கவிஞர் கருணானந்தம்
முத்துப் பந்தர்
31. பொத்தானை மாற்றிப் போட்ட புஷ்கோட்
32. தஞ்சைக்கு ஏன் வந்தார்?
33. எங்கள் தொழிற்சங்கத்தில் சிங்கம் நுழைவு
34. வாழ்க வள்ளுவரும் குறளும்
35. மாணாக்கரின் பேரெழுச்சி
36. அனுமதி வழங்கப்பட்டது, வா!
37. குற்றாலம் கண்டேனா?
38. மாயூரம் மாநாடு மறக்கவொண்ணாதது
39. விமானப் பயணத்தால் விளைந்தது
40. நழுவிப் போன நாடக மேடை
பொத்தானை மாற்றிப் போட்ட புஷ்கோட்
இந்த முறை அண்ணா திருவிழந்தூரில் தங்கியிருந்தார்கள். இடம் ஏற்பாடு, புதியவர் குடவாயில் சி. கிருஷ்ண மூர்த்தி. ஒரு அம்பாசிடர் காரும் அவரிடமிருந்தது. போக வர அவர் உதவியாயிருந்தார். இது 1951ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை மாவட்ட முதல் மாநாடு, மாயவரம் நகரம், கூறைநாடு திரும்ஞ்சன வீதியில் பந்தலிட்டு நடந்தபோது. மாவட்டச் செயலாளரான கே. கே. நீலமேகம் வரவேற்புக் குழுத் தலைவர். உள்ளூர் பிரமுகர் ஆர். பழனிச்சாமி செயலாளர். அனுபவமில்லாத தால் 17 ரூபாய்தான் மாநாட்டில் மீதியாயிற்று. சாப்பாடு மட்டும் பிரமாதம் எல்லாருக்கும்!
இந்த மாநாட்டின் அமைப்புப் பணிகளில் உள்ளூரி விருந்தாலும், எனக்கு முக்கிய பங்கில்லை. காரணம், நான் அப்போது அய்யாவிடமும் தொடர்போடு இருந்தவன். அதனால், தலைவர்களோடு வெறும் பார்வையாளராகவே மாநாட்டுக்குச் சென்றேன். இந்த மாநாடு பலவகையிலும் மறக்கவொண்ணாதது. என் மூத்த மகள் ராணி, பிறந்திருந்த நேரம். அதற்காக என் துணைவியார் மன்னார்குடி சென்றுவிட்டதால், என் வீட்டில் யாரையும் தலைவர்களை அழைத்துத் தங்கவைக்க முடியவில்லை. கலைஞர் புளுரசி நோயால் அவதிப்பட்டுத் திருவாரூரில் படுக்கையிலிருந்தார். புதியவரான கவிஞர் கண்ணதாசன், சென்னையிலிருந்து அரங்கண்ணலோடு ரயிலில் முதல் வகுப்பில் வந்தபோது, அந்தப் பெட்டி Hot Axle ஆகித் தீப்பிடித்து விட்டது. அதனால் தனது பெட்டியை (Suit case ஐ)ப் பறிகொடுத்த கட்டிய வேட்டி சட்டையுடன் வந்து இறங்கினார். அவருக்கு என் நண்பர் காந்தியின் திருமண உடைகளான பட்டுவேட்டி சில்க் சட்டை கொடுத்து, அணிந்துகொள்ளச் செய்தேன். இரவு “சந்திர மோகன்” நாடகத்தில், அப்போதெல்லாம் சிவாஜியாக நடித்துக் கொண்டிருந்த இலட்சிய நடிகர் எஸ். எஸ். இராஜேந்திரனை, “நீ வேண்டாம். நான் இங்கு சிவாஜி வேடம் போடுகிறேன்” என்று நண்பர் E. V. K. சம்பத் விலக்கிட, அவர் தன் மனக் குமுறலை என்னிடம் வெளியிடும் நிலைமை, இண்ட்டர் மீடியட் படித்துவிட்டு, நாகர்கோயிலில் சும்மாயிருந்தவர், அங்கே இருந்துவந்து, முதன்முதலாகக் கழக மாநாட்டில் மலையாளத்திலும், பிறகு தமிழிலும் பேசிக் கவனத்தை ஈர்த்துக் கைதட்டல் பெற்றார் இங்கே ஒரு வாலிபர் : பெயர் நாஞ்சில் கி. மனோகரன். S.S.L.C. முடித்து, முதன் முதலாகக் கழகத் தொண்டர் படையில் இணைந்து இரெ. ஜோசப் தலைமையில், அருந்தொண்டாற்றினார் ஒர் இளைஞர்; அவர், என். கிட்டப்பா.
மாநாட்டின் இரண்டாவது நாள், மாலை நேரம், மதிய உணவு இடைவேளைக்குப் பின், அண்ணா அவர்கள் குடவாசல் கிருஷ்ணமூர்த்தியுடன் சென்று, திருவிழந்தூரில் அந்த இல்லத்தில் ஒய்வெடுத்துக்கொண்டிருந்தார். காஞ்சி கல்யாணசுந்தரமும் நானும் அங்கு சென்றோம். “என்னாண்ணா, இன்னும் ஒக் காந்துகினு இக்கிறே? புறப்படு!” என்றார் காஞ்சி கல்யாணசுந்தரம். அவர் அண்ணாவுடன் பள்ளித் தோழர். கழகத் தோழர் களிலேயே, அவர் ஒருவர்தான், அண்ணாவை “வா போ“ என ஒருமையில் அழைப்பவர்.
சம்பத் அங்கேதான் தங்கியிருந்தார். அவர் தன் னுடைய bush coat ஒன்றை அண்ணாவிடம் தந்து, “இதைப் போட்டுக்கிட்டு வாங்கண்ணா, மாநாட்டுக்கு!” என்ற பரிவுடன் உரைத்தார். என்ன சம்பத்து! நீங்க தான் இண்ணக்கி சிவாஜி போடlங்களாமே?” என்று குறும்பாகக் கேட்டேன். “இது இரண்டாவது நாடகமல்லவா!” என்று பதில் சொல்லிச் சரித்திரகால சிவாஜி ஒல்லியானவன் என்ற வரலாற்று. உண்மையைத் தகர்த் தெறிந்தார் சம்பத்!
அண்ணா புஷ்கோட் அணிந்துகொண்டு, மேலே அங்கவஸ்திரம் தரித்து, வழக்கமான பரபரப்புடன் போய்க் காரில் ஏறிக்கொள்ளவும், நாங்கள் தொடர்ந்து ஒடினோம், வண்டியில் ஏற. மாநாட்டுப் பந்தல் வந்ததும், அண்ணா மேடைக்குச் செல்ல, நாங்கள் அண்ணாவின் பேச்சைக் கேட்பதற்காக, எதிரே முன்வரிசையில் தரையில் அமர்ந்திருந்தோம்.
அண்ணா மேடையில் நாற்காலியில் வீற்றிருந்தபோது எங்களுக்குப் புலப்படாத ஒரு குறை, அவர்கள் சொற். பொழிவாற்ற எழுந்துவந்து மைக் முன்னர் நின்றபோது தெரிந்துவிட்டது! அதாவது, புதிதாக புஷ்கோட்-அதிலும் இரவல்-அணியும்போது, அண்ணா முதல் பொத்தானை இரண்டாவது துளையில் மாட்டி, அதுபோலவே மற்றவற்றையும் தள்ளித் தள்ளிப் போட்டுக்கொண்டதால், சட்டையின் முன்புறத்தில் ஒருபகுதி ஏற்ற்மாகவும் இன்னொரு பகுதி இறக்கமாகவும் தோன்றியதால் எங்களுக் கெல்லாம் அடக்கமாட்டாத சிரிப்பு! கை தட்டிக் கேலி செய்ய, அது தனியிடம் அல்ல! பேசத் தொடங்கிய பின் மேடைக்குப் போய்ச் சொல்வதும் நாகரிகமல்ல. எனவே சிரமப்பட்டு வாயை மூடி, எங்கள் கிண்டலை வெளிக் காட்டாமல் சேர்த்துவைத்திருந்து, மாநாடு முடிந்தவுடன், ஒடிச் சென்று அண்ணாவிடம் சொல்லி, ஒயாச் சிரிப்பில் ஆழ்ந்தோம்.
பெரியாரின் வழியிலேயே அண்ணாவும், தமது ஆடை அலங்காரங்களில் எப்போதுமே கவனம் செலுத்துவதில்லை என்பது நாடறிந்த உண்மை என்பதற்கு, இந்தச் சம்பவம் ஒர் எடுத்துக்காட்டாகும்.
தஞ்சைக்கு ஏன் வந்தார்?
[அண்ணா அவர்களுக்கு 21 வயது நிறைய 5 நாட்கள் இருக்கும்போது, ராணியம்மாளைத் திருமணம் செய்துவைத்தனர். அதாவது, 10.9.1930 அன்று சின்னக் காஞ்சிபுரம், வரகுவாசல் தெரு, 51-ஆம் எண் இல்லத்தில். திருமண சமயத்தில் அண்ணியார் குடும்பம் தஞ்சாவூரில் இருந்ததாம்.]
