ந.சி. கந்தையா
முன்னுரை
ஐந்து ஆண்டுகளின் முன் “இந்து சாதனம்” எனும் வார இதழில் தமிழர் பண்பாடு தொடர் புள்ள பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தோம். அக் கட்டுரைகளின் தொகுப்பு “தமிழர் பண்பாடு” என்னும் நூலாக இப்பொழுது வெளி வந்துள்ளது. தமிழர் பண்பாடு இந்திய நாட்டில் மாத்திரமல்லாமல் உலகின் பலபாகங்களிலும் பரவியிருந்தது. இது சம்பந்தமாகப் பற்பல நூல் களிற் காணப்படும் கருத்துக்களிற் சிறந்தவற்றைத் தொகுத்து இந் நூலகத்துக் கூறியுள்ளோம். இந் நூலிற் காணப்படும் கருத்துக்கள் ஆராய்ச்சி யாளர் கொண்டுள்ள முடிவுகளைத் தழுவியனவாகும். யாழ்ப்பாணம் 15.3.66 ந.சி. கந்தையா
தோற்றுவாய்
தமிழகம் மிகப் பழமை வாய்ந்த நாடு. தமிழகத்தைப் பற்றிய பழைய வரலாறுகள் மறக்கப்பட்டுவிட்டன. பழங்கதைகள் போன்ற சில செய்திகளே வரலாறாக இருந்து வருகின்றன. மேல்நாட்டறிஞர் சிலரது அயரா உழைப்பினால் தமிழகத்தைப் பற்றிய உண்மை வரலாறுகள் சிறிது சிறிதாக வெளிவந்து கொண்டிருந்தன. அகழ்பொருள் ஆராய்ச்சி, தொல்பொருள் ஆராய்ச்சிகளும் பல உண்மைகளை வெளியிட்டன. தமிழக வரலாறு கழிந்த நூறாண்டுகளாகப் படிப்படியே வளர்ந்து கொண்டு வந்திருக்கின்றது. கால்டுவெல் ஐயரின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், திரு. வி. கனகசபைப் பிள்ளை அவர்களின் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முந்திய தமிழர், எம். சீனிவாச ஐயங்கார் அவர்களின் தமிழாராய்ச்சி ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை அவர்களின் தென் மொழி வரலாறு, சேஷ ஐயங்கார் எழுதிய திராவிட இந்தியா, பி.தி. சீனிவாச ஐயங்காரின் “ஆரியருக்கு முந்திய தமிழர் பண்பாடு”, “தமிழர் வரலாறு”, “இந்தியாவிற் கற்காலம்”, சர் ஜாண் மார்சலின் “மொகஞ்ச தாரோ அரப்பா நாகரிகம்” முதலிய நூல்களை நோக்கினால் தமிழக வரலாறு எவ்வாறு படிப்படியே வளர்ச்சி அடைந்துள்ளது என்பது நன்கு புலனாகும்.
1. பண்டைக் காலத் தமிழகம்
தமிழ் மக்கள் இந்திய நாட்டில் ஆதிமுதல் வாழ்ந்து வருகிறார் களா? அல்லது பிற நாடுகளிலிருந்து வந்து இந்திய நாட்டில் குடியேறி னார்களா? என்னும் கேள்விகள் நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வரு கின்றன. அவர்கள் ஆதிமுதல் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்களென ஒரு சாரார் கூறினர்: இன்னொரு சாரார் அவர்கள் அயல் நாடுகளினின் றும் வந்து இந்தியாவில் குடியேறினர் என மொழிந்தனர். இக் கருத்துக் கள் பற்றிய ஆராய்ச்சிகள் பல, ஆங்கில மொழியில் எழுதப்பட்டு வெளி வந்துள்ளன. தமிழ் மக்கள் அயல் நாடுகளினின்றும் வந்து இந்திய நாட்டை அடைந்தார்கள் என்னும் கொள்கை அரை நூற்றாண்டின் முன் பெரிதுங் கைக்கொள்ளப்பட்டது. இவ்வரலாற்று ஆராய்ச்சிகளை நடத்தினோர் மேல்நாட்டுக் கிறித்தவர்களாக இருந்தனர். ஆதித் தாய் தந்தையர் தோன்றி வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஏதேன் தோட்டம் மேற்கு ஆசியாவிலுள்ளதாக அவர்கள் நம்பினார்கள். ஆகவே அவர் களில் பலர், ஆதித்தாய் தந்தையரினின்றும் தோன்றிய மக்கள் மேற்கு ஆசியாவில் பெருகிப்பின் பிறநாடுகளைச் சென்றடைந்தார்கள் என்னும் கொள்கைகளைத் தழுவி எழுதி வந்தார்கள். அக்காலத்தில் எகிப்திய, பாபிலோனிய, அசீரிய நாகரிகங்களே மிகப் பழமை பெற்றவை எனக் கொள்ளப்பட்டன. மக்கள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்று பரவினார்கள் என்னும் கொள்கை ஆதரவு பெறுவதற்கு இஃதும் ஒரு காரணமாக இருந்தது.
