டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு
பொருளடக்கம்
6. லெனினும் காந்தியும் …. 34
7. பேச்சுரிமையில் பெருமிதம் …. 43
8. லெனின் கிராடில் …. 51
9. மெய்யான செல்வம் …. 57
10. இலண்டனில் …. 66
6. லெனினும் காந்தியும்
'மாகடல் மடை திறந்தால் போன்று, கல்வி வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறதே, சோவியத் ஒன்றியத்தில் இளமையில் மட்டுமல்லாமல் முதுமையிலும் ஆழ்ந்து கற்கின்றனரே ! பாட்டிகளும் பாட்டாளிகளும் படிப்பாளியாக விளங்குகின்றனரே. எங்கெங்கு நோக்கினும் எல்லார்க்கும் கல்வி, நல்ல கல்வி, ஒன்றான கல்வி என்ற அறிவொளி வீசுகிறதே ! எப்படித்தான் விளைந்ததோ இந்நிலை?' என்று வியந்தோம். அந்த 'அற்புத'த்தைக் கண்டு திகைத்தோம். யார் சென்று கண்டாலும், இப்படியே வியக்கத்தான் வேண்டும் ; திகைக்காமல் இருக்க முடியாது.
மெய்யாக இது 'அற்புத'மா? 'அற்புத'மாயின், அதற்காகக் காலமெல்லாம் காத்திருப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ? இப்படிப் பல முறை குழம்பினோம். சில நாள் களுக்குப் பின், தெளிவு பிறந்தது.
சோவியத் ஒன்றியத்தில், கல்விக்கூடந்தோறும், லெனின் படமே அங்குச் செல்வோரை, முதன் முதல் வரவேற்கும், அப்படமும் பெரிய அளவில் இருக்கும். அதைக் கண்ட பிறகே, உள்ளே செல்ல இயலும். நாங்களும், ஒவ்வொரு கல்விக் கூடத்திலும் அப் பெரியாரின் படத்தைப் பார்த்துவிட்டே உள்ளே சென்றோம். அப்படத்தின் அடியில் அவர்கள் மொழியில் பளிச்சென்று எழுதியிருப்பதைப் பார்த்தோம். ஒரு முறையன்று. பலமுறை பார்த்தோம். எழுதியிருப்பது என்ன என்று கேட்கவில்லை. லெனினது பெயரையோ, அவரது சிறப்புப் பெயரையோ எழுதியிருப்பார்கள் என்று நினைத்தோம். அது என்ன என்று கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமே எழவில்லை. 'கடா கன்று போட்டது என்று கேட்டதும், கட்டி விடுகிறேன' என்று பணிவிலே பழக்கப்படுத்தப்பட்ட அரசினர். ஊழியர்கள் அல்லவா. நாங்கள் ? நாள்கள் சில சென்றன.
ஒருபோது, எங்கள் குழுவில் ஒருவராகிய அம்மையார் லெனின் படத்தைக் காட்டி, அதன் அடியில் எழுதியிருப்பது என்ன என்று திடீரெனக் கேட்டுவிட்டார். பதில் வந்தது. ஆங்கிலத்தில் எழுதியிருந்தது என்ன தெரியுமா? படியுங்கள்! படியுங்கள்! மேலும் மேலும் படியுங்கள் லெனின் படத்தின் அடியில் எழுதியிருந்தது இதுவே.
சோவியத் புரட்சி வீரர் லெனின் எத்தனையோ பேசியிருப்பார்! எத்தனையோ எழுதியிருப்பார்! பொதுஉடமைக் கொள்கைகளைப் பலமுறை விளக்கியிருப்பார்! அவற்றிலே ஒன்றை-ஒரு மந்திரத்தை-ஒரு முழக்கத்தை-ஒர் ஊக்க ஒலியைப் போடாமல்-இதை எழுதிப் போட்டிருப்பது ஏன் ? கல்விக்கூடங்களுக்கு இதுவே பொருத்தம் என்பதாலா? பொது உடைமைப் பால் ஊட்டுவதற்கு பதில், பொறுப்புள்ள தொடக்கநிலை ஆசிரியர் கொடுக்க வேண்டிய தண்ணிரையா கொடுப்பது? இவ்வையங்களையெல்லாம் கொட்டிவிட்டோம். அது நல்லதாக முடிந்தது. சோவியத் ஒன்றியத்தில் கண்ட கல்வி 'அற்புதத்தின் ஆணிவேரை, கப்பை, கிளையைக் காணும் வாய்ப்புக் கிட்டிற்று.
எங்களுக்கு அன்று கிடைத்த, பதிலின், விளக்கத்தின் சாரம் இதோ .
'இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்' என்ற முறையிலே ஜார் ஆட்சி இரஷியாவில் நடந்து வந்தது. அக்காலத்தில், உழுது விதைத்து, அறுப்பார்க்கு உணவில்லை. உணவில்லாவிட்டால், என்ன ? பிணிகள் உண்டு. குளிருக்கு உடையில்லை. ஆயினும் என்ன ? உறைந்து விறைத்துப் போனால், பிறவித் துன்பம் அன்றோடே அகன்றது. இந்நிலையைக் கண்டு பொங்கி எழுந்தனர் பலர்; திட்டம் தீட்டினர் தலைவர்கள்; மன்னராட்சியைக் கவிழ்க்க வழி வகை ஆய்ந்தனர்; சோவியத் ஆட்சியை நிறுவ முயன்றனர்; அத்தகைய முயற்சி, எடுத்ததும் வெற்றி பெறவில்லை. முதன் முறை தோல்வி, பலருக்குத் தண்டனை அடுத்தடுத்து இப்படியே, போராட்டம், தோல்வி, தண்டனை, தலை மறைவு. ஆகவே, நாடு முழுவதும் இதைப் பற்றிய எண்ணம், குசுகுசுப் பேச்சு.
'வல்லமை பொருந்திய பேரரசைப் படிப்பாளிகள் சிலரது தலைமையில் பாமரர் பலர் எதிர்த்துக் கவிழ்ப்பது எளிதான செயலா ? இப்போராட்டத் திட்டங்களுல் பல இரகசியமாகத் தீட்டப்பட்டன. இரகசியத் திட்டங்களைத் தீட்டியவர்களில் லெனினுக்கே தலைமை இடம்.
"மன்னராட்சியைக் கவிழ்க்கும் புரட்சியில் மக்கள் பங்கு என்ன ? பலதுறைப் பாட்டாளிகளும், பலவூர்ப் பொது மக்களும். இரகசியமாக லெனினோடும் அவரது சகாக்களோடும் தொடர்பு கொண்டனர். இரகசியக் கட்டளைகளைப் பெற்றனர். மற்றவர்களைப் போல, மாணவ சமுதாயமும் இரகசியத் தொடர்பு கொண்டது; புரட்சிப் பணியில் தங்களுக்கும் பங்கு கேட்டது. எங்கெங்கே, என்னென்ன வேலைகளை எவ்வப்போது செய்து முடிக்க வேண்டுமென்று, ஆணை கேட்டது. பொது மக்களில், பல பிரிவினருக்குப் பல வகையான போராட்டங்களைக் கிளர்ச்சிப் பணிகளை, உயிர் கொடுக்கும் பணிகளைக் கொடுத்த லெனின், மாணவர்களுக்கு விறுவிறுப்பில்லாத் பணியையே கொடுத்தார். என்ன பணி அது ?
"படியுங்கள்: படியுங்கள் ! மேலும் மேலும் படியுங்கள்!" வகுப்பாசிரியரிடம் எதிர்பார்க்க வேண்டிய இவ்வறவுரையை வீரர் லெனினிடம் எதிர்பார்க்கவில்லை. இது மாணவர்களுக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
புரட்சி என்ன எளிதான முயற்சியா ? ஒரு முறைக்குப் பல முறை தோற்ற வினையல்லவா ? பல்லாயிரக்கணக்கானவர்களைப் பலி கொண்டும் தோற்றதல்லவா ? புரட்சி. வலிமை மிக்க ஜாராட்சியைக் கவிழ்க்க, எல்லாரையும் எல்லாவற்றையும், கிடைத்தவர்களையெல்லாம், கிடைத்தவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டாவா ? இக்கேள்விகள், புரட்சித் தலைவர் லெனினுக்கு எட்டின.
"புரட்சி மிகக் கடுமையானதே ! அது வெற்றி பெறப் பல ஒத்திகைகள் தேவைப்படலாம். அவற்றில், பெரும் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் விளையலாம். எத்தனை விலையானாலும், அதைக் கொடுத்து, ஒரு நாள் வெற்றி பெறுவோம். அப்புறம் ? புதிய சமதர்ம ஆட்சியை நிலைபெறச் செய்ய, கட்டிக்காக்க, வளப்படுத்த. வலுப்படுத்த, பல்லாண்டுகள் ஆகுமே! சோவியத் ஆட்சித் தந்தைகளான முதியவர்களே, காலமெல்லாம், உயிரோடிருந்து, காக்க முடியுமா ? இளைய பரம்பரையன்றோ முன்வந்து பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்? ஜார் ஆட்சிக்கு உள்ள எதிர்ப்பைவிடச் சோவியத் ஆட்சிக்கு உள்ள எதிர்ப்பு, தொடக்க நிலையிலாவது அதிகமாக இருக்கும்; பல ஆண்டுகளுக்கு இருக்கும். உலக எதிர்ப்புக்கிடையில் சோவியத் ஆட்சி முறையைக் காத்து, வளர்க்க வேண்டிய இளைஞர்களை-மாணவர்களைப் புரட்சி நெருக்கடியில் இழுத்து விட்டால், நாளை சமதர்ம ஆட்சியைத் திறம்பட நடத்தப் போதிய அறிஞர்கள். விஞ்ஞானிகள், விற்பன்னர்கள், மேதைகள் பஞ்சம் வந்துவிடுமே. ஆகவே மாணவர்களை மாணவர்களாகவே விட்டுவைப்போம்.
படிப்பிலேயே ஊக்குவோம் முதியவர்களாகிய நாம் மற்றவற்றைப் பார்த்துக்கொள்வோம். இரஷியாவின் நீண்ட எதிர்காலத்தின் நன்மைக்காக, இளைஞர்களை இப்படிக்காத்து ஆகவேண்டும். மேலும் மேலும் கற்க வைத்தாக வேண்டும் என்று லெனின் கண்டிப்பாக இருந்தார்.
