top of page
library_1.jpg

நெற்றிக் கண்

Writer's picture: Angelica Angelica

Updated: Jan 22, 2022

நா. பார்த்தசாரதி

 

நெற்றிக் கண்


பாகம் 1


"மனிதனுக்கு உண்மையான வலுவுள்ள கருவி கத்தியும் துப்பாக்கியும் அல்ல. தன்னுடைய நினைப்பும், பேச்சும் செய்கையும் நேர்மையானவை என்று தனக்குள் தானே நம்பி உணர்ந்து பெருமைபடுகிற பெருமிதம் தான் அவனுடைய மெய்யான வலிமை." -சுகுணன்


பொழுது விடிகிற நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பூக்கிற பூவின் வாசனையைப் போல் விடிகாலைக் குளிரின் இங்கிதமான சூழ்நிலையில் யாரோ ரோஜாப் பூக்களை - வெறும் ரோஜாப் பூக்களையல்ல - பனிபுலராத ரோஜாப் பூக்களை - ஒவ்வொன்றாகப் பறித்து பதித்து ஒரு பிரம்மாண்டமான விசிறியைத் தயாரித்து மெல்ல வீசிக் கொண்டிருப்பது போல மென்மையும் குளிரும் கலந்ததோர் காற்று எங்கும் உலா வரத் தொடங்கியிருந்தது.


விடியும் நேரத்துக்கு எப்போதுமே ஒரு தனி அழகு உண்டு. பன்னீரில் தோய்த்துத் தாமரைப் பூவை வெளியே எடுப்பது போல் உலகம் ஏதோ ஒரு குளுமையில் முங்கியெழுந்து வெளிவரும் இந்த மலர்ச்சியைச் சுகுணன் பல நாள் உணர்ந்து சிந்தித்து அனுபவித்திருக்கிறான். எதிரே நிமிர்ந்து பார்த்தால் பலகணி வழியே ஒரு மங்கலமான புகைப்படம் போலக் கிழக்கே வெளுக்கும் வானம் தெரிந்தது. வட்ட வடிவப் பெருங்குடையாய் வெட்ட வெளியெனப் பரந்து விரிந்து கிடக்கும் நீலவானில் வெண் மேகப் பிசிறுகள் அங்கங்கே மிதந்து கொண்டும், நீந்திக் கொண்டுமிருந்தன. மேல் நோக்கித் தொடங்கிய கண் பார்வை வானவெளியை எட்டிய தொலைவு மட்டும் அவசரமாக அளந்து விட்டுக் கீழே சரிந்தால் காற்றில் மேலெழுவதும், தணிவதும், அலையலையாக மடிவதுமாகக் கதிர் வாங்காத விடலை நெற்பயிர்களின் வயல்வெளிப் பசுமை பொங்கிக் கொண்டிருந்தது.


ஜன்னல் கம்பிகள் அந்த வயல் வெளிகளைத் துண்டு துண்டாகத் தினப்பத்திரிகைகளின் நீள நீளப் பத்திகள் தோன்றுவது போல் தெரியும்படி பிரித்துக் கொண்டு காண்பித்தன. இயற்கையின் பசுமையை - எங்கோ தொலைவிலே நிரம்பிக் கிடக்கும் பசுமையை - இங்கே இதோ அருகிலிருக்கும் இந்த ஜன்னல் கம்பிகள் துண்டு போட்டுக் காட்டுவது கூட ஒரு தத்துவமாகத்தான் தெரிகிறது. இயற்கை நாகரிகத்தை - இரும்பு நாகரிகம் கூறுபோட்டு அழித்து விட முடியாது போனாலும் கூறு போட்டுப் பிரித்து விட்டது போல ஒரு பிரமையான தோற்றத்தை உண்டாக்க முடிகிறதல்லவா?


காலை வேளையில் எதைப்பற்றியாவது எப்படியாவது சிந்திப்பது என்பது பசி வேளையில் உண்ணத் தவிப்பது போல அவனுக்கு ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாயிருந்தது. நாளைக்கு விடிந்தால் உயிர் வெள்ளம் சுழித்தோடும் பட்டினத்து வீதிகளில் சுற்ற வேண்டும். உட்கார்ந்திருக்கும் இடத்தைச் சுற்றி டெலிபிரிண்டர் ஓசை, டைப்ரைட்டிங் ஒலி, டெலிபோன் அலறல், ஸ்பிரிங் கதவுகளைத் திறந்து மூடும் சப்தம், நடுவே எப்போதாவது மின்சாரம் நின்று போகும் போது கொஞ்சம் நிழல் வந்து படிவது போன்ற தற்காலிகமான அமைதி, - எல்லாம் விரைவாக நினைவிற்கு வந்தன அவனுக்கு.


விலகி வந்து எங்கோ அமைதியாயிருக்கும் இந்த விநாடியிலும் தன்னுடைய வழக்கமான அந்தச் சூழ்நிலையை ஒரு கணம் கற்பித்துப் பார்ப்பதோ, பாவித்துக் கொள்வதோ கூடச் சுமையைப் போல் கனத்தது அவனுக்கு. எவ்வளவு பெரிய கனத்தையும் சுமக்கின்ற வலு அவனுடைய மனத்திற்கும் தோள்களுக்கும் இருந்தன. சொக்கப்பா ஜிம்னாஸியத்தில் (உடற்பயிற்சிசாலை) காலையும் மாலையும் பயின்று பயின்று தேற்றியது. தவிரத் தானே தன் உடம்பை வசீகரமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று விநாடிக்கு விநாடி ஓர் அந்தரங்கமான சுயநலத்தோடு முகத்தையும், பரந்த பொன் நிற மார்பையும், திரண்டு செழித்த தோள்களையும் நிலைக் கண்ணாடியிலும், தனிமையிலும் தேடித் தேடிக் கண்டு திருப்திப்படுகிற விடலைப் பருவத்துத் தவிப்போடு அவன் சிரசாசனமும் வேறு பல ஆசனங்களும் முறையாகச் செய்தது கூட உண்டு.


