top of page
library_1.jpg

ஆய்வுக் கட்டுரைகள்

Writer's picture: MonaMona

Updated: Jan 22, 2022

ந.சி. கந்தையா

 

முன்னுரை

இந்நூலிற் காணப்படும் கட்டுரைகள் பற்பல ஆங்கில நூல்களிலும் திங்கள் வெளியீடுகளிலும் காணப்பட்ட கருத்துக்களைத் திரட்டித் தமிழி லெழுதப்பட்டவை. இவை பல் பொருளனவாகவும் பொருட் செறிவுடையன வாகவும் காணப்படுகின்றமையின், கட்டுரை வரைவோருக்கும், பாடமாகப் பயில்வோருக்கும் பெரும் பயன்படத் தக்கனவென்பது எமது கருத்து.

ந.சி. கந்தையா


1. பேசும் படத்தின் கதை

பலர் பேசும் படக்காட்சியைப் பார்த்து மகிழ்கின்றனர். அது இசையும் கூத்தும் அதிகமுள்ளதாக அல்லது தூரதேசக் காட்சிகளைக் காட்டுவதாக அல்லது திடுக்கிடும் நிகழ்ச்சிகளுடையதாகவிருக்கலாம். நாம் சில மணி நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்குப் பேசும்படக் காட்சி ஏற்றது.


நாம் சிறிது நேரம் பார்த்து மகிழ்கின்ற இப் படத்தைப் பிடித்து முடிப்ப தற்கு எவ்வளவு பிரயாசை எடுக்கப்பட்டது என்று அறிவது நமக்கு வியப்பை அளிக்கும். ஒன்றரை மணிநேரம் ஓடிக்கொண்டிருந்த படத்தை ஏறக்குறைய இருபத்துநான்கு நடிகர்களும், மேற்பார்ப்பவர்கள் சிலரும், பன்னிரண்டுக்கு மேற்பட்ட படம்பிடிப்பவர்களும், மற்றும் வேலையாளரும் பதினெட்டு மாதங்களில் அல்லது இரண்டு ஆண்டுகளில் பிடித்து முடித்திருப்பார்கள்.


பேசும்படம் பிடிப்பதற்கு முதலில் வேண்டியது ஒரு கதை. அது பேர் பெற்ற ஒரு கற்பனைக் கதை அல்லது பேசும்பட நடிப்புக்கு என்று புதிதாக எழுதப்பட்ட ஒரு கதையாகவிருக்கலாம். படம் பிடிப்பதன் முன் எவ்வகைக் காட்சிகள் அமைக்கப்படவேண்டுமென்று தீர்மானிக்கப்படவேண்டும்; இன்னின்ன பகுதியை இன்னவர் நடிப்பது என்றும், அவர்கள் பேச வேண்டி யன நடிக்க வேண்டியன எவை எவை என்றும் எழுதி வைக்கப்படுதல் வேண்டும்.


பேசும்படம் பிடிப்பதில் முக்கியமுடையவர் படமுதலாளி. அவர் நடிக்கின்றவர்களைச் சம்பளத்துக்கு அமர்த்துகின்றவராவார். படத்துக்கு வேண்டிய கதை ஆயத்தமானவுடன் எவ்வளவு படப்பிடிப்பு நிலையத்தில் (Studio) பிடிப்பது என்றும் எவ்வளவு வெளியிற் பிடிப்பது என்றும் தீர்மான மாகவேண்டும். இவற்றுட் சில காட்சிகள் இமயமலையிலும், சில சகாரா வனாந் தரத்திலும், சில கிரீன்லாந்தில் உறைபனி மூடிய வெளிகளிலுமாக விருக்க லாம். ஆகவே படமுதலாளி இயற்கையான இக் காட்சிகள் அல்லது இயற்கை போலத் தோன்றும் சில காட்சிகளை ஆயத்தஞ் செய்தல் வேண்டும்.