"கற்பதே, மேலும் மேலும் கற்பதே. மாணவர்கள் ஆற்ற வேண்டிய நாட்டுத் தொண்டு ; புரட்சிப் பணி' என்று லெனின் அறவுரையும் அறிவுரையும் கூறியதோடு நில்லாமல், தாமும் தம் கட்சியும் அன்றும் பின்னும் அக் கொள்கையை வழுவாமல் காத் திராவிட்டால், சோவியத்தின் ஒன்றியத்தின் அறிவியல். பொறி இயல், தொழில் இயல் வெற்றிகளை-இந்த அளவிற்குப் பெற்றிருக்க முடியாது. தலைவர் லெனினது நல்லுரைகளில், இவ்வுரையே. அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் இளைஞர்களுக்குத் தேவையானது. ஆகவே இதை லெனினது படத்தின் கீழ் எழுதி வைத்திருக்கிறோம்.’’ இப்படி எங்களுக்கு விளக்கிக் கூறினார்கள்.
"அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன், என்பதைப்போல் இப்போதைக்கு-சமதர்ம ஆட்சிக் காலத்திற்கானதை அப்போதே-ஜார் ஆட்சிக் காலத்தின்போதே அறிவுறுத்தி, விதை நெல்களான மாணவர்களைக் கட்டிக் காத்ததால் அன்றோ, உலகம் வியக்கத்தக்க, முன்னறியாப் பெரும் செயல்களையெல்லாம் அருஞ் சித்துக்களையெல்லாம் செய்ய முடிகிறது சோவியத் ஒன்றியத்தால். வான வெளியிலே உலகத்தைச் சுற்றிய கருவிகளையும், நிலா உலகிற்குச்சென்று இறங்கிய கருவிகளையும் செய்து தந்த தொழில் மேதைகளும்; வழி வகைகளை வகுத்துத் தந்த விஞ்ஞானிகளும், கணித மேதைகளும் எங்கிருந்தோ குதித்து விட்டார்களா ? நிலம் வெடிக்க மேதைகளாக வெளி வந்தவர்களா ? லெனின் காலத்து மானவர்கள் அல்லவா படித்துப் படித்து, மேலும் மேலும் படித்து, உலகத் தலைமை நிலையை எட்டிப் பிடித்து விட்டார்கள். வளர வேண்டிய நாமும், நம் மாணவர்களை மாணவர்களாக வளரும்படி பார்த்துக் கொள்ளவேண்டாமா ? இதோ என் கல்லூரி மாணவப் பருவம் நினைவிற்கு வருகிறது. ஆண்டு. ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்து எட்டு. நான் படித்தது சென்னை மாநிலக் கல்லூரியில். படித்த வகுப்பு இண்டர் மீடியட் அப்போது மாநிலக் கல்லூரியிலும் இண்டர் மீடியட் வகுப்பு உண்டு. அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் அரசினர் ஒரு குழுவை இந்தியாவிறகு அனுப்பி வைத்தனர். இந்தியாவில் பல நகரங்களுக்குச் சென்று, இந்தியாவிலுள்ள பல பெரியவர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும். பின்னர், இந்தியர்களுக்கு எந்த அளவு தன்னாட்சி உரிமை கொடுக்கலாம் என்பதை அக்குழு பரிந்துரைக்க வேண்டும். இந்த ஆணையோடு வந்த குழுவிற்குப் பெயர் சைமன் குழு.
சைமன் குழு அமைக்கப்பட்டதும் பொங்கி யெழுந்தார் நாட்டின் தந்தை. உரிமைப் போராட்டத்தின் ஒப்பற்ற தலைவர், மகாத்மா காந்தி. 'எங்கள் உரிமையைப் பறித்தது அநீதி, எவ்வளவு உரிமை கொடுக்கலாமென்று விசாரிக்க வருவது அவமானப்படுத்துவதாகும். ஆகவே சைமன் குழுவை பகிஷ்கரியுங்கள்' என்று கட்டளையிட்டார் காந்தியார். கட்டளையை நிறைவேற்ற துடித்தனர் நாட்டுப்பற்றுடையோர். பகிஷ்காரக் கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் நாடு முழுவதிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்நிய அரசு சும்மா இருக்குமா ? கட்டவிழ்த்துவிட்டது அடக்குமுறையை. கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் தடைகள், அலைமேல் அலையாக வந்தன. கடல் பொங்கினும் கலங்காத ஜவகர்லால் நேரு, அலகாபாத்தில், சைமன் குழுவே திரும்பிப் போ என்று முழங்கிக்கொண்டு, தலைமை தாங்கிப் பகிஷ்கார ஊர்வலத்தை நடத்தினார். வேடிக்கையா பார்க்கும், ஞாயிறு மறையாத சாம்ராஜ்யம் ? நேரு கைது செய்யப்பட்டார்.
இச் செய்தி நாடு முழுவதும் பரவிற்று; விரைந்து பரவிற்று. சென்னைக்கும் வந்தது. மக்கள் கொதித்தனர்; மாணவர்கள் கிளர்ந்து எழுந்தனர். வேலை நிறுத்த ஏற்பாடு செய்தன; கல்லூரிகளுக்குச் செல்லாமல், வேலை நிறுத்தமும் செய்தனர் எல்லாரும் அல்ல ; ஏராளமானவர்கள்.
வேலை நிறுத்தத் தலைவர்கள்-மாணவர்களே-தந்தி கொடுத்தனர் மகாத்மா காந்திக்கு. கல்லூரி மாணவர்கள் வெற்றிகரமாக வேலை நிறுத்தம் செய்துவிட்டோம். நேருவை நிபந்தனையின்றி விடுதலை செய்யும்வரை மாணவர் வேலை நிறுத்தம் தொடரும். அதற்குத் தங்கள் ஆசி தேவை.' இதுவே தந்தி.
பதில் தந்தி வந்தது. 'தேசத் தொண்டர்கள் ஆகும் பொருட்டுக் கல்விக்கூடங்களை விட்டு வெளியேறி விடுங்கள். இல்லையேல் மாணவர்களாக இருந்து கல்லூரிக் கட்டுப்பாட்டிற்கு அடங்கி படியுங்கள்.' ஆசிச் செய்தியா இது ? ஆதரவா இது ? பதிலைப் பார்த்ததும், துடித்தனர். திட்டினர் சிலர் ஆனாலும் அடுத்த நாளே திரும்பிவிட்டனர் கல்லூரிகளுக்கு.
"ஆங்கில ஆட்சியினர் நடத்தும் கல்விக்கூடங்களை விட்டு வந்துவிடுங்கள். ஆங்கிலக் கல்வி நமக்குத் தேவையில்லை" என்று உபதேசம் செய்யும் காந்தியார், இப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கக் கூடாதா ? இதை சாக்காக வைத்தாவது ஆங்கிலக் கல்வியை ஒட்டையாக்கி யிருக்கலாமே!" இப்படி அங்கலாய்த்தனர், மாணவ மணிகள்.
மாதங்கள் பல சென்றன. மகாத்மா காந்தி தென்னகம் வந்தார். பல இடங்களுக்குச் சென்றார். பொதுக் கூட்டங்களில் பேசினார். மக்களுக்கு உணர்ச்சியூட்டினார். அந்த சுற்றுப் பயணத்தில், வேலூரில், மாணவர் கூட்டமொன்றிற்கு அறிவுரை வழங்கினார். கேள்விச் சீட்டொன்று அவரிடம் சேர்ந்தது. ஆங்கிலக் கல்விக் கூடங்களை வெறுத்து ஒதுக்கச் சொல்லும் தாங்கள். நேரு கைதானதைக் கண்டிக்கும் பொருட்டு, சென்னைக் கல்லூரி மாணவர்கள் வேலை நிறுத்தஞ் செய்ததை, ஆதரிக்க வில்லையே, ஏன்?. 'ஆம்; ஆங்கிலக் கல்வி ஆகாது. அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு வந்து, நாட்டுத் தொண்டு செய்வது நல்லது. ஆனால், இக்கொள்கையில் நம்பிக்கையில்லாதவர்கள். ஆங்கிலக் கல்வி பெற விரும்பும் மாணவர்கள். அக்கல்விக் கூடங்களின் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் மதித்து, அவற்றிற்கு அடங்கி நடப்பதே முறை ஒரே நேரத்தில், அரசியல் ஊழியராகவும். மாணவராகவும் இருப்பது முடியாது'-இதுவே மகாத்மாவின் பதில். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைக்கலாமா ?
ஆகவே, சிறிது நேரத்திற்குப் பிறகு மற்றொரு கேள்விச்சீட்டு சென்றது. அக்கேள்வியென்ன ? 'மாணவர்களில் பலருக்கு நாட்டுப் பற்று உண்டு. இப்போதே நாட்டுத் தொண்டில் ஈடுபடாவிட்டால், அப்பற்று அடியோடு பட்டுப் போகுமே ! மாணவப் பருவம் முடியும்வரை நாட்டுப்பற்றைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தால், அவர்கள் தேசத் தொண்டர்களாவது எப்படி ?'
இக்கேள்விக்குக் காந்தியார் பதில் கூறினார். சாரம் இதோ :
ஆங்கிலக் கல்வி கற்பதனால் நாட்டை மறக்க வேண்டா ; வெறுக்க வேண்டா. நாட்டுப்பற்றைப் பசுமையாக வைத்துக்கொள்ளுங்கள். படிப்புக்குப் பங்கம் இல்லாமல் பணியாற்றுங்கள். வார. பருவ விடுமுறைகளின்போது, சிற்றுர்களுக்குச் செல்லுங்கள். தீண்டாமை ஒழிப்பு, மது விலக்கு, கதர் உடுத்தல், சமூகத் துப்புரவு ஆகிய ஆக்கப் பணிகளைச் செய்யுங்கள். இவை, சிறந்த நாட்டுத் தொண்டு’ என்றார்.
'எதைப் பெறவேண்டுமானாலும் அதற்குரிய வழியிலே, அதற்குரிய வகையிலே பெற வேண்டும், ஆங்கிலக் கல்வி ஆகாதென்று தாம் கருதினாலும், அதைப் பெற விரும்பு கிறவர்கள், அதற்குரிய இடத்திலே, அதற்குரிய ஒழுங்கிலே கட்டுப்பாட்டிலே, ஒருமை ஈடுபாட்டிலே, பெறவேண்டும் என்று தெளிவுபடுத்தினார் மகாத்மா காந்தி.
ஆயுதப் புரட்சி வீரர் லெனின் மந்திரம், 'மாணவர்கள் மாணவர்களாயிருக்கட்டும்.'
