top of page
library_1.jpg
Writer's pictureBhishma

அண்ணா சில நினைவுகள் -VII

கவிஞர் கருணானந்தம்



முத்துப் பந்தர்


57. வியப்பு-வியப்பிலும் வியப்பு

58. சாவி இங்கே, பெட்டி அங்கே!

59. வரைந்த ஒவியம் மறைந்ததே!

60. பதினொரு மாதம் சுமந்தவர்

61. தந்தை மகற்காற்றும் நன்றி


வியப்பு-வியப்பிலும் வியப்பு!

நடுவண் அரசின் ஊழியனாய், மாயூரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு, நான் அலுவல் புரிந்து வந்த போதிலும், நான் அதிக நாள் சென்னை வாசியாகத்தான் வாழ்ந்தேன். இங்கெனக்குச் சோற்றுக் கவலையில்லை, கலைஞர் வீடு என் வீடாயிருந்ததால்! அதிலும், தி. மு. க. ஆட்சி அமைந்த பிறகு, நான் சென்னை மாநகரில் தங்கும் நாள் அதிகரித்துவிட்டது. அரசு அலுவலராயிருந்தால் ஒய்வு பெற்றிருக்க வேண்டிய வயதில் அண்ணா முதலமைச்சரானார். வழக்கத்திற்கு மாறாக அதிகாலை எழுந்திருத்தல், மன உளைச்சல், புதிய பொறுப்புக்கள், கோப்புகள் பார்த்தல் இப்படியாக இயல்புக்கு மீறி உழைத்ததால் அண்ணா உடல் நலம் சீர்கெட்டது வெகு விரைவிலேயே!

அண்ணா அமெரிக்காவில் அறுவை சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின்னரும் அரசுப்பணிகளைக் கவனித்து வந்தார். ஒரு நாள் “விடுதலை” ஆசிரியர் என் நண்பர் வீரமணியும், நாகரசம்பட்டி நண்பர் என். எஸ். சம்பந்தமும் அண்ணாவைக் காண வீட்டுக்கு வந்தனர். “உக்காருப்பா!” என்றார் அண்ணா. வீரமணி உட்கார்ந்தார். சம்பந்தம் உட்காராமல் ஏதோ சொல்ல முயன்றார். “என்ன சம்பந்தம்?” எனஅண்ணா கேட்கவும், ஆத்திரம் மேலிட்ட வராய், “என்னங்கண்ணா! எங்க நாகரசம்பட்டி பள்ளிக் கூடத்துக்கு அய்யா பெயரை வைக்கிறதுக்கு நாவலர் அனு மதி குடுக்க மறுத்து file ஐத் தூக்கி மூஞ்சியிலே விட்டெறிஞ் சிட்டாருங்க!” என்றார் சம்பந்தம். அவரது சினத்தை ஆற்ற எண்ணி, “நெஜம்மா மூஞ்சியிலேவா விட்டெறிஞ் சார்?” எனக் கேட்டார் அண்ணா. உடனே புன்சிரிப்புடன் “இல்லிங்க; டேபிள் மேலேதான் போட்டார்.” என்று கூறிய சம்பந்தத்தைப் பார்த்து “சரி உட்காருங்க. அங்கே நம்ம சொக்கலிங்கம் (தனிச் செயலாளர்) இருப்பார்; பாருங்க!” என அண்ணா சொல்லவும், சம்பந்தமே சென்று அவரை அழைத்து வந்தார். அவரிடம் அண்ணா சொல்கிறார். “என்னங்க - நாகரசம்பட்டி - அதாவது தர்மபுரி டிஸ்ட்ரிக்ட்லெ - இவுங்க ஊர்ல. ஒரு ஹைஸ்கூல் இருக்குது. அதுக்குப் பெரியார் ராமசாமி உயர்நிலைப் பள்ளி அப்படிண்ணு பெயர் வைக்கிறதுக்காக ஒரு லட்சத்து இருபத்து அஞ்சாயிரம் ரூபாய்லெ கட்டடம் கட்டித் தந்திருக்காங்க. எழுபத்து அஞ்சாயிரம் ரூபாய் கொடுத்தாலே டோனர் (நன் கொடையாளர்) சொல்ற பெயரை வைக்கலாம்னு நாம G. O. போட்டிருக்கோமே. அதை நாமே மீறலாமா! அந்த எஜுகேஷன் மினிஸ்டர் பீ. ஏ. நம்ம பண்டரிநாதன் இருப்பார். அந்த ஃபைலைக் கொண்டு வரச் சொல்லி, இந்த G. O. வையும் quote பண்ணி, இதன் பிரகாரம், பெரியார் பெயரைச் சூட்ட அனுமதிக்கப்படுகிறதுண்ணு order போடச் சொல்லுங்க உடனே” என்று ஒரே மூச்சில் இவ்வளவும் சொல்லி முடித்தார் முதலமைச்சர் அண்ணா.

பிறகு அவர்கள் இருவரிடமும் பேச்சை மாற்றினார். “என்னா வீரமணி! அய்யா எப்படியிருக்கார்? இந்த டுர் (tour) போடும் போது கொஞ்சம் பாத்துப் போடுங்கப்பா! மொதல் நாள் திருநெல்வேலி, மறுநாள் தர்மபுரிண்ணு எவ்வளவு distance! அதிலேயும், எங்கே போனாலும் அங்கங்கே நம்ம தோழர்கள் இருக்காங்க, அவுங்க வீடுகளிலேயே சூடா, பத்தியமா சாப்பிடணும். இப்ப தர்மபுரி மாவட்டத்திலே எங்கே கூட்டம்னாலும், நம்ம சம்பந்தம் வீட்லெதான் சாப்பாடுண்ணு வச்சிக்கணும். நான் அய்யாவோட சேர்ந்தப்போ, இப்ப எனக்கு என்ன வயசோ(60) அந்த வயசு அய்யாவுக்கு. அப்பவே வயிற்றுக் கோளாறு; பேதியாகும்; பொருட்படுத்தமாட்டாரு. அப்ப நல்ல சாப்பாட்டுக்கு வழியில்லே! அப்பவே அய்யா இறந்து போயிருப்பாரு. ஆனா மணியம்மா வந்த பிறகுதான் அவருக்கு இதிலே ஒரு திருப்பம். அவுங்க, அய்யாவை நல்லா கவனிச்சிக்கிட்டாங்க. அவுங்க இல்லேண்ணா நாம அய்யாவை எப்பவோ பறிகொடுத்துட்டுப் பரிதவிச்சிருப்போம். இவ்வளவு நாள் உயிரோட பாத்திருக்கவே முடியாது. அய்யா எவ்வள்வு நாள் இன்னும் வாழ்றாரோ அவ்வளவுக்கும் நமக்கு நல்லது! பாத்துக்குங்க-” என்று முடிக்கும்போது அவர் குரல் கரகரத்தது. உணர்ச்சி மீதுற, நாக்குழறியது. எதிரிலிருந்த இருவரும் உடனே எழுந்து, மேலும் அண்ணாவுக்குத் தொந்தரவு தர வேண்டாமென எண்ணி, விடைபெற்றனர்.

‘புதிய அன்னிபெச்ன்ட் புறப்படுகிறார்’ என்று 1949-ல் மண்ணியம்மையாரை வர்ணித்த அண்ணா இவர்தானா என்று, அவர்கள் இருவரும் கருதி, வியந்துகொண்டே சென்றிருப்பார்கள் என நான் எண்ணிச் சிந்தனையில் மூழ்கினேன். -

கல்வெட்டுச் சாசனமாய்ப் பொறித்து வைக்கத்தக்க ஒரு கடிதத்தை அண்ணா நியூயார்க் மருத்துவ மனையி னின்று பெரியாருக்கு எழுதினாரே. அதன் இறுதிப்பகுதியில் என்ன சொன்னார்:

“தங்கள் பணி மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வரையில் இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்தச் சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்த தில்லை; அதுவும் நமது நாட்டில். ஆகவே சலிப்போ கவலையோ துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லை. என் வணக்கத்தினைத் திருமதி மணி அம்மையார் அவர்களுக்குத் தெரிவிக்கவும். அன்பு வணக்கங்கள்.



தங்கள் அன்புள்ள அண்ணாதுரை. நியூயார்க் 10.10-68.”



