top of page
library_1.jpg
Writer's pictureTamil Bookshelf

அங்கும் இங்கும் - I

டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு



முன்னுரை

வெளிநாட்டுப் பயணம், அரிய நல்வாய்ப்பு. அது எனக்குக் கிட்டிற்று. சோவியத் ஒன்றியத்துக்கு இரு முறையும். பிரிட்டனுக்கு இரு முறையும், அமெரிக்காவிற்கு ஒரு முறையும் சென்று வரும் வாய்ப்பினைப் பெற்றேன். அந்நாடுகளில் என்னைக் கவர்ந்தவை பல.


நான் கண்ட, கேட்டவற்றில் சிலவற்தையாவது எழுதி வைக்க, 'சத்திய கங்கை'யின் ஆசிரியரும் என் நண்பருமான திரு பகிரதன் அவர்களின் அன்பு அழைப்புத் தூண்டிற்று. 'அங்கும் இங்கும்' என்ற தலைப்பில் அவற்றை அவர் 'சத்திய கங்கை'யில் வெளியிட்டார். ஆகவே அவருக்கு என் முதல் நன்றி.

இக்கட்டுரைத் தொகுப்பை நூல் வடிவில் வெளியிட முன்வந்த நியூ செஞ்சுசி நூலகத்தாருக்கு என் உளமார்ந்த நன்றி.


இந்நூலை வெளியிட அனுமதி தந்த இந்திய ஆட்சிக்கும் நன்றியுடையேன். இதில் வரும் கருத்துக்கள் என்னுடையவை. அரசினருடையவை அல்ல. அவற்றிற்கு நானே பொறுப்பு. அவை எவ்விதத்திலும் இந்திய ஆட்சியைச் சாரா. சென்னைப் பல்கலைக் கழகத்தில் கல்லூரிக் கல்வி நிலையில் தமிழுக்கு முதன் முதலாக இடம் தேடித் தந்தவரும், சென்னை நகரில் எல்லா சமயத்தாரும் சேர்ந்து கொண்டாடும் தமிழ்த் திருநாளாகப் பொங்கல் விழாவை நடத்திக் காட்டியவரும், எனக்கு நல்லாசிரியராயிருந்து தமிழ்ப் பற்றை ஊட்டியவருமான கா.நமசிவாய முதலியார் அவர்களின் நினைவுக்கு இதை என் நன்றியின் அறிகுறியாகக் காணிக்கையாக்குகிறேன்.

புது தில்லி,⁠ |

19-3-1968⁠ |⁠ நெ. து. சுந்தரவடிவேலு


பொருளடக்கம்


1. விஞ்ஞான விவசாயம் …. 5

2. சமுதாய ஒருமைப்பாடு …. 12

3. யார் காக்கிறார்கள் ? …. 18

4. ஒரு படிப்பினை …. 24

5. லெனின் நூலகம் …. 28




1. விஞ்ஞான விவசாயம்


நான் மாணவனாக இருந்த போது பாரதியாரின் "புதிய ருஷியா" என்னும் கவிதை என்னைக் கவர்ந்தது.



"குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு

⁠மேன்மையுறக் குடிமை நீதி

கதியொன்றி லெழுந்தது பார்; குடியரசென்

⁠றுலகறியக் கூறி விட்டார் ;

அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போ

⁠தடிமையில்லை அறிக என்றார்;"



என்னும் அடிகள் எப்போதும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருந்தன. பின்னர், லெனின் எழுதிய நூல்களைக் கற்றபோது, என்றைக்காவது ஒரு நாள், அடிமைத்தளைகளை அறித்தெறிந்து, புரட்சி நடைபோடும், சோவியத் ஒன்றியத்தைக் காண வேண்டுமென்னும் அவா பிறந்தது. 1961 ஆம் ஆண்டின் இந்திய-சோவியத் கலாசார பரிமாற்றத்திட்டம், என் அவா நிறைவேற வழி வகுத்தது.


1961 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் சோவியத் ஒன்றியம் செல்லும் பேறு பெற்றேன். சோவியத் ஒன்றியத்தில் நான் பார்த்த முதல் நகரம் தாஷ்கண்ட். உஸ்பெக்கிஸ்தான் குடியரசின் தலைநகராகிய இந்நகரையும் இதைச் சுற்றி யுள்ள சில இடங்களையும் எனக்கும் என்னுடன் வந்த கல்வியாளர் இருவர்க்கும் காட்டினர்.


அரசினருக்குச் சொந்தமான கூட்டுப்பண்ணை ஒன்றை நாங்கள் பார்த்தோம். அது நகருக்கு வெளியே சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. அப்பண்ணை பல ஆயிரம் ஏக்கர் பரப்பை உடையது. ஒரு பக்கத்தில் கண்ணுக்கெட்டும் தூரம் பருத்தி நிலம்; மற்றொரு பக்கம் தானியம் விளைந்த பூமி, வேறொரு பக்கம் பார்த்தால், காய்கறித் தோட்டம் நீண்டு அகன்று கிடந்தது. பழத்தோட்டமும் பரந்து கிடந்தது ஒருபுறம்.


தொலைவிலே மலையொன்று தென்பட்டது. அதன் மேலிருந்து ஓடிக்கொண்டிருந்த காட்டாறுகளை அணைகட்டி, தேக்கமாக்கி. (வாய்க்கால்கள் வெட்டி, இப்பண்ணையைப் போல்) நூற்றுக்கணக்கான பண்ணைகளுக்குப்-பெரும் பண்ணைகளுக்குப் பாசன வசதி செய்யப்பட்டிருப்பதாக எங்கள் வழிகாட்டி விளக்கினார். இரஷியப் புரட்சிக்கு முன்பு, இப்பண்ணைகளிலே பல, வானம் பார்த்த பூமியாக இருந்தனவாம். விளைச்சல் ’பட்டா பாக்கிய’ மாக இருந்தது மாறி இன்று நிச்சயமானதாகிவிட்டது; நிறைந்ததுமாகிவிட்டது.


ஆண்டுக்கு ஒரு முறை, ஊர்கள் பலவற்றை மூழ்கடித்து விட்டு, புரண்டோடும் இந்தியப் பேராறுகளையும் பல இடங்களில் அணையிட்டுத் தேக்கினால், வறண்ட பகுதிகளையும் வளமான பகுதிகளாக்க முடியாதா ? மின்சார உற்பத்தியை பல மடங்கு பெருக்கிச், சிற்றுார் தோறும் இப்புத்தொளியையும் புத்தாற்றலையும் கொடுத்து, மக்களைச் சிறு தொழில்களில் (குடிசைத்தொழில் என்ற வழக்கை விட்டுவிடுவது நல்லது) ஈடுபடுத்தி விட்டால், திட்டங்களின் பலன் பரவலாகி விடாதா ? இப்படி எண்ணி ஏங்கின எங்கள் உள்ளங்கள்.


பங்குச் சண்டையால் குடும்பப் பங்காளிகள் பாழாவதை போல், இராச்சியங்களுக்கிடையில் நிலவும் தண்ணிர் பங்குத் தகராறினால், நாட்டின் நீர்வளத்தில் பெரும் பகுதி வீணாக ஒடி, கடலில் கலப்பதா ? இன்னும் எத்தனை காலத்திற்கு "வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழும்" போக்கு என்று பதறினோம். இந்தியர்களாகிய நாங்கள் மூவரும் கோழி கூவி பொழுது விடியுமா ?’ என்பது பழ மொழி. அரசினர், ஊழியர் ஏங்கிப், பதறிப் பயன் என்ன ? அரசியல் பெரியவர்கள், பெரிய விவகாரங்களைத் தீர்த்து வைக்க வேண்டும்.


சோவியத் ஒன்றியம் அமைந்த பிறகு, அங்குப் பெரும் அளவில் அணைகட்டுதலும், தேக்கம் அமைத்தலும், நீர் மின்சார உற்பததி செய்தலும் நடந்திருப்பதாகப் பின்னர் படித்தறிந்தோம், கூட்டுப் பண்ணைகளில் இயந்திரக் கலப்பைகளைக்கொண்டு உழுகிறார்கள். இயந்திர உதவியால் தூற்றித் தானியங்களைப் பிரித்து எடுக்கிறார்கள். இப்படிப்பட்ட நவீன விஞ்ஞான விவசாயப் பன்னையைக் கண்ட நாங்கள் வியந்தோம். நீங்கள் கண்டாலும் வியப்படைவீர்கள்.


