top of page
library_1.jpg
Writer's pictureBhishma

அண்ணா சில நினைவுகள் -II

கவிஞர் கருணானந்தம்



முத்துப் பந்தர்


11. நாயன் இசையே உலகில் சிறந்தது

12. கார் வள்ளல் யார்?

13. சிலப்பதிகாரம் அணிந்த சிறப்புரை

14. ஆண் நடிகை தேர்வு

15. இறால் மீனும் நெத்திலிக் கருவாடும்

16. மூன்று சொற்கள்-இரண்டு மணி நேரம்

17. முதலமைச்சர் சினிமா பார்க்கலாமா?

18. பார்த்தேன்-சந்தித்தேன்-உரையாடினேன்

19. நோயிலுங்கூட நகைச்சுவை மலருமா?

20. கவிதை எழுதவா வரச் சொன்னார்?




நாயன் இசையே உலகில் சிறந்தது

திருவாரூர் குப்புசாமி நாயனக்காரரின் மூத்த மகன் தட்சிணாமூர்த்திக்குத் திருமணம், அண்ணா தலைமையில் கிழவடம் போக்கித் தெருவில், T. N. ராமன், லெட்சப்பா, V. நமசிவாயம் (இளம் பாடகர்) ஆகியோர் மணமகனுக்கு உறவினர்,

திருவாரூர்-சங்கீத மும்மணிகளான தியாகய்யர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் பிறந்த ஊராயிற்றே! அதனால்தானோ என்னவோ, அன்று மணமக்களுக்குச் சொன்ன அறிவுரையைவிட, இசை பற்றிய விரிவுரை அதிகமாயிருந்தது அண்ணாவின் வாழ்த்துரையில்.

இசை என்றால் இசையவைப்பது. அதனால்தான் தேவார-திருவாசகம், திருப்பாவை திருவெம்பாவை பாடிய நால்வர், ஆழ்வார்கள்-காலத்திலிருந்து, இராமலிங்க அடிகள் காலம்வரை தமிழ்ப் பண்களின் அடிப்படையில் இசைப்பாடல்களாகவே இயற்றித் தமது, சைவ அல்லது வைணவ சித்தாந்தங்களுக்கு மக்களை இசையவைத்தனர்"-என்பதாக இராக ஆலாபனை தொடங்கிய அண்ணா, பிர்காக்கள்-சங்கதிகள் உதிர, மேலே மேலே உச்சஸ்தாயியில் சஞ்சாரம் செய்தார்! இசையிலே உயர்ந்தது தமிழிசையே என்ற பல்லவியும், கருவிகளின் இசையில் உயர்ந்தது நாயன இசையே என்று அனுபல்லவியும் தவில் வாத்தியத்துக்கு இணை உலகிலேயே இல்லை. நயனச் சரணமும் சொல்லி, நிரவல், சுரப்பிரஸ்தாரம், அரோகண அவரோகணம் எல்லாம் செய்து, முற்றாய்ப்பு வைத்தார் அண்ணா! (பாட்டுக் கச்சேரியில் அல்ல: பேச்சுக் கக்சேரியில்!)

"நாயனக் கருவிக்கு நிகர் ஏதுமில்லை. ஒலிபெருக்கியின் உதவியில்லாமல், நாயனமும் தவிலும் இணைந்திடும் அந்தப் பேரிசையை, மைல்கணக்கான தூரத்திலிருந்தே கேட்கமுடியும். இவையிரண்டையும் கையாள்வதற்கு நன்கு ‘தம்’ (மூச்சு) பிடிக்கக் கூடிய உடல்வாகு வேண்டும். திடமான கை கால்கள் வேண்டும். சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். பொறுமையும் நிதானமும், மணிக்கணக்கில் அயராமல் உழைக்கும் தென்பும், துணிவும் வேண்டும். ஆனால், நம் நாட்டில் இசைத்துறையை இன்று நம்மிடமிருந்து கைப்பற்றி வரும் பார்ப்பனர்கள்-இந்த நாயன இசையை மட்டும் நம்மிடமிருந்து வெற்றி கொள்ள முடியவில்லை! அவர்களால் இயலாது என்பதுதான் உண்மையான காரணம்! ஆனால், உண்மையை மூடிமறைத்து, நாயனம்-நாயனம் என்றுகூட அவர்களுக்கு சொல்ல மனம் வராது; நாதஸ்வரம் அல்லது நாகஸ்வரம் என்பார்கள். நீசவாத்யம் என்று ஒதுக்கி வைத்தனர். நாயன வல்லுநர்களை மேதைகளை மேளக்காரர் என்றும் நாவிதர் என்றும், அவர்கள் தீண்டத்தகாதவர் என்றும் சாதிக் கட்டுப்பாடுகள் விதித்தனர்.

நமது திருவாவடுதுறை ராஜரத்னம் பிள்ளை போன்றவர்களின் சுயமரியாதை உணர்வினால் நாயனக்காரர்களின் நிலை இன்று மேம்பாடடைந்து வருகிறது. ஆயினும், சில நாயன மேதைகள் தீய பழக்கங்களுக்கு (மது) அடிமையாகி இந்த மகோன்னதமான இசைக் கருவிகளின் மேன்மையைப் பாழாக்குவதை எண்ணி வருந்துகிறேன்.”

எதிரிலிருந்த பெருங்கூட்டத்தில் குளிக்கரை பிச்சை யப்பாபிள்ளை, திருவாரூர் வைத்தியநாதன் ராஜ ரத்தினம் சகோதரர்கள், ராஜ சந்தானம் பிள்ளை போன்ற முக்கால்வாசிப் பேர் இசை வேளாள மரபினர். கையொலியும் ஆரவாரமும் ஆமோதிப்பும் நீண்டநேரம் நீடித்தது.

இம் மணமகன் நாயனத்தைத் தொட்டதில்லை, முன்னின்று இத்திருமணத்தை நடத்தியவர், நாயனத்தைத் தொட்டார்; ஆனால் தொடரவில்லை! யார் இவர்? தங்க நாயனக்காரரான முத்துவேலரின் ஒரே மகன்; இவர் பெயர் மு. கருணாநிதி !

ஆம் நம் கலைஞர்தான்! தன் பால்ய நண்பனும் இணை பிரியாத் தோழனுமாகிய தென்னனுக்குத் திருமணம் நடத்திக் கொண்டிருந்தார்! இயக்கத் தோழர்கள் உரிமையோடு வந்து தங்கி ஆலோசனைகள் கேட்கத் திருவாரூர் கீழ வீதியிலுள்ள அந்தச் சிறிய கூரை வீட்டுக்குத் தென்னனைத் தேடி வருவார்கள், காஞ்சி கல்யாண சுந்தரமும் நானும் அந்தத் திண்ணையில் தங்கி தென்னன் வீட்டில் ‘கறிச்சோறு’ சாப்பிட்ட நாட்கள் எத்தனையோ, எத்தனையோ?

மணவிழா முடிந்து, மேடையிலிருந்து அண்ணா கம்பீரமாக இறங்கி வந்தார், நாயனத்தின் ‘சாம்பியன்’ ஆக, அண்ணா! எங்கே அண்ணா மறைத்து வைத்திருந் தீர்கள் இவ்வளவு இசை ஞானத்தை? உங்களுக்கு எப்படி இசையில் பயிற்சி ஏற்பட்டது?” என்ற எல்லாருடைய சந்தேகத்தையும் என் மூலமாக வெளிப்படுத்தினேன்.

“இதுல என்னய்யா ஆச்சரியம்? காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளை கச்சேரி எவ்வளவு கேட்டிருப்பேன்! அவருக்கு இணையான லயஞானம் உடைய சங்கீத வித்வான் இன்று வரை எவருமில்லே தெரியுமா? அவர் கச்சேரி எப்பவம் ஃபுல் பெஞ்ச். மிருதங்கம் கஞ்சிரா கடம் முகர் சிங் கொன்னக்கோல் டோலக் பிடில்...இப்படி! நீ அவரெப் பாத்திருக்கமுடியாது!...”

இல்லேண்ணா! அவர் சீடர் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையும் அதே பாணிதானே! சித்துராரின் கச்சேரி நிறையக் கேட்டிருக்கேன். தாளம் போட்டுப் போட்டு, அவர் வலது தொடையும் உள்ளங்கையும் காய்த்துப் போயிருக்கும். 5 மணி 6 மணி நேரம் அயராமெப் பாடுவார். ஏன், இப்ப நம்ம மதுரை சோமு இவருடைய சீடர்தானே?”

“ஆமாம்! சரியாச் சொன்னே. இன்னும் நம்ம சீர்காழி கோவிந்தராஜன் இவுங்கள்ளாம்கூட அசுர சாதகம் செஞ்சி, இப்படி ஒரு நிகரில்லாத நெலமக்கி வந்தவுங்க. இவுங்களோட போட்டி போட பிராமின்ஸ் யாரும் வர முடியிறதில்லே” என்றார் அண்ணா.

இந்த அண்ணாதுரைக்குத் தெரியாத துறை ஏதாவது இருக்குமா?






கார் வள்ளல் யார்?

“புத்தம் புதிய ஸ்டாண்டர்ட் டென் கார் கொண்டு வந்திருக்கேன் அண்ணா! இப்போதே புறப்பட்டால், இரவு ஊர் சேர்ந்து, நன்றாகப் படுத்துத் துரங்கிட்டு, காலையில் பரபரப்பு இல்லாமெ நிதானமா எழுந்து, திருமணத்தை நடத்தலாம் அண்ணா!” என்றேன்.

இடம் காஞ்சியில் அண்ணா வீடு. வெளியில் வந்து காரைப் பார்த்ததும், “அட ஆமாய்யா! புதிய Standard-10தான்! நம்ம திருவரம்பூர் காமாட்சி வந்திருக்காரே! டிரைவர் இல்லியா?“ என்று கேட்டார்கள் அண்ணா அவர்கள்.

“நீங்கள் இதில் சவாரி செய்து வருவதைப் பெருமை யாகக் கருதி, ஒட்டுநர் இல்லாமல், என்னை நம்பி, இந்தக் காரைக் கொடுத்தனுப்பிய வள்ளலின் பேரைக் கேட்டால், நீங்களே அசந்து (அயர்ந்து) போவீங்கண்ணா!” சிரிப்புக் கிடையே இவ்வாறு சொன்னேன்.

“அது யாரய்யா, அப்பேர்ப்பட்ட கருணையுள்ள கார் வள்ளல்?” எனக் கேட்டு முடிப்பதற்குள் “நம்ம திருவாரூர் கருணை எம். ஜமால்தான்” என்றதும், உண்மையிலேயே வியப்பும் மகிழ்வும் கொண்ட அண்ணா அவர்கள்-"சரி. இருவரும் சாப்பிட்டு ஒய்வெடுங்க. இரவு புறப்படலாம்,” என்று, நாங்கள் எதிர்பார்த்துச் சென்றதற்கு மாறாக ஒரு முடிவைச் சொல்லிவிட்டார்கள்!

