறு என்று கண்டிக்கும்போது அகம் பயந்து போய்த் தனது இச்சைகளை அடக்கி விடுகிறது. அவ்வாறு அடக்குவதாலேயே பலவகையான மனக்கோளாறுகள் ஏற்படக் காரணமாகின்றது.


நனவிலி மனத்தைப்பற்றி பிராய்டு முதலில் கூறிய போது பலர் அவரைப் பாராட்டினார்கள். ஆனால் குழந்தையின் வாழ்க்கையிலும் பாலுந்தல்தான் பெரிய சக்தியாக இருக்கிறதென்றும், ஈடிப்பஸ் மனக்கோட்டம் உண்டாகிறதென்றும் பிராய்டு கூறத் தொடங்கியபோது அவருக்குப் பல எதிர்ப்புக்கள் தோன்றலாயின. முன்பு அவரை ஆமோ தித்தவர்களிலும் பலர் அவரைவிட்டு விலகினார்கள்.


அப்படி விலகிய போதிலும் பிராய்டு தமது முயற்சியில் தளர்வடையவில்லை. தமது கருத்துக்களை விளக்கியும், தமது பரிசோதனைகளை விளக்கியும் புதிய புதிய நூல்கள் எழுதிக் கொண்டே இருந்தார்.


முதல் உலக யுத்தம் முடிந்தபிறகு பிராய்டுக்குமேலும் மேலும் பாராட்டுதல்கள் கிடைத்தன. உலகம் முழுதும் அவரை அறியலாயிற்று. உளப்பகுப்பியல் எல்லாத் துறைகளிலும் இடம்பெற்றது. கல்வி, இலக்கியம், ஓவியம், நாடகம் இவற்றிலெல்லாம் இதைப் புகுத்தினார்கள். புதிய கலை இயக்கமே இதன் அடிப்படையில் வளரத்தொடங்கியது.


பிராய்டு ஒரு பெரிய மேதை. அவருடைய ஆராய்ச்சி முடிவுகள் மனத்தைப்பற்றிய கருத்துக்களில் ஒரு புதிய சகாப்தத்தையே உண்டாக்கி விட்டன.






அடிமன விந்தைகள்


மனம் என்பதிலே வெளிமனம் (நனவு மனம்), இடை மனம், அடிமனம் (நனவிலி மனம்) என்ற முக்கியமான பகுதிகள் இருப்பதாகக் கொள்ளலாம் என்று முதலில் பார்த்தோம். ஆராய்ச்சிக்காகவும், மனத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளுவதற்காகவுந்தான் இவ்வாறு மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டோம் என்றும், உண்மையில் இப்படிப் பிரிவினை செய்த தனித் தனி பாகங்களே இல்லையென்றும் அப்பொழுதே தெளிவுபடுத்திக் கொண்டோம். மனமே ஒரு சூக்குமமான மாயம். ஆதலால் அதன் பகுதிகளும் மாயமானதே.

மனத்தை வேறொரு வகையாகப் பகுதிகள் செய்து ஆராயலாம் என்றும் கண்டோம். அந்தப் பிரிவினைப்படி இத், அகம், அதீத அகம், நனவுமனம் ஆகிய பகுதிகள் மனத்தில் இருப்பதாகக் கற்பனை செய்யலாம். இத் என்பதுதான் அடிமனம் என்று பொதுவாகக் கூறலாம். அதிலிருந்து அகம் தோன்றுகிறது. அகத்திலிருந்து அதீத அகம் தோன்றுகிறது.


இத் எப்பொழுதும் இன்பத்தையே நாடுகிறது; துன்பத்தைத் தவிர்க்க முயல்கிறது. அது சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உடன்பட விரும்புவதில்லை; சுயநலம் மிகுந்தது; பகுத்தறிவற்றது. அது தனது இச்சைகள் வாழ்க்கையிலே நிறைவேறாமற் போனால் மனக் கோட்டை கட்டுவதாலும், கனவாலும் பிரமையாலும் அவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் தந்திர சக்தி வாய்ந்தது.


இத் தைப்பற்றி நேர்முகமாக அறிந்து கொள்வது இயலாது. அது மறைந்து நிற்கிறது. அதைப்பற்றி மறை முகமாகவே நாம் ஓரளவுக்குத் தெரிந்து கொள்ளலாம். மனக் கோளாறு ஏற்பட்டுள்ள நிலையிலே அதை ஆராய முடிகிறது. ஒருவனுக்கு ஏற்படும் கனவுகளைப் பரிசீலனை செய்வதன் மூலமும் அதைப்பற்றி அறியலாம். ஒருவன் யோசனை செய்யாமல் உணர்ச்சி வசப்பட்டு உடனே ஒரு கெட்ட காரியம் செய்ய முயலுகிறானென்று வைத்துக் கொள்ளுவோம். அந்தச் சமயத்திலும் இத் வெளியாகிறது.


வாழ்க்கை முறை செம்மையாக அமைந்த மனிதனிடத்திலே அகம் சரியானபடி காரியம் செய்கிறது என்று கூறலாம்; அது இத்தை லகானிட்டுப் பிடித்து அதன்மேல் ஆதிக்கம் செலுத்தும்; அதீத அகத்தையும் தனது ஆதிக்கத்திற்குள்ளே வைத்துக் கொண்டிருக்கும். உலகத்தோடு கொண்டுள்ள தொடர்பிலும் அவனுக்கு ஏற்ற முறையிலேயே காரியங்கள் நடைபெறும். அகம் தனது கடமையைச் செவ்வனே செய்து வருகின்றபோது வாழ்க்கையில் அமைதி நிலவும். அப்பொழுது அது தனது அதிகாரத்தை இத்துக்கோ, அதீத அகத்திற்கோ, வெளியுலகத்திற்கோ பெரியதோரளவிற்கு விட்டுக்கொடுப்பதில்லை. ஆனால் அப்படி விட்டுக் கொடுக்க நேர்கின்ற காலத்தில்தான் தொல்லைகள் உண்டாகின்றன.


இத் என்பது இன்பநாட்டம் என்ற கொள்கையைப் பின் பற்றியே வேலை செய்கிறதல்லவா? ஆனால் அகம் அப்படிச் செய்வதில்லை. அது உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்னும் கொள்கையைப் பின்பற்றி நடக்கிறது. சமூகத்திற்கு உடன்பாடல்லாத காரியத்தில் அது இறங்க விரும்புவதில்லை.


அதீத அகத்தை மனச்சான்று என்று சாதாரணமாகச் சொல்லுகிறோம். இது அகத்திலிருந்து தோன்றுகிறது என்று கண்டோமல்லவா? குழந்தை முதலில் பெற்றோர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இது நல்லது, இது தீயது என்று உணர்ந்து கொள்ளுகிறது. பெற்றோர்கள் சொல்லுகிறபடி நடப்பதுதான் நல்லது, நீதிநெறி என்றெல்லாம் குழந்தை நாளடைவில் உணர்ந்து அவர்கள் கூறுகிறபடி நடந்து அவர்களுடைய நன்மதிப்பைப் பெற முயல்கிறது.


பிறகு பெற்றோரின் உதவி இல்லாமலேயே குழந்தை தானாகவே நல்லது தீயதைப் பகுத்தறிந்து நடக்கத் தொடங்குகிறது. இந்த வகையிலேதான் மனச்சான்று என்கிற அதீத அகம் தோன்றுகிறது. குழந்தை நல்ல முறையில் நடந்து கொண்டால் பெற்றோர் மகிழ்ச்சியடைகிறார்கள்; குழந்தையிடம் தங்கள் மகிழ்ச்சியைக் காட்டுகிறார்கள்; குழந்தையை அணைத்துக் கொண்டு கொஞ்சுகிறார்கள்; குழந்தைக்கு இன்பங் கொடுக்கக் கூடிய காரியங்களும் செய்கிறார்கள். ஆனால் குழந்தை தவறான முறையிலே நடந்து கொண்டால் பெற்றோர்கள் கோபமடைகிறார்கள்; முகத்தைச் சுளிக்கிறார்கள்; தாங்கள் குழந்தையின் செய்கையை ஆமோதிக்கவில்லை என்பதை வெவ்வேறு வகையில் வெளிப்படுத்துகிறார்கள்; சில சமயங்களில் குழந்தைக்கு அடிகூடக் கிடைக்கிறது. இதேபோல அதீத அகமும் செய்கிறது. அது அகத்தின் நல்ல செயலுக்காகத் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்துகிறது, தீய செயலுக்காகத் தண்டிக்கிறது. செயல்கூட வேண்டியதில்லை. நினைப்புக்கே வெகுமதியும் தண்டனையும் கிடைக்கும்.