சில நாள்களுக்குப் பின், தாஷ்கண்டிலிருந்து மாஸ்கோ போய்ச் சேர்ந்தோம். தாஷ்கண்டில் நாங்கள் கவனிக்காத ஒன்றை மாஸ்கோவில் கவனிக்தோம். மாஸ்கோவில் கல்விக் கூடம் ஒவ்வொன்றிற்கும் தனித் தனியாக பரந்த விளையாட்டு மைதானம் கிடையாது. பெரு நகரமாகையால் இட நெருக்கடி அதிகம். ஆகவே அநேகமாக, கல்விக்கூடத்தோடு இணைந்த விளையாடுமிடம் சிறிதாக இருக்கும். இந்நிலைக்கு என்ன மாற்று ? பல கல்விக்கூடங்களுக்கும் பொதுவாக, இங்கும் அங்கும், பரந்த விளையாட்டு மைதானங்களை வைத்திருக்கிறார்கள். இம்முறையை விளக்கியபோது, இடநெருக்கடியின் வலிமையைத் தெளிவாக உணர்ந்தோம்.


இத்தகைய இட நெருக்கடியிலும் தொடக்க நிலைப் பள்ளியில் கூட, ஒரு பக்கம் மலர்ப் பூங்காவும், வேறொரு பக்கம் காய்கறித் தோட்டமும் காட்சியளித்தன. பள்ளிக் கூடம் கவர்ச்சிக் கூடமாகவும் விளங்க வேண்டுமென்பது சோவியத் மக்களின் கொள்கை. எனவே, அழகிய மலர்கள் திறைந்த தோட்டம் பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதி.


இடநெருக்கடியான நகரங்களில் இருக்கும் கல்விக்கூடங்களில் காய்கறித் தோட்டத்திற்கு இடம் ஒதுக்கியிருப்பது சரியா ? வேறு வகையாக அவ்விடங்களைப் பயன்படுத்துவது நல்லதல்லவா? காய்கறிகளைக் கூட்டுப் பண்ணைகளில் எளிதாகவும் ஏராளமாகவும் பயிரிட்டுக் கொள்ளலாமே. நகரப் பள்ளிகளில் கொஞ்சம் கொஞ்சம் பயிரிட்டா பசியாறப் போகிறது ? இத்தகைய ஐயங்கள் எழுந்தன எங்களுக்கு. இரண்டொரு நாள்களுக்குப்பின் பல பள்ளிகளிலும் இந்நிலையைக் கண்ட பின், மெல்ல எங்கள் ஐயங்களை வெளியிட்டோம். அவர்களிடமிருந்து நாங்கள் பெற்ற விளக்கத்தின் சாரம் வருமாறு :-


படிப்பாளி பாட்டாளியாகவும் வளரவேண்டும் ; தொடக்கப்பள்ளிச் சிறுவர் சிறுமிகளுக்கும், உயர்நிலைப்பள்ளி இளைஞர்களுக்கும் காளையர்களுக்கும் ஆக்கப் பணியும் கொடுக்கவேண்டும். அவர்களுக்குப் படிக்க நூல்களையும், கேட்கப் பாடங்களையும், போடக் கணக்குகளையும் மட்டும்; கொடுப்பது முழுமை பெற்ற கல்வியாகாது. நல்ல முழுக் கல்வியானது. வளரும் பருவத்தினர், ஏற்ற கைத்தொழில்களில், செயல் திட்டங்களில், முறையாக ஈடுபடவும் வாய்ப்பளிக்கி வேண்டும்.


தோட்டப் பயிர், பிற கை வேலைகளைவிட அதி திருப்தியைக் கொடுக்கக்கூடியது ; சிறுபிள்ளைகள்கூட எளிதாக ஈடுபடக்கூடியது; எளிதாக வெற்றி காணக்கூடியது. ஆகவே, தொடக்கநிலை வகுப்பு மாணவர்களுக்குக்கூட இது ஏற்றது. எனவே, பரவலாக ஊக்கக்கூடியது. மேல் வகுப்புகளுக்குச் சென்ற பிறகு, புதுப் புது வேலைகளி அக்கறையேற்படும் . அந்நிலைகளில், மாணவர்களுக்குப் பல்வேறு வேலைகளைக் கற்க வாய்ப்பளிக்கலாம். எல்லா நிலைகளிலும் முதல் செயல் திட்டமாக, கட்டாயமாகத் தோட்டப் பயிர் இருப்பது ஏற்றது.


காய்கறித் தோட்டம் போடுவதில் வகுப்புக்கு வகுப்பு போட்டியும், சில இடங்களில் பிரிவிற்குப் பிரிவு போட்டியும் வைத்து, கண்டுமுதலை அதிகப்படுத்த ஊக்குவிக்கின்றன. சோவியத் நாட்டுப் பள்ளிகள் பதினாயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள பெருங்கூட்டுப் பண்னைகளில் உணவுப் பொருள்களைப் பயிரிடுவே காடு நின்று விடாமல், பள்ளிக்கூடத் தோட்டங்களிலும் காய்கறிகளைப் பயிரிடும் சோவியத்மக்களின் தொலை நோக்கைப் பாராட்டாமலிருக்க முடியுமா ? இம்முறையால் உழைப்பின் உயர்வை எல்லோரும் உணர்வதோடு, செயலின் பயனைக் கண்ணாரக் கண்டு நிறைவு கொள்வதோடு. இலட்சாதி இலட்சம் கல்விக்கூடங்களில் கல்வியோடுகூட, கோடிகோடி கூடை காய்கறிகனைப் பெற்று மகிழும் வாய்ப்பும் கிடைக்கிறது.


சில நாள்கள் சென்றன. தாங்கள் கீவ் என்னும் நகரைச் சேர்ந்தோம். அது உக்ரைன் குடியரசின் தலைநகரம். இயந்திரத் தொழிற் கூடங்களுக்குப் பெயர் போனது கீவ். அந்நகரிலும், இடம் பொன்னினும் மணியினும் விலை யுயர்ந்தது. அத்தகைய நகரின் நகரின் நடுவில் - ஒரத்தில் அல்ல-ஐம்பது ஏக்கர் நிலத்தை ஆராய்ச்சிப் பண்ணைக்கு ஒதுக்கியிருக்கிறார்கள்.

அங்கு ஆராய்ச்சி செய்பவர்கள் யார்? விஞ்ஞான விற்பன்னர்களா? அல்லர். உழவுத்துறை மேதைகளா ? அல்லர். பின் யார், அந்த ஆராய்ச்சியாளர்கள் ?

உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் அங்கு ஆராய்ச்சி நடத்தினர். இன்றும் நடத்துவர். அந்த 'இரண்டுங்கெட் டான்கள்’, சிறுபிள்ளைகளிட்ட வெள்ளாமை வீடு வந்து சேர்ந்ததா?


தொட்டால் தங்கமாகக் கொட்டக்கூடிய தொழிற்கூடங் களுக்கு ஒதுக்க வேண்டிய விலையுயர்ந்த நிலத்தை, பள்ளிக் கூட இளைஞர்களுக்கே ஒதுக்கியிருப்பது அறிவுடைமையா என்ற ஐயத்தோடு அப்பண்ணைக்குச் சென்றோம். பண்ணை முழுவதையும் சுற்றிக் காட்டினார்கள். மெதுவாகவே, மிகக் கவனமாகவே பார்த்து வந்தோம்.


ஒருபுறம் தானியப் பயிர் தரமாக இருந்தது. மற்றொரு புறம் காய்கறிகள் நன்றாகப் பயிராகியிருந்தன. இன்னொரு புறம் பழத்தோட்டத்தைப் பார்த்தோம். ஆப்பிளும், 'பீச்' பழங்களும் கணக்கின்றிக் காய்த்துக் குலுங்கின.

ஆராய்ச்சிப் பண்ணையின் உயர்ந்த விளைச்சலை வியத்துகொண்டே, பண்ணை இயக்குநரின் அறைக்கு வந்து சேர்ந்தோம்.


அங்கே கண்டது என்ன ?

இரண்டொரு தட்டுகளில் பலகாரங்கள் இருந்தன. காப்பி ஒரு பக்கம் மணம் வீசிக் கொண்டிருந்தது. பல தட்டுகளில் ஆப்பிள்கள் கண்ணைச் சிமிட்டிக் கொண்டி ருந்தன. காப்பி சாப்பிட, நாங்களும் இயக்குநரும் உட்கார்ந்தோம்.

"நாங்கள், எங்கள் இடைவிடாத ஆராய்ச்சியால் பயிரிட்டுள்ள பத்துப் புதுவகை ஆப்பிள்கள் உங்கள் முன் உள்ளன. ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு வகை ஆப்பிள் இவ்வகைகளில் எவ்வகையையும் நீங்கள் வெளியில் சந்தையில் வாங்கமுடியாது. தயவு செய்து பத்துவகை ஆப்பிள் களையும் சாப்பிட்டுப் பாருங்கள். எப்படி இருக்கிறதென்று கூறுங்கள்’’ என்று வேண்டினார்கள், பண்ணையைக் காட்டி விட்டு அழைத்து வந்த மாணவிகள். பத்திலே சிறந்த இரண்டொரு வகை ஆப்பிள்களை மட்டும் நறுக்கிப் பரிமாறும்படி வேண்டினோம். அவர்கள் ஒப்பவில்லை. பத்தும் புதுவகை மட்டுமல்ல, சிறந்த வகையுமாகும் என்று அழுத்திக் கூறினார்கள். பத்துவகையிலும் ஒவ்வொன்று எடுத்து, துண்டு போட்டு, நால்வர்க்கும் மிகுந்த உற்சாகத்துடன் பரிமாறினார்கள்.