நம்முடைய இயக்கத்தை வெறும் பயனையும் பதவியையும் எதிர்பார்க்கும் அரசியல் குழுவாக அமைக்காமல், பற்று பாசம் அன்பு அரவணைப்பு-இவற்றினடிப்படையில் அமைத்தார்களே! இயக்கத் தலைவர்களை வேறு யார் அய்யா என்றும் அண்ணா என்றும் வாஞ்சையுடன் அழைக்க முடியும்? அதனால்தானே பதினெட்டாண்டு இடை வெளிக்கும் பின் ஒரு முதலமைச்சர் தானே வலிந்து சென்று தன் தந்தையைக் கண்டார். ராஜாஜி வருத்தப் படுவாரே என்றார் ஒருவர். சென்னை வந்த பின்பு பார்க்கக்கூடாதா, திருச்சிக்குச் சென்று பார்க்க அப்படி என்ன அவசரம் என் றார் வேறொருவர். “என்னை இந்த நாட்டுக்கு அறிமுகப் படுத்தியவரே அவர்தான். முதலமைச்சரானதும் அவரை நான் பார்க்காவிட்டால், அது மனிதப் பண்பே ஆகாது” என்று சொல்லிவிட்டார் அண்ணன்.

“அவர் என்னுடைய தலைவர். நானும் அவரும் பிரிகிறபோதுகூட நான் அவரையேதான் தலைவராகக் கொண்டேன். இன்றும் அவரையே தலைவராகக் கொண்டு தான் பணியாற்றி வருகிறேன்” என்றார் திருச்சியில். “தமிழ் நாட்டின் முதல் பேராசிரியரே பெரியார்தான். அவருடைய கல்லூரியில் பயின்றுவந்த மாணவர்கள் என்பது ஒன்றுதான் எங்களுக்கு உள்ள பெரிய தகுதி” என்று காஞ்சித் தலைவரே நாகரசம்பட்டியில் கூறினார். “தமிழகத்திற்கும், தமிழ் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும், இன்னும் உலகிற்கே என்று கூடச் சொல்லலாம், பெரியார் செய்திருக்கின்ற அரிய பெரிய காரியங்கள், ஆற்றியிருக்கிற அருந்தொண்டுகள், ஏற்படுத்தியிருக்கிற புரட்சி உணர்ச்சிகள், ஓட விட்டிருக்கின்ற அறிவுப்புனல், உலகம் என்றுமே கண்டதில்லை. இனியும் காணப் போவதில்லை. இந்தியாவின் தேசியமொழி இந்திதான் என்று சொன்னவுடன் “தேசியம் என்பது மகா புரட்டு. இந்தியா என்கிறீர்களே அது மிகப்பெரிய கற்பனை. அவையிரண்டையும் உடைத் தெறிவதுதான் என்வேலை” என்றாரே பெரியார்! இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக்கூடிய காரியங்களை இருபது ஆண்டுகளில் அவர்கள் செய்துமுடித்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் putting centuries into capsules என்பார்களே அதுபோல” என்றார் அண்ணா.

பெரியாரின் கருத்துகளுக்கு சட்டவடிவம் தருவதற் காகத்தான் பதவியில் இருப்போம், எனத் திட்டவட்டமாகக் கூறித்தான், சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட சம்மதம் தந்தார் அண்ணா.

அண்ணா பெரியாரை விட்டுப் பிரிந்தது, மணியம்மை யாரை அவர் திருமணம் செய்து கொண்டதால்தான் என்ற கருத்தை நான் எப்போதும் மறுப்பவன். இதற்குச் சான்றாக அரூரில் 12. 7. 1968 அன்று அண்ணா பேசியதை நினைவு கூர்வோம்:- “என்னுடைய நண்பர்கள் எல்லாம் நான் பிரிந்து சென்றுவிட்டேன் என்று குறிப்பிட்டார்கள். இருக்க வேண்டிய கடினமான நாளில் இருந்தேன். பிரிந்தேன் என்பது கூடத் தவறு. இந்த நாட்டு அரசியலை, கமக்கு நேர்மாறான கருத்து உடையவர்களிடம் கொடுத் துவிட்டு, அவர்களுக்கு காம் ஆளாகி இருப்பதைப் போக்க வேண்டும் என்பதற்காக, அரசியலில் நுழைந்து, அதனைக் கைப்பற்றியும் இருக்கின்றேன்”

30.8.68 அன்று தர்மபுரியில் பெரியார் சிலைதிறப்பு விழா. இதற்குத் தேதி கேட்பதற்காக முன்பு ஒரு நாள் சம்பந்தம், அண்ணாவிடம் வந்து சென்றார். இப்போது அண்ணாவுக்கும். உடல் நலமில்லை. அய்யாவுக்கும் உடல் நிலை சரியில்லை. அதனால் ஒத்திவைத்திருக்கின்றோம். எனறு சொல்வதற்காக விடுதலை வீரமணியுடன் சம்பந்தம் வந்திருந்தார். அவர்களிடத்தில் அண்ணா அய்யாவும் அடிக்கடி ஹைக்கோர்ட் ஜட்ஜ் நியமனம் சம்பந்தமாநிறைய எழுதறார். ஏதாவது செய்யனும். நீதிபதிகள் யாரார், எப்ப ரிட்டையர் ஆகுறாங்க மற்ற particulars எல்லாம் எனக்கு வேணுமே, வீரமணி?” என்றார் அண்ணா. “இதோ! பத்து நிமிஷத்திலே போயி டைப் அடிச்சி குடுத்தனுப்புறோங்க” எனப் புறப்பட்டார்கள் இருவரும். “என் பெயரைக் கவர்மேல் எழுதி, நேராக என்னிடம் தரச் சொல்லுங்க!” என்றார் அண்ணா. “அதென்னத்துக்குங்க அவ்வளவு பயம்? நாங்களே கொண்டு வருகிறோம்” எனச் சென்றவர்கள் அரைமணியில் உண்மையாகவே கையில் Type செய்த தாளுடன் திரும்பி வந்தார்கள்!

“விடுதலையில் இவ்வளவு particularsம் readyயா வச்சிருக்கீங்களா?”

“இல்லீங்க! அய்யாவோட டயரியில இருந்து எழுதிக் கிட்டு வந்தேன்!” என்கிறார் சம்பந்தம்.

“அடெ; அய்யாவோட டயரியிலே இல்லாத விஷயமே ஒண்ணும் இருக்காது போலிருக்கே?” என வியக்கிறார் அண்ணா!

வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே- என்ற புறநானூற்று வரிகள் என் நினைவில் நிழலாடின.






சாவி இங்கே; பெட்டி அங்கே!



1947 ஆகஸ்ட் 15 துக்கநாள் என்று பெரியாரும், மகிழ்ச்சி நாள் என்று அண்ணாவும் அறிவித்துக் கருத்து வேறுபாட்டினை வெளிப்படையாகக் காட்டியதன் விளைவாக அண்ணா 1948 மே 8, 9 நாட்களில் நடைபெற்ற துரத்துக்குடி மாநாட்டுக்குச் செல்லவில்லை. மேலும், ராஜபார்ட் ரங்கதுரை, மரத்துண்டு, இரும்பாரம் போன்ற பிரச்சினைக்குரிய உருவகக் கட்டுரைகளைத் “திராவிட நாடு” இதழில் தீட்டி வருகிறார். இதையே சாக்காகக் கொண்டு, ஏற்கனவே எரிச்சலடைந்துள்ள பெரியாரிடம், மேலும் கோள் மூட்டிச், சுத்தமாக அண்ணாவைப் பெரியாரிடமிருந்து பிரித்துவிடலாம் என்று சிலர் முயல்கிறார்கள். அண்ணாவோ “நான் விலகவில்லை; ஒதுங்கியிருக்கிறேன்” என்றுதான் சொல்கிறார். எனவே ஒதுங்கி நிற்காமல் மீண்டும் எப்போதும் போல் அண்ணா உள்ளேயே இருக்க வேண்டும் என்று நாங்கள் சிலர் விரும்பினோம்.

‘நாங்கள்’ என்ற பட்டியலில் பெரிய பிரமுகர்கள் யாருமில்லை. ‘நாங்கள்’ பெரியாரின் அன்புக்கும் நம்பிக்கைகும் உரியவர்கள். ‘நாங்கள்’ சொல்வதை அய்யா ஏற்பார். அதனால், ஈரோட்டில் ஒருஸ்பெஷல் மாநாடு கூட்டி, அதற்கு அண்ணாவைத் தலைமை தாங்கச் செய்யலாம்,என்ற எங்கள் யோசனையை, அய்யா ஒத்துக்கொண்டார்கள். அதன்படி 1948 அக்டோபர் 23,24 தேதிகளில், ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷனிலுள்ள அய்யாவுக்குச் சொந்தமான திடலில், பந்தல் போட்டு மாநாடு நடத்திடத் திட்டம். ஈரோடு சண்முகவேலாயுதம், தவமணி இராசன், நான் ஆகிய ‘நாங்கள்’ எங்கள் முயற்சியில் வெற்றி பெற்றோம்!