ஒருவன் பிரம்மச்சாரியாகவே வாழத் தீர்மானிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் மனத்திலே எப்படியாவது சில சமயங்களிலே காம இச்சைகள் கிளம்பிவிடும். மனச் சான்று அந்த சமயங்களில் அவனைத் தண்டிக்கிறது. தனது இழிந்த எண்ணங்களுக்காக அவன் தன்னைத் தானே வருத்திக் கொள்ளுகிறான். பட்டினிக் கிடக்கிறான். அல்லது வேறு விதமாகத் தன்னையே தண்டித்துக் கொள்ளுகிறான். இவ்விதமாக செயல்களுக்கு மட்டுமல்லாமல் எண்ணங்களுக்காகவும் அதீத அகம் வெகுமதியோ தண்டனையோ கொடுக்கிறது.


அதீத அகம் ஒரு செயலை அல்லது எண்ணத்தை ஆமோதிக்கிறபோது அகம் பெருமையடைகிறது; உயர்ச்சியடைகிறது. ஆனால் அதீத அகம் தண்டனை கொடுக்கிறபோது அதாவது அகம் ஏதாவதொரு தீய செயல் அல்லது தீய எண்ணம் கொண்டு அதீத அகத்தால் கண்டிக்கப்படுகிறபோது குற்றம் புரிந்ததற்காக அகம் நாணமடைகிறது, தன்னைப் பற்றித் தாழ்வுணர்ச்சி கொள்ளுகிறது.


இவ்வாறு அதீத அகத்தால் வன்மையான கண்டனம் ஏற்படுகின்ற காலத்தில்தான் தீய இச்சைகள் நனவிலி மனத்தில் புதைந்து மறைகின்றன. அவையே எப்படியாவது வெளிப்பட்டு வர முயல்கின்றன. இந்த இழிந்த இச்சைகளுக்கும் அதீத அகத்திற்கும் ஏற்படுகிற போராட்டம் வலிமை யெற்று ஓங்குகிறபோதுதான் மனத்திலே குழப்பம் ஏற்பட்டுப் பலவிதமான மனக்கோளாறுகள் தோன்றுகின்றன. அடக்கப்பட்ட இழிவுணர்ச்சிகள் முற்றிலும் மறைந்து போவதில்லை. அவை எப்படியாவது வெளியேறித் தமதிச்சையைப் பூர்த்தி செய்துகொள்ள முயல்கின்றன. நேராக வெளிப்பட முடியாதபோது கனவு முதலான வழிகளிலே மறைமுகமாக வெளிப்படப் பார்க்கின்றன. அடக்கப்பட்ட தீயவுணர்ச்சிகளை அழிக்க முடியாது; ஆனால் அவற்றை அவை செல்லுகின்ற பாதையிலிருந்து மாற்றி உயர்ந்த பாதையில் செல்லும்படியாக மாற்றிவிடலாம். வயலிலே பாய்ந்து கொண்டிருக்கிற தண்ணீரை ஓரளவுக்குத்தான் கட்டித் தேக்கி நிறுத்தலாம். தண்ணீர் மேலும் மேலும் பெருகுகின்றபோது அதை என்றுமே தேக்கி நிறுத்த முடியாது. ஆனால் அது செல்லுகின்ற வாய்க்காலை அல்லது மடையை மாற்றி வேறு மடையில் போகும்படி செய்யலாம். அப்படிச் செய்யும் போது தண்ணீர் கரையை உடைக்காது; புதிய மடையிலே கரைகளின் வரம்புக்கு உட்பட்டுப் போய்க் கொண்டிருக்கும். இப்படி மடை மாற்றம் இல்லாத போதுதான் அது கரையை உடைத்துக்கொண்டு நாலா பக்கமும் சிதறியோடி நாசம் விளைவிக்கிறது. அடக்கப்பட்டு நனவிலி மனத்தில் புதைந்துள்ள தீய உணர்ச்சிகளின் விஷயமும் இதுபோலத் தான். அவற்றை நல்ல மடையிலே போகும்படி மாற்றிவிட வேண்டும். அப்படிச் செய்வதற்கு உயர்மடை மாற்றம் என்று (Sublimation) என்று பெயர்.


ஒருவனிடத்திலே போருணர்ச்சி மிகுந்திருக்கலாம். கொலை, வெறுப்பு என்ற தீய எண்ணங்கள் அவனிடத்திலே இருக்கலாம். மானிட ஜாதிக்குத் தீங்கு விளைவிக்கின்ற கொடிய கிருமிகளை அழிப்பதற்கு வேண்டிய போராட்டத்தைச் செய்ய அவன் தனது உணர்ச்சிகளை மாற்றி விடுவானானால் அவன் தனக்கும் உயர்வு தேடிக்கொள்வான்; உலகத்திற்கும் நன்மை செய்தவனாவான்.


அதீத அகத்தைப் பற்றிப் பேசவந்தவிடத்தில் மேலே குறித்த விஷயத்தைப்பற்றிக் குறிப்பாகச் சில விஷயங்களைச் சொன்னேன். தீய உணர்ச்சிகளைத் தடுப்பதற்கும் அகத்தைக் கண்டிப்பதற்கும் எவ்வாறு அதீத அகம் பயன்படுகிறதென்பதை அறிந்து கொள்வதே இங்கு முக்கிய நோக்கமாகும்.


இந்த அதீத அகம் பெற்றோரின் ஸ்தானத்தை வகிக்கத் தொடங்குகிறது என்றும் முன்பே பார்த்தோம். இது பெற்றோரின் செய்கைகளைக் கவனிப்பதால் குழந்தையிடம் நாளடைவில் வளர்வதில்லை; பெற்றோர்களின் ஆணைகளையும் கண்டனங்களையும் கொண்டே வளர்கின்றது. பெற்றோர் சொல்வதொன்று செய்வதொன்றாக இருக்கலாம். அவர்களே தங்கள் அறிவுரைக்கு மாறாக நடக்கலாம். ஆனால் அவர்கள் போதிக்கிற வழியைப் பின்பற்றியே குழந்தையின் அதீத அகம் வளர்கிறது. அதாவது பெற்றோரின் அதீத அகந்தான் குழந்தையின் அதீத அகத்தை உருவாக்குகின்றது; அவர்களுடைய நடத்தையல்ல. அப்படி உருவாகின்ற குழந்தையின் அதீத அகத்தை மேலும் வலிவடையச் செய்யும் வேறு சாதனங்களும் இருக்கின்றன. குழந்தையின் மனச்சான்றை அமைப்பதில் ஆசிரியர் முக்கிய பங்கு கொள்ளுகிறார். சமய நெறிகளைப் போதிக்கும் சான்றோர்களும், நாட்டின் வழிகாட்டிகளாக அமையும் தலைவர்களும், சமூக அமைதியைப் பாதுகாக்க உதவும் போலீஸ் முதலிய அதிகாரிகளும் வெவ்வேறு அளவில் இந்த அதீத அகத்தின் அமைப்புக்கு உதவுகிறார்கள். பெற்றோரின் நடத்தையும் அதற்குச் சாதகமாக இருப்பது மிகுந்த சிறப்புடையதாகும்.


இப்படி அமைகின்ற அதீத அகமானது ஒருவனைச் சமூகத்திற்கு அடங்கி நடக்கும் குடிமகனாகச் செய்ய உதவுகிறது. அவனிடத்திலே இயல்பாக இருக்கும்படியான தீய உந்தல்கள் சிலவற்றை ஒடுக்கிச் சமூகத்திற்கு அவற்றால் தீங்கு நேரா வண்ணம் காக்கின்றது.


