கவிஞர் கருணானந்தம்
பவள வாயில்
Some reminiscences of my association with Anna— அண்ணாவுடன் என் அணுக்கத்தில் சில நினைவுக் குறிப்புகள்-இந்த நூலுக்குப் பொருத்தமான தலைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால் நமது தமிழ் மொழிக்கு உள்ள இயற்கையான வளமையினால் "அண்ணா-சில நினைவுகள்" என்று சுருக்கமாகச் சொன்னாலே, இந்நூலின் உள்ளடக்கம் என்ன என்பது புரிந்துவிடும்.
இரண்டு மாதங்கட்கு முன்புவரை இப்படி ஒரு நூல் எழுதுவேன் என நான் எண்ணியதில்லை. 1974-ல் வெளியான "என் அண்ணா காவியம்", இத்தனை ஆண்டுகளாக இரண்டாம் பதிப்பினைக் காணவில்லை. அதனைப் பதிப்பித்தால் போதும் என்று விரும்பினேன். நட்பின் செல்வர் மூவேந்தர் முத்து அப்பணியினைத் தாமே விழைந்து ஏற்றுக்கொண்டார். சிற்சில திருத்தங்களுடன் அஃது இப்போது அச்சாகி வருகின்றது.
சென்ற 15.10.1986 அன்று என்னுடைய 62-ஆவது பிறந்தநாள். அண்ணா வழியில் அதே நோய்க்கு ஆளாகி எதிர்காலத்தைக் கணிக்க இயலாச் சூழ்நிலையில், நாட்களை நகர்த்தி வருகிறேன் நான். வழக்கமாக என்னைக் கண்டு மகிழ அன்று வருகை தந்த நண்பர்கள், ஒரே குரலில் கோரிக்கையொன்றினை என் முன் வைத்து வலியுறுத்தினர்; அண்ணா அவர்களைப்பற்றி நான் உடனே ஒரு நூல் எழுதிடவேண்டும் என்பதே அது.
அருமைத் தோழர்களான மூவேந்தர் முத்து, நல்லரசு, நம்மாழ்வார், தமிழ்ப்பித்தன், தி. வ. மெய்கண்டார், மாமூலன், பூங்கொடி சுப்பய்யா, பி. எல். இராசேந்திரன் ஆகியோர் என்னை வற்புறுத்தவே, வேறு வழியின்றி, எழுதுவதாக வாக்குறுதி வழங்கினேன். என் வலது கட்டை விரலில் பொறுக்கவொண்ணா வலி இருப்பதெல்லாம் அவர்களுக்குத்தெரியாது. என் புறத்தோற்றம் இப்போதும் நன்றாகவே உள்ளது. ஆனால் நான்கு பெரிய நோய்களின் நிலைக்களனாக என் உடல் போராடிக் கொண்டிருக் கின்றது. எனினும் நோய்களின் மருட்டுதலை மறக்க எழுத்து உதவட்டுமே!
அண்ணா அவர்களிடம் 27 ஆண்டுகள் நெடிய தொடர்பு எனக்கு உண்டு. அச்சமோ கூச்சமோ இன்றி அவரிடம் துவக்க நாட்களிலேயே மிக இயல்பாக நான் பழகிடக் காரணமாயிருந்தவர் என் இனிய நண்பர் ஈ.வெ.கி. சம்பத் அவர்களே! இருப்பினும் அண்ணா அவர்களைப்பற்றி இம்மாதிரியான ஒரு நூல் எழுதிட நான் தயங்கினேன். தந்தை பெரியார் அவர்களிடம் சில் ஆண்டுகள் குருகுலவாசம்’ செய்ததுபோலவோ, கலைஞர் அவர்களிடம் அதைவிடப் பல ஆண்டுகள் ஒன்றாக உறைந்ததுபோலவோ, நான் அண்ணா அவர்களிடம் தொடர்ந்து தங்கியிருந்ததில்லை என்பதால்தான்! -
எழுத்தாளர்களான தம்பி அரங்கண்ணலும், நண்பர் தில்லைவில்லாளனும் அண்ணாவிடம் குருகுலவாசம்’ செய்தவர்கள். வீட்டுப் பிள்ளையான தம்பி டாக்டர் பரிமளமும் எழுதத் தெரிந்தவர். அண்ணாவின் அருமைத் தம்பிமார்களில் எழுதுந் திறனும் தகுதியும் உடையார் புலர் இன்னும் இருக்கின்றார்கள். இவர்களெல்லாரும் எழுத முனையாதபோது, நாம் "அண்ணா-சில நினைவுகள்" எழுதலாமா? சரி. நாம் எழுதிய பின்னரே னும் இவர்கட்கு ஒர் உந்துதல் ஏற்பட்டு, அதனால் மேலும் அண்ணாவைப்பற்றிய உண்மையான சில நூல்கள் வெளி வரட்டுமே, எனத் துணிந்தேன்.
நவம்பர் திங்கள் முழுவதும் என் நினைவாற்றலை நன்கு தூண்டிவிட்டு, நாள்தோறும் முற்பகல் ஒன்றும், பிற்பகல் ஒன்றுமாக எழுதினேன். எழுதி முடித்த பின் என் துணைவியாருக்கு மட்டும் படிக்கத் தருவேன். அவர்கள் முகத்தில் நிறைவைக் கண்டதும், தலைப்புச் சூட்டுவேன். பின்னர் இருமுறை படித்துப் பார்த்து: நானே முழுநிறைவு பெறும்வரை திருத்தங்கள் செய்வேன். இப்படியாக அனைத்தையும் ஒரே மாதத்தில் நிறைவேற்றி, அச்சுக்குத் தந்தேன்.
சிறுகதை உத்தியையும், நாடக உத்தியையும் நிறையக் கையாண்டேன். உரையாடல்களை மய்யமாகக் கொண்டே இதனை அமைக்க வேண்டியிருந்ததால், சுவை குன்றாமலிருக்க, எளிய இயல்பான நடையிலேயே எழுதியுள்ளேன்.
என் மாமனார் மன்னார்குடி சி. தம்புசாமி அவர்கள் நினைவிற்கு இந்நூலை உரித்தாக்குகின்றேன்.
நானே வெளியிட்டு, உங்கள் கரங்களில் இந் நூலினை வழங்கிட உதவிய மூவேந்தர் அச்சகத்தார்க்கும், ஒவியர்க்கும், புகைப்பட வல்லுநர்க்கும் நன்றி.
1969 பிப்ரவரி 3 ஆம் நாள்வரையில் நாம் எல்லாரும் எப்படியிருந்தோம் என்பதைத் திரும்பிப் பார்த்துக் கொள்ளவும் இந்நூல் உதவி செய்யும் என நம்பி, என் நினைவில் தேங்கி நின்ற உண்மை வெள்ளத்தைத் திறந்து வடியவிட்டிருக்கிறேன். மறதியினால் ஏதாவது பிழை ஏற்பட்டிருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.
அன்புடன்
S. கருணானந்தம்
முத்துப் பந்தர்
1. விபத்தை மறக்கச் செய்த முடிவு
2. கழகத் தொண்டன் அலுவலரான கதை
3. தலைமை திருமணத்தோடு போகாது
4. கேலிக்குத் துணைபோன வேதனை
5. முன்னால் வந்தது என்னால்
6. தொண்டனைப் பேணிய தலைவன்
7. பத்திரிகை பலமும் பேச்சாளர் எண்ணிக்கையும்
8. புதிராகப் பார்த்த சினிமா
9. காதல் அனுபவம் உண்டா?
10. உலகப் புகழ்பெற்ற படம்
விபத்தை மறக்கச் செய்த முடிவு!
“இதே வார்டில் உனக் கொரு ரூம் தரச் சொல்கிறேன். இங்கேயே அட்மிட் ஆகிப் பார்த்துக்கய்யா. காலில இவ்வளவு பெரிய காயமிருக்கே. கவனக் கொறவா யிருக்கியே!” என்றார் முதலமைச்சர் அண்ணா மிக்க கரிசனத்துடன். பெரிய காயம் ஒண்ணுமில்லேண்ணா. டாக்டர் கலாநிதி இங்கே G.H.க்கே வந்து எனக்கு A.T.S. இஞ்செக்ஷன் போட்டு, இத்தைல் கிளிசரைன் மருந்து வைத்து பேண்டேஜும் அவரே கட்டிவிட்டார். நீங்க அந்தக் கருப்பு மருந்தைப் பார்த்துதான் பயந்துட்டீங்க” என்று பதில் சொல்லிக்கொண்டே காயத்தையும் வலின்ய யும் மறைக்க முயல்கிறேன். உள்புற அறையில் கலைஞர் காயங்களுடன் படுத்திருக்கிறார். இரவு நேரம்.
அன்று காலை 4 மணிக்குத் தொழுப்பேடு அருகில் கார் விபத்து. மூன்று முறை கரணம் போட்டு மல்லாந்து கிடந்த காரில் பயணம் செய்தவர்கள் யாரும் உயிர் பிழைத்திருக்க முடியாது என்றே காரின் சேதத்தைப் பார்த்தவர் எண்ணினர். ஆனால் கலைஞருக்குத்தான் முகத்தில் கண்ணாடித் தூள்கள் நிறைய செருகிக் கொண்டன. மதுரைமுத்துவுக்கு இரண்டு கைகளிலும் அடி. புலவர் பொன்னிவளவனுக்கு லேசான அடிதான். எனக்கு இடது காலில் சிறாய்ப்பு. டிரைவர் பாண்டியன் ஆறுமாதம் படுக்கையில் கிடந்தார். விபத்துக்குள்ளான காரிலிருந்து ஒவ்வொருவரையும் தூக்கி வெளியே கொணர்ந்து, காவலர் ஜீப்பில் ஏற்றித் திண்டிவனம் மருத்துவமனைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தவன் நான்தான். சென்னைக்கு Phone செய்து, செய்தி சொன்னவனும் நானே. சிறிது நேரத்தில் அதிகாரிகள் வந்து, அமைச்சரான கலைஞருடைய உடல்நலத்துக்குப் பொறுப்பேற்றபின்-சென்னை சென்று கலைஞருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதல் சொல்ல வேண்டிய பொறுப்பிலுள்ளவனும் நானே. வழக்கறிஞர்களான வேலூர் நாராயணன், நா. கணபதி இருவரும் காரிலிலேயே திண்டிவனம் வந்து கலைஞரைப் பார்த்ததும் அவர்கள் காரில் சென்னை திரும்பிக் கடமைகளை முடித்தேன்.
முதலமைச்சர் அண்ணா அவர்களே திண்டிவனம் சென்றார்கள். கலைஞரை ஆம்புலன்சில் ஏற்றி, மாலையில் சென்னைக்குக் கொண்டுவந்தனர்.
என் உடலில் வேட்டி, துண்டு இல்லாமல், ஜிப்பா மட்டுமே இருந்தது. திண்டிவனம் தங்கவேல் தனது வேட்டி துண்டுகளைக் கொணர்ந்து தந்தார். அந்தக் கோலத்தில், மாற்றுடையில்லாமல், இரவு மாயவரத்துக்கு Call போட்டு என் உடல்நிலை குறித்து அஞ்சவேண்டாம் என்று நானே பேசி, துணிகள் கொணரவும் சொன்னேன்.
உளமார்ந்த அக்கறையுடன் அண்ணா என்னை விசாரித்துக், கவலைப்பட ஏதுமில்லை எனத் தெளிவாக உணர்ந்தபின், “சரி, அப்ப, எங்ககூட வீட்டுக்கு வா. தர்மலிங்கம், நீயும் வா!” என்று அழைத்தார்கள், அவர் (அண்மையில் மறைந்த) திருண்ணாமலை தர்மலிங்கம்.