தனியே வெளியில் வந்து “என்ன மச்சான்-நம்ம தந்திரம் பலிக்காது போலிருக்கே! என்ன செய்யலாம்? நீங்க ராத்திரிக்குக் கண் விழிச்சி ஒட்டி முடியுமா?" என்றேன் காமாட்சியிடம். “அதெல்லாம் சமாளிப்பேன். நீங்க பயப்படாதீங்க மச்சான்” என்று எனக்கு தைரியம் சொன்னார்-பின் காலத்தில் திருவரம்பூர் சட்டமன்ற தி. மு. க. உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட காமாட்சி!

எதற்காக அண்ணாவை அழைக்கப் போனேன்? திருவாரூர் நகராட்சித் தலைவராகப் பிறகு இருந்தவரும், கருணாநிதி அச்சக உரிமையாளரும், கஞ்சன் என்று நெருங்கிய நண்பர்களாலும் - ‘தஞ்சை மைனர்’ என அண்ணாவாலும்.கேலியாக அழைக்கப்பட்டவரும் ஆன ஜமால், ஏன் கார் கொடுத்தார்? சொல்கிறேன்.

தஞ்சை மாவட்டத்தில் எங்கு கழக நிகழ்ச்சி நடந் தாலும் தவறாமல் "இந்த இரட்டையர்"களைக் காணலாம். எங்கள் மாவட்டத்தில் பார்ப்பனர்களுக்கு அடுத்த உயர் ஜாதி மனப்பான்மையும், வசதியான நில வளங்களும் உடைய முதலியார் வகுப்பிலிருந்து துணிவுடன் தொண்டாற்ற முன்வந்தவர்கள் இவர்கள் இருவரும். நெடிதுயர்ந்த தோற்றமும், இளம் வழுக்கைத் தலையும் கொண்ட வெங்கிடங்கால் சந்தானம், ஒருவர்.

இவரைத் தாய் மாமனாகவும், சகோதரியின் கணவராகவும் கொண்டவரான வாழைக்கரை இராச கோபால் இன்னொருவர். பிறகு நாகை சட்ட மன்ற உறுப்பினராயிருந்த வழக்கறிஞர் இராச மாணிக்கம் இராசகோபாலின் தம்பியாவார்.

இப்போது, வாழைக்கரை ராசகோபால் திருமணத்துக்குத் தலைமை ஏற்பதற்காகத்தான், அண்ணாவைத் தாமதமின்றி அழைத்துவரும் பெரும் பொறுப்பில் என்னை அமர்த்தியிருந்தார்கள். காஞ்சியில் இரவு உண்வுக்குப் பின்புறப்பட்டு, (over night) இரவோடிரவாகத் திருவாரூர்-திருக்குவளை கடந்து, வாழைக் கரைக்கு அதிகாலையில் போய்ச்சேர வேண்டுமே!

திருமண வீட்டார் எதிர்பார்த்தபடி முதல் நாளிரவே இயலாவிட்டாலும், விடிவதற்குள் அண்ணாவை அவர்கள் கண்களில் காண்பித்து விட்டதால், எனக்கு நிரம்பப் பாராட்டு! அண்ணாவைச் சிறிதுதுரங்க அனுமதித்தார்கள்; ஆனால் என்னைத் துரங்கவிடவில்லை!

கையில் காகிதமும் பேனாவும் தந்து, எதிரிலுள்ள தோட்டத்திற்கு இட்டுச் சென்றார் சந்தானம். “கவிஞரே! சாயங்காலம் மதுரை சோமு கச்சேரி இருப்பது உங்களுக்கும் தெரியும். அவரும் இப்போதே இங்கு வந்துவிட்டார். அவரைக் கேட்டதில், அவருக்குக் கழகப்பாடல் ஒன்றும் தெரியாதாம். நீங்க ரெண்டு பாட்டு எழுதித் தாங்க. அண்ணா முன்னால பாட அவர் விரும்புறாரு” என்றார் மணமகன் ராசகோபால். நினைவாற்றல் மிக்க நண்பர் ராசகோபால் இப்போது இருந்தால் நான் அன்றைக்கு எழுதித் தந்த பாடல்களை அப்படியே ஒப்பிப்பார். நான் அப்போது எழுதித்தந்ததை மறந்துவிட்டேன். ஒரு பல்லவி மட்டும் நினைவில் நிற்கிறது :

“மூன்றெழுத்து மந்திரத்தை மொழிவாய் என் தோழி-திராவிட

முன்னேற்றக் கழகம் என்றும் நமக்காக வாழி!”



-இன்னொன்று, விருத்தம். இரண்டு பாடல்களையும் இசைமேதை மதுரை சோமு, அழகுறத் தாமே இசை யமைத்து இன்பமாய்ப் பாடினார் மாலை இசையரங்கில்.

அண்ணா ஊருக்குத் திரும்பிடப் புறப்படுகையில் “என்ன கருணானந்தம், போவோமா!” எனக் கேட்க, நான் வரவில்லை எனத் தலையசைத்தேன். “அவ்வளவு தானா; தேர்தல் நேரத்தில் ஒட்டுப் போட வாக்காளரை அழைத்து வரக் கார் தந்து, திரும்பும்போது, நடந்து போகச் சொல்வார்களே-அப்படியா?“ என்று நகைச்சுவை வழங்கினார்கள். அப்படியில்லையண்ணா திரும்பிப் போக உங்களுக்கு அதே காரைத் தருகிறார் ஜமால்!” என்று கூறி வழியனுப்பி வைத்தோம்.






சிலப்பதிகாரம் அணிந்த சிறப்புரை

உலகமே வியப்பினால் விழியை அகல விரித்திட, இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சென்னையில் நடத்திக் காட்டினாரல்லவா அண்ணா? பணிகளைக் கவனித்திடப் பல்வேறு துணைக் குழுக்களை அமைத்த போது, சிலவற்றில் அண்ணா எனக்கும் இடந்தந்திருந்தார். ஆயினும், எனக்கு அதிக விருப்பமும் ஈடுபாடும் உடைய இன்னொரு பணியில்தான் நான் முழு மூச்சாக முயன்று வந்தேன். நூல்கள் பதிப்பிக்கும் அலுவல் அது!

கலைஞரின் சிலப்பதிகாரம்-நாடக வடிவில் இருந்த தைப் பெரிய அளவில் நூலாக வெளியிட்டோம். எனது அஞ்சல்துறை (தணிக்கைப் பிரிவு) நண்பரும், என் அன்பினால் கட்டுண்டவரும், அரிய ஆங்கிலப் புலமை வாய்க்கபெற்றவருமான T. G. நாராயணசாமி, சிலப்பதி காரத்தை அப்படியே கலைஞரின் எழுத்து நயங்குன்றாது, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தர, அதனையும் ஒரு நூலாக்கினோம்.

தமிழ்ப் புத்தகம் பெரியண்ணனுடைய ஐடியல் பிரிண்டர்சிலும், ஆங்கிலம் B. N. K. பிரசிலும் அச்சாயின. தினமும் இந்த இரண்டு இடங்களுக்கும் போக வர எனக்கு நேரம் சரியாக இருந்தது. ஒவியர்கள் அமுதோன், விஜயா ஆகியோரின் கைவண்ணம் சிறப்பு அம்சம். பூம்புகார் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த படங்களையும் பயன் படுத்தினோம்.

உலகில் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்துள்ள அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் இந்த நூல்களை வழங்கிட வேண்டுமெனக் கலைஞர் விழைந்தார், அதாவது, 1968 ஜனவரி முதல் வாரத்தில் நூல்களை முடித்திட வேண்டுமென எனக்குக் கட்டளை, வழக்கம் போலவே இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு செயல்பட்டேன். இதன் விளைவாய்ப், பல லட்சம் மக்கள் பங்கேற்ற பெருங்கூட்டத்தில், அண்ணா கவியரங்கத்திற்கு ஓடிவந்து கலந்துகொண்டு, திரும்ப ஒடிச் சென்ற ஒன்றைத் தவிர, உலகத் தமிழ் மாநாட்டு நிகழ்ச்சி வேறெதையும் நான் காணக்கூட இயலவில்லை!

ஆங்கிலச் சிலப்பதிகார நூலுக்கு, அண்ணாவிடம் ஓர் அணிந்துரை கேட்டார் கலைஞர். “தருகிறேன்” என்று அவரிடம் எளிதாகக் கூறிவிட்டார் அண்ணா. “வாங்கிப் போட்டுக்குங்க சார்” என்று ஆணை எனக்கு. அப்போது முதல், அண்ணாவை அடிக்கடி சந்தித்து, “அண்ணா, சிலப்பதிகாரம்! அண்ணா சிலப்பதிகாரம்!” என்று நினைவூட்டத் தொடங்கினேன். முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள அண்ணாவிடம் எழுதி வாங்குதல் அவ்வளவு எளிதான காரியமா?

நண்பர் கஜேந்திரன்தானே P. A.? அவரிடமும் சொல்லி, அண்ணாவுக்கு நினைவூட்டுமாறு கேட்டுக் கொண்டேன், பலமுறை “ஆகட்டுங்க, கருணானந்தம்.! அண்ணாவுக்கு நேரமில்லிங்க!” என்ற பதிலையே அவரும் அலுக்காமல் தந்து வந்தார். ஒருநாள் எழும்பூர் ரயிலடி சென்று, இரவு திருச்சிக்குப் புறப்பட்ட அண்ணாவைச் சந்தித்து, “வெளியிலிருக்கும்போது, அல்லது ரயிலில் இருக்கும்போது தொந்தரவு குறைவாயிருக்குமே, அண்ணா? இந்தச் சிலப்பதிகார அணிந்துரையை எழுதி வாருங்கள்!” என்று வேண்டிக் கேட்டுக் கொண்டேன். என் பரிதாபத்தைப் பார்த்து இரங்கி, “நாளை மறுநாள் திரும்பும்போது, நிச்சயம் எழுதிக்கிட்டு வர்றேன்யா” என அண்ணா உறுதிமொழி வழங்கினார்கள். மிகுந்த நம்பிக்கையோடு திரும்பினேன். மூன்றாம் நாள் அறு காலையில் எழுந்து, ஒரு டாக்சியில் எக்மோர் சென்தி, இரண்டாம் பிளாட்பாரத்தில் காத்திருந்தேன்! முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து இறங்கிய அண்ணாவின் முகத்தை ஆவலுடன் பார்த்துக் கொண்டே, பிச்சைக் காரன்போல் இருகைகளையும் ஏந்தினேன். உதட்டைப் பிதுக்கி ‘இல்லை’ என உணர்த்தினார் அண்ணா! எத்தகைய ஏமாற்றம் ?