இலண்டன் அல்லது ஹொலிவூட்டிலிருந்து அதிக சம்பளம் பெறும் நடிகர்களைச் சகாரா, கிரீன்லாந்து முதலிய நாடுகளுக்குக் கொண்டுசென்று படம்பிடித்தல் மிகப் பணச் செலவுடையதாகும். வேலையின்றிப் பயணஞ் செய்யும் நடிகர்களுக்குப் பல வாரங்களுக்குச் சம்பளங் கொடுக்க வேண்டி நேரும். இவ்வாறு செலவு செய்து பிடிக்கப்படும் படங்கள் திரையில் சில நிமிடங்கள் ஓடுவனவே. ஆகவே படமுதலாளி இத்தொல்லைகளை ஓர் உபாயத்தால் வெல்லுகிறான். படமுதலாளி, நடிகர்களைச் சகாரா, கிரீன்லாந்து முதலிய இடங்களுக்குப் போக்குவதற்குப் பதில் படம்பிடிக்கும் சிலரை அவ்விடங்களுக்கு அனுப்புகிறான். நடிகர்களின் நடிப்பைப் படம் பிடிப்பதற்குச் சில மாதங்களின் முன் படம் பிடிப்போர் புறப்பட்டுச் செல்கின்றனர். அவர்கள் அங்குள்ள மலைகள் வனாந்தரங்கள் பனியுறைந்த வெளிகள் போன்று அக்காட்சியில் வரவேண்டியவற்றைப் படம் பிடிக் கிறார்கள். அவற்றைப் படம் பிடித்துக்கொண்டு அவர்கள் தமது இடத்துக்குத் திரும்புகின்றனர். அவர்களின் படங்கள் சரிபார்க்கப்பட்ட பின் அக் காட்சிகளுக்குரிய நடிப்பு வரும்வரையில் அவை ஒதுக்கிவைக்கப் படுகின்றன.


படம் பிடிக்கும் நிலையத்தில் பெரிய கண்ணாடித் திரை உண்டு. இக் காட்சிகளில் ஒன்று தோன்ற வேண்டிய பகுதிவரும்போது இவற்றிலொன்று கண்ணாடித் திரைக்குப் பின்பக்கத்திலுள்ள கண்ணாடி விளக்கு வெளிச்சம் மூலம் கண்ணாடித் திரையிற் காட்டப்படும். பேசும் படம் பிடிக்கும் “காமிரா” முன்புறத்தில் இருக்கும். நடிகர் கண்ணாடித் திரைக்கு எதிரே நின்று நடிப்பர். கண்ணாடித்திரைக்குப் பின்னாலிருக்கும் கண்ணாடி விளக்கு மலை, வனாந்தரம் ,உறைபனி,வெளி முதலிய காட்சிகளைக் கண்ணாடித்திரையில் காட்டும். முன்னாலிருந்து நடிப்பைப் பதியவைக்கும் காமிரா கண்ணாடித் திரையில் மாறி மாறித் தோன்றும் காட்சிகளையும், பதிய வைக்கிறது. இவ்வாறு நடிகர் மலைப்பக்கங்கள், குளிர்மிகுந்த உறைபனி வெளிகள், வனாந்தரங் களுக்குப் பக்கத்தில் நிற்பவராகக் காட்சியளிக்கும்படி செய்யப்படுகின்றனர். உண்மையில் அவர்கள் அவ்விடங்களுக்குச் சென்றவர்களல்லர்.


நாடகத்தைப் படம்பிடிப்பதன் முன் அதிக வேலை செய்யவேண்டி யவர் அழகுக் கலையை மேற்பார்ப்பவர். இவர் படத்தின் அழகுக்கலை சம்பந்தமானவற்றிற் கவனஞ்செலுத்துவர். இடங்களின் காட்சிகளை ஓழுங்கு படுத்துதல், பலவகை அலங்காரங்கள், நாற்காலி முதலிய தளவாடங்கள் , தொங்கவிடும் அலங்காரங்கள் முதலியவற்றுக்குப் பொறுப்பாளி இவரே. இவ் வேலைகளைப் பற்றி இவர் நன்கு அறிந்திருத்தல் வேண்டும். விக்டோரியா இராணி காலத்தைப் பற்றிய நடிப்பில் இரும்பு நாற்காலிகள் இடம் பெறு மானால் அது தவறாகும்.