அத்தனையையும் உண்டோம். அத்தனையும் இனிப்பாக இருந்தன, மெதுவாக இருந்தன. அது வரையில் உணராத சுவையோடு இருந்தன. ஆராய்ச்சியாளர்கள் கூற்று முற்றிலும் உண்மை.



2. சமுதாய ஒருமைப்பாடு

கீவ் நகரத்து ஆராய்ச்சிப் பண்ணையில் எங்களுக்குப் பத்துப் புதுவகை ஆப்பிள்களைக் கொடுத்த அம்மாணவிகள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? அம்மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள், கட்டாயத்தால் ஆராய்ச்சியில் ஆழ்ந்தவர்கள் அல்லர் அவர்கள். கசப்போடு ஆராய்ச்சி செய்பவர்களும் அல்லர். பணத்திற்காகப் பண்ணைக்கு வந்தவர்களும் அல்லர். விருப்போடு புதுப் பயிர் இடுபவர்கள்.


அந்நகரத்திலுள்ள பல உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் அங்கு வருவார்கள். ஒவ்வொரு பள்ளியும், பயிர்த்தொழிலில் தனி அக்கறை உடையவர்களை மட்டும் பொறுக்கி, அங்கு அனுப்பி வைக்கும். அவர்கள் தனித்தனியாகவும், குழுக்களாகவும் இருந்து, பயிர்த்தொழில், தோட்டத் தொழில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள். அவற்றிகான வசதிகளெல்லாம் அப்பண்னையில் உள்ளன செலவு முழுவதும் அரசினருடையது. ஆர்வமுடையவர்கள் மட்டும், சாதனமுடையில்லாமல், துணிந்து ஆராய்வதால் புதுப் புதுச் சாதனைகளை எட்டிப் பிடிக்கிறார்கள்.


எங்களுக்குக் கொடுத்தது போன்ற, புதுப் பழவகைகளைப் பயிராக்கிக் காட்டுகிறார்கள், இத்தகைய சாதனைகளைக் காட்டி, வேளாண்மைக் கல்லூரிகளில் சேர்கிறார்கள் நம்மைப்போல, எதிலோ பெற்ற மார்க்குகளைக் காட்டியல்ல. 'வாய்ச்சாங் கொள்ளிதனத்திற்காக'வுமல்ல. ஆகவே, சோவியத் நாட்டில் சாதித்துக் காட்டும் செயல் விஞ்ஞானிகளைக் காண்கிறோம். மதிப்பெண்களையே கடவுளாக்கி விட்ட நாமோ, பட்டத்தின் மேல். பட்டத்தை அடுக்கிக் காட்டும் சொல் - விஞ்ஞானிகளையே பெறுகிறோம்.


சமதர்மத்தில் மேதைகளை வளர்ப்பதற்கு வழியேது என்ற ஐயம், 'மேதைகள்’ என்று தமக்குத் தாமே பட்டம் சூட்டிக்கொண்டுள்ள பலருக்கும் எழுவதுண்டு. எனக்கும் எழுந்ததுண்டு. எல்லாரும்-எல்லாருமென்றால் எல்லாருமே, சமாளிக்கும் நிலைக்கும் இறங்கி வந்து கல்வித் திட்டம் அமைத்து, பொதுக்கல்வியை எல்லாருக்கும் அளித்துவிட்டு தனித்திறமை உடையவர்களை அந்தந்தத் துறையில், அதிகம் கற்க. மேலும் மேலும் கற்க அவரவர் வேகத்திற்கு ஊக்குவதும், அதற்கான எல்லா வாய்ப்புகளையும் வசதிகளையும் தாராளமாகச் செய்து தருவதுமே, மேதைகளையும் அறிவு மலைகளையும் சாதனைப் பெரியவர்களையும் பெருக்குவதற்கு வழி என்பதை உணர்ந்தோம்; எங்கள் ஐயம் அகன்றது.


வாய்ப்புகள் என்றதும் அமெரிக்கக் கல்வி முறையில் கண்டது நினைவிற்கு வருகிறது. அந்நாட்டில், ஆதியில் அரசினால், உள்ளாட்சி மன்றங்களால். ஊராட்சிகளால் கல்விக்கூடங்கள் தொடங்கப்படவில்லை. இங்கும் அங்கும் தொடங்கப்பட்ட கல்விக்கூடங்கள்-லெளகீகக் கல்விக் கூடங்கள்-மதச்சபைகளின் சார்பில் தொடங்கப்பட்டன. பின்னர் தனியார் பலர், முடிந்தால் தனித்தனியாகவும், முடியாத போது பலர் சேர்ந்தும், கல்விக்கூடங்களை அமைத்தனர் : நடத்தினர். இன்றும் நடத்துகின்றனர். நாளையும் நடத்துவர். தனியார் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அரசினரின் உதவி கிடையாது. அரசின் கல்வி உதவி, அரசினர் கல்விக்கூடங்களுக்கே விஞ்ஞான வளர்ச்சிக்கென்று மட்டும் சில ஆண்டு களாக, ஏதோ ஒரளவு தனியார் பள்ளிகளுக்கு உதவுகிறார்கள்.


தனியார் கல்விக்கூடங்களையே நம்பியிருப்பது, எதிர் வீட்டுக் கதவை, நம் வீட்டுக் காவலுக்கு நம்பியிருப்பது போன்றது. இந்நிலையும் உணர்ச்சியும் அந்நாட்டில் உருவாயின. எனவே பொதுத் துறையில் (உள்ளாட்சிக் கழகங்களின் சார்பில்) கல்விக்கூடங்கள் எழுந்தன. தொடக்க நிலை கல்விக்கூடங்களோடு நிற்கவில்லை. அவர்களது அந்தக்கால நினைப்புகூட தொடக்கப்பள்ளி நிலையில் நின்று விடவில்லை. ஆகவே, உயர்நிலைப் பள்ளிகளையும் நிறுவினர். தோன்றிய கல்விக்கூடங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்துவிடவில்லை, எண்ணிக்கையற்ற கல்விக் கூடங்கள் எழுந்தன. உள்ளாட்சி மன்றங்கள் பள்ளிக்கூடம் நடத்தினால், இராச்சிய அரசுகள் கல்லூரிகளையும் பல்கலைக் கழகங்களையும்-பெரிய பெரிய பல்கலைக் கழகங்களையும் - நடத்துகின்றன.


இன்று வளமிக்க அமெரிக்க நாட்டில் மொத்தத்தில், கல்வித் துறையில்-எல்லா நிலைக் கல்வியிலும் - தனியார் துறையைவிடப் பொதுத் துறையில்தான் அதிக இடம் உண்டு; அதிக வசதிகள் உண்டு ; அதிக வாய்ப்புகளும் உண்டு. எனவே, கல்வி ஒடையில் உயர்கல்வி ஒடையில்கூட ஏழை எளியவர்கள், பொதுமக்கள் (பெருமக்கள் மட்டுமல்ல) நேராகப் பருக முடிகிறது. பொதுத்துறைக் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் அவற்றின் முதல்வர்கள், வேண்டுமென்றே, தெரிந்தே, மார்க்குக் குறைந்த பலரை, வாட்டி வதைக்கும் வறுமைச் சூழ்நிலையிலிருந்து வரும் பலரை, எழுத்தறியாக் குடும்பங்களிலிருந்து கல்லூரியை எட்டிப் பார்க்கும் பலரைச் சேர்த்துக் கொள்வதாக அமெரிக்காவில் கேள்விப்பட்டபோது திடுக்கிட்டேன்.