பாலுந்தல் மிக வலிமையானது. வெறுப்பு பகைமை உந்தல்களும் வலிமையுள்ளவையே. இவைகளெல்லாம் கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடினால் சமூகம் நிலைகுலைந்து போகுமல்லவா? இவற்றைக் கட்டுப்படுத்தவே அதீத அகம் வேலை செய்கிறது. அதீத அகம் இந்த வகையிலே ஒரு சமூகத்தின் சம்பிரதாயங்களையும், பழக்கங்களையும், பண்பாட்டையும் காக்கும் காவலாளியாகும்.






இயல்பூக்கம்



மனத்திலே இத் என்பதுதான் மிகப் பெரிய பகுதியாக இருக்கிறதென்று பார்த்தோம். அதனுடைய ஆழத்திலே போகப் போக ஒரே இருட்டாக இருக்கிறது. அதாவது அங்குள்ளவை ஒன்றும் நமக்குத் தெரிவதில்லை. ஒரே அந்தகாரத்தில் அவை அழுந்திக் கிடக்கின்றன. இந்த அந்தகாரத்தில்தான் அடக்கப்பட்ட இழிந்த இச்சைகளும் பெரிய அதிர்ச்சியனுபவங்களும் மறைந்துள்ளன என்று தெரிந்துகொண்டோம். அதீத அகத்தால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டு அடக்கப்பட்ட இச்சைகள் இங்கே பதுங்கி நனவுக்குத் தெரியாமலிருக்கின்றன.


இவை மட்டுந்தான் இத்தில் இருப்பதாகத் தீர்மானம் செய்யக் கூடாது. அங்கே மனிதனுக்கு இயல்பாகவே அமைந்திருக்கின்ற சில உந்தல்களும் இருக்கின்றன. அவை அநுபவத்தால் கற்றுத் தெரிந்து கொண்டவை அல்ல. பிறவிலேயே அமைந்துள்ள வேகங்கள் அவை. அவற்றைப் பிறவிச் சக்திகள் என்று கூறலாம். அவை மனிதனை உந்திப் பலவகையான செயல்களிலே ஈடுபடச் செய்வதற்கு ஊக்கம் கொடுப்பதால் அவற்றை இயல் பூக்கங்கள் என்று சொல்லுகிறார்கள். கலவியூக்கம், உணவு தேடூக்கம் என்று இப்படிப் பல இயல் பூக்கங்கள் இருக்கின்றன. இவை விலங்குகளிடத்திலும் காணப்படுகின்றன. விலங்குகள் பொதுவாக இவற்றால் உந்தப்பட்டுச் செயல் புரிகின்றன. பறவை கூடுகட்டுகிறது. தூக்கணாங் குருவி அழகான கூடொன்றை நாரைக் கொண்டு பின்னி விடுகிறது. அந்த வித்தையை அதற்கு யாரும் கற்றுக் கொடுக்கவில்லை. இது இயல்பூக்கத்தால் உண்டான திறமை. ஆனால் மனிதன் விலங்குகளைப்போல முற்றிலும் இயல் பூக்கங்களின் உந்தல்களாலேயே செயல்புரிவதில்லை. அந்த இயல் பூக்கங்களால் ஏற்படும் சில இச்சைகள் இழிந்தவை என்று அவற்றை அடக்க முயலும் மனச் சான்றும் அவனிடத்திலே அமைகின்றது. அதீத அகம் அந்த வேலையை மேற்கொள்ளுகின்றது.


இயல்பூக்கங்களைப் பற்றிப் பல வகைப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இயல்பூக்கங்களின் எண்ணிக்கையை நிருணயம் செய்யவும் அவற்றால் தனித்தனி உண்டாகும் உள்ளக்கிளர்ச்சிகளை வகுக்கவும் மெக்டூகல் போன்ற மனவியலறிஞர்கள் முயன்றிருக்கிறார்கள். மெக்டூகல் பதினான்கு இயல்பூக்கங்கள் முக்கியமானவை என்று வகுத்திருக்கிறார். பிராய்டு இயல்பூக்கங்களைப் பற்றி முடிவாக ஒரு கருத்திற்கு வந்தார். அவர் கருத்தின்படி இயல்பூக்கங்களை இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கலாம். ஒருதொகுதி உயிர் நிலைபெற்றிருப்பதற்கு உதவுகின்றது. மற்றொரு தொகுதி உயிர் நீங்கிச் சாவு ஏற்படுவதற்கு உதவியாக நிற்கின்றது. சடப் பொருளாக இருந்த உலகத்திலே முதலில் எப்படியோ உயிர் தோன்றியிருக்கிறதல்லவா? அப்படித் தோன்றிய பிறகும் பழைய நிலைக்கே செல்லுவதில்தான் இந்த உயிர் வாழ்க்கை முடிகின்றது. அவ்வாறு முடிவதற்கு இந்தத் தொகுதி உதவி செய்கின்றதாம்.


உயிர் நிலைப்பதற்கு உதவி செய்யும் இயல்பூக்கங்களைப் பற்றி நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். உணவு தேடூக்கம், கலவியூக்கம் முதலானவை உயிர் நிலைப்பதற்கு உதவுகின்றன அல்லவா? இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதுபோல மற்றத் தொகுதியைச் சேர்ந்த இயல்பூக்கங்களைப்பற்றித் தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. அதற்கு அகம், அதீத அகம் ஆகியவற்றின் செயல்களைப்பற்றி இன்னும் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.


இத்திலிருந்து அகம் பிறக்கிறதென்றும், அகத்திலிருந்து அதீத அகம் பிறக்கிறதென்றும் கண்டோம். இத் தனது இச்சையைப் பூர்த்தி செய்து கொள்ளவே ஆசைப்படுகிறது; அதற்கு வேறு எண்ணம் கிடையாது. இன்ப நாட்டமே அதன் லட்சியம்.


இந்த இத் வெளியுலகத்தோடு மோதும்போது சில ஒழுங்குமுறைகளை அனுசரிக்க வேண்டிய அவசியத்தை அநுபவத்தால் அறிந்து கொள்ளுகிறது. அப்படி அறியும் பாகமே அகமாக உருவெடுக்கின்றது. ஆதலால் அகம் இன்ப நாட்டக் கொள்கையிலிருந்து வேறுபட்டு ஒழுங்கு முறை நாட்டக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக அமைகின்றது. சூழ்நிலையும் சமுதாயமும் உருவாகியிருக்கின்ற உண்மை நிலையையுணர்ந்து அவற்றிற் கேற்றவாறு நடத்தையை அமைக்கவே அகம் விரும்புகின்றது. ஆதலால் இத் தனது விருப்பம் போல் காரியம் செய்ய அகம் விடுவதில்லை. இருந்தாலும் அது இத்துக்கு விரோதமானதல்ல. சமுதாயத்திற்கு உகந்த வழியில் இத்தின் இச்சைகளை நிறைவேற்ற அது முயல்கிறது. இத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் காவல் சக்தியெல்லாம் இந்த அகத்திலேயே இருக்கின்றது. கலவியூக்கத்தால் உந்தப்பட்டு இத் பொங்கி யெழுகின்றது என்று வைத்துக் கொள்ளுவோம் அந்த நிலையிலே இத் தன் விருப்பம்போல விலங்கு முறையிலே நடக்குமானால் சமூகத்தில் அமைதி குலைந்து குழப்பமே மிஞ்சும். அந்தச் சமயத்திலே அகம் இத்தைக் கொஞ்சம் பொறுக்கும்படி கட்டுப்படுத்த முயல்கிறது. இத்தின் கலவியூக்கத்தைச் சமூகம் ஏற்றுக் கொள்ளும் வழியில் நிறைவேற்ற முயல்கிறது. கலியாணம் போன்ற சமூகம் ஏற்றுக் கொள்ளும் ஒழுங்குக்கு உட்பட்டு இத்தின் விருப்பத்தை நிறைவேற்றுகிறது. இந்த அகம் பெரும்பாலும் சூழ்நிலையோடு மோதுவதால் ஏற்படுவதாயினும் இதன் அமைப்புக்குப் பாரம்பரியமும் துணை செய்கின்றது.


சில சமயங்களிலே இத் இந்த அகத்தின் கட்டுக்கு மீறித் தொழில் செய்துவிடும். அப்போதுதான் உணர்ச்சி வேகத்தால் காரியம் நடந்ததாக நாம் கூறுகிறோம். உணர்ச்சி வேகத்தால் கொலை செய்பவர்களும் உண்டு.