மொட்டை மாடியில் போய் அமர்ந்தோம். “இங்க பார்! இப்ப என் இடத்திலே, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு, முரசொலி மாறனை நிறுத்தலாம்னு நான் முடிவு பண்ணிருக்கேன். சீக்கிரமே பைஎலக்ஷன் வந்துடும். கருணாநிதி ஒத்துக்கலெ! வீட்டிலே அவுங்க அக்கா எல்லாருமே வேண்டாம்ண்ணு சொல்றாங்களாம். நீ அவுங்க எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி ஒத்துக்க வக்கணும். அது உன்னாலெதான் முடியும்—” என்றார் அண்ணா என்னிடம். பெரிய பொறுப்பான ஒரு சுமையை என் தலையில் இறக்கிவைத்த நிம்மதி அவர் முகத்தில் பொலிந்தது. தர்மலிங்கம், “சரிங்கண்ணா! கலைஞரை நான் சரிப்படுத்தறேன். வீட்டில் அக்காமார் களிடம் இவர் பேசட்டும்” என்று, பாதிச்சுமையை அவர் ஏற்றுக்கொண்டார். மீதி என்னிடம், உடனேயே G.H. திரும்பினோம் நாங்களிருவரும்.
“அய்யய்யோ.வேனவே வேணாங்க. அது ரொம்ப சின்னப்பிள்ளை. டெல்லிக்குப் போயி அது எங்க தனியா இருக்கப் போவுது. வீட்டிலேருந்து ஒரு பிள்ளயத்தான் பொது வேலைக்கு அனுப்பிட்டோம். இது வா வது குடும்பத்தைக் கவனிக்கட்டும். கெடுத்துடாதீங்க. அண்ணா கிட்டே நீங்களே சமாதானம் சொல்லுங்க” என்று கலைஞரின் பெரியக்கா சின்னக்கா இருவருமே பிடிவாத மாய் என்னிடம் சொன்னார்கள்,
அண்ணா வைத்த குறி தப்பவில்லை. தர்மலிங்கமும் நானுந்தான் இறுதியில் வெற்றி பெற்றோம். இடைத் தேர்தலில் மாறன், அண்ணாவைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மைனர் மோசசும் நானும் இணையாக ஒரு மாதம் அரும்பாடு பட்டு உழைத்தோம்.
பி. ஏ. ஆனர்ஸ் பட்டம் பெறும்போது தியாகராஜ சுந்தரம்; “முரசொலி”ப் பொறுப்பேற்றபோது நெடு மாறன்; நாடாளுமன்றத் தேர்தலுக்கு நின்றபோது முரசொலி மாறன். அன்று முதல் இன்று வரை தம்பியை யாரும் பெயர் சொல்வதில்லை; எம். பி. என்றே வீட்டிலும் வெளியிலும் அழைக்கிறார்கள்!
1967 செப்டம்பர்.தஞ்சையில் அண்ணா கவியரங்கத்தில் பங்கேற்கச் சென்றபோது-கார்விபத்துக்குள்ளான அன்றே, ஆஸ்பத்திரி வார்டில் வைத்து, அண்ணா எடுத்த முடிவும் முயற்சியும் வெற்றிபெற, நானும் முக்கிய கருவியா யிருந்தேன் அல்லவா?
கழகத்தொண்டன் அலுவலரான கதை
இல்லறத்தை வெறுத்து ஒதுக்கிவிட்டுக் காவி கமண்டலம் தாடி மீசையோடு நாடோடியாய்ப் போன ஒருவன், மீண்டும் துறவறத்தைத் துறந்து, இல்லறத்தை ஏற்றுக்கொண்ட கதைதான் என் கதையும். அரைக்கிணறு தாண்டியது. போல, இண்ட்டர்மீடியட் தேர்வு எழுதி விட்டுக் கல்லூரிப் படிப்பைத் தொடராமல் விடுத்துத், திராவிடர் இயக்கக் கொள்கைகளின்பால் ஏற்பட்ட காதல் வெறியால் ஈரோடு சென்று, அங்கே தங்க நேரிட்டது, அண்ணா. அவர்களால் ஈர்க்கப்பட்ட காரணந்தான். பின்னர், கழகப் பணிகளில் முழு நேரம் மூழ்கி நிற்காமல், பகுதி நேரப் பணியாற்றினாலே போதும் என்ற முடிவு மேற்கொண்டு, மத்திய அரசு ஊழியராக மாறியதும் அண்ணா அவர்களின் தூண்டுதலால்தான்! எப்படி?
திருச்சி புத்தூர் மைதானத்தில் 1945 செப்டம்பரில் இரு மாநாடுகள். 29-ஆம் நாள் நீதிக்கட்சி மாநாடு அய்யா அவர்கள் தலைமையில், இதன் வரவேற்புக் குழுத் தலைவர் தி. பொ. வேதாசலம். மறுநாள் சுயமரியாதை இயக்க - மாநாடு திருவெற்றியூர் T. சண்முகம் தலைமையில், இதன்: வரவேற்புக் குழுத்தலைவர் அண்ணா.
மாநாட்டு வேலைகளை முன்கூட்டியே நேரில் கண் காணிக்க, ஒருவாரம். இருக்கும்போதே பெரியார் திருச்சி வந்துவிட்டார். பரிவாரங்களாகிய மணியம்மையார், தவமணி இராசன், நான்-உடன் வந்தோம். டாக்டர், மதுரம் பங்களாவில் தங்கல். அண்ணாவும் இருந்தார்கள். பந்தல் அலங்காரங்கள் முடிந்துவிட்டன, மாநாட்டுக்கு, முதல் நாள் மாலை திடீரென்று பயங்கர மழை பிடித்துக் கொண்டது. பந்தலுக்குக் கீழே சேறாகிவிட்டது. ஆற்று மணல் லாரிகளில் கொண்டுவரப்பட்டது. அதற்கிடையே, உள்ளே தேங்கும் தண்ணிரை வெளியேற்றினால் நல்லது என்றார் அண்ணா. தொண்டர்களாகிய நாங்களே செயலில் இறங்கினோம். நாடகம் நடத்த வந்திருந்த எம். ஆர். ராதா, தனது பேண்ட்டை முழங்காலுக்கு மேல் மடித்துவிட்டு, ஒரு மண்வெட்டியுடன் வேலை தொடங்கினார். எனக்கு அந்தத் தொல்லையில்லை. நான் எப்போதுமே Pant அணிந்ததில்லை. வேட்டிதான். Shoes அணிந்ததுமில்லை. செருப்புதான். ஆகவே வேட்டியை வரிந்து கட்டித் தலையில் முண்டாசுடன் பணியாற்றினேன். ஒரளவு திருப்தி ஏற்பட்டது. தயார் செய்து முடித்து விட்ட அயர்வுடன் மேடையின் ஒரத்தில் அண்ணாவின் அருகே அமர்ந்தேன். நானே அண்ணாவிடம் ஆரம்பித்தேன். அண்ணா! நாளைக்கு இந்தமாநாட்டுக்கு நம்ம திருவாரூர் கருணாநிதியை வரச் சொல்லியிருக்கேன். மாநாடுகள் முடிந்து நாங்கள் அய்யாவுடன் ஈரோடு திரும்புறப்ப, அவரையும் அழைச்சிட்டுப் போயிக் குடி அரசில் சேர்த்துடாலாம்ணு, அய்யாகிட்ட அனுமதி கேட்டேன். சரி, வரச்சொல்லுண்ணார் அய்யா. அவரை ஈரோட்டுல வச்சிட்டு, நான் கொஞ்சம்திருத்துறைப் பூண்டி போகலாம்னு இருக்கேன், பெற்றோர்கிட்டே.”
“நல்ல வேலை செஞ்சே. ஏன்?”
“ஒண்ணு, படிப்பைத் தொடர்ந்துமுடிச்சிப் பட்டதாரி ஆகனும் இல்லே, ஏதாவது உருப்படிப்ான் வேலை தேடிக்கணும்மிண்னு அப்பான்முதியிருக்காங்க!”
அது ஞாயந்தானேய்யா! இவ்வளவு மாசம் ஒன்னெ இங்க இருக்க அனுமதிச்சதே உங்கப்பாவோட பெருந்தன்மைதானே! நீ எவ்வளவு காலம் ஈரோட்டில் இருந்தாலும் அய்யா கூசாமெ சாப்பாடு போட்டுவிடுவார். ஆனா, எத்தனை காலத்துக்கு நீ அப்படியே இருந்துட முடியும்? நாளக்கி ஒனக்கு ஒரு வாழ்க்கை, குடும்பம் அமைய வேண்டாமா? நான் நெனக்கிறேன், ஒனக்கு இனிமே படிப்பிலே கவனம் வராது! அதனாலெ, ஏதாவது ஒரு நல்ல நெலயான வேலையை ஒங்கப்பா மூலியமாகவே தேடிக்க. அப்புறம் ஒய்வு கெடைக்கும்போது கழகப்பணிகளையும் செய்து, வரலாம்-” என்று அண்ணா நெடியதொரு அறிவுரையை அன்புடன் அளித்தார்கள்.
“சரியண்ணா” என்று சொல்லிவிட்டு, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிக் கிடந்தேன் இரவில்.
ஈரோடு திரும்பினோம். ‘மு. கருணாநிதியைக் கொண்டு வந்து இங்கே அமர்த்தியதால், இவன் ஊருக்கு ஒடி விடுவானோ?’ என்று என்னைப்பற்றி அய்யாவுக்குச் சந்தேகம்! அடுத்த நாள் என்னைக் கூப்பிட்டு, “ஏம்ப்பா உன் இனிஷியல் என்ன?“ என்றார் அய்யா; “எஸ்” என்றேன். அவருக்கா தெரியாது! ஏதோ ஒர் பாவனை! என்ன எழுதுகிறார் என்று எட்டிப் பார்த்தேன். “கருப்புச் சட்டைப் படை அமைப்பு. தற்காலிக அமைப்பாளர்கள் ஈ.வெ.கி. சம்பத், எஸ்.கருணானந்தம்” எனச் செய்தி எழுதி, ‘குடி அரசு’ இதழில் வெளியிடச் செய்தார் தொடர்ந்து வாரா வாரம்.
1945 இறுதியில், திருத்துறைப்பூண்டியிலிருந்த பெற்றோரிடம் போய்ச் சேர்ந்ததும் சும்மாயிருக்கவில்லை நான். அரங்கண்ணல் துணையுடன் திராவிட மாணவர் மாநாடும், கருப்புச் சட்டை மாநாடும் நடத்தினேன். தஞ்சையில் RMS சார்ட்டர் வேலைக்குப் பயிற்சியாளராக ஆணை வந்து விட்டது அந்த நேரத்தில்...!
சூசை மாணிக்கம் என்ற அதிகாரி, அப்போது நம் இன இளைஞர்களை நிறைய அலுவலில் சேர்த்தார். வேலையில் சேர்ந்து தஞ்சையிலிருந்தபோது, அண்ணா வந்தார்கள். மிக்க மகிழ்வுடன் ஊக்கமளித்தார்கள். 24 ஆண்டுகள் அந்தப் பணியில் நல்ல ஓய்வுடன் இருந்ததால்தான் ஏராளழான கழகப் பணிகளை நான் செய்ய இயன்றது.
தலைமை திருமணத்தோடு போகாது
"கவிஞர் சத்திரம் இதுதானே? தெருவில் வந்து நின்ற காரின் சத்தத்தோடு போட்டி போடும் கனமான கட்டைச் சாரீரத்தில் யாரோ விசாரிக்கிறார்கள்! திருவரம்பூர் காமாட்சியின் குரல் மாதிரித் தோன்றுவதால் யாரோ தலைவர்கள்தாம் வந்திருக்க வேண்டும் என யூதித்து வெளியே ஒடினேன். முற்பகல் நேரம், நான் நினைத்தது முற்றிலும் மெய்யே! என்னை வியப்பில் ஆழ்த்திய வண்ணம் அண்ணா இறங்குகிறார்கள். தொடர்ந்து நடிப்பிசைப்புலவர் கே. ஆர். இராமசாமி, பின்புறத்திலிருந்து பெரியவர் பூவாளுர் அ. பொன்னம் பலனார், அவருக்குப் பின்னால் இருவர் எனக்கு அறிமுகமில்லாத ஆணும் பெண்ணுமாய் நடுத்தர வயதினர்!
எல்லாரையும் மரியாதையுடன் வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்று அமரச் செய்தேன். அண்ணாவோ வீட்டின் உட்புறத்தைச் சுற்றுமுற்றும் பார்த்தார்கள்.