தேவைக்கு மேல் இடம் இருப்பதால் காலியாக விடுவதற்குப் பதில், கண்டவர்களைச் சேர்த்துக் கொள்கிறார்களோ என்ற ஐயம் எழுந்தது. அங்கும் கல்விக்கூட இட நெருக்கடி இருப்பதைப் புள்ளி விவரங்களோடு விளக்கினார்கள். இட நெருக்கடியிலும் மார்க்கில் உயர்ந்தவர்களோடு நிற்காமல, மார்க்கில் குறைந்தவர்களையும் தேடிப் பிடித்துச் சேர்த்துக் கொண்டால், பிந்தியவர்களுக்குப் பலன் உண்டா ? அவர்கள் பாஸ் ஆவார்களா ? அவர்களாலே கல்லூரிக்குக் கெட்ட பெயர் வராதா ? நல்ல மணிகளாகச் சேர்த்தால் அத்தனையும் தேறின என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாமே ! இப்படியெல்லாம் என் அறிவைக் கலக்கிக் கொண்டேன். அக்கலக்கத்தை அறிவித்தும் விட்டேன். விளக்கம் தந்தனர். விளகக்கத்தின் சுருக்கம் இதோ:


மனிதன் மாறும் இயல்பினன். அவன் வளர்வதும் உண்டு; தேய்வதும் உண்டு. வளர்வானோ தேய்வானோ என்பது அவன் அவன், முன்பின் சூழ்நிலையையும் அவன் அவன் பெறும் வசதிகளையும் ஊக்கத்தையும் பொறுத்தது. சமுதாயத்தின் கீழ்மட்டத்திலிருந்து, வேண்டுமென்றே மார்க்குக் குறைந்தவர்களைச் சேர்த்ததால், நல்ல பலனே விளைகிறது. அவர்கள் மார்க்குக் குறைந்தவர்கள் என்பது சேர்க்கிறபோதே தெரிகிறது. ஆபத்தான நிலையிலுள்ள நோயாளியை அடிக்கடி கவனிக்கும் மருத்துவர்போல், மார்க்குக் குறைந்தவர்களை அடிக்கடி கவனிக்கிறோம். அப்போதைக்கப்போது ஆலோசனை கூறி வழிக் காட்டுகிறோம். நம்பிக்கை ஊட்டுகிறோம். ஊக்குவிக்கிறோம். மற்றவர்களை விட அதிகம் படிக்க வைக்கிறோம். அறிவு வளர்ச்சி என்பது பெருமளவு முயற்சியின் விளைவே. எனவே, மார்க்குக் குறைந்தவர்களும் கல்லூரிகளில் கொடுக்கும் தனிக் கவனத்தால், வசதிகளால், தூண்டுதல்களால், தோழமையால் மற்றவர்களைப்போல் தேறிவிடுகிறார்கள்.


அவர்களில் தோற்பவர்களே இல்லையா ? கல்விக்கு முழுக்குப் போட்டுவிட்டுப் போய் விடுவோர் இல்லையா ? உண்டு. ஒரு சிலர் உண்டு. பள்ளிப் படிப்பின் இறுதியில் இலாயக்கற்றவர்களாக இருந்தவர்களின் எண்ணிக்கையில் சிறு விழுக்காடே கல்லூரியை விட்டுவிடுவோர் எண்ணிக்கை. அப்படி விலகுவோர், மனக்குறையோடு, கசப்போடு வெறுப்போடு. வஞ்சம் தீர்க்கும் போக்கோடு வெளியேறுகிறார்களா ? இல்லை. நம் சமுதாயத்திடம் வஞ்சம் இல்லை. எவ்வளவு வாய்ப்புகள் கொடுக்க முடியுமோ அவ்வளவும் கொடுத்தார்கள். வசதிகளையும் வழங்கினார்கள். கொடுத்த ஊக்கமும் கொஞ்ச நஞ்சமல்ல. மட்டந்தட்ட முயலவில்லை. மீண்டும் மீண்டும் தட்டிக் கொடுத்தும், நாமே தவறி விட்டோம். அவர்களைக் குறைசொல்ல என்ன இருக்கிறது ? சமுதாயத்தை வெறுப்பதற்கும் என்ன இருக்கிறது ? நம்மை நாமே நொந்து கொள்வானேன் ? முதல் முயற்சி முன்பின் தான் இருக்கும். மூன்று தலைமுறை கல்லூரிக்குச் சென்று வந்தபின், நாங்களும் நன்னிலைக்கு உயர்ந்துவிடுவோம். இப்படி எண்ணுகிறார்கள் பாதியிலே வெளியேறியவர்களும்.


சமுதாய ஒருமைப்பாட்டிற்குக் கொடுக்க வேண்டிய விலை, பின்னணியில் தயங்குகிறவர்களையும் தேடிப்பிடித்து, வாய்ப்பைக் கொடுத்து, வசதியைப் பெருக்கி, தட்டிக்கொடுத்து வளரவிடுவதே. அதற்காகும் செலவைக், கவனத்தை, உழைப்பைத் தாராளமாகக் கொடுப்பதால், ’பல நாட்டு நாடோடிகளின் சமுதாயமாக இருந்தும், அமெரிக்க சமுதாயத்தில் துரோகிகள் குறைவாக உள்ளனர். ’அமெரிக்கர்’ மிகமிக அதிகமாக உள்ளனர். நிறைய "மார்க்கு’ வாங்கியவர்கள் இடத்தை மற்றவர்கள் பறித்துக் கொள்ளலாமா ? இதையும் கேட்கத் தவறவில்லை நான். நோய் இல்லாத ஒருவருக்கு, உடம்பு நன்றாக இருக்கிறதா என்று மட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒருவருக்கு, எதற்கு ஆஸ்பத்திரி படுக்கை ? அவர் அப்போதைக்கப்போது வந்து போனாலே போதுமே. நோய்வாய்ப்பட்டிருப்பவரையல்லவா ஆஸ்பத்திரியிலே வைத்திருந்து வேளைக்கு வேளை பார்த்துக் குணப்படுத்த வேண்டும். 'மார்க்குப் பெரியவர்கள், எங்கிருந்தும் படித்துக் கொள்ளலாம் என்ற பதில், கிண்டலான அல்லது புரட்சிகரமானதொரு எதிர்காலக் கல்வித் திட்டத்தின் முளையா ? எதிர்காலமே காட்டட்டும்.


நம் கல்வி வாய்ப்பினையும் வசதிகளையும் மேலும் பெருக்க விரும்புகிறீர்களா ? பொதுத் துறைக் கல்விக் கூடங்களை ஏராளமாக்க ஆசையா? பரிந்துரை கூற ஆள் இல்லாத அவைகளிலும் முதல் தரமான வசதிகளைக் கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறிர்களா ?

கங்கை, யமுனை. கோதாவரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகளில் நீர்ப்பெருக்கை முழுக்க முழுக்கப் பாசனத்திற்கும் மின்சார உற்பத்திக்கும் பயன்படுத்தும் பெரும் பணியில் பெரும் கவனத்தைத் திருப்ப வேண்டுமென்று விரும்புகிறீர்களா ? நல்லது. பெரியவர்களிடம் சொல்லத் தவறாதீர்கள். ஆளை மாற்றுவதைப் பற்றிப் பரிந்துரை கூறுவதோடு, ஆற்று நீரை மாற்றுவதைப் பற்றியும் கூறுங்கள்.


கல்விக்கூடம்தோறும் பயிர்த்தொழிலுக்கு ஏற்பாடு செய்யக்கூடாதா ? இப்படி கேட்கிறதா உங்கள் அறிவு ? செய்யக்கூடும். செய்ய வேண்டும். மனம் உண்டானால் இடம் உண்டு.


பஞ்சாயத்து ஆட்சி வந்த பிறகு, ஊர்தோறும் உள்ள புறம்போக்கு ஊருக்குச் சொந்தம். அதிலே ஒரு பங்கை பள்ளிக்கூடத் தோட்டத்திற்கு ஒதுக்கி வைத்துப் பயன்படுத்தச் செய்தால் எவ்வளவு விளையும் ? உழைப்பிற்கு உயர்வளிக்கும் மனப்போக்கு மட்டுமல்ல விளையப் போவது; மலைமலையாக நெல்லும் கோதுமையும், வண்டி வண்டியாக வாழையும் கிழங்கும், காய்களும், கனிகளும் பயிரிட்டுக் குவிக்கலாம். ஆமாம், மலைக்காதீர்கள் !

இன்று கல்விக்கூடங்களின் எண்ணிக்கை சிலவல்ல, சில நூறுகள் மட்டுமல்ல, இலட்சோப இலட்சம். தமிழ்நாட்டில் மட்டும் முப்பத்து மூவாயிரம்-இவற்றில் உள்ளவர்களோ கோடான கோடி, கோடி கோடி கைகள் கூடிக்கூடி உழைத் தால், கோடி கோடி பொருள்கள், நாடி நாடி வருமே.






3. யார் காக்கிறார்கள்?

நாடு வளர, மக்கள் முன்னேற, உழைப்பு, பெரும் உழைப்புத் தேவை. பாரதப் பெரு நாடு வளர, கோடி கோடி கைளின் உழைப்புத் தேவை. கோடி கோடி கைகள், கூடிக் கூடி உழைத்தால் கோடி, கோடி நன்மை, தேடித்தேடி வரும் ; உண்மை.