வேதாந்திகளும் சித்தர்களும் உடம்பை வெறுத்து எத்தனையோ பாடல்களைப் பாடித் தீர்த்துவிட்டுப் போயிருந்தாலும் மனிதனுக்கு ஒரு பருவத்தில் தன் உடம்பைத் தானே காதலித்து வளர்க்கத் தவிக்கும் தீவிரமான ஆசை இருக்கத்தான் செய்கிறது.


இன்னும் கூடச் சுகுணனுடைய அந்தரங்கத்தில் அந்த சுயநலம் உண்டு. உடம்பின் சுத்தமும் திட்டமுமே, மனத்தின் ஒழுங்குக்குக் காரணங்களாக அமைவதையும் சொந்த அநுபவத்தில் அவன் உணர்ந்திருக்கிறான். தோளை வயிரமுடையதாக்கி உடற்சோர்வு - பிணி பலவும் போக்கி - அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறாத உடல் - என்று பாடப்பட்டிருக்கும் அத்தகைய வலிமையை - விரும்பிப் பயின்று தேடித் தேடித்தான் அடைந்திருந்தான் அவன். கம்பீரமாக எழுந்து நின்றால் எதிராளியைக் கூசிக் குறுகிச் சிறிதாகி விடச் செய்யும் இந்த தோற்றத்தை உடம்புதான் தனக்கு அளித்திருக்கிறதென்பது அவனுக்கே தெரியும். அவனுடைய தோள்களும் நெஞ்சமும் அதிகமான கனத்தைச் சுமக்கும் ஆற்றலும் வலிமையும் உள்ளவை என்பதில் அவனுக்கே ஒருவிதமான பெருமிதமும் நம்பிக்கையும் உண்டு. அந்த நம்பிக்கையும், பெருமிதமும் கூட இப்போது தளர்ந்து போய்த் துவண்டு விட்டனவோ என்ற சந்தேகமும் இன்று இந்தக் கணத்தில் வேறொரு காரணத்தால் அவனுள் எழுந்தது.


உள்ளக் குமுறலைத் தணித்துக் கொள்வதற்காகவோ அல்லது மிகப் பெரியதோர் உணர்ச்சி நஷ்டத்தினால் ஊமை அழுகையாக அழத் தொடங்கிவிட்ட உள்ளத்திடம் அழுமூஞ்சித் தனத்தைக் கொண்டாடவோ இப்படி இந்தக் கிராமாந்தரத்து 'டிராவலர்ஸ் பங்களா' வைத் தேடி வந்து இரண்டு மூன்று நாட்களைக் கழித்தாயிற்று. இதோ நாலாவது நாளும் விடிந்து கொண்டிருக்கிறது. நகரத்தில் நேரம் பறக்கிற தென்றால் கிராமத்தில் அது நொண்டியடிக்கிறது போலும். எதிரே வயல் வெளிகளுக்கு அப்பால் சூரியோதயம் பொன்னோடையாகப் பெருகி வந்து கொண்டிருந்தது. நாளைக்கு விடியும் போது இப்படி அசல் சூரியோதயத்தை - அசல் முழுமையோடு பார்க்க முடியாதென்பதும் ஞாபகம் வந்தது. பட்டினத்தில் கடிகாரத்தைப் பார்த்தோ, தீராத தூக்கம் திடுதிப்பென்று விழித்தோ, அலாரம் ஒலியைக் கேட்டோதான் சூரியனும் உதித்திருக்க வேண்டுமென்று அநுமானித்து உணரலாம். இந்தக் கிராமத்தில்தான் சூரியன் உதிப்பதும் கூட எத்தனை பெரிய உண்மையாக எத்தனை பெரிய அழகாக இருக்கிறது.


காவியம் படிப்பது போல் அமைதியாக ஆழ்ந்து இரசிக்கத் தக்க இந்தக் கிராமத்தின் அழகுகளோ, இதன் நினைவுகளோ, நாளைக்குப் பட்டினத்திற்குத் திரும்பியதும் மறந்து போகலாம். ஆனால் இன்றைக்கு இதுதான் சாசுவதம். நம் மனத்தை அதிவேகமாக மயக்க வருகிற ஒவ்வோர் அழகும் அந்த விநாடியின் ஒரே சாசுவதமாக நம் முன் வந்து நிற்பது தான் வழக்கம். சாசுவதத்திற்கு எல்லை காலத்தின் நெடுமையில்லை. ஒரு விநாடி சத்தியமாக நின்றாலும் அந்த ஒரு விநாடியும் கூட ஒரு சாசுவதம் தான். இப்படி நினைத்த போது அந்த விநாடிவரை சிரமப்பட்டு மறக்க முயன்று ஓரளவு வெற்றியும் கண்டிருந்த துளசியின் நினைவு தவிர்க்க முடியாதபடி ஏற்பட்டது அவனுக்கு.


துளசி எந்த ஒரு விநாடியில் அவன் முன் - அல்லது அவன் நினைவின் முன் சாசுவதமாக நின்றாளோ - அந்த ஒரு விநாடி இன்று பொய்யாகியிருக்கலாம். ஆனால் அது எந்த ஒரு விநாடியில் நிகழத் தொடங்கியதோ அந்த ஒரு விநாடி உண்மையாகத் தான் இருக்க முடியும். புகழையும் - பொறுப்பையும் தாங்குகின்ற ஆயுதமாய்ப் பழியையும் புகழையும் நிர்ணயிக்கிற சக்தியாய் அவன் கையிலிருக்கிற எழுதுகோலைப் போல் அவன் நினைவும் அவனுள் ஒரு சாசுவதமே.


ஆனால் இனி அப்படி நினைப்பதிலும் கூட ஓர் அர்த்தமுமில்லை. இந்த நேரத்திற்குள் அவள் யாருக்கோ சொந்தமாகியிருப்பாள். முகூர்த்த நேரம் அதிகாலையில் ஐந்தரை மணிக்கு மேல் ஆறேகால் மணிக்குள் ஏதோ ஒரு நாழிகை என்று தானே திருமணப் பத்திரிக்கையில் போட்டிருந்தது? தன் மனத்தை அணு அணுவாக அறுக்கும் அந்த நாளில் அந்த திருமண நிகழ்ச்சியன்று பட்டினத்திலேயே இருக்கக் கூடாதென்றுதானே ஏதோ பெரிதாக எழுதிக் குவித்து அள்ளிக்கொண்டு போய்விடப் போவது போல ஒரு பொய்யைத் தன் மனத்துக்குத் தானே கற்பித்துக் கொண்டு இந்தக் கிராமத்துக்கு ஓடி வந்திருந்தான் சுகுணன்?


