மகாத்மா காந்தியின் சுய சரிதை
முதல் பாகம்
முன்னுரை
நாலைந்து ஆண்டுகளுக்கு முன், என் சுய சரிதையை நான் எழுத வேண்டும் என்று என் நெருங்கிய சகாக்கள் சிலர் யோசனை கூறியதன் பேரில், நானும் எழுத ஒப்புக் கொண்டேன்; எழுதவும் ஆரம்பித்தேன். ஆனால், முதல் பக்கத்தை எழுதி முடிப்பதற்குள்ளேயே பம்பாயில் கலவரம் மூண்டுவிட்டதால் அவ்வேலை தடைப்பட்டு விட்டது. பிறகு ஒன்றன் பின் ஒன்றாகப் பல சம்பவங்கள் நடந்து எராவ்டாவில் என் சிறை வாசத்தில் முடிந்தது. அங்கே என்னுடன் கைதியாக இருந்த ஸ்ரீ ஜயராம்தாஸ், என்னுடைய மற்ற எல்லா வேலைகளையும் கட்டி வைத்துவிட்டுச் சுய சரிதையை எழுதி முடிக்கும்படி கேட்டுக் கொண்டார். நானோ, சிறையில் பல நூல்களைப் படிப்பது என்று திட்டமிட்டிருந்தேன். அந்த வேலையை முடிப்பதற்கு முன்னால் நான் வேறு எதுவும் செய்வதற்கில்லை என்று அவருக்குப் பதில் சொன்னேன். எராவ்டாவில் என் சிறைத் தண்டனைக் காலம் முழுவதையும் அனுபவித்திருப்பேனாயின் சுயசரிதையையும் எழுதி முடித்தே இருப்பேன். ஆனால், அவ்வேலையை முடிப்பதற்கு இன்னும் ஓராண்டுக் காலம் இருந்த போதே நான் விடுதலை அடைந்து விட்டேன். சுவாமி ஆனந்தர் அந்த யோசனையைத் திரும்ப என்னிடம் கூறினார். தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக சரித்திரத்தை எழுதி முடித்து விட்டேனாகையால், சுய சரிதையை "நவஜீவனு"க்கு எழுதும் ஆர்வம் எனக்கு உண்டாயிற்று. தனி நூலாகப் பிரசுரிப்பதற்கென்றே அதை நான் எழுதவேண்டும் என்று சுவாமி விரும்பினார். ஆனால், அதற்கு வேண்டிய ஓய்வு நேரம் எனக்கு இல்லை. வாரத்திற்கு ஓர் அத்தியாயம் வீதமே என்னால் எழுத முடியும். வாரந்தோறும் 'நவஜீவனு'க்கு நான் ஏதாவது எழுதியாக வேண்டும். அப்படி எழுதுவது சுய சரிதையாக ஏன் இருக்கக் கூடாது? இந்த யோசனைக்குச் சுவாமியும் சம்மதித்தார்; நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன்...
...Continue Reading
Comments