கா. அப்பாத்துரையார்
ஹாம்லெத் (Hamlet)
கதை உறுப்பினர்கள்
ஆடவர் 1. ஹாம்லெத்: டென்மார்க் இளவரசன் - காலம் சென்ற அரசன் ஹாம்லெத்தின் மகன்.
2. காலஞ்சென்ற ஹாம்லெத்தின் ஆவி.
3. கிளாடியஸ்: காலஞ்சென்ற அரசன் மனைவி கெர்ட்ரூடை மணந்து அரசனானவன்.
4. ஹொரேஷியோ: இளவரசன் ஹாம்லெத்தின் நண்பன் - கல்லூரித் தோழன்.
5. பொலோனியஸ்: டென்மார்க் மந்திரி ஹாம்லெத்தின் காதலியாகிய ஒபீலியா லேயர்ட்டிஸ் ஆகியவர்களின் தந்தை.
6. லேயர்டி: பொலோனியஸின் மகன் - ஒபீலியாவின் அண்ணன் வாட்போர் வல்லான்.
7. மார்செல்லஸ்: காவலான் - முதலில் ஆவியைக்கண்டு ஹொரேஷியோவுக்கு உரைத்தவன்.
** பெண்டிர்** 1. கெர்ட்ரூட்: காலஞ்சென்ற அரசர் ஹாம்லெத்தின் மனைவி இளவரசன் ஹாம்லெத்தின் தாய் - அரசர் இறந்தபின் கிளாடியஸின் மனைவி.
2. ஒபீலியா: ஹாம்லெத்தின் காதலி - பொலோனியன் மகள் - லேயர்டின் தங்கை.
உள்நாடக உறுப்பினர்கள்
ஆடவர்:
1. பிரயம்: முதல் நாடகத் தலைவன் - ட்ராய் மன்னன்
2. கன்சாகோ: (இரண்டாம் நாடகம்) வியன்னா நகரமன்னன்.
3. லூஷியானஸ்: கன்சாகோ உறவினன் - அவனைக் கொன்றபின், பப்டிஸ்டா கணவன்.
பெண்டிர்
1. ஹெக்யூபா: (முதல் நாடகம்) பிரயம் மனைவி.
2. கன்சாகோ மனைவி: (இரண்டாம் நாடகம்) கன்சாகோ இறந்தபின் லூஷியானஸ் மனைவி.
** கதைச் சுருக்கம்** டென்மார்க் அரசன் ஹாம்லெத்தின் மனைவி கெர்ட்ரூட் அரசனைக் கொன்ற அவன் தம்பி கிளாடியஸை மணந்து கொள்ள, அதுகண்டு நொந்த இளவரசன் ஹாம்லெத்து தன் கல்லூரி நண்பன் ஹொரேஷியோ வாயிலாய்த் தந்தையின் ஆவியைக் கண்டு தந்தை கொலைபற்றிய விவரம் அறிந்து பழி வாங்க எண்ணினான். அதற்கான மன உறுதியின்றிக் குழம்பிய உள்ளத்துடன் இன்னும் தெளிவு வேண்டி கிளாடியஸ் வாழ்க்கையை ஒத்த கதைப் போக்குடைய நாடகம் நடித்துக் காட்டி அரசன் குற்றத்தை நேரடியாகக் கண்டான்.
தன் எண்ணத்தை மறைக்கப் பித்தனாக நடித்ததினால் ஹாம்லெத் தன் காதலி ஒபீலியாவைக் கடுமையாக நடத்தினான். அவள் தந்தை பொலோனியஸ் கிளாடியஸின் மந்திரி; மகள் மீது காதலாலேயே பித்து என எண்ணி அரசியும் ஹாம்லெத்தும் பேசும் போது ஒற்றுக்கேட்டவன். அரசி அச்சமுற்றநேரம் உள்ளிருந்து கூவினான். அரசனே கூவுகிறான் என்றெண்ணிய ஹாம்லெத் திரைமறைவிலேயே அவனைக் குத்திவிட்டு உண்மையறிந்த பின் வருந்தினான்.
ஹாம்லெத்தை எப்படியாவது கொல்ல எண்ணி அவனைத் தூக்கிலிடும் படி இங்கிலாந்து அரசனுக்கெழுதி ஹாம்லெத்தைக் கப்பலில் அனுப்ப, ஹாம்லெத் கடிதங் கண்டு, கொண்டு வருவோரைக் கொல்லும்படி மாற்றி எழுதிவிட்டுத் திரும்ப டென்மார்க்குக்கே வர, அங்குக் காதல் முறிவால் இறந்த ஒபீலியா இழவுச் சடங்கைக் கண்டான்.
அரசன் ஒபீலியா அண்ணன் லேயர்ட்டிஸை ஹாம்லெத்துக் கெதிராக முட்டிவாட் போரில் நஞ்சிட்ட வாளால் வெட்டத் தூண்டியதுடன், ஒருவேளை ஹாம்லெத் வெற்றி பெற்றால் கொடுக்கும்படி நஞ்சிட்ட பாலும் வைத்திருந்தான். ஹாம்லெத் வெட்டுண்ட போதிலும், அதே வாளால் லேயர்ட்டிஸையும் வெட்டினான். அவனுக்காக வைத்திருந்த பாலையும் அரசியே குடித்தாள். இருவரும் அரசன் சூதை இறக்கும் தறுவாயில் வெளிப்படுத்த ஹாம்லெத் தான் விழுமுன் அரசனையும் வீழ்த்தினான். அனைவரும் இறப்பது கண்டு தானும் இறக்க முன்வந்த ஹொரேஷியோவை உலகிற்குத் தன் வரலாறு கூறும் பொருட்டு வாழ்ந்திருக்கும்படி ஹாம்லெத் வேண்டிக் கொண்டான்.
தந்தையின் ஆவியைக் காணுதல்
பித்தனாக நடித்தல்
பழிக்குப் பழி வாங்கும் உறுதி
टिप्पणियां