ஆளை ஆள் தள்ளும் பணியிலும், கோடி, கோடி கைகள் ஈடுபடலாம். ஆளுக்கு ஆள் கைக்கொடுக்கும் தொண்டிலும் ஈடுபடலாம். இந்தியாவிற்கு எது தேவை ? தள்ளல் தொழில் புரியும் கைகளல்ல; தாங்கல் தொழில் புரியும் கைகள். கூடித் தொழில் புரியும் கைகள். அத்தகைய கைகளும் சிலபல போதா. கோடி, கோடி, கைகள் தேவை.


கோடி கோடி கைகளை உழைக்க வைப்பதெப்படி ? ஒன்றுபட்டு உழைக்க வைப்பதெப்படி ? ஒரு கையாயின் ஒருவர் உணர்ச்சி போதும். சில கைகளாயினும் வல்லான் ஒருவன் இயக்கிவிட முடியும். பல கைகளுக்கோ, வல்லார் சிலராவது வேண்டும். கோடி, கோடி கைகளை-இயந்திரக் கைகளையல்ல - மனிதக் கைகளை - இயக்க, ஒரு சேர இயக்கச் சிலரும் போதா : பலரும் போதா ; கோடி கோடி. மக்கள் விழிப்புப் பெற வேண்டும் ; எழுச்சியுற வேண்டும். ஆக்க உணர்ச்சி பெற வேண்டும் வளரத் துடிக்க வேண்டும். முன்னேற உழைக்க வேண்டும். அறிவிலும் வளரத் துடிக்க வேண்டும் ; உழைக்க வேண்டும்.


விழிப்பும் எழுச்சியும் தாமே விளைபவையல்ல. பயிரிடப்படுபவை. அவை சில நாள் பயிரல்ல ; பல நாள் பயிர்; அடுத்தடுத்துப் பயிரிடப்படுபவை ; பல நூறாயிரவரால் பயிரிடப்படுபவை.


நாட்டுப் பற்றும் உரிமை உணர்வும், காந்தியடிகளார் தலைமையில் பல்லாயிரவர் பாடுபட்டுப் பயிரிட்டவை , பல்லாண்டு பயிரிட்டவை அப்பயிரைத் தலைமுறைக்குத் தலைமுறை பயிரிட வேண்டும்.

காந்தியடிகளார் தீட்டிய திட்டங்களில் ஒன்று முதியோர் கல்வி. அதை மறக்கலாமா நாம் ? முதியோர் கல்வி, தானே வளருமா ? தலைமுறை தலைமுறையாக அறியாமை. நோயிலே உழலும் நம் மக்களிடையே, (அது நோயென்று உணராத நம் மக்களிடையே) முதியோர் கல்வி, தானே வளராது. அது வளர்க்கப்பட வேண்டும். இரண்டொருவரால் அல்ல, பல்லாயிரவரால்.

பன்னிர் தெளித்துச் சேடை கூட்ட முடியாது வெந்நீர் பெய்து காடு எரியாது. முதியோர் கல்விப் பயிருக்கும் சிறு சிறு தெளிப்புப் போதாது. பல்லாயிரவர் தொண்டு தேவை. அறியாமையைச் சுட்டெரிக்கவும் பல்லாயிரவர் பாடும், ஆதரவும், ஊக்கமும் தேவை.


பல்லாயிரவர்-நாட்டுப் பற்றுடைய பல்லாயிரவர் - தொண்டர் பல்லாயிரவர்-தொண்டை. பெரியவர்களிடம் ஒட்டிக் கொள்வதற்கு வழியாக அல்லாமல், தொண்டிற்காகவே மேற்கொள்ளும் பல்லாயிரவர்-கல்லாத முதியோரிடம் விழிப்பையும் எழுச்சியையும். 'கற்றுக் கொள்ளாமல் ஓய்வதில்லை, தலை சாய்வதில்லை', என்ற பேருணர்ச்சியையும் தூண்டவல்ல, பல்லாயிரவர் பாடுபட்டால், நம் நாட்டிலும், அறிவு, வெள்ளம்போல் பெருகும். அறிவு வெள்ளமே பள்ளத்தில் கிடக்கும் பலரையும் தூக்கிவிடும் : உயர்த்தி விடும். முதியோர் கல்வித் தொண்டருக்கு ஏனோ பஞ்சம் ? இவ்வளவு விரைவிலா காந்தியத் திட்டத்தை மறந்து விட்டோம் ; இவ்வெண்ணங்களை எழுப்பிய காட்சிக்கு வாருங்கள்.


தாஷ்கண்ட் நகரம். முன் இரவு நேரம். ஒன்பது மணி. இலையுதிர் காலத்தின் தொடக்கம் பூங்காக்களில், பசும் புல் தரை மாறவில்லை. இங்கும் அங்கும் போடப்பட்டிருந்த இருக்கைகள் சில்லிட்டு விடவில்லை. காற்று மெல்ல வீசிக் கொண்டிருந்தது, அதிலே குளுமையும் இனிமையும் இருந்தன. அஞ்சுமளவு கடுங்குளிரும் சீறலும் இல்லை. வானத்திலே விண்மீன்கள் மின்னின. திங்களும் தவழ்ந்தது. இவ்வினிய சூழ்நிலையில் அந்நகரப் பூங்காக்கள் திறந்து கிடந்தன. அவை எங்களை வா, வா’ என்று அழைத்தன. எங்களை மட்டுமா, யாரையுமே, வெளியே வந்து, இருந்து, மகிழ அழைக்கும் காலமும் சூழலும் அப்போது. பல்லைக் கடித்துக்கொண்டு அவற்றை விட்டு விலகிப்போனோம். நெடுஞ்சாலையொன்றில், வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தோம். கண்ட காட்சியும், கேட்டு அறிந்த தகவலும், எழுந்த எண்ணங்களும் இதோ உங்கள் முன்னே.


ஒரு மாடிக் கட்டிடத்தின் தெருவோர அறையொன்றில், முப்பது நாற்பது பேர் அமர்ந்திருந்தனர். அத்தனை பேரும் பெண்கள். இளங்கன்னியரல்லர். தள்ளாதவர்களா ? அல்லர். நாற்பது, ஐம்பது வயது மதிக்கத்தக்க மாதர்கள். அம்மாதர்களுக்கு எதிரே ஒரு மாது வீற்றிருந்தார். அவர் பக்கத்திலே கரும்பலகை ஒன்றிருத்தது. அது மெய்யாகவே பெயருக்கேற்ப கருப்பாயிருந்தது. அதிலே ஏதோ எழுதிப் போடப்பட்டிருந்தது. மாதர்களெல்லாரும் எதையோ பார்த்துப் படித்துக் கொண்டிருந்தார்கள். இக்காட்சியைக் கண்டோம். இக்கூட்டத்தைப் பற்றிக் கேட்டறிந்தோம். அப்போதே கேட்டறிந்தோம். இக்கூட்டம் அரசியல் கூட்டமல்ல கருத்தரங்கல்ல. இலக்கியச் சொற்பொழிவுமல்ல. இலக்கிய நோட்டம் என்ற திரை மறைவு அரசியல் ஊடுருவலுமல்ல. சமயச் சொற்பொழிவின் பேரால் நடக்கும் ஆட்சி எதிர்ப்பு முயற்சியும் அல்ல. பின் என்ன ? கல்வி வகுப்பு. பாலர் கல்வி வகுப்பல்ல. தாய்மொழிக் கல்வி வகுப்பல்ல. தாய்மொழிப் புலமை வகுப்பல்ல ; பிற மொழிக் கல்வி வகுப்பு. உஸ்பெக் மாதர்கள்-முதியோர்-படிக்கும் ஜெர்மன் வகுப்பே நாங்கள் கண்டது. அம்மாதர்கள், ஏற்கெனவே தாய்மொழியாகிய உஸ்பெக்கையும் சகோதர மொழியாகிய இரஷிய மொழியையும் கற்றுத் தேறியவர்கள். அலுவலகங்களிலும் தொழிற் கூடங்களிலும் பணிபுரிகிறவர்கள்.


’படியுங்கள், படியுங்கள். மேலும் படியுங்கள்’ என்ற நல்லுரையைப் பின்பற்றி மேலும் மேலும் புதிது புதிதாகக் கற்றுக்கொள்பவர்கள், அம்மாதர்கள். தங்கள் அன்றாட அலுவல் தீர்ந்த பின், அக்கடா என்று வீட்டிலே விழ்ந்து கிடக்காமல் அல்லது இன்றே நன்று ; எனவே இன்றே களித்திரு என்று பூங்காக்களில் பூரித்துக் கிடக்காமல், ’அறிவின் அளவே வாழ்வும்’ என்பதை உணர்ந்து, இரவு நேரங்களில், வேளைக் கல்லூரியில் : சேர்ந்து, புது மொழி யொன்றைக் கற்கும் முதிய மாணவிகள் அவர்கள். அவர்களிலே பலருக்குக் குடும்பப் பொறுப்பும் உண்டு. இத்தனைக்குமிடையிலேதான், அவர்கள் தொடர்ந்து கற்கிறார்கள்; முதுமையிலும் கற்கிறார்கள். இரவுதோறும் கல்லூரியில் கற்கிறார்கள் பிற மொழிகளைக் கற்கிறார்கள்- மொழித் தீண்டாமையை நினைவிலும் கொள்ளாது கற்கிறார்கள்.