அமைதிப் புரட்சி வீரர், சாந்தத்தின் திருவுருவம் காந்தியடிகளாரின் மூல மந்திரம், 'மாணவர்கள், மாணவர்களாயிருக்கட்டும்.
இரு வேறு வகையான உலக வழிகாட்டிகளின் மாணவர்களுக்கான மந்திரம் ஒன்றே. மாணவர்கள், மாணவர்களாயிருக்கட்டும் என்பதே. இந்த ஞானம் வந்தாற்பின் வேறென்ன வேண்டும் ? வருமா? வரவிடுவோமா ? வந்தால் கல்வி நம்மோடு நின்று விடாதே எல்லோருக்கும் சென்று விடுமே !
மகாத்மாவையே சுட்டுக் கொன்றுவிட்டோமே ! அவர் அறிவுரையை இருட்டடிக்கவா முடியாது ? மாணவர்களை திசை திருப்பவா தெரியாது ? இப்படிக் கனவு காண்போர் கணக்கற்றோர்.
7. பேச்சுரிமையில் பெருமிதம்
இலண்டன் மாநகரம், உலகப் பெருநகரங்களில் ஒன்று. பிரிட்டிஷ் பேரரசின் தலைநகரம் அது. வரலாற்றுச் சிறப்புடைய ஒன்று அது. பாராளுமன்றங்களின் தாயாக விளங்கும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் அமைந்திருப்பது அங்கேதான். உலக வாணிக மையங்களில் ஒன்று இலண்டன். அதன் சிறப்புக்கள் எத்தனையோ! எத்தனையோ சிறப்புக்களுடைய இலண்டன் நகருக்கு, நான் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அங்குப் பல நாள் தங்கவும் வாய்ப்புக் கிட்டிற்று ஒரு முறை யன்று; இருமுறை.
முதன் முறை அங்குச் சென்று தங்கியது ; ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்றில், பிரிட்டனின் கல்வி முறைகளை நேரில் கண்டு அறிந்து வருமாறு, அப்போதைய , சென்னை கல்வி அமைச்சர், கனம் மாதவமேனன், என்னை அனுப்பியிருந்தார். அந்நாட்டில், நான்கு மாதங்களிருந்து கண்டு கற்று வந்தேன். அப்போது நான் தனியே செல்லவில்லை. என் மனைவியையும் அழைத்துச் சென்றேன். அந்நியச் செலாவணி முடை இல்லாத காலம் அது. ஆகவே, மனைவியையும் அழைத்துப் போவது எளிதாக இருந்தது.
இலண்டனில் காணத் தக்கவை பல. எவை எவை என்பது, அவரவர் ஈடுபாட்டை, சார்பை, சுவையைப் பொருத்தது. அங்கு நாங்கள் கண்டவை சில. அவற்றில் ஒன்று ‘ஹைட் பார்க்’ என்ற பூங்கா. அது இலண்டனுக்கு, வெளியிலோ, அடுத்தோ இருக்கும் பூங்கா அல்ல. நகருக்கு உள்ளே இருக்கும் பூங்கா. பரவலான பூங்கா. மெய்யாகவே மிகப் பரவலான பூங்கா.
எட்டுக்கு எட்டு மீட்டரில். எங்கோ ஒரு மூலையில், கட்டப்படாமலிருக்கும் பொட்டலுக்கு, நாம் ‘பூங்கா’ என்று அருமையாகப் பெயரிட்டு விடுகிறோமே. அப்படிப்பட்ட பூங்கா ‘ஹைட் பார்க்.’ பல கிலோ மீட்டர் நீளமும் பல கிலோ மீட்டர் அகலமும் உடையது. புல் தரைகளும் பெரு மரங்களும் அடர்ந்தது. நெடுங் காலமாக அழிக்கப்படாமல், சிதைக்கப்படாமல் காப்பாற்றப்படுகின்றது. உலாவ ஏற்ற இடம் ; நிழலிலே ஒய்ந்திருக்க ஏற்ற இடம் இத்தனையும் எங்களைக் கவர்ந்தன. இம்முறைகளிலும் அதைப் பயன்படுத்தினோம் நாங்கள்.
இவற்றிற்கு மேலான சிறப்பொன்றும் உண்டு அப் பூங்காவிற்கு. அதுவென்ன ? பேச்சுரிமையைப் பெற்ற களம் அது. பேச்சுரிமையைக் காக்கும் களம் அது.
பிரிட்டன் கோனாட்சி நாடு. கோனாட்சி பெயரளவில் தான், மெய்யாக நடப்பது மக்களாட்சி.
அந்நாட்டை முற்காலத்தில் ஆண்ட மன்னர்களில் சிலர், கோனாட்சியைக் கோலாட்சியாக, கொடுங்கோல் ஆட்சியாக ஆக்கிவிட்டனர். அவர்கள் நினைத்தற்கு மாறாக, யாரும் மூச்சுவிடக்கூடாது. 'கப்சிப்' தர்பார் நடத்த முயன்றனர் பலித்ததா ? இல்லை.
அடக்குமுறை, கடுமையான அடக்குமுறை நேர்மாறான விளைவையே கொடுக்கும். ஆங்கிலேயப் பொதுமக்களும் கொதித்து எழுந்தனர் : எதிர்த்து முழங்கினர்; அரசின் அநீதிகளைக் கண்டித்தனர். அடி உதை பட்டனர். சிறையிலே அடைபட்டு, வாடி மடிந்தனர். தலையையும் கொடுத்தனர். இறுதியில் வெற்றியும் பெற்றனர். பொது மக்களுடைய பேச்சுரிமையை ஆழமாக நிலைநாட்டினர்.
இன்று அந்நாட்டில் முழுப் பேச்சுரிமை நிலவுகிறது. சட்ட நூல்களில் கிடக்கும் உரிமையல்ல, அங்கு நிலவுவது. எல்லாரும் அன்றாடம் பயன்படுத்தும் பேச்சுரிமையை அங்கே பளிச்சென்று காணலாம்.
பேச்சுரிமைப் போராட்டத்தில் சிறப்பு இடம் பெற்ற ஓரிடம், அந்த ‘ஹைட் பார்க்கி’ன் மூலையொன்று. அங்குத்தான் சில நூற்றாண்டுகளுக்கு முன், பேச்சுரிமைத் தலைவர்களும் தொண்டர்களும், அவ்வுரிமையை நிலைநாட்ட, அக்கால நடைமுறையில் இருந்த அரசியல் தவறுகளையும் பிறவற்றையும் கண்டிக்கும் களம் அமைத்து, போராடி வந்தனர்.
அக் களத்திலே பேச்சு மேடையில்லை. அன்றும் இல்லை; இன்றும் இல்லை. அன்றைய அரசியலில், சமுதாயத்தில், வாழ்க்கை முறையில் கண்ட தீங்குகளைப் பற்றிக் கொதிப்படைந்தவர்கள் அம் மூலைக்குச் சென்று, கருத்து முழக்கம் செய்வார்கள். பூங்காவிற்கு வந்தவர்களில் துணிந்தவர்கள் பேச்சாளரைச் சுற்றி நின்று கேட்பார்கள்.
பேச்சு, தானாகவே முடியுமென்று சொல்ல முடியாது. அரசின் அடக்குமுறையாளர்களால், பேச்சாளர், பேசத் தொடங்கியதும், கைது செய்யப்படுவதும் உண்டு. விட்டுப் பிடிப்பதும் உண்டு. சிறிது நேரம் பேசியதும், தண்டிப்பதற்குப் போதிய ஆதாரம கிடைத்துவிட்டது என்று தெரிந்ததும் கைது செய்யப்படுவதும் உண்டு. கைது செய்யப்படாமல் ஒருவர் பேச்சு முழுவதும் பேசி முடித்தால், அநேகமாக அப்பேச்சில் உயிரோ கருத்தோ இல்லை என்றே பொருள். இப்படிப்பட்ட அடக்குமுறையை எதிர்த்துப் பல்லாண்டு, பலர், பேசிப் பேசி, அனுபவித்த சிறைத் தண்டனையாக, அடி உதையாகச் சொல்லவொண்ணாக் கொடுமைகளாகப் பெருவிலை கொடுத்து, பேச்சுரிமையைப் பெற்ற ‘குருகேஷத்திரம்’ ‘ஹைட் பார்க்கின் மூலையொன்று’
அக்காலம் முதல், அம் மூலையில், ஒரே நேரத்தில் பல பேச்சாளர்கள் பேசுவர்; விடுமுறை நாள்களில், ஒரே வேளை, பத்துப் பதினைந்து ‘கூட்டங்கள்’ அடுத்தடுத்து நடக்கும்; மற்ற நாள்களில் ஏக காலத்தில் ஐந்தாறு கூட்டங்கள் நடக்கும்.
அங்குப் பேச, யாருடைய அனுமதியும் தேவையில்லை. அங்கு, மேடை அமைக்கக் கூடாது. ஆகவே, பேச்சாளரே! அவரது தோழரோ, காலி சாதிக்காய்ப் பெட்டி ஒன்றைக் கொண்டுபோய், அங்கோர் இடத்தில் போட்டு அதன்மேல் நின்று பேசுவார். நிலத்தின் மேல் நின்றே பேசுவோர் பலர். உரிமையை நிலைநிறுத்தும் அவர்களுக்கும் மற்றொரு கட்டுப்பாடு உள்ளது.
அது என்ன ?
அங்கு யாரும் ‘மைக்’ அமைக்கக்கூடாது. ஒருவர், ஒலி பெருக்கி அமைத்துக் கொண்டு பேசினால், அருகில் நடக்கும் மற்றக் கூட்டங்களுக்கு, அது இடையூறாக இருக்கும். மற்றப் பேச்சாளர்களின் உரிமையை ஒலி பெருக்கி பறிக்கும். எனவே, அந்த இடத்தில், யாரும் ஒலி பெருக்கி வைத்துப் பேசக் கூடா தென்ற தடையுண்டு.