உடைகளைப் பற்றி மேற்பார்ப்பவரும் முக்கியமுடையவராவர். இவர் பெரும்பாலும் பெண்ணாகவிருப்பர். இவர் பெரிய முதலுடையவரும் பற்பல இடங்களுக்குரிய பலகால உடைகளைப் பற்றி அறிந்தவருமாயிருத் தல் வேண்டும். தெரியாதவற்றை இவர் அறிந்துகொள்ள வேண்டும். பல வகை நடிகர்கள் அணிந்துகொள்ளும் உடைகளுக்கு இவரே பொறுப் பாளியாவார். பெரிய பட நிலையங்களில் வகைவகையான உடைகளைத் தைப்பதற்குப் பல வேலையாளரிருப்பர்.


நடிப்பை மேற்பார்ப்பவர் முதன்மையானவருள் ஒருவர். இவர் சமூகமாயிராது எக்காட்சியும் படம் பிடிக்கப்படமாட்டாது. இவர் தனது மனதில் நினைப்பது போலவே நடிகர் அப்பக்கம் அல்லது இப்பக்கம் திரும்புவது, அழுவது, சிரிப்பது போன்றவற்றை நடிக்கின்றனர். நல்ல நடிகர் மேற்பார்ப்பவர் சொல்வதைக் கவனித்து நடிப்பவராவர்.


படம்பிடிப்பதில் சம்பந்தப்படாத இன்னொருவர் ஒலிப்பதிவு செய்பவராவர். இவரது வேலை படத்தில் வரும் பாட்டு, சங்கீதம். பேச்சுப் போன்றவற்றை எல்லாம் பட பில்மில் பதியவைப்பது.


பொதுவாகக் காட்சிகள் படம் பிடிக்கப்படும்போது ஒலிகளும் பதியப்படுகின்றன. சில சமயங்களில் இவ்வாறுசெய்வது கடினமாகும். அப்பொழுது காட்சிகள் படம் பிடிக்கப்பட்ட பின் ஒலிகள் தனியே பதியப்பட்டு இரண்டும் ஒன்றாக இணைக்கப்படுகின்றன.


பேசும்படம் பிடிக்கும் ஒரு படநிலையத்தைப் பார்த்தால் நாம் வியப்படைவோம். அங்கு எல்லா இடங்களும் சொல்லமுடியாத ஒழுங்கீன மாகத் தோன்றும். பெரிய பட நிலையங்களில் ஒரே முறையில் இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு கதைகள் படம் பிடிக்கப்படும். ஒரு இடத்தில் சாந்தினால் செய்யப்பட்ட கோயில் முகப்பும், இன்னொரு இடத்தில் சாதாரண அடுப்பங்கரைக் காட்சியும் காணப்படலாம். படம் பிடிக்கும் நிலையத்தில் வேலை செய்யும் வேலையாளர், படம்பிடிப்போர்,வெளிச்சம் சம்பந்தமான கருவிகளுக்குப் பொறுப்பாயுள்ளோர், ஒலிப்பதிவு செய்யும் ஒலிபெருக்கி களில் வேலை செய்வோர் உள்ளே செல்வதற்கு ஆயத்தமாயிருக்கும் நடிகர் முதலியோர் காணப்படுவர்.