நாங்கள் கண்டது காட்சிக்காக நடக்கும் கல்லூரியா ? இங்கும் அங்கும் பெருநகர்களின் நெடுஞ்சாலைகளில் வெளி நாட்டவர்களுக்குக் காட்ட நடத்தப்படும் கல்லூரியா ? இல்லவே இல்லை. வேளைக் கல்லூரிகளும், வேளைப் பள்ளிகளும் எங்குமுண்டு, சோவியத் ஒன்றியத்தில்; ஏராளமாக உண்டு. அவற்றில் சேர்ந்து, தொடர் கல்விப் பயன்பெறும் தொழிலாளர்கள். அலுவலர்கள், பட்டதாரிகள் இலட்சக்கணக்கினர். இந்த ஈடுபாட்டில் ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்லர் பெண்கள். முதியோர் கல்வி பெறும் -எழுத்தறிவல்ல-தொடர் கல்வி பெறும், எண்ணற்ற மாதர்களில் நாற்பது பேரையே நாங்கள் தாஷ்கண்ட் இரவுக் கல்லூரியில் கண்டோம்; ஜெர்மானிய மொழி கற்கும்போது கண்டோம்.


மூன்று வாரங்களுக்குப் பின் சென்னைக்கு வந்து சேர்ந்தேன். தமிழ்நாட்டில் பொறுப்புள்ள பணியொன்றில் இருந்த இரஷியர் ஒருவரைக் கண்டேன். அவருக்கு வயது அறுபதுக்கு அருகில். அவர் பொருளாதாரத் துறையில் டாக்டர் நிலைக்குப் பட்டம் பெற்றவர். அவர் கௌரவ டாக்டர் அல்லர். படித்துத் தேறிப் பட்டம் பெற்றவர். அவர் ஆதியில்-அதாவது இளமைப் பருவத்தில்-படித்து முடித்தது எவ்வளவு ? நான்காம் வகுப்பு வரையில், ஜார் ஆட்சிக் காலத்தில், ஏழ்மை காரணமாக, நான்காவதோடு நின்றுவிட்ட அவர் சோவியத் ஆட்சிக் காலத்தில், மீண்டும் வேளைப் பள்ளியில் சேர்ந்தார். பள்ளியிறுதி தேறியதும் வேளைக் கல்லூரியில் சேர்ந்து முதற் பட்டம் பெற்றார். ஊக்கம் அதிகமாயிற்று. 'டாக்டர்’ பட்டத்திற்கும் வேளைக் கல்லூரியிலேயே படித்தார். பொருளியல் மேதையாகத் தமிழ்நாட்டிற்கு வந்தார்.


'கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு!' இது நான் கற்ற தமிழ்ப் பாடம் ; நாட்டு மக்களிடமிருந்து ஒளிக்கும் பார்க்கும் பாடம்.


'யாதானும் நாடாமால் ஊராமால், என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு’- இது தமிழ் மறை; நம் மறை; இதை ஒத யாருக்கு உரிமையுண்டு? 'இளமையிலும் இதோ( தில் தேர்ச்சிச் சீட்டுப் பெற்ற பின்னும் கண்விழித்துப் படிப்பானேன்? படிக்காத மேதை பார்த்ததில்லையா ? என்கிற போக்கிலே, நடக்கிற நமக்கா? அப்போக்கினையே வளர்க்கிற நமக்கா ? அல்லது இரவு பகல் பாராதே, முடிந்த போதெல்தாம் படி, தாய் மொழியையும் படி, அறிவு எங்கிருந்தாலும் அதைத் தேடிக்கொண்டு வா என்று சொல்லுவதோடு நில்லாமல், அவ்வழி வளர்கிற, சாந்துணையும் கற்கிற, சோவியத் மக்களுக்கா ? யாருக்குச் சொந்தம குறள் ? யார் காக்கிறார் குறள் நெறியை ?






4. ஒரு படிப்பினை

தாஷ்கண்ட் மகளிர் கல்வி ஆர்வத்தைக் கண்டேன் உங்களுக்கும் காட்டினேன். முதிய மகளிர், வெறும் வீட்டாட்சியர் அல்லர்; பகலெல்லாம் தொழில் புரிந்த மாதர், இரவுக் கல்லூரியில் சேர்ந்து, புதுமொழி ஒன்றைக் கற்கும் காட்சியினைக் கண்டேன். யான் பெற்ற அறிவு இன்பத்தை உங்களுக்கும் அளித்தேன்.


இன்று தாஷ்கண்ட் நகரிலிருந்து, மாஸ்கோவிற்கு இட்டு செல்லுகிறேன், வாரீர். உலகப் பெருநகரங்களில் ஒன்றாகிய அங்கு நடந்த நிகழ்ச்சிகள், வரலாற்றுப் புகழ் பெற்ற நிகழ்ச்சிகள் எத்தனை, எத்தனையோ! நான் கண்ட நிகழ்ச்சியோ, எளிய நிகழ்ச்சி. ஆனால் அறிவுடையோர் அறிய வேண்டிய நிகழ்ச்சி. இரஷியர் ஆட்டும் சுண்டு விரல் கண்டு வையம் ஆடப் போகிறதோ என்று அஞ்சுவோர் அனைவரும் உணர வேண்டிய நிகழ்ச்சி.


மாஸ்கோ நகரில் பள்ளிக்கூடம் ஒன்றைக் காணச் சென்றோம். பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அங்கு நிறைய இருந்தன. எனவே மூன்று மணிகள் ஒடிவிட்டன.

பின்னர், வெளியே வந்தோம். குளிர்காற்று சீறிக் கொண்டிருந்தது. மாலை வெயில் விலகிவிட்டது. எங்களை அழைத்து வந்த வாடகைக் கார், பள்ளியின் எதிரே. தெருவோரம் காத்துக்கொண்டிருந்தது. தெருவில், மக்கள் கூட்டம் அதிகம்; வாகனப் போக்கு வரத்து நிறைய.


இந்நிலையில், நான் முதலில் காரை நெருங்கினேன், கதவைத் திறக்க முயன்றேன் ; முடியவில்லை. அது பூட்டிக் கிடந்தது. கண்ணாடிகளும் உயர்த்தப்பட்டிருந்தன. காரோட்டி தம்மிடத்தில் உட்கார்த்திருக்கக் கண்டேன். எனவே, கதவை மெல்லத் தட்டினேன். அது, அவர் செவியில் விழவில்லை. அவர் மெய்மறந்து எதையோ படித்துக் கொண்டிருந்தார். சில நொடிகளில் எங்கள் குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் வந்துவிட்டனர். எங்களோடு பயணஞ் செய்யும் இரஷிய மொழிபெயர்ப்பாளர். கதவைத் தடதடவென்று ஓங்கித் தட்டினர். கரோட்டியின் காதும் கேட்டது. சட்டென்று, கையிலிருந்த நூலை மூடி வைத்தார். கதவுகளைத் திறந்தார்.


நாங்கள், உரிய இடங்களில் அமர்ந்தோம். கதவுகள் மூடப்பட்டன. கார் எங்கள் ஒட்டலை நோக்கிப் பிறந்து சென்றது.


காரோட்டி மெய்மறந்து படிப்பதைக் கண்டதும், எனக்கு ஓர் ஐயம் மின்னிற்று. சந்தடி மிகுந்த இச்சாலையில். மக்கள் நடமாட்ட வேடிக்கை நிறைத்த இந்தச் சாலையில், இவ்வளவு ஈடுபாட்டோடு படித்த நூல் எதுவாக இருக்கும் ; எது பற்றி இருக்கும்? காதல் கதையோ? போர்ப் பரணியோ ? இதுவே என் ஐயம். இந்த ஐயத்தைப் போக்கிக் கொள்ளத் துணிந்தேன். அந்நூல் என்ன நூல் என்று, கேட்டுச் சொல்ல முடியுமா என்று, மொழி பெயர்ப்பாளரை ஆங்கிலத்தில் வினவினேன். அவர் காரோட்டியை இரஷ்ய மொழியில் வினவினார். அது விஞ்ஞான நூல் என்று பதில் வந்தது. "அதைப் பார்க்கலாமா?" என்றேன். "'ஆகா'வென்று நூலைக் கொடுத்துவிட்டார். புரட்டிப் பார்த்தோம். நிறையப் படங்கள். என்ன படங்கள்? கவர்ச்சிப் படங்களா ? இல்லை. கவர்ச்சிப் படங்களால் பிழைக்கத்தான் நாம் பிறந்திருக்கிறோமே ! பின் என்ன படங்கள் ? விஞ்ஞானச் சோதனைப் படங்கள். கண்ட தாளிலா? இல்லை. நல்ல தாளில் அழகான அச்சு தெளிவான விளக்கப் படங்கள் தென்பட்டன. விஞ்ஞான நூலென்று புரிந்துகொண்டோம். பாட்டாளி படிக்கும் அவ் விஞ்ஞான நூல் எத்தகையது? விளையாட்டு விஞ்ஞானமா ? தொடக்க நிலை விஞ்ஞானமா? இந்தக் கேள்விகளைக் கிளப்பினேன்.