நானும் என் மனைவியும் இலண்டனிலிருந்தபோது, ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை, பேச்சுரிமைப் புனித பூமிக்குச் சென்றோம். கூட்டங்கள் நடக்கும் வகையைக் காணவே சென்றோம். பூங்காவிற்குள் நுழைந்ததும், ஒரு சிறு கூட்டத்தைக் கண்டோம். பதினைந்து இருபது பேர்களுக்கு மேல் இல்லை அங்கு. அதில் ஒருவர், ஆர்வத்தோடு பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் அவர் பேச்சைக் கேட்டோம். அவர் ஒரு யூதர். யூத சமயத்தைப் பற்றிப் பேசினார். தங்கள் 'கர்த்தர்' இனித் தான் வரப்போகிறார் என்றார். அவரை வரவேற்பதற்காக ஆயத்தஞ் செய்துகொள்ளச் சொன்னார். அத்தனை பேச்சுக் களையும் பதம் பார்க்க எங்களுக்கு ஆசை. ஆகவே, சில அடி துரத்தில் நடந்து கொண்டிருந்த அடுத்த கூட்டத்திற்கு நகர்ந்தோம். அங்கும் ஒருவர் ஆர்வத்தோடு பேசிக்கொண் டிருந்தார். அவர் கத்தோலிக்க கிருத்துவர். 'கர்த்தர்' ஏசுவாக, வந்ததைப் பற்றிப் பேசினார். அவரது கொள்கைகளைப் போப்பாண்டவர் விளக்கிக் கூறுவது போலவே ஏற்றுக் கொள்ளவேண்டும். அதுவே விசுவாசத்திற்கு அடையாளம் என்றும் பேசிக்கொண்டிருந்தார். அப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களும் சிலரே.
அடுத்த கூட்டத்தில் பிராடெஸ்டண்ட் கிருத்துவர் ஒருவர், தம் சமயப் பிரிவின் சிறப்புக்களைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார். அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சிலரோடு நாங்களும் சேர்ந்து சிறிது கேட்டோம். மெல்ல நழுவினோம்.
சில அடி துரத்தில் வேறொருவர் பேசிக்கொண்டிருந்தார். அங்கும் முப்பது நாற்பது பேருக்குமேல் கூடவில்லை; அவர்களோடு கலந்து நாங்களும் பேச்சைக் கேட்டோம்.
சமயச் சொற்பொழிவுகளையும், சமயங்களையும் கண்டித்துக் கொண்டிருந்தார். உழைத்துப் பிழைக்க முடியாதவர்கள், ஆண்டவனைப் பற்றிப் பேசிப் பிழைக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார் ; பெரியார் பாணியில், சமயங்களை யெல்லாம் சாடினார். அங்கிருந்து அடுத்ததற்கு விரைந்தோம். ஏதோ உள்ளுர் விவகாரம் பற்றி ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். பேச்சு காரமாகவே இருந்தது. இப்படி உள்ளுர், பிராந்தியச் சிக்கல்கள் பற்றிய கருத்துரைகள், இரண்டொன்றையும், சிறிது சிறிது கேட்டுவிட்டு, ஒரு பெருங்கூட்டத்திற்கு வந்து சேர்ந்தோம் அன்று நாங்கள் கண்ட அத்தனைக் கூட்டங்களிலும் பெரியது அது. கூடியிருந்தார், அதிகம் இருந்தால், இருநூறு பேராக இருக்கலாம். பத்தும் பதினைந்தும், முப்பதும் முப்பத்தைந்துமே கண்ட யாருக்குமே இருநூறு பேர் கொண்ட கூட்டம் பெரிதாகத்தானே இருக்கும். அக் கூட்டத்தின் பேச்சாளர், ஒரு நீக்ரோ. அவர் ஆத்திரத்தோடு பேசிக்கொண்டிருந்தார். நின்று கேட்டோம்.
வெள்ளையர்கள் ஆப்பிரிக்காவிற்கு வந்து நீக்ரோக்களை அடிமைப்படுத்தி வருவதை வன்மையாகக் கண்டித்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு இனி வெள்ளையர் எவரும் ஆப்பிரிக்காவில் காலடி வைத்தால், அவ்வெள்ளையரின் கழுத்தை அறுத்து இரத்தத்தை உறிஞ்சப் போவதாக ஆர்ப்பரித்தார். இதைக் கேட்ட நாங்கள் பதறிப்போனோம். ‘கலாட்டா’ ஆகி விடுமென்று அஞ்சினோம், மெல்ல நழுவி விடலாமாவென்று கருதினோம். சுற்றுமுற்றும் பார்த்தோம். வெள்ளையர் யாரும் வெகுளவில்லை, துடிக்கவில்லை, அஞ்சவில்லை.
அப்போது அங்கிருந்த இளந்தம்பதிகள் எங்கள் கண்களில் பட்டனர். கணவன் மனைவியிடம் கூறினார் ; “கண்ணே! இவர் ஏதோ உணர்ச்சி வயப்பட்டிருக்கிறார். அதற்குக் காரணமும் இருக்க வேண்டும். நாம் பொறுமையாக இருந்து, காரணத்தைக் கேட்போம். இதைக் கேட்ட மனைவியும் புன் முறுவலோடு கவனமாகக் கேட்டார். பேச்சு நீண்டது. ஆனால், சூடு சிறிது தணிந்தது. நாங்களும் மெதுவாக நழுவிவிட்டோம். மேலும் சில சிறு கூட்டங்களைக் கடந்த பின், ஐம்பது பேருடைய கூட்டம் ஒன்றை அடைந்தோம். அது, அராஜகக் கூட்டம். “ஆட்சிகள் அத்தனையும் மக்கள் உரிமையைப் பறிக்கின்றன. உரிமையை இட்லர் பறித்தாலும் ஒன்றே, சர்ச்சில் எடுத்துக் கொண்டாலும் ஒன்றே, அட்லி அடக்கினாலும் ஒன்றே. ஆகவே ஆட்சிமுறை வேண்டா. தேர்தலில்நாள் குறித்திருந்தார்கள்-யாருக்கும் ஒட்டுப் போடாதீர்கள். இதைக் கேளாமல் சிலர் ஒட்டுப் போட்டால் பெருங்கெடுதி இல்லை. யார் வெற்றி பெற்றாலும், இலட்சம் வாக்குகளுக்குப் பதில் ஆயிரம் ஒட்டுகளே பெற்று, வென்றால். தலை கொழுத்துத் திரியமாட்டார். வாக்கினைப் பயன்படுத்தியவர்களைவிட, பயன்படுத்தாதவர் பல பேர் என்ற தெளிவு நிதானத்தைக் கொடுக்கும்”-இப்படிப்பட்ட போக்கிலே ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.
அவர்கள் தேர்தலைப் பற்றியோ, இக்கருத்தைப் பற்றியோ கவலைப்படாமல், விரைவில் விலகிப் போனோம். வீடு திரும்ப, மீண்டும் வந்த வழியே சென்றோம். முன்னர் பார்த்த கூட்டங்களில் சில முடிந்துவிட்டன. நீக்ரோவர் பேசிய கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மறுபடியும் அங்குச் சில நிமிடங்கள் நின்றோம். கூட்டத்தினரைக் கவனித்தோம் பலர் ஏற்கெனவே இருந்தவர்களே. யாரும் துடிப்போ, கிளர்ச்சியோ கொள்ளவில்லை. கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
வெளிநாட்டார் ஒருவர், இலண்டனுக்கு வந்து அங்குள்ள வசதிகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொண்டு, அவ் வெள்ளையரையே அவ்வளவு மிரட்ட விடலாமா ? ஏன் அப்படி விட்டு வைக்கிறார்கள் ?’ என்று எங்களுக்கு ஐயம். அதைப் பல ஆசிரியர்களிடமும் மற்றவர்களிடமும் வெளியிட்டோம் .
அவ்வளவு பேச்சுரிமை இருப்பதைப் பற்றிப் பெருமிதம் கொண்டனர் ; புன்முறுவல் பூத்தனர். அதற்குச் சிறிதளவும் தடை விதிக்கக்கூடாதென்று அழுத்தந்திருத்தமாகக் கூறினர். ‘அதைக் கட்டுப்படுத்துகிறோம் ; இதைக் கட்டுப்படுத்துகிறோம்’ என்று நல்லெண்ணத்தோடு, தொடங்கி, நம்மை அறியாமலேயே எல்லார்க்கும் பல விதத் தளைகளை மாட்டி விடுவோம். ஆகவே இருக்கிற உரிமையிலே சிறிதும் கை வைக்கக்கூடாது !’ என்ற போக்கிலே இருந்தது அவர்கள் பதில்.
நினைக்க நினைக்கச் சுவைக்கும் அக்காட்சியையும் கருத்தையும் சில அறிஞர்களிடம் கூறும் வாய்ப்பு அவ்வப்போது கிட்டிற்று. எதெதற்கோ படபடக்கும், துடிதுடிக்கும், குமுறும், அனிச்ச மலர்களாகிய நம்மவர்க்குச் சொல்லலாமா?
8. லெனின்கிராடில்
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தோராம் ஆண்டு, செப்டம்பர் திங்கள், நானும் என்னுடன் வந்த புகழ்பெற்ற இரு இந்தியக் கல்வியாளர்களும் லெனின் கிராட் நகரத்திற்குச் சென்றோம்.
அங்குள்ள பல்கலைக் கழகத்தில், தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்கிறார்கள் என்று அறிந்து மகிழ்ந்தோம். தென்னாடுடைய தமிழ் மொழியை, எந்நாடும் கவனிக்கும் இரஷியாவில், வடபால் உள்ள இரஷியாவில், வடக்கே உள்ள லெனின் கிராட் பல்கலைக் கழகத்தில் கற்றுக் கொடுக்கிறார்கள் என்று கேட்டபோது, காதும் இனித்தது: கருத்தும் இனித்தது ஊனும் உயிரும் இனித்தன.
முதல் நாள் ; நடுப்பகல் உணவு வேளை. நாங்கள் மூவரும், தங்கியிருந்த ஒட்டலுக்குள் நுழைந்தோம். தனியே, யாருக்கோ காத்துக் கொண்டிருந்த அந்த வாலிபர் ஒருவர் எங்களை அணுகினார்.
“நீங்கள் தானா வேலு என்பது ?” என்று தூய தமிழ் உச்சரிப்பில், என்னை வினவினார். என்னோடு வந்த இந்தியர் இருவருக்கும் தமிழ் தெரியாது. இவர்கள் தவறாக நினைத்து விடக் கூடாதே என்பதற்காக, “ஆம்” என்று ஆங்கிலத்தில் பதில் அளித்தேன்.
“நான் தமிழில் பேசலாமா ?” என்றார், அவ்வாலிபர். உடன் வந்தவர்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு. “நன்றாகப் பேசலாம். தங்கள் பெயர் என்னவோ ?” என்றேன்.
‘ என் பெயர் ரூதின் என்பது ; இது இரஷ்யச் சொல்.தமிழில் ‘செம்பியன்’ என்று பெயர் என்றார்.