“நான் ராணியைத் திருமணம் செய்து கொண்ட புதிசில் தஞ்சாவூருக்கு அடிக்கடி வந்திருக்கேன். அப்போ இங்கே வேற யாரையும் தெரியாது. ஒரு Platform ticket வாங்கிக்கிட்டு நேரெ ரயில்வே ஸ்டேஷனுக்குள்ளே வந்து, இந்த ஹிக்கின்பாதம்ஸ்லெ மணிக்கணக்கா நிண்ணு, புத்தகங்களெ வாங்கிப் படிச்சி, பொழுதெக் கழிப்பேன்!” என்று அண்ணா சொல்லி முடிப்பதற்குள்...அண்ணாவின் இணைபிரியாத நண்பர் நகைச்சுவை நாயகர் சி. வி. ராஜ கோபால், “அதனாலெதான் இப்ப நம்ம கருணானந்தம் பிளாட்பாரத்திலேயே நிக்கிது” எனவும், அண்ணாவுடன் வந்திருக்கும் B.V. K. சம்பத். “அது சரிதாண்ணா சிவியார் சொல்றது! நாம தஞ்சாவூர்லெ இறங்காம, தஞ்சாவூர் வழியா வேற எங்காவது போனாக் கூட, நம்ம கருணானந்தம் கரெக்டா பிளாட்பாரத்துக்கு வந்துட்றாரே-” என்றார் வியப்போடு!
என்னை முன்னால் வைத்து இவர்கள் ‘தமாஷ்’ பேசிக் கொண்டே, தஞ்சாவூர் ரயிலடியைவிட்டு வெளியே வந்து, நேரே ‘கம்பெனி வீடு’ நோக்கிச் சென்றனர். நான் என் பங்காக என்னுடைய குறையைச் சொல்ல ஆரம்பித்தேன், இதுதான் தக்க தருணமென்று! “நான் ஒருத்தன். தஞ்சாவூர்க்காரன் இருக்கேனே—என்னைப் பார்க்கிறதுக்காகண்ணு அண்ணா எப்பவாவது விசேடமா வந்ததுண்டா?” என்றேன். “அட, நீ தஞ்சாவூர்க்காரன்கிற ஞாபகமே வர்றதில்லியே அய்யா! நீ எப்பவாவது இங்கே இருந்திருக்கியா இதுக்கு முன்னே? ஒன்னை தான் ஈரோட்டிலேயே பார்த்துக்கிறேனே"—உடனே அண்ணா என்னை மடக்க, நான் விடவில்லை. மேலும் தொடர்ந்து “சரி என்னெ விடுங்க. நம்ம டி. கே. சீனிவாசன், ஏ. கே. வேலன், கரந்தை சண்முகவடிவேல், இவுங்களோட பொன்மலை பராங்குசம் : எல்லோருமே தஞ்சாவூரிலே இல்லியா—ஆனா இப்ப கே. ஆர். ஆர். கம்பெனியை தஞ்சாவூர்லெ ஆரம்பிக்கச்சொல்லி, அதுக்காகவே நீங்க. அடிக்கடி தஞ்சாவூர் வர்றிங்க. எப்படியோ, நீங்க. வர்றதிலே எங்களுக்கு மகிழ்ச்சிதான் அண்ணா!” என்று முடித்துக்கொண்டேன். கம்பெனி வீடும் வந்து விட்டது. அது மானோஜி அப்பா வீதியில் பெரிய மாடிக் கட்டடம்.
வாயிலிலேயே பெருங் கூட்டம். நமது நடிகத் தோழர்கள் அனைவரும் ஆரவாரத்தோடு அண்ணாவை வரவேற்றனர். வாத்தியார் எம். எஸ். முத்துகிருஷ்ணன், நடிகமணி டி. வி. நாராயணசாமி, சிவாஜி கணேசன், பி. எஸ். தட்சணாமூர்த்தி, எஸ். எஸ். சிவகுரியன், வி. எஸ் . நடேசன், ஏ. எம். மருதப்பா, லெட்சுமிபதி. எம். என். கிருஷ்ணன், எஸ். சி. கிருஷ்ணன், டி.என். கருணாகரன், டி. என். கிருஷ்ணன், சிதம்பரம், ஜி. எஸ். மகாலிங்கம், மணி, கடைசியாக Booking clerk இராம. வீரப்பன்...இன்னும் பலர் இருந்தனர்.
“அண்ணா! புதுநாடகம் கொண்டு வந்துட்டீங்கள் அண்ணா!” எல்லாரும் கோரஸ் பாடினர். “அடுத்த வாரம்!” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு, அண்ணா மாடிக்கு விரைந்தார். வேறென்ன அவசரம்? அப்போது இம்மாதிரி ஓய்வாகச் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சீட்டாட்டம்தான் அண்ணாவுக்குப் பொழுதுபோக்கு! சாப்பிட்டு, நாடகம் பார்த்துவிட்டுத், திரும்ப வந்தபிறகும் தொடர்ந்து சீட்டாட்டம்!
“என்னண்ணா இது? துரங்க வேண்டாமா?’ என நான் இரங்கல் மொழியில் கேட்டேன். இனிமே துரங்கினா ரயிலைக் கோட்டை விட்டுவிடுவோம். இப்படியே கொஞ்ச நேரம் விளையாடினா, நேரே மறுபடியும் ரயிலடிக்குப் போயிடலாம். நீ விடிகிற வரைக்கும் என் பக்கத்திலே விழிச்சிக்கிட்டு இருந்தா, ஒனக்கு நாலணா இனாம்” என்று தன் தவற்றுக்கு ஒத்துழைக்க என்னிடம் பேரம் பேசினார் அண்ணா. “சரி வர்றதை விடுவானேன்” என்று பின்னால் உட்கார்ந்து சிகரெட் பற்ற வைத்துக் கொண்டேன். சீட்டாட்டம் எனக்குப் பிடிக்காத சங்கதி, எப்போதுமே! சம்பத்தும் நானும் ஏறக்குறைய செயின்ஸ்மோக்கர்கள் அப்போது!
“ஏனய்யா ரெண்டு பேரும் இப்படி ஒயாமெ சிகரெட்டெக் குடிச்சிக் கெட்டுப் போறீங்க?” என்று அண்ணா கடிந்து கொண்டார். நாங்கள் கேட்கவில்லை. ஊதிக்கொண்டுதான் இருந்தோம். அதன் பலனை இரு வருமே அனுபவித்தோமே! சம்பத் அற்ப ஆயுளில் போய் விட்டார். நான் 45 வயதில் சுத்தமாகப் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்பது மட்டுமல்ல; அருகில் யாராவது புகை பிடித்தால் - முடிந்தால் தடுப்பேன், அல்லது விலகிப் போய் விடுவேன்! அந்த அளவுக்கு சிகரெட் புகை எனக்கு வெறுப்பைத் தருகிறது இப்போது. ஆனால், குதிரை ஒடிப் போன பிறகு இலாயத்தை இழுத்து மூடியது போல, உடல் ஆரோக்கியம் கெட்டுப் போன பின்னர் இந்த ஞானோதயம் எதற்குப் பயன்படும்? என்னுடைய அறுபதாவது வயது தொடங்கியபோது தொண்டையில் பயங்கர நோய் வந்துவிட்டதே? காரணம் யாரும் சொல்லாவிட்டாலும், எனக்குப் புரிகிறதே? அண்ணா கண்டித்த போது கேட்காததுதான் காரணம் என்று!
வெகு விரைவிலேயே நமது நடிகத் தோழர்களின் நன்மைக்காக அண்ணா ‘ஓர் இரவு’ நாடகம் எழுதித் தந்தார்கள். தஞ்சை மாவட்டம் முழுவதும் அந்நாடகம் காணத் தினமும் தஞ்சை நகருக்குப் படையெடுத்தது புதுமையல்ல. தமிழகமே அங்கே வெள்ளமென விரைந்தது! புகழாதார் யார் “ஓர் இரவு” நாடகத்தை? அப்போது வருகை தந்த கழக முன்னணியினரை நண்பர் இராம. விரப்பனுக்கு அறிமுகம் செய்வது எனக்கு வேலை!
ஆனால், அண்ணாவின் “ஒர் இரவு” நாடகம் தஞ்சையில் ராமநாத செட்டியார் ஹாலில் அரங்கேறிய சமயத்தில், முக்கியமான இரு நடிகர்கள் கம்பெனியில் இல்லை. ஒருவர் நடிகமணி டி. வி. நாராயணசாமி, இன்னொருவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அண்ணாவுக்கு அதனால் சற்று மனக்குறை ஏற்பட்டது!
எங்கள் தொழிற் சங்கத்தில் சிங்கம் நுழைவு
அண்ணா என்னிடம் காஞ்சிபுரத்தில் சொல்லியிருந்த வண்ணம், தஞ்சை ராமநாதன் செட்டியார் மன்றத்துக்குச் சரியாக மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். வரக்காணோம்! மெல்ல மெல்ல வெளியே வந்து, தெற்கு. நோக்கி நடந்து நடந்து, வண்டிக்காரத் தெரு வந்து விட்டேன். நாகப்பட்டினத்திலிருந்து அண்ணா அந்த வழி யில் தானே வரவேண்டும்! அதோ கார் வந்து விட்டது.1 அண்ணாவின் சம்பிரதாயப்படி ஒரு மணி நேரம் தாமதம். காரை நிறுத்தி ஏறிக் கொண்டேன்.
2.6.1957 ஆர். எம். எஸ். ஊழியர்களின் மூன்றாவது மாநில மாநாடு அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கே. துளசி அய்யா வாண்டையார் வரவேற்புக் குழுத்தலைவர். தஞ்சை ஆர். எம்.எஸ். கே. சண்முகம் ஏற்பாடுகளின் பொறுப்பாளர். அப்போது எங்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் P. H. V. S. பாண்டியன், அண்ணா இந்த மாநாட்டுக்கு வரவேண்டுமென்பதில் அளவில்லாத ஒரு பைத்தியமே கொண்டிருந்தார். இத்தனைக்கும் அவர் நமது இயக்கத்தில் நேரடித் தொடர்புடையவரல்லர். அதனாலேயே சென்னைத் தோழர்கள் வஜ்ரவேலு, கோவிந்தராஜன், வீராசாமி போன்றார் இவரை விரும்ப வில்லை எனினும் சுவரொட்டிகள் எல்லாம் அச்சடித்து, அரிய முறையில் விளம்பரங்கள் செய்து, பெருங் கூட்டம் திரட்டியிருந்தோம்.