எங்கு ஓடி வந்தாலென்ன? நினைப்பிலிருந்து எதையும் வெளியிலெடுத்து எறிய முடிவதில்லையே? உடம்பை விட வேகமாகப் பிரயாணம் செய்து நினைத்த இடத்துக்குப் போக முடிகிற இந்தச் சக்தி வாய்ந்த மனமும் சக்திவாய்ந்த சிந்தனையும் தான் அவனுடைய எழுத்தின் ஆற்றல். செப்பிடு வித்தைக்காரனின் மாத்திரைக் கோலைப் போல நினைத்ததைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் சக்தி அவன் எழுத்துக்கு இருந்தது. அதே நினைவும், சிந்தனையும் துளசியைப் பற்றி நினைக்கும் போதும் தனது இயற்கையான சக்தியோடு வேகமாகப் பிரயாணம் செய்து பட்டினத்துக்கு ஓடி 'ஆபட்ஸ்பரி' - என்னும் அந்த வாடகை அரண்மனையின் வாசலில் இந்த அதிகாலை வேளையில் வரிசை வரிசையாக அணிவகுத்து நிற்கும் கார்களையும், ஓர் அலங்காரத்துக்காகப் பகலிலேயே பூப்பூவாக எரியும் பல வண்ண விளக்குகளையும் கடந்து உள்ளே மணமேடையில் யாரோ ஒருவனுக்கருகே அமர்ந்திருக்கும் வசீகரமான மணக்கோலத்துத் துளசியை அவள் அந்நியமாகி விட்ட வேற்றுமையையும் பொருட்படுத்தாமல் நெருங்குகின்றனவே! செப்பிடு வித்தைக்காரனின் மாத்திரைக் கோலைப் போல் நினைத்த நினைப்புக்கு உடனே எதிரில் உருக்கொடுக்கும் சுகுணனின் கற்பனை ஆற்றல் - அவனைப் போல் சக்தி வாய்ந்த சொற்களுக்கும், சக்தி வாய்ந்த சிந்தனைக்கும் சொந்தக்காரனான ஒரு வாலிப வயதுப் பத்திரிக்கையாளனின் ஆற்றல் - இந்த விநாடியில் துளசி மணப் பந்தலில் எப்படி இருப்பாள், யார் யாரைப் பார்த்து எப்படி எப்படி புன்னகை புரிவாள், யார் யாரை எவ்வாறு வணங்கி ஆசிபெறுவாள் - என்றெல்லாம் சிந்தித்து - அவனுக்கு வேண்டாதவற்றையும் வேதனை தருகிறவற்றையும் சிந்தித்து அவனையே - உருகவும் உணரவும் வைத்தது. 'Word Pictures' - என்பார்களே அதுபோல் ஒரு வார்த்தையும் அதன் உருவமும் சேர்ந்தே நினைவு வருகிற சக்தி வாய்ந்த சிந்தனை அவனுடையது. இத்தகைய சக்தி வாய்ந்த சிந்தனைகளை இணைத்துத் தமிழில் லா.ச. ராமாமிருதம் என்கிற எழுத்தாளர் அற்புதமாய் எழுதுகிற கதைகளை அவன் அவ்வப்போது தேடி விரும்பிப் படிப்பதுண்டு.


ஒரு சொல்லுக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. சொல் தனக்குத் தானே ஒரு வடிவம். இரண்டாவதாகச் சொல் தன்னால் குறிக்கப் படுவது எதுவோ அதுவாக மாறிக் கருவியாக நின்று அதையே உணர்த்துவது மற்றொரு வடிவம். பார்க்கப் போனால் இந்த இரண்டு வடிவமும் வேறு வேறல்ல. ஒன்றே மற்றொன்று. ஒன்றிலிருந்து மற்றொன்று; ஒன்றாயிருந்தது மற்றொன்று - அரும்பாயிருந்தது பூவாகப் பூப்பதைப் போல. பூத்தபின் அரும்பாயிருந்தது என்பது ஞாபகம். பூப்பதற்கு முன் இனிப்பூக்கும் என்பது காரியம். 'அரும்பாயிருக்கிறது - அதனால் - இனிப் பூக்கும்' என்பது காரணம். காரணத்திற்கும் காரியத்திற்கும் நடுவே ஞாபகம் என்பது ஒரு பாலம். சொல்லும் பொருளும் அரும்பும் பூவும் போல அடுத்தடுத்த விளைவுகள். 'துளசி' என்று நினைக்கும் போது அந்த நினைவு அரும்பு - அதையடுத்து அதே வேகத்திலே குமிண் சிரிப்புடனும் துறு துறுவென்று குறும்புத்தனமான அழகுடனும் அந்த வசீகர முகம் 'word picture' போல அவன் நினைவில் வந்து மலர்கிறதே; அது பூ. அந்தப் பூ இப்பொழுது அவனுக்குக் கிடைக்காமல் வெகு தொலைவில் போய் உதிர்ந்துவிட்ட - அப்படி உதிர்ந்து விட்டதாலேயே அவனை வேதனைப் படுத்துகிற பூவும் ஆகும்.


சிந்தனையிலும் செயலிலும் உற்சாகமின்றி மனிதன் தனக்குத்தானே சுமையாக உணர்ந்து வேதனையோடு பிடித்துத் தள்ளித் தள்ளிக் கடத்துவது போல் சுழிக்கும் அந்தமான நாட்களை ஓரிடத்தில் பாரதி தன் கவிச் சொற்களால் 'முடம்படு தினங்கள்' முடமாகிவிட்ட நாட்கள் என்று குறிப்பதைப் போல் துளசியின் திருமணத்தை மறக்க ஓடிவந்து இந்தக் கிராமத்தில் கழித்த நாட்கள் சுமையாக நகர்ந்து நகர்ந்து போனதாகத்தான் சுகுணனும் உணர்ந்திருந்தான். பாரதியின் முழு முழுக் கவிதைகளில் கவிதைத் தன்மையின் சாந்நித்தியம் கொலு வீற்றிருப்பது தவிர இப்படித் தனித் தனிச் சொற்றொடர்களிலும் கூடக் கவிதைத் தன்மை துடிதுடிக்கச் செய்திருக்கும் சொல்லுயிர்ப்புச் சாகஸத்தை ஓர் உணர்ச்சிமிக்க - எழுத்தாளன் என்ற அந்தரங்க சுத்தியோடு அவன் பலமுறை தனக்குத் தானே வியந்திருக்கிறான்.


