top of page
library_1.jpg

சேக்சுபியர் கதைகள் VOL-8

கா. அப்பாத்துரையார்



சொல்லுதல் எளிது: செய்தல் அரிது

பிரான்சு மன்னனுக்கும் பர்கண்டித் தலைவனுக்கும் அரசன் தன் முடிவை அறிவித்தான். கார்டெலியா இப்போது தன் தந்தையின் வெறுப்புக்கு ஆளாகித் தனக்குரிய செல்வம் இழந்து நிற்பதால், அவளை மணக்க இனியும் அவர்கள் விரும்புகின்றனரா என்பதை அறிய விரும்பினான். கார்டெலியா உற்ற அந்நிலையில் தான் அவளைத் துணைவியாகக் கொள்ள விரும்பவில்லை என்று பர்கண்டித் தலைவன் தன் முயற்சியைக் கைவிட்டான்.

ஆனால், பிரான்சு மன்னனோ, தந்தை வெறுப்புக் கொள்ளுமாறு கார்டெலியா இழைத்த தவற்றின் தன்மையையும், தமக்கையர்போல உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பயிற்சியில்லாத குறையையும் ஆராய்ந்தறிந்தவன்; அதனால், கார்டெலியாவின் கையினைப் பற்றியவனாய், “உன்னுடைய நல்ல பண்புகளே அரசுரிமையினும் சிறந்த செல்வமாகும். தந்தை உம்மீது அன்பு கொள்ளாதவர் ஆயினும், அவரிடம் கூறி விடை பெறுக. உன் தமக்கையரிடமும் விடை பெறுக. என்னுடன் வருக. என் வாழ்க்கைத் துணைவியாகவும் சீர்மிக்க பிரான்சு நாட்டின் அரசியாகவும் விளங்குக. உன் தமக்கையர் பெற்றவற்றினும் பெருமை மிக்க உரிமைகளைப் பெறுக,” என்று உரைத்தான். கார்டெலியாவின்பால் கொண்ட காதலை ஒரு நொடிப் பொழுதில் மாற்றிக்கொண்ட காரணத்தால், அவன் பர்கண்டித் தலைவனை இகழ்ந்தான்.

பிறகு, கார்டெலியா கண்ணீர் கலங்கித் தமக்கையரை நோக்கி, “தமக்கையீர்! உங்கள் வாக்குறுதி தவறாமல் தந்தையை அன்போடு பாதுகாத்துவர வேண்டுகிறேன்,” என்று சொல்லி விடைபெற நின்றாள்; அவர்கள் இருவரும் உடனே, “போதும்; நீ எங்களுக்கு ஒன்றும் அறிவுறுத்த வேண்டுவதில்லை; எங்கள் கடமையை அறிவோம். நீ உன் கணவர் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்துகொண்டிரு; அவர்தாம் உன்னைப் பெறற்கரிய பேறாகக் கொண்டு மகிழ்ந்தாரே,” என்று ஏனைக் குறிப்புடன் கூறினார்கள். கார்டெலியாவுக்கு அவர்களின் வஞ்சகமும் விரகும் தெரியும்; ஆகையால், வருந்திய மனத்தோடு பிரியலுற்றாள்; அவர்களிடம் தந்தை வாழ்வதைவிட வேறு எங்கேனும் நல்ல தோரிடத்தில் இருக்கலாகாதா என எண்ணிச் சென்றாள்.

கார்டெலியா பிரிந்ததும், தமக்கையர்தம் கொடிய இயல்பு வெளிப்படலாயிற்று. முன்செய்த ஏற்பாட்டின்படி முதல் திங்களில் தன் மூத்தமகள் கானெரில் அரண்மனையில் லியர் வாழ்ந்து வந்தான். அத்திங்கள் முடிவதற்குள்ளாகவே, சொல்லுதல் எளிது என்பதும் சொல்லிய வண்ணம் செயல் அரிது என்பதும் அவனுக்கு விளங்கின. தந்தை தரவேண்டிய யாவற்றையும் அவன் தலையில் அணிந்திருந்த முடியினையும் கவர்ந்து கொண்ட அக்கீழ் மகள் இப்போது என் செய்தாள்? தான் இன்னும் அரசனே என்று எண்ணி மகிழ்வதற்காக லியர் தன்பால் வைத்திருந்த பரிவாரத்தைக் குறித்து முணுமுணுத்தாள்; அவனையும் அவன் வீரர் நூற்றுவரையும் காண அவள் நெஞ்சு பொறுக்கவில்லை. தந்தையைக் காணும் போதெல்லாம் அவள் முகஞ் சுளித்தாள். தந்தை தன்னுடன் பேசவந்த போதெல்லாம், உடல் நலமில்லை என்றோ, வேறு காரணம் கூறியோ அவனைப் பார்க்கவும் மறுத்துவிட்டாள். ஏன்? அவனுடைய முதுமையை மிகப் பெருந் தொல்லையாகவும், வீரர் நூற்றுவரும் இருத்தலை வீண் செலவாகவும் அவள் கருதினாள்.

கானெரில், தந்தைக்குச் செய்யவேண்டிய கடமைகளில் தான் தவறியதோடு நில்லாமல், தன் ஏவலர் தவறி நடக்கவும் காரணமானாள். தலைவியாகிய அவள் நடக்கையைக் கண்டோ, அல்லது அவள் மறைவாகச் சொல்லியிருக்கக் கூடியவற்றைக் கேட்டோ, அவளுடைய ஏவலரும் லியரைப் போற்றாது புறக்கணித்தார்; லியர் இட்ட கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். சில வேளைகளில் அவன் கூறிய கட்டளை தம் காதில் விழாதது போலப் போய்விட்டனர்.