“என்னங்க கஜா! புத்தகம் முழுவதும் பிரிண்ட் ஆகி, எல்லா பாரங்களையும் உங்களிடம் தந்துள்ளேன். ராப்பரும் பிரிண்ட் ஆகிறது. உங்கள் மேட்டருக்காகத் தான் காத்திருக்கிறேன்!” என்று சிறிது சினங்கலந்த குரலில் கூறினேன். “நிச்சயம் இன்று இரவு நீங்கள் வரும் போது மேட்டர் தயாராயிருக்கும், கவலைப்படாதிங்க, போங்க!” என்றார் சா. கஜேந்திரன் B. A.

ஆ! என்ன விந்தை! சொன்ன வண்ணம் Matter தந்தார் அன்றிரவு! இரண்டு பக்கம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது. அப்போதே எனக்குச் சந்தேகம்- “ஏனுங்க, இது என்ன நீங்க எழுதினதா?” என்றேன். ஆமாங்க! அண்ணாவுக்கு நேரமில்லிங்க! நல்லா எழுதியிருக்கேன். அண்ணா பெயரிலேயே போட்டுக்குங்க! எனப் பதற்றமின்றிச் சொன்னார்.

என் கோபத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு கோபாலபுரம் திரும்பினேன். கஜேந்திரன் நன்கு ஆங்கிலம் எழுதுவார். எங்களோடு 1944-45இல் ஈரோட்டுக்கு குரு குலத்திலிருந்தபோது அய்யா நடத்திய Justicitc இதழை அவர்தான் பார்த்துக் கொண்டார். ஆனால், அவருடைய எழுத்தையா நாங்கள் மாபெரும் ஒர் இலக்கிய நூலுக்கு அணிந்துரையாகப் போட முடியும்?

எனக்கே ஏகப்பட்ட கோபம் என்றால், கலைஞருடைய உணர்வுகள் எப்படியிருந்தன என்பதைச் சொல்லவும் வேண்டுமா? பிறகு நானே கலைஞரைச் சமாதானம் செய்துவிட்டு, அட்டை உட்பட எல்லா அச்சிட்ட ஃபாரங் களையும் மீண்டும் இணைத்து எடுத்துக் கொண்டுபோய், நேரே அண்ணாவின் கையில் தந்து, அண்ணா! இந்த அணிந்துரை உங்கள் பேனாவால்தான் எழுதப்பட வேண்டும். அவரும் அப்படியே கேட்கச் சொல்கிறார் அண்ணா. நாளை இரவு வருகிறேன்!” என்று சொல்லி விட்டுச் சற்று விரைவாகக் கீழே இறங்கி விட்டேன்.

அண்ணா என்றால் அண்ணா தான்! இனியும் இந்தத் தம்பிகளை ஏமாற்றக் கூடாது என்று, எடுத்தார் பேனாவை. ஷேக்ஸ்பியரும் பெர்னாட்ஷாவும் ஓடி வந்தனர் ஊற்றுப் பேனாவின் மையாக அகில உலகையும் கட்டியாண்ட ஆங்கிலத்தின் இருபத்தாறு எழுத்துகளையும், தம் சிந்தனையால் பாங்குடன் கட்டியாண்ட அண்ணா எழுதத் தொடங்கவும், செங்குட்டுவக் கோமானின் இளவலாம் இளங்கோவடிகளும், பெருந்தகை அண்ணாவின் பேரன்புத் தம்பியாம் கலைஞர் கருணாநிதியும் கரங்கோத்துக் கொண்டு அண்ணாவின் திருமுன்னர் வருகை புரிந்து, “அண்ணா அண்ணா! எங்களையும் எழுதுங்கள்!” என்று இறைஞ்சியதுபோல் உருண்டோடி உதிர்ந்தன எழுத்து முத்துக்கள்.

உலகத் தமிழ் மாநாட்டுக்கு வந்த பன்னாட்டுப் பன்மொழிப் பிரதிநிதிகள் அனைவர்க்குமே கலைஞருடைய ஆங்கிலத்-தமிழ் சிலப்பதிகாரப் பிரதிகள் இரண்டுமே வழங்கப்பட்டன உரிய நேரத்தில், அண்ணாவின் கருணையால் 18.1.1968 அன்று மாலை. ஆங்கிலச் சிலப்பதிகார நூலை அண்ணா வெளியிட, ஆஸ்திரேலியப் பிரதிநிதி ஜோர்தான் பெற்றுக் கொண்டார்.

(அண்ணாவின் அந்த அணிந்துரையிலிருந்து சில வைர வரிகளை இங்கே படித்துப் பயன்பெறுவோமா?)

No lover of the Tamil classics can risist being, inspired by SILAPPATHIKARAM. One amongst the Five Fine classics of Tamil Literature. Ilango’s magic touch makes every position of this engrossing Epic no true to nature that when one is reading, SILAPPATHIKARAM, he is taken to ancient Tamilagam, with all the Pageantry alive, Nature’s beauty laid before us, a veritable panorama of events and a parade of different types, and all pulsating with life-with brilliance all around.

It is most appropriate that THAMBIKARUNANITHI should give us SILAPPATHIKARAM in his own inimitable diction and under the caption POOMPUKAR for his command over the Tamil Language and his mastery over the art of portrayal, so well-known and so well appriciated, gives him sit enough tight to render SILAPPATHIKARAM in the dramatic form-keeping the high standard of diction intact and at the same time embellish it with certain interpretations of events so as to offer logical explantions to some of the events that appear to us being inexplicable, may even unwanted.






ஆண் நடிகை தேர்வு!

“மாயவரத்தில் நீங்கள் ஒரு நாடகக் குழு அமைத்து, இயக்க நாடகங்கள் நடத்தி வருவதாகவும், அதில் பெண் வேடமிட்டு நடிக்கும் இரண்டு மூன்று நடிகர்களுக்கு நல்ல வேடப் பொருத்தமும் நடிப்புத் திறமையும் இருப்பதாகவும் அண்ணாஅவர்களுக்குச் செய்தி வந்திருக்கிறது. அவர்களை அழைத்துக்கொண்டு காஞ்சிக்கு வருமாறு, அண்ணா உங்களுக்கு எழுதச் சொன்னார்கள். எப்போது வருகிறிர்கள்?”

இப்படி ஒரு கடிதம் எனக்கு வந்தது. நான் எப்போது நாடகம் எழுதினேன்? நடத்தினேன்? இரண்டுமே தவறு: அப்படியானால் அண்ணா சொன்னது தவறா? அதுவும் தவறில்லை! என்ன இது குழப்பம்?

மாயவரத்தில் தீ. ப. நாதன் என்று ஒரு தோழர், திராவிடர் கழகத்திலும், பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இன்றுள்ள பல தோழர்களுக்கு அவர் முன்னோடி. அவர் ‘பசி’ என்று ஒருநாடகம் எழுதி, இயக்கி, நடத்தினார். கழகத் தோழர்கள் பலர் நடித்தனர். நாடக அமைப்பில் அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை. என்னிடம் வந்தார். நான் சில திருத்தங்கள் செய்து, கழகக் கருத்துகள் நிறைய இடம் பெறச் செய்தேன். சில பாடல்கள் எழுதினேன். மாயூரம் சவுந்தர் (மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு நிர்வாகியாகப் பின்னாளில் இருந்தவர்) இசையமைத்தார். நடிகர்கள் சொந்தக் குரவில் பாடினர். நண்பர் E. V. K. சம்பத் அவர்கள் தலைமையில் முதல் நாளும், கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையில் இரண்டாம் நாளும் நாடகங்கள் நடத்தி, வெற்றியுடன் முடித்தோம்.

ஓ! இப்போது புரிகிறது! நண்பர் சம்பத் அவர்கள்தான் அண்ணாவிடம் இதுபற்றிக் கூறியிருக்கிறார். உடனே, ‘ஸ்திரிபார்ட்’ (பெண் வேடம்) நடிகர்கள் இருவர், வில்லன் நடிகர் ஒருவர், ஆக மூவரையும் அழைத்துக் கொண்டு காஞ்சி புறப்பட்டேன்.

தம்பி அரங்கண்ணல் அவர்களும், நண்பர் தில்லை வில்லாளன் அவர்களும், காஞ்சியில் அண்ணா வீட்டில் தங்கி, “திராவிடநாடு” இதழின் துணை ஆசிரியர்களாகப் பணியாற்றிய தருணம் அது. அண்ணா, வில்லாளனிடம் சொல்லி, எனக்குக் கடிதம் எழுதப் பணித்திருக்கிறார்கள்.

நேரே “திராவிட நாடு” அலுவலகம் சென்றோம். “வாங்கண்ணே! இவர்கள் மூன்றுபேரும் இங்கே தங்கட்டும். சாப்பாடு நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க வில்லை அழைத்துக்கொண்டு அண்ணா வீட்டுக்குப் போங்க!” என்றார் அரங்கண்ணல், ஈரோட்டிலிருந்து புறப்பட்டு ரயிலில் வந்து, விடியற்காலை அரக்கோணத்தில் இறங்குவதாக, சம்பத் அண்ணாவுக்குத் தந்தி கொடுத்திருந்தார். “இந்தாய்யா வில்லாளனும் நீயும் அதிகாலையில் நம் சுந்த்ர்வை எழுப்பிக் காரை எடுத்துக்கொண்டு, அரக்கோணம்போய், சம்பத் வருகிறான்; அழைத்து வாருங்கள். நான்ஸ் உன் நடிகர்களை ரிகர்சல் பார்ப்போம். சாப்பிடு!” என்றார்கள் அண்ணா.

சந்திரமோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்) நாடகத்து உரையாடல் பகுதிகள் சில்வ்ற்றை அந்த நடிகர்களிட்ம் தந்து, மனப்பாடம் செய்து வைத்திருக்கச் சொன்னோம்.

அரக்கோணத்துக்குக் காலை 3 மணிக்கே சென்றுது; சம்பத்தை அழைத்துவந்தோம். “என்ன சம்பத்து, இது உங்கள் வேலையா? என்னை அசல் நாடகக் காரனாகவே ஆக்கிவிட்டிங்களா?” என்றேன் அன்புடன்,

“இல்லிங்க. அவுங்க ரெண்டுபேர் வேஷப்பொருத்தமும் நடிப்பும் உண்மையிலேயே பெண்கள் போலவே இருந்தது. அதைத்தான் அண்ணாவிடம் சொன்னேன்;” என்றார் சம்பத்.