ஆம். இது சத்திரம் போலத்தான் இருக்கும். மாயவரத்தில் நான் வசித்த 22 ஆண்டுகளிலும் 3 தெருக்களில், 4 வீடுகளில் குடியிருந்துள்ளேன். இது மிகமிகப் பெரிய வீடுதான். 1959-ல் சில நாட்களுக்குமுன் மாயவரத்தில் தி.மு.க. பொதுக்குழு நடந்தபோது, எல்லாத் தலைவர்களும் இங்கே தங்கியிருந்தனர். அவர்கள் மட்டுமல்ல, கலைஞரின் உதயசூரியன் நாடகக் குழுவினரும் இங்கே வசதியாகத் தங்கிட இடமிருந்தது. ஒரு காலத்தில் புகழ் மேவிய கூறைநாடு பட்டுப்புடைவைகளை நெய்வதற்கான தறிகள் இங்கே எத்தனை ஒடினவோ? இன்று இவ்வீட்டின் உரிமையாளர், இதை நிர்வகிக்க இயலாமல், எனக்குக் குறைந்த வாடகைக்கு அளித்திருக்கிறார். பொதுக்குழுவை இங்கேயே நடத்தியிருக்கலாம், முன்பே தெரிந்திருந்தால், என்றார் சம்பத்.
பொன்னம்பலனார் புதிதாக வந்தவர்களை எனக்கும் குடும்பத்தாருக்கும் அறிமுகம் செய்தார். என் துணைவி யார் பொறுப்பில் அவர்களை உட்புற அறையில் தங்கச் செய்தேன். கே. ஆர். ஆரும், காமாட்சியும் பிரம்மாண்டமான திண்ணையை அலங்கரித்தனர்.
“என்ன கருணை ஆனந்தம்? நான் ஒரு சொந்த வேலையா இப்ப வந்திருக்கேன். 2, 3 நாள் தங்குவோம். நீ உன் dutyயை adjust செய்துகொண்டு எங்களோடு இருக்க முடியுமா?” என்று அண்ணா என்னைக் கனிவுடன் வினவிட-இதைவிட எனக்கு வேற ஒண்னும் முக்கியமில்லே அண்ணா. அதெல்லாம் சரிசெய்து கொள்வேன்” என்றேன். “சரி, அப்படியானால்-நமது செம்பனார் கோவில் கணேசனை உடனே வரவழைக்க முடியுமா?” என்றவுடன், ‘இதோ ஆளனுப்புகிறேன்’ என்ற நான் ராசகோபாலனை அழைத்து, “அடேய், விளநகர் கணேசன் இங்கே லட்சுமி ஸ்டுடியோவில் இருக்கிறாரா பார். இல்லா விட்டால் நீயே செம்பனார் கோயில் போய், கையோடு அழைத்துவா” என்று விரைவாக அனுப்பினேன்.
அதற்குள் அண்ணா வந்திருக்கும் செய்தி எப்படியோ பரவிட, கழகத்தார்களான கிட்டப்பா, பழனிச்சாமி எல்லாரும் என் வீட்டில் குழுமிவிட்டனர். அண்ணா, அவர்களைப் பார்த்து அன்புடன், “நான் ஒரு சொந்த வேலையா வத்திருக்கேன். இரண்டு நாள் இருப்பேன். அந்த வேலை முடிந்த பிறகு பார்க்கிறேன்” என்று அனுப்பி வைத்தார்.
கணேசனும் வந்துவிட்டார். தம்முடன் வந்தவர் களிடம் கணேசனை அறிமுகம் செய்த பின், அவர்களை யெல்லாம் உள்ளே போகச் சொன்னார். “ரொம்ப சங்கட மான மனசோடு நான் இப்ப வந்திருக்கேன்! கொஞ்சநாள் முன்னாலே, புதுக்கோட்டையில், இவர்கள் பெண்ணின் திருமணம் என் தலைமையில் நடந்தது. மாப்பிள்ளை செம்பனார் கோயில். உனக்குத் தெரியுமா?” என்று அண்ணா கணேசனைக் கேட்டார். “திருமணத்துக்கு நான் வரமுடியலே. பையனைத் தெரியும். பெயர்....B. T. வாத்தியாரா இருக்கான். நம்ம அனுதாபிதான்” என்றார் கணேசன். ஏராளமான சீர்வரிசைகளுடன், பெண்ணை மகிழ்வாக மணமகன் வீட்டுக்கு நம்பி அனுப்பியவர்கள், ஏமாந்தார்கள்! பெண் அங்கு வாழ முடியாமல் ஊருக்கே திரும்பிவிட்டது! இந்தச் சேதி உனக்குத் தெரியுமா?!“ என்னும்போது அவர் திடுக்கிட்டார். “தெரியாதண்ணா! ஏன்?” என்று கேட்டார்.
“அதைத்தான் நீ சரியாகத் தெரிந்து சொல்லணும். முடிஞ்சா, அந்தப் பையனை இங்கு அழைத்து வரணும். நிதானமா நடந்துக்கணும். போய் நாளைக்கு வா!”
எனக்கு விவரிக்கவொண்ணாத வியப்பு. ஒரு சீர் திருத்தத் திருமணத்தில் தலைமை தாங்குகிறவருக்கு இவ்வளவு பொறுப்புகளா? ஒரு புரோகிதர், தாம் நடத்திய திருமண மக்களைப் பற்றி இப்படி நினைத்துப் பார்ப்பதுண்டா?
கணேசன் மறுநாள் காலையில் தனியாக வந்தார். முகம் பிரகாசமாயில்லை. என்ன சங்கதி? பையன் நல்லவனென்று நினைத்தது தவறாகப் போய்விட்டதாம். துருவி விசாரித்ததில் மிகமிக ஒழுக்கக்கேடனாம்; ஏராளமான பெண்களுடன் உறவாம்! ஏற்கனவே மனைவி ஸ்தானத்தில் ஒரு பெண்ணும், அதற்கொரு பிள்ளையும் இருக்கிறார்களாம்! புதிய இந்தச் செய்திகளை ஒரளவு யூகித்திருந்தாலும் அண்ணா மனமொடிந்து போனார்! “அந்தப் மையன் வருவானா? நேரில் பேசிப் பார்க்கலாம்!” என்று சொன்னார் அண்ணா,
மாலையில் அந்த ‘மணமக’னோடு கணேசன் வந்துவிட்டார். சும்மா என் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லியே அழைத்து வந்தாராம். அண்ணா அவர்களையும், தன் மாமனார் மாமியார், மற்ற பெரியவர்களையும் பார்த்ததும் பையன் பயந்துபோய்விட்டான். அப்போதும் எல்லாரையும் உள் அறைக்குப் போகச் சொல்லிவிட்டு, அண்ணா அந்தப் பையனிடம் அருளொழுகப் பேசினார். எப்படியோ அவன் திருந்தி நல்ல ஒழுக்கமுள்ளவனாக மாறி, அந்தப் பெண்ணோடு மட்டும் வாழ்க்கை நடத்த மாட்டானா என்ற ஆதங்கம் அண்ணாவின் உரையாடலில் தொனித்தது. ஆனால்...... ஆனால்...... அவன் சொல்கிறான்: “என்னால் முதல் சம்சாரத்தைக் கைவிட முடியாது. இந்தப் பெண்ணையும் சேர்த்துக் கொள்கிறேன். தடையில்லை” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் இது காறும் பொறுமையின் உச்சியில் நின்ற அண்ணா, கணமும் காக்க முடியாத வெகுளியின் உச்சிக்கே சென்று, உரத்த குரலில், “நீ பெரிய தசரதச் சக்கரவர்த்தி! எத்தனை பெண்டாட்டி வேணும்னாலும் வச்சிக்குவியோ? ஒழுக்கம் எவ்வளவு சிறந்ததுண்ணு யோசிச்சுப் பார்த்தியா? நீயெல்லாம் படிச்சது ஒரு படிப்பா? நீ வாத்தியார் உத்தி யோகம் பார்க்கிற லட்சணம் இதுவா? என்கிட்டவே இப்படிச் சொல்ல உனக்கு எவ்வளவு துணிவு? உன்னிடத்தில் இனி அந்தப் பெண் எப்படி வாழும்?” என்று பொரிந்து தள்ளிவிட்டார். நான் கணேசனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டேன்; இல்லாவிடில் அண்ணாவின் பேச்சுக்கு மாறாக, அவர் செயலில் இறங்கி விடுவார் போலிருந்தது! “சரிசரி, நீ எழுந்து வெளியே போப்பா! நீ எல்லாம் ஒரு மனுசனா?” என்று நான் சொல்லிக் கொண்டே அந்தப் பையனை வெளியில் அழைத்துச் சென்றேன்; காமாட்சி மச்சான், கே. ஆர். ஆர் ஆகியோர் வாயிலில் நிற்கிறார்களே என்கிற அச்சத்தினால்! ஆனால் அவனோ, கவிழ்ந்த தலையுடன் சென்று...... சே!
பெட்டி பெட்டியாய் நகைகள், லாரி லாரியாய்ச் சாமான்கள், சீர்வரிசை திருமண போட்டோ ஆல்பத்தை என் துணைவியும் நானும் கணேசனும் பார்த்தபோது திகைத்துவிட்டோம். இவற்றுக்கு ஆசைப்பட்டு, முன்னரே காதலியுடன் குடும்பம் நடத்தியவன், யோக்கியன்போல் வேடமிட்டு, ஏமாற்றியிருக்கிறான். இந்தப் பெண் வந்த பிறகும் வீட்டு வேலைக்காரிகள், மாட்டுத் தொழுவம் கழுவும் பெண் ஆகியோரிடமும் விளையாடியிருக்கிறான் காமவெறியன். அந்தப் பெண்ணின் பெற்றோர்க்கு, அண்ணாவும் நாங்களும் மிகவும் ஆறுதல் மொழிகள் சொன்னோம். சட்டரீதியான மணவிலக்குப் பெறுவதென முடிவு செய்யப்பட்டது.
வந்த மூன்றாவது நாள் அண்ணா புறப்பட்டார்கள், ஆர்வம் குன்றிச் சோர்வு மேலிட்ட முகத்துடன்! அவர்களை வழியனுப்பி வைத்தபோது, இத்தனை ஆண்டுகளாக நான் பார்த்துப் பழகிவந்த அந்த அறிஞர் அண்ணா கண்முன் தெரியவில்லை. இலட்சக்கணக்கான தம்பிமார்களின் சுக துக்கங்களில் நேரடியாகப் பங்கேற்று, துயர்களைந்திட அயர்வின்றிப் பணியாற்றும் அருளாளர், அன்பாளர்-ஈடு இணையிலாத இனத்தின் தலைவர் - தனித்த-பெரு மகனார்-அய்யோ நினைக்க நினைக்க என் விழியூற்றுப் பீரிட்டுப் பார்வையை மறைத்தது! நீண்ட நேரமாயிற்று என் கண்ணிரருவி வறண்டு போக!
கேலிக்குத் துணைபோன வேதனை!
திராவிட மாணவர்கள் முதலாவது பயிற்சி முகாம் 1944 ஏப்ரல் 16, 17 தேதிகளில் ஈரோட்டில் பெரியார் மாளிகையில் நடைபெறுகிறது; பெரும்பான்மையான மாணவர்கள் வந்து கலந்துகொள்ள வேண்டுமெனப் பெரியார் அழைக்கிறார் என்று அப்போது அய்யாவிடம் தனிச் செயலராயிருந்த எஸ். கஜேந்திரன் கும்பகோணம், திருச்சி, அண்ணாமலை நகர் ஆகிய ஊர்களுக்கு நேரில் சென்று செய்தி அறிவித்தார்.
தவமணிஇராசன் தலைமையில் நாங்கள் கும்பகோணம் கல்லூரியிலிருந்து 5, 6 மாணவர் போயிருந்தோம். திடீரென்று அய்யாவுக்குக் காய்ச்சல் அதிகமாக வந்து விட்டது. அண்ணாவே முழுப்பொறுப்பேற்று, மேடையில் பேக்வது எப்படி என்றும், கழகக் கொள்கைகளை விளக்கி யும் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள், இரண்டு நாட்களும், செ. தெ. நாயகம் தலைமையில்.