தன் மகள் இவ்வாறு நடக்கத் தொடங்கிவிட்டதை லியர் அறிந்து கொண்டான்; ஆயினும் அதைப் பற்றி ஒன்றும் அறியாதவன் போலப் பலநாளும் வாளா இருந்தான். தாம் செய்த தவறே தம்மை வருத்தும் போது மக்கள் இவ்வாறு இருத்தல் இயற்கைதானே?

பொய்யும் போலி வாழ்வும் இன்பம் வந்துற்ற காலத்தினும் திருந்துவதில்லை. அதுபோலவே, உண்மையன்பும் பண்பும் துன்பம் வந்துற்றபோதும் மாறுவதில்லை. இதனைக் கென்ட் தலைவன் ஒழுக்கத்திலிருந்து நன்கு அறியலாம். அவன் லியர் மன்னனால் கைவிடப்பட்ட போதிலும், பிரிட்டனை விட்டுச் செல்லாவிடின் கொல்வதாக அச்சுறுத்தப்பட்ட போதிலும், தன் தலைவனாகிய அரசனுக்குத் தான் பயன்படுமாறு வாய்ப்புக் கிடைக்குமா என்று எதிர்பார்த்து, வருவன வருக என்று நாட்டிலேயே தங்கியருந்தான். அரசனுக்குக் கீழ்ப்படிந்து ஒழுகும் நல்லொழுக்கத்தால் சில வேளைகளில் எவ்வளவு இடர்கள் நேர்கின்றன பாருங்கள்! ஆயினும், அவற்றால் இழிவு ஒன்றும் இல்லை. நன்றி மறவாது கடமையைச் செலுத்துதல் என்றும் உயர்வே அன்றோ?

அவன் தன் பெருமையையும் ஆடம்பரத்தையும் கைவிட்டு, ஏவலாளாக வேற்றுருவங்கொண்டான்; லியர் மன்னனிடம் ஏவல் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தான். லியர் அவனை இன்னான் என அறியவில்லை; புதிய ஏவலாளின் பேச்சு வெளிப்படை யாகவும் நயமற்றதாகவும் இருத்தலை அறிந்து மகிழ்ந்தான். (அரசன் மகள் பேசிய பொன்மொழிகளின் பயனை உணர்ந்தமை யால் கென்ட் தலைவன் இனிய முறையில் புகழ்ந்து சொல்லுவதில் வெறுப்புக் கொண்டான்.) உடனே அரசன் அவனைத் தன் ஏவலாளாக ஏற்றுக் கொண்டான். தனக்கு நெருங்கிய அன்பனாக இருந்த கென்ட் தலைவன் அவன் என்ற ஐயமே லியர் நெஞ்சில் தோன்றவில்லை. கென்ட் தலைவன் தன் பெயர் கேயஸ்⁹ என்று தெரிவித்துக் கொண்டான்.

புதிய ஏவலாள் தன் பழைய தலைவனாகிய லியரிடம் அன்பும் நன்றியும் செலுத்துவதற்குரிய வாய்ப்பு விரைவில் நேர்ந்தது. கானெரில் அரண்மனை ஏவலாள் ஒருவன் அன்று லியரிடம் மதிப்பற்ற முறையில் நடந்து கொண்டான்; அவன் பேச்சும் பார்வையும் அத்தகையனவாக இருந்தன. அவ்வாறு நடக்குமாறு அவன் தலைவி கானெரில் அவனுக்கு மறைமுகமாக ஊக்கமளித்திருந்தாள். தன் அரசனை இவ்வாறு இகழ்ந் துரைப்பதைக் கேயஸ் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை; உடனே அவனை உதைத்துத் தள்ளினான். இவ்வாறு புதிய ஏவலாள் செய்ததைக் கண்ட லியர் அவன்மீது மிக்க அன்பு கொண்டான்.

லியரிடம் அன்பு கொண்டவன் அவன் ஒருவனே அல்லன். லியர் தன் அரண்மனையில் வாழ்ந்தபோது, அங்கிருந்த நகைச் சுவையாளன் ஒருவன் அவன் நிலைமைக்குரிய அளவில் அன்பு செலுத்தி வந்தான். லியர் முடியிழந்த பின்னும் அவன் விடாது தொடர்ந்தான்; தன் திறமான பேச்சுக்களால் மன்னனை மகிழ்வித்தான்; சில வேளைகளில், அறியாமையால் முடியிழந்ததும், செல்வமெல்லாம் பெண்கட்குப் பகுத்தளித்ததும், ஆகிய மன்னன் செயல்களைக் குறித்து எள்ளி நகையாடினான்; பாடலாகவும் பாடினான். இவ்வாறு, அவன் முரட்டுப் பேச்சாலும் பாட்டாலும் பற்பலவாறு தன் உள்ளத்தில் உள்ளவற்றை வெளிப் படுத்தினான். அவன் வஞ்சமற்ற நெஞ்சினன்; ஆதலின், சில வேளைகளில் கானெரில் முன்னிலையிலும் இவ்வாறு ஒழுகினான்; அவன் குத்தலாகப் பேசிய கடுஞ்சொற்கள் அவள் நெஞ்சினைச் சுட்டன. (தந்தைக்குப் பிற்பட்டிருக்க வேண்டிய மக்கள் அவனுக்கு முற்பட்டிருக்கிறார்கள் என்ற கருத்துடன்) குதிரையை வண்டி இழுத்துச் செல்லுதல் குறித்துக் கழுதையே அறியும் என்றும், இப்போது உள்ளவன் லியர் மன்னன் அல்லன்; அவன் நிழலே என்றும் வேறு பலவகையாகவும் அவன் பேசத் தொடங்கினான். இவ்வாறு சிறிதும் அஞ்சாது அவன் பேசி வருதலை அறிந்த கானெரில், அவனைக் கசையடியால் ஒறுப்பதாக இரண்டொரு முறை எச்சரித்தாள்.