“தாங்கள் என்னை எப்படி அறிவீர்கள் ? தாங்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?”
“தாங்களும் வேறு இந்தியக் கல்வியாளர்கள் இருவரும் இங்கு வருவதாகப் பத்திரிகையில் படித்தேன். தாங்கள் தமிழர் என்பதை, என்னுடன் லெனின் கிராட் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்றுக்கொடுக்கும் திருமதி ஆதிலட்சுமி அம்மாள் சொன்னார்கள். அவர்களுக்கு இப்போது வகுப்ப வேலை இருப்பதால் நான் மட்டும் வந்தேன்” என்பது செம்பியன் பதில்.
செம்பியன், பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் ஆசிரியர் என்பதை அறிந்தேன். தமிழ் ஆசிரியர் மட்டு மல்ல ; தமிழில் ஆர்வம் உடையவர் என்று அறிந்து மகிழ்ந்தேன். அங்குத் தமிழ் துறையில் சில மாணவர்கள், நம் தாய் மொழியைப் பற்றுதலோடு கற்கிகிறார்கள் என்று கேட்டுப் பூரித்தேன். தெருவெல்லாம் தமிழ் முழக்கஞ் செழிக்கச் செய்வீர்” என்ற கட்டளையைப் பிற நாட்டவராவது பின்பற்ற முனைந்துள்ளதை எண்ணித் திருப்தி கொண்டேன். உலகமெல்லாம் தமிழ் கேட்கும் நாளும் வருமோ என்று எண்ண வானில் உயரப் பறந்தேன்.
தம் பல்கலைக் கழகத்திற்கு வந்து, தமிழ் துறையைக் கண்டு, அங்குள்ள மாணவர்களோடு பேசும்படி கேட்டார் செம்பியன். ஒப்புக்கொள்ள கொள்ளை ஆசை. பயண ஆணையரைக் கேட்டேன். நிகழ்ச்சிகள் நெருக்கமாகச் செறிந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். நீக்குப் போக்கிற்கு இடமின்மையை விளக்கினார். உடன் இருந்து கவனித்த செம்பியன், நிலைமையை உணர்ந்து கொண்டார். பிறிதொரு முறை அத்தகைய நல்வாய்ப்பினை எதிர்பார்ப்பதாகக் கூறினார். வகுப்பிற்கு நேரமாகி விட்டதால் வணக்கம் கூறி விடை பெற்றுக் கொண்டார்.
இதே செம்பியன்தான் - ரூதின்தன் - பின்னர், சென்னைக்கு வந்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்றவர். கர்ம வீரர் காமராசரோடு, அவரது இரஷியப் பயணத்தில், மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிவரும் இவரே.
நாங்கள் உணவருந்தச் சென்றோம். மனிதர்களிலே சிலரைத் தீண்டாதவர்களாகக் கருதி வந்த நம் மக்கள், பழக்கக் கொடுமையால், இக்காலத்தில் மொழிகள் சிலவற்றின் மேல் அத்திண்டாமைப் போக்கைத் திருப்புகிறார்களே என்று ஏங்கினோம். தீண்டாமை மக்கள் இடையே கூடாது, என்று கருத்தைத் தெளிந்தோம். கற்ற மொழிகளெல்லாம் நம் சொந்த மொழிகளாகி விடும். அவை பிறந்த நிலத்தார், தனி உரிமையோ கொண்டாட முடியாது. புதிதாகக் கற்ற அந்நியரை, அம் மொழியைப் பயன்படுத்துவதிலிருந்து தடுக்க முடியாது.
இப்படிச் சென்றுகொண்டிருந்தது எங்கள் சிந்தனை. பின்னர், அவ்வூரிலேயே தாங்கள் பெற்ற பட்டறிவு எங்கள் சிந்தனைக்குச் சிறகுகள் பல தந்தது. உயர்நிலைப்பள்ளி யொன்றில் ஆங்கிலத்தின் மூலம் பல பாடங்களையும் கற்றுக் கொண்டிருந்தார்கள். அதை நாங்கள் கண்டோம். பள்ளிகள், ஆங்கிலத்தை அந்நிய மொழியாகக் கற்றுக் கொடுப்பதை முன்னர் கண்டது. உண்டு. இங்குத்தான் அந்த அத்திய மொழியைப் பாட மொழியாகவும் பயன்படுத்துவதைக் கண் டோம். இம்முறை பல பள்ளிகளில் உண்டா ? இல்லை சோதனையாக இரண்டொரு பள்ளிகளில் கையாண்டு பார்க் கிறார்கள். விளைவை, சிக்கல்களை, விழிப்பாகக் குறித்துக் கொள்கிறார்கள். மொழிப் பகையை நீக்கி, துணிந்து, புது முறையைச் சோதிப்பது எங்களைக் கவர்ந்தது. அதிகாரம் இருக்கிறதென்று ‘இட்டது சட்டமென்று, எடுத்த எடுப்பிலே பல பள்ளிகளுக்கும் ஆணையிடாமல் சோதனைக்காகச் சில பள்ளிகளை மட்டும் அனுமதித்திருப்பது எங்களுக்குத் தெளிவைக் கொடுத்தது. கல்விமுறை மாற்றம் காலத்தோடு விளையாட்டு. அது வினையாக-தீவினையாக-மாறாதிருக்க வேண்டுமென்றால் கல்விச் சோதனையும் தேவை . அதே நேரத்தில் அது குறுகிய அளவிற்குட்பட்ட சோதனையாகவும் இருக்கவேண்டும்’ என்று உணர்ந்தோம். கட்டுக்குட்பட்ட முன்னோட்டமே கலவி மாற்றத்திற்கு வழி என்று உங்கள் நெஞ்சமும் கூறுகிறதா?
லெனின் கிராட் நகரில், ஜார் மன்னனது மாளிகை இருக்கிறது. இப்போது யாரும் குடியிருக்கும் மாளிகையாக இல்லை. கலைக்கூடமாக இருக்கிறது. ஜார் ஆட்சியைக் கவிழ்க்கச் செய்து புரட்சியில் மக்கள் சிந்திய இரத்தம், ஆறேயாகும். இழந்த உயிர்களும் எத்தனை - எத்தனையோ கொண்ட பலிகளும் கொடுத்த பலிகளும் ஏராளம். அழிந்த பொருள்களுக்கும் அளவில்லை. ஆயினும் இங்கும் பிறவூர்களிலும் மாளிகைகளையும் பிற கட்டிடங்களையும அவர்கள் அப்படியே காப்பாற்றியிருப்பதுபோல வேறெந்த நாட்டினரும் காப்பாற்றியிருப்பார்களா என்பது ஐயமே.
லெனின் கிராடிலுள்ள ஜார் மாளிகை பெரியது அழகியது. அதை அன்றிருந்தபடியே அருமையாகக் காத்து வருகிறார்கள். தொல்பொருள் காட்சிக்காக அல்ல பயனுக்காகக் காத்து வருகிறார்கள். சிறந்த பல ஒவியங்களும் சிற்பங்களும், வேறு கலைப் பொருள்களும் அங்குக் காட்சிக்காக வைக்கப்பட் டுள்ளன. அவை அலங்கரிக்கும் மண்டபங்களும் ஒன்றிரண்டு அல்ல ; பல அவற்றில் சிலவற்றைச் சுற்றிப் பார்க்கவே எங்க தக்குப் பிற்பகல் முழுவதும் சரியாகிவிட்டது.
ஏராளமானவர்கள், ஆணும் பெண்ணும், பெரியவர்களும் சிறியவர்களும்-வயதில்-வந்து, கண்டு மகிழ்ந்து, அறிந்து, தெளிந்து செல்கிறார்கள். கால் கடுக்கும்போது ஆங்காங்கே, இளைப்பாறவும் நல்ல பெஞ்சுகள் அமைத்து இருக்கிறார்கள். இப்படியே பல ஊர்களில் பிரபுக்கள் மாளிகைகள் கலைக் கூடங்களாகி விட்டன.
இம்முறை இல்லையென்றால் மறுமுறை வெல்வது உறுதி. அன்றைக்குப் பயன்படக்கூடிய இம்மாடமாளிகைகளைப் பிற கட்டிடங்களைப் பாழாக்க வேண்டா. அப்போதைக்கப்போதே குறித்து வைத்து, பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற போக்கை அங்குக் கண்டோம். இப்போதைக்குத் தனக்கு ஆகாத பாலைக் கொட்டிக் கவிழ்க்கும் போக்கு இல்லை.
சிலரிடத்திலே முடங்கிக்கிடந்த பொருட்செல்வத்தை எல்லாருக்கும் பயன்படும்படி செய்ததைப் போல், சில மாளிகைகளுக்குள் மறைந்து கிடந்த கலைப்பொருட்களையும் மக்கள் அனைவரும் கண்டு களிக்கச் செய்து விட்டது சோவியத் ஆட்சி என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் ரஷியர்கள்.
வரலாற்றுச் சிறப்புடைய லெனின்கிராடை இரண்டாவது உலகப்போரின் போது, ஜெர்மானியர் முற்றுகை இட்டனர். முற்றுகை சில நாட்களா ? இல்லை. சில மாதங்களா ? இல்லை. மொத்தம் 900 நாள்கள் முற்றுகையாம். ஜெர்மானியர் சுற்றி வளைத்துக்கொண்டால் போர் விளையாட்டாகவா இருக்கும் ? மிகக் கடும்போர் நடத்ததாம். அன்றாடம் ஆயிரக்கணக்கில் சாவாம். உண்ண உண வில்லை. குடிக்க நீரில்லை, பட்டினியாலும் தாகத்தாலும் இறந்தவர் இலட்சக்கணக்கில். போராடி மடிந்தவரும். இலட்சக்கணக்கில். ஆயினும் சரணடையவில்லை லெனின் கிராட். வெந்நீரில் தோல் வாரைப் போட்டுக் காய்ச்சி: குடிக்கும் நிலைக்கு வந்தபோதும், கலங்காது. தாக்குப்பிடித்து கூடி நின்று, போராடி, கடைசியில் வெற்றியும் கண்டது லெனின் கிராடு. பதினைந்து இலட்சம் மக்களை இழந்து சரணடையாது நின்று வென்றது என்று லெனின் கிராட் வாசிகள் பலர் பெருமிதத்தோடு எங்களிடம் கூறினர்.