அந்தக் கோடை விடுமுறையின்போது, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறுசிறு குழுவினராக மாணவர்கள் சென்று பிரச்சாரம் செய்யவேண்டும்; எங்களுக்குத் தென்னார்க்காடு மாவட்டம் கிடைத்தது!
17.4.44 அன்று ஈரோடு மகாசன உயர்நிலைப் பள்ளியின் சரசுவதி ஹாலில் திராவிட இளைஞர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்ற மாதம் ஈரோடு சென்றிருந்த பொழுது அந்த சரசுவதிஹாலைப் பார்த்தேன். எவ்வளவு சிறியது! இதிலா மாநாடு நடத்தினோம் என்று வியந்தேன். ஆயினும் அது 1944-ல் அல்லவோ? பழைய கோட்டை என். அர்ச்சுனன் வரவேற்புக் குழுவின் தலைவர். தமது பெரிய பிளிமத் காரில், அரிசி காய்கறியெல்லாம் அவரே ஏற்றிக் கொண்டுவந்து, மாணாக்கர்கள் சாப்பாட்டுக்காக இறக்கியது கண்டு வியந்தோம்.
மாநாட்டுக்கு அண்ணாதான் தலைவர். நெடுஞ்செழியன் திறப்பாளர். அன்பழகன் கொடி உயர்த்தினார். அவர்களைப் போலவே மாணவர்களான நாங்கள் ஆளுக்கொரு தீர்மானத்தின்மீது சொற்பொழிவு ஆற்றினோம். இரவு நீண்டநேரம் மாநாடு தொடர்ந்து நடைபெற்றது. இரண்டு நாள் பயிற்சியில் ஈடுபட்டதால், எல்லோருக்கும் கிட்டத்தட்ட உறக்கம் வந்து உலுக்குகின்ற நிலைமை.
அப்போது மேடையில் நடிகமணி டி.வி. நாராயணசாமி, பேசிக் கொண்டிருக்கிறார் உணர்ச்சி பொங்கப் பொங்க! அன்றைக்கும் அவர் பேசத் தொடங்கினால் விரைவில், முடிக்கத் தெரியாது. மேடைக்கு எதிரில் தரையில் நாங்கள், அதாவது ஈ. வெ. கி. சம்பத், திருப்பூர் எஸ். ஆர். சுப்பிரமணியம், ஈரோடு எஸ். ஆர். சந்தானம் (அவர் தான் மாநாட்டுச் செயலாளர்) ஆகிய நாங்கள் ஒரு சிறு குழுவாக அமர்ந்திருந்தோம். சம்பத், இண்ட்டர்மீடியட் படித்தாலும் விளையாட்டுப் பிள்ளையாக இருந்த காலம் அது.
மேடையில் தலைமை ஏற்றிருந்த அண்ணாவை நோக்கிக் கீழே வருமாறு சம்பத் சைகை செய்தார். ‘நாராயணசாமி பேசு’ எனக் கைகாட்டி விட்டுக் கீழே இறங்கி வந்து அண்ணா எங்களிடையே அமர்ந்தார். திருப்பூர் எஸ்.ஆர். சுப்ரமணியம் நல்ல வசதிபடைத்த நம் இயக்கத் தோழர். இனிய நண்பர். ஆனால் கொஞ்சம் விவேகமில்லாத தன்மையில் சில நேரங்களில் நடந்து கொள்வார். விளக்கமாகச் சொன்னால் கிறுக்குத்தன் மாகத் தோன்றுவார், அவரது சில நடத்தைகளால்! அவர், சம்பத்தின் கையைப் பற்றிக்கொண்டு, அவருக்குக் கை ரேகை பார்க்க ஆரம்பித்தார், தெரிந்தது போல!
‘எனக்கு எத்தனை மனைவி? எத்தனை பிள்ளைகள் இருக்கும்?’ என்றெல்லாம் சம்பத் கேட்கக் கேட்க, அந்தப் பகுதியில் ஒரே சிரிப்பு: கும்மாளம்! அண்ணாவும் எங்களோடு சேர்ந்து உரக்கச் சிரிக்கிறார்!
டி. வி. என். கோபத்தின் உயர் எல்லைக்கே போய் விட்டார். மிகமிக உரத்த குரலில், “ஏன் சிரிக்கிறீர்கள்? என் பேச்சில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? உயிரைக் கொடுத்து உயர்வான கருத்துகளை எடுத்து வைக்கிறேன், கேட்கவேண்டாமா? இதுதான் நாகரிகமா?” என்றெல்லாம் அண்ணாவைப் பார்த்தும் கேட்கிறார்! அண்ணா அவர்களிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ள அவரே, தன் வயமிழந்து போனார். “அண்ணா, இருங்க!” என்று, எழப்போன அண்ணாவை, அப்போதும் சம்பத் தடுக்கிறார். அண்ணா, சம்பத்தின் கையை விலக்கி விட்டு, மேடையை நோக்கிப் போனார்கள். டி. வி. என் அத்தோடு உட்கார்ந்து விட்டார், சினம் ஆறாததால்!
ஒருமணி நேரம் அந்த நள்ளிரவிலும் அண்ணா சொன்மாரி பொழிந்தார்கள். எல்லாருக்கும் தூக்கம் கலைந்து போயிற்று. சம்பத்தும் அமைதியாயிருந்தார்.
ஆனால், அடிக்கடி மற்றவர்களை கேலிப்பொருளர்க்கி நகைப்பதும், அண்ணாவிடம் தனக்குள்ள செல்வாக்கினால் பொது இடங்களில், அவரையும் தன் வசப்படுத்திக் கொண்டு, பிறரை ஏளனம் செய்ய முற்படுவதும், சம்பத்துக்கு ஒரு கெட்ட பழக்கமாகவேயிருந்தது. அதனால், அவருடைய எவ்வளவோ நல்ல தன்மைகள் மறைக்கப்பட்டு, மற்றையோரின் அருவெறுப்புக்கு ஆளாக நேர்ந்தது! அண்ணாவின் பெருந்தன்மையும் துணை போனதுதான் வேதனை இதிலே!
முன்னால் வந்தது என்னால்!
9-9-1958 அன்று எனக்கு மன்னார்குடியில் திருமணம். முதல் நாள் இரவு 10 மணிக்கு மன்னார் குடிக்கு வரும் கடைசி ரயிலில் அண்ணா வந்து இறங்கி விட்டார். அவர் வருவது எங்களில் யாருக்கும் தெரியாது. வழக்கத்துக்கு மாறாக இவ்வளவு முன்கூட்டி வருவாரென எதிர்பார்க்காததால், ரயிலடிக்கு யாருமே செல்லவில்லை. அதே வண்டியில் வந்து சேர்ந்த சேலம் சித்தையன், ஈரோடு சண்முக வேலாயுதம், ஈ. வெ. கி. சம்பத், டி. கே. சீனிவாசன் ஆகியோர் கூட்டமாக நடந்தே வந்து 2 பர்லாங் தொலைவிலுள்ள மன்னை நாராயணசாமி மாமாவின் ஓந்திரியர் சத்திரத்துக்குப் போய்விட்டார்கள். அங்குதான் அவர் குடியிருக்கிறார்.
செய்தி கிடைத்து, சைக்கிளில் ஒடிப்போய்ப் பார்த்தேன். “காலையில் நாங்களே வந்து விடுகிறோம். நீ போ!” என்றார் அண்ணா. திருமணம் என் மாமனார் வீட்டில், என் நிபந்தனைப்படி புரோகிதரில்லாமல். ஆனால் தாலி உண்டு. காலையில் திருமண நிகழ்ச்சி முடிவுற்றபோதும் அண்ணா:இங்கே வந்து சேரவில்லை!
தாமதமாகவே வந்தார். பிறகு என்ன செய்ய முடியும். இதையே திருமணப் பாராட்டுக் கூட்டமாக மாற்றி நடத்திவிடலாம் என்றார் தவமணி இராசன். எதிர் வீட்டில் அமைக்குமாறு சொன்னேன். என் மாமனாரைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால், அவரிடம் மைக்செட் ஏற்பாடு செய்யச் சொல்லப் பயந்து கொண்டு, சும்மா இருந்துவிட்ட செய்தி, முந்தின இரவுதான் என் கவனத்துக்கு வந்தது. திருவாரூரிலிருக்கும் நண்பர் சி. டி. எம். உதவினார். மைக் ஓரிடம், ஆம்பிளிஃபயர் வேறிடம், ஒலிபெருக்கிக்குழாய் இன்னோரிடம்-என்று சேகரித்துக்கொண்டு, எப்படியோ நேரத்துக்கு வந்து சேர்ந்தார் சி. டி. மூர்த்தி.
என் மாமனார் வைதிகர் ஆனதால், அண்ணாவை விரும்பமாட்டார் என்று யாரோ தவறாகச் சொல்லி யிருந்திருக்கிறார்கள். அந்தக் கருத்துக்கு மாறாக, அவரே மாலைசூட்டி எல்லாரையும் வரவேற்றது, அனைவர்க்கும் வியப்பினை அளித்தது!
குடந்தைப் பெரியவர் கே. கே. நீலமேகம் அவர்கள் தலைமையில் எல்லாரும் வாழ்த்தினார்கள். இறுதியாக அண்ணா. பேசும்போது-(அய்யோ, அந்தக் காலத்தில் டேப்ரிக்கார்டர் இல்லாமல் போயிற்றே?) என்னைப்பற்றிப் புகழ்ந்தே முதலில் அரைமணி நேரம் அருமையாக உரையாற்றினார். பகிரங்கமாக, ஒலிபெருக்கி முன்பு, என்னைப் பாராட்டி, அண்ணா சொற்பொழிவாற்றியது அந்த ஒருமுறைதான்! இப்போது நினைத்தாலும் நெஞ்சம் புகழ்ச்சியால் நெகிழ்கிறது. பெருமிதத்தால் விம்முகிறது. களிப்பால் பூரிக்கிறது. ஏற்கனவே, நான் சுயமரியாதைக் காரன் என்று தெரிந்தும், என் நல்ல பண்புகளைக் கேள்விப்பட்டுத் தமது பெண்ணைக் கொடுக்க முன்வந்த என். மாமனார், அண்ணா அவர்களின் நற்சான்று மொழிகள் கேட்டு, மேலும் உருகிப்போனார். மகிழ்ச்சியில் திளைத்தார்.
தலையில் குடுமி, காதில் கடுக்கண், நெற்றியில் திருநீறு, மேலே சட்டையணியாத உடல், சவரம் செய்து கொள்வதுகூட நாள் பார்த்துதான்; கோவில் டிரஸ்டி வேறு! தொழில் வட்டிக் கடை, ரங்கூனில் சிறிது காலம் வாழ்ந்தவர்; சங்கராச்சாரியரின் அன்பர்-தம்புசாமிப் பிள்ளை தன் பெண்ணைக் கருணானந்தத்துக்குத் தருவது சுந்தரமூர்த்திப் பிள்ளையோடு செய்யும் சம்பந்தமல்ல. சங்கராச்சாரியாரும், பெரியாரும் சம்பந்தம் செய்து கொள்வதுபோலத்தான்-என்று மன்னார்குடியில் பேச்சு! இப்படிப்பட்ட கோலத்தில் உள்ளவர், என்னை வரவேற்ற ஒரே நிமிடத்தில், அவரது உயர் குணங்களைப் புரிந்து கொண்டேன். அவரோடு நேற்றே நான் பேசியிருந்தால்இந்தத் திருமணமே வேறு விதமாக நடந்திருக்கும்” என்று அண்ணா, என் மாமனாருக்கும் குளிர்ச்சி உண்டாக்கினார்.