“மாநாட்டு நுழைவுச் சீட்டுடன் சேர்த்து உணவுக்கும் டிக்கட் தந்து விடுவோம். கடுமையான ரேஷன் அமுலில் இருப்பதால் வருகிறவர்களின் வசதிக்காக நாமே ஆள் வைத்துச் சமையல் செய்யலாம்”-என்றார் அய்யா. சரி என்றோம். “இப்போதுதான் துரத்துக்குடி மாநாடு நடந்துள்ளதால் ஈரோட்டுக்கு அதிகக் கூட்டம் வராது-” என்னும் அய்யாவின் கருத்தில் மட்டும் நாங்கள் மாறு பட்டோம். இதில் நாங்கள் சொன்னதைக் கேட்காததால், பின்னால் மிகவும் அவதிப்பட்டார் அய்யா அவர்கள்.

“அண்ணாதுரை இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கப் போகிறார் என்றால், இனிமேல் திராவிடர் கழகத் துக்கும் அவர்தான் தலைவரா?” என்று ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், தற்செயலாக என்னைப் பார்த்த தி. பொ. வேதாசலம் அப்பாவித்தனமாகக் கேட்டார். “அதில்லிங்க. திராவிடர்கழகத்துக் குத் தலைவர் நீங்கதான் ! அண்ணா, இந்த மாநாட்டுக்கு மட்டுந்தான் தலைவர்-” என்றேன் நான். அவருக்குத் தன் பதவி பறிபோய்விடுமோ என்கிற பயம்.

அண்ணாவை இரட்டை மாட்டுச் சாரட்டு வண்டியில் வைத்து, ஈரோட்டு வீதிகளில் ஊர்வலம் நடத்தினோம். அய்யாவுக்கு உண்டான மகிழ்ச்சியின் எல்லையை நாங்கள் அன்று நேரடியாகக் கண்டோம். அவரும் வண்டியில் அமர்ந்து வரலாம். ஆனால் யார் சொல்வியும், கேட்காமல், மேல்துண்டை எடுத்துக் கருப்புச்சட்டைக்கு மேல் இடுப்பில் கட்டிக்கொண்டு, தேர்வடம் பிடிப்பது போல், ரதத்துக்கு முன்பாக நடந்தும் ஒடியும் வருகிறார் அய்யா; அவருக்கு ஈடுகொடுத்து நானும்! அண்ணாவுக்கு ஆச்சரியமான புன்னகை முகம் முழுதும்! சம்பந்தருக்குப் பல்லக்குத் தூக்கிய திருநாவுக்கரசர், அண்ணாவின் நினைவுக்கு வந்திருப்பார் போலும்!

அதன் பிறகு அய்யா அவ்வளவு நடந்து நான் பார்க்க வில்லை; அடுத்த 2, 3 ஆண்டுகளில் மேடையில் நின்று கொண்டே பேசுவதுகூட இயலாமல் போயிற்று! அய்யாவே முனைந்து, மும்முரமாய் முயன்று, எஸ். ஆர். சந்தானம் மூலமாக அண்ணாவுக்கும் தமிழ்த்தென்றல் திரு.வி.க.அவர்களுக்கும் ஈரோடு நகரமன்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த மாநாடு பல்வகையானும் சிறப்புப் பெற்ற தல்லவா? திரு. வி. க. திராவிடநாடு படம் திறந்தார். கலைவாணர், “திராவிடமாநாடே” என்று வில்லுப்பாட்டுப் பாடினார். குருசாமி, குஞ்சிதம், அழகிரிசாமி (இவருக்குக் கடைசி மாநாடு) ஆகியோர் பங்கேற்றனர். நடிகவேள் எம். ஆர். ராதா ஒரு இரவிலும், கலைஞர் மு. கருணாநிதி ஒரு இரவிலும், நாடகங்கள் நடத்தினர்.

அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல், அய்யா தலைவரை வழிமொழியும்போது, கூடியிருந்தோர் இன்ப வெள்ளத்தில் நீந்துமாறு, “எனக்கோ வயதாகிவிட்டது! அதனால், வயது வந்த மூத்த மகனிடம் பொறுப்புகளை ஒப்படைப்ப்துதானே முறை? அண்ணா அவர்களிடம்; உங்கள் அனைவருடைய முன்னிலையிலும், பெட்டிச்சாவியை ஒப்படைக்கிறேன்-” என்றார் பெரியார். அண்ணாவும் விட்டுக் கொடுப்பாரா என்ன? தலைவர் முன்னுரையில், “அய்யாபெட்டிச்சாவியை என்னிடம் தருவதாகக்கூறினார். தந்தையை மீறித் தறுதலையாகத் திரியும் பண்பு எனக் கில்லை. அதை ஜாக்கிரதையாகப் பயன்படுத்துவேன். சாவிதான் என்னிடத்தில் இருக்குமே தவிரப் பெட்டி பெரியாரிடம்தான் இருக்கும்!” என்றார் அறிஞர் அண்ணா!

அக்டோபர் மாதம் அல்லவா? மாநாட்டுக்கு முதல்நாள் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், மக்கள் வெள்ள மாய்த் திரண்டிருந்தனர். அய்யாவின் தவறான கணக்கின் படி, குறைவான அளவிலேயே உணவு சமைக்கப் பட்டிருந்தது. அண்ணாவின் தலைமையுரைக்குப்பின் இடைவேளை விடப்பட்டதும், உணவு டிக்கட் வாங்கியிருந்ததால், எல்லாருமே அடுத்துள்ள நாயக்கர் சத்திரத்துக்குப் படை யெடுத்தனர். பெரியார் நுழைவாயிலில் நின்றுகொண்டார், கூட்டத்தைக் கட்டுப்படுத்த எண்ணி! அவரையும் தள்ளிக் கொண்டு, பசி கொண்ட மக்கள் உள்ளே நுழையப் பார்க்கிறார்கள்! தூத்துக்குடி கே. வி. கே. சாமி தடுக்கப்பார்க்கிறார்! குழித்தலை வையாபுரி சோழகருக்கு ஆளனுப்பி அய்யா லாரியில் அரிசி வரவழைத்துச் சாப்பாடு தயாரித்திருந்தார். ஒழுங்குபடுத்திச் சாப்பாடு பரிமாற முடியவில்லை. நேரமும் போதவில்லை!

அண்ணா வெளியில வந்ததும், சம்பத்தும் நானும் சட்டென்று ஒரு காரில் ஏற்றிக்கொண்டு விரைவாகப் புது ரயிலடிக்குப் போனோம். “எங்கே?” என்றார் அண்ணா. “இங்கே நமக்குச் சாப்பாடு கிடைக்காது சம்பத் வீட்டிலே எப்படி நிலைமையோ தெரியாது! பேசாமல் வாருங்கள்” என்று ரஹ்மானியா ஒட்டவில் போய் இறக்கினோம் அண்ணாவை; பிரியாணி சாப்பிட புது ஜங்ஷன். நான் R. M.S. அலுவல் பார்க்கும் area, மேலும், ர கிமானியா ஒட்டலிலும், பக்கத்து உடுப்பி ஒட்டலிலும் எனக்குப் பற்று, வரவு உண்டு அப்போது! ஏறத்தாழ நான் உள்ளுர் வாசி போலத்தானே!

மாநாட்டுத் தலைவருக்கு, ஒட்டலில் பிரியாணி உபச்சாரம்! அடுத்திருந்த அய்யர் ஒட்டலில் சொல்லி, நிறையத் தயிர்சாதம் பொட்டலங்கள் வாங்கிக்கொண்டு, திரும்பிப் போகிறவழியில் கலைஞரின் நாடகக்குழுவினர் தங்கியிருந்த விட்டில் இறங்கி, அவர்கள் பசியால் தவிக்காமலிருக்கத் தயிர்சாதம் வழங்கினேன். அரங்கண்ணல், கருணை ஜமால், தஞ்சை ராஜகோபால் எல்லாரும் நாடகக்குழுவில் அப்போது நடிகர்களாக வந்திருந்தனர்.

பழைய ரயில்வே ஸ்டேஷனில், அய்யா பங்களா, மூலையில் இருக்கிறது. அங்கு போனோம். ஓர் அறையில் சென்னை என். வி. நடராசன் அழுதுகொண்டு உட்கார்ந்திருக்கிறார். அண்ணா திடுக்கிட்டுப் போய், “என்ன நடராஜன்?” என்று விசாரித்தார். “அய்யா இந்த மாநாட்டிலே என்னை ரொம்ப அலட்சியப்படுத்திவிட்டார். எனக்கு முக்கியமான function தரக்கூடாதா?” என்றார். நான் குறுகி கட்டு, “ஏங்க-நீங்க விஷயம் தெரிஞ்சவுங்களே இப்படி அழலாமா? அண்ணாவே தலைமை தாங்கும்போது நமக்கு வேறெ என்ன வேணும்? வாங்க! அய்யா நம்மை யெல்லாம் எப்பவுமே அலட்சியம் செய்யமாட்டார்! உண்மைத் தொண்டுக்குத் தனி மதிப்பு என்றைக்கும் உண்டு!” என்று சமாதானம் செய்தேன்.