தன்னுடைய பத்திரிகையின் 'இலக்கிய மேடை' - கேள்வி பதில் பகுதியில் 'கவிதை என்பது என்ன? சுருக்கமான - அர்த்த புஷ்டியுள்ள பதில் தேவை?' - என்பதாகக் கேட்கப்பட்டிருந்த ஒரு நேயரின் கேள்விக்கு, 'மனிதனின் நாகரிகம் பாஷை. பாஷையின் நாகரிகம் கவிதை' என்று தான் முன்பு எப்போதோ பதில் கூறியிருந்ததை இப்போது மீண்டும் நினைவு கூர்ந்தான் சுகுணன். அந்த அழகான - இரத்தினச் சுருக்கமான பதிலுக்காக அப்போது அவனைப் பலர் நேரிலும் கடித மூலமாகவும் பாராட்டினார்கள். ஏன்? துளசியும் கூடத்தான் பாராட்டினாள்.


அவள் சிரிக்கும் போது முதல் சாயல் கண்களிலும் - இரண்டாவது சாயல் இதழ்களிலும், மூன்றாவது சாயல் மோகம் கனிந்து வெறியேறி நிற்கும் அந்த ரோஜாப் பூக் கன்னங்களிலுமாக மலரும். அதாவது அவளுடைய முகத்தில் மூன்று சிரிப்புகள் உண்டு. அந்தக் கண்களும், இதழ்களும், கன்னங்களும், சிரிக்கச் சிரிக்க அவள் 'பூம் பொழில்' காரியாலய அறையில் தன்னைத் தேடிவந்து பாராட்டிவிட்டுப் போன சித்திரம் அல்லது சித்திர நினைவு - இன்னும் அவனுள் காலத்தின் பசுமையாக நிறைந்திருக்கிறது.


பூத்த பூவிலிருந்து பூக்கிற சூட்டில் வேகமாகக் கிளரும் நறுமணத்துக்கு 'வெறி' என்று தமிழில் ஒரு பெயருண்டு. ஒரு பெண்ணின் கனிந்து நிற்கிற அழகு சம்பந்தமாக ஓர் ஆணின் மனத்தில் ஏற்படுகிற வேகமான கிளர்ச்சிக்கும் இந்தப் பதத்தையே இந்தப் புதிய அர்த்தத்தோடு சிந்தித்துப் பார்த்தால் எத்தனை நயமாயிருக்கும்? இப்படிப் பதங்களையும் அர்த்தத்தையும் புதிய தலைமுறைக் கேற்ற புதிய பொருள்களோடு - அல்லது பழைய தலைமுறை உணர்ந்து அங்கீகரிக்கத் தவறி விட்ட ஒரு புதிய நயத்தோடு சிந்திப்பது சுகுணனுக்கு மிகவும் விருப்பமான காரியம். இப்படிச் சிந்திப்பதனாலேயே நாளும் புதுமையாய் வளர்ந்திருந்தான் அவன்.


ஆயிற்று. பொழுது நன்றாக விடிந்து விட்டது. வெயிலில் பசிய வயல்வெளிகள் மனோரம்மியமான மரகதப் பாளங்களாக மின்னத் தொடங்கி விட்டன. இன்று முகூர்த்த நாளல்லவா? ஊரிலிருந்து தள்ளியிருந்த அந்த டிராவல்ஸ் பங்களாவிலும் வந்து கேட்கிறாற் போல எங்கோ கிராமத்துக் கல்யாண வீட்டில் நாதஸ்வரம் இனிமையாய்ப் பொங்குகிறது. பூக்களின் வாசனையிலும் சங்கீதத்தின் ஒலியிலும் மனிதனுடைய பழைய ஞாபகங்களை இயக்கும் ஏதோ ஓர் ஆந்தரிக சக்தி உண்டு போலிருக்கிறது. இதே நேரத்திலோ, அல்லது இதற்குச் சிறிது முன்னாலேயோ துளிசியின் பொன்நிறக் கழுத்திலும் யாரோ ஓர் அந்நியன் நாதஸ்வர ஒலியினால் கிளுகிளுக்கும் உற்சாகமான மனத்துள்ளலோடு தாலி கட்டியிருப்பான்' - என்று எண்ணியபோது துக்கமோ, ஏமாற்றமோ, அல்லது இரண்டுமே சேர்ந்தோ ஓர் உரமான உணர்ச்சி சுகுணனின் நெஞ்சைக் கவ்வி அடைத்தது.


படிப்பு, நெஞ்சுரம், எத்தகைய எதிர்ப்பைச் சுமந்து வருகிற அபிப்ராயங்களையும் தன் முன் வந்ததும், பார்வையாலோ, தோற்றத்தாலோ, சொல்லாலோ, அப்படியே கூசி நிற்கச் செய்து விடுகிற சக்தி - இவையெல்லாமின்றி வெறும் சிறு குழந்தையாயிருந்தால் நெஞ்சை வந்து அடைக்கும் அந்த உணர்வைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவன் அப்போதே கோவென்று கதறி அழுதிருப்பான். 'ஏதோ ஓர் அவசரமான ஆசையில் பிறக்கிற மனிதர்களின் காதல் சத்தியங்கள் வேறு ஏதோ ஓர் அவசரத்தில் அல்லது அவசியத்தில் எத்தனை விரைவாகப் பொய்யாய் விடுகின்றன' - என்றெண்ணிப் புழுங்கியது அவன் உள்ளம். பாலைவனத்துத் தாகத்தைப் போல் தாகமும் தவிப்புமே மாற்றிலாத உணர்வுகளாய் எதிரே சாதனம் எதுவும் தென்படாத தனி ஏமாற்றமே அவன் நெஞ்சில் அப்போது நிரம்பியிருந்தது. அவன் மனக்கண்களில் அந்தக் கடன்காரி துளசி நின்றாள். உணர்வின் சத்தியத்துக்கு வட்டி தராமல் ஏமாற்றுகிறவர்களும் கடன்காரிகள்தானே?