மறுநாள் ஒத்திகை பார்க்கப்பட்டதும், “அவர்களை அனுப்பிவிட்டு நீ இரய்யா சம்பத்தும் வந்திருக்கிறானே!” என்றார்கள் அண்ணா. “இல்லேண்ணா லீவு இல்லை. நானும் போகிறேன்” என்று புறப்பட்டேன் அவர்களுடன்.

அந்த நடிகர்களைத் தம்முடைய நாடகங்களில் பயன் படுத்திக்கொள்ள எண்ணினார்கள் அண்ணா. ஆனால் நேரமின்மையால் அது நிறைவேறவில்லை. வில்லனாக நடித்த தோழர் கே. எம். ஷெரீப்-பின்னர் நண்பர் சம்பத் அவர்களிடமே கார் ஒட்டுநராக ஈரோட்டுக்குச் சென்றார். பெண்வேடம் (கதாநாயகி) தாங்கியவர் O. A. I. K. பாலு. இப்போதும் தஞ்சை மாவட்டம் ஆலத்தம்பாடி கிளையின் தி.மு.க. செயலாளர். வில்லியாகப் (Wamp) பெண்வேடம் புனைந்து, அருமையாக பாடி, நடித்தவர் யார் தெரியுமா? அப்போது அவர் பெயர் K.S. O. துரைராஜன். இப்போது புலவர் அறிவுடை நம்பி!






இறால் மீனும் நெத்திலிக் கருவாடும்

“செம்பொன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி மக்கள் தங்கள் உறுப்பினரான விளநகர் கணேச லுக்குப் புதிதாக ஒரு ஃபியட் கார் வாங்கி வழங்க இருக்கிறார்கள். அண்ணா, நீங்கள் நேரில் வந்து, அந்தக் கார் சாவியை அவரிடம் தரவேண்டுமாம் என்று தமிழ் நாட்டின் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களிடம் வேண்டினேன்.

அங்கே வர இப்ப ஏதய்யா நேரம்? ரெண்டாவது, இது ஒரு Bad precedent (கெட்ட முன் மாதிரி) ஆகப் போயிடும். நம்ம கணேசன்னு இப்ப வந்தா-அப்புறம் ஒவ்வொரு M. L.A. வும் தன் தொகுதியிலே கார் நிதி வசூல் தொடங்கிடுவாங்க எனத் தயக்கம் தெரிவித்தார் அண்ணா!

தவறான முன்மாதிரியா இருக்கக் கூடாதுதான்! ஆனா, கணேசனெப் பொறுத்தவரைக்கும், ஏற்கனவே ரொம்ப நாளா fiat கார் வச்சிருக்கார். அந்த அளவு தகுதி உள்ள பையன் என்பது உங்களுக்கே தெரியுமே, அண்ணா! எப்படியாவது அந்தப் பகுதியிலே ஒரு பொது நிகழ்ச்சிக்கு வரமாட்டீங்களா என்கிறதுதான் உட்காரணம் எங்களுக்கு! நான் கெஞ்சினேன்; வெற்றி!

நான் தேதி கேட்டு அண்ணா மறுத்ததாகச் சரித்திரமே இல்லை! உடனே சென்னையிலிருந்து மாயூரம் விரைந்து, கார் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னேன்.

முதலமைச்சர் பொறுப்பேற்றதற்குப் பின்னர், அண்ணா மாயூரம் வருவதால், அரசு அதிகாரிகள் தம் வழக்கப்படி பயணியர் விடுதிகளில் இடம் வசதி செய்து, தங்குவதற்கான எல்லாச் செயல்களிலும் ஈடுபட்டனர். ரயிலில் வந்து அதிகாலை 2.15 மணிக்கு இறங்கினார்கள். அதிகாரிகள் என்னிடம் விசாரித்தனர், C. M. எங்கே தங்குவார்கள் என்று. நான் சொன்னேன் இப்போதுள்ள வழக்கப்படி ஜி. ஆர். வீட்டுக்குத்தான் செல்லக்கூடும்: என்பதாக இறங்கியவுடன் கேட்டேன். “எங்கே அண்ணா போகிறோம்?” - “வழக்கப்படிதான்” என்ற பதிலும் புன்னகையும் வெளிவந்தன.

பிரமாதமான பொதுக்கூட்டத்தில் காரின் சாவியை கணேசனிடம் வழங்கினார்கள் அண்ணா. விழா அருமையாக அமைந்திருந்தது.

ஆனால் அடுத்த மாதம் நடந்த நிகழ்ச்சி என் மூக்கை உடைத்து விட்டது!? மாயவரம் தொகுதி மக்கள் தங்கள் எம். எல். ஏ. ஆன கிட்டப்பாவுக்கு ஒரு அம்பாசிடர் கார் வழங்கினார்கள். அதற்கும் அண்ணா அவர்களையே அழைத்தனர். ‘இது ஒரு தீய பழக்கமாகத் தொடரும்’ என அண்ணா தொலை நோக்குடன் கூறியது, நூற்றுக்கு நூறு உண்மையாகிவிட்டதே! இருவரும் என் சொந்த உபயோகத்துக்குத் தங்கள் கார்களைத் தந்து உதவினார்கள் என்பது வேறு விஷயம். இருந்தாலும், இவை யாவும் அண்ணாவுக்குத் தர்ம சங்கடமான காரியங் களாகும் அல்லவா? அதற்கு நானும் கருவியாக இருந்தேனே!

இரவு செம்பனார்கோயிலிலேயே விருந்து, கணேசன் சார்பாக சேதுராஜா வீட்டில். இவர்கள் அண்ணாவுக்கும் வேண்டிய குடும்பத்தினர். ஊரிலுள்ள மீன்களையெல்லாம் வலை வீசிப் பிடித்து வந்து விட்டார்கள்! அண்ணாவுக்கு, இடது புறம் தில்லை வில்லாளன், வலது புறம் நான். ஏராளமான (Dishes) வகைகள். இறால் வறுவலின் மணம் மூக்கைத் துளைக்கிறது. வில்லாளனும் என்னைப்போலவே சாப்பாட்டுப்பிரியர்; ரசிகர்! அவர் “இந்த இறாலைவிட, அதில் போட்டிருக்கிற மசாலாதான் ரொம்ப ருசி, அண்ணா!” என்கிறார். நானோ என் இலையிலிருந்த இறால் மசாலாவைச் சாதத்தோடு நன்கு பிசைந்து, அண்ணாவின் இலையில் வைத்துச், ‘சாப்பிடுங்கள்’ என்கிறேன். நான் இறால் சாப்பிட்டால் என் வயிறு கோளாறு செய்யும் என்பதும் ஒரு இரகசியம்!

“சின்னச் சின்னதா இன்னொரு மீன் இருக்குமே முழுசா சாப்பிடற மாதிரி. அது என்ன?” — அண்ணா.

“அது சென்னா குன்னி” -வில்லாளன்.

“அது இல்லேய்யா-வெற ஒண்ணு. அது பேரு...”

“நெத்திலியா? (நெற்றிலியா?)” —இது நான்.

“ஆமா அதேதான்! அது கூட எனக்குப் பிடிக்கும்” என்று அண்ணா சொன்னதும் என் மூளையில் எழுதிக் கொண்டேன். இதை மட்டும்!

“தெற்குச் சீமையில் நல்ல தண்ணிரில் மிகச்சிறிய அம்பிர்ைமீன் கிடைக்கும். அதையும் முழுசாகச் சாப்பிடலாம். கடல் நீரில் நெத்திலி மீன் இருக்கும். பச்சையாக்வும், கருவாடாகவும் சாப்பிடுவார்கள்” என்று என் பரந்த அனுபவத்தைக் காட்டிக் கொண்டேன்.

ஐந்து நாட்களுக்கொரு முறை அலுவல் நிமித்தம் சென்னை செல்பவன் நான். அப்போதெல்லாம் நெத்திலிக் கருவாட்டை ஒரு காகிதப் பையில் நிரப்பி, நாற்றத்தை மறைக்கக் கருவேப்பிலைத் தழைகளை நிறையச் சுற்றி, மேலேயும் தாளைப் போட்டு, நன்கு சிப்பமாகக் கட்டி எடுத்துக் சென்று, அண்ணாவுக்கு அதாவது அண்ணியிடம் தருவேன்.

நெத்திலித் தருவாட்டில் எத்தனையோ ரகம் உண்டு டியூர்தரமான முதல் நிலைக்கருவாடு பொன்னிறமுள்ளது. இதைத் தேர்ந்தெடுத்து எனக்கு வாங்கித் தர இருவரைக் கண்டு பிடித்தேன். விளநகர் கணேசன் ஒருவர்; மற்றொருவர் ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக உள்ள ரங்கநாதன். இவர் எனக்கும், என் நண்பர் பயணச்சீட்டுப் பரிசோதகர் குணசேகரனுக்கும், கோடிக் கரையில் பயங்கர மான மீன் விருந்து படைப்பவர்.

ஒரு நாள் ரயில் தாமதமாகி, நான் அண்ணாவீடு சென்றபோது, நள்ளிரவு நேரம். டாக்சியை நிறுத்தி விட்டு மேலே சென்றேன். அண்ணா படுத்திருந்தார்கள். அவர் களைத் தொந்தரவு செய்ய வேண்டாமென எண்ணி அண்ணியாரிடம் கருவாடு பார் சலைத் தந்து விட்டுத் திரும் பியபோது, ஆள்அரவங்கேட்டு, “யார்?” என்றார்கள் அண்ணா. “நான்தானண்ணா, கருணானந்தம் கொஞ்சம் நெத்திலிக் கருவாடு கொண்டாந்தேன்.”

“வேண்டாய்யா. என்னாலே சாப்பிடவே முடியலியே. இது எதுக்கு இனிமே?” என்ற குரலில் வேதனை கலந்த சோகம்இழைந்தது. அதற்குப் பிறகு என்னென்ன நிகழ்ந்து விட்டன! நான் நெத்திலிக் கருவாடு வாங்குவதை மட்டு மல்ல-அண்ணாவின நினைவாக நெத்திலி மீனோ, கருவாடோ—சாப்பிடுவதையும் விட்டுவிட்டேன்!






மூன்று சொற்கள்—இரண்டு மணி நேரம்!

‘மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப, மணிப்பூ ஆடை போர்த்திக் கருங்கயல் கண்விழித்து, ஒல்கிக் காவிரி நடந்து வரும் மயிலாடுதுறை நகராட்சி மன்றம் இரண்டு உயர்நிலைப் பள்ளிகளை நடத்தி வருகின்றது. மாநிலத்தி லேயே இவை மேனிலையிலிருந்த காலமும் உண்டு. கிட்டப்பா இங்குதான் படிப்பை முடித்தார். என் பிள்ளைகள் எல்லாருமே இங்கே பயின்றனர். தமிழாசிரியர் சிவானந்தம் எனக்கு நண்பர்.