அதீத அகம் லட்சியத்திலே நாட்டமுடையது. அகம் வரம்பு மீறி இத்தின் இச்சையை நிறைவேற்ற முயலும் போது அதைக் கண்டிக்கிறது. இத் தனது உணர்ச்சி வேகத்தால் இழிந்த தொழில் செய்வதையும், அகம் அந்த இழிதொழிலை வேறு வழிகளில் நிறைவேறும்படி செய்ய முயலுவதையும் அதீத அகம் கண்டிக்கும்.

ஆகவே இத்துக்கு அகம் உடந்தையான தென்றும், அதீத அகம் அகத்தையும் அதன் வாயிலாக இத்தையும் அதன் இழி செயல்களுக்காகத் தண்டிக்கிறதென்றும் தெரிந்து கொள்ளலாம் சில சமயங்களில் அதீத அகம் மிக வன்மையாகக் கண்டிப்பதால் அகம் மிகவும் நைந்துருகும். அந்த நிலையிலே ஒருவன் தன்னைத்தானே வருத்திக் கொள்ள முனைவதோடு தற்கொலை செய்து கொள்ளவும் ஒவ்வொரு சமயத்தில் எண்ணுகிறான்.  இதிலிருந்து அதீத அகம் எப்பொழுதுமே இத்துக்கு உடந்தையாக இருக்காது என்று தோன்றலாம். ஆனால் இத் மிகவும் தந்திரம் வாய்ந்தது. அப்படி லேசாக அதீத அகத்தை விட்டு விடுவதில்லை. அதீத அகத்தின் நீதி நெறி ஆர்வத்தையே சில சமயங்களில் தனது இயல் பூக்கங்களைத் திருப்தி செய்து கொள்ளப் பயன் படுத்திக்கொள்ளுகிறது.


அது எப்படி முடியும் என்ற சந்தேகம் உடனே தோன்றலாம். அதை நிவர்த்தி செய்ய ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். ஒருவன் நீதிமார்க்கத்தில் செல்லுவதிலே மிகுந்த ஆர்வமுடையவன் என்று வைத்துக் கொள்வோம். அவன் தவறு செய்கின்றவர்களிடம் கோபங்கொள்ளுகிறான், தனக்கு அதிகாரமிருந்தால் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பதன் மூலம் அந்தத் தவறான வழிகளையே ஒழித்துக் கட்ட முயல்கிறான். தவறு செய்தவர்களெல்லாம் அவன் கையில் படாதபாடு படுகிறார்கள். அவர்களை அவன் அடிக்கிறான்; சிறைப் படுத்துகிறான்; ஹிம்சை செய்கிறான். அவன் உயர்ந்த லட்சியத்தை நினைத்து இவ்வாறு கொடுமைப் படுத்துகிறானென்றாலும் அவனிடத்திலே இத்தின் விலங்குணர்ச்சிகளின் ஆதிக்கத்தைக் காண்கிறோமல்லவா? நீதிநெறியின் பெயரால் அவனுடைய விலங்குணர்ச்சிகள் தலை விரித்தாடுகின்றன. இதற்கு அவனுடைய அதீத அகமும் உடந்தையாக நின்றிருக்கிறது! இத்தின் சூழ்ச்சியிலே அதீத அகம் மயங்கிப் போய் விட்டது. இப்படி இந்த மாய இத் அதீத அகத்தையும் வஞ்சித்துக் கெடுத்துத் தனதுவிருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறது.


அதனால்தான் நம் நாட்டு மகான்களெல்லாம் எல்லா நிலைகளிலும் உணர்ச்சி வேகத்தை அடக்கி ஆள்வதையே உயர்ந்த சாதனை என்று கூறியிருக்கிறார்கள். உயர்ந்த லட்சியத்திற்காகவும் உணர்ச்சி வசப்பட்டுக் காரியம் செய்வதை அவர்கள் மிக மேலானதென்று ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த நிலைமையிலும் உள்ளத்திலே சமநிலை கொண்டிருக்க வேண்டும். மாணிக்கவாசகர் இறைவனைப் போற்றும்போது, “வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க” என்று பாடுகிறார். இயல்பூக்கங்களின் உந்தல்களான வேகத்தையே அவர் குறிப்பிடுகிறார். ஒருவனை அறநெறியின் பெயரால் தண்டிக்கவேண்டியேற்பட்டாலும் அந்த சமயத்திலும் மனத்திலே சமநிலை இருக்கவேண்டும். அறவழியை விட்டுவிலகியவர்களை சம்ஹாரம் செய்யும் இறைவனின் இதழ்களிலே புன்முறுவல் தவழ்வது போல நம்நாட்டுச் சிற்பிகள் சிற்பம் வடித்திருப்பது இந்த உன்னத நிலையைக் காட்டுவதற்கேயாகும். உள்ளத்திலே சமநிலையடைவதே மிகப் பெரிய சாதனையாகும்.


உடலைக்கொண்டு ஒருவன் உழைத்து வேலை செய்கிறானென்றால் அவனுடைய உழைப்புக்கும் ஒரு எல்லையுண்டு; அதற்கு மேலே அவனால் ஓய்வு பெறாமல் உழைக்க முடியாது அவனுடைய உடல் சக்தி முழுவதும் செலவழிந்து போகிறது; அதற்குமேலே அவன் வேலை செய்யவேண்டுமானால் புதிய சக்தி பெறுவதற்கு ஓய்வும் உணவும் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவனால் உடலைக் கொண்டு மேலும் உழைக்க முடிகிறதில்லை. இதிலிருந்து உடலின் ஆற்றல் ஓர் அளவுக்குட்பட்டது என்று தெரிகிறது. அதுபோலவே ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மனத்திற்கு உள்ள ஆற்றலும் ஓர் அளவுக்கு உட்பட்டதே. அந்த ஆற்றல் இத், அகம், அதீத அகம் ஆகிய மூன்று பகுதிகளிலும் சேர்ந்திருக்கின்றது. ஒரு பகுதியிலே அது அதிகப்படுகிறபோது வேறு இரண்டு பகுதிகளிலே அது இயல்பாகவே குறைகின்றது. தூங்கும் நிலையிலே அகத்தின் ஆற்றல் குறைகிறது. அதிலுள்ள காவல் சக்தியும் எச்சரிக்கை குறைந்து நிற்கிறது. ஆதலால் அந்த சமயத்திலே கனவின் மூலம் இத் தனது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளுகிறது.


இத்தின் ஆற்றல் மிகுதியாகவுள்ளவன் உணர்ச்சி வேகத்தால் தூண்டப்பட்டுக் காரியம் செய்வான். அகத்தின் ஆற்றல் மிக்கவன் சமூகம் உள்ள நிலையை அனுசரித்து அதற்கேற்பக் காரியம் செய்வான். அதீத அகத்தின் ஆற்றல் மிக்கவன் லட்சியவாதியாக இருப்பான்.

அதீத அகம் இத்துக்கு உடந்தையாக இருப்பதும் உண்டு என்று பார்த்தோமல்லவா? ஒருவன் தனது செயலுக்காகச் சில சமயங்களில் வருந்துகிறான்; அவமானமடைகிறான். ஏதாவது ஒரு வேளையில் இந்த அவமான உணர்ச்சி எல்லை கடந்து போகும். அப்போது அவன் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளுகிறான். இந்த நிலையிலே அதீத அகம் இத்துக்கு உடந்தையாக நின்று இத்தில் உள்ள சாவு இயல்பூக்கங்களான தொகுதிக்கு உதவியாக வேலை செய்கின்றது.


ஆரம்ப காலத்திலே பிராய்டு நனவிலி மனம் என்ற பகுதியைப் பற்றிப் பேசலானார். மனத்திலே அவ்வாறு ஒரு பகுதி இருப்பதாகவும் அது மிக வலிமை பொருந்தியதென்றும் அவர் தமது ஆராய்ச்சிகளின் மூலம் கண்டார். பிறகு நனவிலி மனம் என்று கூறுவதையும் விடுத்து இத், அகம், அதீத அகம் என்ற பிரிவுகளையே வற்புறுத்தலானார்.