இறுதியில் அங்கு விறுவிறுப்பாகப் படம் பிடிக்கப்படும். அங்கு படம் பிடிப்போரிற் சிலர் காமிராக்களோடும், சிலர் அதிக ஒளி கொடுக்கும் விளக்குகளோடும், ஒலிப்பதிவோர் மைகிராபோன் என்னும் ஒலிபெருக்கி களோடும், ஒலிபதியும் கருவிகளோடும் நிற்பர். ஒலிபதிவோர் அவர் களுக்குப் பக்கத்தே நிற்பர். மேற்பார்ப்பவர் (இடைரக்டர்) தனது கையில் மணிக் கூட்டோடு ஒரு நாற்காலியில் இருப்பர்.


ஒன்று, ஒருவன் தனது காதலியைச் சந்திக்கும் காட்சியாகலாம். இருவரும் சந்தித்து முத்தமிடுகிறார்கள். மேற்பார்ப்பவர் முத்தமிடும் நேரத்தின் அளவைக் கடிகாரத்தில் பார்க்கிறார். முத்தமிடும்வகை மேற் பார்ப்பவரின் விருப்பத்துக்கு ஏற்றதாயிராவிடில் அல்லது ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது மகிழ்ச்சிக்குறி தோன்றாவிடில் அக்காட்சி மறுபடியும் படம் பிடிக்கப்படும். இன்னோரு காட்சி ஒரு பெண் தனது தாயோடு வீட்டு அறை யிலிருந்து தேநீர் பருகிக்கொண்டிருப்பது ஆகலாம். பெண் மிக ஆறுதலாக உண்டு கொண்டிருந்தால் அல்லது வயது போன தாய் மிக நாகரிக முறை யாகத் தேநீர் அருந்தினால் அக்காட்சி மேற்பார்ப்பவர் திருப்திப்படும் வகை யில் தேநீர் பருகும்வரை திரும்பத் திரும்பப் படம் பிடிக்கப்படும்.


நாம் படத்தில் காணும் காட்சிகள் வரிசையாகப் படம் பிடிக்கப்படு கின்றன என்று நினைத்தல் கூடாது. ஒரு நீண்ட படச்சுருளில் நூற்றுக்கணக் கான துண்டுப் படங்கள் காணப்படும். இவை தனித்தனியே பிடிக்கப்பட்டு இறுதியில் ஒன்று சேர்க்கப்பட்டவை. இத்துண்டுப் படங்கள் படப்பரிசோதக ரால் பார்வையிடப்படும். அச்சிட வேண்டிய பகுதிகளைப் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் பார்வையிட்டுக் கொண்டிருப்பது போலப் படப் பரிசோத கரும் தினம் எடுக்கப்படும் படங்களைக் கதையோடு ஒத்துப் பார்ப்பார். துண்டுப்படங்கள் கதையோடும், இடங்களின் இயற்கைக் காட்சிகளோடும் நடிப்புக்களோடும் ஒத்திருந்தால் ஏற்றன என்று ஒப்புக்கொள்ளப்படும். படப் பரிசோதகர் ஒப்புக் கொள்ளாத பகுதிகள் மறுபடியும் படம் பிடிப்பதற்கு மேற்பார்ப்பவரிடம் அனுப்பப்படும்.


