கா. அப்பாத்துரையார்
நாடு கடந்து மீளுதல்
தாயின் விருப்பப்படியே ஹாம்லெத் சென்றான். “மகனே! உன் நடையும் செயலும் இவ்வாறு தகாத முறையில் மாறக் காரணம் என்னை? உன் தந்தையாகிய அரசருக்கு நீ பெருந்தீங்கு இழைத்தவன் ஆகிறாய்,” என்று அரசி கூறினாள். (தான் கிளாடியஸை மணந்த காரணத்தால் அவனை ஹாம்லெத்துக்குத் தந்தை எனக் குறிப்பிட்டாள்.)
ஹாம்லெத்: (தந்தை என்ற அன்பும் பெருமையும் வாய்ந்த அரிய பெயரைத் தந்தையைக் கொன்ற கீழ் மகனுக்கு வழங்கினளே என்ற சினக் குறிப்புடன்) அன்னாய்! என் தந்தைக்கு நீர் பெருந்தீங்கு இழைத்திருக்கிறீர்.
அரசி: இது வீண் பேச்சு!
ஹாம்லெத்: உமது வினா எத்தகையது?
அரசி: மகனே! நீ யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாய் என்பதை மறந்தாயோ?
ஹாம்லெத்: அந்தோ! அந்தோ! மறந்துவிடவல்லேனாகில் நான் பெரும்பேறு பெற்றேனாவேன். நீர் யார் என அறிவேன்: அரசி; உம் மைத்துனனுக்கு மனைவி என்னுடைய தாய். ஆ! இந்த முறை இல்லாதிருந்தால் மகிழ்வேனே!
அரசி: அப்படியா? இவ்வாறு என்னை இழித்துரைப் பாயானால், உன்னிடம் பேசவல்லாரை அனுப்புகிறேன்.
இவ்வாறு சொல்லிவிட்டு அரசனையாவது அமைச்சனை யாவது அனுப்ப எண்ணி அவள் புறப்பட்டாள். ஹாம்லெத் அவளை அடியெடுத்து வைக்கவிடவில்லை. அவள் தனிமையில் இருந்தமையால், அவள் செய்த கொடுமையை அவளுக்குச் சுட்டிக்காட்டி வருத்தித் தன் குற்றத்தை உணருமாறு செய்ய முயன்றான்; அவள் கையைப் பற்றி இழுத்து உட்காரச் செய்தான். இந்தச் செயலால் அவள் அஞ்சினாள்; பித்துப் பிடித்த நிலையில் தனக்கு ஏதேனும் தீங்கு செய்திடுவான் என்று எண்ணிக் கூக்குரலிட்டாள். உடனே, திரை மறைவிலிருந்து, “அரசியைக் காக்க! காக்க!” என்று ஒரு குரல் கேட்டது. ஹாம்லெத் அதனைக் கேட்டதும், திரை மறைவில் இருந்தவன் அரசனே என்று எண்ணி, வாளை உருவி ஒலி எழுந்த இடத்தில் குத்தினான்; ஓடும் எலியை அடுத்தடுத்துக் குத்துபவன் போலப் பலமுறை குத்தினான்; ஒலி சிறிதும் இன்றி அடங்கிய பின் அரசன் இறந்துவிட்டான் என்று நம்பினான்; திரையை நீக்கிப் பிணத்தை இழுத்துப் பார்த்தான்; திரைமறைவில் இருந்து ஒற்றறிய முயன்ற பொலோனியஸ் என்னும் அமைச்சனையே தான் கொன்றமை அறிந்தான். “அந்தோ! என் செய்தாய்! சிறிதும் இரக்கமின்றிப் படுகொலை செய்தாயே,” என்று அரசி அரற்றினாள். “அன்னாய்! இது கொடுஞ் செயலே; ஆயினும், ஓர் அரசனைக் கொன்று அவன் தம்பியை மணந்த உமது கொடுஞ் செயலைப் போன்ற அவ்வளவு கொடுமையானது அன்று,” என்றான் ஹாம்லெத். அவன் அவ்வளவில் நின்றானில்லை. தன் உள்ளத்தில் உள்ள எல்லா வற்றையும் வெளிப்படையாகக் கூறிவிடத் துணிந்தான். பெற்றோருடைய குற்றங்களை மக்கள் மறந்து விடுதலே கடமை; ஆயினும், செய்யத் தகாத பெருங்குற்றங்களைப் பெற்ற தாய் செய்வாளானால், கண்ணோட்டமின்றிக் கண்டித்துச் சொல்லும் உரிமை மகனுக்கு உண்டு அன்றோ? அவ்வாறு கண்டித்துச் சொல்வது அத்தாயை மேன்மேலும் வருத்துவதற்காக அல்லாமல், தீய வழியிலிருந்து அவளைத் திருப்பி அவளுக்கு நன்மை செய்வதாய் இருத்தல் வேண்டும்.
