top of page
library_1.jpg
Writer's pictureAngelica

பார்த்திபன் கனவு

Updated: Jan 22, 2022

கல்கி

 

பார்த்திபன் கனவு முதற்பாகம்

அத்தியாயம் ஒன்று தோணித்துறை



காவேரி தீரம் அமைதி கொண்டு விளங்கிற்று. உதயசூரியனின் செம்பொற்கிரணங்களால் நதியின் செந்நீர்ப் பிரவாகம் பொன்னிறம் பெற்றுத் திகழ்ந்தது. அந்தப் புண்ணிய நதிக்குப் 'பொன்னி' என்னும் பெயர் அந்த வேளையில் மிகப் பொருத்தமாய்த் தோன்றியது. சுழிகள் - சுழல்களுடனே விரைந்து சென்றுகொண்டிருந்த அந்தப் பிரவா கத்தின் மீது காலை இளங்காற்று தவழ்ந்து விளையாடி இந்திர ஜால வித்தைகள் காட்டிக் கொண்டிருந்தது. சின்னஞ்சிறு அலைகள் ஒன்றோ டொன்று லேசாக மோதிய போது சிதறி விழுந்த ஆயிரமாயிரம் நீர்த்துளிகள் ஜாஜ்வல்யமான ரத்தினங்களாகவும், கோமேதகங்களாகவும், வைரங்களாகவும், மரகதங்களாகவும் பிரகாசித்துக் காவேரி நதியை ஒரு மாயாபுரியாக ஆக்கிக் கொண்டிருந்தன.


ஆற்றங்கரையில் ஆலமரங்கள் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் விழுதுகள் விட்டு விசாலமாய்ப் படர்ந்திருந்தன. மரங்களின் பழைய இலைகள் எல்லாம் உதிர்ந்து புதிதாய்த் தளிர்விட்டிருந்த காலம். அந்த இளந் தளிர்களின் மீது காலைக் கதிரவனின் பொற் கிரணங்கள் படிந்து அவற்றைத் தங்கத் தகடுகளாகச் செய்து கொண்டிருந்தன. கண்ணுக் கெட்டிய தூரம் தண்ணீர் மயமாய்த் தோன்றிய அந்த நதியின் மத்தியில் வடகிழக்குத் திசையிலே ஒரு பசுமையான தீவு காணப்பட்டது. தீவின் நடுவில் பச்சை மரங்களுக்கு மேலே கம்பீரமாகத் தலை தூக்கி நின்ற மாளிகையின் தங்கக் கலசம் தகதகவென்று ஒளிமயமாய் விளங்கிற்று. அந்த மனோகரமான காலை நேரத்தில் அங்கு எழுந்த பலவகைச் சத்தங்கள் நதி தீரத்தின் அமைதியை நன்று எடுத்துக் காட்டுவனவாயிருந்தன. விசாலமான ஆலமரங்களில் வாழ்ந்த பறவை இனங்கள் சூரியோ தயத்தை வரவேற்றுப் பற்பல இசைகளில் கீதங்கள் பாடின. அந்த இயற்கைச் சங்கீதத்துக்கு நதிப் பிரவாகத்தின் 'ஹோ' என்ற ஓசை சுருதி கொடுத்துக் கொண்டிருந்தது. உணவு தேடும் பொருட்டு வெளியே கிளம்புவதற்கு ஆயத்தமான பறவைகள் தம் சிறகுகளை அடித்து ஆர்ப்பரித்தன. தாய்ப் பறவைகள் குஞ்சுகளிடம் கொஞ்சிக் கொஞ்சி விடைபெற்றுக் கொண்டிருந்தன.


ஆலமரங்களுக்கு நடுவே ஓங்கி வளர்ந்திருந்த அரச மரம் தன் இலைகளைச் சலசலவென்று ஓசைப்படுத்தி 'நானும் இருக்கிறேன்' என்று தெரியப்படுத்திற்று. நதி ஓரத்தில் ஆலம் விழுதுகளில் கட்டிப் போட்டிருந்த தெப்பங்களைத் தண்ணீர்ப் பிரவாகம் அடித்துக் கொண்டு போவதற்கு எவ்வளவோ வீராவேசத்துடன் முயன்றது; அது முடியாமற் போகவே, 'இருக்கட்டும், இருக்கட்டும்' என்று கோபக் குரலில் இரைந்து கொண்டே சென்றது. கரையில் சற்றுத் தூரத்தில் ஓர் ஆலமரத்தினடியில் குடிசை வீடு ஒன்று காணப்பட்டது. அதன் கூரை வழியாக அடுப்புப் புகை வந்து கொண்டிருந்தது. அடுப்பில் கம்பு அடை வேகும் வாசனையும் லேசாக வந்தது. குடிசையின் பக்கத்தில் கறவை எருமை ஒன்று படுத்து அசைபோட்டுக் கொண்டிருந்தது. அதன் கன்று அருகில் நின்று தாய் அசைபோடுவதை மிக்க ஆச்சரியத்துடனே உற்று நோக்கிக் கொண்டிருந்தது. டக்டக், டக்டக், டக்டக்! அந்த நதிதீரத்தின் ஆழ்ந்த அமைதியைக் கலைத்துக் கொண்டு குதிரைக் குளம்படியின் சத்தம் கேட்டது. டக்டக், டக்டக், டக்டக்....! வரவர அந்தச் சத்தம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. இதோ வருகிறது, நாலு கால் பாய்ச்சலில் ஒரு கம்பீரமான குதிரை. அதன் மேல் ஆஜானுபாகுவான வீரன் ஒருவன் காணப்படுகிறான். வந்த வேகத்தில் குதிரையும் வீரனும் வியர்வையில் முழுகியிருக்கிறார்கள். தோணித்துறை வந்ததும் குதிரை நிற்கிறது. வீரன் அதன் மேலிருந்து குதித்து இறங்குகிறான்.