இவ்வாறு கூறும்போது இத்தும் நனவிலி மனமும் ஒன்று என்றோ அல்லது அகமும் நனவுமனமும் ஒன்று என்றே கருதுவது முற்றிலும் சரியல்ல என்பது விளங்கும். இங்கே உள்ள படமும் அதைத் தெளிவாக்குவதைக் கவனிக்கலாம்.


வெளியுலகம் இத் என்பதுடன் மோதுகின்றது. அதன் பயனாக அகம் பிறக்கிறது. அகத்திலிருந்து அதீத அகம் பிறக்கிறது. நனவு மனத்தின் எல்லையைக் கடந்தே அகம் செல்லுகிறது. அங்கே நனவடி மனம் அகத்திற்கும் இத்துக்கும் இடையே எங்கோ இருக்கிறது. அகமானது நனவு மனத்தின் எல்லையையும் தாண்டியிருப்பது போலவே இத் நனவிலி மனத்தின் எல்லையையும் தாண்டியிருக்கிறது. அதீத அகம் நனவு எல்லையிலும் இருக்கிறது; அதைத் தாண்டி நனவிலிப் பகுதியிலும் அது இருக்கின்றது.






கவலை



“கவலை துறந்திங்கு வாழ்வதே வீடென்று காட்டும் மறைகளெல்லாம்” என்று பாரதியார் பாடுகிறார். உலக வாழ்க்கையிலே எத்தனையோ விதமான கவலைகள் மனிதனை வாட்டுகின்றன. அவை யெல்லாம் தாக்காதவாறு வாழக் கற்றுக் கொண்டவன் உண்மையான இன்பத்தைப் பெறுவான் என்பதில் ஐயமில்லை.

கவலையை நன்கு ஆராய்ந்து பார்த்தால் அதற்கு அடிப்படையாக இருப்பது பயம் என்று காணலாம்.


பயத்திற்கு அடிப்படை என்னவென்று ஆராய்வது சுவையான காரியம். பிறந்த குழந்தைக்கு மேலேயிருந்து கீழே திடீரென விழுவது போன்ற நிகழ்ச்சியிலே பயமுண்டாம். அந்த பயம் பிறவியிலேயே வந்திருக்கிறது என்று கூறுவார்கள். மரக் கிளைகளிலே இரவு நேரத்தைக் கழித்த ஆதி மனிதர்கள் தூக்க நிலையிலே தவறிக் கீழே விழுந்திருக்கலாம். இப்படிப் பல தடவைகளிலே பல பேர் விழுந்து விழுந்து துன்பப்பட்டதால் ஏற்பட்ட பயம் அப்படியே தலைமுறை தலைமுறையாக வந்திருக்கிறதாம். அதனால் தான் உயரத்திலிருந்து கீழே விழுவது போல் வேகமாக வருவதிலே குழந்தை பயமடைகிறது. இதே போலக் குழந்தை பெரிய சப்தத்தைக் கேட்டும் பயமடைகிறது. இடி முழக்கம் கேட்ட குழந்தை வீரிட்டு அழுகிறது. இந்த பயமும் ஆதி காலத்திலிருந்து வருகின்றதாம். இவை தவிர வேறு வகையான பயங்களெல்லாம். பின்னால் ஏற்படுகின்றன வென்றும், நல்ல முறையிலே குழந்தையை வளர்த்தால் கூடிய வரை பயங்களைக் குறைத்து விடலாம் என்றும் கூறுவார்கள்.


இருட்டைக் கண்டாலும் குழந்தைக்கு இயல்பாகவே பயம் உண்டென்றும், இந்த பயமும் பரம்பரையாக வந்தது என்றும் சிலர் கூறுவார்கள். ஆதி மனிதர் பகலை விட இரவு நேரங்களிலேதான் அதிகமான துன்பங்களை அடைந்திருக்க வேண்டும்.


இருட்டைப் பற்றிய பயம் குழந்தைக்கு இயல்பாகவே கிடையாதென்று வாதிப்பவர்கள் உண்டு. குழந்தையை இருட்டறையிலேயே தூங்க வைத்துப் பழக்கப்படுத்துவதால் இந்த இருட்டுப் பயத்தை இல்லாமலேயே செய்து விடலாம் என்பார்கள்.


பிறந்த குழந்தைக்கு எவ்விதமான பயமும் கிடையாதென்றும் பயங்களெல்லாம் பின்னால் ஏற்படுகின்றவையே என்றும் கூறுபவர்கள் உண்டு.


மேலே குறிப்பிட்ட பயங்களெல்லாம் வெளியுலகத்தால் ஏற்படக் கூடியவைகள். இவை போன்ற பயங்களல்லாமல் வேறு விதமான பயங்களும் உண்டு.


இத் என்ற மனப் பகுதியிலே பல வகையான தீய உந்தல்களும் இச்சைகளும் இருக்கின்றன. வல்லவா? அவற்றின் தூண்டலால் ஏதாவது தவறு செய்து விடுவோமோ என்கிற பயம் உண்டாகிறது. அதீத அகம் உயர்ந்த நெறி முறையை வகுக்கின்றது. அந்த நெறி முறைக்கு மாறாக நடந்து விட்டபோது அதனால் அவமானமும் பயமும் தோன்றுகின்றன.


பொதுவாகப் பார்த்தால் மனத்திற்குள்ளே உண்டாகின்ற மேலே கூறிய இரண்டு வகையான பயங்களையும் தோன்றாமல் தடுக்க வழியுண்டு என்று தெரியவரும். எண்ணத்திலும் செயலிலும் நேர்மையைக் கடைப்பிடிக்கிறவன் பயப்பட வேண்டியதில்லை. பொய் தீர்ந்தால் பயம் தீரும் என்று பாரதியார் எழுதியிருக்கிறார். நேர்மையுள்ளவன் பொய்யுரைக்க வேண்டியதில்லை. மனத்திற்குள்ளே ஏற்படுகின்ற பயங்களைப் போக்க வல்லவனுக்கு வெளியுலக பயம் பெரிதல்ல. அதையும் அவன் தன் விவேகத்தால் ஒழித்து விடமுடியும்.


இவ்வாறு பயம் தீர்ந்தவன் கவலையின்றி வாழலாம். ஆகவே அவன் மேலான இன்பம் அடைகின்றான் இதைக் கருத்திற்கொண்டுதான் வாழ்க்கை நெறியைப் பற்றிக் கூறுகின்றபோது இராமலிங்க வள்ளலார் பயம் பூச்சியமாகப் பெறவேண்டும் என்று குறிப்பாகக் காட்டியிருக்கிறார்.


மேலே விவரித்த மூன்றுவகைப் பயங்களாலும் மனிதனுக்குக் கவலை பிறக்கிறது; மனப் போராட்டங்கள் தோன்றுகின்றன. இவையெல்லாம் சேர்ந்து அவனுடைய மனிதப் பண்பாகிய ஆளுமையை (Personality) பாதிக்கின்றன.


ஆளுமை என்ற சொல் விரிவான பொருளுடையது. அது ஆளின் தன்மைகளில் ஒன்றுவிடாமல் முழுவதையும் குறிக்கின்றது. அவனுடைய மனத்தின் தன்மைகளை மட்டுமல்ல; தோற்றம், பேச்சு, நடத்தை, பண்பு எல்லா வற்றாலும் ஒருவனுக்கு ஏற்படுகின்ற முழுத்தன்மையை அது காட்டுகின்றது. அப்படிப்பட்ட ஆளுமையை உருவாக்குவதில் பாரம்பரியமும், சூழ்நிலையும், வாழ்க்கை அநுபவங்களும், கல்வியும் பங்கெடுத்துக் கொள்ளுகின்றன. கவலை, மனப் போராட்டம் முதலியவைகளுக்கும் அதில் பெரும் பங்குண்டு.


ஆகவே ஆளுமை என்பது நிலையாக ஒரே மாதிரி இருக்குமென்று கூற முடியாது. அது மாறி அமைந்து கொண்டே இருக்கிறது. முக்கியமாக ஒருவனுடைய வாழ்க்கையின் முதல் இருபது ஆண்டுகள் ஆளுமையை ஒருவாறு நிரந்தரமாக அமைப்பதற்குப் பெரிதும் காரணமாக இருக்கின்றன. குழந்தைப் பருவத்திலும், குமரப் பருவத்திலும் அதன் வளர்ச்சி அதிகம். பிறகு முதிர்ந்த பருவத்தில் ஓரளவிற்கு மாறுதலின்றி நிலைபெற்றுவிடுகிறது.