துளசியின் திருமணத்தன்று அவன் தென்படவில்லை என்பதும் அதற்கும் மேலாக அவன் அன்று ஊரிலேயே இல்லை என்பதும் அந்தத் திருமணத்திற்கு அவன் வரவே இல்லை என்பதும் இதற்குள் எத்தனை பேருடைய வாய்களில் எத்தனை விதமான வம்புகளாய்ப் புகுந்து புறப்பட்டிருக்குமென்று தனக்குத்தானே கற்ப்னை செய்ய முயன்றான் அவன். உணர்ச்சி நஷ்டம் தன்னுடையதாயிருக்கும் போது எவ்வளவு சாதுரியமான 'டிப்ளமேட்' ஆக இருந்தாலும் சும்மா இருந்து விட முடியாதென்று அவனுக்கு தோன்றியது. யாருக்கு எந்த அளவு 'டிப்ளமஸி' தேவையோ தேவையில்லையோ, ஒரு பத்திரிகையாளனுக்கு அது அதிக அளவு அவசியம் தேவை. தனக்கு ஒன்றும் நஷ்டமில்லாததுபோல், தான் ஒன்றும் பாதிக்கப்படாதது போல் எல்லாரையும் போல், அவனும் அந்தக் கலியாணத்துக்குப் போய் எல்லோரோடும் சேர்ந்து எல்லார் மேலும் தெளிக்கப்படுகிற பன்னீரில் தானும் நனைந்து, எல்லாரும் கைநனைக்கிற சந்தனக் கும்பாவில் தானும் கைநனைத்து, எல்லாரும் எடுத்துக் கொள்வது போல் பூச்செண்டும் கல்கண்டும் - பட்டும் படாமலும் இரண்டு விரல்களால் எடுத்துக் கொண்டு - விருந்து உண்டு தாம்பூலப் பையோடு திரும்பி வந்திருக்கலாம் தான். ஏனோ தெரியவில்லை, அப்படிச் செய்ய நினைப்பதைக் கூட அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் இயலவில்லை.


உலகத்தை ஏமாற்றுவதை விடக் கேவலமான காரியம் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதுதான். அதைச் செய்வதற்கு அவனால் முடியாமற் போய்விட்டது. மற்றவர்கள் ஏமாற்றும் போது தெரு விளக்கை அணைப்பது போல் உலகத்தின் பொதுவான சத்தியத்தைத் தான் ஒளிகுன்றச் செய்கிறோம். தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் போதோ சொந்த மனத்தையே இருண்டு போகச் செய்து கொள்கிறோம். ஓர் இணையற்ற கலைஞன் என்ற முறையில் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு அந்தத் திருமணத்திற்குப் போக அவனால் முடியாது தான் போய்விட்டது.


உள்ளூரிலேயே இருந்து கொண்டும் அதற்குப் போகாமலிருந்திருக்க முடியும். ஆனால் ஏனோ அதையும் அப்படிச் செய்யத் தோன்றவில்லை. அவசர அவசரமாக எழும்பூர் இரயில் நிலையத்துக்கு ஓடி வந்து இரயில் புறப்படுவதற்கு இன்னும் பதினைந்து நிமிஷங்களே இருக்கும் என்கிற சமயத்தில் எந்த நோக்கமும் எந்த அவசியமும் இல்லாமல் அந்த இரயில் நிற்கிற அந்தஸ்தும், டிராவலர்ஸ் பங்களாவும் இருக்கிற ஒரு குக்கிராமமாகத் தேடி ஞாபகத்துக்குக் கொணர்ந்து அந்த ஊருக்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொண்டு இப்படி இங்கு வந்து சேர்ந்திருந்தான் சுகுணன்.


துளசியிடம் இவ்வளவு தாராளமாகப் பழகி இத்தனை தூரம் மனத்தைப் பறிகொடுத்திருக்கக் கூடாதென்று இப்போது ஒரு விரக்தி ஞானம் அவனுக்குத் தோன்றுகிறது. பெரும்பாலான ஞானங்கள் நினைவின் மயானத்தில் - அது பாதிக்கப்பட்ட பிறகு தானே தோன்ற முடியும்? மனிதன் பாதிக்கப்பட்ட பிறகு தான் அவனுள் அசல் ஞானமே பிறக்க முடியும் போலிருக்கிறது. 'இடிந்து தரைமட்டமாகிப் போன அரண்மனையில் - உடைந்த செங்கல்களுக்கிடையே ஒரு அரசந்துளிரோ; அத்திக்கன்றோ, பசுந்தலையை நீட்டி மேலெழுவது போல் மனிதனுடைய ஞானமும் அவனுடைய நம்பிக்கையின் சிதைவுகளுக்கிடையேயிருந்து தான் தோன்றலாமோ என்னவோ?' - என்றெண்ணி - இப்படி எண்ணுவதும் ஓர் அழுகுணித் தத்துவமாகத் தோன்றி உடனே - இவற்றையெல்லாம் மறக்கவும் முயன்றான் சுகுணன். ஒழுங்காக வரிசைப்படுத்தி நினைக்கவும் முடியாமல் - ஒழுங்காக வரிசைப் படுத்தி மறக்கவும் முடியாமல் அவன் மனத்தின் பலவீனமான எல்லையில் நினைவுகள் துடித்துத் தவித்துக் கொண்டிருந்தன அப்போது.