“தாயே! என் சொல்லைக் கேட்டு மனம் இரங்குவீராக. இறந்த அரசராகிய என் தந்தையை இரண்டு திங்களுக்குள் மறந்தீர். அவரைக் கொன்ற கொலைஞனாகிய அவர் தம்பியை மணந்தீர். என் தந்தையை மணந்த காலத்தில் நீர் செய்த வாக்குறுதிகள் என்ன ஆயின? இனி, பெண்பாலார் செய்யும் வாக்குறுதிகளை உலகம் நம்புவது எங்ஙனம்? பெண்டிரிடம் உள்ள நற்பண்புகள் யாவும் மாயமே என்பதை உம்முடைய ஒழுக்கம் காட்டவல்லது அன்றோ? திருமணக் காலத்தில் மணமகனுக்கும் மணமகளுக்கும் நடக்கும் ஒப்பந்தம் சூதாடுவோர் சூளுறுதலுக்கு ஒப்பானதாக ஆகிறதே! சமயநெறி என்பது கேலிக் கூத்தாகவும் வெறுஞ் சொற்களின் கோவையாகவும் புலப் படலாயிற்றே! அன்னாய்! நீர் செய்த செயல் எத்தகையது? ஆ! அதைக் கண்டு விண்ணோர் வெட்கமுற்றனர்; மண்ணோர் மனம் நொந்தனர். (இவ்வாறு சொல்லிக் கொண்டே ஹாம்லெத் இரண்டு படங்களை எடுத்துக் காட்டினான். அவற்றுள், ஒன்று இறந்த மன்னன் படம்; மற்றொன்று அவனைக் கொன்ற கிளாடியஸ் படம்.) இந்தப் படங்கள் இரண்டிற்கும் உள்ள வேற்றுமையைப் பாரும். என் தந்தையின் முகக்களை என்னே! தெய்வம் போலத் தோற்றம் அளிக்கிறார்! இவரே உம்முடைய கணவராக இருந்தவர். இதோ இந்தப் படத்தில் காண்பவனோ அவர் இறந்தபின் நீர் விரும்பி மணந்த கயவன்; அழகனாகிய தன் தமையனைக் கொன்ற பாவியின் முகத்தைப் பாரும்!” என்று ஹாம்லெத் பற்பல எடுத்துக் கூறினான். இச்சொற்களைக் கேட்ட அரசி உற்ற வெட்கத்திற்கு அளவே இல்லை. தன் குற்றத்தைத் தன் மகன் தெளிவாக அறிந்தமைபற்றி அவள் மிகவும் நாணினாள். தான் செய்த குற்றமும் தனது ஒழுக்கக்கேடும் எத்துணைக் கொடுமை நிறைந்தவை என்பதும் அவள் தன்னுள் உணர்ந்தாள்.