இந்த ஆளுமையைப் பிரதானமாகக் கருதி பிராய்டு தமது உளப்பகுப்பியல் கொள்கையை வகுக்கிறார். ஆளுமை எவ்வாறு அமைகின்றதோ அதற்கேற்றவாறு தான் ஒருவனுடைய வாழ்க்கையின் சிறப்பும், தாழ்வும், வெற்றியும், தோல்வியும் ஏற்படுகின்றன.


ஒருவனுடைய இத் என்ற மனப் பகுதியின் வேகங்கள் சமூகச் சூழ்நிலையின் சட்டதிட்டங்கள், சம்பிரதாயங்கள், கட்டுபாடுகள் முதலியவற்றோடு மோதுகின்றன. மோதி அவற்றால் பலவகையாக மாறியமைகின்றன. இதன் விளைவாகவே ஆளுமை அமைகிறது என்றும் இத்தின் வேகங்களில் பால் உந்தலே அடிப்படையானதும் பிரதானமானதும் என்றும் பிராய்டு கருதுகிறார்.


ஆனால் அவரோடு தொடக்கத்தில் ஒத்துழைத்துப் பிறகு கருத்து மாறுபட்ட ஆட்லரும் யுங்கும் இந்த ஆளுமையின் அமைப்பைப் பற்றி வேறு வேறு, விதமான எண்ணம் கொண்டிருக்கிறார்கள்.


மனிதன் பிறந்து குழந்தையாக இருக்கும் பருவத்தில் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய சக்தியில்லாதவனாக இருக்கிறான். சூழ்நிலையிலிருப்போரைச் சார்ந்து நின்று அவர்களுடைய உதவியை எதிர்பார்ப்பவனாகவே அவன் தனது வாழ்க்கையைத் தொடங்குகிறான். அதன் காரணமாக அவன் மனத்திலே தான் மற்றவர்களை விடத் தாழ்ந்தவன் என்கிற தாழ்வுணர்ச்சி தோன்றுகிறது. இதைப் போக்க அவன் ஏதாவது ஒரு வகையில் மற்றவர்களைவிடத் தான் உயர்ந்தவன் என்று காட்ட வேண்டுமென்ற உயர்வுந்தல் பிறக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டே அவன் வாழ்க்கை அமைகிறது; அதுவே அவனுடைய ஆளுமையை உருவாக்குகிறது என்று ஆட்லர் கூறுகிறார்.


நனவிலி மனத்தின் அம்சமாக ஒருவனுடைய மூதாதையர்களின் இச்சைகளும் உணர்ச்சிகளும் இருக்கின்றன வென்றும், மனித இனத்தின் நனவிலி உணர்ச்சிகளும் ஒருவனுடைய நனவிலி மனத்தில் புதைந்திருக்கின்றன வென்றும் யுங் கருதுகிறார். நனவிலி மனத்தின் அடிப்படைச் சக்தி ஆன்மா சம்பந்தப்பட்டதாக இருக்கிறதென்பது இவருடைய ஆராய்ச்சியின் முடிவு. இந்த சக்தி சமூகத்திலே எவ்வாறு பயனடைகின்றதோ அதற்கேற்றவாறு ஒருவனுடைய ஆளுமை அமைகின்றதென்று யுங் கூறுகிறார்.






கனவு

கனவு என்பது ஒரு சுவையான அநுபவம். உறங்கும் நிலையிலே கனவு தோன்றுகிறது. கனவு காணாதவர்களேயாரும் இல்லை என்று கூறலாம். கனவு ஏன் உண்டாகிறது; அதன் பொருள் என்ன; அதனால் மனிதனுக்கு நன்மையுண்டா என்றெல்லாம் ஆராய்வது மேலும் சுவையான காரியமாகும்.


ஹிஸ்டிரியா முதலான மனக் கோளாறுகளை ஆராய்ந்து அவற்றிற்குச் சிகிச்சை செய்யும் தொழிலிலே பிராய்டு ஈடுபட்டிருந்தார். இந்த சிகிச்சை முறையின் ஆரம்ப நிலையிலே மனவசியம் முக்கியமான சாதனமாக இருந்தது. மனவசிய முறை முற்றிலும் திருப்தியாக இல்லையென்று அநுபவத்தில் கண்ட பிராய்டு தடையில் தொடர்முறை, கனவுப் பகுப்பு முறை முதலியவற்றை வகுத்தாரென்றும், அவற்றைப் பயன்படுத்துங் காலத்தில்தான் அவர் மனத்திலே நனவிலிமனம் என்ற பகுதியிருப்பதைக் கண்டறிந்தாரென்றும் முன்பே அறிந்து கொண்டிருக்கிறோம்.


மனிதன் காண்கின்ற கனவுகளை ஆராய்வதே ஒரு பெரிய கலையாக ஏற்பட்டுவிட்டது. அதன் பாஷையே தனி. ஏனென்றால் கனவிலே தோன்றுகிற நிகழ்ச்சிகள் சமீபத்திலே வாழ்க்கையில் ஏற்பட்ட அநுபவங்களைக் கொண்டிருந்தாலும் அவை குறிக்கின்ற விஷயங்கள் வேறாக இருக்கும். வாழ்க்கை அநுபவங்கள் வெறும் மேற்போர்வைதான்; அற்றின் மூலம் நனவிலி மனத்திலிலுள்ள இச்சைகள், போராட்டங்கள் ஆகியவை மாறுவேஷந்தரித்து வெளியாகின்றன. அவற்றின் வேஷத்திற்குப் பொருள் கண்டுபிடிப்பதே ஒரு நுட்பமான வேலை. அடக்கப்பட்ட இச்சைகள், நிறைவேறாத ஆசைகள் எல்லாம் மனச்சான்றுக்குத் தப்பித்துக் கொண்டு வெளியே கனவில் தோன்றுவதற்கு இப்படி மாறுவேஷம் போடுகின்றனவாம். மேலும் கனவிலே தோன்றுகிற பொருள்களைச் சின்னங்களாகப் பலசமயங்களில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று பிராய்டு கூறுகிறார். இந்தச் சின்னங்கள் மூலமாகவும் இச்சைகள் மனச்சான்றுக்குத் தப்பி வெளிவருகின்றனவாம்.


உதாரணமாகக் கனவிலே தோன்றுகிற பாம்பு ஆணின் இனப் பெருக்கு உறுப்பைக் குறிக்கின்றதாம். கனவிலே தோன்றுகிற அரசி அல்லது ஆசிரியை அல்லது வேலைக்காரி ஒருவனுடைய தாயைக் குறிக்கலாம். ஒருவனுடைய சொந்த சகோதரி ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் நர்ஸாகக் கனவிலே காணப்படலாம். நர்ஸை சாதாரணமாக சகோதரி என்று அழைப்பது வழக்க மல்லவா?


இவ்வாறு கனவிலே மாறுவேஷங்களும் சின்னங்களும் தோன்றுகின்றன. இவை யெல்லாம் உலகத்திலுள்ள எல்லா நாட்டினருக்கும் பொதுவாக இருக்கு மென்று கருதலாகாது. ஒரு சில பொதுவாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவை அந்தந்த நாட்டின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சமூக சம்பிரதாயங்கள், சமயக் கோட்பாடுகள் முதலானவற்றைப் பொருத்து அமையும்.


பாம்பு என்கிற சின்னத்தால் நம் நாட்டிலே குண்டலினி சக்தியைக் குறிப்பிடுகிறோம். பாம்பாட்டிச் சித்தர் பாடலிலே வரும் பாம்பு இந்தக் குண்டலினி சக்திதான். ஆதலால் இந்தக் கருத்திலே ஊறியிருக்கின்ற ஒருவனுடைய கனவில் வரும் பாம்பு மனிதனுக்குள்ளே மறைந்து கிடக்கும் ஆன்மிக சக்தியைக் குறிப்பதாக இருக்கலாம். ஆகவே கனவுச் சின்னங்களுக்கு ஒருவனுடைய பண்புக்கு ஏற்றவாறு பொருள் கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது.