அவருடைய ஆர்வத்தால் அண்ணா அவர்கள் அந்தப் பள்ளியின் இலக்கிய மன்றத்தில் ஒருநாள் சிறப்புச் சொற்பொழிவாற்றிட ஏற்பாடு செய்தோம். மாலை நேரம். மாணவர் தவிர பொதுமக்கள் கூட்டம் ஏராள மாக இருக்கு மென எதிர்பார்த்து வெளியேயும் ஒலி பெருக்கிக் குழாய்களை அமைத்திருந்தனர். நான்கூட வெளியில் நின்றே கேட்டேன்; இலக்கியக் கூட்டந்தானே. எல்வளவு நேரம் அண்ணா பேசப்போகிறார்—என்று எண்ணி,

“கல்லூரியிலோ பள்ளியிலோ கற்கும் மாணவர்கள் நேரிடையான அரசியலில் ஈடுபடக் கூடாது. அரசியலைப் பாடமாகக் கற்கலாம். இளமையில் கல் என்று சொன்னது, கற்கச் சொன்னதே தவிரக் கல் எடுக்கச் சொன்னது அல்ல! அந்தக் “கல்” என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்த ஒரு குறளைப்பற்றி இன்று பேச எண்ணுகிறேன்” என்று தொடக்கத்திலேயே பேச்சில் கனமும் கம்பீரமும் குடும் சுவையும் பிசைந்துதரவே, நீண்டநேரக் கையொலிக் குப் பின் ஊசி விழுந்தால் கேட்குமளவு மவுன நிலை. கூட்டமும் எள் போட்டால் கீழே விழாத அளவு நெருக்கம்.

“மாணவர்கள் திருக்குறளைக் கற்கவேண்டும். அதில் என்ன இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்வதை விடத் திருக்குறளில் இல்லாதது ஏதுமில்லை என்று சொல்வது தான் எளிது. அப்படிப்பட்ட ஒர் ஒப்பற்ற-அப்பழுக்கற்ற -முழுமை பொருந்திய அறநூல் அது. இலக்கியத்திலும், அது ஈடும் எடுப்பும் இல்லாத பேரிலக்கியம். இவ்வளவு சிறந்த நூலை எளிதாக நாம் கற்கவேண்டும் என்பதற் காகவே இரண்டு அடிகளிலே இயற்றிச் சென்றார் திருவள்ளுவர். இரண்டு அடிகளுங்கூட, முழுமையான அடிகளல்ல! ஒண்ணே முக்கால் அடியில் அடங்கும் ஏழே ஏழு சீர்கள்—ஏழு சுரங்களைப் போல!

குறளின் மேன்மையை ஒவ்வொரு பாடலுமே தனித் தனியே விளக்கிக் காட்டும் என்றாலும், இப்போது உங்களிடத்திலே நான் ஒரே ஒரு குறளை மட்டும் எடுத்துக் காட்டிட எண்ணுகிறேன்.

கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.





இதிலே, கற்க என்கிறார். அதாவது கல்வியைக் கற்க வேண்டும். சரி, கல்வியைக் கற்கிறோம். எப்படிக் கற்க வேண்டும்? கசடறக் கற்க, என்கிறார். கசடு என்றால் என்ன? குற்றம், பிழை. சரி, கசடு அறக் கற்கிறோம். எதைக் கற்க வேண்டும்? கற்பவை கற்கவேண்டும். கற்கத் தக்கவை.கற்கத் தகாதவை என்று நூல்களை இரண்டாகப் பகுத்துக்கொண்டு கற்கத் தக்கவற்றை மட்டும் கற்க வேண்டும். அதிலும் கசடு அறக் கற்கவேண்டும்.”

அண்ணா இந்த இடம் வருவதற்குள் ஒருமணி நேர்ம் கடந்துவிட்டது. அடுத்து அண்ணா தேரழுந்தூர் பொதுக் கூட்டத்துக்குப் போயாக என்ற தவிப்பு எங்களுக்கு. ஆனால் அண்ண்ாவின் சொன் மாரி தொடர்ந்து பொழிகிறது!

கற்க கற்பவை கற்க

கசடறக் கற்க

கற்பவை கசடறக் கற்க





அடுத்த ஒரு மணி நேரத்திலும் கற்க—கசடற—கற்பவை— இந்த மூன்றே மூன்று சொற்களுக்கு மட்டுந் தான் விளக்கம் தர அண்ணாவால் முடிகிறது; அதுவும் ஒரளவு! “மீதியிருக்கும் நான்கு சொற்களுக்கும் இன்னொரு தடவை வரும் போது விளக்கம் சொல்வேன்” என்று, அண்ணா தம் பேருரையை முடித்து, வெளியில் வந்தார்கள்.

பெரிய வாடகைக் கார் ஒன்று அப்போது அமர்த்தி யிருந்தார் கிட்டப்பா, நாங்கள் அதைத் தேர் என்போம். அதில் ஏறிப் புறப்பட்டதும்-“நீங்க யாரிடத்தில் அண்ணா தமிழ் தனியாகப் படிச்சிங்க?” என்றேன்.

“நீ ஒண்ணு! எனக்குத் தனியாத் தமிழ் படிக்க எங்கேய்யா வசதியிருந்தது? நானே படிச்சி நானே சிந்திச்சுப் பார்க்கத்தான் நேரமிருந்தது. ஆழமா, அகலமாப் படிச்சா, எல்லா இலக்கியத்தையும் நாமே புரிஞ்சுக்கலாமே! ஆனா, இந்தத் திருக்குறளே தனி! திருவள்ளுவர் எவ்வளவு வருடம் கஷ்டப்பட்டிருப்பாரோ, தெரியல்லே? ஒவ்வொண்ணையும் எழுத, அல்லது ஒவ் வொரு சொல்லையும் அந்த இடத்திலே பொருத்த, அவர் நாள் கணக்கிலே சிந்திச்சிருக்கோணும்! எழுதினவர் பட்ட பாட்டை நினைக்கும்போது, அதை எடுத்துச் சொல்ற நமக்கு ஏது இதில் தொல்லை?” என்றார் அண்ணா.

இவற்றையெல்லாம் மறக்காமல் நினைவில் வைத்திருந்தேன். உலகத் தமிழ் மாநாட்டின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலருக்குத் திரு கி. வேங்கடசுப்பிரமணியன் என்னிடம் கவிதை கேட்டார். திருக்குறளின் துணையால், சொற்பப் படிப்புள்ள நாட்டுப்புறத்தான் ஒருவன், எல்லா வகையான பிரச்னைகளுக்கும், நன்முறையில் அனைவரும் ஏற்றுப் பாராட்டத்தக்க தீர்வு வழங்கினான் என்பதாக—ஒரு மர்மக் கதைபோல எழுதியிருந்தேன்.

கருத்து நன்கொடை அண்ணாவின் இந்தச் சொற்பொழிவுதான்!






முதலமைச்சர் சினிமா பார்க்கலாமா?

மன்னை நாராயணசாமி மாமாவின் தம்பி நடன சிகாமணியின் மகள் கண்ணகி திருமணம் மன்னார்குடியில், அண்ணா தலைமையில். அப்போதுதான் முதலமைச்சர் பொறுப்பேற்றுச் சில வாரங்கள் ஆகியிருந்தன. திருமணத்துக்கு முதல் நாள் மதுரையில் ஏதோ ஒர் அரசு நிகழ்ச்சி. அங்கு சென்றிருந்து, அண்ணாவை அழைத்துக் கொண்டு, குறிப்பிட்ட நேரத்தில் மன்னார் குடி வந்து சேர வேண்டிய பெருங்கடமை என் தலையில் சூட்டப்பட்டது. எனக்குத் துணையாகத் தஞ்சை நண்பர் வழக்கறிஞர் சாமிநாதன், அவருடைய பியட் காரில்.

இருவரும் சாவதானமாகப் புறப்பட்டு மதுரை போய்ச் சேர்ந்தோம். அண்ணா முற்பகலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது சந்தித்தேன். வந்த வேலை யைச் சொன்னேன். “சரி சரி, வா. இங்கே மாலையில் ஒன்றும் function இல்லை. அதனால் இப்போது சாப்பிட்டதும் புறப்பட்டு, நாம் திருச்சி போய் ஒய்வெடுத் துக் கொள்ளலாம். நாளை அதிகாலை புறப்பட்டால், மன்னை திருமணத்துக்கு நேரத் தோட போயிடலாம்” என்று திட்டம் தந்தார்கள் அண்ணா. “எல்லாம் சரி யண்ணா! திருச்சியில் ஒய்வெடுக்கலாம். ஆனால் எந்நேர மானாலும், இரவு தங்குவதற்கு மன்னார்குடிக்கு வந்து விடச் சொன்னார்கள்!” என்றேன். இந்தத் தந்திரம் அண்ணாவிடம் பலிக்குமா? “நீ பேசாமே எங்கூட வாய்யா, பாத்துக்கலாம்” எனக் கூறி என் வாயை அடைத்து விட்டார்கள்.

திருச்சி சென்றடைந்தபோது மாலை 5 மணியிருக்கும், சர்க்கியூட் அவுசில் தங்கவில்லை. பொதுப்பணித்துறையின் பயணியர் விடுதியில் தங்கினார்கள். தயாராக அங்கிருந்த அன்பிலைத் தனியே கூப்பிட்டு “பிளாசா தியேட்டரில் என்ன படம்? போய்ப்பார்த்துத் தெரிந்துகொண்டு, டிக்கட் வாங்கி வா, மாலைக் காட்சியே பார்க்கலாம்” என்று ரகசியமாகச் சொன்னார்கள். மகிழ்வோடு விரைந்து சென்று அதைவிட மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தார். “இப்போதே போனால் சரியாயிருக்கும் அண்ணா” என்று அவசரப்படுத்தினார். “இப்ப வேணாய்யா, வெளிச்சமா யிருக்கு. லைட்டெல்லாம் ஆஃப் செஞ்சி, படம் ஆரம்பிச்சப்புறம் போகலாம்” என்று சொல்லி விட்டார்கள்.

அதேபோலக் காவலர் பரிவாரங்கள் இல்லாமல், மிக அமைதியாகத்தான் இருளில் உள்ளே சென்று அமர்ந்து கொண்டோம். இடைவேளைவிட்டு, விளக்குகள் எரியத் தொடங்கின. எப்படித்தான் மக்கள் தெரிந்துகொண்டார் களோ? இங்கே வந்து குழுமிவிட்டனர் எல்லாரும்! வணக்கங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. வசதிக்காக இடைவேளை நேரம் அதிகரிக்கப்பட்டும், மக்கள் திரும்பி அவரவர் இருக்கைக்குச் செல்வதாகத் தெரியவில்லை. அன்பில் வெளியே சென்று தியேட்டர் மானேஜரைப் பார்த்துப் படத்தைத் தொடரச் செய்தார். ஒருவழியாக அமைதி வந்தது.