1921ஆம் ஆண்டு முதல் 1922ஆம் ஆண்டு வரை சிந்துவெளியில் நடத்தப்பட்ட அகழ்வு ஆராய்ச்சியின் பின் சிந்து நாகரிகம் மேற்கு ஆசிய எகிப்திய நாகரிகங்களிலும் பழமையுடையது என்று அறியப்பட்டது. இதன்பின் மேற்கு ஆசிய, எகிப்திய மக்கள் இந்தியாவினின்றும் சென்ற வர்களாகக் காணப்படுகிறார்கள் எனக் கீழ்நாட்டு மேல்நாட்டு அறிஞர் பலர் எழுதியிருக்கின்றனர். மிக மிகப் பழைய காலத்தில் இந்தியா முதல் மேற்கு ஆசியா எகிப்து வரை ஒரே இன மக்கள் வாழ்ந்தார்களென்றும், மக்கள் அங்கு நின்று இங்கும், இங்கு நின்று அங்கும் பல தடவைகள் சென்று கொண்டிருந்தார்களென்றும், ஆகவே இந்திய மக்களுக்கும் மேற்கு ஆசிய எகிப்திய மக்களுக்குமிடையில் நாகரிகம் வழிபாடுகளில் ஒற்றுமை காணப்படுகின்றதென்றும் சிலர் கூறுகின்றனர்.
தமிழ் மக்களின் தாயகம் தென்னிந்தியா. மிக மிகப் பழங்காலத்தில் கன்னியாகுமரிக்குத் தெற்கில் பெரிய நிலப்பரப்பு நீண்டு விரிந்து கிடந்தது. தென்னிந்தியா அதன் பகுதியாக இருந்தது. அந்நிலப்பரப்பு இலங்கைத் தீவை உட்படுத்திக்கொண்டு இந்தியக் கடலுள் வெகுதூரம் பரந்து கிடந்தது. அதன் பரப்பு தெற்கே நியுசீலந்து வரையும், கிழக்கே தென் சீனா வரையும் மேற்கே கிழக்கு ஆப்பிரிக்கா வரையும் பரவிக் கிடந்தது. அப்பொழுது இமயமலை எழவில்லை; கங்கை, சிந்து என்னும் பேராறுகளும் தோன்றவில்லை. விந்திய மலைக்கு வடக்கே கடல் கிடந்தது. அதனைப் புவியியலார் ‘இரெதே’ (Rethey) கடல் எனக் கூறுவர். பிற்காலத்தில் இமயமலை கடலினின்று எழுந்தது. அம்மலையினின்றும் ஊற்றெடுத்துச் சிந்து கங்கை முதலிய ஆறுகள் ஓடின. அவ்வாறுகள் மலையினின்று வாரிக்கொண்டு வந்த வண்டலினால் சிந்து கங்கைச் சமவெளிகள் தோன்றின. சிந்து கங்கைச் சமவெளிகள் தோன்றிய பின்பும் விந்திய மலைக்கு வடக்கில் ஒடுங்கிய கடல் கிடந்தது. புவி இயலார் அதனை இராச புத்தானாக் கடல் எனக் கூறினர்.
2. கடல்கோள்
கன்னியாகுமரிக்குத் தெற்கே குமரி, பஃறுளி என்னும் ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தன. தமிழகத்தின் பெரும்பகுதி இவ்வாறுகளுக் கிடையில் கிடந்தது. கன்னியாகுமரிக்குத் தெற்கில் நாற்பத்தொன்பது தமிழ்நாடுகள் கிடந்தன. இவற்றைக் குறித்துச் சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரை கூறுகின்றது.
இந்தியக் கடலில் கிடந்த பெரிய நிலப்பரப்பில் ஆதி மக்கள் தோன்றிப் பெருகினார்கள். மேல்நாட்டுப் பௌதிக நூலார் இப் பூகண்டத்துக்கு இலெமூரியா எனப் பெயரிட்டனர். இலெமூர் என்னுஞ் சொல்லுக்குத் தேவாங்கு என்பது பொருள். அங்கு தேவாங்கு போன்ற உயிர்கள் வாழ்ந்தன எனக்கொண்டு அவர்கள் அந்நிலப்பரப்புக்கு இலெமூரியா எனப் பெயரிட்டார்கள். புராணங்கள் அப்பூகண்டத்தைக் குமரிகண்டம் எனக் குறிப்பிடுகின்றன.