அவ்வளவுதான்! கல்யாணப் பந்தியில் அண்ணா அமர்ந்து சாப்பிட்டு முடிக்கும்வரை,என் மாமனார், தாமே அண்ணாவுக்கருகே நின்று விசிறிக் கொண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சி! அதன் பிறகு மன்னார்குடிக்கு அண்ணா எப்போது வந்தாலும், தூரத்தில் நின்று அண்ணாவின் பேச்சைக் கேட்டு, ரசிப்பது, என் மாமனாருக்கு வாடிக்கையாகி விட்டது!
தொண்டனைப் பேணிய தலைவன்!
மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று மாயவரத்தில் மகத்தான சிறப்புகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், கலந்துகொண்டு பேருரையாற்றிட அண்ணா அவர்கள் வந்தபோது மச்சியும் (அண்ணாவின் தமக்கையார்) தில்லை வில்லாளனும் உடன் வந்திருந்தார்கள். மச்சியை எங்கள் வீட்டிலேயே என் துணைவியாருடன் இருக்கச் சொல்லிவிட்டு, நாங்கள் பொதுக் கூட்ட மேடைக்குச் சென்றோம்.
மாயவரத்தில் நான் அப்போது குடியிருந்த வீடு மிக மிகச் சிறியது. மின்வசதி கிடையாது. இந்த வீட்டுக்கு வருகை தராத தலைவர்களும் இயக்கத்தில் கிடையாது! அண்ணாவைப்போல யாராவது வரும்போது, இரவில் சாப்பிடுவதற்காக, வாடகை பெட்ரோமாக்ஸ் விளக்கு எடுத்துக் கொள்வேன். அன்றும் அப்படித்தான். கொல்லைப்புறத்தில் ஆள்வைத்து வரால் மீன் குழம்பும் வறுவலும் ஏராளமாகச் சமையல் ஆகிறது. என் துணைவியார் நாகரத்தினம் பிறவி முதல் இன்றுவரை கடுமையான சைவம். அண்ணாவுக்காக மூக்கைப்பிடித்துக் கொண்டு மேற்பார்வை அலுவலில் இருந்ததால், கூட்டம் கேட்க வரமுடியவில்லை - அவர்கள் நிலை பெரும்பாலும் அப்படித்தான்!
கூட்ட மேடையில் கிட்டப்பாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு நாற்காலியில், பழனிச்சாமி உட்கார்ந்து விட்டார். தனக்கு மேடையில் இடமில்லாதது கண்ட கிட்டப்பா பின்னால் நின்றுகொண்டு, தன் இயல்பின்படி வசைமாரி பொழிந்து விட்டார். மேடையிலிருந்த அண்ணாவின் காதில் அரைகுறையாகச் சில சொற்கள் விழுந்திருக்கவேண்டும்!
மாயவரம் ஜங்ஷனில் ரயில்வே புரோக்கர் நடேச படையாட்சியின் இளைய மகன் கிட்டப்பா. ஒரளவு வசதியுள்ள நடுத்தரக் குடும்பம். 1951-ல் பள்ளியிறுதி வகுப்பு முடித்தவுடன், சிதம்பரம் நகராட்சியில் எழுத்தர் வேலை கிடைத்தது. போக மறுத்துவிட்டு, முழுநேரக் கட்சிப் பணியாற்றினார். தொண்டனுக்கொரு உதாரணமாகத் திகழ்ந்த கொள்கைவெறியர் கிட்டப்பா!
நிகழ்ச்சி முடிந்து எங்கள் வீட்டுக்கு வந்தோம். அண்ணா சாப்பிட அமர்ந்தார்கள். பின்னர் வந்து சேர்ந்த கிட்டப்பாவின் குரல் உக்கிரமாக ஒலித்தது. பின்னே என்னங்க? தலைவர் வந்தா மட்டும் மேடையிலே உக்கார வர்றானுங்க! மத்த நாளிலே கழகப் பணிக்கோ, வசூலுக்கோ வர்றதில் லே! இவனுங்களுக்கு ஏன் நாற்காலி?”
“கிட்டப்பாவைச் சாப்பிடச் சொல்லிக் கூப்பிடு” என்றார் அண்ணா என்னிடம். வெளியில் போய் அழைத்ததும் மிகப் பணிவுடன் வந்து, “நான் அடுத்த பந்தியில் சாப்பிடுகிறேனுங்க!” என்று சொல்லி, வெளியே உட்கார்ந்துகொண்டார். முகத்தில் கோபத்தின் ஜ்வாலை தெரிந்தது அப்போதும்!
சாப்பிட்டு முடித்தவுடன், அண்ணா வெளியில் போய் நின்றுகொண்டு, காரை எடுக்கச் சொன்னார். ஊருக்குப் புறப்பாடு என்று நினைத்த மச்சியும் தெருவுக்கு வரவே, “நீ இரு, இதோ வந்துடறேன்” எனச் சொல்லி, “வில்லாளன்! கருணானந்தம்! ரெண்டு பேரும் பின்னாலே ஏறுங்க!” எனவும் பணித்தார் அண்ணா.
கார் புறப்பட்டதும், “இப்படி எங்காவது ஆள் இல்லாத பக்கமாப் போலாம்!” என்று என்னிடம் சொன்னார். ரயில்வே சந்திப்பு சென்று, கடைசிப்பகுதியில் எங்கள் ஆர்.எம்.எஸ். அலுவலகத்துக்கு அருகேயுள்ள ஓர் ஒதுக்குப்புறத்தைக் காண்பித்தேன். வண்டியிலிருந்து யாரும் இறங்கவில்லை, டிரைவர் சுந்தா தவிர.
சரியாக ஒருமணி நேரம் அண்ணா என்னிடம் பேசினார்கள். திராவிட முன்னேற்றக்கழகம் தொடங்கி மூன்று நான்கு ஆண்டுகளே ஆனபடியால், அதை எப்படி வளர்க்க வேண்டும்; அதற்கு எப்பேர்ப்பட்ட தியாக மனப்பான்மையுள்ள தொண்டர்கள் வேண்டும்; புதிதாக வருபவர்களை, ஏற்கனவே இருப்பவர்கள் எவ்வாறு அரவணைத்து, விட்டுக் கொடுத்து, இணைத்துச் செல்லவேண்டும் என்றெல்லாம் பொதுப்படையாக முதலில் சொன்னார்கள். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை! நான் முழுநேரத் தொண்டனல்லவே - என்னிடம் ஏன் இவ்வளவும் சொல்லி வருகிறார்கள்-என்ற என் திகைப்பு நீங்குமாறு, பதில் உடனடியாகவே வந்துவிட்டது.
“நீ கிட்டப்பாவை உன் கைக்குள் வைச்சிக் காப்பாத்தணும். ஏண்ணா, இம்மாதிரி பிற்படுத்தப்பட்ட வகுப்பிலேயிருந்து, அதிலும் இந்தப் பகுதியில் செல்வாக்குள்ள ஒருவகுப்பிலிருந்து-நமக்குத் தொண்டர்கள் கிடைப்பது கடினம். முன்கோபியே தவிர கொள்கைப் பற்றுள்ள பையன். முதலில் நீ அவரைச் சரியாகப் புரிந்துகொள். அதன்பிறகு உன் ஆலோசனைகளை அடிக்கடி கேட்கிறமாதிரி உன்னிடம் தொடர்பு வச்சிக்கணும் அவரு. அதுக்கு ஏற்பாடு செஞ்சிக்க நீ-” என்று பலவாறு கூறிவிட்டு, கிட்டப்பாவை ஒரு ஷேப் (shape)புக்குக் கொண்டுவர வேண்டியது உன் பொறுப்பு தான். நான் ஒன்னத்தான் இனி கேட்பேன்!” என முடித்தார்கள் அண்ணா.
தனிப்பட்ட ஒரு தொண்டனை உருவாக்கிட, ஒர் மாபெரும் இயக்கத்தின் தலைவர் இவ்வளவு சிரத்தையும், அக்கறையும் எடுத்துக்கொள்ள முடியுமா என்ற வியப்பு எனக்கு இன்னுங்கூட நீங்கியபாடில்லை! அண்ணாவின் இந்த ஆணையை இனிது நிறைவேற்றிய தாகவே நான் நம்புகிறேன். 1953-ல் பெரிய குழுவினருடன் ரயில் நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு; கலைஞரோடு திருச்சி சிறையில் முதன்முறையாக நுழைந்த கிட்டப்பா, மாநில மட்டத்தில் தொடர்ந்து புகழ் பெற்றார். சாகும்வரை கழகம் நடத்திய எல்லாப் போராட்டங்களிலும் தவறாமல் சிறைபுகுந்தார். மாயூரம் வட்டத்தில் கழகத்தை ஓங்கி உயர வளர்த்தார். அவர் மாவட்டத் துணைச் செயலாளராகவும் பொதுக் குழு உறுப்பினராகவும் ஆவதற்கு நானே ஓட்டுச் சேகரித்து, உயர்த்தினேன், 1967-ல் தொடங்கி, நான்கு தேர்தல் களிலும் மாயூரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக விளங்கினார். சட்ட மன்றத்திலே. எண்ணிக்கையில் அதிகமான வினாக்கள் எழுப்பி, “கேள்வி மன்னன் கிட்டப்பா” எனப் புகழ்க்கொடி பறக்கவிட்டார்.
“கருணானந்தம், கருணானந்தம்! இங்க வா! இங்க வா! நம்ம கிட்டப்பா மாயவரத்தில் வெற்றி! கழகத்துக்கு முதல் வெற்றி ரிசல்ட் தந்தது அவர் தான்” என்று அண்ணா அவர்கள் பூரிப்புப் பெருங்குரலில் என்னைக் கூவி அழைத்தார்கள்; 1967 தேர்தல் முடிவுகள் வெளியான. அன்று, நுங்கம்பாக்கம் இல்லத்து மாடியிலிருந்து கொண்டு, கீழே நின்ற என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்கள்! அப்போது நான் பெருமித நோக்கால் அண்ணாவைப் பார்த்துச் சொன்னேன் - “அண்ணக்கு ஒருநாள் மாயவரத்தில் கிட்டப்பாவைப் பார்த்துக்கொள் என்று சொன்னீங்களே, நெனவு இருக்குதாண்ணா !” என்று புன்னகையால் பதிலளித்தார். அண்ணல் பெருந்தகையார்!
பத்திரிகை பலமும் பேச்சாளர் எண்ணிக்கையும்
அண்ணா முதலமைச்சராகிச் சில நாட்களுக்குப் பின் ஒருநாள் இரவு 9 மணியிருக்கும். அண்ணா அவர்களின் வீட்டு மாடியில் ஒரு சிறு கூட்டத்தில் நானும் இருக்கிறேன். தொலைபேசி அழைப்பு. நேர்முக உதவியாளர் நண்பர் கஜேந்திரன் அண்ணாவிடம் வந்து உட்கார்ந்துகொண்டு, “அண்ணா! ஆதித்தனார் கேட்கிறார், நீங்கள் அவர் வீட்டில் சாப்பாட்டுக்காகப் புறப்பட்டு விட்டீர்களா என்று! கருணாநிதியும் வரவேண்டுமாம். நேரமாகிவிட்டது என்கிறார்!” என்று, தான் P. A. என்பதை வழக்கம்போல் மறந்து பேசுகிறார்.
“சரி வாருங்கள்-இப்போது புறப்படாவிட்டால்அவரே நேரில் வந்து விடுவார். நீயும் வாய்யா!” என்றார் முதலமைச்சர் அண்ணா என்னிடம்.
“நான் வல்லேண்ணா-அவர் எனக்கு அறிமுகமே கிடையாது...” என்றேன்.
“பரவாயில்லை-என்னோடு வா. நிச்சயம் பிரியாணி யாவது இருக்கும்’ என்று என்னை இழுத்தார். அதற்கு மேலும் ‘பிகு’ செய்யலாமா?
அடையாறு போய்ச் சேர்ந்தோம், நுங்கம்பாக்கத்தி லிருந்து. வாயிலிலேயே வரவேற்றார். அண்ணாவுடன் கலைஞர் வந்திருக்கிறாரா என்பதை மட்டும் கவனித்தார். மற்றவர்களை அவர் கண்டு கொள்ளவேயில்லை!