நான் அண்ணாவைப் பார்த்து ஒரேயடியாகச் சிரித்தேன். “என்னய்யா இப்படிச் சிரிக்கிறே!” என்று கேட்டார்கள். “பின்னே என்னண்ணா? ஒரு முதலமைச்சர் இப்படித் தியேட்டரில் சினிமா பார்க்க வந்துவிட்டாரே! என்று மக்கள் உங்களைப் பற்றித் தவறாக நினைக்க மாட்டார்களா?” என்றேன் சிரிப்பை அடக்கிக் கொண்டு. “நீ அப்படி ஏன்யா நெனக்கிறே? நம்ம அண்ணா, என்னதான் முதலமைச்சரானாலும், பந்தா இல்லாமே, நம்மோட வந்து உக்காந்து தியேட்டரில் சினிமா பாக்கிறாரேண்ணு நம்மைப் பத்தி உயர்வா தான்யா நெனப்பாங்க. என் சுபாவமும் நான் நிறையச் சினிமா பாக்கிற வழக்கமும், எல்லாருக்கும் தெரிஞ்சது தானேய்யா!” என்றார் அண்ணா.

“ஆமாண்ணா. நீங்க சொன்னதும் சரிதான், யாரும் ..உங்களெப் பார்த்து அருவருப்பு அடையலெ. எவ்வளவு எளிமையா, நம்ம உட்காரக்கூடிய அதே வகுப்பிலே உக்காந்து, முதலமைச்சர் என்பதை மறந்துட்டு, மக்க ளோட மக்களா இருக்காரேங்குற மகிழ்ச்சிதான் இவுங்க முகத்திலே தெரியுது! ஆனா, இதுக்காக நீங்க பழைய மாதிரியே அடிக்கடி படம் பாக்கப் போயிடாதீங்க!” என்ற வேண்டுகோளுடன் பேச்சை நிறுத்திக் கொண்டேன்.

மக்கள் கூட்டத்தைச் சமாளிக்கும் எண்ண்த்தில், படம் முடிவதற்கு முன்பே தியேட்டரை விட்டு வெளியேறி னோம். நேரம் நின்றய இருந்ததால் அண்ணாவுடன் பல்வேறு செய்திகளை ஓய்வாகப் பேசக்கூடிய நல்வாய்ப்பு எங்களுக்குக் கிட்டியது இரவில்.

‘இரவு திருச்சியில் தங்கியுள்ளோம். காலையில் சீக்கிரம் அண்ணா அவர்களைப் பயணப்படுத்தி அழைத்துக் கொண்டு, கட்டாயம் திருமணத்துக்காகக் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு முன்னதாக வந்து விடுகிறேன்’ — என்று மன்னார்குடிக்குச் செய்தி அனுப்பிவிட்டு, நிம்மதியாக உறங்கினேன்.

வார்த்தையைக் காப்பாற்றினார்கள் அண்ணா! அப்போதெல்லாம் காலையில் விரைவாக எழுந்திருப்பது, தினமும் முகச்சவரம் செய்து கொள்வது, குளிப்பது, சல்வை உடைகளை அன்றாடம் தரிப்பது, தலைவாரிக் கொள்வது போன்ற புதிய பழக்கங்கள் அண்ணாவிடம் ஏற்பட்டிருந்தன. இவ்வளவையும் ஒழுங்குற நிறைவேற்றிய பின்ன்ர், காலத்தைத் தவறாமல், மன்னார்குடி போய்ச் சேர்ந்து, அனைவ்ரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினோம்.






பார்த்தேன்—சந்தித்தேன்—உரையாடினேன்!

அறிஞர் அண்ணா அவர்களை முதன் முதலில் நான் எப்போது சந்தித்தேன்? அல்லது எப்போது பார்த்தேன்? அல்லது எப்போது பேசினேன்? இதயத்தில் இடம்பெற்று நெஞ்சில் நிலைத்திருக்க வேண்டிய நிகழ்ச்சி அல்லவா!

என்ன முட்டாள்தனமாக உளறுகிறேன்; இன்னும் இந்த மூடநம்பிக்கை அகலவில்லையே! அறிவியல் உரம் பெற்று வளர்ந்துள்ள இந்நிலையிலும், கவிஞர் கற்பனைக் கூற்றுகளை மெய்போல் கையாளுவதா? நெஞ்சின் ஒரு பகுதியில் இருக்கும் இருதயம், இரத்தத்தைத் துாய்மைப் படுத்தும் பணி ஒன்றை மட்டுமே செய்யக் கூடியது! நினைப்பதற்கும் மறப்பதற்கும் உரிய கருவிகள் நிலை கொண்டிருப்பது, மூளையின் கோடிக்கணக்கான நரம்பு மண்டலத்தின் ஏதோ ஒரு பகுதியில்தான், என்பதல்லவா விஞ்ஞான உண்மை!

திருத்திக் கொள்வோமா? உறங்கிக் கொண்டிருக்கும் நினைவாற்றல் உணர்வுகளைத் தட்டி எழுப்பி நடக்க விடுகிறேன், மூளையைக் கசக்கி!

1942-ஆம் ஆண்டு தஞ்சையில் பள்ளியிறுதிப் படிப்பு முடித்துக், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் நான் சேர்ந்த சமயம், என் சிறிய தகப்பனார் மகளைப் பட்டுக் கோட்டையில் திருமணம் செய்து கொடுத்தோம். அந்த மாப்பிள்ளை மாரிமுத்து பெரியவீட்டுப் பிள்ளை. அவர் அழைப்பின் பேரில் பட்டுக்கோட்டை சென்றிருந்தபோது, அவர்கள் வீட்டுக்கு எதிரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் அண்ணா பேசினார். எனக்கு முதல் ‘தரிசனம்’ அதுதான்! “திராவிட நாடு” இதழ் துவங்கிய நேரம். அதன் வளர்ச்சிக்குச் சுயமரியாதைக் கோட்டை யாகிய பட்டுக்கோட்டைத் தோழர்கள் திரட்டி வழங்கிய நிதியைப் பெற்றுச் செல்ல அண்ணா வந்திருந்தார். அதே கூட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆனர்ஸ் மாணவர் நாராயணசாமி என்னும் தாடிக்கார இளைஞரும் பேசினார். ஆமாம் பிற்கால நாவலர் நெடுஞ்செழியன்! பட்டுக்கோட்டையில் அவர் தந்தையார் இராசகோபால் அலுவலில் இருந்தார் அப்பொழுது.

“அண்ணா பேச்சு எப்படி?” என் மாப்பிள்ளை எனது தொடையில் தட்டிக் கேட்கிறார். மயக்கத்தினின்று தெளிந்து, “எம். எஸ். சுப்புலட்சுமி கச்சேரி கேட்பதுபோல் இருக்கிறது” என்கிறேன். எனக்கு மிக உயர்வாகத் தோன்றிய உவமை, அதுவரையில் அது ஒன்றே !

அடுத்து, குடந்தையில் சீர்திருத்த நாடகங்களில் நடித்து வந்த எம். ஆர். ராதா அவர்களைப் பாராட்டி, 1943-ல் ஒரு வெள்ளிக் கேடயம் வழங்க மாணவர்கள் முடிவு செய்தோம். அண்ணாவை அதற்காக அழைத்து வந்தார் தவமணி இராசன். நான் டிக்கட் விற்பனையில் முனைந் திருந்ததால், அண்ணா எங்கள் கேடயத்தை ராதாவுக்கு வழங்கியபோதுகூட நான் மேடையருகே செல்லவில்லை. அப்போது மீதமான பணத்தைக் கொண்டுதான் திராவிட மாணவர் கழகம் அமைத்துத், தொடக்க விழாவுக்கு அண்ணா அவர்களையே அழைத்தோம்.

1.12.1943 அன்று விடியற்காலை 3 மணி. போட் மெயிலில் வந்து இறங்கிக் குளிருக்காகத் தலையில் மூடிய மேல் துண்டு சகிதம் தோற்றமளித்த அந்த குள்ள உருவத்தை, அண்மையில் நின்று அப்போதுதான் பார்த்தேன். வரவேற்று, திரு. வி. சின்னத்தம்பி அவர்கள் வீட்டில் தங்கவைத்த மாணவர்களாகிய எங்களிடம், “காலையில் வாருங்கள்” என்று சொல்லி உறங்கச் சென்று விட்டார் அண்ணா.

10 மணிக்கு வி. சி. வீடு சென்றேன் நான் மட்டும். ஒரு மேசைக்கு முன்னர் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார் அண்ணா. எதிரில் போய் நின்று, வணக்கம்’ என்று கைகுவித்தேன். எங்கள் கல்லூரி பிரின்சிபால் டாக்டர் கே. சி. சாக்கோ முன்னிலையில் கூட நான் இவ்வளவு பயத்தோடு நின்றதில்லை; அவர் தான் எங்களிடம் பயந்து போயிருந்தார்!

“உக்காருங்க. உங்க பேரென்ன?"—அண்ணா.

“உட்காருங்கள். உங்கள் பெயர் என்ன?” —ஆகா! எவ்வளவு பெரிய உயர்ந்த மனிதன் நான்; விசுவரூபம் எடுத்த வாமனன் போல! அண்ணாவே என்னை வாங்க போங்க’ என்கிறாரே-பெருமை பிடிபடவில்லை! அந்த விரிந்து பரந்த நெற்றியின் கீழே கரிய பெரிய விழிகளின் காந்த மின்ஆற்றல், என் சிறிய கண்களான இரும்புத் துண்டைக் கவ்வியிழுக்க, அப்படியே போய் ஒட்டிக் கொண்டேன் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு. அந்த ஒரு முறை-ஒரே முறைதான் அண்ணா என்னை ‘வாங்க போங்க’ என்றது. அதன் பிறகு இந்த ‘அந்நியத்தனம்’ அகன்றது. ‘வாய்யா போய்யா’ எனும் அந்நியோந்தியம், பிறந்து விட்டது. நானும் வணக்கம் சொல்வதை நிறுத்திக் கொண்டேன்.

தன்வயமிழந்த நிலையில் தடுமாறித் தத்தளித்து, ஒரளவு தெளிவு வரப்பெற்று, “என் பெயர் கருணானந்தம், சீனியர் இண்ட்டர் படிக்கிறேன் அண்ணா: காலேஜ் லிட்டரரி அசோசியேஷன்ல, மாலை 3 மணிக்குப் பேசப் போறீங்களே—தலைப்பு என்னண்ணு கேட்டு வரச் சொன்னார் பிரின்சிபால்!“

“The New Life” உடனே சொன்னார்.