தமக்கையினுங் கொடிய தங்கை

லியர் மன்னன் நாள் செல்லச் செல்லத் தான் மதிப்பிழந்து வருவதை உணரத் தொடங்கினான்.கொடிய மகளாகிய கானெரில் அன்புமிக்க தந்தையிடம் நடந்து கொண்ட தவறான முறையே அல்லாமல், வேறொரு செய்தியும் அதற்குக் காரணமாக இருந்தது. “தந்தையே! வீரர் நூற்றுவராகிய பெரும்படையுடன் நீர் என் அரண்மனையில் தங்கியிருப்பது துன்பந் தருவதாக உள்ளது. இவ்வரச குழாம் பயனற்றது; வீண் செலவை விளைப்பது; இதனால் உண்ணும் ஆரவாரமும் உட்குழப்பமுமே பெருகியுள்ளன. நூற்றுவர் வேண்டா. தொகையைக் குறைத்துக்கொள்ளும். உம்மைப் போலவே உம் வயதுக்கு ஒத்தவராய் உள்ள முதியோர் சிலரை உடன் வைத்துக்கொண்டால் போதும்,” என அவள் வெளிப் படையாகக் கூறிவிட்டாள்.

இங்ஙனம் சிறிதும் அன்பின்றித் தன்னிடம் பேசியவள் தன் மகளே என்பதை முதலில் லியர் நம்பக் கூடவில்லை. தன்னிடமிருந்து தன் முடியைப் பெற்றுக்கொண்ட மகள் கானெரில், தன் வீரர் தொகையினைக் குறைக்கவும், தன் ஆண்டிற்கு ஏற்ற மதிப்பும் கொடுக்காமல் நடத்தவும் முன்வந்தாள் என்று அவன் எண்ணவும் முடியவில்லை. தகுதியற்ற அக்கோரிக்கையை அவள் வற்புறுத்தினாள்; லியர் அப்போது சினங்கொண்டவனாய், “பேராசை பிடித்த நாயே! பொய் பேசுகிறாய். என் வீரர் நூற்றுவரும் உண்ணும் ஆரவாரத்திற்கும் உட்குழப்பத்திற்கும் பெயர் போனவர் அல்லர். அனைவரும் உயர்ந்த நற்பண்புகளும் உண்மை ஒழுக்கமும் உடையவர்; கடமையைத் திறமையாய் ஆற்றும் ஆற்றல் உடையவர். நீ சொன்னது முற்றிலும் தவறு” என்று கடிந்துரைத்தான். பிறகு அவன், தன் குதிரைகளைப் பண்ணமைக்குமாறு ஏவலாளர்க்குக் கட்டளையிட்டான்; மற்றொரு மகள் ரீகன் அரண்மனைக்குத் தானும் தன்னைச் சூழ்வோரும் புறப்படவேண்டும் எனத் தெரிவித்தான்.

பின்னர், அவன் தன் மகளின் நன்றிகெட்ட தன்மையை கடிந்து கூறிய கடுஞ்சொற்கள் கேட்கத் தக்கன அல்ல. “நீ குழந்தையற்ற பாவியாக வாழ்வாயாக! ஒருகால், குழந்தை பிறந்தால், நீ என்னை வெறுத்து வைத்து ஒதுக்கியது போலவே, அதுவும் உன்னைச் செய்வதாக; கடும் பாம்பின் நச்சுப் பற்களை விட நன்றிகெட்ட மக்களே கொடியர் கொடியர் என்பதை அப்போது நீ உணர்வாயாக!” என்று அவன் வெகுண்டு கூறினான். கானெரில் கணவனாகிய ஆல்பனித் தலைவன், தான் ஒரு தவறும் செய்யவில்லை என்பதைத் தெரிவிக்க முயன்றான். ஆனால், லியர் அதற்குச் செவிகொடாமல், சினம் பொங்கிய வனாய், குதிரைகளைப் பண்ணமைத்தவுடன் தன் வீரருடன் ரீகன் அரண்மனைக்குப் புறப்பட்டான். அப்போது அவன் எண்ணிய எண்ணங்கள் பல. கார்டெலியா ஏதேனும் தவறு இழைத் திருந்தாலும், அத் தவறு அவள் தமக்கை செய்த பெருங் குற்றத்துடன் ஒப்பிட்டால் எத்துணைச் சிறிது என்பதை அறிந்து அவன் அழுதான். கானெரில் போன்று சிறியோர் தன் பேராண்மையைக் கலக்க அழச்செய்யும் ஆற்றல் வாய்ந்திருப்பதை எண்ணி வெட்கமுற்றான்.

ரீகனும் அவள் கணவனும் தன் அரண்மனையில் மிக்க ஆடம்பரத்துடன் வாழ்ந்து வந்தனர். தன்னை வரவேற்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு, லியர் தன் ஏவலாள் கேயஸ் என்பவனைக் கடிதத்துடன் முன்னே அனுப்பியிருந்தான். ஆனால், கானெரில் அதற்கு முன்பே தன் தங்கைக்குப் பல கடிதங்கள் எழுதி அனுப்பியிருந்தாள். அவற்றில் தந்தையின் மீது பலவாறு குறைகூறி, அவன் தன்னுடன் கொண்டுவரும் பெரும்படையை வரவேற்றுப் போற்றல் வேண்டா என்றும் அறிவித்திருந்தாள். அக்கடிதங்களைக் கொண்டு சென்றவனும் கேயஸும் ஒரே காலத்தில் ரீகன் அரண்மனை அடைந்தனர்; ஒருவரை ஒருவர் கண்டனர். கானெரில் கடிதங்களைக் கொணர்ந்தவன் யார்? லியரிடம் தகாத முறையில் நடந்த குற்றத்திற்காகக் கேயஸால் ஒறுக்கப்பட்ட ஏவலாளே ஆவான். அவன் பார்வை கேயஸுக்குப் பிடிக்கவில்லை. அவன் வந்த காரணத்தைப் பற்றிக் கேயஸ் ஐயுற்று அவனை வைது, தன்னுடன் வாட்போருக்கு வருமாறு அறைகூவினான். அவன் வரமறுத்தான். கேயஸ் தன்மானம் தூண்ட ஒருவகை உணர்ச்சிக் கொண்டு அவனை நன்றாகப் புடைத்தான். கொடிய செய்திகளைக் கொண்டு செல்லும் தீயோன் ஒருவனுக்கு அது தகுதியுடையதே. ஆனால், ரீகனும் அவள் கணவனும் அதைக் கேள்வியுற்றுக் கேயஸைத் தொழுவில் இட்டனர்; ரீகன் தந்தையாகிய அரசனிடமிருந்து வந்தவன் என்பதைப் பொருட்படுத்திலர். அரசன் ரீகன் அரண்மனைக்கு வந்தவுடன் முதலில் கண்ட காட்சி, தன் நன்றியுள்ள ஏவலாள் இழிநிலையுற்றுத் தொழுவிலிருத்த லேயாயிற்று.