மீண்டும் ஹாம்லெத் தாயைப் பார்த்து, “அன்னையே! உம்முடைய முதற்கொழுநரைக் கொன்று அவர் அரசைக் கவர்ந்த கள்ளனுக்கு மனைவியாகி, அவனுடன் கூடி வாழ்கின்றீரே! அஃது எங்ஙனம் இயலும்?” என்று கேட்டான். அப்போது திடீரென்று இறந்த மன்னனது ஆவியுருவம் அந்த அறையில் தோன்றியது. அச்சத்தால் நடுநடுங்கிக் கொண்டே ஹாம்லெத் அவனைப் பார்த்து, வந்த காரணம் கூறுமாறு கேட்டான். “நீ பழி வாங்கும் கடமையை மறந்து விட்டனையோ? அதனை உனக்கு நினைவூட்டவே இப்போது வந்தேன். உன் தாய் அடைந்துள்ள அச்சமும் துயரமும் அவளைக் கொல்லவல்லன். ஆகையால் நீ அவளுடன் பேசி ஆறுதல் அளி,” என்று ஆவியுருவம் கூறி மறைந்தது. ஹாம்லெத் தவிர வேறு யாரும் அதைக் காணவில்லை. அது நின்ற இடத்தைச் சுட்டியும் வந்த கோலத்தைக் கூறியும் தாய்க்கு அவன் கூறி விளக்க முயன்றும், அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அங்கு ஒருவரும் இல்லாதிருக்கவும் ஹாம்லெத் என்னவோ பேசிக் கொண்டிருந்தது பற்றி அவள் பெருந்திகில் அடைந்தாள்; அவனுடைய மனக்கோளாறே அதற்குக் காரணமென்று கருதினாள். “தாயே! தந்தையின் ஆவி மீண்டும் மண்ணுலகிற்கு வருமாறு செய்தது நீர் செய்த பெருங்குற்றமே. அவ்வாறு இருக்க, நான் பித்துப்பிடித்துப் பிதற்றுகிறேன் என்று குறைகூறி மனந்தேறுதல் வேண்டா. என்நாடி பிடித்துப் பாரும். நான் பித்தனானால் நாடி விரைந்தோடுமே! அத்தகைய ஓட்டம் இன்றி அமைதியாக அன்றோ உள்ளது? அன்னாய்! குற்றம் உணர்ந்து உருகிக் கடவுளிடம் முறையிடு வீராக! இனி அரசன் நட்பைத் துறந்துவிடுவீராக! அவனுக்கு மனiவியாக இருந்து வாழ்தல் ஒழிவீராக! என் அருமைத் தந்தையை நினைத்து வழிபடுவீராக! எனக்குத் தாயாக விளங்குவீராக! அப்பொழுது நான் உண்மையான மகனாக இருந்து உம்முடைய வாழ்த்துப் பெறுவேன்” என்று ஹாம்லெத் கண்ணீர் சொரிந்து வேண்டினான். அவ்வாறே வாழ்வதாக அரசி வாக்களித்ததும் பேச்சு முடிந்தது.
பிறகு ஆய்ந்தோய்ந்து பாராமல் திரைமறைவில் இருந்தவனைத் தான் கொன்றதை நினைத்துக் கொண்டான் ஹாம்லெத், கொல்லப்பட்டவன் தன் அருமைக் காதலி ஒபீலியாவின் தந்தையாகிய பொலோனியஸே என்பதை ஹாம்லெத் அறிந்து, அவன் உடலை ஒரு புறத்தில் ஒதுக்கி, பதைப்பும் சினமும் ஆறி, தன் செயலை நினைந்து வருந்தினான்.