பிறகு அண்ணாவிடம் சாப்பாடு போடுவதில் ஏற்பட்ட குழறுபடியான நிலவரத்தை எடுத்து விளக்கி, “நாம இப்ப உடனே மாநாட்டை ஆரம்பிச்சி நடந்தணும்! இல்லேன்னா, சோத்துப்பிரச்சனை முடிவே ஆகாது!-” என்றேன். அதே போல, அண்ணா பந்தலுக்குள் நுழைந்து, மேடையில் ஏறி, “தோழர்களே” என்று குரல் கொடுத்ததும், சாப்பாட்டுக் காகக் கியூவில் நின்றவர்களெல்லாம் கலைந்து ஒட்டமாக ஒடி வந்தார்கள் உள்ளே!

பெட்டிச் சாவியைப் பெற்றுக்கொண்ட பிறகு கூட ஒட்டலுக்குச் சாப்பிடப் போன மாநாட்டுத் தலைவர் அண்ணாவை, அடிக்கடி இதுபற்றிக் கேலி செய்தோம்!






வரைந்த ஓவியம் மறைந்ததே!

1969 சனவரித்திங்கள் இரண்டாம் வாரம் ஒரு நாள் இரவு அண்ணா வீட்டிலிருந்தேன். அண்ணியார் அண்ணா வுக்கு ஒரு கிளாஸ் தம்ளரில் அரிசிக்கஞ்சி கொடுத்தார்கள். இரவு உணவு ஒருவாய் உட்செலுத்திய அண்ணா, முகத்தைச் சுளித்தவராய், என்ன ராணி இது! பாத்துத் தரக்கூடாதா? இந்தக் கஞ்சியிலே பார்! ஒரு சாதம் முழுசாக் கிடக்குது!” என்றார் பரிதாபக் குரலில். “ஒரு பருக்கை சோறு கூட இல்லாமெ (liquid) லிக்விடாகத்தான் சாப்பிடச் சொல்லியிருக்காரா டாக்டர்?” என்று கேட்டேன் அண்ணாவிடம் அப்பாவித்தனமாக. “அதில்லய்யா. சோறு தொண்டையிலே உறுத்துது, இறங்கமாட்டேங்குது!” என்று அண்ணா சொல்லிய பிறகே, அந்நோயின் கொடுரத்தன்மை எனக்குப் புரிந்தது! “அது மட்டும் இல்லே. இப்ப வயிற்றுக் கோளாறும் இருக்குது. அடிக்கடி lose motion போகுது” என்றார். “அப்படியானால் இந்த Capsule சாப்பிடலாம் அண்ணா!” என்று சொல்லி, என் சட்டைப் பையில் எப்போதும் வைத்திருக்கும் Chlorostep எடுத்துத் தந்தேன். “இதெல்லாம் இப்ப எடுபடுமா? விஷயமே வேறெ அய்யா!” என்றார்கள் அண்ணா. கலைஞரும், மற்றும் எதிரிலிருந்தவர்களும், அண்ணாவுக்குத் தெரியாமல் எங்கள் கண்ணிரைத் துடைத்துக் கொண்டோம்! அமைச்சர் கோவிந்தசாமி இல்லத்தில் அண்ணாவுக்காகக் குளிர்சாதன வசதி செய்து அங்கு குடியேறச் சொன்ன மருத்துவர்களின் வேண்டுகோளையும் தம்பிமார்களின் கோரிக்கையையும் நிராகரித்து விட்டுக் கடைசிவரை சொந்த வீட்டில் வாழும் கொள்கை யைக் காப்பாற்றினாரே நம் அண்ணா!

என் குடும்பத்தில் பொங்கல் விழா மட்டும் கொண்டாடு வோம். 1969-ஆம் ஆண்டு, நான் குடும்பத்தோடு சென்னை யில் இருந்தேன். பூரிப்பும் குதூகலமும் தரும் பொங்கல் விழா, அந்த ஆண்டு எங்களுக்கு அமையவில்லை! காரணம், அண்ணாவின் உடல் நலிவு மாத்திரமன்று; என் தங்கையின் கணவர் பழநிவேலு பொது மருத்துமனையிலிருந்ததால், மகிழ்வு மறைந்து போயிற்று!

அண்ணா வீட்டில் அன்று காலையில் இருந்தேன். “பொங்கல் விழாவைக் காஞ்சியில் கொண்டாட வேண்டுமென வீட்டார் பிடிவாதம் செய்கின்றனர். அதனால் போய்விட்டு உடனே திரும்பிவிடுகிறேன்” என்றார் அண்ணா. நாங்களெல்லாரும் வேண்டாம் என்று சொல்விப் பார்த்தோம்; பயனில்லை! “என்னைத் தடுக்காதிங்க! இப்ப கலைவாணர் சிலை திறந்ததும், அங்கிருந்தே நேரே கஞ்சீவரம் போயிட்டு வந்துடறேன்!” என்கிறார் அண்ணா கெஞ்சும் குரலில். அண்ணியாரும் இதை ஆமோதிக்கிறார்.

பொங்கிவரும் கண்ணிரைத் தங்கள் முன்தானையால் துடைத்தவாறு அங்கே நிற்கிறார்கள் சரோஜாபரிமளமும் விஜயா இளங்கோவனும். இந்த இரண்டு மருமகளும் எங்கள் பகுதியிலிருந்து இங்கு வந்தவர்களல்லவா! இவர்களைப் பெண் பார்க்கவும், 30-6-1963-ல் திருமண உறுதிப் பாடு செய்யவும், அண்ணா எத்தனை தடவை மாயூரம் வந்தார்! தான் தஞ்சாவூரின் மாப்பிள்ளை ஆனதோடு, தன் பிள்ளைகளுக்கும் தஞ்சைமாவட்டத்தில் பெண் தேர்ந்தெடுத்தாரே அண்ணா-எங்களுக்கு எவ்வளவு பெருமை!

பரிமளம் சரோஜா, இளங்கோவன் விஜயா திருமணம் காஞ்சியில் 1.9.1963 அன்று. தங்கவேலர் தோட்டத்தில் பெரிய பந்தல். முந்திய நாளிரவு மணமகள் இருவரையும் அழைத்து வரும் நேரத்தில் பெருமழை பெய்து மணப் பந்தலில் சேறு நிரம்பிவிட்டது. அண்ணா மிகவும் வருத்த முற்றார். இந்நிகழ்ச்சிகள் யாவும் என் மனத்திரையில் ஓடுகின்றன.

அவசரமாக ஒடிப்போய் என் பிள்ளைகளை அழைத்து வந்து, வாணி மகாலுக்கு எதிர்ப்புறமுள்ள பெட்ரோல் பங்க்கில் நின்றுகொண்டேன். அங்குதான் கலைவாணர் சிலை திறப்புவிழா; கலைஞர் தலைமையில் சுருக்கமாக நடந்தது. எஸ். எஸ். வாசன், ஏவி. எம்., ஏ. எல். எஸ்., புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், நடிகர் திலீப்குமார் ஆகியோரும் இருந் தனர். இளைத்துக்களைத்து, உருமாறிக் குரல்மாறிப்போன அண்ணா, கலைவாணரின் சிலையைத் திறந்து வைத்துச் சிறியதொரு உரையாற்றினார். “எனக்கு முன் பேசிய திரு எஸ்.எஸ். வாசன் அவர்கள் கலைவாணர் சிலை திறக்க இப்போதுதான் நல்ல நேரம் வந்தது என்றார்கள். அவர்கள் நல்ல நேரம் என்று குறிப்பிட்டது நாங்களெல்லாம் ஆட்சிக்குவந்த இந்த நேரத்தைத்தான் குறிப்பிட்டார்கள் என்று நான் கருதுகிறேன்.” என்றார். அந்தப் பொங்கல் திருநாள் முதற் கொண்டுதான் நமது சென்னை மாகாணம் “தமிழ்நாடு” என்று அழைக்கப் பெறுவதற்கான அரசு ஆணையையும் அண்ணா பிறப்பித்திருந்தார்.

இதை நல்வாய்ப்பு என்பேனா.கெட்ட வாய்ப்பு என். பேனா-அண்ணாவின் உரை கேட்ட இந்தப் பெரும் பேறு, பிறகு என்றுமே வாய்க்காது போயிற்றே! தலையே நீ வணங்காய்; இந்தத் தலைமகன் அண்ணாவின் கடமைதனை நினைந்து! கண்காள் காண்மின்களோ, இந்தக் கண்ணியத் தலைவனின் வண்ணத் திருக்கோலம்! செவிகாள். கேண்மின்களோ: நம் சிந்தையில் கட்டுப் பாடெனும் அறவுரை ஒதிய முதல்வனின் கம்பீரக் குரல் மொழி! அந்தோ!