அவனுடைய பல வர்ணனைகளுக்கு அவளுடைய அழகு ஒரு சாட்சியாகவோ தூண்டுதலாகவோ இருந்திருக்கிறதென்பதை அவனாலேயே இப்போது மறக்கவோ மறுக்கவோ முடியாது. உலகுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவள் அவனுடைய எழுத்துக்குத் தூண்டுதலாகவும், எழுதும்போது சாட்சியாகவும், எழுதி முடித்த பின் ரஸிகையாகவும் இருந்திருக்கிறாள். சின்ன சின்ன அரிசிப் பல் வரிசையின் நெருக்கமான அமைப்போடும் - எயிறு என்று பழைய தமிழில் சொல்லுகிறார்களே - அத்தகைய பல்லழகோடும் - அவள் கலீர் கலீரென்று சிரித்துப் பாராட்டிய பாராட்டுக்கள் அவனை வசீகரித்ததும், மின்னுகிற கருமையோடு சிற்றலையிட்டுக் கற்றை கற்றையாகப் புரளும் அவளுடைய மோகனமான கூந்தலும் - அந்தக் கூந்தலின் கருமைக்குக் காதோரம் ஒரு மாற்று நிறம் போலச் செவிகளில் அவள் அணிந்திருந்த பொன் வளையங்களும் - அந்த வளையங்களை விடப் பொன் நிறமான செவிகளும், கைவிரல்களால் தொட்டு மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும் போன்ற அழகிய கழுத்தும், - அவனை வசீகரித்தன! 'தோழி' என்ற தன்னுடைய புகழ் பெற்ற நாவலில் முன்பு அவன் ஒரு சிறு கவிதை எழுதியிருந்தான்.


"முகிலுமிருளும் கலந்துபின் மூண்டுசரிந்த கருங்குழலாள் துகிலும் பட்டும் புனைந்துபின் குயிலும் தேனும் இணைந்துபின் கூவிப் பதிந்த சொல்லிசையாள் வெயிலும் ஒளியும் செம்பொனும் வீதமாகச் சமைத்த மேனியினாள் -"


என்ற அந்தக் கவிதைக்கு அவள் உடம்பே அவனறிந்த சாட்சி. பல அழகிய சம்பாஷணைகள் அவளிடம் பேசிப் பேசியே அவனுக்குக் கிடைத்திருந்தன. மிக நெருக்கமாக அமர்ந்து அவளிடம் இதமாகப் பேசி ஒருவர் மனம் மற்றவர் மனத்தில் கரைவது போல் நெகிழ்ந்திருந்த சமயத்தில் ஒரு நாள், "துளசி நீ ஒரு மாலை..." என்று அவன் உணர்ச்சி மேலிட்டு அவளைப் பாராட்டினான்.


"இந்த வீரரின் அழகிய கம்பீரமான புஜங்களை இப்படி அலங்கரிக்க முடியுமானால் நான் மாலையாக இருப்பதைப் பற்றி எனக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை" - என்று அவள் அன்று அதற்கு மறுமொழி கூறியிருந்தாள்.


ஒருவர் மனத்தில் மற்றவர் மனம் கரைய - ஒருவர் நினைவில் மற்றவர் நினைவு பதிய, ஒருவர் உணர்வில் மற்றவர் உணர்வு சேர - சோர - அவர்கள் பழகிய நாட்கள் பல. பழகிய விதங்கள் பல. அவள் ஓர் அபூர்வமான அழகி. கண்களால் சிரிப்பாள். கன்னத்தில் நகை பூக்கும். இதழ்களால் காணுவாள். விழிகளால் உண்ணுவாள். கைகளால் பேசி உணருவாள். மனத்துக்கு நயமான வாத்தியத்தை எடுத்து நாமே விரும்பி வாசிப்பது போல் அவளோடு பேசுவதே ஒரு சுகமான அனுபவமாகும். அத்தகையவளை இன்று உணர்ச்சிப் பூர்வமாக மற்றொருவனிடம் இழந்து நஷ்டப்பட்டது அவனுக்குப் பேரிழப்புத்தான். ஆனால் இந்த நஷ்டம் கூடத் தன்னை இன்னும் தீரனாக மாற்ற முடியுமோ என்பதாகவும் ஓர் அந்தரங்கத் துடிப்பு அவனுள் இருந்தது. பொற்கிண்ணத்தில் ஒளி நிழல் படிவது போல் முகம் முழுவதும் குறுகுறுவெனச் சிரிக்கும் அவள் அழகு அவனை ஏமாற்றி விட்டு போனதே அவனுக்கு இனி ஒரு பெரிய தூண்டுதலாகவும் செய்யலாம்.


அரைத்தால், நசுக்கி வழித்தெடுத்தால் வாசனை பிறப்பிக்கிற சந்தனக் கட்டையைப் போல் கலைஞனுடைய மனத்தை அலைத்தாலோ அரைத்தாலோ அந்த வேதனையும் ஒரு கலைத் தன்மையைத்தானே பிறப்பிக்கும்? கலைஞனுடைய துக்கத்துக்கும் கூடக் கலைமதிப்பு உண்டு தானே?


அந்த அதிகாலையில் அந்தக் கிராமாந்தரத்து அமைதியில் 'நானும் இருக்கிறேன்' என்பது போல் டி.பி. வாசலிலிருந்த வேப்பமரத்திலிருந்து ஒரு குயில் இரண்டு முறை கூவியது. எதிரே மரங்கள் அணிவகுத்த சாலையில் விகாரமான ஓசையோடு கடமுட வென்று ஒரு கட்டைவண்டி, மெதுவாக அவசரமின்றி நகர்ந்து கொண்டிருந்தது. அதை அடுத்து மூச்சு இரைக்க நெற்கதிர் அறுத்த கட்டுடன் இரவிக்கை அணியாத நாட்டுப்புற பெண் ஒருத்தி தலை சுமையோடு களத்துக்கு விரைந்து கொண்டிருந்தாள். எங்கோ இறவைக் கிணற்றில் கவலை இறைக்கும் ஓசை தூரத்து ரேடியோ அஞ்சலைப் போல் கேட்டுக் கொண்டிருந்தது. சுகுணன் எழுந்து நின்று சோம்பல் முறித்தான். வழக்கம் போல் மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறியில் இடித்து விடும் அளவிற்குக் கைகள் உயரப் போயின. சாதாரணமான உயரமுள்ள மனிதர்களை மாதிரியாக வைத்துத்தான் இந்த டி.பி. கட்டிடமெல்லாம் கட்டியிருப்பார்கள் போலிருக்கிறது.