மொழிபெயர்ப்பாளர் என் கையிலிருந்த நூலை வாங்கினார். சில வினாடிகள் புரட்டினார். "இது கல்லூரி மட்ட விஞ்ஞானம்" என்று பதில் உரைத்தார். காரோட்டி கல்லூரி விஞ்ஞானத்தைக் கற்பதா? கல்லுாரிக்குள் அல்லாது தெருவில் தொழிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது கற்பதா என்று வியந்தேன். அவர் கல்லூரி மாணவரா என்று எல்லையற்ற வியப்போடு கேட்டேன்.


"ஆம்; இப்போது கல்லூரிகளுக்கு விடுமுறை கல்லூரிகள் திறந்ததும். மாலைக் கல்லூரி ஒன்றில் சேர்ந்து விஞ்ஞானம் கற்கப் போகிறேன். ஆகவே, கல்லூரிக் கல்விக்கு முன் கூட்டியே, ஆயத்தஞ் செய்து கொள்கிறேன்" என்று காரோட்டி பதில் கூறினார். வருமுன் கற்போர், இரஷிய மாணவர்; பாட்டாளி மாணவர்கூட என்பதை அறிந்து உண்மையில் மகிழ்ந்தேன்.

இந்நிகழ்ச்சி என் சிந்தனையைத் தூண்டிற்று. நமக்கு ஓர் அரிய படிப்பினையன்றோ ? ஏழ்மையுற்ற நம் நாட்டிலே நாளெல்லாம் பாடுபட்டாலும் கிடைப்பது அரை வயிற்றுக் கஞ்சியே. அறிவாற்றலும் சேர்த்தால்தானே உழைப்பின் பயன் பெருகும் ? இவ்வறிவாற்றலைப் பெறுவது எவ்வாறு ? பகலெல்லாம் உழைப்பவர்களும் இரவில் பள்ளி யில் தொழில் பயின்றால் அறிவு வளரும் ; ஆற்றல் மிகும். உழவர்களும் ஆலைத் தொழிலாளிகளும் தொழில் பற்றிய அறிவைப் பெருக்க, ஒய்வு நேரத்தைப் பயன்படுத்த வேண்டும். அத்தகைய பகுதிநேரப் படிப்பால் அறிவு வளர, ஆற்றல் பெருகும். ஆற்றல் பெருக, தொழில் சிறக்கும். தொழில் சிறக்க, நாடு வளம்பெறும். நமக்கு வேண்டியதும் அது தானே ?






5. லெனின் நூலகம்

மாஸ்கோ நகரத்துக் காரோட்டியின் கல்வி ஆர்வத்தை வியந்தவாறே, எங்களுடன் வந்த மொழி பெயர்ப்பாளரைப் பார்த்து. " இந்த விஞ்ஞான நூல், கரோட்டியே சொந்தமாக வாங்கியதா ? அல்லது இரவலாகப் பெற்றதா ?" என்று வினவினேன். அதை அவர் காரோட்டியின் இரஷிய மொழியில் கேட்டார். காரோட்டியின் பதிலை ஆங்கிலத்தில் கூறினார். பதில் என்ன ?

"நான் படிக்கும் இவ்விஞ்ஞான நூல் நூலகத்திலிருந்து இரவலாகப் பெற்றதல்ல. விலைபோட்டு வாங்கியது.


இதோ பாருங்கள் எவ்வளவு உறுதியான கட்டு, விளக்கமான படங்கள், உயர்ந்த படங்கள் அத்தனையும் அழகான அச்சிலே; உயர்ந்த தாளிலே. இவ்வளவு உயர்ந்த நூலுக்குப் போட்டிருக்கும் விலையோ மிகக் குறைவு" எந்த நாட்டிலும் இவ்வளவு மலிவாக உயர் விஞ்ஞான நூல்கள் கிடைக்கா. எல்லோரும் வாங்கக்கூடிய அளவுக்கு குறைந்த விலையிலேதான் எங்கள் நாட்டு நூல்கள் வெளியாகின்றன.


இந்த பதில் இட்டுக் கட்டிப் பேசிதல்ல; உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை. நம் நாட்டில் பதினைந்து ரூபாய்க்கும் வாங்க முடியாத நூல்களை அங்கு மூன்று நான்கு ரூபாய்களுக்கு வாங்கிவிடலாம் என்பதை விசாரித்து அறிந்து கொண்டோம். நூல்களை மிக மலிவாக வெளியிட எப்படி முடிகிறது? அரசினர், ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தி இலவசமாக எழுதி வாங்கிக் கொள்வதாலா? அல்லது பெயரளவில் ஏதோ சொற்பத் தொகை கொடுத்து மலிவாக கையேடுகளைப் பெறுவதாலா? அல்லது நூல் வெளியீட்டுத் தொழிலாளிகளுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பதாலா? எந்த உபாயங்களைக் கைக்கொண்டு விஞ்ஞான நூற்களைக்கூட மலிவாக விற்கிறார்கள் என்று கேட்டோம்.


காரோட்டி பதில் கூறுவதற்கு முன், மொழிபெயர்ப்பாளர் பதில் கூறினார்.

" இந்நாட்டில் நூலாசிரியர்களுக்கு நல்ல ஊதியம். உயர்ந்த 'இராயல்டி,' வெளியீட்டு வேலைக்காரர்களுக்கும், மற்ற வேலைகளில் உள்ளது போன்றே நல்ல சம்பளமே"

பதில் முடியவில்லை. இதற்குள் எங்களில் ஒருவர்- நானல்ல - குறுக்கிட்டார்.

"அப்படியானால் எப்படித்தான் இந்த அற்புதம் நிகழ்கிறது?" என்று வியப்புடன் வினவினார்.


" இதில் அற்புதம் ஒன்றுமில்லை. நூல் வெளியீடு இங்கு ஒரு வாணிபமல்ல; மக்களது படிப்புப் பசியைப் பயன்படுத்தி தனியார் யாரும் நூல் வெளியிட்டு, வாணிகம் செய்து குவிக்க முடியாது. நூல் வெளியீட்டுப்பணி, பொதுத்துறையில் உள்ளது நூல் வெளியீட்டிற்காக, ஒவ்வொரு குடியரசிலும் பொதுத்துறை அமைப்பு உண்டு. அவை அரசினரால் அமைக்கப்பட்டாலும் தன்னுரிமை பெற்றவை. பல்துறை மேதைகளைக் கொண்டவை. இலாபக் கண்ணொட்டம் அற்றவை.


" ஆகவே ஒவ்வொரு நூல் வெளியீடும் கட்டுபடியாக வேண்டுமென்ற குறியோடு விலை போடவேண்டிய நிர்ப்பந்தம் அற்றவை. வெளியிட்ட பல நூல்களுக்கும் சேர்த்து, ஒட்டு மொத்தத்தில், போட்ட முதல் வந்தால் போதும் என்ற அடிப்படையில் சிறப்பாகப் பணிபுரிகின்றன, இவ்வெளியிட்டுக் கழகங்கள்.


"மேலும், நூல்களை ஐந்நூறு ஆயிரம் படிகள் என்ற குறைந்த எண்ணிக்கையில் அச்சிடுவதில்லை. பொதுமக்களும் 'ஆளுக்கொரு நூல் நிலையம்' என்ற கருத்தோடு சொந்தமாக நூல்களை வாங்கச் சுணங்காது சுடச்சுட வாங்குவதால் நூல்களை முதல் பதிப்பிலேயே பதினாயிரக்கணக்கில் அச்சிடுகிறார்கள். பதிப்பிற்குப் பதிப்பு ஏராளமான படிகள். விரைவான விற்பனை, 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும்’ சுரண்டல் கண்ணோட்டம் அற்ற நிலை. இவையே விலைக் குறைவிற்கு உள்ள முக்கிய காரணம். நாங்கள் பெற்ற பதிலின் சாரம் இது.


பதினாயிரக்கணக்கில் வாங்கிப் படிக்கப்படும் நூல்கள் எவை ? அக ஆயிரமா? புற ஆயிரமா? காதற் கதைகளா? போராட்ட நவீனங்களா ? பொழுது போக்குக் கதம்பங்களா ? விகடச் செண்டுகளா ?