என் மகன் குலோத்துங்கன் சிறு வயதில் ஒரு கதை எழுதினான், அதைப் படித்துப் பார்த்த கலைஞர், “கதை எழுதும் குலோத்துங்கா முதலில் படிப்பைக்கவனி! பிறகு கதை எழுதலாம்” என்று சொல்லிவிட்டார். அடியோடு விட்டுவிட்டான் அவன்! பென்சிலால் ஒவியங்கள் வரைவான். Caricature எனப்படும் உரு வங்கள் அருமையாகத் தி ட்டு வா ன், யாரிடமும் பயிலாமலேயே! அவன், அண்ணா பட்ஜெட் கூட்டத்துக்குப் பையுடன் நடந்து செல்வது போன்ற ஒரு பெரிய படத்தைப் பென்சிலால் வரைந்து, என்னிடம் கொடுத்து, அதில் அண்ணாவின் கையெழுத்துப் பெற்றுத் தருமாறு வேண்டினான்.

பொங்கலுக்குப் பிறகு ஊரிலிருந்து அந்தப் படத்தை எடுத்து வந்து, அண்ணாவிடம் காண்பித்துக், கையெழுத் திடுமாறு வேண்டினேன். அப்போது, அண்ணாவின் நோய் முதிர்ச்சியுற்ற நிலையில், வேலூர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் விரைவாக மேற் கொள்ளப்படும் தருணம். “சண்முகத்திடம் கொடுத்து, என் காரில் வைக்கச் சொல். பார்க்கிறேன்!“ என்றார் அண்ணா.

ஒட்டுநராயிருந்த சண்முகம் அதை என்னிடமிருந்து வாங்கி வைத்துக் கொண்டார். “சரியண்ணே! நான் கையொப்பம். வாங்கித் தாரேன்!” என்று. அவ்வளவு தான். அது என்ன ஆயிற்றோ? கடைசி நேரத்தில் அண்ணா வேலூருக்குப் புறப்பட மறுத்துவிட்டார்கள்!

கலைஞரும் மற்ற அமைச்சர்களும் பரபரப்பாகக் கலந்து ஆலோசித்தனர். கலைஞர், அடையாறு மருத்துவ மனையில் மடமடவென ஒரே நாளில் அறை முதலிய வசதிகள் தயார் செய்ய முனைந்தார். அண்ணா ஒத்துக் கொண்டார்கள். விரைவாக வந்து காரில் ஏறினார்கள். நான் பின்னால் வந்த கலைஞரின் காரில் உட்கார்ந்து கொண்டேன்.

முன்னிரவு நேரத்தில் அடையாறு மருத்துவ மனைக்குப் போய்ச் சேர்ந்தோம். முதல்காரில் இருந்த அண்ணா மிடுக்குடன் இறங்கிச், சிங்க ஏறு போல் விறு விறுப்புடன் நடந்து, தமது அறைக்குள் நுழைந்தார்கள். நான்அத்தோடு பின் தொடர்வதை நிறுத்திக்கொண்டேன். விழிகள் நிறையும் வரை அந்த வேந்தனின் பின்னழகை விழுங்கினேன்.

அண்ணா எனும் அந்த ஒப்புவமை உரைக்க வொண்ணாப் பேருருவின் உயிர்ப்புத் துடிப்புள்ள உடலத்தை மீண்டும் எங்கே தாணமுடிந்தது?






பதினொரு மாதம் சுமந்தவர்

ஆசிய ஜோதி அணைந்து விட்டது! காந்தியடிகளின் செல்லப்பிள்ளை, ரோஜாவின் ராஜா, இந்தியாவின் முதல் பிரதமர், பண்டித ஜவாகர்லால் நேரு, 27.5.1964 பிற்பகல் 2.30 மணியளவில் திடுமென மறைந்த செய்தி-ஜன நாயகத்தை நேசிப்பவர் நெஞ்சில் வேல் பாய்ச்சியது! நாடே கதறி அழுதது! இம்மாதிரி நேரங்களில் விரைந்து முன் வந்து, தமது இரங்கலைத் தெரிவிக்கத் தயங்காத அண்ணா-அன்று அவ்வாறு உடனே கருத்தை வெளியிட வில்லை! ஏன்?

இந்திய அரசியல் சட்டத்தின் மொழிப் பிரிவு நகலைக் கொளுத்திக் கட்டாய இந்திக்கு நம் எதிர்ப்பைத் தெரிவிப் போமென அண்ணா அறிவித்தார். அவருடன் டி. எம். பார்த்தசாரதி, டி. கே. பொன்னுவேலு, தையற்கலை கே. பி. சுந்தரம், வி. வெங்கா ஆகிய நால்வரும் ஒரு குழுவாக இணைந்து, சென்னைக் கடற்கரையில் எரிப்புப் போராட்டம் தொடங்குவதற்கெனக் காஞ்சியினின்று காரில் வரும்போதே, வழிமறித்துக் கைது செய்யப் பட்டனர். 1963 டிசம்பர் 10 ஆம் நாள் இக்குழுவினர்க்கு ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, ஐவரும் சென்னை மத்திய சிறைச் சாலையில் அடைக்கப் பட்டிருந்தனர்.

நேருபிரான் இறந்ததால், இவர்களை விடுதலை செய்துவிடக் கூடிய பெருந்தன்மை காங்கிரஸ் அரசுக்கு வருமா? அவ்வளவு ஏன்? காந்தியார் மறைந்தபோது 1948-ல் பெரியாரையும் அண்ணாவையும் அழைத்து வானொலியில் இரங்கலுரை ஆற்றச் சொன்னவ்ர்கள், நேருவின் மறைவுக்கு 1964-ல் அவ்வாறு அழைக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சி அமைத்திருந்த ராஜாஜியை மட்டும் வானொலி அழைத்தது! (வாழட்டும் அந்த வர்ணாசிரம வானொலி!)

பண்டித நேரு இறந்தார் என்றவுடன் கலைஞருக்கு முதன் முதலில் ஏற்பட்ட எண்ணமே, உடனே மத்திய சிறைக்குச் சென்று, அண்ணாவுக்குச் செய்தியைத் தெரி வித்து, அவரது மேலான இரங்கற் செய்தியினை நாட்டு மக்கள் அறியச் செய்யவேண்டும் என்பதுதான்! வாங்க சார், சென்ட்ரல் ஜெயிலுக்குப் போகலாம். நீங்க வந்ததில்லையே?” என்று கலைஞர் என்னையும் அழைத்தார். நான் போனதில்லைதான்! பிற்பாடு 1976-ல் எதிர்பார்த்தேன். வாய்ப்புத் தரப்படவில்லை?

அதே போல், மாலை 4 மணிக்கெல்லாம் சென்றோம். ஐந்து மாதங்கள் சிறைக்குள் வாழ்ந்த அண்ணாவைப்பேட்டி கண்டேன். நான் 1960-ல் இரண்டு நாள்தான் ரிமாண்டி லிருந்தேன். அதற்குள் சாப்பாட்டுக்கும் புகைபிடிக்கவும் எவ்வளவு சிரமப்பட்டேன் என்பது நினைவுக்கு வந்தது. அண்ணா இப்போது மட்டுமல்ல. இதற்கு முந்திய ஆண்டும் விலைவாசிப் போராட்டத்தில் ஈடுபட்டு, வேலூர் சிறையில் வதிந்தார் பத்து வாரங்கள்!

சிறையின் சட்டதிட்டங்களின்படி, அண்ணா எழுதிய அறிக்கையை அப்படியே வாங்கி வந்து வெளியிடக் கூடாதாம்! அதனால், கலைஞர் அதைப் படித்து, மனத்தில் வாங்கி வந்தார். நாளேடுகளில் வெளியிட்டார்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரரான நேரு எவ்வளவு காலம் சிறைக் கோட்டத்தில் கழித்துள்ளார்! அவர் மறைந்த நாளன்று, நமது இனத் தலைவர் அண்ணா சின்றக் கோட்டத்தில் இருந்தது எவ்வளவு பொருத்தம்!

மத்திய சிறையிலிருந்து கலைஞருடன் காரில் திரும்பி வந்து கொண்டிருந்த போது, போன ஆண்டு நடை பெற்ற ஒரு சிறு நிகழ்ச்சி என் மனத்தில் நிழலாடி, அதன் தொடர்பாய் ஒரளவு மகிழ்ச்சியும், உடனே தொடர்ந்து மனத்துள் நெகிழ்ச்சியும் ஏற்பட்டன.

1962-ல் தஞ்சைத் தொகுதி சட்டமன்ற உறுப்பின ரான கலைஞர், விலைவாசி மறியல் போராட்டத்தில் தஞ்சாவூரில் கலந்து கொண்டார். அதனால் மூன்று மாதக்கடுங்காவல் தண்டனை பெற்றார். ஏற்கனவே கல்லக்குடிப் போராட்டத்தில் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்று அடைக்கப்பட்டிருந்த அதே திருச்சி சிறைச்சாலைதான் இப்போதும். ஒரு சிறு மாறுதல் என்ன வென்றால், அப்போது, கலைஞர் சட்ட மன்ற உறுப்பினர் ஆகவில்லை. அதனால் நான் ஒரு முறைதான் சென்று பார்க்க இயன்றது. எனக்கு நல்ல வாய்ப்பு இப்போது. திருச்சி சிறையிலிருந்த கலைஞரைப் பல தடவை பேட்டி காணமுடிந்தது!