பாத்ரூமில் தண்ணீர் நிரப்பியாகி விட்டதென்கிற செய்தியை டி.பி. வாட்ச்மேன் வந்து தெரிவித்து விட்டுப் போனான். அதோடு இன்னொரு செய்தியையும் அவன் சிரத்தையோடு தெரிவித்தான்.


"சாயங்காலம் தாசில்தார் காம்ப் வாராரு. அதற்குள்ளாற... இடத்தைக் காலி பண்ணிட்டா நல்லதுங்க" -


"கட்டாயம் காலி பண்ணி விடுவேன். நீ கவலைப் படாதே. எனக்கு மூன்றரை மணிக்கு இரயில்" - என்றான் சுகுணன்.


"எக்ஸ்பிரஸ் ரெண்டு விநாடிகள் தான் இங்கே நிற்கும். மூண்ரைக்கு ரயிலுண்ணா மூணு மணிக்கே ரயில்டேசனுக்குப் போயிடணுங்க..." - என்று கிராமத்துக்கே உரிய அதிக சிரத்தையோடு பதில் வந்தது வாட்ச்மேனிடமிருந்து.


சிரத்தை - அசிரத்தை - இரண்டையும் வேகமாகக் கணித்து முடிவு பண்ணுகிற கிராமத்து மனப்பான்மையை அந்த வாட்ச்மேனிடம் கண்டான் சுகுணன். தாசில்தார் வருவதனால் அவன் அங்கு மேலும் தொடர்ந்து தங்கியிருப்பதில் அசிரத்தையும், அவன் மூன்றரை மணி இரயிலுக்குப் போய்விடப் போவது குறித்து அதிக சிரத்தையும் காண்பித்த அந்த வாட்ச்மேனைப் பற்றிச் சிந்தித்து உள்ளூறச் சிரித்துக் கொண்டான் சுகுணன். கண்ணாடியைக் கழற்றி வைத்து விட்டுப் பெட்டியைத் திறந்து குளிப்பதற்காகச் சோப்பும் துவாலைத் துண்டும் எடுக்கப் போன போது மேலாகக் கிடந்த துளசியின் கலியாணப் பத்திரிகை கண்ணில் பட்டது. கைகள் தயங்கின. அதைக்கண்டு மனம் மறுபடி அழத் தொடங்கியது.


...சுபமுகூர்த்தம் நிகழ்வதாய்ப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, மேற்படி முகூர்த்தம் சென்னை ஆபர்ஸ்ட்பரியில் நிகழ்வதால் தாங்கள் தங்கள் பந்துமித்திரர்களுடன் முகூர்த்தத்திற்கும் மாலையில் வரவேற்பிற்கும்..."


மேலே படிக்க முடியாமல் மனம் கனமாகியது. கைகள் தளர்ந்து சோர்ந்தன. சோர்வோடு சோர்வாக ஒருகணம் முரட்டுத்தனமான பாவனை ஒன்றும் ஏற்பட்டது. இப்படிக் கோழையாக விலகி ஓடிவந்து மறைந்து கொள்ளாமல் எல்லாரையும் போல் அந்தக் கலியாணத்திற்குத் தானும் போய்த் துணிச்சலாகத் துளசியையும் அவளுக்குக் கணவனாகிற யாரோ ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டரையோ, பி.இ. இஞ்சினீயரையோ - அந்த மணமகனையும் - பார்த்து கலியாணம் விசாரித்துக் குத்தலாக இரண்டு வார்த்தை பேசிவிட்டும் வந்திருந்தால் அவளுக்கு எப்படி இருந்திருக்கும் என்றும் ஒரு குரூரமான கற்பனை அவனுள் எழுந்தது. அப்படிச் செய்து அவளை வதைக்காமல் இப்படி ஓடிவந்து தான் ஒளிந்து கொண்டது தவறு என்று அவனுக்கே தோன்றியது. பார்க்கப் போனால் இந்த இரண்டு மூன்று நாட்களில் அவன் கைகள் பிரமாதமாக ஒன்றும் எழுதிக் கிழித்து விடவில்லை. காகிதம் வரை வருவதற்குக் கூட வடிவும் ஒழுங்கும் பெறாமல் மனத்திலேயே எழுதி மனத்திலேயே கிழிந்தது தான் அதிகம். நாளைக்குக் காலை எழும்பூர் போய் இறங்கித் திருவல்லிக்கேணி சென்று அறையில் பெட்டி படுக்கையைப் போட்டு விட்டுக் குளித்துச் சிற்றுண்டி முடித்துக் கொண்டு அலுவலகத்துக்குப் போனால் 'கம்போஸுக்கு மேட்டர் உண்டா சார்?' - என்று ஆவலோடு கேட்கவரும் பூம் பொழில் அச்சகத்து ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடுவுக்கு என்ன பதில் சொல்வது?


இதுவரை துளசிக்கு அடுத்தபடி சுகுணன் எழுதும் எழுத்துக்களின் முதல் இரசிகர் இந்த நம்மாழ்வார் நாயுடுதான். அவன் மேலும் அவன் எழுத்துக்கள் மேலும் ஒரு தந்தையின் பாசத்தோடும் அன்போடும் உரிமை கொண்டாடிப் பேசுகிற நாணயமான தொழிலாளி அவர். சுகுணன் 'மிஷினில்' ஏறிக் கொண்டிருக்கிற ஃபாரத்தில் வண்டி வண்டியாகக் 'கரெக்ஷன்' போட்டுக் கொடுத்தாலும் நாயுடுவுக்கு கோபமே வராது.


"இதென்னா புச்சா நம்பளுக்குள்ளே? வழக்கந்தானே சார்" - என்று சிரித்துக் கொண்டே அவனிடமிருந்து கரெக்ஷனை வாங்கிச் செல்வார் நாயுடு.