குடிசைக்குள்ளே இளம் பெண் ஒருத்தி அடுப்பில் அடை சுட்டுக் கொண்டிருந்தாள். அருகில் திடகாத்திரமான ஒரு வாலிபன் உட்கார்ந்து, தைத்த இளம் ஆலம் இலையிலே போட்டிருந்த கம்பு அடையைக் கீரைக் குழம்புடன் ருசி பார்த்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஒரு தடவை அவன் நாக்கைச் சப்புக் கொட்டிவிட்டு "அடி வள்ளி, இன்னும் எத்தனை நாளைக்கு உன் கையால் கம்பு அடையும் கீரைக் குழம்பும் சாப்பிட எனக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை!" என்றான். "தினம் போது விடிந்தால் நீ இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாய். இன்னொரு தடவை சொன்னால் இதோ இந்த அடுப்பை வெட்டி காவேரியில் போட்டுவிடுவேன் பார்!" என்றாள் அந்தப் பெண். "நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை, வள்ளி! மகாராஜாவும் மகாராணியும் நேற்றுப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். யுத்தம் நிச்சயமாக வரப் போகிறது" என்றான் வாலிபன். "யுத்தம் வந்தால் உனக்கு என்ன என்றுதான் கேட்கிறேன். உன்னை யார் யுத்தத்துக்கு அழைக்கிறார்கள்? உன்பாட்டுக்குப் படகோட்டிக்கொண்டு இருக்க வேண்டியதுதானே?" "அதுதான் இல்லை. நான் மகாராஜாவின் காலிலே விழுந்து கேட்டுக் கொள்ளப் போகிறன். என்னையும் யுத்தத்துக்கு அழைத்துக் கொண்டு போகச் சொல்லி."


"நான் உன் காலிலே விழுந்து என்னையும் உன்னோடு அழைத்துக் கொண்டு போ என்று கேட்டுக் கொள்ளப் போகிறேன். அதற்கு உனக்கு இஷ்டமில்லாவிட்டால் - காவேரி ஆற்றோடு போனவளை எடுத்துக் காப்பாற்றினாயோ இல்லையோ - மறுபடியும் அந்தக் காவேரியிலே இழுத்து விட்டு விட்டுப் போய்விடு." "அதுதான் சரி வள்ளி! சோழ தேசம் இப்போது அப்படித்தான் ஆகிவிட்டது. பெண்பிள்ளைகள் யுத்தத்துக்குப் போகவேண்டியது; ஆண் பிள்ளைகள் வீட்டுக்குள் ஒளிந்து கொண்டிருக்க வேண்டியது.... இரு, இரு குதிரை வருகிற சத்தம்போல் கேட்கிறதே." ஆம்; அந்தச் சமயத்தில்தான் 'டக்டக், டக்டக்' என்ற குதிரைக் காலடியின் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தினால் அவ்வாலிபனின் உடம்பில் ஒரு துடிப்பு உண்டாயிற்று. அப்படியே எச்சிற் கையோடு எழுந்தான், வாசற்புறம் ஓடினான். அங்கே அப்போது தான் குதிரை மீதிருந்து இறங்கிய வீரன், "பொன்னா! மகாராஜாவுக்குச் செய்தி கொண்டு வந்திருக்கிறேன். சீக்கிரம் தோணியை எடு" என்றான். பொன்னன் "இதோ வந்து விட்டேன்!" என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடினான்.


அச்சமயம் வள்ளி சட்டுவத்தில் இன்னொரு அடை தட்டுவதற்காக மாவை எடுத்துக் கொண் டிருந்தாள். "வள்ளி! உறையூரிலிருந்து செய்தி கொண்டு வந்திருக்கிறான். அவசரச் சேதியாம், நான் போய் வருகிறேன்" என்றான் பொன்னன். "நல்ல அவசரச் சேதி! அரை வயிறுகூட நிரம்பியிராதே? எனக்குப் பிடிக்கவே இல்லை" என்று வள்ளி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். "அதற்கென்ன செய்கிறது, வள்ளி! அரண்மனைச் சேவகம் என்றால் சும்மாவா?" என்று பொன்னன் சொல்லிக் கொண்டே அவளுடைய சமீபம் சென்றான். கோபம் கொண்ட அவளது முகத்தைத் தன் கைகளால் திருப்பினான். வள்ளி புன்னகையுடன் தன் முகத்தின் மேல் விழுந்திருந்த கூந்தலை இடது கையால் எடுத்துச் சொருக்குப் போட்டுக் கொண்டு, "சீக்கிரம் வந்துவிடுகிறாயா?" என்று சொல்லி விட்டுப் பொன்னனை அண்ணாந்து பார்த்தாள். பொன்னன் அவளுடைய முகத்தை நோக்கிக் குனிந்தான். அப்போது வெளியிலிருந்து "எத்தனை நேரம் பொன்னா?" என்று கூச்சல் கேட்கவே, பொன்னன் திடுக்கிட்டவனாய், "இதோ வந்து விட்டேன்!" என்று கூச்சலிட்டுக் கொண்டு வெளியே ஓடினான்.

...Continue Reading

 

8 views0 comments

Related Posts

See All

Comments


bottom of page