கலைஞர் விடுதலையானவுடன் நேரே தஞ்சை சென்று, மக்கள் அளித்த வரவேற்பினை ஏற்று, மீண்டும் திருச்சி, அடுத்த நாள் திருவாரூரில் பொதுக் கூட்டம் என்று ஊர் ஊராகப் போகவே நேரம் சரியாக இருந்தது. அக். 24 விடுதலையான அண்ணா, காஞ்சிபுரத்தில் அப்போது தங்கியிருந்தார்கள். அதனால் அண்ணாவைக் காணத் திருவாரூரிலிருந்து மறுநாள் காஞ்சி புறப் பட்டோம் fiat காரில், ஒட்டுநராகத் திருவரம்பூர் காமாட்சி. காரில் கலைஞருடன் மதுரைமுத்து, முரசொலி செல்வம், நான். திண்டிவனம் அருகில் வரும்போது, பிரேக் பிடிக்காமல், கார் முன்னும் பின்னும் ஒடுகிறது சுற்றிச் சுழல்கிறது.-Control இல்லாமல்! ‘பயப்படாதீங்க’ என்கிறார் காமாட்சி! கடைசியில், ஒரு மைல்கல் மீது மோதித் தானாகவே நின்று விட்டது! ஒருவாறு சரி செய்து கொண்டு, காஞ்சி சென்று அண்ணாவைக் கண்டோம்! சாப்பிடுங்கள்! நானும் சென்னைவருகிறேன். இன்று நமக்கு வரவேற்புப் பொதுக் கூட்டம் இருக்கிறதே! ஊர்வலமும் உண்டே சேர்ந்து புறப்படுவோம்!” என்றார் அண்ணா,

கலைஞர் விடுதலையாகி மூன்று நாட்களாகிவிட்டன. கோபாலபுரத்தில் அன்னை அஞ்சுகம் அம்மையார், தன் அருமந்த செல்வனிடம் அளப்பரிய அன்பினைச் சுமந்து கொண்டு, அவர் வந்து சேராத ஏக்கத்தைச் சிந்தையில் தேக்கிக்கொண்டு, உண்ணாமல் உறங்காமல், உள்ளும் புறமும் அலைந்து திரிகிறார்.

அண்ணாவுடன் சேர்ந்து நள்ளிரவில் நாங்களனை வரும் போய்க் கலைஞர் இல்லத்தில் இறங்குகிறோம். பொக்கைவாய்ப் புன்சிரிப்புதவழ, அம்மா அண்ணாவைப் பார்த்துக் கேட்கிறார்கள் “அண்ணா தம்பி! ஒங்க அம்மா ஒங்களெப் பெறுவதுக்கு ஒரு நாள்தான் பிரசவ வேதனைப் பட்டிருப்பாங்கபோல இருக்கு. அதனாலெ நீங்க வேலூர் ஜெயிலிலேயிருந்து விடுதலை ஆனதும், நேர ஒங்க அம்மாவைப் பார்க்க ஒடனே காஞ்சிபுரம் போனிங்க. அப்புறம் போயி வேலூர் கூட்டத்திலே கலந்து கிட்டீங்க. ஆனா, என் பிள்ளையை நான் 27 நாள் பிரசவ வேதனை அனுபவித்த பின் பெற்றேன். அதனால்தான், அது என்னைப்பாக்க இவ்வளவு மெதுவா வருது. திருச்சியிலே விடுதலையாகி மூணு நாளாச்சே மெட்ராஸ் வர்றதுக்கு. நீங்க கேக்கக் கூடாதா?” என்ற தும் அண்ணாவுக்கு ஒரளவு வெட்கமும் வருத்தமும் ஏற்பட்டன, அந்தத் தாயுள்ளத்தின் தவிப்பினை உணர்ந்து. “இல்லேம்மா. என்னாலதான் கருணாநிதி வர்றது லேட்டாச்சு. நானும் சேந்து வந்து, ஒங்களெப் பாக்க விரும்பினேன்!” என்று பேசிச் சமாளித்தார் அண்ணா!

1964 மே 27-சென்னை மத்திய சிறையிலிருந்து திரும்புங்கால் 27 நாள் பிரசவவேதனைச் சம்பவம் நினைவுக்கு வந்தது. அதே நேரம் அத்தகைய அன்பின் திருவுருவாம் அஞ்சுகம் அன்னையார் 1964 சனவரியில் இதே 27 ஆம் நாள் தன் செல்வங்களை ஏங்கவிட்டு மறைந்தாரே, அதுவும் என் சிந்தையைக் கலக்கிற்று, அப்போது அண்ணா வரைந்த கண்ணிர்க்காவியத்திலிருந்து சில பகுதிகளை நினைவு கூரலாமே:

“குறுநகை காட்டும் கண்கள்! பொக்கை வாயிலே ஒர் புன்னகை மூதாட்டி அஞ்சுகம் அவர்கள், சருகு, தளிர் ஆவது போலாகி விடுவார்கள்-தமது மக்களின் மகிழ்ச்சி கண்டு அல்ல, மாடு மனை கண்டு அல்ல. இயக்கச் செய்திகளை, வெற்றிகளைக் கேட்டதும்......

கண்டவுடன்; “மேயர் நம்ம கட்சிதானே வரும்? அதை விடக்கூடாது! புதுசா சட்டம் வருதாமே, என்ன செய்யப் போரீங்க? விலைவாசி குறைக்க எப்ப நடக்கப் போவுது கிளர்ச்சி? பேப்பர்லே இண்ணக்கி நம்ம கட்சி விஷயம் என்னென்ன வந்திருக்குது? நம்ம கட்சியைக் கேலி பண்ணிப் படம் போட்டாங்களாமே பேப்பர்லே. பார்த்தீங்களா, என்ன செய்யப் போறீங்க?” என்ற இது போன்ற கேள்விகளைக் கேட்டு, ஆர்வத்தைப் பொழிந்த ஒரு அன்னையை நான் கண்டதில்லை. தம்பி கருணாநிதிக்கு, இப்படிப்பட்ட தாய்ச் செல்வம் பெற்றிருந்த காரணத்தால்தான்-“நிதி” என்ற பெயரிட் டார்கள் போலும்.

வயது 72 தோற்றம், அப்பழுக்கற்ற கிராமிய முறை! அணிகலன் கிடையாது! அந்த வீட்டிலே மூதாட்டி அஞ்சுகம் அம்மையார், கழக மாநாட்டுக்காக வெளியூரிலிருந்து வரும் தாய்மார்களில் ஒருவர் போல, இயக்கப் பேச்சு ஒன்றிலேயே தமக்குச் சுவை தேடிக் கொண்டு உலவிவந்தார்கள்.

நடமாடிக் கொண்டிருந்த அம்மை இப்போது படமாகிப் போய் விட்டார்கள்...

குயில் பறந்து விட்டது. நாதம் நிலைத்திருக்கிறது

மலர் உதிர்ந்து விட்டது, மணம் கிரம்பி இருக்கிறது.

அஞ்சுகம் மறைந்து விட்டார்கள்

அவர்கள் பற்றிய கினைவு கிலைத்திருக்கிறது."



இதே சந்தர்ப்பத்தில் தான் “முரசொலி”யில் எழுதிய கையறு நிலைக் கட்டுரையின் வரிகளிற் சில இங்கு பொருந்தக் கூடுமே.

“பெற்ற தாயிடத்தில் மட்டுமே பெறத்தக்க பரிவு, பாசம், அன்பு, அரவணைப்பு-ஆகியவற்றை மற்றொரு தாயிடத்திலும் பெற இயலும் என்பதற்கோர் இலக்கண மாய் வாழ்ந்துகாட்டிய அன்னையார், தன் குலக் கொழுந்துகள் குமுறியழுவதும் கேளாமல், ஒருமுறை பார்த்தோரும் உருகிக் குமையும் காட்சியைக் காணாமல் கண்மூடி விட்டார்கள்.

பொக்கைவாய் முழுதும் புன்சிரிப்பு நிறைய ‘வாங்க தம்பி!’ என்று வயதில் தன் பேரப் பிள்ளைகளை ஒத்தோரையும் மரியாதைப் பன்மையிலே விளித்து மனங்குளிர அழைத்து, வீட்டிலே குழந்தை குட்டிகள் சவுக்கியமா?’ எனவும் மறவாமல் வினவி, அதற்கும் அடுத்தபடியாகத் தாம் இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்புவதற்குத்தான் என்ற கருத்தில் சாப்பிட வாருங்கள்’ என்ற உபசரிப்பை இனி என்றென் றும் காண ஒண்ணாத அவல நிலைக்கு ஆளானோம். சாப்பிட அமர்ந்ததும் தம் கையால் ஏதாவது பறிமாறினால்தான் திருப்தி ஏற்படும் அளவுக்கு நீர் நிறைந்த ஊருணிபோல் வற்றாத வாத்சல்யம் சுரக்கின்ற அந்த இனிய முகத்தை எப்படி மறக்க இயலுமோ?...