இதைப்பற்றி இன்னும் சற்று விரிவாகப் பார்த்தோமானால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சில கனவுக் குறியீடுகள், சின்னங்கள் வேறுபட்டிருக்கும். அது அவனுடைய தனிப்பட்டசூழ்நிலை அநுபவங்கள், பண்பாடு முதலியவற்றைப் பொருத்திருக்கும். இதையும் கவனத்தில் வைத்துக் கொண்டு கனவின் பொருளை ஆராய முற்பட வேண்டும்.


ஆயிரக்கணக்கான கனவுகளை ஆராய்ந்து அவற்றைப் பற்றிப் பல கருத்துக்களை பிராய்டு வெளியிட்டிருக்கின்றார். கனவுகளின் விளக்கம் என்று அவர் ஒரு பெரிய நூல் எழுதியிருக்கிறார். அவருடைய கருத்துப்படி ஒவ்வொரு கனவையும் பகுத்துப் பார்த்து விளக்க முடியும். “ஒவ்வொரு கனவுக்கும் குறிப்பான பொருள் இருக்கின்றது என்று நான் நிச்சயமாகக் கூறுவேன். கனவை விஞ்ஞான முறையில் விளக்குவதும் சாத்தியமானதே” என்று பிராய்டு எழுதுகிறார்.


ஒவ்வொரு கனவுக்கும் ஒரு விளக்கம் கண்டுபிடிக்கலாமென்றும், கனவில் தோன்றுகின்ற ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் விளக்கம் இருந்தே தீர வேண்டும் என்றும் பிராய்டு வற்புறுத்துவதைச் சில உளவியல் அறிஞர்கள் ஒப்புக் கொள்ளுவதில்லை. இருந்தாலும் பொதுப்படையாகப் பார்க்கும்போது பிராய்டின் சித்தாந்தம் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.


கனவைப் பகுத்துப் பார்த்து அதற்கு விளக்கம் கூறுவது மிக நுட்பமான காரியம். விஞ்ஞானப் பரி சோதனைக் கூடத்திலே பெளதிகம் ரசாயனம் முதலிய துறைகளிலே ஆராய்ச்சி செய்வது போலத் திட்டமான முறைகளிலே கனவை ஆராய்வதென்பது சாத்தியமில்லை. இன்ன கனவுக்கு இன்ன பொருள் என்றும் முன்கூட்டியே சூத்திரங்கள் உண்டாக்கி விட முடியாது. “ஒரே கனவு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு பொருள் கொண்டிருக்கும்; ஒரே மாதிரியான கனவை வேறு வேறு மனிதர்கள் கண்டால் அப்பொழுதும் அம் மனிதர்களின் மனப்பாங்குக்கு ஏற்ப அதற்கு வெவ்வேறு பொருள் இருக்கும்” என்று பிராய்டு கூறியிருக்கிறார்.


ஆதலால் கனவைப் பகுத்து அதன் காரணத்தையும் அது குறிக்கும் பொருளையும் அறிவதற்கு நுட்பமான திறமையும் அநுபவமும் வேண்டும். மேலும் கனவைப் பகுத்து ஆராய்வதோடு ஒருவனுடைய நடத்தையையும் கவனிக்க வேண்டும். தடையில் தொடர் முறையாலும் அவன் மனத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போது ஒவ்வொரு வகையான சோதனையும் மற்றவற்றிற்கு உதவியாக நின்று அவன் மனத்தில் மறைந்துள்ள உந்தலை அல்லது இச்சையை அறிவதற்குக் காரணமாகின்றது.


கனவை எவ்வாறு பகுத்து ஆராய வேண்டும் என்பதற்கு உதாரணமாக பிராய்டு தான் கண்ட ஒரு கனவையே எடுத்துக் கொண்டு அதை எவ்வாறு பிரித்துப் பார்க்க வேண்டும் என்று காட்டுகிறார்.


“இவ்வாறு விளக்கம் கண்டு பிடித்து ஆராயும்போது ஒவ்வொரு கனவும் ஏதாவதொரு ஆசையை நிறைவேற்றுவதற்காகவே ஏற்படுகிறது” என்று அவர் முடிவுகட்டுகிறார்.


பிராய்டின் கொள்கைகளிலே இதுவும் முக்கியமானது. இதை விளக்குவதற்கு அவர் சுலபமாகத் தாம் செய்து காட்டக் கூடிய ஒரு கனவைப் பற்றிக் கூறுகிறார். ஆசை நிறைவேற்றத்திற்காகத் தான் கனவு ஏற்படுகின்றது என்பதற்கு அவர் தாமாகவே உண்டாக்கிக் கொள்ளக் கூடிய அந்தக் கனவு எளியதாக இருந்தாலும் சிறந்த உதாரணமென்கிறார்.


உப்பு நிறையப் போட்டிருக்கும் உணவை இரவு நேரத்திலே சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொண்டால் பாதித் தூக்கத்திலே அவருக்கு விழிப்புண்டாகுமாம். உப்பு அதிகமாக உணவிலிருந்ததால் தாக மெடுக்கிறது. அதனால் ஒரு கனவு ஏற்படுமாம். அதிலே அவர் ஏதாவது ஒரு வகையில் தாக விடாய் செய்து கொள்ளுவது போன்ற சம்பவம் தோன்றுமாம். பிறகு விழிப்புண்டாகுமாம்.


குழந்தைகளின் கனவு சிக்கல் அதிகமில்லாதது. ஆதலால் ஆசை நிறைவேற்றம் என்ற தத்துவத்தை அதிலே மிகத் தெளிவாகக் காணலாம் என்று பிராய்டு கூறுகிறார்.


வயதாக ஆகப் பலவிதமான அநுபவங்களும் இச்சைகளும் ஏற்படுகின்றன. ஆதலால் அப்பொழுது உண்டாகின்ற கனவை ஆராய்வதற்குத் திறமையும் அநுபவமும் அதிகமாக வேண்டும்.


கனவு ஒரு வகையிலே உறக்கத்தைப் பாதுகாக்கின்றது. “நனவு நிலையிலே கைகூடாத பல ஆசைகள் கனவிலே கைகூடி விடுகின்றன; அதனால் மனத்திற்கு ஆறுதல் கிடைக்கிறது. அதனால் ஆழ்ந்த தூக்கமும் ஓய்வும் உண்டாகின்றன; ஆதலால் அந்த வகையிலே கனவு உறக்கத்திற்கு உதவியாக நிற்கின்றது” என்று பிராய்டு சொல்லுகிறார்.


நனவிலி மனத்திலே பல தகாத இச்சைகள் அடக்கப்பட்டுக் கிடக்கின்றன என்பதைப் பற்றி முன்பே அறிந்து கொண்டோம். அந்த இச்சைகள் விழிப்பு நிலையிலே மேலே வந்தால் பெரும்பாலும் மனச்சான்றால் தடுக்கப்பட்டு விடும். வெற்றி பெறாத காரணத்தால் அந்த இச்சைகள் வேறு வழிகளிலே வெளிப்பட்டுத் திருப்தி பெற முயல்கின்றன. அதற்கு உறக்கம் ஒரு நல்ல சாதகமாக அமைகின்றது.


உறக்க நிலையிலும் மனம் வேலை செய்து கொண்டு தானிருக்கிறது. மனச்சான்றும் காவல் சக்திகளும் அப்பொழுதும் வேலை செய்தாலும் அவற்றின் வலிமை சற்று தளர்ந்து போகிறது. உறக்க நிலையிலே அவற்றின் கூர்மை கொஞ்சம் மழுங்கிப் போகிற தென்று சொல்லலாம். ஆதலால் அந்தச் சமயம் பார்த்து அந்த இழிந்த உந்தல்கள் வெளியே வந்து கனவாகத் தோன்றுகின்றன. அப்படித் தோன்றுகிறபோதும் வெளிப்படையாக நின்றால் அதீத அகம் தடைசெய்து விடுமென்று மறைமுகமாக மாறுவேஷம் போட்டுக் கொண்டு தோன்றுகின்றன. கனவிலே வருகின்ற குறியீடுகளுக்கும், விபரீத நிகழ்ச்சிகளுக்கும் இதுவே காரணம்.