கடல் பெருக்கெடுத்தல் எரிமலை குமுறுதல் போன்ற இயற்கைக் குழப்பங்கள் இடை இடையே நேர்ந்தன. இக் குழப்பங்களால் பெரிய நிலப்பரப்பின் பகுதிகள் கடலுள் மறைந்து போயின. அங்கு வானுற ஓங்கி நின்ற மலைகளின் சிகரங்களே இந்தியக் கடலுள் கிடக்கும் தீவுக் கூட்டங்கள் எனக் கருதப்படுகின்றன.
இலெமூரியாக் கண்டம் மிக அகன்று பரந்துகிடந்தது. ஆகவே அதன் பகுதிகளின் வெப்பதட்ப நிலைகள் மாறுபட்டிருந்தன. வெப்ப தட்ப நிலைகளுக்கேற்ப, நிறம் மயிரின் தன்மை, உடற் கூறுகளால் மாறு பட்ட மக்கள் ஆங்காங்கு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களே பிற்காலத்தில் மங்கோலியர், நிகிரோக்கள், ஆஸ்திரலோயிட்டுகள், ஆரியர் போன்று நிறத்தாலும் உடற் கூற்றாலும் மாறுபட்ட மக்களாகப் பிரிந்தார்கள்.
இலெமூரியாக் கண்டம் இயற்கைக் குழப்பங்களால் அழிவெய் திற்று. அப்பொழுது அங்கு வாழ்ந்துகொண்டிருந்த மக்களில் பலர் உயிர் பிழைத்தனர். அவர்கள் சிதறி நாலா திசைகளையும் நோக்கிச் சென்று பற்பல நாடுகளில் குடியேறினார்கள்; ஒரு கூட்டத்தாரோடு இன்னொரு கூட்டத்தார் தொடர்பின்றி நீண்டகாலம் வாழ்ந்தனர். காலப்போக்கில் இவர்கள் வெவ்வேறு தொடக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லும் படியாக மாறுபட்டார்கள். இவ்வாறு மாறுபட்டுப் பெருகிய பல கூட்டத்தினரின் நாகரிகம், சமயம், மொழி, பழங்கதைகள் முதலியன அவர்கள் ஒரு மையத்தினின்றும் பிரிந்து சென்றவர்கள் என்பதை அறிவிக்கின்றன.
உலக மக்கள் எல்லோரிடையும் கடல்கோள் ஒன்றைப் பற்றிய பழங்கதை நினைவிலிருந்தது. அப்பழங்கதையின் முக்கியப் பகுதிகள் ஒரே வகையாக உள்ளன. பல்வேறு கூட்டத்தினரிடையே வழங்கும் இப் பழங்கதையும் அவர்கள் ஒரு மையத்தினின்றும் பிரிந்து சென்றவர்கள் என்பதைத் தெரிவிக்கின்றது.
இலெமூரியாக் கண்டம் இருந்த காலத்தில் விந்திய மலைக்கு வடக்கே கடலிருந்தது. இலெமூரியாக் கண்டம் அழிவெய்தியபோது இமயமலை கடலாழத்திலிருந்து எழுந்தது. அதன் சிகரங்களில் கடல் வாழ் உயிர்களின் படிவங்கள் (fossils) காணப்படுகின்றன. அவை இம் மலைத் தொடர் கடலாழத்தினின்றும் எழுந்ததென்பதைத் தெரிவிக்கின்றன.
“நிலைபெற் றோங்குந் தமிழகத் தாற்றி வுடைமைப் பேறுறுமக்கள் முன்னர்த் தோன்றி மன்னிக் கெழுமி இமிழிய லொலிசேர் தமிழ்மொழி பேசி மண்ணிற் பலவிட நண்ணிக் குடியிருந் தவ்வவ் விடத்துக் கொவ்விய வண்ணம் கூற்று நடையுடை வேற்றுமை யெய்திப் பற்பல வினப்பெயர் பெற்றுப் பெருகினர்”
3. மக்கள் வடக்கு நோக்கிச் சென்று குடியேறுதல்
இலெமூரியாக் கண்டத்தின் அழிவின் பின்னரும் கன்னியா குமரிக்குத் தெற்கில் இலங்கையை உட்படுத்திய நிலப்பரப்புக் கிடந்தது. இந் நிலப்பரப்பின் தெற்கில் பஃறுளியாறும், வடக்கில் குமரியாறும் ஓடிக்கொண்டிருந்தன. குமரியாறு இப்போதுள்ள கன்னியாகுமரியை அடுத்துச் சிறிது தெற்கில் இருந்ததாகலாம். தாமிரபரணி (பொருநை) ஒரு காலத்தில் இலங்கைக் கூடாக ஓடிக் கொண்டிருந்தமையின் இலங்கை தாமிரபரணி நாடு என அறியப்பட்டதென்றும், தாமிரபரணி என்பதே தபிரபேன் எனச் சிதைந்து வழங்கியதென்றும் சிலர் கூறுவர்.