படம் பிடிக்கும் நிலையங்களில் நடிகரின் படங்கள் வியப்பான நாடு களின் இயற்கைக் காட்சிகளிடையே நிற்பதாக அவ் வியற்கைக் காட்சி களைக் கண்ணாடித் திரையில் காட்டப்படும் படங்களைக் கொண்டு எடுக் கப்படுகின்றனவென்று முன் கூறினோம். இவ்வாறு கண்ணாடித் திரையில் காட்டப்படும் படங்கள் “பின்புறக் காட்சி” (க்ஷயஉம சீடிதநஉவiடிn) எனப் படும். இம்முறை படம்பிடிக்கும் கும்பனிகளுக்கு மிகப் பயனுடையது. ஒரு பெண்ணும் ஆணும் படகிலிருந்து ஆற்றில் வேகமாகச் செல்லும் பட மொன்று பிடிக்க வேண்டியிருக்கிறதென்று வைத்துக்கொள்ளுவோம். இவ் வாறு படம் பிடிக்க வேண்டியிருந்தால் படம் பிடிக்கும் படகுக்கு முன்னால் இன்னொரு படகு வேகமாகச் செல்ல வேண்டியிருக்கும். அவ்வாறு நிகழின் நடிகனும் நடிகையும் பேசும் பேச்சுக்களைக் கேட்க முடியாதபடி இயந்திரத் தின் இரைச்சல் மறைத்துவிடும். “பின்புறக் காட்சிப் படம்” என்னும் முறையினால் இத்தொல்லையை வெல்லலாம். படம் பிடிப்போர் சிலர் படகில் போவர். போகும் போது அவர் நீரையும் கரைகளையும் அங்கு கேட்கும் ஒலிகளையும் பதிவு செய்துகொண்டு செல்வர். வெளியில் செய்ய வேண்டிய வேலை இவ்வளவே. மற்றைய வேலைகள் படம் பிடிக்கும் நிலையத்திற் செய்யப்படுகின்றன. பின்னும் முன்னும் ஆடக் கூடியதாகச் செய்யப்பட்ட நாற்காலியில் கண்ணாடித் திரைக்கு முன்னால் வள்ளம் வைக் கப்படுகிறது. படகுக்கு முன்னால் நடிகனும் நடிகையும் இருக்கிறார்கள். ஆற்றில் பிடிக்கப்பட்ட படங்கள் பின்புறத்திலிருந்து திரையில் காட்டப்படுகின்றன. முன்னாலிருக்கும் படகு முன்னும் பின்னும் ஆடுகிறது. தம்மைப் பின் தொடர்ந்து வரும் இன்னொரு படகைப் பார்ப்பதுபோல் நடிகை திரும்பிப் பார்க்கிறாள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசுகின்றனர். அவள் வேகமாகப் படகை ஓட்டும்படி அவனிடம் சொல்லுகிறாள். அப் பொழுது பின்னாலிருக்கும் கண்ணாடித் திரையிலுள்ள படங்கள் வேகமாக ஓடுகின்றன. இவ்வாறு பிடிக்கப்பட்ட படத்தைப் பார்த்தால் உண்மை யாகவே படகு ஆற்றில் செல்வது போலவே தோன்றும்.

பேசும் படங்களை அமைப்பவர் கையாளும் உபாயங்கள் பல. இரவில் அல்லது இன்னொரு நாட்டில் புகைவண்டி செல்வதாகக் காட்சிகள் காட்டப்படுகின்றன. இவை செயற்கைப் புகைவண்டி ஒன்றையும் சித்தரிக்கப்பட்ட இயற்கைக் காட்சிகளையும் வைத்துப் படம் பிடிக்கும் நிலையத்தில் பிடிக்கப்பட்டனவாகும்.


கதையில் வரும் ஒருவன் இரும்புக் கம்பியால் தலையில் அடிக்கப் படுவதையோ கண்ணாடிப் புட்டியினால் எறிந்து விழுத்தப்படுவதையோ கண்டு நாம் கலக்கமடையவேண்டியதில்லை. இரும்புக் கம்பி என்பது காகிதக்கூழினாற் செய்யப்பட்டது. எறிந்தவுடன் உடைந்துபோகிற கண்ணாடிப்புட்டி மெழுகினால் செய்யப்பட்டது. சில சமயங்களில் கதையில் வரும் பெண் ஆற்றில் முழுகித் தத்தளிப்பதைக் கண்டும் நாம் குழப்ப மடைய வேண்டியதில்லை. ஆற்றுக் காட்சி கண்ணாடித் திரையில் காட்டப் பட்ட படமாகலாம். பெண் நிற்கும் தண்ணீர் படநிலையத்தில் ஒரு தொட்டி யிலுள்ள நீராகலாம்.


...Continue Reading

 

6 views0 comments

Comments


bottom of page