லியர் எதிர்பார்த்த வரவேற்பிற்கு இஃது ஒரு தீயநிமித்தம். இதனினும் தீயது மற்றொன்று நேர்ந்தது. அவன் தன் மகளையும் மருமகனையும் பற்றிக் கேட்டபோது, அவர்கள் இரவெல்லாம் செய்த பிரயாணத்தால் களைப்புற்றதால் அரசனைப் பார்த்துப் பேச இயலாமல் இருப்பதாக ஏவலாளர் தெரிவித்தனர். இறுதியில் எவ்வாறேனும் அவர்களைத் தான் பார்த்துப் பேசவேண்டும் என்று சினங்கொண்டு வற்புறுத்தியபோது, அவர்கள் வரவேற்க வந்தனர். அப்போது அவர்களுடன் கானெரிலும் இருக்கக் கண்டான் லியர் மன்னன். தன் கதையை நேரில் சொல்லத் தந்தைக்கு மாறாகத் தங்கை மனத்தைத் திருப்பவேண்டும் என்றே கானெரில் அங்கு வந்திருந்தாள்.

லியர் கண்ட காட்சி அவன் மனத்தை வருத்தியது. ரீகன் தன் தமக்கையின் கையைப் பற்றிக்கொண்டு அளவளாவுதலைக் காண வருத்தம் மிகுந்தது. “கானெரில்! என் நரைத்த தாடியைப் பார்க்க உனக்கு வெட்கமாக இல்லையா?” என்று லியர் தன் மூத்த மகளைக் கேட்டான்.

“தந்தையே! தமக்கையின் அரண்மனைக்கு மீண்டு செல்வதே நல்லது. அங்கு அமைதியாக வாழ்ந்திருப்பீராக! உம் வீரரில் பகுதியினரை நீக்கிவிடுக. தமக்கையினிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும். உமக்கோ ஆண்டு நிரம்பிவிட்டது. நன்மை தீமை பகுத்தறிதல் இம்முதுமையில் இயலாது. வல்லார் பிறர் வகுக்கும் வழியில் நடத்தலே நலம்,” என்று ரீகன் அறிவுரை கூறத் தொடங்கினாள்.

லியர் உடனே அவளை நோக்கி, “நான் என் மகளிடம் வணங்கி மன்னிப்புக் கேட்டு உணவும் உடையும் இரந்து பெற்று வாழ்தல் எத்துணை அறியாமை! மானக் குறைவு! நான் மீண்டும் அவள் அரண்மனைக்குச் செல்லேன்; இஃது என் உறுதி. உன்னிடத்திலேயே நானும் என் வீரர் நூற்றுவரும் இருப்போம். என் நாட்டின் அரைப் பகுதியை நீ என்னிடம் பெற்றதை மறந்து விடவில்லையே? உன் பார்வை கானெரில் நோக்குப் போலக் கொடியதன்று; அன்பும் இரக்கமும் உடையது என நம்புகிறேன். என் வீரர் தொகையைக் குறைத்துக்கொண்டு கானெரிலிடம் சென்று வாழ்தலை விட, பிரான்சுக்குச் சென்று, என் செல்வத்தில் ஒரு சிறு பகுதியையும் பெறாமலேயே என் இளையமகளை மணந்த அரசனிடம் உதவி வேண்டி இரக்க என் நெஞ்சம் துணிகிறது,” என்றான்.

கானெரில் நடந்ததுபோல அல்லாமல் ரீகன் தன்பால் மிக்க அன்புடன் ஒழுகுவாள் என மன்னன் எதிர்பார்த்தது தவறே. அவளோ, கொடுமையில் தமக்கையை விஞ்ச விரும்பினள் போல, அவனுக்கு வீரர் ஐம்பதின்மரும் மிகையே என்றும், இருபத்தைவரே இருத்தல் வேண்டும் என்றும் கூறினாள்.

மன்னன் பித்தனாய் அலைதல்

லியர் மேலும் மனமுடைந்தவனாய், கானெரிலை நோக்கி, “நான் மீண்டும் உன் அரண்மனைக்கே வருகிறேன். இருபத்தைந்து இருமடங்கு கொண்டதே ஐம்பது. ஆதலின், ரீகனைவிட நீ அன்பிற் சிறந்துள்ளாய்,” என்றான். அவளோ, “இருபத்தைவரோ, பதின்மரோ, ஐவரோ ஏன் உடன் இருத்தல் வேண்டும்? என் ஏவலாளர் அல்லது தங்கையின் ஏவலாளர் இருக்கும்போது உமக்குக் குறை உளதோ?” என்றாள்.