எழுதி எழுதிக் குவிக்கிற காகிதங்களைப் படித்துப் பாராட்டவும், 'இப்படி இருந்தால் நல்லாயிருக்கும்' என்று அபிப்ராயம் சொல்லவும் துளசி இனிமேல் வரமாட்டாள். பழைய காலத்தில் அரண்மனைகளில் அரசர்கள் உண்ணும் உணவை அவர்கள் உண்பதற்கு முன்பாகவே உண்டு ருசியைப் பற்றி முதலியேயே சோதித்துச் சொல்வதற்கு 'உண்டு காட்டிகள்' என்பதாக ஒருவகை ஊழியர்கள் இருப்பார்களாமே; அதுபோல அவனுடைய எழுத்தின் ருசியைச் சரிபார்த்து அவனுக்கே சொல்ல நம்பிக்கையான ஆள் இனி யாரும் இல்லை. இனிமேல் அவனுக்குப் பொறுப்பு அதிகம். தன் எழுத்தின் தரத்தை விலகி நின்று கொண்டு தானே படைக்கிறவனாகவும் தானே படிக்கிறவனாகவும் வேறு வேறு எல்லைகளில் மாறி இருந்து அவன் தனக்குள் தீர்மானம் பண்ணவேண்டும். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும், 'தனக்கு வேறு ஆதரவுகளும் வேறு நம்பிக்கைகளும், சாசுவதமில்லை - கடைசிவரை சாசுவதம் தன்னுடைய சொந்த நம்பிக்கையும், சொந்த மனமுமே அன்றி வேறல்ல' - என்று இப்படி உணருகிறாற் போல ஒரு நிகழ்ச்சியாவது நிச்சயம் வராமற் போகாதென்று இப்போது சுகுணனுக்குத் தோன்றியது.


குளித்துவிட்டு வந்ததும் - சிந்தனை மேலும் சுறுசுறுப்படைந்து மனத்தில் உறைக்கிற மாதிரி - அவளுக்கு - அதுதான் அந்தக் கடன்காரி துளசிக்கு ஏதாவது எழுதவேண்டுமென்று சுகுணனுக்குத் தோன்றியது. வெளிப்பார்வைக்கு அது திருமண வாழ்த்தைப் போல் இருந்தாலும் - அவள் கையில் கிடைக்கிற போது - அவள் அதைப் படிக்கிற போது அவள் இதயத்தைச் சுடும்படி அது இருக்க வேண்டும் என்று தீர்மானம் பண்ணிக் கொண்டவனாக அந்தத் தீர்மானத்தைச் சில விநாடிகள் கூடத் தள்ளிப் போடப் பொறுக்காத தீவிரத்தோடு உடனே வாட்ச்மேனைக் கூப்பிட்டு, 'உள்ளூர்த் தபாலாபீஸில் போய் 'கிரீட்டிங்' பேப்பரும் ஸ்டாம்பும் கவரும்' - வாங்கி வருமாறு கூறிச் சில்லறை கொடுத்தான் சுகுணன்.


அந்த வாட்ச்மேனுக்கு 'கிரீட்டிங் கவர்' - என்ற வார்த்தை வாயில் நுழையவில்லை. ஆகவே ஒரு துண்டுத் தாளில் அதைத் தனியே எழுதிக் கொடுக்க வேண்டியதாயிற்று. பத்தே நிமிஷத்தில் சைக்கிளில் போய் கிரீட்டிங் கவர் பேப்பர் - ஸ்டாம்பு வாங்கி வந்துவிட்டான் வாட்ச்மேன். கிராமாந்தரத்துத் தபால் நிலையமாகையால் நீண்ட நாட்களாக யாரும் வாங்காமல் பழுப்படைந்திருந்த கிரீட்டிங் தாளும் கவரும்.


திருமணம் காலையிலேயே முடிந்திருக்குமென்றால் இந்த வாழ்த்தை 'நேர் பார்வைக்கு' என்று உறையில் எழுதி அவள் பேருக்கே அனுப்பினால் இது அவளிடம் நேரில் கிடைக்குமென்று சுகுணனுக்குத் தெரியும்.


அவள் வீட்டில் அவளுக்குச் செல்லமும் உரிமையும் அதிகம். அவள் பெயருக்கு வருகிற கடிதத்தை அவளைத் தவிர வேறு யாரும் பிரிக்கமாட்டார்கள். அவள் வீட்டில் இல்லாமல் வெளியே எங்காவது புதுமணமான ஜோடியாய்க் கணவனோடு சினிமா, கடற்கரை என்று போயிருந்தாலும் அவள் வந்த பின் அவளே கடிதத்தைப் பார்ப்பாள் என்று உறுதி செய்து கொண்டு, "வீரர்களின் கம்பீரமான தோள்களை அலங்கரிக்க வேண்டிய மணமாலைகள் சந்தர்ப்பவசத்தால் கோழைகளின் தளர்ந்த கைகளில் சூட்டப்பட்டு விடுவதும் உண்டு போலும்" என்று முத்து முத்தாக எழுதிக் கீழே சுகுணன் என்று கையெழுத்தும் இட்டு மேலே 'மண வாழ்த்து' என்று தலைப்பும் போட்டு - உள்ளே வைத்து உறையை மூடி அஞ்சல் தலையும் ஒட்டி ஆத்திரந்தோய தபாலுக்கு அனுப்பியபோது - எப்போதோ இலக்கிய விவகாரங்களில் தகுதியற்ற எதையாவது பத்திரிகையில் கடுமையான சொற்களில் குத்தலாகச் சாடி எழுதி முடிக்கிற வேளையில் உண்டாகுமே ஒரு கோபமான மனநிறைவு - அந்த மாதிரி மன நிறைவு தான் இன்றும் இந்த விநாடியில் அவனுக்கு உண்டாகியிருந்தது.


தன்னுடைய சொற்கள் தான் நியமித்து அனுப்பிய கடுமையோடு போய் இன்னொருவரைத் தாக்கித் துன்புறுத்தும் என்று நினைக்கிற போதுதான் மனத்துக்கு எத்தனை சுகமாயிருக்கிறது? சாயங்காலம் அந்தக் கிராமத்திலிருந்து தன் கடிதம் எந்த இரயிலில் பயணம் செய்யுமோ அதே இரயிலில் சென்னைக்கு பிரயாணமாகிற போதும் இந்தத் தார்மீகக் கோபத்தோடு கூடிய மனத்திருப்தியே அவனிடமிருந்தது.

...Continue Reading

 

27 views0 comments

Related Posts

See All

Commentaires


bottom of page