பொலோனியஸ் இறந்ததைக் காரணம் காட்டி, ஹாம்லெத்தை நாடு கடத்த வேண்டும் என்று அரசன் கட்டளை யிட்டான். ஹாம்லெத் தனக்குத் தீங்கு செய்யக்கூடுமென்று அரசன் அஞ்சினான்; அதனால் அவனைக் கொன்றுவிடவும் துணிந்திருப்பான். ஆனால் தன் குடிகள் அவன்மீதும் அரசிமீதும் அன்பு கொண்டிருப்பதால், குடிகளுக்கு அஞ்சி அவனைக் கொல்லாமல் விட்டான். அன்றியும், அரசி ஹாம்லெத்தைத் தன் அன்பிற்குரிய மகனாய்ப் போற்றுதலையும் அவன் அறிந்திருந்தான். ஆகையால், அமைச்சனைக் கொன்ற ஹாம்லெத் எப்படியாவது தப்பிப் பிழைக்க வேண்டுமென்று அன்புடையவன் போலக் கூறி அவனைக் கப்பலில் ஏற்றி இங்கிலாந்திற்கு அனுப்பினான்; அவனுடன்அரண்மனைக் காவலர் இருவர் செல்லுமாறு ஏவினான்; ஹாம்லெத் வந்து கரைசேர்ந்தவுடன் அவனைக் கொன்று விடுமாறு இங்கிலாந்து அரசனுக்கு ஒரு கடிதம் எழுதி அதனைக் காவலரிடம் கொடுத்தனுப்பினான். (அக்காலத்தில் இங்கிலாந்து அரசன் டென்மார்க்கு அரசனுக்குக் கீழ்ப்பட்டுத் திறை கொடுத்து வந்தான்.)
அரசன் வஞ்சகமாய் ஏதேனும் சூழ்ச்சி செய்திருப்பான் என்று ஹாம்லெத் ஐயுற்றான். அன்றிரவு காவலர் தூங்கிக் கொண்டிருந்த போது, அக்கடிதத்தை எடுத்துப் பிரித்துத் தன் பெயரை அழித்துக் காவலர் இருவர் பெயரையும் அதற்குப் பதிலாக எழுதிவிட்டு மீண்டும் முத்திரை செய்து இருந்த இடத்திலேயே வைத்துவிட்டான். சிறிது நேரத்திற்குள் கடற்கள்வர் சிலர் கப்பலைத் தாக்கினர். கள்வர்க்கும் கப்பலில் இருந்தவர்க்கும் போர் நடந்தது. அப்போரில் ஹாம்லெத் தன் ஆண்மையைக் காட்டி வாள்கொண்டு எழுந்து கள்வர் இருந்த கலத்தில் பாய்ந்தான். உடனே, ஹாம்லெத்துடன் வந்தவர்கள் நடுநடுங்கி அவனைக் கைவிட்டு, ஆண்மையின்றிக் கப்பலைத் திருப்பி இங்கிலாந்திற்கு விரைந்து செலுத்தினார்கள். தம் அழிவிற்கே காரணமாக மாற்றி எழுதப்பட்ட கடிதத்தை எடுத்துக்கொண்டு காவலரும் சென்றனர்.
அரசிளங்குமரனாகிய ஹாம்லெத் கள்வர் கையில் அகப்பட்டுக் கொண்டான். ஆயினும் அக்கள்வர் அவனிடம் அன்பு காட்டினர்; தம்மிடம் அகப்பட்டவன் இன்னான் என அறிந்து கொண்டனர்; தாம் இப்போது ஏதேனும் உதவி செய்தால் அதற்குத்தக்க கைம்மாறு இளங்கோவாகிய ஹாம்லெத் செய்வான் என்று நம்பினர்; டென்மார்க்குக் கரையில் உள்ள ஒரு துறைமுகத்தில் அவனை இறக்கிவிட்டனர்.
அவ்விடத்திலிருந்து ஹாம்லெத் அரசனுக்கு ஒரு திருமுகம் எழுதினான்; அதில், தான் தப்பிப்பிழைத்துத் தாய்நாடு சேர்ந்ததைத் தெரிவித்து, மறுநாள் அரசன் முன்னிலையில் வருவதாக அறிவித்திருந்தான். திருமுகத்தில் எழுதியவாறு அரண்மனைக்குத் திரும்பிய போது அவன் கண்ட முதற்காட்சி அவனுக்குப் பெருந்துயர் தந்தது.
வாட்போரில் மடிதல்
Comments