இவ்வாறாக, கொடுமைமிக்க அவர்கள் அன்பான தந்தைக்குத் தீங்கு இழைப்பதில் ஒருவரினும் ஒருவர் முற்பட முயன்றனர். ஒரு காலத்தில் நாடு முழுதும் ஆண்ட மன்னனுக்குக் குறைந்த அளவில் எஞ்சி நின்றவை அவன் வீரர் தொகையும் அவன் மதிப்புமே, அவற்றையும் படிப்படியாகக் குறைத்துச் சிறிதும் இல்லாதவாறு செய்ய முயன்றனர் இருவரும் சிறந்த பரிவாரம் இன்பத்திற்கு இன்றியமையாதது அன்று. ஆயினும், அரசனாக இருந்து ஆண்டியாக மாறுதல் நாட்டை ஆளும் உரிமை விடுத்து ஏவலாளும் இல்லா நிலைக்கு மாறுதல் அரிதே அன்றோ? ஏவலாள் ஒருவரும் வேண்டா என்று சொன்ன சொல் அவனுக்குத் துன்பமாக இருந்தது. மகள் இருவரும் நன்றி மறந்து சொன்ன சொல் உள்ளத்தைத் தைத்து வருத்தியது. அரச செல்வத்தைக் கொடுத்துவிட்டுத் துன்புறும் தன் அறியாமையை நினைந்து வெறுத்தான். அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. “இந்தப் பெண்பேய்களை நான் பழிக்குப்பழி வாங்குவேன். அதன் வழியாக, இந்த உலகத்திற்கே அறிவு புகட்டுவேன்,” என்று சூளுரைத்தான்.

அவனால் ஒன்றும் செய்ய இயலாது எனினும், இவ்வாறு அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தான். இரவு வந்தது. மின்னலும் இடியும் மழையும் கூடிய பெரும்புயல் தொடங்கிற்று. உடன்வந்த வீரரைச் சேர்த்துக்கொள்ள முடியாது என்று அப்பெண்கள் உறுதியாக மறுத்துவிட்டனர். நன்றி கெட்டவர்கள் அரண்மனையில் அவர்களுடன் தங்கியிருப்பதை விடப் புயலின் கடுமையைத் தாங்கி நிற்பதே நன்று எனத் துணிந்தான் மன்னன். அப் பெண்களோ, அறிவில்லாதவர் தாமே தேடிக்கொள்ளும் துன்பங்களே தமக்கு ஏற்ற தண்டனையாம் என்று சொல்லி அப்புயலிடையே தந்தை புறப்பட்டுச் சென்று வருந்துமாறு விடுத்துக் கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொண்டனர்.

காற்றின் கடுமை மிகுந்தது; மழை விடாது பொழிந்தது; ஆயினும், அவை தன் மக்களினும் கொடியவை அல்ல என்று அரசனும் புறப்பட்டுச் சென்றான். செல்லும் வழியிலோ பல கல் தொலைவு வரைக்கும் ஒரு புதரும் காண்பது அரிது. அத்தகைய பாலையில் நள்ளிரவில் கடும்புயலுக்கிடையே லியர் மன்னன் திரிந்து, காற்றையும் இடியையும் எதிர்த்துச் சென்றான். “காற்றே! இந் நிலவுலகத்தைத் தூக்கிச் சென்று கடலில் எறிந்துவிடு; அல்லது கடல் அலைகள் பொங்கி நிலத்தை விழுங்குமாறு செய்துவிடு. எவ்வாறேனும் செய்து மனிதன் என்னும் நன்றிகெட்ட உயிர் இருந்த இடம் தெரியாமல் ஒழித்துவிடு,” என்றான். முதுமை மிக்க லியருக்கு முன் இந்த நகைச்சுவையாளன் இப்போதும் துணையாக இருந்தான். இடுக்கண் வருங்கால்அடுத்தூர்வதற்கு உதவும் நகைச்சுவை மிக்கவன் அவன். ஆதலின், அவன் தன் சொற்களால் அரசன் கவலையைக் குறைக்க முயன்றான்.

ஒரு காலத்தில் பெருஞ் சிறப்புடன் வாழ்ந்த லியர், இவ்வாறு எளியனாய்ச் செல்லும்போது ஏவலாள் கேயஸும் உடன் இருந்தான். என்றும் மறவா நன்றியுள்ள கென்ட் தலைவனே அவன் என்பதை அரசன் இன்னும் அறியான். “ஐய! அந்தோ! நீர் இங்கு இருத்தல் தகுமோ? இராக் காலத்தை விரும்பித் திரியும் உயிரினங்களும் இத்தகைய இரவுகளை விரும்பாவே. இக்கொடிய புயலால் விலங்குகளும் அஞ்சி ஒதுக்கிடத்தில் ஒதுங்கி விட்டனவே. அச்சமும் துன்பமும் தாங்கல் மக்களுக்கு இயற்கையன்றே,” என்று கேயஸ் முறையிட்டான். லியர் அவனைக் கடிந்து நோக்கி “இத் துன்பங்கள் மிகச் சிறியவை. மிகப் பெரிய துன்பம் வாட்டும்போது இவை தெரிவதில்லை. மனம் ஓய்ந்திருக்கும்போது உடல் இன்ப நுகர்ச்சியை விழையும். என் மனத்தில் பெருங்குழப்பம் ஒன்று உள்ளதே. அந்த ஒன்று தவிர வேறெதுவும் என் புலன்களில் படுமோ? பெற்றோரிடம் நன்றிகெட்டு நடத்தல் ஆ! எவ்வளவு கொடியது! தனக்கு உணவு நல்கும் கையினைக் கடிந்து அழிக்கும் வாயின் கொடுமை போன்றது அன்றோ அது? மக்களுக்குக் கையாகவும் உணவாகவும் மற்றெல்லாமாகவும் உதவுபவர் பெற்றோரே அல்லரோ?” என்றான்.