மாநாட்டு மேடையில் அப்போதைய காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்களான கிருஷ்ணசாமி கோபாலர், சாமி நாத மேற்கொண்டார் ஆகியோர் உள்ளனர். திருச்சி ஆர். எம். எஸ். ஊழியராயிருந்து கொண்டே அகில இந்திய அனைத்துத் தபால் தந்தி ஊழியர்களுக்கும் ஒப்பற்ற தலை வராகப் பல ஆண்டுகள் வீற்றிருந்த எங்கள் வழிகாட்டி ஏ. பி. துளசிராம் மேடையில். திருச்சி ஆர். எம். எஸ். சார்ட்டராயிருந்த நாவலாசிரியர் நண்பர் அகிலன் என்கிற பி.வி. அகிலாண்டம், மேடையில்.
இவர்களிருவரையும் அண்ணாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். ஏற்கனவே அறிமுகமான காங்கிரஸ் சட்டமன்ற சகாக்களுடன் அண்ணா சகஜமாக உரையாடுகிறார். பல்லாயிரம் பார்வையாளர்களும், சட்டமன்ற உறுப்பின ராகியுள்ள அண்ணா இந்தத் தபால் ஊழியர் மாநாட்டில் என்ன பேசப்போகிறார் என்று ஆவலை முகத்தில் தேக்கி ஆர்வத்துடன் எதிர் நோக்கியுள்ளவர். என்னைத் தனக்குப் பின்புறம் உட்காரச் சொல்லி நான் என்னய்யா பேசுவது? என்கிறார் அண்ணா. நண்பர்களின் வேண்டு கோளின்படி அண்ணாவை அழைத்து வந்தேனே தவிர நானும் அதுவரை எங்கள் தொழிற் சங்கத்தின் தீவிர அலு வலராக இருந்ததில்லை. முன்புறமிருந்த எங்கள் பெரியவர் திரு A.F.T. அவர்களைப் பார்த்துச் சாடை செய்தேன். உடனே இரண்டொன்று குறித்துத் தந்தார். இன்னொரு புறமிருந்த அகிலனும் சில சொன்னார் அண்ணாவிடம்.
அண்ணாவுக்கு இது போதாதா? எழுந்து நின்றார் . எழுந்த கை தட்டலால் அதிர்ந்தது மண்டபம், தஞ்சை யிலிருந்து கொண்டு, தளபதி C. N. அண்ணாதுரை MA MLA டெல்லியிலுள்ள எங்கள் மத்திய அரசுக்கு அறை கூவல் விடுத்தார். இயந்திரங்கள் பழுதடைந்தால் உடனே ரிப்பேர் செய்கிறோமே. இந்த மனித இயந்திரங்கள் இரவிலும் பகலிலும் உழைத்துத் தேய்ந்து உருக்குலைந்து போகிறார்கள். இவர்களைப் பழுதுபார்க்க வேண்டாமா? இவர்களின் உடல்நலம் பேணிக் காப்பாற்றப்பட வேண்டாமா? இவர்களைச் சார்ந்திருக்கின்ற மனைவி மக்கள் உற்றார் உறவினர் சுற்றத்தார் யாவரும் இவர்களை மதிக்க வேண்டாமா?
இவர்கள் ஆரோக்கிய வாழ்வு பாதுகாக்கப்பட,குறைகள் தீர்க்கப்பட, service conditions மேம்பட நிறைய பொருள் தேவை; பணத்துக்கு நாங்கள் எங்கே போவது என்று மத்திய சர்க்கார் சொல்லுமேயானால், அதற்கு உண்டான வழி வகைகளை இவர்களையே கேளுங்கள் உங்களுக்குக் சொல்லித் தருவார்கள். வீண்விரயங்களையும் சேதாரங்களையும் மிச்சப்படுத்துங்கள். ஒட்டைகளை அடையுங்கள். ஊழல் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துங்கள். இதனால் மிச்சமாகும் பணத்தை இவர்களின் முன்னேற்றத் துக்குச் செலவிடுங்கள்!
இவை அனைத்துக்கும் முன்னே-இந்தத் தபால் தந்தித் துறையானது (ulility Service) யூட்டிலிட்டி சர்வீசா (commercial service) கம்மர்ஷியல் சர்வீசா என்பதைத் தெளிவுப்படுத்திவிடுங்கள். அது தெரிந்த பின்பு நாங்களே வழிமுறைகளைத் தெரியப்படுத்துவோம்.
அண்ணா ஒரு மணி நேரம் பேசினார். ஒழுங்குப்படுத்தப்பட்ட இருகரைகளினூடே ஒடும் தெளிந்த நீரோடை போல, எடுத்துக்கொண்ட தலைப்பினின்றும் ஒதுங்காமல் நகராமல் வழுவாமல் பிசகாமல் பிரச்சினைகளைப் புரிந்து தெரிந்து, தீர்க்கும் மார்க்கம் தெளிவுற வலியுறுத்தினார். அழைக்கச் சொன்னவர்களுக்கும், அழைத்து வந்த எனக்கும் ஏற்பட்ட பூரிப்பும் புளகாங்கிதமும் அளவிட முடியுமா? மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு நான் நன்றி
கூட்டம் முடிந்த பின்னர் சிறிது பொழுது தங்குவதற்கு அண்ணாவை ராஜா சத்திரத்துக்கு இட்டுச் சென்றேன். அங்கே நண்பர் பி.சி. கணேசன் B.Sc.,B.T. காத்திருந்தார். அவரை அழைத்து அண்ணாவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். நீங்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் சில வற்றைப் படித்தேன். இப்போது என்ன செய்து கொண் டிருக்கிறீர்கள்?’ என்று உசாவினார் அண்ணா.
“திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரி யராக இருக்கிறேன்”
“சரி, உங்களால் காஞ்சிபுரம் வந்து தங்க முடியுமா? கருணானந்தம் முன்பே சொல்லியிருப்பாரே! நான் ஒரு ஆங்கிலப் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன். அதைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.”
“இங்கு இருந்து கொண்டே எழுதியனுப்புகிறேனே! இருக்கிற அலுவலை விடுவதற்கு மனமில்லை.”
“அப்படியானால், காஞ்சிபுரத்திலே எங்கேயாவது இதே மாதிரி ஆசிரியர் அலுவல் ஏற்பாடு செய்கிறேனே! அப்போது வரலாமல்லவா?”
“நான் ஊருக்குப் போய் யோசித்துச் சொல்கிறேன்” என்று பி. சி. கணேசன் விடைபெற்றுப் புறப்பட்டார்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் அற்புதமாக எழுதத் தெரிந்தவர். எந்த நேரமும் அறிவுத்தாகமுடைய நண்பர்கள் புடைசூழ, விவாதம் செய்பவர். நடைமுறை யதார்த்த வாழ்வைப் புரிந்து கொள்ளாமல், கற்பனை உலகிலேயே அதிகம் சஞ்சரிப்பவர். அதனால், இவர் அண்ணாவின் அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், பின்னாளில் சென்னைக்குக் குடியேறினார். அலையும் மனத்தினராய் நிலைபெற முடியாது தவித்தார். திராவிட இயக்கத்தால் அறிமுகமாகிப் பிறகு காங்கிரஸ்காரராக மாறித் திராவிட இயக்கங்களைச் சாடி - மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிவந்து-பழைமை விரும்பியாகத் தவறான நெறியில் மறுபடியும் சென்று-இப்போது என்ன கொள்கை என்பதே புரியவில்லை; வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நினைவூட்ட அவ்வப்போது ஏதோ நூல்கள் வெளியிடுகிறார். அந்தோ!
அண்ணா, ராஜாசத்திரத்திலிருந்து பி. சி. கணேசன் புறப்பட்டுப் போனதுமே சொல்லி விட்டார்: “இவர் சரிப்படமாட்டாரய்யா. நாம் போகலாம். நீ எ ன்னிடம் காஞ்சிபுரத்தில் இவரைப் பற்றிச் சொன்னபோதே கொஞ்சம் சந்தேகம் இருந்தது. நேரில் பார்க்கலாம் என்றுதான் உன்னிடம் சொல்லி, இங்கு அழைத்துவர ஏற்பாடு செய்தேன். சரி. பரவாயில்லை. போகலாம்” என்று.
எங்கள் மாநிலச் சங்கத்தின் பொதுச் செயலாளராக என்னைத் தேர்ந்தெடுக்கச் சென்னைப் பிரதிநிதிகள் முயன்றனர். அண்ணாவை வழியனுப்பிவிட்டு, அந்தத் தேர்வினின்றும் தப்பித்துக் கொள்ள, நான் அன்றிரவு முழுதும் கரந்தையில் போய் மறைந்து கொண்டேன்!
வாழ்க வள்ளுவரும் குறளும்!
“நம் வீட்டிலிருக்கிற சின்னக் குழந்தையெ-‘Dining table-ல் வந்து உக்காந்து சாப்பிடப்பா’ எண்ணு கூப்பிட்டா, அது கேக்காது. அது ஒக்காந்திருக்கிற எடத்துக்குத் தாயாரு போயி, சாதத்தை வாயிலே ஊட்டி விட்டா, ரெண்டு மடங்கு தின்னும்” என்று அண்ணா என்னிடம் சொன்ன போது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்னண்ணா இது? திடீருண்ணு குழந்தெ சைக்காலஜி பத்திப் பேசுறீங்க! கையிலெ திருக்குறள் மாதிரி ஏதோ வச்சிருக்கீங்க!” என்று விசாரித்தேன்.