‘விதந்தரு கோடி யின்னல் விளைந்தெனை அழித்திட்டாலும் சுதந்திரதேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே என்ற சுதந்திர கீதத்திற்கு இலக்கணமாக விளங்கிய அந்நகரவாசிகள் தலைநிமிர்த்து நிற்க உரிமை பெறாவிட்டால் வேறு எவரே உரிமை உடையவர்கள் !
‘சொந்த அரசியலும் புவிச்சுகங்களும் மாண்புகளும் அந்தகர்க்குண்டாமோ கிளியே, அலிகளுக்கின்ப முண்டோ! ஆம் அதோ பாரதியாரின் குரல் கேட்கிறது, கேளுங்கள்: உற்றுக் கேளுங்கள் உணர்வு பெறுங்கள்.
9. மெய்யான செல்வம்
சோவியத் பயனத்தின்போது, நாங்கள் யால்டா என்ற நகருக்குச் சென்றோம். அந்நகரம் அண்மை வரலாற்றில் சிறந்த இடம் பெற்றது, அது கருங்கடல் கரையில் உள்ள அழகிய நகரம்.
அந்நகரில்தான், இரண்டாம் உலகப் போரின் பிற்பகுதியில் முப்பெருந் தலைவர்களின் மகாநாடு நடந்தது. அம் மும்மூர்த்திகள் யார் ?
சர்ச்சில், ரூஸ்வெல்ட் ஸ்டாலின் ஆகிய மூவர். அவர்கள் அங்குக் கூடினர். உலகப் போரை வெற்றிகரமாக முடிப்பதைப் பற்றித் திட்டமிட்டனர். வெற்றிக்குப் பிறகு, உலக அமைதிக்கு என்னென்ன செய்யவேண்டுமென்றும் கலந்து ஆலோசித்தனர். விரிவாகத் திட்டமிட்டனர்.
தலைவர்கள் கூடிய அந்நகருக்கு, தொண்டர்களாம், கல்வித் தொண்டர்களாம், நாங்கள் மூவரும் போய்ச் சேர்ந்தோம்.
அந்நகருக்குப் பல கிலோமீட்டர் துரத்திலிருந்தே, கருங்கடலை அடுத்து, பலப்பல பெரிய அழகிய மாளிகைகளையும் கட்டிடங்களையும் கண்டோம். அதோ அந்த மேட்டிலே தெரிகிறதே அம்மாளிகை....கோமகனுடையது. அது அந்தக் காலம் பிரபுத்துவம் போய்விட்ட காலம் இது. இப்போது, அம்மாளிகை.......நெம்பர் தொழிற்சாலைத் தொழிலாளர்களுடைய நலவிடுதி”
“இதோ கடலை யொட்டியுள்ள கடலகம், முன்பு ஒரு கோடீசுவரனுடைய மாளிகை.இன்று ஆசிரியர்கள் நலவிடுதி,” இப்படிப் பல பெரிய கட்டிடங்களை சுட்டிக் காட்டினார். எங்களைச் சிம்பராபல் விமான நிலையத்திலிருந்து அழைத்துக் கொண்டு போனவர் ஒவ்வொரு சாராருக்கும் ‘நலவிடுதி’ என்று குறிப்பிட்டு வந்தார்.
“ நலவிடுதி என்றால் என்ன?” எனும் ஐயத்தைக் கிளப்பினோம்
“உடல் நலத்திற்கேற்ற தட்ட வெப்பநிலையும், நற்காற்றும், இயற்கைச் சூழ்நிலையும் உடைய பல மலையூர்களையும் கடற்கரைப் பட்டினங்களையும் ஆரோக்கிய ஆஸ்ரமங்களாகக் காத்து வருகிறார்கள். பலதுறைகளிலும் பாடுபடும் பாட்டானிகளும், அலுவலர்களும் ஊழியர்களும் ஆண்டுக்கு ஒருமுறை விடுமுறையில் அத்தகைய இடங்களுக்குச் சென்று தங்கி ஒய்வு பெறுவார்கள். உடல் நலத்தோடும் உள்ள ஊக்கத்தோடும் வேலைக்குத் திரும்புவார்கள். இதற்கு வசதியாக இருக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆரோக்கியபுரியிலும் வெவ்வேறு பிரிவுத் தொழிலாளருக்கென்றும் தனித்தனி விடுதி உண்டு.
“எடுத்துக்காட்டாக இரயில்வே தொழிலாளிகளுக்கென்று அவர்கள் தொழிற்சங்கத்தின் பராமரிப்பில் விடுதி அமைத்திருப்பார்கள். அதேபோல மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் விடுதி அமைத்திருப்பார்கள். ஆலை தொழிலாளர்களுக்கென்று ஒரு விடுதி இருக்கும் ஆசிரியர்களுக்கென்று, அவர்கள் சங்கம் ஒரு விடுதியை நடத்தும்.
“இப்படி நாடு முழுவதும், பல ஊர்களில், பல பிரிவினருக்கும் விடுதிகன் இருப்பதால், எளிதாக அதிகச் செலவில்லாமல், விடுமுறை விடுதிகளால் நலம் பெறுகின்றனர் எங்கள் மக்கள்” - இது தோழரின் பதில்.
கருங்கடலைச் சுற்றி இத்தஃகைய நலவிடுதிகள் ஏராளம். இங்கு, அச்சமின்றி கடல் நீராட ஏராளமான இடங்கள் இயற்கையாக அமைந்துள்ளனவாம். கருங்கடலும் அதிக கொந்தளிப்பு இல்லாதது. நாங்கள் சென்றபோது பெரிய ஏரிகளில் வீசுகிற அளவு அலைகூட இல்லை. பல இடங்களில் கரையிலிருந்து நெடுந்தூரத்திற்கு ஆழம் மிகக் குறைவு. எனவே ஆபத்தின்றி கடல் நீராடலாம்.
இதை அறிந்து, நாங்கள் அதற்கேற்ற உடையோடும். மனப்போக்கோடும் யால்டா பேய்ச் சேர்த்தோம். அங்குப்போ ய்ச் சேர பிற்பகல் ஆகிவிட்டது. ஆகவே, உண்டு, சிறிது இளைப்பாறி விட்டு, ஊர் கற்றிப் பார்த்தோம்.
பின்னர் துறையொன்றிற்குச் சென்றோம்; வழியிலே வயோதிகர் ஒருவர் எங்களைக் கண்டார்; வழிமறித்தார்.
அவர் பழுத்த பழமாக இருந்தார்; எங்களுடன் வந்த அம்மையாரை - இந்தியப் பெண்மணியை - உற்றுப் பார்த்தார். கண்ணிர் பொலபொலவென்று உதிர்ந்தது. “பல ஆண்டுகளுக்கு முன் இறந்து போன ஒரே மகளைப் போலவே நீர் இருக்கிறாய் அம்மா ! நீ வாழ்க!” என்று தலைமேல் கையை வைத்து வாழ்த்தினார். தம்மோடு ஒட்டலுக்கு வந்து தேநீர் அருந்தும்படி வேண்டினார். இவற்றை எங்களுக்கு ஆங்கிலத்தில் சொன்ன மொழிபெயர்ப்பாளர் எங்கள் பணிவான மறுப்பை அப்பெரியவருக்குச் சொல்லி அமைதிப்படுத்தி அனுப்பினார்.
பெரியவரின் கண்ணி, என் துக்கத்தை எனக்கு நினைவு படுத்திவிட்டது. பல்லைக் கடித்துக்கொண்டு, மற்றவர் காணாவண்ணம் சமாளித்துக் கொண்டேன். படகுத் துறையைச் சேர்ந்தோம். மோட்டார் படகொன்றில் ஏறி,கருங்கடலில் பல மணிநேரம் பயணஞ் செய்து திரும்பினோம். இனிய, அதிகக் குளிரில்லாத நற்காற்று எங்களை உற்சாகப்படுத்தியது.
மொழிபெயர்ப்பாளரும் வழிகாட்டியும். ஏதேதோ சொல்லிக்கொண்டு வந்தார்கள். என்னுடன் வந்த இந்திய நண்பர்கள் இருவரும் அதைக் கேட்பதும், நோட்டம் பார்ப்பதும், கேள்வி கேட்பதுமாக இருந்தார்கள். பெரியவரின் கண்ணீரால் சென்னைக்குத் திருப்பப்பட்ட என் சிந்தனை,தமிழ் நாட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்தது.
காலஞ்சென்ற அழகப்ப செட்டியார் தமது கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கோடை விடுமுறையில் சென்று தங்கி மகிழ்வதற்காக, கோடைக்கானலில் பங்களா ஏற்பாடு செய்திருந்தது கண் முன்னே நின்றது. அதை ஆசிரியர்கள் பயன்படுத்தாது என் நினைவிற்கு வந்தது. நம் கல்லூரிப் பேராசிரியர்களிடம்கூட, விடுமுறைகளை ஆரோக்கிய புரிகளில் கழிக்கும் மனப்போக்கோ அதற்கான பொருள் நிலையோ இல்லையே என்று ஏங்கிற்று உள்ளம். நம் பிஞ்சுகளையாவது வறுமையின்றி, வாட்டமின்றி துள்ளி வளர வழிசெய் என்றது மனசாட்சி. பள்ளிப்பகலுணவும் சீருடையும் மின்னின. அதற்கும் குறுக்குச்சால் ஓட்டிய நல்லவர்களெல்லாரும் மின்னி நகைத்தனர்.
'அப்பா ! கவலைப்படாதீர்களப்பா ! இங்கு நல்லது செய்யவும் மாட்டார்கள் ; செய்கிறவர்களை சும்மா விடவும்மாட்டார்கள். இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள் என்று, என் மறைந்த மகன் வள்ளுவன் சொன்னதும் மின்னி, உறுதியை வளர்த்தது.
தமிழ்நாட்டின் அரைத்த மாவுப் பேச்சாளர்கள் சிலர், பகலுணவுத் திட்டத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு, 'பஞ்சர்' செய்ய முயன்றபோது, அவன் எனக்குக் கொடுத்த ஊக்க ஒலி அது.
இன்னும் தமிழ்நாட்டில் எங்கெங்கோ பாய்ந்தது. என் சிந்தனை, எத்தனையோ நிகழ்ச்சிகளையும், ஆள்களையும் பிடித்து, விட்டுத்தாவி, மீண்டும் 'யால்டா' வர நெடுநேரமாகிவிட்டது. இதற்குள் படகு திரும்பி வந்து துறையில் நின்றது. வழிகாட்டி ஆண்மகன்-படகிலிருந்து கரைக்குத் தாண்டிக் குதித்தார். நாங்கள் பத்திரமாக இறங்கி வந்தோம்.