குறித்துக் கொண்டேன். “மாலையில் காலேஜ் மீட்டிங் முடிந்தவுடன், டவுண்ஹாலுக்கு அடுத்த முனிசிபல் பள்ளிக் கூட மைதானத்தில்தான் திராவிட மாணவர் கழகத் தொடக்க விழா. நான் அங்கிருப்பேன். உங்களைத் தவமணி இராசன் கல்லூரிக்கு இட்டுச் செல்வார்” என்று சொல்லி விடைபெற்றேன்.

மாலை 5 மணிக்கு இங்கே வந்துவிட்டார் அண்ணா. ஆங்கிலப் பேருரையைக் கேட்டு மகிழ நான் போக முடிய வில்லை. இங்கே கூட்ட ஏற்பாடு நான்தானே! நண்பரும் வழிகாட்டியுமான சீராமுலு, அண்ணாவுடனும் கூட்டத் தலைவரான தமிழாசிரியர் சானகிராமனுடனும், எங்கள் திராவிட மாணவர் கழகச் செயல் வீரர்களைப் படம் எடுக்க முனைந்தார். Group Photoவுக்காக நாற்காலியில் உட்கார்ந்திருந்த அண்ணாவின் தூரப் பார்வையில், தொலைவில் ரோட்டில் சென்றுகொண்டிருந்த இருவர், தனித்துத் தென்பட்டனர். “தம்பி கருணானந்தம்! அதோ பார்-திருப்பூர் மொய்தீனும், மூவலூர் ராமாமிர்தம் அம்மாளும் போகிறார்கள், கூப்பிடு!“ என்றார்.

எழுந்தோடி அழைத்து வந்து, நான் அமர்ந்த நாற்காலியை அவர்கட்குத் தந்து, பின்புறம் நின்று கொண்டேன். அந்த போட்டோ இருக்கிறது என்னிடம்.

இப்படியாகக், குடந்தையில்தான் அண்ணாவைக் கண்டதும், சந்தித்ததும், உரையாடியதும், ஒருங்கிணைந்து உடன்பிறந்த தம்பியானதும், நிகழ்ந்தன எனக்கு!






நோயிலுங்கூட நகைச்சுவை மலருமா?

“நாகர்கோயிலுக்குப் புறப்படுகிறேன், அண்ணா!” தமிழ்நாடு சட்டப் பேரவையின் மாண்புமிகு தலைவர் சி. பா. ஆதித்தனார்.

“சரி, போய் வாருங்கள். ஆனால் வெளிப்படையாக எதிலும் ஈடுபட வேண்டாம்.” தமிழ்நாட்டு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா.

“பார்த்துக் கொள்றேங்க. திரும்ப வந்ததும்...சபா நாயகரா நீடிக்க விடமாட்டீங்கன்னு நெனக்கிறேன்” ஆதித்தனார்.

இதற்கு பதிலில்லை. மந்திரி பதவிக்கான விண்ணப்பத்தை நினைவூட்டுகிறார் என்பது அண்ணாவுக்கு புரியுமே.

இந்த உரையாடல் நடந்தபோது சென்னையிலிருந்தப் நான், மறுநாள் மாயூரம் திரும் பிவிட்டேன்.

1967 புரட்சித் தேர்தலில் பெ. சீனிவாசனிடம் விருது நகரில் தோல்வியுற்ற காமராசரை, மார்ஷல் நேசமணி மறைவால் ஏற்பட்ட நாகர் கோயில் இடைத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிடச் செய்தனர். காங்கிரசார் காமராசர் தோல் விக்குப் பழி தீர்க்க மும் முரமாக முனைந்தனர். காமராசருக்குப் போட்டியான டாக்டர் மத்தியாஸ், சுதந்திரக் கட்சி வேட்பாளர், தி. மு. க. ஆதரவுடன். அண்ணாவுக்குக் காமராசரை நாம் எதிர்ப்பதே பிடிக்கவில்லை.

கலைஞரிடமிருந்து ‘டிரங்கால்’ வந்திருப்பதாக மாயூரம் R. S. அஞ்சல் மனையின் தூதுவர் வந்தார். காலைநேரம். ஒடினேன், சைக்கிளில்தான்! “என்ன சார்? அண்ணா உங்களெ உடனே மெட்ராஸ் வரச்சொன்னாங்க கலைஞரின் குரல். “என்னங்க இது? நேத்துதானே அங்கேருந்து வந்தேன். நாளை மறுநாள் டுட்டியிலே வருவேனே!” - “இல்லெ சார், லீவு போட்டுட்டு உடனே வாங்க!” -அவ்வளவுதான்! தொலைபேசித் தொடர்பு முடிந்தது : புறப்பட்டேன்! வேறு வழி?

24.12.68 அன்று கீழவெண்மணியில் 42ஆதித்திராவிடத் தோழர்களை விட்டோடு கொளுத்திய சோக நிகழ்ச்சி, சீர்கெட்டிருந்த அண்ணாவின் உடலை மேலும் பாதித்து விட்டது! நேரில் சென்று சமாதானப்படுத்தி வருமாறு அமைச்சர்களான கலைஞர், மாதவன் இருவரையும் அண்ணா அனுப்பினார்! அவர்கள் திரும்பச் சென்னை செல்லும்போது மாயூரம் வந்து, என்னையும் அழைத்துப் போனார்கள். அண்ணாவைப் பார்த்த பின்னரே மாயூரம் திரும்பியிருந்தேன்.

“நாகர்கோயிலுக்குப் போய்ட்டு வாய்யா, கருணாநிதி கூட” - இது அண்ணாவின் ஆணை. “இடைத் தேர்தல்லெ போயி நான் என்னண்ணா செய்யப் போறேன்?” நான் நடுக்கத்துடன்! “அட, அதுக்கில் லேய்யா. நீ கருணாநிதி கூடவே பாதுகாப்புக்காக இரு” அவ்வளவுதான்!

கலைஞருடன் நாகர்கோயில் போய் இறங்கியவுடன் நன்கு புலனாகிவிட்டது, அண்ணா ஏன் ஒருவகை அச்சத்துடன் அப்படி என்னிடம் கூறினார்கள் என்பது! பயங்கர வன்முறைகளுக்குச் சித்தமாய் ஆயிரக்கணக்கான காங்கிரசார் அங்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தனர். தி. மு.க. தான் ஆளுங் கட்சியா என்று நாமே கேட்கக் கூடிய அளவுக்கு நமக்கு பலவீனம், பாதுகாப்பற்ற சூழல், எங்கும்!

நாங்கள் இரவில் கன்னியாகுமரியில் தங்கல், பகலில் தேர்தல் அலுவல், பொதுக்கூட்டம், கலைஞருக்கு. நான், அவர் வரப்போகும் ஊர்களுக்கு முன்கூட்டியே தனியே ஒரு காரில் செல்வேன். ‘அண்ணா வேண்டுகோள்’ என்று பிரத்தியேகமாக எடுக்கப்பட்ட 16 mm படமும், உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலப் படமும் 16 mm புரொஜக்டரில் திரையிடச் செய்வேன். அவை லாரியில் வரும்.

ஒரு நாள் எனக்குப் பாதுகாப்புக்காக என்று, ஒரு கட்டிளங்காளையை என்னோடு புதிதாக அனுப்பினார்கள். தி. மு. க. தலைமை நிலைய நிர்வாகிகளான நண்பர்கள் சண்முகம்.தேவராஜ், அந்தப் பகுதிகளை நன்கறிந்ததால் உதவியாக இருந்தார். அவர் பெயர் ஜேப்பியார்!

ஆதித்தனார் என்னைப் புரிந்து கொண்டதும் அங்கு தான்! சில பெரிய பொறுப்புகளை ஒப்படைத்தார்; இனிது நிறைவேற்றினேன். தேர்தலன்று நாகர்கோயிலில் இருப்பது தவறென்று கருதிச் சென்னை திரும்பிவிட்டோம். காலையில் அண்ணா வீட்டுக்குச் சென்றோம். மாடியில் பின்புறமுள்ள மிகச் சிறிய அறையில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நோய் முற்றி, உடல்நிலை மிகமிகச் சீர்கேடுற்ற நேரம்.

“கருணானந்தம், டைகர் பாம் வச்சிருப்பியே. கழுத்திலே பின்பக்கம், பிடரி, தோளிலே கொஞ்சம் தேச்சு விடு. ரொம்ப வலிக்குது” என்கிறார் அண்ணா. ஒரு பழைய காட்சி என்: நினைவுக்கு வருகிறது. அண்ணாவின் முழங்காலுக்குக் கீழே ஒரு நாற்காலியில் இடிபட்டு வீங்கியிருந்தது ஒருநாள். என்னிடம் வேட்டியை விலக்கிக் காலைக் காட்டினார். வழக்கமாக என் ஜிப்பா பாக்கெட்டில் வைத்திருக்கும் டப்பாவிலிருந்து டைகர்பாம் எடுத்ததுதான் தாமதம். “அய்யோ, அய்யோ! அது வேண்டாய்யா. காலை எரியுமய்யா!” என்று கத்திக் கொண்டே, குழந்தை போல அண்ணா எழுந்தோடினார். “எரியாதுண்ணா” என்று கூவிக் கொண்டே நானும் பின்னாலேயே ஒட, அண்ணா வேட்டியால் காலை மறைத்துக் கொண்டு வீக்கத்தைக் காண்பிக்க மறுத்தார். அதே அண்ணா, இப்போது, தானே அந்தத் தைலம் தேய்க்கச் சொல்கிறார் எனில், நோயின் பரிமாணந்தான் என்னே!

“எனக்கு, இப்ப தானே ஒடம்பு சரியில்லே? நம்ம கருணாநிதி எப்பவும் நோஞ்சான். மத்த மந்திரிகளுக் கெல்லாம் நல்ல ஒடம் புண்ணு நெனச்சா-இப்ப பாரு, நம்ம கோவிந்தசாமி, நாகர்கோயில்லே ரத்த ரத்தமர் வாந்தியெடுத்து (6.1.69 அன்று) hospitalலே அட்மிட் ஆயிட்டாரு. இந்த முத்துசாமி - நல்ல இளவயசு. அவருக்கும் ரொம்ப சரியில்லியாம். என்னய்யா இது?” என்று அலுத்துக் கொண்டார் அண்ணா.

அறையிலிருந்து வெளியில் வரும்போது நான் ஒரு ஸ்டுவில் இடித்துக் கீழே தள்ளினேன். “ஏன் சார்! பார்த்து வரக்கூடாதா?” என்று கலைஞர் கடிந்து கொண்டார். அந்தச் சூழ்நிலையிலும் அண்ணா தமது இயல்பான நகைச் சுவையைக் கைவிடாமல் “அட, அவருமேலே தப்பில்லய்யா! அவரும், மன்னை நாராயணசாமியும், எதையும் இடிக்காமே நடக்க முடியாது! அவங்க மேலே தப்பில்லே! ஒடம்பு அதுக்கு இடங்கொடுக்கிறதில்லே என்கிற காரணந்தான்!” என்று நகையாடுகிறார்.