கூடத்தில் தரையில் இலை போட்டுச் சாப்பாடு. அண்ணா சொன்னதுபோல் பிரியாணி பரிமாறப்பட்டது. நல்ல மணம், சுவை. ஆனால் அவரெங்கே எங்களைச் சாப்பிட விட்டார்?
நாலு முழ வேட்டியும் நீல்ச்சட்டையும் நீள அங்கவஸ்தி ரமும் புரள, அண்ணாவுக்கு எதிரில் வழக்கம் போல் வாயைப் பொத்திக்கொண்டு நிற்கிறார் சபாநாயகர் சி. பா. ஆதித்தனார்; பந்தி விசாரிக்க அல்ல; தன் கோரிக்கையை முன்வைக்க தனியாகப் பேசவேண்டும் என்கிற நாகரிகமும் தெரியவில்லை; வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்கிற முனைப்பே புலப்பட்டது!
“அண்ணா! எனக்கு இந்தச் சபாநாயகர் பதவி வேணாம். ஏதோ ஒரு மந்திரியா, கடைசி மந்திரியா, கொடுத்தாப் போதும்- என்று இதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். அண்ணாவேள் குனிந்த தன்ல நிமிராமல் சாப்பாட்டில் கவனமாயிருப்பது போல் பாவனை செய்தார். நாங்களும் செவிகளைச் செவிடாக்கிக்கொண்டு வந்த வேலையை முடித்திதோம். ஒரு வழியாகப் புறப்பட்டு வாயிற்புறம் வந்து காரில் ஏறு முன்பு ஆதித்தனார்—
“அண்ணா! நான் சொன்னது...” எனத் தொடங்குவதை அறிந்து, “கருணாநிதியிடம் பேசுங்க!” என்று சொல்லித் தீர்ப்பு வழங்கிவிட்டார் அண்ணா!
நீண்டநேரமாக அடக்கிக்கொண்டிருந்த ஆவலை வினா வாக்கினேன் நான். “இவரை எப்படியண்ணா ஏற்றுக் கொண்டீங்க? பார்ப்பன ஆதிக்கத்தில் இருக்கும் பத்திரிகை ‘உலகத்தில் இவர் காலூன்றி, ஒரு தமிழர் முன்னேறி வருகிறர்ரே என்கிற மகிழ்ச்சியில், நாம் இவர் ஏடுகளை வாங்கி ஆதரிச்சோம். ஆனா இதற்குமுந்தி ஒரு நாளாவது இவர் நம்மை அங்கீகாரம் (Recognise) செய்ததில்லை. பெரியாரைப் பேராசைக்காரர் போல் கார்ட்டுன் போடுவார். நமீது கட்சியை இருட்டடிப்பு செய்தார் என். வி. நடராசன் தவிர் வேறு யாருடைய பெயரும் இதுவரை “தினத்தந்தி", “மாலை முர”சில் வந்ததில்லியே.”
“நாம ஒரு கட்சியாயிருந்த வரையில் நாமும் தமிழ் நாட்டுப் பத்திரிகைகளைப் பொருட்படுத்தியதில்லை. கையகலம் உள்ள குடியரசு, திராவிடநாடு, முரசொலியை விச்சிதான் முன்னேறினாம். ஆனா இப்ப நம்ம ஆட்சி நடக்குது வரி செலுத்தும் மக்களுக்கு நம் ஆட்சி என்ன செய்யிது என்கிறதை எடுத்துச் சொல்ல நிறையப் பத்திரிகை வசதி வேணும். இவரிடம் 13 பத்திரிகை இருக்குது. என்ன சொல்றே? இவர் நமக்குத் தேவையா இல்லியா?”
“இப்பப் புரிஞ்சுக்கிட்டேன். ஆனாலும் இவர் பேசறதைப் பாத்தா, இவர் லட்சியமே மந்திரியாகுறது ஒண்ணுதானோண்ணு சந்தேகம் வருது! இவர் பத்திரிகை பலம் நமக்கு உதவுது சரி; ஆனா, பத்திரிகையேயில்லாதவர் ம.பொ.சி. அவர் காலமெல்லாம் நம்மை எதிர்க்கவே கட்சி உண்டாக்கினார். நம்மைச் செய்யாத கேலியில்லை. அவரை எதற்காகச் சேர்த்துக் கொண்டீர்கள்?”
“அதிலேதான் கொஞ்சம் ஏமாற்றம் எனக்கு. அவரிடத்திலே நல்ல பேச்சாளர்கள் பத்துப்பதினஞ்சு பேர் இருந தாங்க, அவுங்க நமக்காகப் பிரசாரம் செய்வாங்கண்ணு எதிர்பாத்தேன். ஆனா, இவர் நம்மோட சேர்ந்ததும், அவுங்க அத்தனை பேரும் இவரெத் தனியா விட்டுட்டுப் வோய், வேற கட்சி ஆரம்பிச்சிட்டாங்க-”
(புலவர் கீரன், கவிவரதன், சந்தானம் போன்றாரை மனத்தில் வைத்து அண்ணா சொல்லியிரு க்கவேண்டும். அண்ணா இருந்த வரையில் ஆதித்தனார் சட்டப் பேரவைத் தலைவராகவும், சிலம்புச் செல்வர் சட்ட மன்ற உறுப்பினராகவும்தான். நீடித்தனர். அண்ணா இவர்களை அமைச்சரவையில் சேர்த்து விடப் போகிறாரோ என்பதில் தந்தை பெரியார் கவனத் துடன், கூடாது கூடாது என்ற எச்சரிக்கையை அடிக்கடி விடுத்து வந்தார்.)
சிந்தனைக்குரிய இந்தக் கேள்வியும் பதிலும் ஒரளவு முடிவுக்கு வரும் நேரம், நாங்கள் நுங்கம்பாக்கம் அவென்யு சாலை ஒன்பதாம் எண்ணுள்ள இல்லம் வந்து சேர்ந்து விட்டோம்.
1969க்குப் பிறகு ஆதித்தனார் அமைச்சராகவும், சிலம்புச்செல்வர் ம. பொ. சி. சட்டமேலவைத் துன்னத் தலைவராகவும், நான் செய்தித்துறை அலுவலராகவும் விளங்கிய காலகட்டத்தில், எங்களிடையே நல்ல இணக்கமும் இறுக்கமும் ஏற்பட்டிருந்தது. ஆதித்தனார் நாள்தோறும் எனக்கு ஃபோன் செய்து ஒருமணி நேரம் பேசுவார். தி.மு.க, ஆட்சி கலைக்கப்பட்ட மறுநாளிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். ம.பொ.சியும் அவ்வாறே ஆயினும், என்னிடம் நட்பு பாராட்டுகின்றார் இன்னமும்.
புதிராகப் பார்த்த சினிமா
மாயூரத்திற்குக் காரிலேயே அண்ணா வந்துவிட்டார்கள் காலையிலேயே. நண்பர் G. R. அவர்கள் வீட்டில் தங்கி யிருந்தார்கள். கொத்தங்குடி ராமச்சந்திரன் (ஜி.ஆர்.) சரோஜா பரிமளத்துக்கு அண்ணன் முறை உறவினர்; காவேரி நகரில் வாடகை வீடுதான். நல்ல சைவ சாப்பாடு கிடைக்கும் அங்கே.
அண்ணா அன்றையதினம் மாலையில் காரைக்கால் பொதுக் கூட்டத்தில் பேசவேண்டும். “அண்ணா! காரைக் கால் கூட்டம் மாலையில் முன்நேரத்திலேயே தொடங்கி, 8 மணிக்குள் முடித்துவிடவேண்டும். அதற்குமேல் பேசினால் கேட்பவர்கள் எண்ணிக்கை ‘இரண்டு மடங்கு’ ஆகிவிடும்— என்று கலைஞர் கேலியாகச் சொல்வார். ஆனாலும் அது உண்மைதான். சீக்கிரம் புறப்படுவோம்” என்றேன்.
முன் இருக்கையில் அண்ணா. பின் இருக்கையில் ஜீயாரும் நானும். பேரளம் வழியாகக் கார் சென்றது. காரைக்கால் பொதுக்கூட்டம், நாங்கள் ஏற்கெனவே பேசிக் கொண்டவாறு 8 மணிக்கெல்லாம் முடிந்துவிட்டது. உடனே அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வழக்கறிஞர் காரைக்கால் ராமசாமி வீட்டுக்கு அழைத்துச் செல்லப் பட்டோம். நண்பர் ராமசாமி பின்னாளில் சிறிது காலம் புதுவை மாநில முதல்வராக இருந்தாரென நினைவு. அண்ணாவின் வருகையினால் அளவிலாப் பூரிப்பும் பெருமையும் புளகாங்கிதமும் பொங்கிடத் தமது இல்லத்தில் பிரமாதமான பிரியாணி விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் ராமசாமி. நேரம் நிறைய இருப்பதால், அண்ணாவுடன் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்க இயலும் என்று நம்பிய இராமசாமிக்கு ஏமாற்றம் ஏற்படுத்தும் வகையில், அண்ணா மிகவும் பரபரப்பும் விரைவும் வெளிப்பட, “ராமசாமி! சிக்கிரம் சாப்பாடு போடு! நாங்கள் போகவேண்டும்” என்றார்கள்.
எனக்கும் ஜீயாருக்கும் பகீரென்றது. ஏனென்றால், நாங்கள் இரண்டு பேருமே புலால் உணவை வெளியில் கிடைக்கிற இடத்தில் ஒருகை பார்க்கிற ஆட்கள்! பிரியாணி வாசனையோ ஆளைத் தூக்குகிறது. அண்ணா சாப்பிட விடமாட்டார்கள் போலத் தெரிகிறதே என்கிற ஏக்கம் எங்களுக்கு.
ஒருவாறு சாப்பிட்டதுமே, அண்ணா போய்க் காரில் அமர்ந்துவிட்டார்கள். எங்கள் இருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை; அண்ணாவிடம் கேட்பது நாகரிகமன்று. மாயூரம் சென்று ஒய்வெடுக்க வேண்டுமோ, என்னவோ? சரி, போகவேண்டியதுதான்!
கார் புறப்பட்டுத் திருநல்லாறு வரும்போது ஒரு டயர் பங்ச்சர் ஆகிவிட்டது. “என்னய்யா, என்னய்யா?” என்று அண்ணா பதைக்கிறார்கள். சீக்கிரமாகவே ஸ்டெப்னி சக்கரத்தை எடுத்து மாட்டி, டிரைவர் மீண்டும் பயணம் தொடர்கிறார். பேரளம் கண்ணுக்குத் தெரிகிறது. “இது பேரளம்தானே? சாயுங்காலம் வரும்போதே கவனிச்சேன். இந்தத் திருப்பத்திலே தெரிகிற தியேட்டரில் “அன்பே வா” நடக்கிறது. இதை ஊரிலேயே பார்க்க நினைச்சேன். பார்க்க முடியவில்லை. இங்கே பார்க்கலாமே என்றுதான் காரைக்காலில் அவ்வளவு அவசரப் படுத்தினேன். அப்போதே சொல்லியிருந்தால் உங்களுக்குச் சப்பென்று போயிருக்கும்; என்ன, பார்க்கலாமா?” என்றார் அண்ணா ஜீயாரிடம்.
அப்பாடா! எங்களுக்குப் புதிர் விடுபட்ட நிம்மதி. “கொஞ்சம் நீங்கள் காரிலேயே இருங்க அண்ணா. மேனேஜர் எனக்குத் தெரிஞ்சவர்தான் போய் இடம்
இருக்காண்ணு பாத்துட்டு வர்றேன்” என்று இறங்கிப் போனார் ஜியார். இரவுக்காட்சி தொடங்கிவிட்டிருந்த நேரம் என்னிடம் சொல்கிறார் அண்ணா: கம் செப்டம் பர் கதைண்ணு சொன்னாங்க. ஏவி.எம். நல்லா எடுத் திருக்காங்களாம். அதான் பாக்க நெனச்சேன்.........”