ஆனாலும், கேயஸ் தன் வேண்டுகோளைவிடாது, திறந்த வெளியில் மன்னன் இருத்தல் ஆகாது என்று வற்புறுத்தினான்; அப் பாலையில் இருந்த பாழடைந்த தொரு குடிலினுள் தங்குமாறு வேண்டினான். மன்னனும் இசைந்தான். நகைச்சுவையாளன் முதலில் அதனுள் நுழைந்ததும் அஞ்சி ஓடிவந்துவிட்டான்; அதனுள் ஆவி ஒன்று இருப்பதாக அலறினான். ஆனால், உட்புகுந்து பார்த்தபோது அங்கே ஆவி ஒன்றும் இல்லை; ஏழை இரவலன் ஒருவனே இருந்தான். அவனும் புயலின் கொடுமைக்கு அஞ்சி அதனுள் தங்கினவனே, அவன் பேய்களின் செயல்களைக் கூறத் தொடங்கினான்; நகைச் சுவையாளன் அவற்றைக் கேட்டு அஞ்சினான்.

இரக்கம் மிகுந்த நாட்டுப்புற மக்களிடம் பொருள் பெற்று வாழும் பித்தரும், பித்தர்போல் நடிப்பவரும் ஆகிய சிலர் உள்ளனர். அவர்கள் நாட்டுப்புறங்களுக்குச் சென்று டாம்¹⁰ முதலிய பெயர்கள் சொல்லிக் கொண்டு, தாம் திக்கற்றவர் என்று முறையிட்டு, ஏதேனும் பொருள் உதவுமாறு வேண்டுவர்; ஊசி, ஆணி, முள் முதலியவற்றால் தம் கைகளில் குத்திச் செந்நீர் வருவிப்பர். இதுபோன்ற கொடுஞ் செயல்களுடன் வேண்டு கோள்களால் மக்கள் இனம் இரங்குமாறு செய்வர்; அல்லது பித்தர் போல நடித்துச் சாபங்கொடுப்பதால் அம்மக்களை அச்சுறுத்துவர். மனம் இரங்கியோ அஞ்சியோ மக்களும் பொருள் ஈவர். அத்தகைய இரவலருள் ஒருவன் அக்குடிலில் தங்கியிருந்தவன், அவன் கோவணத்துடனும் அதைச் சுற்றிய ஒரு போர்வையுடனும் இரங்கத்தக்க நிலையில் இருத்தலை மன்னன் கண்டான்; தன்னிடம் இருந்தவற்றைத் தன் பெண்களுக்குக் கொடுத்துவிட்டு வறியனான ஒரு தந்தையே அவன் என்று எண்ணலானான். நன்றிகெட்ட பெண்களைப் பெற்ற தந்தையே அல்லாமல் மற்றவர் எவரும் இந்நிலைக்கு வருதல் இல்லை என்று மன்னன் நம்பியதால் இவ்வாறு எண் ணினான்.

இதனாலும் இதுபோன்ற பல பேச்சுக்களாலும், மன்னன் மனங் கலங்கினான் என்றும், தன் பெண்கள் செய்த கொடுமைகளால் பித்துக் கொண்டான் என்றும் கேயஸ் தெளிந்தான். அதுகாறும் ஆற்றிய உதவிகளை விடச் சிறந்த பேருதவி ஒன்றை இப்போது கென்ட் தலைவனாகிய அவன் ஆற்ற முன் வந்தான். அரசனிடம் உண்மையான அன்புடன் நடந்துவந்த ஏவலாளர் சிலர் உதவியால் விடியற்காலைக்குள் அரசனை டோவர்¹¹ அரண்மனைக்குக் கொண்டு சென்றான். கென்ட் தலைவனாய் இருக்கும் நிலையில் தன் செல்வாக்கும் நண்பர்களும் சிறப்பாக உள்ள இடம் அதுவே ஆதலின் அவன் அவ்வாறு செய்தான்; உடனே பிரான்சில் உள்ள கார்டெலியாவுக்கு விரைந்து ஆள் அனுப்பி, அவளுடைய தந்தையின் இரங்கதக்க நிலையினையும், தமக்கையாரின் ஈரமற்ற நெஞ்சினையும் விளக்கமாகவும் விரிவாகவும் தெரிவித்தான். அவற்றைக் கேட்டறிந்த நல்ல மகளாகிய கார்டெலியா கண்ணீர் விட்டுத் தன் கணவனிடம் சென்று, “துணைவரே! நான் இங்கிலாந்திற்கு விரைந்து செல்லுதல் வேண்டும். என்னுடன் பெரும்படை வருதல் வேண்டும். அப்படை வலியால் கொடியவராகிய என் தமக்கையரையும் அவர்தம் கணவரையும் ஒறுத்து அடக்குவேன். என் தந்தையை மீண்டும் அரசுரிமை பெற்ற மன்னன் ஆக்குவேன். விடை தருக!”என்று வேண்டினாள். பிரான்சு மன்னனும் இசைந்தான். அவள் பெரும் படையுடன் புறப்பட்டு, டோவர் துறைமுகத்தை அடைந்தாள்.

லியர் பித்துப்பிடித்தவனாய் இருந்ததால் அவனைக் காத்திருக்குமாறு கென்ட் தலைவன் சிலரைப் பணித்திருந்தான். ஆனால் லியர் எப்படியோ அவர்களிடமிருந்து தப்பிவந்து டோவர்க்கு அருகேயுள்ள வயல்களில் திரிந்து கொண்டிருந்தான். கார்டெலி யாவுடன் வந்தவர்களில் சிலர் அவன் திரிவதைக் கண்டனர். அப்போது அவன் நிலை நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அவன் தனக்குத்தானே உரக்கப் பாடிக் கொண்டிருந்தான்; வயலில் கண்ட பலவகைக் கொடிகளாலும் புல்லாலும் தானே செய்ததொரு முடியினைத் தலைமீது வைத்துக் கொண்டிருந்தான். தந்தையைப் பார்க்க வேண்டும் என்று கார்டெலியா மிக்கஆவல் கொண்டிருந்தாள். ஆனால், மருத்துவர் தடுத்தனர்; தாம் கொடுத்துள்ள பச்சிலைகளாலும் உறக்கத்தாலும் அவன் நிலை திருந்தும் என்றும், அதுவரைக்கும் அவனைப் பார்த்துப் பேசுதல் வேண்டா என்றும் கூறினார். மன்னர் பித்துத் தணியுமானால், மருத்துவர்க்குத் தன்னிடம் உள்ள பொன்னும் மணியுமாகிய எல்லாம் தருவதாகக் கார்டெலியா வாக்களித்தாள். மருத்துவர் மிக்கதிறன் வாய்ந்தவர். அவர்தம் உதவியால் மன்னன் ஒருவாறு தெளிவு பெற்றான். கார்டெலியா தன் தந்தையைக் காணலாம் என்று அப்போது மருத்துவர் கூறினர்.