“இது திருக்குறள் தான்யா! நேத்து நம்ம தோழர் ஒருத்தர் கிட்டெ முக்கியமான, புழக்கத்திலேயிருக்கிற, ஒரு குறளில் பாதியெச் சொல்லி, மீதியைச் சொல்லும்படிக் கேட்டேன். அவரு திருதிருண்ணு முழிக்கிறாருய்யா அதனாலெதான், அவருமாதிரி ஆளுங்ககிட்டே எப்படித் திருக்குறளைக் கொண்டு போய்த் திணிக்கிறதுண்னு யோசிக்கிறேன்!” அண்ணா கவலையுடன் சொன்னார்.
“நான் ஏதாவது இது சம்பந்தமா செய்யனுமா அண்ணா?” -நான் கேட்டேன் அதே கவலை தொனிக்க.
ஆமாய்யா. அடுத்தபடியா தஞ்சாவூர்லெ நம்ம மாவட்ட மாநாடு வருதில்லெ, நீ ரெண்டு நாள் முன்னே அங்கே போயிடு. ஒரு நூறு திருக்குறளை நீயே செலக்ட் பண்ணிக்க. போஸ்டர் டைப்பிலே, அதை வெள்ளைத் தாளிலே ஒரு நானூறு ஐந்நூறு காப்பி பிரிண்ட் பண்ணிக்கோ. அப்புறம், பெரிய ஜவுளிக் கடைகளிலே கேட்டாக் கெடைக்கும். துணி பீஸ்களை மடிப்பதற்கு, நல்ல திக்கான ரெண்டு பவுண்டு அட்டையில்லே, Card board, அதெ உள்ளே வச்சிருப்பாங்க. அதை Cheap பான வெலைக்கு வாங்கலாம். அதை வாங்கி ஒரே சைசாக் Cut பண்ணி, திருக்குறள் வாசகங்களெ அது மேலே ஒட்டி, மாநாட்டுப் பந்தலுக்குக் கால் நடுவாங்க இல்லியா, அதுலே ஆணி அடிச்சி, இதையெல்லாம் ஒவ்வொரு காலுக்கு ஒண்ணா மாட்டிடு, வரக்கூடிய மக்கள் மணிக் கணக்கா சேர்ந்தாப்போலே பந்தலுக்குள்ளே உக்காந்திருக்கறப்போ, ஏதோ நாலு திருக்குறளையாவது அடிக்கடி படிச்சுப் படிச்சு, அது அப்படியே மனப்பாடம் ஆயிடும்!” என்றார், நீண்ட பிரசங்கம் போல,
“இது நல்ல ஐடியாதான் அண்ணா! கட்டாயம் இதை நானே செஞ்சுடறேன். நீங்க வந்து பாத்துப் பாராட்டுவீங்க!” எனச் சொல்லி விடை பெற்றேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை மாவட்ட இரண்டாவது மாநாடு தஞ்சாவூரில் நடைபெற்றது. 1954-இல் என்று நினைவு(?) தஞ்சைத் தோழர்களான பெத்தண்ணன், பதி ஆகியோர் வணிகத் துறையிலுள்ள கழகச் செயல் வீரர்கள். எனவே அவர்களை அணுகி, அண்ணாவின் யோசனைகளை எடுத்துச் சொல்லி, திருக்குறள் அச்சடிக்க ஏற்பாடு செய்தேன். அதே போல் கெட்டியான அட்டைத் துண்டுகள் வாங்கி, ஒரே அளவில் தயாரித்துக் கொண்டேன். அண்ணா மாநாட்டுப் பந்தலைப் பார்க்க வருவதற்குள் எல்லாக் கம்பங்களிலும் வள்ளுவர் இருக்க வேண்டுமே!
நான் ஒருவனாகவே அந்தப் பணியை மேற்கொண்டேன். “என்னா பிள்ளை! எல்லாம் புதுசா சவுக்குத் தோப்பிலேயே போயி, பச்சையா வெட்டின கம்பு. ஈரமாவே இருக்கு. ஆணி அடிச்சா கஷ்டமில்லாமெ எறங்கும். செய்ங்க!” என்றார் பெத்தண்ணன். ஒரு பெட்டி நிறைய இரண்டங்குல ஆணிகள். பந்து பந்தாய்ச் சணல் கயிறு. ஒரு சுத்தியல். ஒரு கத்தி. ஒரு முக்காலி மொத்தம் 600 கால்கள் நடப்பட்டிருந்ததாகக் கணக்கிட் டேன். தொடங்கினேன் இரவு 8 மணிக்கு. பத்து அல்லது பன்னிரண்டு மணிக்குள் எல்லாத் தூண்களிலும் ஆணி யடித்து மாட்டி விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டேன்; சீக்கிரம் துரங்கப் போகலாம் என!
ஒவ்வோரிடமாக நகர்ந்து, ஏறி, இறங்கி, அடித்துக் கட்டி, மாட்டித் தொங்கவிட்டு...... நள்ளிரவு நேரம் ஆன பொழுது, செய்த வேலையைவிட, எஞ்சியுள்ளதே அதிகமா யிருந்தது! கலைஞர் என்னைத் தேடிக் கொண்டு பந்தலுக்கே வந்துவிட்டார். என்ன சார்? நாங்களெல்லாம் நீலவிலாஸ் பங்களாவிலே சண்முக வடிவேல் கூடத் தங்கப் போறோம். நீங்க வல்லியா துரங்க? அய்யய்யோ. என்ன சார் இது? கண்ணு ரெண்டும் ஒரேயடியாகச் சிவந்து கிடக்குது. விடிஞ்சா கூட இந்த வேலையெ உங்களாலெ முடிக்க முடியாது. அதுக்குள்ள ஜுரத்திலெ விழப் போறீங்க. சொல்லிட்டேன்! என்று எச்சரிக்கை விடுத்தவாறே அவரும் போய்விட்டார்.
மனத்தில் மீண்டும் ஓர் உறுதியும் உத்வேகமும் பிறந்தன. டீ, வெற்றிலை பாக்கு, சிகரெட் உதவியால் சுறுசுறுப்பை ஏற்றிக் கொண்டு, விரைவாகச் செயல்பட்டுப் பணியை நிறைவேற்றினேன். பொழுதும் புலர்ந்தது. போய்ப் படுத்து விட்டேன். மாநாட்டில் எனக்கென்ன வேலை?
தி.மு.க. ஆட்சி ஏற்பட்டபோது, கலைஞர் போக்கு வரத்து அமைச்சராக இருந்தாரல்லவா? அன்று சென்னை மாநகரில் ஒடிக் கொண்டிருந்த (பல்லவன் அப்போதில்லை) பேருந்துகளில் திருக்குறளை எழுதிவைக்க வேண்டும் எனத் தீர்மானித்த கலைஞர், என்னிடம் 200 திருக்குறள் தேர்ந் தெடுக்கும் பணியை ஒப்படைத்தார். நான் எழுதித் தந்தேன். அப்போது இயக்குநராயிருந்த திரு. டி. வி. வெங்கட்ராமன் அய். ஏ. எஸ். அவற்றை ஒரு நூலாக அச்சியற்றினார். பேருந்துக்கு ஒவ்வொன்றாகத் திருக்குறளை எழுதச் செய்தார்.
அண்ணா முதல்வரானதும், திரு. வேணுகோபால் சர்மாவை அவரிடம் அறிமுகப்படுத்தினோம். அவர் தீட்டிய திருவள்ளுவர் ஒவியத்துக்கு அரசு அங்கீகாரம் வழங்கிடச் செய்தோம். பேருந்துகளில் அந்தப் படமும் வைக்கப்பட்டது. இதில் கூட என் பங்கு இருந்திருக்கிறது. எப்படியென்றால், புகழ் செறிந்த இந்தத் திருவள்ளுவர் உருவத்தை, மாயவரத்தில் சில மாதங்கள் தங்கியிருந்த போதுதான் வரைந்தார் வேணுகோபால் சர்மா. எனக்கும் நண்பராகையால், அடிக்கடி அழைத்துக் காண்பித்துக் கருத்து அறிவார் அங்கேயே. பிற்காலத்தில் என்னிடம் மிக்க அன்போடும் நன்றியோடும் பழகினார் சர்மா.
அண்ணாவுக்குத் திருக்குறளில் இருந்த ஈடுபாட்டை நன்குணர்ந்த கலைஞர், கடற்கரைச் சாலையில் திருவள்ளுவர் சிலை அமைத்தார். உலகிலேயே ஈடும் எடுப்புமில்லாத நினைவுச் சின்னமாகச் சாதனை படைத்த குறுகிய கால அளவில், வள்ளுவர் கோட்டத்தைச் சமைத்தார். ஆசியாவிலேயே பெரியதொரு அரங்கம் இங்குதானே உள்ளது! தேருக்குள் திருவள்ளுவர் உருவம்! இந்தப் பணி நிறைவெய்தியபோது, இதன் உள்ளே செல்லும் உரிமையைக் கலைஞருக்கு அளிக்கவில்லை மத்திய அரசு. அதனால், இந்த வள்ளுவர் கோட்டம் நிறுவிடப் பெரும்பணியாற்றிய நானும், இதற்குள் இதுவரை நுழைந்திடவில்லை! எனினும், அண்ணன் வாழ்ந்த நுங்கம்பாக்கத்திலேயே வள்ளுவரும் வாழ்கிறாரே-என்ன பொருத்தம்!