இதற்குள் கொட்டகை உரிமையாளர், மேலாளர் இரு வருமே காருக்கருகில் பரவசத்துடன் வந்து வணக்கம் தெரி வித்து, உள்ளே அழைத்துப் போனார்கள். படத்தைப் பார்த்துக்கொண்டே அண்ணா, ஆரம்பிச்ச பிறகு வந்தது நல்லதாப் போச்சு, இல்லேண்ணா கூட்டம் சேர்ந்துடும்’ என்று சொல்லி முடிப்பதற்குள், சிங்கிள் புரொஜெக்டர் ஆகையால், ஒரு ஸ்பூல் முடிந்து, ஸ்லைடு போட்டார்கள். ஒரே கைதட்டல், ஆரவாரம்! என்ன என்று வியப்புடன் பார்த்தோம்.
எங்கள் தியேட்டருக்கு
விஜயம் செய்திருக்கும்
அறிஞர் அண்ணா அவர்களை
வரவேற்கிறோம்.
வணக்கம். நன்றி!
என்று, சிலைடு போடப்பட்டிருக்கிறது! உடனே படம் தொடர்ந்ததால் தொந்தரவில்லை; ஆனால் இடைவேளையில் மக்கள் அண்ணாவைப் பார்க்க வந்து விட்டார்கள். “படம் முடியுமுன்னே போய்விடலாமய்யா” என்று அண்ணா கிசுகிசுத்தார். அவ்வாறே பேரளத்திலிருந்து புறப்பட்டுக் கொல்லுமாங்குடி கடந்து சிறிது தொலைவு சென்றிருப்போம். அண்ணா பேசிக்கொண்டு வந்தார்: “இந்தப் படத்திலே பரவாயில்லேய்யா. இன்னொரு படத்திலே ஜவ்வாது மேடைகட்டிண்ணு ‘ரெண்டு பேரும் ஒவரா விழுந்து புரண்டு......’ “ஆம்மாண்ணா! நான் ஆணையிட்டால் என்று நினைக்கிறேன். குடும்பத்தோட பார்த்தப்ப எனக்கும் கஷ்டமாத்தான் இருந்தது” என்றேன்.
காரோட்டி, திருச்சி சின்ன பாண்டு (ரங்கன்) திடீரென்று காரை ஓரங்கட்டி நிறுத்தித் தொப்பென்று கீழே குதித்து, நடுச்சாலையில் உட்கார்ந்து, வாந்தி எடுக்க ஆரம்பித்தார். சே! பாண்டு அப்படிப்பட்ட ஆளில்லையே என்ற சந்தேகம் எனக்கு! அண்ணாவும் பதறிப் போனார்கள். “ஒண்ணுமில்லே, புகையிலை வாய்க்குள் போய்விட்டது” என்று சொல்லிக்கொண்டே தரையில் படுத்துவிட்டார்.
இரவு இரண்டு மணி. அக்கம்பக்கத்தில் வீடும் இல்லை. போக்குவரத்தும் இல்லை. ஜியாருக்கும் எனக்கும் கார் ஓட்டத் தெரியாது. அண்ணாவுக்குச் சிறிது தெரியும். அவர் ஸ்டிரியங்கில் போய் உட்கார்ந்துவிடப் போகி றாரே என்ற அச்சத்தில், பாண்டுவிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தேன். தண்ணீர் பாட்டில் எடுத்து முகத்தில் தெளித்து விட்டேன்.
பயத்தைப் போக்கிக் கொள்ள ஏதாவது பேசவேண்டுமே. “மாயூரம் எட்டு மைல்தான் இருக்கிறது. இப்படியே பேசிக்கொண்டே இருட்டில் நடந்து போனால் பொழுது புலர மாயூரம் போய்ச் சேர்ந்துவிடலாம்” என்றேன் நான். இந்த நகைச்சுவையை யாரும் ரசிப்பதாகத் தெரிய வில்லை. அரைமணி ந்ேரம் திகைப்பினூடே கழிந்தது.
பாண்டு மெல்ல எழுந்து, “மன்னிச்சுக்குங்க அண்ணா. சரியாப் போச்சு” என்று சொல்லிக் காரில் ஏறினார். நாங்களும் நம்பிக்கையுடன் ஏறினோம். பிறகு அசம்பாவிதம் ஏதுமில்லை. மாயூரம் 10 நிமிடத்தில் போய் ஒழுங்காகச் சேர்ந்தோம். சஸ்பென்சாக ‘அன்பே வா’ பார்க்க ஆசைப்பட்டதில் எவ்வளவு இடைஞ்சல்கள் அண்ணாவுக்கு!
காதல் அனுபவம் உண்டா?
“எங்கே கருணானந்தம்?” என்று கேட்ட இன்ப ஒலி என் செவிப்புலனில் பாய்ந்து, சிந்தையை உலுக்கி, எழச் செய்தது!
யார் குரல்? யாருடைய குரல் இது? அண்ணாவின் குரல்போல் இருக்கிறதே? அண்ணா எப்போது ஈரோடு வந்தார்கள்? கேள்வி அலைகள் அடுக்கடுக்காய்ப் புரண்டெழுந்து முடிவதற்குள் “குடி அரசு” அலுவலகத்தின் மெஷின் ரூமில் நான் நின்றிருந்த இடத்துக்கே விரைந்து வந்த வண்ணம் ஈ. வெ. கி. சம்பத், “வாங்க வாங்க! அண்ணா உங்களெப் பாக்க வந்திருக்கார்!” என்று அழைத்தார். புலவர் நா. மு. மாணிக்கம் வியப்புடன் எழுந்து வந்து வேடிக்கை பார்க்கிறார்.
வெளிப்புற முதல் அறையில் வீற்றிருந்த அண்ணா, என் வலது கரத்தைப் பற்றிக் குலுக்கினார்-“உன்னைப் பாராட்ட வந்தேன்” என்றார், புன்சிரிப்புத் தவழ! இறக்கையின்றி மேகமண்டலத்தில் பறந்து கொண்டிருக் கிறேன் நான்! என் உடம்பிலுள்ள மயிர்க்கால்களெல்லாம் சிலிர்த்து, உணர்வுகளின் உயிர்த்துடிப்போடு, மகிழ்வால் உள்ளம் பொங்கி நிரம்பி வழிகிறது! ஒன்றும் விளங்காமல், “எதற்காக அண்ணா?” என்கிறேன், வினாக்குறி தேக் கிய முகத்துடன், சம்பத்தையும் பார்த்தவாறே!
“நீ ‘குடி அரசில்’ எழுதிய நாடக விமர்சனம் ஊரிலேயே படிச்சேன். ஈரோடு வந்தா உன்னெப் பாராட்டணும்னு நெனச்சேன். ரொம்ப அருமையா எழுதி யிருக்கே அனுபவப்பட்ட நாடகத்துறை எழுத்தாளர் மாதிரி இருக்குது...உனக்கேது இவ்வளவு தூரம் இதிலே அனுபவம்?”
“என்னண்ணா கேள்வி இது? நான் தஞ்சாவூர்க் காரணில்லியா? (கருவத்தால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டேன்!) உங்க நாடகம்-நீங்களே நடிச்சது, நீங்க எழுதினது, எவ்வளவு பார்த்திருக்கேன்! பாட்டுக்கச்சேரி, மேளக் கச்சேரி, நாட்டியம், சினிமா, நாடகம் எல்லாம் சிறு வயசிலிருந்தே பார்த்துப் பார்த்து ஏற்பட்ட பட்டறிவு, அனுபவம்...”
“அதெல்லாம் சரி! இந்த விமர்சனத்திலே, காதலைப் பத்தி ரெண்டு மூணு இடத்திலே எழுதியிருக்கியே-- அதிலேயும் உனக்கு அனுபவம் உண்டா?” (எனக்கு அப்போது திருமணம் ஆகவில்லை).
அருகிலிருந்த சம்பத் கைகொட்டி நகைத்தார். அவரே சொன்னார், “கவிஞராச்சே அண்ணா. அதனால கற்பனை பண்ணி எழுதியிருப்பார்!” என்று.
நான் வெட்கத்தால் தோற்றுப் போய்த் தலையைத் தாழ்த்திக் கொள்ள நேர்ந்தது! அண்ணா என் முதுகில் தட்டிக் கொடுத்தார். சம்பத்தோ, “இல்லீங்க கருணானந்தம்! நெஜமாகவே அண்ணா உங்க எழுத்தெப் பாராட்டி, எங்கிட்ட யும் சொல்லிக்கிட்டிருந்தாருங்க!” என்றதும், துணிவுடனே நிமிர்ந்தேன் மீண்டும்.
“டி. கே. எஸ். சகோதரர்களின் முள்ளில் ரோஜா நாடகம் - ப. நீலகண்டன எழுதியது - இப்போது கோயமுத்துளர் சண்முகா தியேட்டரில், அல்லவா நடக்குது. நீ எப்படி எழுதினே?” என்று வினவினார் அண்ணா.
“ஆமாண்ணா!-‘எங்கள் முள்ளில் ரோஜா’ நாடகம் சிறப்பாக நடக்கிறது. ‘குடி அரசு’ பத்திரிகையில் ஒரு விமர்சனம் எழுதினால் எங்களுக்குப் பெருமையாக இருக்கும். உங்கள் உதவி ஆசிரியர் யாரையாவது கோவைக்கு அனுப்பிவையுங்கள்’ என்று டி. கே. சண்முகம் கடிதம் எழுதியிருந்தார். அதனால, நானே போய், நாடகத்தைப் பார்த்துவிட்டு வந்துதான் எழுதினேன். ரயிலில் போக ஒருநாள், திரும்பிவர ஒருநாள் ஆச்சு!”
“அவர்கள் யாராவது நீ வந்ததைத் தெரிந்து கொண்டார்களா?“
“ஒ! டி. கே. பகவதி என்னை வரவேற்று, நிறைய நேரம் பேசிக்கிட்டிருந்தார். உங்க மேலயும் ஒரு (புகார்) கம்ப்ளெய்ண்ட் சொன்னார்.
“என்ன சொன்னார்?” சிரித்துக்கொண்டே கேட்டார் அண்ணா. அதற்குள் வெற்றிலை பாக்கு வாங்கி வந்தார் ‘குடி அரசு’ மேனேஜர் நல்லுசாமி. அண்ணா மெல்ல அவற்றை மெல்லத் துவங்கினார். ஒரு சிட்டிகை பொடியும்
உறிஞ்சினார். உற்சாகத்துடன் என்னைக் கேட்கத் தயாரானார்.
“‘அண்ணாச்சியும் நானும் அண்ணாகிட்டே எவ்வளவோ நாளா எங்களுக்காக ஒரு நாடகம் எழுதித் தரச் சொன்னோம். ஆனா, ராமசாமிக்கு மட்டும் ரெண்டு நாடகம் (ஒர் இரவு, வேலைக்காரி) குடுத்தாங்க; எங்களுக்குத் தர வேயில்லே! ராமசாமி நம்ம பையன்தான்; இருந்தாலும் எங்களுக்கு அது ஒரு மனக்குறை-திராத குறைதான்’ என்று பகவதி வருத்தப்பட்டார் அண்ணா!” என்றேன்.
“உனக்குத் தெரிந்தது தானேய்யா—நீயே பதில் சொல்லியிருக்கலாமே. இவுங்க கம்பெனியிலே இருக்க முடியாம, கொள்கை ரீதியா கருத்து வேறுபாடு ஏற்பட்டு தானே (டி. வி.) நாராயணசாமி, (எஸ். எஸ்.) ராஜேந்திரன் எல்லாம் வெளியேறினாங்க. கலைவாணர் ஜெயிலுக்குப் போனதாலே (கே. ஆர்.) ராமசாமியெத் தனிக்கம்பெனி வைக்கச் சொன்னேன், இல்லேண்ணா (சிவாஜி) கணேசன், (ஆர். எம்.) வீரப்பன். (பி. எஸ்) தட்சிணாமூர்த்தி, (ஜி. எஸ்.) மகாலிங்கம், (எம். என்) கிருஷ்ணன் எல்லாரும் ரொம்பக் கஷ்டப் பட்டிருப் பாங்களே...”