அடுத்த நாள் காலை கடலில் குளிக்கத் திட்டமிட்டோம். எங்களோடு சேர்ந்து குளிக்கும்படி வேண்டினோம், வழி காட்டியை. தாம் வந்து எங்களைக் குளிக்க அழைத்துப் போவதாகவும், ஆனால் தாம் எங்களோடு குளிப்பதற்கு இல்லை என்றும் மறுத்தார். நாங்கள் இரண்டொரு முறை வற்புறுத்தினோம். உறுதியாக உணர்ச்சி ஏதும் காட்டாமல் மீண்டும் மீண்டும் மறுத்தார்.
அடுத்த நாள் கலை கடல் நீராட , எங்களை அழைத்துப் போக வந்தார் வழிகாட்டி. அவரை எங்களோடு சேர்ந்து நீராடும்படி மீண்டும் வேண்டினோம். அப்போது கூறின பதில் எங்களைத் திடுக்கிடச் செய்தது. நம்ப முடியவில்லை அச்செய்தியை ஏன் ? அப்போதும் சரி, அதற்கு முன்பும், துக்கத்தின் சாயலை அவரிடம் காணவில்லை. அச்சத்தின் நிழல் படரவில்லை அவர் அழகு முகத்தில்.
தமது கால்களில் ஒன்று பொய்க்கால், என்று அவர் கூறிய போது அதிர்ச்சி ஏற்பட்டது. அப்படியாவென்று வியந்தோம். சென்ற உலகப் போரில், ஈடுபட்டு, காலை இழந்துவிட்டதாக விளக்கம் கூறினார். பின்னர் பொய்க்கால் பெற்றார். அதனோடு வாழ்கிறார். அவரது நடையில் பொய்க்கால் நடையென்று சந்தேகப்படுவதற்கு இல்லாமல் சாமர்த்தியமாக நடந்துகொண்டு வந்தார், அவ்விளைஞர்-அல்ல. முப்பத்தைந்து நாற்பது வயதுடைய-அவர்.
“போரிலே ஈடுபட்டு ஊனப்பட்ட யாரும் சுமையாக உட்கார்ந்ததில்லை. பரிகாரம் தேடிக்கொண்டு, ஏதாவது ஒரு வேலைக்குப் பயிற்சி பெற்றுத் தாமே உழைப்பதைக்காணலாம். அத்தனை பேருடைய உழைப்பும் நாட்டின் வளத்திற்குத் தேவை. பலரும், சென்ற காலத் தியாகத்தைக் காட்டி, வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தால், நாட்டில் வளர்ச்சியும் வளமும் எப்படி ஏற்படும் ?” இது, அவரது படப்பிடிப்பு எங்களிலே ஒருவருக்குக் காய்ச்சல் வருவதுபோல் இருந்தது. அதைச் சாக்காகக் காட்டி, நாங்களும் குழாய் நீராடி, உண்டுவிட்டு, ‘ஆர்டெக்’ மாணவர் நலவிடுதிக்குச் சென்றோம்.
ஆர்டெக் மாணவர் இல்லத்தைக் காணும் பொருட்டே நாங்கள் இவ்வளவு நெடுந்தூரம் வந்தோம். நாங்கள் சென்ற போது உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் பலர், நீராடிவிட்டு தங்கள் அறைகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் எங்களைக் கண்டதும் வணக்கம் கூறிவிட்டுச் சென்றனர்.
இல்லப் பொறுப்பாளர், எங்களை அழைத்துக் கொண்டு போய் பல இடங்களையும் காட்டினார்; இந்த இல்லம் கருங்கடல் கரையோரத்தில் கட்டப்பட்டிருக்கிறது. அறுநூறு பேர் ஏககாலத்தில் தங்கக்கூடிய அளவில் விடுதி ஒவ்வொன்றும் இருந்தது. இப்படி மூன்று விடுதிகள்.தனித்தனியே அவை வளைவுக்குள் இருந்தன. நான்காவது விடுதியொன்றை கட்டிக் கொண்டிருந்தனர். அது முடிந்தால் 2400 பேர் ஒரே நேரத்தில் தங்கலாம்.
இவை, உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்காக தனித் தனியே ஒதுக்கப்பட்டவை. இருபாலரும் அங்கு தங்கியிருக்கக் கண்டோம். இது, நாடு முழுவதற்குமான, மாணவர் இல்லம். ஆகவே பல இராச்சியங்களிலிருந்தும் இங்கு வந்து தங்குகிறார்கள். பதினைந்து நாள்களுக்கு மட்டுமே இங்குத் தங்கலாம். ஆண்டு முழுவதும் இல்லம் திறந்திருக்கும். ஆண்டு முழுவதும், இல்லம், விடு முறையின்றி நிறைந்திருக்கும்.
மாணவர் இங்கு வருவது தங்கள் விருப்பப்படியல்ல. பள்ளிப் படிப்பிலோ, விளையாட்டிலோ சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவியரே இங்கு வரலாம். அந்நிலை பெற்றவர்களுக்கு, முறைப்படி இடம் கிடைக்கும். எந்த மாதத்தில் என்று சொல்லமுடியாது. விடுமுறைக் காலத்தில் இல்லாமல் பள்ளிக்கூட காலத்திலும் முறை வரலாம்.
“பள்ளிக்கூட காலத்தில் பதினைத்து நாள் அங்கு வந்து விடுவதால் படிப்புக் கெட்டுப் போகாதா?” இக்கேள்வியைக் கேட்டோம்.
அங்குள்ள முழு உயர்நிலைப்பள்ளியைக் காட்டினர். எல்லா வசதிகளும் உள்ள பள்ளி அது. போதிய ஆசிரியர்களும் கருவிகளும் உள்ள பள்ளி அது. பாடம் நடந்துகொண்டிருக்கும் பள்ளி அது. சிறப்பிடம் பெறாதவர்களுக்கு அங்குத் தங்க வாய்ப்பு இல்லையா ? உண்டு நூற்றுக்கு இருபது இடத்தை அப்படிப்பட்டவர்களுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். இதில் வருகிறவர்கள் செலவிற்குப் பணம் கொடுக்க வேண்டும். சிறப்பிடம் பெற்றவர்களுக்கு இலவசத் தங்கல், உணவு.
கடற்கரைக்குச் சென்றோம். மாணவ. மாணவியர் பலர் நீந்தக் கற்றுக்கொண்டிருந்தார்கள். அதற்கென்று நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் உடன் இருந்து கற்றுக் கொடுத்தார்கள். அங்கு ஆழமும் இல்லை; அலையும் இல்லை. அரை கிலோ மீட்டர் துரங்கூட அப்படியே இருக்குமாம். ஆகவே, மூழ்கிப் போவோமோ என்ற அச்சமின்றி மகிழ்ச்சியோடு அவர்கள் நீந்தப் பழகிக் கொண்டிருந்தனர்.
இல்ல வளைவில் ஒருபால், பலர் பாடல்கள் பயின்று கொண்டிருந்தனர்; மற்றொருபால், பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்; சிலர் ஓடி வந்து எங்களைப் படமெடுத்தனர்.
இதைப் போன்ற மாணவர் இல்லம் சில, இராச்சியம் தோறும் உண்டாம். வளரும் மாணவர், மகிழ்ச்சியோடும், உடல் நலத்தோடும், உள்ள ஊக்கத்தோடும் வளர வேண்டும் என்பதில் தான் எத்தனை அக்கறை! எத்தனை கவனம் !
அடுத்த நாள், 'யால்டா' விலிருந்து கீவ் நகரத்திற்குப் புறப்பட்டோம். 'சிம்பராபல்' நகர விமான நிலையம் வரை வந்தார் வழிகாட்டி. பேச்சு பலவற்றின் மேல் பறந்தது.
“மெய்யான செல்வம் மக்கட் செல்வமே. குழந்தைகள் குழந்தைகளாக மகிழ்ந்தாட வேண்டும், சிறுவர் சிறுமியர் சுமையேதுமின்றிச் சிரிப்போடும் துடிப்போடும் துள்ளி வளர வேண்டும். இளைஞர் இணையற்ற ஊக்கத்தோடும் அறிவோடும் ஆர்வத்தோடும் வளரவேண்டும். வாலிபர் வலிமை மிக்கவர்களாக, ஆற்றல் மிகுந்தவர்களாக, கூடித் தொழில் புரிபவர்களாக, பொறுப்புள்ளவர்களாக வாழ வேண்டும். இந்நிலையை உருவாக்குவதற்கு வேண்டியதை யெல்லாம் செய்து வருகிறார்கள். எங்கள் நாட்டில்...”-வழிகாட்டி பேச்சை முடிக்கவில்லை. நான் குறுக்கிட்டேன்.
இவ்வளவு நன்முயற்சிகளுக்கிடையில், போர் என்ற பெயரால், எத்தனை உயிர்களைப் பலியாக்கி விடுகிறோம். எத்தனை காளையர் கால் இழந்து, கையிழந்து, கண் இழந்து அவதிப்படுகிறார்கள். நல் வளர்ச்சி ஒரு பக்கம். பெரும் அழிவு ஒரு பக்கம். என்ன உலகம்” என்று அங்கலாய்த்தேன்.
“ஆம். போர், பெருங்கொடுமை. அது கொள்ளும் பலி, பல இலட்சம். அது விட்டுச் செல்லும் ஊனர்கள் அதைவிட அதிகம். இதைவிடக் கொடுமை-பெருங்கொடுமை-ஒன்று மில்லை. இதை நாங்கள் அண்மையில் அனுபவித்தவர்கள். ஆகவே, அமைதியை, ஆர்வத்தோடு விரும்புவர் ' என்று பரவசத்தோடு பகன்றார்.
சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா ? சண்டையால் உலகம் உடைவது நன்றா? சண்டையால் நொண்டியாவது நன்றா?
10 இலண்டனில்
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐமபத்தோரோவது ஆண்டு, ஜூலைத் திங்களில் ஒரு நாள், நான் இலண்டனில், முதியோர் கல்விக்கூடமொன்றைக் கண்டேன்.
குறிப்பிட்ட தெருவை அடைந்ததும், வழிப்போக்கச் ஒருவரிடம் முதியோ கல்விக்கூட முகவரியைக் காட்டி, அடையாளம் காட்ட வேண்டினேன்.