மாணாக்கரின் பேரெழுச்சி
எங்களுடைய திராவிட மாணவர் கழகத்தைக் கும்பகோணத்தில் 1.12.1943 அன்று அண்ணா துவக்கி வைத்தார். 5.12.43 “திராவிட நாடு” இதழில் ‘திராவிடர் கழகம்’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதினார். நீதிக் கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றி யமைக்க வேண்டுமென அண்ணா அப்போதே முனைந்து விட்டார். திராவிட மாணவர் கழகத்தைத் துவக்கியதுடன் நாங்கள் சும்மா இருந்துவிடவில்லை. மாநில முழுதும் உள்ள நமது கொள்கைப் பற்று உடைய மாணவர்களைத் திரட்டிக் காண்பிக்க வேண்டும் என எண்ணினோம். முதலிலேயே பெரியாரை அழைத்து, நிகழ்ச்சி ஏதும் நடத்தினால், மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதாகப் புரளி செய்வார்கள் என்ற அச்சத்தை, அய்யாவிடமே தெரிவித்தோம். அதனால், பெரியார் இல்லாமல், முதலாவது மாணவர் மாநாடு கூட்டினோம்.
இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது. இரண்டு நாள் இரவும் பகலும்-அதாவது 1943 பிப்ரவரி 19, 20 குடந்தை வாணி விலாஸ் தியேட்டரில் மாநாடு. தவமணி இராசனும் நானும் அலைந்து திரிந்து வசூலித்த 200 ரூபாய்தான் செலவு. இரண்டு நாளும் மைக்செட் வைத்தவருக்கு ரூ. 12/- தந்தோம்.
அண்ணா மூன்று நாள் எங்களோடு தங்கியிருந்தார். பெரிய திருவிழா போல் கூட்டம். இடைவிடாத சொற் பொழிவுகள். புதுக்கோட்டை திவானாக அப்போது இருந்த கான்பகதூர் பி. கலிபுல்லா அவர்கள், ரயிலில் தனி சலூனில் வந்து, ஸ்டேஷனிலிருந்து ஒரு மிகப் பெரிய காரில் வந்து இறங்கியதைக் கண்டதும் எங்களுக்குப் பூரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று. அண்ணா எங்களை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் கை குலுக்கி மகிழ்வு தெரிவித்தார், அரியதோர் உரை நிகழ்த்தினார். தாருல் இஸ்லாம் ஆசிரியர் பா. தாவுத்ஷா பி.ஏ., பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் முத்தையா, கு. மு. அண்ணல் தங்கோ, நடிகமணி டி. வி. நாராயணசாமி, நாவலர் பாரதியாரின் மகன் லட்சுமிரதன் பாரதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கோ. சி. பெரியசாமிப் புலவர், வி. அ. அரங்கசாமிப் புலவர், புலவர் நா. மு. மாணிக்கம் ஆகிய தமிழாசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களா யிருந்த டார்ப்பிடோ சனார்த்தனம் பி.ஏ., இரா. நெடுஞ் செழியன், க. அன்பழகன், கே. ஏ. மதியழகன் இவர்களைத் தவிர அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து இரெ. இளம் வழுதி, இரா. செழியன், பூ, கணேசன், மா. நன்னன், கி. தியாகராசன், த. மா. திருநாவுக்கரசு, திருவையாறு புலவர் கல்லூரி குழந்தையா, முருகையன் ஆகியோர் கலந்து கொண்டனர் சிறப்பாக.
அண்ணா முதல் நாளும் மாணவர் நெடுஞ்செழியன் இரண்டாம் நாளும் தலைமை ஏற்றனர். இரண்டு நாட்களி லும் அண்ணா விளக்கவுரை நிகழ்த்தியபோது, எல்லா மாணவர்களும் குறிப்பெடுத்துக் கொண்டனர். ஆரியர் யார், திராவிடர் யார், திராவிட நாடு ஏன்-என்பன போன்ற தெளிவுரைகள் வழங்கினார் அண்ணா.
பெரியார் எங்கள் மாநாட்டுக்கு அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியைப் படிக்க என்னால் முடியவில்லை. அப்போது பெரியாரின் எழுத்து (Handwriting) எனக்குப் பழகவில்லை. அதனால் க. அன்பழகனிடம் தந்து படிக்கச் சொன்னேன், அவரும் படித்தார்!
“அன்புள்ள தவமணிராசன் அவர்களுக்கு ஈ. வெ. ரா. வணக்கம்.
தங்கள் 16-ந் தேதி கடிதமும் அழைப்பும் இன்று கிடைத்தது. மிகுதியும் நன்றி செலுத்துகிறேன்.
தாங்கள் கூட்டியிருக்கும் மாநாடு, திராவிட மாணவர் கழகம் மிகவும் அவசியமானது என்பதுடன் திராவிட நாடு முழுவதும் இம்மாதிரி கழகங்களும் மாநாடுகளும் ஏற்படும்படி செய்ய வேண்டியது உங்கள் போன்றோரின் கடமை யாகும் என்பதை மிகவும் பரிவோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன். சமீபத்தில் வரப்போகும் ஏப்ரல் வீவு நாட்களில் சில மாணவர்கள் ஒன்று சேர்ந்து திராவிட நாடு முழுவதும் சுற்றிக் கழகத்தின் இலட்சியத்தைப் பரப்பிப் பிரச்சாரம் செய்ய வேண்டியதும் முக்கிய கடமையாகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
புதிய திராவிட நாட்டை ஆக்கவும், ஆக்க வேலை செய்யவும், திராவிடர்களுக்கு இன்று மாணவர்கள்தான் இருக்கின்றார்கள். மாணவர் களால் ஆனால் ஆனதுதான். இல்லாவிட்டால் நம்ப இடமில்லை. பெரியவர்களுக்கு வேறு பல பற்றுகள் கவர்ந்து கொண்டதால், ஒழிவில்லாமல் போய்விட்டது.
மாநாடு வெற்றியுடன் நடைபெற்று, வீரத்துடன் தொண்டாற்றப் பயன்படுமாக.
தங்கள் அன்புள்ள,
ஈ. வெ. ராமசாமி
இந்தக் கடிதத்தை அண்ணா எடுத்துச் சென்று, 3-3-44 “திராவிட நாடு” இதழில் வெளியிட்டார். மேலும், அங்கு சொற்பொழிவாற்றிய மாணவர்களின் உரைகளை, அவர் களையே எழுதித் தரச்சொல்வி, அவற்றையும் ‘திராவிட நாடு’ இதழில் வெளியிட்டார், தொடர்ச்சியாகச் சில வாரங்கள்.
இந்த மாநாட்டை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கும் போதே, எங்கள் கல்லூரி நிர்வாகம் எங்களை மிரட்டத் தொடங்கி விட்டது. Students should not take active part in party or communal politics என்று, சென்னை கல்விச் சட்டம் ஒன்றைக் காண்பித்து, அதில் எங்களிடம் கையெழுத்து வாங்க, எங்கள் Vice principal மார்க்க சகாயம் செட்டியாரே நேரில் வந்தார். அண்ணாவிடம் யோசனை கேட்டேன். “மாநாடு முடிந்த பிற்பாடு கையெழுத்துப் போடுவதாகச் சொல்லிவிடு!” என்றார் அண்ணா.
இந்த மாநாட்டின் வெற்றி பெரிதும் பெரியாரைக் கவர்ந்துவிட்டது. அடுத்த வாரம் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் நான் அய்யாவைச் சந்தித்தபோது மகிழ்வுடன் பேசி, “கஜேத்திரனை எல்லா ஊருக்கும் அனுப்பறேன். காலேஜ் மாணவர்கள் எத்தனை பேர் முடிந்தாலும் ஈரோட்டுக்கு வாருங்கள்” என்றார். பெரியாரையும் பின்னர் எங்கள் கல்லூரிக்கே அழைத்து 1.4.44 அன்று சொற்பெருக்காற்றிடச் செய்தோம்.
புராணப் பிரசங்கம் செய்யத் தொடங்கியிருந்த கிருபானந்த வாரியார், தமது கதாகாலட்சேபத்தின் ஊடே ‘இங்கே பெரியார், என்று ஒரு நச்சு ஆறு ஒடுகிறது. அதை ஒடவிடக் கூடாது’ என்பதாகப் பேசினாராம். இவரை இம்மாதிரிப் பேசவிடக் கூடாது என்று முதன்முதலாகக் குடந்தை மாணவர்கள் முடிவு செய்தோம்!
“வாரியாரே விளக்குமின்” என்ற தலைப்பில் 16 கேள்விகளை நான் எழுதி அச்சிட்டேன். கும்பேசுவரன் கோயிலுக்குள் ஏராளமான தொண்டர்களுடன் சென்று, கேள்வித் தாளை வாரியாரிடம் தந்து, பதில் சொல்லிவிட்டுப் பிறகு பேசுமாறு சொன்னோம், மறுத்தார். அவ்வளவுதான்! பெரிய குழப்பம்!! வாரியார் போன இடம் தெரியவில்லை! முன்னும் பின்னும் பாதுகாப்புடன் வெளியேறி விட்டார்! பிரசங்கம் செய்யவில்லை!
அண்ணாவிடம் எங்கள் பிரதாபத்தைச் சொல்லி, அந்தக் கேள்வித்தாளையும் கொடுத்தேன். “நன்றாகவே எழுதியிருக்கிறாய். இதற்கு எந்த ஆத்திகனாலும் ஒழுங்காகப் பதில் சொல்ல முடியாதுதான்!” என்று பாராட்டியதோடு, அதை அப்படியே “திராவிடநாடு” ஏட்டிலும் பிரசுரித்தார் அண்ணா.
மாணவர் எழுச்சிக்கு மூல காரணகர்த்தாவும் உற்ற துணைவரும் அண்ணா தானே!
அனுமதி வழங்கப்பட்டது, வா!
திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் அறிஞர் அண்ணா அவர்களுக்குக் கருணானந்தம் எழுதிக் கொண்ட விண்ணப்பம். நாளை ஈரோட்டில் நடைபெற இருக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் நானும் ஒரு பார்வை யாளராக உள்ளே அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கவனிக்க எனக்கு அனுமதி அளிக்க வேண்டுகிறேன். என்னுடன் மாயவரம் சின்னய்யா மகன் காந்தியும் வருவார். தங்கள் அன்புள்ள S. கருணானந்தம் (முகாம் திருச்சி). பெறுநர் அறிஞர் அண்ணா அவர்கள், தி.மு.க. பொதுச் செயலாளர், மே|பா தோழர் E.V.K. சம்பத், பழைய ரயில்வே ஸ்டேஷன், ஈரோடு-இவ்வகையிலான ஒரு Inlaind letter எழுதித் திருச்சியில் RMS வண்டியில் தபாலில் சேர்த்தேன். அது அடுத்தநாள் காலையில் ஈரோடு சேர்ந்துவிடும்.
நானும் காந்தியும் திருச்சியில் இருக்கிறோம். இன்றிரவு இங்கென்ன அலுவல் எங்களுக்கு? நண்பர் எம். எஸ். மணி பங்கேற்கும் “அரும்பு” என்ற நாடகம் தேவர் ஹாலில் நடைபெற இருக்கிறது; மு கருணாநிதி தலைமையில்; நடிகர் எம். ஜி. ராம்சந்தர் முன்னிலையில்-என்று விளம்பரங்கள் செய்யப் பெற்றுள்ளன. இதைப் பார்த்துவிட்டுக், கலைஞருடன் சேர்ந்து ஈரோடு செல்வதெனத் திட்டம் தீட்டித் திருச்சிக்கு வந்திருக்கிறோம்.
அண்ணா அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கியவுடனே, கோவை மாவட்டத்தில் பெரியதொரு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்கள். அத்தருணத் தில் நான் ஒருநாள் ஈரோடு சென்றிருந்தன். சம்பத்து வீட்டுக்கு அண்ணா அவர்கள் வந்தபோது, காலை மலரும் வேளை. உடன் நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமியும், பெத்தாம்பாளையம் பழனிச்சாமியும் இருந்தனர். “இந்த நேரத்தில் எப்படி அண்ணா வந்தீங்க?” என்றேன் வியப்புடன். “நீ என்னய்யா நெனச்சே என்னை! தேர்தல் கூட்டம் மாதிரி விடிய விடியப் பொதுக்கூட்டம் நடக்குது இப்போ. சலிக்காமெ பேசிக்கிட்டுவர்றோம்” என்று சொல்லி, அணிந்திருந்த சில்க் சட்டையைக் கழற்றினார். “எப்போ அண்ணா சில்க்சட்டை போட ஆரம்பிச்சிங்க?“ என்றதற்கு “அட, நீ ஒண்ணு. நம்ம ராமசாமி யோட சட்டை. பயங்கர டூர்லே என் சட்டையெல்லாம் அழுக்காப் போச்சு. இங்கதான் துவைக்கணும்!” என்றார்.
“பாத்திங்களாண்ணா! எங்கே சுத்தினாலும், அழுக்கைப் போக்க ஈரோட்டுக்குத்தான் வந்தாகனும் நீங்க! ஆமா ; இவ்வளவு சுறுசுறுப்பை இப்ப காட்டுற நீங்க, இதிலே பத்திலே ஒரு பங்கைப் போன வருஷம் காட்டியிருந் தீங்களானா, அய்யா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார். பிரிஞ்சி போற நெலமையும் வந்திருக்காதே!” என்னும் போது என் கண்கள் கலங்கி, நீர் முத்துகள் தோன்றின.
“அது கிடக்கட்டும்! அய்யாவைப் பார்த்தியா! என்ன சொன்னார்?”
“பாத்தேண்ணா! ஆனா, ஒங்களைப்பத்தி அவர்கிட்டே சொல்றதில்லே நான்...... ?“
பழைய நினைவுகளில் முழ்கியவனாய், 2, 3 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றவன், “அரும்பு” நாடக இறுதியில் கலைஞர் மேடைக்குப் போனதும், சுயபிரக்ஞை பெற்றேன். என்னுடைய நெருங்கிய நண்பர் எம். ஜி. ஆர். புரட்சி நடிகர். மேலே கதராடை அணிந்திருக்கிறாரே தவிர, அவர் உள்ளம் கருப்புச் சட்டை தான் அணிந்திருக்கிறது. கோவையில் பல மாதங்கள் ஒன்றாகத் தங்கி, உண்டு, உறங்கி, குதிரை வண்டியில் சென்று, சென்ட்ரல் ஸ்டுடியோ வில் எங்கள் பொழுதைச் செலவிட்டிருக்கிறோம். தேசிய உணர்வு படைத்த அவர், எனது திராவிடக் கொள்கைகளை அப்போது ஏற்றுக்கொள்ளா விட்டாலும், பெருந்தன்மையுடன் கேட்டுக் கொள்ளுவார். அதன் பயனாக அவர் இப்போது நம்முடன் நெருங்கி வந்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் அவர் தீவிரமாக இணையும் நாள் அதிக தூரத்தில் இல்லை. அந்த நாள் எனக்கு ஒரு வெற்றித் திருநாள் ஆகும்!” என்ற போக்கில் தலைமையுரை அமைந்தது. இரண்டு ஆண்டுகளில் அவர் கழகத்தில் சேரும் மனப்பக்குவம் பெற்றவராய், 1953-ல் லால்குடியில் அன்பில் ஏற்பாட்டில் நடைபெற்ற திருச்சி மாவட்ட இரண்டாவது தி.மு.க. மாநாட்டில் பங்கேற்றார். அப்பொழுது சிதம்பரத்தில் வில்லாளன் ஏற்பாட்டில் நடந்த தென்னார்க்காடு மாவட்ட இரண்டாவது தி.மு.க. மாநாட்டில் கண்காட்சியைத் திறந்து வைத்தார் எம்.ஜி.ஆர் அவர்கள்.
திருச்சியிலிருந்து பின்னிரவில் புறப்பட்ட ரயிலில் ஏறி ஈரோடு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். திரைப்படங்களில் பார்த்த எம். ஜி. ராம்சந்தர் என்ற நடிகரை எண்ணிப் பார்க்கிறேன். எங்களுக்கெல்லாம் தெரியும் காலகட்டத்தில், நமது இயக்க மேடைகளில் முதன்முதல் ஏறிய நடிகர், நமது நடிகமணி டி. வி. நாராயணசாமி. அவர் அப்போது சில பாடல்களும் பாடுவதுண்டு. அண்ணா “சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்” என்ற ஒரு வரலாற்று நாடகத்தை எழுதியபோது, அதற்கு முன்பே “சந்திரோதயம்” எனும் சமூக நாடகத்தை அண்ணா தமிழகத்தில் ஒரு சுற்று நடத்திவிட்டார். சிவாஜி ஆரிய சூழ்ச்சிக்கு அடிபணிந்தானாயினும், அவன் மனச் சாட்சி அவனை எப்படி இடித்துக் காண்பித்திருக்கும் என்ற எண்ணத்துக்கு ஒர் உருவமாய் அண்ணா, சந்திரமோகன் பாத்திரம் படைத்தார்கள் கற்பனையாக உணர்ச்சிப் பிழம்பான அவ்வேடத்திற்கு,அன்றே பொருத்தமானவராக D. W. N, விளங்கினார். சிவாஜி பாத்திரத்துக்கு நடிகர் தேர்வு நடந்த சமயத்தில், எம். ஜி. ஆர். பொருத்தமா யிருப்பாரென அவரை D. V .N. அணுகியபோது M. G. R, இயலாமை தெரிவித்து விட்டதாக, D. W. N. என்னிடமே சொன்னது உண்டு. அதன் பிறகே அண்ணா அதுவரை பெண்வேடமிட்டுவந்த ஒருவரை சிவாஜி பாத்திரத்துக்குத் தேர்ந்தெடுத்துத் தயாரித்தார் - அவர் பெயரே சிவாஜி கணேசனாய் மாறிச் சரித்திரம் படைத்தது தமிழகத்தில் -ஏன்? உலகத்தில்-என்பது கண்கூடான உண்மை யன்றோ!......
ஈரோட்டில் இறங்கிச் சம்பத்து வீடு சென்றோம். அருகிலேயே பந்தலிட்டு, நாற்புறமும் அடைப்பு. அங்குதான் பொதுக்குழு. 1951-ல் அது போதுமானதாயிருந்தது. சம்பத்து வீட்டில் ஏராளமான கோழிகள் உயிரை விட்டுக் கொண்டிருந்தன. பின்னால் பிரியாணி தேக்சாக்கள். ஈ. வெ. கி. செல்வனுடன் சேர்ந்து நான் அவற்றைப் பார்த்துக் கொண்டே நின்றபோது, “யாருய்யா லெட்டர் போட்டுப் பர்மிஷன் கேட்டது. பர்மிஷன் கிராண்டட் (Permission granted.) வா உள்ளே! ஏன்யா; நீ கூட இங்கே அனுமதி கேட்டுதான் வரணுமா?” என்றார் அண்ணா; கையில் என் கடிதம் இருந்ததைப் பார்த்தேன்.
“இல்லையண்ணா! இதுதான் நேர்மையான முறை, காரணம், நான் அரசு ஊழியன், தி. மு. க. உறுப்பினர் இல்லை. மேலும், அய்யாவிடம் இன்னும் தொடர்பு வைத் திருப்பவன். அய்யாவின் ஒற்றனாயிருப்பேனோ என்று, என்னைச் சரியாகப் புரியாதவர் யாராவது இங்கு நெனைக் கலாமில்லையா?“ என்றேன்.
சிறிது நேரம்தான் பொதுக் குழு நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குள் கோழி பிரியாணி வாசனை மூக்கில் அவஸ்தை உண்டாக்கவே, அண்ணாவிடம் சாடை செய்துவிட்டு, வெளியே போய்விட்டேன். பொதுக் குழுவில் நடந்த மீதிச்செய்திகளை நமது என். வி. நடராசனிடம் கேட்டால் சொல்லி விடுவார் என் காதோடு!