“ஆமாண்ணா-அந்தச் சமயம் நான் தஞ்சாவூர்லே தானே இருந்தேன். அங்கேதானே கம்பெனி துவக்கம்! நீங்க சரியான சந்தர்ப்பத்திலே நாடகம் கொடுக்க லேண்ணா, கே. ஆர். ஆர். நாடகக் கம்பெனி நொடிச்சுப் போயிருக்குமே! நான் இதெல்லாம் ஞாபகப்படுத்தி, டி.கே. பகவதிகிட்டே சொல்லிட்டுதான் அண்ணா வந்தேன். இருந்தாலும் நீலகண்டனுடைய முள்ளில் ரோஜா நாடகம் சுயமரியாதைக் கருத்துக்களுடன் - டி. கே. எஸ். நாடகக் குழுவினரின் தரத்தில், அருமை யாயிருந்ததாலே, அப்படியே எழுதினேண்ணா! ‘குடி அர’ சில் ஒண்ணரை பக்கம் முழுமையாக வந்துட்டுது!” என்றேன்.
அண்ணா என்னைக் கேலி செய்யத் துண்டிய அந்த இடம் இதுதான்:
தாசி கமலத்தின் மகள் மங்கைப்பருவம் அடைகிறாள். அதாவது காமத்தேன் எங்கு கிடைக்கும் எனச் சுற்றி யலையும் கருவண்டுகளைக் கவரும் வண்ணம் மலர்ச்சி அடைகிறாள்...
ராகவ முதலியார் துணுக்குச் சேலை கட்டியிருந்தா லும் விரும்பக்கூடிய பரம ரசிகர். அவர் எல்லா நகைகளும் போட்டு, 5000 ரூபாய் பணமும் கொடுத்துச் செல்லத்துக்குச் “சாந்தி” செய்ய ஒத்துக் கொள்ளுகிறார். இதற் கிடையில் மிராசுதார் கந்தசாமிப் பிள்ளையின் மகன் ராமநாதன், நண்பர்களின் சகவாச தோஷத்தால், இளமை இன்பம் துசுரத் தாசி வீடு செல்லத் துணிகிறான்...
தாசியின் உயர்குணத்தை எண்ணி எண்ணி அவளிடம் காதல்கொண்டு, அவளையே மணப்பதாக உறுதி பூண்டு கடிதம் எழுதிவிட்டான். ஒருவனையே நாடியிருந்த செல்லமும் காதல் வயப்பட்டாள், சந்திப்புகள் தவறாமல் நடந்தவண்ணமிருந்தன...
(“குடி அரசு” 20.12.1947)
அண்ணாவின் நினைவலைகள் அதற்குள் எங்கெங்கோ மோதி முட்டித் திரும்பி மீண்டிருக்க வேண்டும். உறங்கி விழித்தவர்போல, “அதெல்லாம் சரி, நீ எழுதிய நாடக விமர்சனம் பெரிதாயிருந்தாலும்.நன்றாயிருந்தது! சரி, வா சம்பத்து வீட்டில் சாப்பிடப் போகலாம்” என்றார். புறப்பட்டோம்.
அண்ணா, டி. கே. எஸ். சகோதரர்களின் “குமாஸ்தாவின் பெண்” நாடகத்திற்கு எழுதிய விமர்சனந்தான் இது வரை தமிழ் நாடக விமர்சனங்களிலேயே தலைசிறந்ததாகும். அவரே என்னைப் புகழ்ந்தால்...?
உலகப் புகழ்பெற்ற படம்
“காலையிலே நேரத்தோட புறப்பட்டுப் போங்க சார்! அப்பதான் காஞ்சிபுரம் போயி, படம் எடுத்துகிட்டு, மத்தியான சாப்பாட்டுக்கு இங்கே திரும்பிடலாம்” என்று கலைஞர் விரைவு படுத்தினார். சாப்பாட்டைப் பற்றிக் குறிப்பிட்டால்தான் எனக்குச் சுறுசுறுப்பு வரும் என்பது அவரது (தவறான) கணிப்பு?!
“அப்படியா? இதோ புறப்பட்டேன்! எப்படியோ படம் எடுத்துகிட்டுதான் திரும்புவோம். ஆனா, எப்பத் திரும்புவோம் என்பது, எங்க கையிலே இல்லியே!” என்றேன்.
“இல்லே சார். அண்ணாவிடம் சொல்லியிருக்கிறேன், நீங்க கிளம்புங்க!” என்று தூண்டினார்.
உடனே ஒடிச்சென்று முன்சீட்டில் அமர்ந்தேன். ஃபியட்காரில் அதுதானே வசதி! பின் சீட்டில் புகைப்பு. நிபுணரும், அப்போது ஓரளவுதான் பருமனாயிருந்தவரும்இப்போது இருமடங்கு பெருத்து விட்டவருமான சுபாசுந்தரம், கேமரா சகிதம், முரசொலி யின் அதிகார பூர்வமான பிரதிநிதியாகத் தம்பி செல்வம்.
நேரே அண்ணா வீட்டில் போய் இறங்கினோம். உள்ளே போனதும், முற்றத்தின் முன்புறக் குறட்டின் மீது, ஒரு சாய்வு நாற்காலி (Easy chair)யில் அண்ணா ஒய்வாக அமர்ந்திருந்தார்கள். இடுப்பில் வேட்டி, மேலே வெற்றுடம்பு, கலைந்த தலை, மூன்று நாள் சவரத்தைக் காணாமல் முகத்தில் வெள்ளிக் கம்பிகள் முளைவிட்டிருந்தன.
என்னுடைய “பூக்காடு” புத்தகத்தைக் கையில் கொடுத்தேன். அருகிலிருந்த மூக்குக் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டு படிக்கத் துவங்கினார்கள். சுந்தரத்திடம் கண்சாடை செய்தேன். ஒரு படம் பிடித்தார். Flash light வெளிச்சம் தெரிந்ததும், அண்ணா என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து, புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு நிமிர்ந்தார்கள். மறுபடியும் ஒரு Flash.
“‘முரசொலி’ மலருக்குப் படம் எடுக்க வந்திருக்கிறோம், அண்ணா!” என்றேன். உடனே சுந்தரத்தைப் பார்த்துக் கையமர்த்தினார், வேண்டாமென்று. எதிரில் அமர்ந்து கொண்டோம், கீழேயே.
“ஏன்யா, ‘பூக்காடு’ எவ்வளவு காப்பி வித்துது” என்றார் அண்ணா என்னை நோக்கி.
என்னண்ணா இது, நீங்க சொன்னபடிப் புத்தகங்களை நமது தி. மு. கழக மாவட்ட மாநாட்டுக்கெல்லாம் எடுத்துப் போனேன். நான் டிக்கட் விக்கிற கவுண்ட்டரிலேயே வைத்துக் கொண்டேன். பாதிதான் விலைக்குப் போயிற்று. மீதியை எனக்குத் தெரிந்த தோழர்கள்-நம்ம கவிஞரதுதானே - என்று சொல்வி இலவசமாய் எடுத்துப் போனார்கள்” என்றேன் சோகத்துடன்.
அண்ணாவோ, இது பரவாயில்லெய்யா. பாதி வித்தாகூட, நீ போட்ட முதல் எடுத்துவிடலாம்யா. ஆனா இது நான் நெனச்சமாதிரி பிரிண்ட்டாகலே என்றார்.
“ஆமாண்ணா, எனக்கும் இப்பதான் ஒரளவு புரியுது. அடுத்த எடிஷன் இன்னும் நல்லாப் போடலாம்” என்றேன் நான்.
‘பூக்காடு’ இரண்டாம் பதிப்பில் அண்ணாவின் அணிந்துரை கையெழுத்துப் பிரதியை. அப்படியே பிளாக் எடுத்து வெளியிட்டேன். அட்டையின் முன்புறம் அருமையான வண்ண ஒவியம். பின்புறம் அண்ணா பூக்காடு” படிக்கும் போட்டோ. ஆனால் (1972-இல்) இரண்டாம் பதிப்பு வெளியானபோது அண்ணன் எங்கே எங்கே??
அண்ணா வேண்டுமென்றே பேச்சைத் திசை திருப்புகிறார்கள் என்பது எனக்குப் புரிந்து விட்டது. “சரி யண்ணா! சட்டை போட்டுக்குங்க, படம் எடுக்கலாம்” என்றேன்.
“ஒண்ணும் அவசரமில்லேய்யா. எதிர் வீட்டு மாடியில் போய் மூணுபேரும் ரெஸ்ட் எடுங்க. செல்வம்! நெறய புக்ஸ் இருக்கும், பாரு! மத்தியானம் சாப்பிட்ட பிறகு போட்டோ எடுக்கலாம். அதுக்குள்ள ஆளை வரச்சொல்லி நானும் ஷேவிங் செய்துகொண்டு, குளிச்சி, ரெடியா வந்துடறேன்” என்றார்கள் அண்ணா. நல்லதுதானே ? எங்கள் மூவருக்கும் மறுத்துப் பேச வாயில்லை.
ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் எதிர்மாடிக்குச் சென்றோம். என்ன விந்தை? அங்கே பெரும் புதையல் ஒன்று எங்களுக்காகக் காத்திருந்தது! என்ன அது?
அப்போதெல்லாம் அண்ணா நிறையக் கார்ட்டுன் படங்கள் வரைவதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந் தார்கள். அப்படிப் பல்வேறு நேரங்களில் தீட்டிய எண்ணற்ற ஒவியங்கள் அறை முழுக்க இறைந்து கிடந்தன, அவற்றையெல்லாம் மூன்று பேரும் பொறுக்கி எடுத்து ஒழுங்காக அடுக்கி, ஒவ்வொன்றையும் ரசிக்க ஆரம்பித் தோம். பொழுது போனதே தெரியவில்லை. பசியையும் உணரவில்லை.
உணவுக்கு அழைப்பு வந்தது. அண்ணா முழுமையாக மாறியிருந்தார்கள். பளபளப்பான முகம். வாரி விடப்பட்ட தலை, சலவை வேட்டி சட்டை மேலாடை. சாப்பாடு முடிந்தபின் வீட்டு மாடியிலும் பின்புறமும் பல்வேறு கோணங்களில் படம் எடுத்தார் சுந்தரம். (அண்ணாவும் நானும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு படத்தை இன்னமும் எனக்குத் தரவில்லை சுந்தரம்?)
மாலையில் சென்னை திரும்பினோம். பிடிக்கப்பட்ட படங்கள் பின்பு “முரசொலி”யில் மலர்ந்தன. ஆனால், அன்று எடுக்கப்பட்ட படங்களிலேயே உலகப் புகழ் பெற்றது, நாங்கள் திடீரென்று எடுத்த முதல் படந்தான்; அண்ணா மேலாடையின்றி, இயல்பான தோற்றத்தோடு, ‘பூக்காடு’ படித்துக் கொண்டிருக்கும் போஸ். ஒவியர் செல்லப்பன் முகப்பு ஒவியம் தீட்டிய அட்டையுடன் கூடிய புத்தகம் அந்தப் “பூக்காடு.”
A. S. ராமன் ஆசிரியராகப் பணியாற்றிய நேரத்தில் Illustrated Weeklyயில் அண்ணாவைப் பற்றி வரலாற்றுப் புகழ் மேவிய கட்டுரை ஒன்றைத் தீட்டியபோது, சுபா சுந்தரம் கிளிக் செய்த இந்தப் படமே மிக முக்கிய இடம் பெற்றிருந்தது. அதற்குப் பின்பும் அந்த போட்டோ நிறையப் பயன்படுத்தப்பட்டுள்ளது எல்லாருக்கும் நினைவிருக்குமே!
1971-இல் என்னுடைய பூக்காடு நூலுக்குத் தமிழக அரசின் முதல் பரிசு கிடைத்தது. ஆனால் எனக்கு அதனி லும் பன்மடங்கு மகிழ்வும் பெருமையும் ஏற்படுவது, அண்ணா அவர்கள் என்னுடைய சுவைஞர் என்பதைப் புறச்சான்றுடன் மெய்ப்பிக்கும் இந்த இயல்பான புகைப் படத்தைப் பார்க்கும் நேரத்தில்தான்!
-Continue to page two
Comentarios