மன்னை மாமாவும் நானும் சேர்கமாகச் சிரித்தோம், ரசிக்க விருப்பமில்லாத அளவுக்கு அண்ணாவின் நலம் குன்றிப் போனதால்!






கவிதை எழுதவா வரச் சொன்னார்?

மாயவரம் ரயிலடியிலிருந்து காந்தியும் நானும் ஆளுக் கொரு சைக்கிளில் புறப்பட்டு, வழக்கம்போல் கூறைநாடு நோக்கிப் போய்க் கொண்டிருந்தோம். எதிரே லட்சுமி போட்டோ ஸ்டுடியோ பக்கிரிசாமி மிக விரைவாக ஒரு சைக்கிளில் வந்தவர், என்னைக் கண்டதும் தொப்பென்று குதித்து, “அண்ணே, ஒங்களெத் தேடிக்கிட்டு அண்ணா வந்தாங்க. நம்ம ஸ்டுடியோகிட்டெ காரை நிறுத்திக் ‘கருணானந்தம் இருக்காரா?’ எண்ணு கேட்டதும் எனக்குக் காலும் ஒடலெ, கையும் ஒடல்லே, வந்து உக்காருங் கண்ணா! இதோ போயி கூப்பிட்டு வந்துடறேன்னு சொல்றதுக்குள்ளே. ‘நான் அவசரமா திருச்சி போயிட் டிருக்கேன். அவரை வரச் சொல்லுங்க’ன்னு பேசிகிட்டே காரை எடுக்கச் சொல்லிட்டாங்க! கார் இதுக்குள்ள சித்தக்காடுதான் போயிருக்கும்!” என்று மூச்சு இரைத்த வாறே சொன்னார்.

சைக்கிளைத் திருப்பி, இருவரும் விரைந்தோம்! கண் மண் தெரியாத வேகத்தில் செலுத்தினோம்! ஒரு அசட்டு நம்பிக்கை, சித்தர்காடு ரயில்வே கேட் சாத்தியிருக்காதா என்று.

என்ன விந்தை! எங்கள் எதிர்பார்ப்பு வீண் போக வில்லை. கும்பகோணம், திருவாரூர், தரங்கம்பாடி ஆகிய மூன்று பக்க ரயில்வே லைன் ஒருங்கே செல்வதால், அந்தப் பெரிய ரயில்வே லெவல் கிராசிங் கேட் பெரும்பாலும் மூடப்பட்டே இருக்கும்! அன்றும் அப்படியே! அப்பாடி: அண்ணாவைப் பிடித்துவிட்டோம்! அண்ணாவுக்கு ஆச்சரியம் அடங்கவேயில்லை! “ஏன்யா, சைக்கிள்ள வந்தா காரைப் பிடிச்சிட்டிங்க? எவ்வளவு வேகமா வந்தீங்க? இது ரொம்பத் தப்பாச்சே!” என்றார். குரலில் ஒரளவு கண்டனமும் தொனித்தது. “என்னண்ணா வீட்டுக்கு வராம போறீங்களே?” என்றேன் சிறிது மூச்சு விட்டு, சிரம பரிகாரம் செய்தபின். “நேரமில்லியே. திருச்சி போயாகணும். ஆமா. மாநாட்டு வேலை தொடங்சி யாச்சே, நீ லீவு போட்டு வராம, இன்னும் இங்கேயே யிருக்கியே! நீ என்னா காந்தி?” எனக் கேட்ட அண்ணாவிடம் “நான் லீவு எடுத்துக்கிட்டு நாளைக்கே வந்துடறேன் அண்ணா! மாநாட்டுக்கு இன்னும் ஒரு மாசமிருக்கேண்ணு பார்த்தேன். சரி, பரவாயில்லை. காந்தி, பிறகு வரும்; டிக்கட் விற்பனைக்கு!” என்றேன்.

கேட் திறக்கப்பட்டது. அண்ணாவின் காரும் புறப் பட்டது. அதற்குள் அங்கு பெருங்கூட்டம் சேர்ந்துவிட்டது. இத்தனைக்கும், அந்த கேட்டிலிருந்து பார்த்தால் என் வீடு தெரியும். ஒரே தெருதான்!

காலியாகக் கிடந்த திருச்சி ரேஸ் கோர்ஸ் திடலின் ஒரு பகுதியில் பழைய பங்களா ஒன்று இருந்தது. அதில்தான் அண்ணா முகாமிட்டிருந்தார்கள். அன்பில், மணி, ராபி, அழகமுத்து, நாகசுந்தரம், பாண்டுரங்கன், முத்துக் கிருஷ்ணன்-எல்லாரும் சூழ்ந்திருந்தனர். கட்டடத்தினுள் ஒவியக்கூடம் ஒன்றில் கலைஞரின் ஆலோசனையுடன் சில ஓவியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்-வைத்தியலிங்கம், கருணா போன்றோர். பந்தல் வேலை நடந்து கொண் டிருந்தது. மாயூரம் விற்பன்னர்கள் முகப்பு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.

“வந்துட்டியா! ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக் க. எல்லா எடத்தையும் நல்லா சுத்திப்பார் ! ஒரு மூலையிலே போயி உக்காந்து, அப்படியே இதையெல்லாம் வர்ணிச்சி, ஒரு கவிதை எழுதி கிட்டு வா! இண்ணக்கே கஞ்சீவரம் அனுப்பி, அடுத்த வாரம் திராவிடநாடு ஏட்டிலே அது வெளியாகணும்!” என்று அண்ணா என்னை வரவேற்று வரச்சொன்னதே இதற்குத்தான் என்பது போலவும் ஆஸ்தான கவிஞருக்கு அரசன் கட்டளை போலவும் அண்ணா எனக்கு ஆணை (சோதனை யா?) பிறப்பித்தார்,

அன்று மாலை “திராவிட நாடு” அலுவலகத்துக்கு ‘டிரங்க்கால்’ போட்டு அண்ணா பேசினார். “கட்டுரை அனுப்பியிருக்கிறேன், மாநாட்டுப் பணிகள் நடந்து வருவதுபற்றி. அதை அப்படியே போடணும். அப்புறம் நம்ம கருணானந்தம் கவிதை ஒண்ணும் அத்தோட வருது. அதையும் நல்லா full page போடணும்” என்று, பத்திரிகாசிரியர் தோரணையில் விளக்கங்கள் அறிவித்தார்.

அந்தக் கவிதை “திராவிட நாடு” 13.5.1956 இதழில் வெளியாயிற்று. அதிலிருந்து சில வரிகளை நினைவு கூர்வது பொருத்தமாயிருக்குமே: அழைப்பு





தென்னகத்து நன்னகராம் திருச்சி, தம்பி!

திராவிடத்தின் மையத்தில் திகழும் பேரூர்!



முன்னொருநாள் சோழனது மூதூர் ஈதாம்!

முட்டவரும் பகையெதையும் வெட்டும் வீரர்



இன்னமுந்தான் இருக்கின்றார் இங்கே என்றால்,

என் மீது தவறில்லை; எழுந்து பாராய்!



இந்நகரின் தென்திசையில் பரந்தி ருந்த

எழிலான திடலெங்கே? இன்று காணோம்!





வள்ளுவரின் பெயராலே நகராம், இங்கே!

வானம்போல் விரிந்த பெரும் பந்தல் ஒன்று,



வள்ளுவரின் புகழ்போல வளருந் தன்மை,

வரலாறு காணாத புதுமை யாகும்!



வள்ளுவரின் குறள் போன்ற வடிவம் கொண்டோர்,

வாயிலிலே நிறுத்தி வைக்க இருசிங் கங்கள்,



வள்ளுவர் நூல் நயம்போல உயர்ந்த தூண்கள்,

மாடங்கள் அமைக்கின்றார் மரத்தால் செய்து!





அண்மையிலே, அறிவகத்தின் அறையில் கூடி,

அருமையுடன் பெருங்கலைஞர் ஆய்ந்து கூற,



வண்ணமிகு ஒவியங்கள் வரைந்து வைத்து,

வாழ்ந்துகெட்டோர் வரலாறு விளக்கு தற்குக்,



கண்கவருங் காட்சியொன்று காட்ட எண்ணிக்

கண்துயிலா துழைக்கின்றார், அன்புத் தோழர்!



மண்திருத்திப், புதரழித்து, மன்றம் கட்ட

மகிழ்வுடனே பலதோழர் உழைக்கின் றார்கள்!



மூச்செல்லாம் தமிழுக்கே முயற்சி யாவும்

முன்னோர்கள் ஆண்டநாட்டை மீட்ப தற்கே!



பேச்செல்லாம் பிறர் வாழ! பிறந்த நோக்கம்

பேடிகளின் ஆதிக்கம் ஒடச் செய்ய!



திச்சொல்லால் பயனில்லை; திருத்திப் பார்ப்போம்!

திராவிடரின் மரபென்றும் எடுத்துச் சொல்வோம்!



ஏச்செல்லாம் பூச்செண்டு மாலையாகும்

என்றுரைக்குத் தலைவரெலாம் இங்கே தானே!





குன்றாத செல்வங்கள் எல்லாம் உண்டு;

குனியாமல் வாழ்ந்ததற்கு வரலா றுண்டு!



அன்றாட நிகழ்ச்சிக்கும் வடநாட் டான்யால்

அடிபணிந்து கிடக்கின்ற உணர்வும் உண்டு!



என்றேனும் ஒருநாளில் மீட்சி பெற்று

எமதரசு காண்பதற்கும் ஏக்கம் உண்டு!



ஒன்றாக இவற்றையெல்லாம் சேர்ப்ப தற்கு

உதவிடும்நாள் மே.திங்கள் பதினேழாம் நாள்!





மலைகளிலே கிடைக்கின்ற மணிகள் தேடி,

மண்ணுக்குள் புதைந்திருக்கும் பொன்னும் சேர்த்து



அலைகடலில் ஆழ்ந்துறையும் முத்தும் வைத்து

அணிகலன்கள் அமைக்கின்ற தொழில்வல்லார் போல்





நிலைமறந்தோர் பழங்கால சரிதம் தேடி

நெஞ்சத்திற் புதைத்திருக்கும் உணர்வைச் சேர்த்து



தலைகனத்தோர் ஆட்சிக்கு முடிவு வைத்துத்

தனிநாடு சமைத்திடுவோர் தயார்தான், வாராய்!

-Continue to page three

 







2 views0 comments

Comentários


bottom of page