குற்றாலம் கண்டேனா?
"குற்றாலத்தைப் பற்றி ஒரு கவிதை எழுதிக் கொடு. பத்திரிக்கையில் வெளியிடவேணும்” என்று அண்ணா என்னிடம் கேட்டார்கள். “குற்றாலத்துக்கும் நமக்கும் என்ன தொடர்பு? அப்படியே இருந்தாலும், இப்பொழுது அதை நமது இதழில் பிரசுரிக்க வேண்டிய கட்டாயத் தேவை என்ன?” என்று கேட்க நினைத்தேன். ஆனால், கேட்கச் சந்தர்ப்பம் அனுகூலமாயில்லை. “சரியண்ணா! எழுதித் தருகிறேன்” எனக் கூறிவிட்டு, ஊருக்குத் திரும்பினேன்.
அண்ணா கொடுத்த இந்தத் தலைப்பு என்னை மிகவும் சோதனைக்குள்ளாக்கி விட்டது! காரணம், குற்றாலத்தைப் பற்றிய அனுபவம் எனக்குக் கிடையாது! ஒரு முறை கலைஞ ரோடு சென்று,ஓர் இரவு அங்கே தங்க நேர்ந்தது. அப்போது கூட விடுதியின் குளியலறையில், வெந்நீரில் குளித்தேன்; அருவிக்குச் செல்லவில்லை.
அண்ணா சொன்னதனால், குற்றாலத்துக்கு நேரில் சென்று, பார்த்து வந்து எழுதலாம். ஆனால், இது ஒரு கவிஞனுடைய கற்பனைத் திறனுக்கு இழுக்கு அல்லவா? நீள யோசித்தேன்!
மாயூரத்தில் என்னுடைய அலுவலக நண்பன் நாக ராசனிடம் விசாரித்தால் என்ன? அவர் குற்றாலம் அருகில் உள்ள தென்காசி ஆர். எம்.எஸ். அலுவலகத்தில் வேலை பார்த்திருக்கிறார். இந்த இடத்தில் அலுவலில் இருந்த போதுதான், அகிலன் ‘பாவை விளக்கு’ நாவல் எழுதியதாகக் கேள்விப்பட்டிருந்தேன். நாசராசன் சொன்ன செய்திகளின் அடிப்படையில் எழுதத் தொடங்கினேன்.
மாயூரத்திலிருந்து சென்னைக்குப் பத்து மணி நேரம் நான் வேலை செய்யும் ரயிலின் ரன்னிங் டைம்! சாவகாச மாகச் சிந்தித்து, ஒடும்போது பென்சிலால் எழுதிக் கொண்டே வந்து, எக்மோரில் இறங்கியதும் பேனாவால் காப்பி செய்துவிடுவது வழக்கம். இந்தக் குற்றாலம் கண்டேன்’ என்ற செய்யுளையும் அவ்வாறே எழுதினேன். காணாததைக் கண்டதாகப் பொய் சொன்னாலும், பொருத்தமாகவே இருக்கிறதைப் பார்க்க முடியும்:–
தனிநடந்தேன் நீண்டவழி; தள்ளாடிச் சோர்ந்தேன்!
இனி நடக்க அஞ்சி, இருகால்கள் கெஞ்சுகையில்...
சிந்தை குளிப்பாட்டும் சில்லென்ற மென்தென்றல்
வந்தென் உடல்வருடி வாட்டத்தை ஒட்டிடவே;-
நேர்கிமிர்ந்து பார்த்தேன், கிகரில்லா ஒவியந்தான்!
யார் வரவை நோக்கும் இளமங்கை என் எதிரில்?
மார்பகத்தை மூடுகின்ற வண்ணத் துகில்தானோ
கூர்முகட்டைப் போர்த்திக் குவியும் முகிற்கூட்டம்!
வெண்சங்கு போல மிளிரும் கழுத்தினின்று
கண்கவரும் நெஞ்சுக் கணவாயின் மீதொளிரும்
தென்பாண்டி நன்முத்தைச் சேர்த்த சரக்தானோ
முன்பாக வீழ்ந்து முறுவலிக்குங் தேனருவி!
குற்றாலத்திலேயே நீண்ட காலம் குடியிருந்தவன் எழுதியது போலவே தோன்றுகிறதல்லவா? இடையில் சில வரிகளுக்கு அப்பால் தொடர்கிறேன்:–
விந்தைமிக ஆல விழுதிறங்கும் பான்மையோ,
முந்திக் கவிழ்ந்திட்ட முன்கை விரலைந்தோ,
பண்டைத் திராவிடத்தாய்ப் பாலில் கிளைத் தெழுந்த
வண்டமிழும் கன்னடமும் வாழ்தெலுங்கும் மேன்மை
குன்றா மலையாளம் கொஞ்சும் துளுவும் போல
ஒன்றிற் சுரந்தும் உருவிற் பலவாகி,
ஆடிச் சலசலக்கும் அய்ந்தருவிக் காட்சிதான்
தேடிக் களிக்கும் தெவிட்டாச் சுவையன்றோ?
குற்றால அருவியிலும் கொள்கை மணம் வீசுகிறதா? பிறகு சிலவரிகள்; இறுதியாக முடிக்கும்போது
ஒருமைப்பா டென்னும் பெருமை முலாம்பூசி,
வெள்ளியினாற் செய்த வெகுநீளச் சங்கிலியால்
அள்ளியிந்தத் தென்னாட்டை ஆரப் பிணைத்தது போல்...
ஓங்குமலை மீதிருந்து ஓடி வரும் வெள்ளருவி
நீங்கா கினைவொன்றை செஞ்சில் நிறுத்தியதே!
நீங்களங்கு செல்லும் நிலைமை நேர்ந்திட்டால்...
தாங்கிடுவீர் என்கருத்தைச் சார்ந்து!
என்று எழுதினேன். இவ்வளவு கற்பனை ஊற்றும் அருவியாய்ப் பொழிய, நான் சிரமப்பட்டு எழுதி எடுத்துக் கொண்டு போய் அண்ணாவிடம் கொடுத்தபின்னர் “ஏன் அண்ணா! குற்றாலம் பற்றி இப்போது எழுத வேண்டிய அவசியம் என்ன?” என்று ஆவல் மீதுறக் கேட்டேன். அண்ணா சொல்லிய பதில் என் ஆர்வக்கோட்டையைத் தரைமட்டமாகத் தகர்த்து எறிந்தது. என்ன? “ஒண்ணுமில்லேய்யா! குற்றாலம் அய்ந்தருவியோட (Block) பிளாக் ஒண்னு சும்மா கிடைச்சுது. அதை உபயோகப்படுத்தலாமேண்ணுதான் சும்மா ஒன்னைக் கவிதை எழுதச் சொன்னேன்” என்றார் அண்ணா சிரிப்புக்கு இடையே, “இது நல்லா இருக்கு அண்ணா! குதிரைச் சவுக்கு சும்மா கிடைச்சதுண்ணு ஒருத்தன் குதிரை வாங்கிய கதைபோல” எனச்சொல்லி, நானும் ஒர் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தேன்.
எப்படி அண்ணாவின் சிக்கனம்! கவிஞர் கண்ணதாசன், “அண்ணா (Border) பார்டர்” என்று கேலி செய்வார். அது என்னவெனில், அண்ணா, பத்திரிக்கையில் தாம் வெளியிடும் கட்டுரைத் தலைப்புகளுக்குத், தனியே பிளாக் செய்யமாட்டார். பார்டர்களை அழகாக அடுக்கி, இடையில் தலைப்புக்கான எழுத்துகளை (Compose) அச்சுக்கோத்துப் போடச் சொல்லிவிடுவார். இவை யாவும் பெரியாரின் எளிய வழிமுறைகளாகும்.
மாயூரம் மாநாடு மறக்கவொண்ணாதது!
“ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது” என்று ஒரு பழமொழி மாயவரம் நகரில் மட்டும் வழங்கி வந்தது. இதைப் பழமொழி என்று சொல்வதைவிடப் புதுமொழி என்றே சொல்வது பொருந்தும். ஏனெனில் நீண்ட நாள் இந்தவூர் மாயவரம் என்றே அழைக்கப்பட்டது. அண்ணா என்னைப் பார்க்கும்போது “ஏன்யா, அது என்ன பெயர் மாயவரம் என்று? மாயமான வரமா அல்லது மாயவரமா” (மாய்வதற்கு வரமா?) என்று கேட்பதுண்டு. “இல்லை யண்ணா, மயிலாடுதுறை என்ற அழகான தமிழ்ச் சொல்லை, மயூரம் என்று பார்ப்பனர்கள் வடமொழிக்கு மாற்றி, இந்தவூர் சிவன் பெயரையும் மயூரநாதர் எனச் சூட்டிவிட்டனர். வேதாரண்யம் எப்படி வந்தது ஆரியர் சூழ்ச்சியால்? காடுகளில் வாழ்ந்தபோது பாடிய வேதங் களுக்கும் நம் தமிழகத்துக் காடுகட்கும் என்ன தொடர்பு? இதைச் சிந்திக்காமல், நம்மவர்களிலேயே சிலர் அதைத் தமிழ்ப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, திருமறைக்காடு என்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? அங்குள்ள காடுகளில் இன்றும் மான்களும் மட்டக் குதிரைகளும் நிரம்ப உள்ளன. மரை என்றால் மான், மட்டக் குதிரை . இவற்றைத்தான் குறிக்கும். மரைக்காடு என்ற நியாயமான பெயரை எப்படி யெல்லாம் மாற்றி விட்டார்கள்!