எல்லார்க்கும் நேர்ந்த முடிவு

மகள் உடனே சென்று தந்தையைக் கண்டாள். அக்காட்சி உருக்கமானதாகும். தன் செல்வ மகளாக இருந்த கார்டெலியாவை மீண்டும் காணப்பெற்ற பெருமகிழ்ச்சி ஒருபுறம்; மிகச் சிறிய தவறு காரணமாகத் தான் வெறுத்துத் தள்ளிய மகளிடம் உண்மையான அன்பு விளங்குவதை உணர்ந்ததால் உற்ற வெட்கம் ஒருபுறம்; இவையல்லாமல் தெளிந்தும் தெளியாமலுமுள்ள பித்தின் இயற்கை மற்றொரு புறம்; இவற்றுக்கிடையே, தான் அங்கிருப்பதும், தன்னை இவ்வளவு அன்போடு பார்த்துப் பேசியவள் யார் என்பதும் அவனுக்கு நினைவிலிருப்பது அரிதாயிற்று. “இவளை என் மகள் கார்டெலியா என்று நான் எண்ணுகிறேன். என் எண்ணம் தவறாக இருந்தால் எள்ளி நகைக்காதீர்கள்!” என்று தன்னைச் சூழ்ந்திருப்போரை நோக்கி வேண்டினான். பிறகு; தன் மகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளத் தொடங்கி அவளை வணங்கினான். கார்டெலியா தன் நல்லியல்பு குன்றாமல் அவனை வணங்கிக் கொண்டே, “தந்தையே! எனக்கு உமது நல்வாழ்த்து வேண்டும். நான் உம்மை வணங்குதல் என் கடமை; உண்மையான அன்புடைய மகளாகிய எனக்கு இயற்கை. ஆனால், நீர் அவ்வாறு வணங்குதல் வேண்டா; அஃது ஏற்றதன்று,” என்று கசிந்துரைத்தாள். மேலும், அவள், “என் தமக்கையரைப் பொருட்படுத்தல் வேண்டா என்னைக் கடித்த நாயாக - அதுவும் என் பகைவன் நாயாக - இருப்பினும், பெருமழை பெய்யும் நள்ளிரவில் ஒதுக்கிடம் தந்து ஓம்புவேன். ஆனால், என் தமக்கையார் முதுமை மிக்க எந்தையாகிய உம்மைக் கொடியதோர் இரவில் அலைந்து வருந்திக் குளிரால் நடுங்க விட்டனரே! அவர்கள் தம் செயலை நினைந்து நினைந்து வருந்துவார்களாக. உமக்கு உதவும் பொருட்டே நான் பிரான்சிலிருந்து விரைந்து வந்தேன்,” என்றாள். அதற்கு மன்னன், “எல்லாவற்றிற்கும் காரணம் என்னுடைய முதுமையும் அறியாமையுமே; ஆகையால், எல்லாவற்றையும் மறந்துவிடுக. மன்னித்துவிடுக. என்னைப் போற்றாமல் விட்ட உன் தமக்கையர்க்கு நான் ஒரு தீங்கும் செய்வதில்லை. உனக்கேனும் ஒரு காரணம் உளது. அவர்களுக்கு அத்தகைய காரணமே இல்லை. ஆயினும், மறந்து விடுக,” என்றான்.

இவ்வாறாக, அன்பும் உண்மையும் மிக்க தன் மகளின் பாது- காப்பில் இருந்துகொண்டு, மருந்தாலும் உறக்கத்தாலும் மன்னன் படிப்படியாக நலம்பெற்று வந்தான். அவள் அன்பாலும் மருத்துவர் திறமையாலும் முடிவில் அவன் பித்து அறவே தீர்ந்தது.

நன்றிகெட்ட தமக்கையர் அப்போது எவ்வாறு இருந்தனர்? பெற்ற தந்தையிடம் கன்னெஞ்சம் உடையவராய்த் தீங்கிழைத்த அப்பாவிகள் தம்கொழுநரிடம் நன்முறையில் ஒழுகி வாழ்வார்கள் என எதிர்பார்த்தல் கூடுமோ? கொழுநர்க்குத் தன் அன்பான கடமைகளைச் செய்வதிலிருந்து வழுவினர்; வேறொருவனிடம் காதல் கொண்டொழுகினர்; குற்றம் நிறைந்த அவ்வொழுக்கம் வெளிப்படலும் ஆயிற்று. அவர்கள் இருவரும் ஒருவரிடமே காதல் கொள்ள நேர்ந்ததும் வியப்பே.