இத்தகைய ஐயங்கள் எழுந்தன எங்களுக்கு. அவற்றை வெளியிட்டோம்.

"இரஷிய நூல் வெளியிட்டுக் கழகத்திற்குச் செல்லும் போது நினைவு படுத்துங்கள். அங்குள்ளவர்களிடம் இதைப் பற்றி வினவுவோம்" என்றார் மொழி பெயர்ப்பாளர்.


நாள்கள் சில சென்றன. இரஷிய நூல் வெளியீட்டுக் கழகத்திற்குச் சென்றோம். அதன் நடைமுறையைப் பற்றிப் பலப்பல தெரிந்து கொண்டோம். எங்கள் முந்தைய ஐயங்களை, மொழி பெயர்ப்பாளரே வெளியிட்டார்.

"பொழுது போக்கு நூல்களும், நகைச்சுவை நறுக்குகளும் படிக்காதவர்கள் அல்லர் சோவியத் மக்கள், போராட்டக் காவியங்களைக் கற்று, வீறு கொள்ளாதவர்கள் அல்லர் அவர்கள். காதற் கதையென்று, பச்சை பச்சையாக, பாலுணர்ச்சி யூட்டுப வையல்ல, சோவியத் நூல்கள் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.


"ஒட்டப் படிப்பு நூல்களாகிய இவற்றை ஒதுக்கிவிடவில்லை சோவியத் மக்கள். ஆயினும் இவற்றையே சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கும் செக்கு மாடுகளாகவுமில்லை அவர்கள் அவர்கள் படிக்கிற நூல்களிலே நூற்றுக்கு எண்பது விழுக்காடு 'சீரியஸ்' நூல்கள். அதாவது ஊன்றிப் படிக்க வேண்டியவை' என்று அவ்வெளியீட்டுக் கழக அதிகாரி ஒருவரிடமிருந்து தெரிந்து கொண்டோம்.


விகடத்துக்கு அப்பால் விரியாத நம் படிப்பும் கிளு கிளுப்பிற்கு மேல் தெரியாத நம் காவியமும் என்றைக்கு மாறுமோ என்று ஏங்குகிறீர்களா ? ஏங்கிப் பயன் என்ன ? விழுங்குணவை விழுங்குவதற்கும் உணர்ச்சியற்ற சுகவாசிகளாயிற்றே நாம். துரங்கி முன்னேற முடியாது ஐயா, முடியாது !

மாஸ்கோ நகரத்திலே ஒரு பெரிய நூலகம் உள்ளது, அதன் பெயர் லெனின் நூலகம். உலகப் புகழ் பெற்ற, உலகத்தின் மிகப்பெரிய நூலகங்கள் மூன்று அவையாவன : இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் மியூசிய நூலகம், வாஷிங்டனிலுள்ன காங்கிரஸ் நூலகம், மாஸ்கோவிலுள்ள லெனின் நூலகம், முதல் இடத்திற்காக இம்மூன்றிற்கும் பலத்த போட்டி என்று கேள்விப்பட்டோம். ஆகவே, மாஸ்கோ லெனின் நூலகத்தைக் காண விழைந்தோம். அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு நாள் முற்பகல் முழுவதும் அங்கு இருந்தோம்.


லெனின் நூலகம் பல அடுக்குக் சட்டிடத்தில் உள்ளது. இது பொது நூலகம். பொது மக்கள் அனைவரும் இதை பயன்படுத்தலாம். நூல்களை மட்டுமா படிக்கலாம் ? நூல் களோடு பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் படிக்கலாம். வீட்டிற்கும் நூல்களை எடுத்துக்கொண்டு போய்ப் படிக்கலாம்.

நூல்கள், பல மாடிகளில், பல பகுதிகளில், ஒழுங்குபடுக்தி, அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நூல் ஒன்றை வேண்டுவோர், தாமோ, துலகப் பணியாளரோ, அதைத் தேடிச் சென்று எடுத்து வருவதென்றால், காலதாமதமாகும். அதற்குப் பரிகாரம் கண்டுள்ளனர்; நூல் விரும்பி, தாம் விரும்பும் நூலைப் பற்றிய தகவலை மைய இடத்திலுள்ள பணியாளர்களில் ஒருவரிடம் அறிவிப்பார். அப்பணியாளர் அதற்கான குறிப்பை எழுதி, சுழலும் தொட்டில் ஒன்றில் வைப்பார். அத்தொட்டில் கீத் மாடத்திலிருந்து, உச்சி மாடம் வரை சுழன்று கொண்டே இருக்கும். ஒவ்வொரு மாடத்திலும் தொட்டில் நிற்க இடமொன்று இருக்கிறது. தொட்டில் சில வினாடி நிற்கும் அங்கே ஒரு பணியாளர் இருப்பார். அப்பணியாள், வருகிற குறிப்புகளில் தன் மாடிக் குறிப்புகளை எடுத்துக் கொள்வார்.


தொட்டில் அடுத்த மாடிக்குச் சென்றுவிடும், உச்சிவரை சென்று திரும்பும் ; திரும்பும்போது ஒவ்வொரு மாடத்திலும் நிற்கும். மேற்சென்று திரும்புவதற்கு இடையில் குறிப்புகளின்படி கிடைத்த நூல்களைத் தொட்டிலில் இடுவார்கள், அலை கீழ் மாடத்திற்குச் செல்லும் ; அங்கு அவற்றை எடுத்துக் கேட்பவர்களுக்குக் கொடுப்பார்கள்.


அங்கு வரும் படிப்போர் கூட்டத்தையும் பல மாடிகளில் எத்தனையோ பெரும் பரப்புகளில் பல இலட்சக்கணக்கான நூல்கள் பகுத்து, ஒழுங்குபடுத்தப்பட்டு வைக்கப்பட்டிருப்பதையும் நேரில் கண்டோரே, லெனின் நூலகத்தில் அன்றாடம் நடக்கும் நூல் வழங்கு வேலையை, இயந்திர இயக்கமின்றிச் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

லெனின் நூலகத்தில், எத்தனை மொழிகளில் நூல்களும் வெளியீடுகளும் உள்ளனவென்று வினவினோம், நூற்று அறுபது மொழிகளில் உள்ளனவென்றார் நூலகத்தைச் சேர்ந்தவர். பளிச்சென்று கொடுக்கும் இப்பதிலில், உண்மை எவ்வளவோ, 'திறமை' எவ்வளவோ என்ற ஐயப்பாடு மின்னிற்று. எனவே என்னென்ன மொழிகளில் என்று மேலும் சோதித்தோம். அந்த நூற்று அறுபது மொழிகளின் பட்டியலையே எடுத்துக் கொடுத்துவிட்டார்.


தமிழ் மொழி இடம் பெற்றுள்ளதா என்று துழாவினேன்; நம் தமிழ் மொழியும் பட்டியலில் இருந்தது. அங்குள்ள தமிழ் நூல்களும் சஞ்சிகைகளும் நம்முடைய அன்பளிப்பல்ல. விலை கொடுத்து வாங்கியவை என்று அறிந்து மகிழ்ந்தேன்.

லெனின் நூலகம், வெறும் நூலகமாக மட்டும் பணியாற்ற வில்லை. பத்திரிகைப் படிப்பகமாகவும் பணியாற்றுகிறது என்று தெரிந்து கொண்டோம்.


அங்குப் பல மொழிச் செய்தித்தாள்களும், வார இதழ்களும், மாத மலர்களும் இருந்தன. பொது நூலகத்தில் பத்திரிகைப் படிப்பகமும் இருக்க வேண்டுமா என்ற என் கேள்விக்கு, 'பொது நூலகத்திலிருந்து விரட்டப்பட வேண்டியவை அல்ல, செய்தித்தாள்களும் சஞ்சிகைகளும்' என்று பதில் கிடைத்தது இத்தகைய பொது நூலக வசதி, மாஸ்கோவில் மட்டுமா ? பிற பகுதிகளில் உண்டா ? பொதுநூலக வசதி, நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் உண்டு. நான்கு இலட்சம் பொது நூலகங்கள் அன்று இருந்தன.


லெனின் நூலகத்தில் தமிழ் சஞ்சிசைகள் இருக்கும் பகுதியைக் காண விழைந்தேன். அங்கு அழைத்துச் சென்றார்: மேசைகளின் மேல், சில தமிழ்ச் சஞ்சிகைகள் இருந்தன. அவை ஏற்கனவே, அறிமுகமானவை. அவை, பொது உடைமைக் கொள்கைச் சார்புடையனவல்ல. என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. நம் நாட்டு முதலாளித்துவ சஞ்சிகைகளே அவை.







 




6 views0 comments

Comments


bottom of page