அரக்கனின் ஆதிக்கம்



மனிதனுடைய அடிமனம் (நனவிலி மனம்) எது என்பது பற்றியும் அதிலே அழுந்திக் கிடக்கிற உந்தல்கள், இச்சைகள் பற்றியும் பொதுவாகத் தெரிந்து கொண்டோம். அடிமனம் எப்படியெல்லாம் தனது வல்லமையை வெளிப்படுத்துகின்றது என்றும் கண்டோம்.


இந்த அடிமனத்தின் வேலையால் மனிதனுடைய நடத்தை பாதிக்கப்படுகிறது. அதனால் அவன் எல்லாச் சமயங்களிலும் ஏற்ற முறையிலே காரியம் செய்வதில்லை. பகுத்தறிவுக்கு ஒவ்வாதவகையிலும் அவன் நடக்கிறான்.


இவ்வாறு பலர் பலவிதங்களிலே நடப்பதன் விளைவாகவே சமூகம் அமைகின்றது. பிறகு அந்தச் சமூகம் வருங்கால மக்களைப் பாதிக்கின்றது. குழந்தைகள் சமூகச் சூழ்நிலையால் பாதிக்கப் படுகிறார்கள். இந்த மாதிரியாக சமூகமும் மனிதனும் மாறிமாறிப் பாதிப்பதால் முன்னேற்றம் தடைப்படுகிறது. யாராவது ஒரு சில மக்களே இந்தத் தடைகளையெல்லாம் மீறி நின்று உயர்வடைகிறார்கள். அப்படி விடுதலை பெற்று நிற்பவர்களை உலகம் போற்றுகின்றது; மகான்கள் என்று கொண்டாடுகின்றது.


பெரும்பாலான மக்கள் கட்டுண்டே கிடப்பதால் சமூகத்திலே விரைவான முன்னேற்றம் ஏற்படுவதில்லை என்று பிராய்டு கருதுகிறார். சமூகம் ஒரே நிலையில் சுழன்று கொண்டுதானிருக்கும்; அதை மீறி நின்று ஒரு சிலரே மேன்மையடைய முடியும்; அவர்கள் ஏற்படுத்துகின்ற இயக்கங்கள், எண்ணப் புரட்சிகள் ஓரளவு சமூகத்தை விழிப்படையச் செய்யும்; ஆனால் அது பெரியதோர் அளவிற்கு முன்னேற்றத்தை உண்டாக்குவதில்லை; அப்படி உண்டாக்க முடியுமானால் புத்தர், இயேசு போன்ற மகான்களாலும், அவர்களைப் போலவே உண்மை ஞானம் பெற்ற மற்ற மகான்களாலும் நமக்குக் கிடைத்துள்ள உதாரணங்களும் உபதேசங்களுமே போதாவா என்று கேட்பவர்களுண்டு. இவர்கள் சமூகத்தின் முன்னேற்றத்திலே நம்பிக்கை குறைந்தவர்கள்.


இந்த நிலையிலிருந்து சமூகம் விடுபட வேண்டுமானால் குழந்தைகளை வளர்க்கும் முறையிலும், அவர்களுக்குக் கல்வியளிக்கும் முறையிலும் மனவியல் தத்துவங்களை நன்கு கடைப்பிடிக்க வேண்டும் என்று பிராய்டு கருதுகிறார். அதற்கு முதற்படியாகப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மனவியலைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ளவேண்டும்.


இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தை காம் இங்கு கவனிக்க வேண்டும். அடிமனத்தில் இழிந்த இச்சைகளும், உங்தல்களும், இயல் பூக்கங்களும் பதுங்கியிருக்கின்றன என்றும், அவை எவ்வாறு வெவ்வேறு வழிகளில் வெளியாகித் திருப்தி பெற முயல்கின்றன என்றும் கண்டோம்.


மனத்திற்குள்ள ஆற்றல் ஒரு குறிப்பிட்ட அளவுடையது தானென்றும், அந்த ஆற்றல் இத், அகம், அதீத அகம் ஆகிய மூன்று பெரும் பிரிவுகளிலே ஒரு சந்தர்ப்பத்தில் பல வேறு அளவுகளில் இருக்கின்றது என்றும் முன்பே குறிப்பிட்டேன். இத்தின் ஆற்றல் அதிகப்படுகின்றபோது மற்ற இரண்டின் ஆற்றல் அந்த அளவுக்குக் குறைந்து போகும். அதீத அகம் முன்பே எச்சரிக்கையாக இருந்து இத்தின் போக்கைத் தடைசெய்யாவிடில் இத்தின் ஆற்றல் மிகுந்து விடுகிறது.


காம இச்சைகளைக் கட்டுப்படுத்தி உள்ளத்தை ஆன்ம ஞானத் தேட்டத்திலே சதா ஈடுபடச் செய்ய விரும்பியவர்கள் பழங்காலத்திலே மனித சஞ்சாரமற்ற காடுகளுக்குச் சென்றதில் நிறைந்த பொருள் இருக்கிறது. இத்தின் இழிந்த உந்தல்கள் மேலோங்குவதற்குத் தூண்டுதல்களாக இருக்கும் சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும் என்பதையே அவர்கள் முக்கியமாகக் கருதினார்கள். உணவுக் கட்டுப்பாடு செய்ததும், சாத்துவிக உணவுமுறையை அனுஷ்டித்ததும் இந்த நோக்கத்தைக் கொண்டேதான்.


இதிலிருந்து சமூகத்தில் வாழும் நாம் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளக் கூடும். இழிந்த உணர்ச்சிகளுக்கு ஆதரவாக அவற்றை மேலெழுப்பும் காட்சிகளைக் காண்பதோ நூல்களைப் படிப்பதோ இத்தின் ஆற்றலுக்கு வலிமை தேடுவதாக முடிகிறது. அது நமது சமூகத்திற்குப் பாதகம் செய்வதாக அமையுமென்பதை நாம் எளிதில் கண்டுகொள்ளலாம்.


புதிய பாரத சமுதாயத்தை நமது பண்பாட்டின் அடிப்படையிலே உருவாக்க முனைந்திருக்கும் நாம் இன்று இந்த விஷயத்தைப் பற்றித் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும். வாழ்க்கை முறையிலே சில லட்சியங்களை அடிப்படையாக நமது நாடு கொண்டிருக்கிறது. அந்த லட்சியங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்களையே இந்த நாடு போற்றுகிறது. அந்த லட்சியங்களையே அஸ்திவாரமாகக் கொண்டு சமூகத்தை அமைக்கவும் விரும்புகிறது.


அப்படியிருக்கும் போது அதற்கு விரோதமான இச்சைகள் வளர்வதற்குக் தூண்டுகோலாக இருக்கும் எதையும் நாம் அநுமதிக்க முடியுமா?


சமூகத்தைப் பாதிக்கும் விஷயங்கள் சிலவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளுவதற்கு உதவுவது போலத் தனிப் பட்டவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் அடிமன உந்தல்களைப் பற்றி அறிந்து முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பதற்கும் பிராய்டின் கொள்கைகள் உதவுகின்றன. அவர் கூறுவதில் சில கருத்துக்கள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படாமலிருக்கலாம்; தவறு என்று கூட எதிர் காலத்தில் நிரூபிக்கப்படலாம். ஆனால் அவர் ஆராய்ந்து கண்ட அடிப்படைக் கருத்துக்களிலே சந்தேகமில்லை. அவை மனத்தின் தன்மைகளை அறிந்து கொள்வதிலே ஒரு பெரிய முன்னேற்றத்தை உண்டாக்கி விட்டன.


அவற்றைத் தெரிந்து கொண்டால் ஒவ்வொருவனும் தனது வாழ்க்கையைத் திருத்திக் கொள்ளுவதற்கு அநுகூலமுண்டாகும். மனம் என்பது குரங்குக்குச் சமானம் என்று பெரியவர்கள் ஏன் கூறியிருக்கிறார்கள் என்பதும் நமக்கு விளங்கும்.


மனத்தின் தன்மைகளை அறிந்து அம்மனத்தை விவேகத்தால் நல்வழியில் செல்லுமாறு செய்வதே வாழ்க்கையின் மிகப் பெரிய வெற்றியாகும்.


 

141 views0 comments

Related Posts

See All

Comments


bottom of page