அவன் யார்? காலஞ்சென்ற கிளஸ்டர்¹² தலைவனுடைய மகன் எட்மன்ட்¹³ என்பவனே அவன். அவனுடைய தமையன்¹⁴ எட்கார் என்பவேன கிளஸ்டர் தலைமைக்கு உரிமையுடைய வனாய் இருந்தான். எட்மன்ட வஞ்சகச் சூழ்ச்சி செய்து அவனை நீக்கி விட்டுத் தான் தலைவனான். அவன் மிகக் கொடியவன். கானெரில், ரீகன் என்னும் கொடிய உயிர்கள் அவனைக் காதலித்துப் பொருந்துவதே. இவ்வாறு இருக்கும்போது, ரீகன் கணவனாகிய கார்ன்வால் தலைவன் இறந்து விட்டான். உடனே, ரீகன் கிளஸ்டர் தலைவனாகிய எட்மன்டை மணப்பதாகத் தெரிவித்துவிட்டாள். இதனால், கானெரில் மனத்தில் பொறாமை மிக்கது. ஏன் எனில், அவர்கள் இருவரிடத்திலும் தனித்தனியாக எட்மன்ட் தன் காதலைப் புலப்படுத்தியிருந்தான். கானெரில் கொண்ட பொறாமையால் தன் தங்கை ரீகனை நஞ்சு கொடுத்துக் கொன்றாள். இக்கொடுஞ் செயலை அவளுடைய கணவன் ஆல்பனித் தலைவன் அறிந்தான்; அவள் கிளஸ்டர் தலைவனிடம் கொண்ட கள்ளக் காதலைப் பற்றியும் அவன் எவ்வாறோ அறிந்தான்; ஆதலின் அவனை உடனே சிறையிலிட்டான். தன் காதலுக்கு நேர்ந்த ஏமாற்றத்தாலும் பொங்கி எழுந்த சினத்தாலும், விரைவில் அவள் தற்கொலை செய்து கொண்டாள். கொடியோர் இருவர்க்கும் இங்ஙனம் முடிவு கண்டது இறைவன் முறை.

எல்லோரும் இந்நிகழ்ச்சியைப் பற்றியே எண்ணி அவர்கள் இருவரும் மாண்டொழிந்தது மிகப் பொருத்தமானதே என்று வியந்தனர். அதே ஊழின் வியப்பான முறைப்படி கொடிய தொன்றும் நிகழ்ந்தது. நல்லொழுக்கமும் தூய உள்ளமும் இவ்வுலகத்தில் வெற்றியே தரும் என்று கூற முடியாது. இது கொடுமை நிறைந்ததோர் உண்மையாகும். கார்டெலியா குணக்குன்று; நல்லவள். அவள் நற்செயல்களுக்கு ஏற்ற நன்முடிவு ஏற்பட்டிருத்தல் வேண்டும். கானெரிலும் ரீகனும் தன் படைகளைத் திரட்டிக் கிளஸ்டர் தலைமையின் கீழ்ப்போர் செய்யுமாறு அனுப்பியிருந்தனர். அப்படைகள் வெற்றி பெற்றன. கிளஸ்டர் தலைவன், அரசுரிமையைக் கவர்வதில் யாரேனும் குறுக்கிட்டால் அவரை ஒழித்திடும் சூழ்ச்சியில் வல்லவன்; அவன் சூழ்ச்சியில் கார்டெலியா சிறையில் கிடந்து மாண்டாள். பெற்றோரைப் போற்றி ஒழுகும் நல்லொழுக்கத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உலகத்திற்கு விளக்கி விட்டு கார்டெலியாவை இளமையிலேயே கடவுளின் முறை கொண்டு சென்றது. மன்னன் லியரும் தன் செல்வமகள் மறைந்தபின் விரைந்து உலக வாழ்வை நீத்தான்.

கென்ட் தலைவன், மன்னனுடைய மூத்தமகள் துன்புறுத்தத் தொடங்கியநாள் முதல் அவனது இறுதிவரைக்கும் உடன் இருந்து வந்தான்; கேயஸ் என்னும் பெயர்கொண்டு தொடர்ந்து வந்தவன் தானே என்பதை மன்னன் இறப்பதற்குமுன் அவனுக்கு அறிவிக்க முயன்றான். ஆனால், அப்போது மன்னன் மனமோ கவலையால் நொந்து நொந்து கலங்கியிருந்தது. அதனால், அஃது உண்மையாக இருக்கமுடியும் என்றும், கென்ட் தலைவனும் கேயஸ் என்பவனும் வேறு வேறானாவர் அல்லர் என்றும் அவனால் உணர முடியவில்லை. ஆகையால், அந்நிலைமையில் அதனை விளக்கிக் கூறி அவனை வருத்தலாகாது. லியர் மன்னன் ஆவி பிரிந்த பின்னர், அவனிடம் உண்மையாக ஊழியம் செய்து வந்த அத்தலைவனும், தன் முதுமையாலும் மன்னன் துன்பங்களுக்காகத் தான் உற்ற துயரத்தாலும் விரைவில் இறந்தான்.

கிளஸ்டர் தலைவனாக இருந்த எட்மன்ட் செய்த கொடுஞ் செயல்கள் வெளிப்பட்டன. கிளஸ்டர் தலைமைக்கு உரியவனான எட்கார் அவனுடன் தனிப்போர் புரிந்து, அவனைக் கொல்லவே, இறைமுறை அக்கொடியோனையும் கொண்டு சென்றது. கானெரில் கணவனாகிய ஆல்பனித் தலைவன் ஒரு குற்றமும் அறியாதவன் அல்லனோ? கார்டெலியாவின் முடிவு பற்றி அவன் ஒன்றும் செய்ய வில்லை. லியர் மன்னனைக் கொடுமையாக நடத்துமாறு தன் மனைவியை அவன் தூண்டியதுமில்லை. லியர் மாண்டபின், அவனே பிரிட்டன் அரசுரிமை பெற்றான்.

அடிக்குறிப்புகள்

1. King Lear 2. Goneril

2. Dake of Albany 4. Regan

3. Duke of Cornwall 6. Cordelia

4. Duke of Burgundy. 8. Earl of Kent

5. Caius 10. Tom

6. Dover 12. Earl of Gloucester

7. Edmund 14. Edgar


留言


Subscribe here to get my latest posts

Thanks for submitting!

© 2023 Powered by Tamil Bookshelf

  • Facebook
  • Twitter
bottom of page