அவர், நான்கு கட்டிடங்களுக்கு அப்பால் இருந்த பெரிய கட்டிடம் ஒன்றைச் சுட்டிக் காட்டினார்.
அங்குச் சென்றேன். கல்விக்கூட முதல்வரைக் கண்டேன். அவர் அன்போடு வரவேற்றார். கனிவோடு பதில் உரைத்தார். எங்கள் உரையாடலின் சாரம் இதோ :
இக்கல்விக் கூடத்தில் அறுபத்து நான்கு வகைப் பாடங்கள், பயிற்சிகள் நடக்கின்றன. இங்கு நடக்கும் முதியோர் கல்வி, முதற்படிப்பு அல்ல; தொடர் படிப்பு ஆகும். எந்த வகுப்பிலும் ஒரு குறிப்பிட்ட பொதுப் பரீட்சைக்கு ஆயத்தஞ் செய்வதில்லை.
ஏற்கெனவே, உயர்நிலை வரையிலோ தொடக்க நிலை வரையிலோ படித்தவர்களுக்கு இக்கல்வி நிலையம். அவர் கஞக்கும் சாதாரண கல்லூரிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் நடக்கும் பாடத்திட்டத்தை ஒட்டி, பாட முறைகளை அமைப்பதில்லை.
முதியவர்களான பிறகு, புதுப்புதுக் கல்வி ஆசை எழுவதுண்டு. தமது தொழில் முன்னேற்றத்திற்கோ ஏதாவது ஒரு துறையில், படிக்கவோ பயிற்சி பெறவோ ஒருவர் விரும்பலாம். இக்கல்விக் கூடத்தில் சேர்ந்து, விரும்பிய படிப்பில் அல்லது பயிற்சியில் ஈடுபடலாம்.
இங்குச் சேர்த்துக்கொள்ள, நுழைவுச் சோதனை ஏதும் இல்லை. பாடங்களில், ஒரே நிலை வகுப்பும் இல்லை. குறிப்பிட்ட பாடத்திலேயே இரண்டு மூன்று நிலை வகுப்புகள் நடக்கும்.
அப்படியானால், எந்த அடிப்படையில் எந்த வகுப்பில் மாணவர்கள் சேர்ந்து பயில்வது?
மாணவர், தான் எந்த நிலைக்குத் தகுதி என்று நினைக்கிறாரோ, அந்நிலை வகுப்பாசிரியரோடு கலந்து பேசி, அவ்வகுப்பிலேயே சேரலாம்.
இக்கல்விக்கூட சேர்க்கையிலோ, வகுப்பு மாற்றத்திலோ,பாட முறையிலோ கெடுபிடி கிடையாது குறிப்பிட்ட பொதுப் பரிட்சையில் தேற வைப்பதன் மூலமே நற்பெயர் எடுக்க வேண்டிய நெருக்கடியும் இல்லை ! ஆகவே பாடப் போக்கிலே, நெளிவு சுளுவைக் காணலாம். ஏற்ற இறக்கத்தைக் காணலாம். ஒரு பகுதியை வேகமாகக் கடப்பதையும் மற்றொரு பகுதியை மெல்லக் கடப்பதையும் காணலாம்.
கெடுபிடிகள் இன்றி, நம்பி விட்டிருப்பது இக்கல்விக் கூடத்தை. மட்டுமா ? இல்லை. எல்லா முதியோர் கல்விக் கூடங்களும் இத்தகைய சுதந்திரத்தோடு இயங்குகின்றன.
முதியோர் கல்விக்கூடங்கள் அத்தி பூத்தாற்போல் ஒன்றிரண்டல்ல ; புலப் பல நாடு முழுவதிலும் பரவிக் கிடக்கின்றன, இந்நிலை முதியோர் கல்வி நிலையங்கள்.
இவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? ஆம் ஏராளமானவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அதனால்தான், அம் மாடிக்கட்டிடத்தின் ஆறு மாடிகளும் நூற்றுக்கணக்கான அறைகளும் இக்கல்வி நிலையத்திற்கே சரியாகிவிட்டன. ஆண்களைப் போலவே பெண்களும் முதியோர் கல்விநிலையங்களைப் பயன்படுத்துகின்றார்கள்.
எங்கள் உரையாடல் முடியவில்லை. நடுவில் ஒரு அம்மையார், முதல்வர் அறைக்குள் நுழைந்தார். என் பக்கம் திரும்பினார். " இரண்டு நிமிடம் குறுக்கிடலாமா?" என்று கேட்டார். "சரி" என்றேன். முதல்வரிடம் பேசினார். நாற்காலியில் அமர்ந்து பேசினார்.
" நான் இடைநிலை தத்துவ வகுப்பு மாணவி. இரண்டு மூன்று வாரங்களாக அவ்வகுப்பில் இருக்கிறேன் ஏற்கெனவே, மூன்று, நான்கு, தத்துவ நூல்களைப் படித்திருந்த தைரியத்தில், நேரே இடைநிலை வகுப்பில் சேர்ந்து விட்டேன். இப்போது அது, அதிகப்படி என்று தெரிகிறது அவ்வகுப்புப் பாடங்களை என்னால் சமாளிக்க முடியாது. கீழ்நிலை, தத்துவ வகுப்பில் சேர்ந்தால் சமாளிக்க முடியுமென்று நினைக்கிறேன். இப்போது மாற்றிக்கொள்ள முடியுமா? இல்லையென்றால் நின்று விடுகின்றேன் ; அடுத்த பருவத்தில் வந்து, கீழ் நிலை, தத்துவ வகுப்பில் சேர்ந்து கொள்கிறேன், சரிதானா ? " இது அம்மையாரின் விண்ணப்பம்.
" தயவு செய்து கவலைப்படாதீர்கள். அடுத்த பருவம் வரை காத்திருக்க வேண்டா, இப்போதே வகுப்பு மாற்றம் செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து படியுங்கள். இதோ, மாற்றச் சீட்டு ;எடுத்துக்கொண்டு போய், வகுப்பு மாறிப் படியுங்கள், மேலும் சிக்கல் வந்தால் என்னிடம் வந்து சொல்லத் தயங்காதீர்கள். இனிமையோடும், உறுதியோடும், ஆர்வத்தோடும் வந்த பதில் இது.
முதல்வர், வகுப்பு மாற்றச் சீட்டை எழுதிக் கொடுத்தார், அந்த அம்மையாரிடம். அவரும் மகிழ்ச்சியோடு அதைப் பெற்றுக் கொண்டு சென்றார். நன்றி கூறி விட்டுச் சென்றார். என் பக்கம் திரும்பி, உரையாடலில் குறுக்கிட்டதற்காக, மன்னிப்புக் கேட்டுவிட்டு வெளியேறினார்.
அவர் கண்களில் நம்பிக்கையொளி வீசிற்று. ஐம்பது வயதிற்குமேல் மதிப்பிடக்கூடிய அந்த அம்மாளின் கண்களிலே நம்பிக்கையொளி. புதுத் துறைக்கல்வி யொன்றைக் கற்றுத் தேறப் போகிறோம் என்கிற நம்பிக்கையொளி.
இங்கோ, இளைஞர்களுக்குக்கூட, நம்பிக்கை இழந்த, வெறுப்பு நிறைந்த கண்கள். எனவே, அழிவு வேலை ஈடுபாடுகள் ! யாரை நோக ?
அந்த அம்மானின், முந்திய, தவறான முடிவைப் பற்றிக் குட்டி உபதேசமொன்று செய்வார். முதல்வர் என்று எதிர்பார்த்தேன். அவரோ அறவுரை நிகழ்த்தவில்லை; அம்மாளின் தவறைக் காட்டுவதன்மூலம், தான் உயர முயலவில்லை. விரைந்து உதவி, உயர்ந்து விட்டார் மாணவியின் ஊக்கத் தளர்வையும் போக்கி விட்டார் ; நம்பிக்கையை வளர்த்துவிட்டார். இவரன்றோ, ஆசிரியர் என்று பாராட்டிற்று என் நெஞ்சம்.
"எவ்வளவு இனிமையாக மாணவிக்கு உதவினீர்கள். அச்சத்தோடும் குழப்பத்தோடும் வந்தவர் ஆண்மையோடும் தெளிவோடும் விடை பெற்றுக் கொண்டாரே" என்று முதியோர் கல்வி நிலைய முதல்வரைப் பாராட்டினேன்.
“முதியவர் பொறுப்புடையவர். தவறு செய்வது மானிட இயல்பு. தவறை மிகைப்படுத்தி, மாணவர்களைக் குட்டுவது, இளைஞர்கள் விஷயத்திலேயே ஆகாது. முதியவர்கள் விஷயத்தில், அம்முறையைக் கொண்டால், சொல்லாமல் நின்று விடுவார்கள் ஒவ்வொருவராக.
" தன்னிச்சையாக, நினைத்த வகுப்பிலே சேரவிட்டால் என்ன கேடு ? அவர்களே, தங்கள் திறமையை அறிந்து, கொள்ள உதவியது, அது. மேல்நிலை முடியாதென்று உணர்ந்தபோது, தானே, கசப்பு ஏதும் இல்லாமல், கீழ் நிலைக்குச் செல்ல விரும்பினார்.
'சோதனை' என்ற பெயரால், தொடக்கத்திலேயே தாங்கள் தரம் பிரித்தால். பலர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கல்வி நிலையத்தில் சேர்ந்திருக்க மாட்டார்கள். முதியவர்களை 'விட்டுப் பிடிப்பதே' சிறந்தது. யாரும் மனம் நோகாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். தவறு நேர்ந்தால், சிறுமைப் படுத்தக்கூடாது திருத்த மட்டுமே விரையலாம். இதுவே கல்வியை வளர்க்கும் முறை" இது கல்வி நிலைய முதல்வரின் கருத்துரை. பொருள் செறிந்த உரையல்லவா ?
கல்வி, காட்டு முள் அல்ல. தானே வளரும் தாவரமும் அல்ல. அது வளர்க்கப்படும் பயிர், நுட்பப் பயிர். முதியோர் கல்வியோ மிக நுட்பப் பயிர்.
கல்வியாளருக்குப் புலமை மட்டும். போதாது ? பயிற்சி மட்டும் போதாது ; திறமை மட்டும் போதாது ; மனித்த் தன்மையும் வேண்டும்; தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்ற உணர்வு ஊடுருவியிருக்க வேண்டும். நசுக்காமல், குத்தி மகிழாமல், ஊக்கி உதவுபவரே, வளர உரமிடுவோரே, கல்வியாளர்.
टिप्पणियां