கன்னியாகுமரிக்குத் தெற்கே கிடந்த நாடுகளைக் கடல் கொண்டது. இதனைப் “பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங் கடல் கொள்ள” எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. கடல்கோளுக் குப் பிழைத்தோர் வடக்கு நோக்கிச் சென்று குடியேறினர். காலச் செலவில் மக்கட் பெருக்கம் அதிகப்பட்டது. மக்கள் மேலும் மேலும் வடக்கு நோக்கிச் சென்று தங்கினர். வடக்கில் தண்டகம் என்னும் இருண்டு அடர்ந்த பெருங்காடும் விந்தம் என்னும் நீண்டு உயர்ந்த மலைத் தொடரும் கிடந்தன. தண்டகம் என அறியப்பட்ட பெரிய காடு இன்றைய ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிசா முதலிய நாடு களை அடக்கியிருந்தது. இம்மூன்று நாடுகளின் பரப்பு ஏறத்தாழ எண் பதினாயிரம் சதுரமைல். பெரிய காட்டையும் மலைத்தொடரையும் தாண்டி மேலும் வடக்கு நோக்கிச் சென்று குடியேற அவர்களால் முடிய வில்லை. கடற்கரையை அடுத்து வாழ்ந்த மக்கள் கட்டு மரங்களிலும் ஓடங்களிலும் கடலில் செல்லும் பழக்கம் பெற்றிருந்தார்கள். அவர்களில் சிலர் மேற்குக் கடற்கரை வழியாகக் கடலில் சென்று செழிப்பு மிக்க சிந்து நதிச் சமவெளிகளிற் குடியேறினார்கள். இவர்கள் அங்கு நின்று கங்கைச் சமவெளி வரை சென்று தங்கினார்கள்.
வடக்கிலும் தெற்கிலும் தமிழ் மொழியைப் பேசும் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வடக்கில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களில் ஒரு கூட்டத்தினர் பலுச்சித்தானம் வழியாக மேற்கு ஆசியாவை அடைந்தார்கள். பலுச்சித்தானத்தில் பிராகூய் என்னும் மக்கள் வாழ் கிறார்கள். அவர்கள் குல முறையில் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வழங்கும் பிராகூய் மொழி தமிழ் இனத்தைச் சேர்ந்தது. அம்மொழிக்குரிய பல சொற்கள் தமிழ்ச் சொற்களாகவுமிருக்கின்றன. ஒரு காலத்தில் வடக்கில் தமிழ் வழங்கியதென்பதற்குச் சான்றாகப் பிராகூய் மொழி இருக்கின்றது. பிராகூய் மக்கள் இந்தியாவின்றும் வெளியே சென்றவர்களில் பின் தங்கியவர்கள் எனக் கருதப்படுவார்கள்.
ஆரியர் மத்திய ஆசியாவினின்றும் புறப்பட்டு இந்தியாவிலும், பாரசீகத்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் நுழைவதன் முன், பாரசீகம், இஸ்பெயின், இத்தாலி, ஐசியன் தீவுகள், மேற்கு ஆசியா, ஆசியாமைனர் முதலிய நாடுகளிலெல்லாம் தமிழினத்தைச் சேர்ந்த மக்களே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அபிசீனியர், பிரிட்டனில் கெல்த் மக்கள், எகிப்தியர் முதலானோரும் இந்திய நாட்டினின்றும் சென்றவர்களாகப் பழஞ் சரித்தர வல்லார் கூறுவர். நருமதைப் பள்ளத்தாக்கில் உலோதால் என்னுமிடத்தில் அகழ்வு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அங்கு அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்தை ஒத்த பழைய நாகரிகமிருந்ததாக அறிய வந்துள்ளது. இதனால் தமிழ் மக்கள் வட இந்தியாவின் பெரும்பகுதியில் பரவி வாழ்ந்து பழைய சிந்து நாகரிகத்தைத் தோற்றுவித்தார்களெனத் தெரிகிறது.
“மீன்கொடி படைத்த மேன்மை மனுக்கள் ஆன்ற பாண்டிய ரனைவருந் தமிழர் தெற்கட் பஃறுளி யாறு சீர்சால் நற்புகழ் வடக்கண் நளிரிமை யார்மலை உரைதமிழ் நாடா வயங்கிய முற்கால்”
...Continue Reading
Comments