இயக்கத்துக்கு முதல்வராம் அண்ணாவோ பிற முன்னணித் தலைவர்களோ வருகை தந்தால் அவர்களை மரியாதையும் ஆசையும் மிளிர வரவேற்று, அரசியல் பேசத் தொடங்கும் அவர்களின் நுண்ணறிவைப் பாராட்டாதார் யார்?......

என்ன துயர் பட்டேனும் அன்னை உயிர் மீட்கலாம் என்ற ஆசை அலைமோதிய நெஞ்சங்கள் அனல் கக்கும் எரிமலைகளாய் உருமாறி, அம்மா என்றும் ஆத்தா என்றும் அத்தை என்றும் அழைத்துக் களித்த அன்புருவங்கள் என்புதோல் போர்த்த கூடுகளாய் ஏங்கிப் பின்னின்று தவிக்கின்ற அவலநிலை, கால ஒட்டத்தில் தெளிவு பெற’ அம்மா! உங்கள் சிந்தனை எங்கள் உளத்திற்கு உரம் ஊட்டுவதாக!”

நேரு மறைவிற்கு அண்ணா சிறையிலிருந்து வழங்கிய இரங்கலுரை இது :-

“உலகப் பெருந்தலைவர்கள் வரிசையில் சிறப்புமிக்க இடம்பெற்று இந்தியத் துணைக் கண்டத்துக்குத் தனிப் புகழிடம் தேடிக் கொடுத்துப் பூசல்கள் பிளவுகளால் நாடு கேடடையாமல் பாதுகாத்துப் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படாமல் தடுத்து வந்த மாபெரும் காவலர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள்.

நேரு பெருமகனாருக்கு நாம் காட்ட வேண்டிய மரியாதை உணர்வைச் சொல்லாலும் செயலாலும் நேர்மையாலும் நன்னெறியாலும் அனைவரும் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்."






தந்தை மகற்காற்றும் நன்றி!

“அண்ணாவுக்குப் பெரியாரிடத்தில் அன்பு அதிகமா? பெரியாருக்கு அண்ணாவிடத்தில் அன்பு அதிகமா?” என்று ஒரு பட்டிமண்டபம் நடத்தி, என்னை நடுவராக வைத்தால், தீர்ப்புச் சொல்வதற்கு நான் திண்டாடித் திணறித் திக்குமுக்காடிப் போவேன். இரு தலைவர்களின் அன்பும் சம எடையாயிருக்குமோ? தந்தை மகற்காற்றிய நன்றி பெரிதா? மகன் தந்தைக்காற்றிய உதவி பெரிதா?

ஈரோட்டில் அண்ணா வாழ்ந்து வந்த காலம்.எங்களில் யாருக்குமே தெரியாது. சங்கரய்யா சில கதைகள் சொல்வார். E. W. R. செல்வம் சில விவரங்கள் கூறுவார். 1942-ல் அய்யா கொஞ்சம் (Types) எழுத்துகள் Cases முதலியன கொடுத்து, அதைக் கொண்டு, அண்ணா காஞ்சிபுரத்தில் “திராவிட நாடு” இதழும் அச்சகமும் தொடங்கினார் என்று கேள்வி. ஆனால் நான் நேரடி யாகப் பார்த்தது, 1967.க்கும் 1969-க்கும் இடையில் பற்பல சந்தர்ப்பங்களில் அய்யாவும் அண்ணாவும் சந்தித்த பல சூழ்நிலைகள்! அப்போதெல்லாம் வீரமணி, நாகரசம்பட்டி சம்பந்தம் இவர்களும் இருந்திருக்கிறார்கள். மணி யம்மையார் இருந்தார்கள் என்பதைச் சொல்லத் தேவை யில்லை!

“வெற்றிபெற்றதும் அண்ணாதுரை என் முன் வந்து தைரியமாக உட்கார்ந்து விட்டார். எனக்குத் தான் ஒரே வெட்கம். இந்த ஆட்சி நிலைக்க எந்தவித மனஒதுக்கலும் (without any reservation) இல்லாமல் மனதாரப் பாராட்டுவேன்” என்றார் அய்யா. சென்னை இம்பீரியல் ஒட்டலில் பிரியாணி விருந்தளித்துச் சிறப்பித்தார் அய்யா. இது வரையில் இந்தவூர் எனக்குச் சொந்தமாயிருந்தது. இனி இதை உங்களுக்கு அன்பளிப்பாக வழங்குகிறேன் என்று சொல்லி, நாகரசம்பட்டியில் நடந்த பாராட்டுக் கூட்டத்தில் அண்ணாவுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். தமிழக அரசு தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தில், அண்ணாவின் உருவப்படத்தினைப் பெரியார் திறந்து வைத்தார். “ஒட்டுக் கேட்கும் நேரத்தில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசாவிட்டாலும், தயதய என்று ஒட்டுகள் பெற்றுப் பதவியில் அமர்ந்தபின், அண்ணா பழைய “தீ பரவட்டும்” நூலின் ஆசிரியராகவே-மீண்டும் காத்திகராகவே-தன்னைக் காட்டிக்கொள்கிறார்” என்று புகழ்ந்தார்; “தமிழர்களின் நல்வாய்ப்பாக அண்ணாவின் ஆட்சி வந்துள்ளது. இதைக் காப்பாற்றவேண்டும். இதை அழிக்க நினைத்தால் கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்” என்றார் பெரியார்,

அண்ணாவுக்கு உடல்நலங்குன்றி, முதன்முறையாகச் சென்னை பொது மருத்துவமனையில், அவருக்கு உணவுக் குழாயில் புற்று நோய் தோன்றியிருப்பதைக் கண்டு பிடித்தார்கள். இது 6.9.1968. உடனே அமெரிக்கா அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டது. அப்போது அண்ணாவின் வயது 59 முடியும் சமயம் . 15.9.68 அன்று 60 தொடக்கமல்லவா? அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்தார்கள். எனக்கும் அதே 59 வயதில், தொண்டையில், அதே நோய் வந்தது. அறுவை சிகிச்சையின்றி, வேறு முறைகளைக் கையாண்டனர். எனக்குக் கோபால்ட் தெரபி எனப்படும் ஒளிச் சிகிச்சை முறையிலும், கீமோதெரபி எனப்படும் ஊசி மருந்துகள் செலுத்தும் வகையிலும் இப்போது நோயைக் குணப்படுத்த முயல்கின்றனர். இது மருத்துவத் துறையின் 16 ஆண்டுகால முன்னேற்றமோ?

அடுத்த நாள் திருச்சியிலிருந்து விரைந்த பெரியார், இரவு சுமார் 11.30 மணியளவில் வந்து அண்ணாவைப் பார்த்தார். அங்குள்ள மருத்துவ நிபுணர்களை நோக்கி “அய்யா! தமிழ்நாட்டின் நிதி போன்றவரை உங்களை எல்லாம் நம்பி ஒப்படைக்கிறோம்” என்றார் பெரியார், கண்கலங்க!

10.ந் தேதியே அண்ணா அமெரிக்கா புறப்பட வேண்டும் என மருத்துவர்களால் நாள் நிர்ணயிக்கப் பட்டது. இதைக் கேள்விப் பட்டதும் சுற்றுப் பயணத்திலிருந்த பெரியார் உடனே சென்னை திரும்பி, Wheel chair-ல் அமர்ந்து G, H. வந்து சேர்ந்தார். அவரோடு தவத்திரு குன்றக்குடி அடிகளார், மணியம்மையார், வீரமணி, சம்பந்தம், புலவர் இமயவரம்பன் இருந்தனர். குன்றக்குடி அடிகளார் கொண்டு வந்திருந்த பொன்னாடையை வாங்கி, அண்ணாவுக்குப் போர்த்தினார் அய்யா.

பெரியார் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே, அண்ணாவின் வலது காதருகே குனிந்து, தம் வாயைக் காதில் வைத்து, ஏதோ சொன்னார். பிறகு தம் மடியை அவிழ்த்து எதையோ எடுக்க முனைந்தார். அண்ணா, கையைக் கலைஞர் இருந்த திசையில் காட்டி, முகத்தில் புன்சிரிப்பைத் தவழவிட்டு, “கருணாநிதி கிட்டெ சொல்லுங்க அய்யா” என்றார் மெல்லிய குரலில். மறுபுறம் நாற்காலியைத் திருப்பி, அய்யா கலைஞரின் கழுத்தில் தன் கையை வைத்து, அவர் தலையை வளைத்து, அருகே இழுத்து, இதிலெ இருவத்தஞ்சாயிரம் (ரூ. 25,000) பணம் இருக்குது. அண்ணாவுக்கு வைத்திய செலவுக்கு வச்சிக்குங்க!” என்றார். “இப்பப் பணம் இருக்குங்க அய்யா! அப்புறம் பாத்துக்கலாம்! நன்றி!” எனக் கூறினார் கலைஞர்.

சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஈயாதவர், கொடாதவர், கஞ்சத்தனமுள்ளவர், செட்டானவர், கருமி, உலோபி என்றெல்லாம் விவரமறியாத மக்களால் எண்ணப்பட்ட தந்தை பெரியார்-என்னதான் சிக்கனக் கொள்கையை ஒம்பிக் காப்பவரெனினும்-தேவைப்பட்ட நேரத்தில் கருணை வள்ளலாகவும் திகழ்வார் என்பதற்கும் அண்ணாவின் உயிரைக் காப்பாற்ற அவர் எதற்கும் தயார் என்பதை மெய்ப்பிக்கவும்-இந்நிகழ்ச்சிக்கு இணையாக எதையேனும் எடுத்துரைக்க ஒல்லுமா? அந்தத் தடவை அண்ணாவுக்கு மருத்துவத்திற்காக ஆன மொத்தச் செலவே சுமார் 90,000 ரூபாய். இதில் பெரியார் தர முன்வந்த ரூ. 25,000 பெரும் பங்கல்லவா?

நான் நண்பர் சம்பந்தம் அருகில் சென்று விசாரித்தேன் அய்யா, திடலில் இருந்து இங்கு வருவதற்காகப் புறப்பட்ட போதே, 25,000 ரூபாயை எடுத்து மடியில் கட்டிக் கொண்டு, “அம்மா, நான் மறந்துடப் போறேன். ஆசுபத்திரிக்குப் போனதும், நீ மெதுவா மடியிலே கை வைத்து, ஒரு சாடை காட்டு. நான் புரிஞ்சிக்குவேன்” என்றாராம் அய்யா. “இல்லெயில்லெ, நீங்க மறக்க மாட்டீங்க, சும்மா வாங்க என்றார்களாம் மணியம்மை யார். அவ்வாறேதான், எந்தச் சாடையும் காண்பிக்காமல், அய்யா அண்ணாவிடம் பணம் தருவதாகச் சொன்னார்கள் மறக்காமல்.

மருத்துவமனையிலேயே காலையில் பார்த்து விட்டதால், அன்று மதியம் 2 மணிக்கு விமான நிலையத்துக்கு அய்யா போகமாட்டார் என்று கருதி, வீரமணியும் சம்பந்தமும் சாப்பிட உட்கார்ந்தார்களாம். உடனே :அய்யா கூப்பிடுகிறார். வேனில் ஏறிவிட்டார்” என்று சேதி வரவே, அப்படியே கையலம்பிக் கொண்டு இருவரும் புறப்பட்டனராம். விமான நிலையத்தில் அய்யா சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். அண்ணாவின் கார் விமானத்துக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டது. காசி விருந்தவாறே அண்ணா, தன் மக்கள் திரளை நோக்கிக் கையசைக்கிறார். பெரியாரைப் பார்த்ததும், சட்டென்று காரை நிறுத்தச் சொல்லவும் தோன்றாமல், ஒடும்போதே இறங்கிவிடும் எண்ணத்தில் கதவைக் கூடச் சிறிது திறந்து விட்டார். பெரியார், இறங்க வேண்டாமெனச் சைகை செய்து, “போய் வாருங்கள்” என்று கைகுவித்து வணக்கம் சொல்லிப் பிறகு, கையசைத்து வாழ்த்தி விடை தந்தார்.

'அண்ணாவின் அறுபதாம் ஆண்டு பிறந்த திருநாள்' என்ற தலைப்பில், “அறிஞர் அண்ணா என்று பாராட்டுவது அவரதுஅறிவின் திறம்தான் காரணம். தனதுஅமைச்சரவை யில் பார்ப்பனர் ஒருவரையும் சேர்க்கவில்லை என்பதோடு, தி. மு. க. வுக்கு மாறான கொள்கையுடைய தமிழரையும் போடவில்லை” என்று பெரியார் பாராட்டி எழுதினார் “விடுதலை” யில்.

அறுவை சிகிச்சைக்குப் பின் சிலவாரம் ஒய்வெடுத்த அண்ணா 6.11.68 சென்னை திருப்பினார். மறுநாள் தமது அருமை அன்னையாரைக் காணக் காஞ்சி சென்றார். நலம் பெற்றுவிட்டார் என்று நம்பிய தமிழகம் சென்னையில் திரண்டு அண்ணாவை வரவேற்று மகிழ்ந்தது. அப்போது சென்னை மாநகரில் இல்லாத பெரியார், 11-ஆம் நாள் வந்து, நேரே நுங்கம்பாக்கம் இல்லத்திற்கு விரைந்தார். உடன் மணியம்மையார், வீரமணி, என். எஸ். சம்பந்தம் வந்திருந்தனர். அண்ணா மிகவும் சங்கடத்துடன், “நான் வந்து அய்யாவைப் பார்க்க வேணும்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்க முந்திக் கொண்டிங்களே” என்று கூறிக் கொண்டே எல்லாருடைய முகத்தையும் நோக்கினார். அண்ணாவின் உடல் இளைத் திருந்த போதிலும், அகன்ற நெற்றிப் பரப்பின் அடிபீடத் தில் சுடர்விடும் பெரிய விழிகளின் ஒளி எப்போதும் போல் பிரகாசித்தது. ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து அண்ணா பெரியாரின் கையில் அளித்தார். அய்யா அதைப் பெற்றுக் கொண்டு, மணியம்மையின் கையில் கொடுத்தார். பிறகு அண்ணாவின் பக்கமாகச் சிறிது குனிந்து, அவருடைய இரு கன்னங்களிலும் தமது இரு கரங்களின் விரல்களாலும் தடவிக் கொடுத்து-“ஒண்ணுமில்லிங்க! நீங்க நல்லா இருக்கீங்க! நல்லா இருக்கீங்க!” என்றார் தழுதழுத்த குரலில், ஆனால் கம்பீரங் குன்றாமல்!

காணற்கரிய இந்தக் கண்கொள்ளாக் காட்சியினைஇதன் மாட்சியினை-எவ்வாறு உரைப்பது! எங்கள் அனைவர்க்கும் கண்கள் கலங்கி, நீர் முத்துகள் உருண்டன கன்னங்களில்! வீரமணியும், நானும், எங்கள் மேல் துண்டுகளால் கண்களைத் துடைத்துக் கொண்டோம். மணியம்மையார், புடைவைத் தலைப்பால் முகத்தினைத் துடைத்தார்கள். நாகரசம்பட்டி சம்பந்தம் அழுத்தமான திடசித்தம் உடையவராயினும், அவருக்கே நெகிழ்ச்சி மிகுந்துவிட்டதென்பதை, மகிழ்ச்சியற்ற முகம் தெரிவித்தது.

பிறகு, அண்ணா அடையாறு மருத்துவமனையிலிருந்த போது, அருகிலுள்ள வீரமணியின் இல்லத்தில் தங்கிக் கொண்டு, பெரியார் அடிக்கடி வந்து பார்த்துக் கவலை தேங்கிய முகத்துடன் திரும் பிச் செல்வார் தினந்தோறும்!

2.2.1969 நள்ளிரவில் தேவைப்பட்டால் உடனே புறப்பட்டுச் செல்ல வசதியாக வீரமணி வீட்டு மாடியில் படுக்காமல் கார் ஷெட்டிலேயே படுத்து உற்ங்கிக்கொண்டிருந்த பெரியாரை எழுப்பிய என். எஸ். சம்பந்தம், அண்ணாவின் சேதியைச் சொல்ல, அருகிலிருந்த சுவரில் கையை ஓங்கி அறைந்து, “எல்லாம் போச்சு, எல்லாம் போச்சு” என்று புலம்பிய பெரியார், உடனே மணியம்மை யாரையும், வீரமணியையும், சம்பந்தத்தையும் அழைததுக் கொண்டு அடையாறு மருத்துவமனைக்கு வேனில் வந்து சேர்ந்தார். அண்ணாவின் சடலம், துங்கம்பாக்கம் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட,வெளியில் ஸ்ட்ரெச்சரில் வந்தபோது, வெறித்து நோக்கிய தந்தை பெரியாரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கலைஞர். “அய்யா, நாங்க அநாதைகளாயிட்டோமே அய்யா!” என்று கதறிக் கதறி அழுததும்-

(இனி எழுத என்னாலாகாது)

-End

 

8 views0 comments

Comentários


bottom of page