காவிரிக் கரையையொட்டி ஆடுதுறை, திருஆடுதுறை உள்ளதுபோல மயில் ஆடுதுறை இருந்தது. இதற்காகப் போராடிப் போராடிச் சட்டமன்ற உறுப்பினர் கிட்டப்பா
முளைக் கீரையில் பூண்டு சேர்த்துக் கடைவது வெண்ணெய்போல இருக்கும் என்று சொல் வார்களே அது -சீரக ரசம் மணத்துடன் தெளிவாகத் தோன்றும். ஆனால் சுவை மிகுதி. தண்ணிர் போலவே அண்ணா சூடாக அதைத் தம்ளரில் ஊற்றச் சொல்லிக் குடிப்பார்கள். சுண்டைக்காய் வற்றல், மணித்தக் காளி வற்றல் சேர்த்து, பூண்டு ஏராளமாய்ப் போட்டு, நிறைய மிளகு அரைத்து ஊற்றிக் காரமான ஒரு வற்றல் குழம்பு வைப்பதில் என் துணைவியார் ஸ்பெஷலிஸ்ட். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ஆர். ஒருமுறை இதை ஒரு டப்பாவில் கேட்டு வாங்கிச் சென்று, 2, 3 நாள் வைத்திருந்து சாப்பிட்டார்.
அதேபோல அண்ணா, பொன்னுவேலுவை வலுக் கட்டாயமாக அழைத்து வந்து, எங்கள் வீட்டில் சைவ உணவு சாப்பிட வைத்தார்கள். மிகவும் (Relaxed) ரிலாக்ஸ் டாக, வெறும் பனியன் அணிந்து, திண்ணையில் உட்கார்ந்து, நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள் அண்ணா. கேட்டு மகிழ்ந்தோம் யாவரும்!
தலைப்பு, முந்தியநாள் இரவு பொதுக் கூட்டம் முடித்துவிட்டு, மாயூரத்தில் ஒரு திரைப்படம் பார்த்தது பற்றி. படம் (பேர் நினைவில்லை) பார்க்கும்போதே அண்ணா குறிப்பிட்டார்கள் கவலையுடன். அந்தப் படத்தில் முக்கிய நடிகர்கள் இரண்டு பேரும் பார்ப்பனர். “இவுங்களெப் பார்த்தியா அய்யா. ஹீரோவா நடிக்கிறாங்களே. ஒரு ஆளுக்குக் கண்ணு இருக்கிற இடமே தெரியலே. இன்னொரு ஆள் மூக்கால பேசுறான். ஆனா ரெண்டுபேரும் பேசறது அசல் அக்ரஹாரப் பேச்சு. போட்டுள்ளது நாட்டுப்புற இளைஞர் வேடம். இதையெல் லாம் ஜனங்க ஏத்துக்கிறாங்க. ஆனா ஜனங்க மேல தப்பில்லே. கிடெச்ச எடத்தை நம்ம ஆளுங்க கோட்டை விட்டுட்டாங்களே!” என்றார் அண்ணா என்னிடம் தியேட்டரிலேயே. வளைவுகள் வாசகங்கள் விளம்பரங்கள் செய்திருந்தேன். டெல்லியில் தபால் தந்தி துணைநிலை அமைச்சரான B. பகவதியும், உள்துறை துணையமைச்சரான திருமதி மரகதம் சந்திரசேகரும், அண்ணாவுடன் அளாவளாவி, சொற்பொழிவும் ஆற்றினர். போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் S. R. பாஷ்யமும் பங்கேற்றார் இங்கே!
அப்போது சென்னை மாநில முதல்வர் காமராஜர். அவரை நான் ஒரு முறைதான் சந்தித்துப் பேசியுள்ளேன். இந்த மாநாட்டுக்கு முந்திய மாதம் அவர் மாயூரம் வந்திருந்தபோது,என் தெருவிலுள்ள நகராட்சிப் பயணியர் விடுதியில் சந்தித்து, எமது மாநாட்டுக்கு வருமாறு அழைத் தேன். நிற்க வைத்துத்தான் பேசினார். “ஏதப்பா நேரம்?” என்றார். உங்கள் பெயரைப் போட்டுக் கொள்கிறேன். நேரம் கிடைத்தால் வாருங்கள்! அண்ணா நிச்சயம் கலந்துகொள்வார்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் வரவில்லை!
பொதுக்கூட்டம் மிகமிகப் பிரம்மாண்டமாயிருந்தது; டெல்லி அமைச்சருக்கும், எங்கள் பொதுச் செயலாளருக் கும் புதுமையான அனுபவம். அஞ்சல் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் பொதுச் செயலாளராயிருந்து அறிவின் முத்திரையை இந்தியா முழுவதும் பொறித்துள்ள எங்கள் அண்ணன் A. S. ராஜன் M.A. அங்கு சொற்பொழிவாற்றினார்.
அண்ணாவின் பேருரையில், RMS ஊழியர்கள் ஒடுகின்ற வண்டிகளில் ஆடுகின்ற பெட்டிகளில் ஆடாமல் நின்றபடிக் கண்களை மூடாமல் பணியாற்றும் அவலமான நிலைமைகளைக் கவலையுடன் எடுத்துக் கூறி, பணியின் தரம் உயரவும், அஞ்சற் பிரிப்போரின் துயரம் குறையவும்: RMS Mail Vanகளை ஏர் கண்டிஷன் செய்யவேண்டும் என்று, மத்திய அரசுக்கு, அங்கு வந்துள்ள இரு அமைச்சர்கள் வாயிலாக எடுத்துரைத்து வாதாடினார்கள்,
என்னைப் பொறுத்தவரையில் மாநாட்டின் Climax என நான் எண்ணித் திட்டமிட்டுச் செய்துவந்த ஒன்று, அன்றிரவு மாணவர் விடுதித் திறந்தவெளியில், காவிரி யாற்றின் கரையோரத்தில் நடத்திய நிலாவொளி விருந்து. Moonlight dinner ஆகும். அண்ணாவுடன் நீங்களும் இந்த விருந்தில் கலந்துகொண்டு அருந்தி மகிழ வேண்டும்; எங்களைச் சிறப்பிக்க வேண்டும்! என்று சென்னையி லேயே கலைஞரைக் கேட்டுக் கொண்டேன். அவ்வாறே தஞ்சை மாவட்டச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அன்னார், இறுதியாகக் குத்தாலம் பொதுக்கூட்டத்தில் பேசி முடித்து, விரைந்துவந்து, எங்களைப் பெருமைப் படுத்தினார். வட்ட வடிவத்தில் நாற்காலி மேசைகளை அமைத்து, எங்கள் ஊழியர்களும், சங்கத் தலைவர்களும் ஒருங்கே அமர்ந்து அண்ணாவுடனும் கலைஞருடனும் உரையாடி மகிழ்ந்து களித்தனர் நெடுநேரம்!
இந்த நிலவொளி விருந்து என் நினைவைவிட்டு நீங்காததால் 1973ல் பூம்புகாரில் முதலாவது சித்திரைப் பெருவிழா நிறைவு நிகழ்ச்சியாக ஒரு நிலவொளி விருந்து நடத்தினேன். சித்திரான்னங்களுடன், மீன் குழம்பு மீன்வறுவலும் உண்டு. இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் தேனிசை செவிக்கு விருந்து.
இதுவரையில் எங்கள் மாநிலச் சங்கத்தின் பொறுப்பு களில் சிக்கிக் கொள்ளாமல் ஒதுங்கி மறைந்த என்னைப் பிடிவாதமாக மாநிலச் சங்கத்தின் துணைத்தலைவராக இங்கு தேர்ந்தெடுத்தனர்.
அண்ணாவும் கலைஞரும் மயிலாடுதுறை மாநாட்டினின்று அப்போது விடைபெற்றனர். ஆயினும், மீண்டும் அழைக்கும்போது வருவதாக உறுதியளித்துச் சென்றனர், RMS சார்ட்டர் பெருமக்கள் காலமெல்லாம் இத்தகைய பெருமையினை எண்ணி எண்ணி, இன்னமும் பாராட்டி டிவகையில் மிதக்கின்றனர்.
விமானப் பயணத்தால் விளைந்தது!
“என்ன கருணானந்தம், பம்பாய் போய்வந்தாயாமே, என்னண்டே சொல்லவேயில்லயே?” இவ்வாறு அண்ணா என்னிடம் கேட்கும்படி நேர்ந்ததற்காக உண்மையிலேயே வருந்தினேன். தவற்றுக்கு மன்னிப்புக் கோரும் தன்மையில், “ஆமாண்ணா திடீருண்ணு எனக்கு விமானப் பயணத்துக்கு ஒரு சான்ஸ் கிடைச் சுது. நீங்க அந்தச் சமயம் சென்னையிலே இல்லே. அதனாலெ சொல்லாமப் போயி, படாதபாடு பட்டேன் அண்ணா!” எனத் துயரத்துடன் பதிலுரைத்தேன்.
1976ல் கலைஞர் தலைமையில் முதன் முதலாகச் சென்னையில் அண்ணா கவியரங்கம் ஏற்பாடு செய்தோம். வேலூர் நாராயணன், வக்கீல் நா.கணபதி, ஜி.லட்சுமணன், சீத்தாபதி ஆகியோர் தூண்டுதலில், பிரமாதமாகச் செய் தேன்; நானும் பாடினேன்! இந்த அண்ணா கவியரங்க நிகழ்ச்சிகள் தொடர்ந்தபோது, ஓரளவு வெளியுலகம் அறிந்திருந்த அப்துர்ரகுமான், குருவிக்கரம்பை சண்முகம், தி. கு. நடராசன், முருகுசுந்தரம், வா. மு. சேதுராமன் போன்றோர் மேலும் புகழ் ஈட்டினர். புதியவர்கள் சிலரையும் மேடையேற்றினேன். பின்னாட்களில் முத்துலிங்கம்: வைரமுத்து, இளந்தேவன் போன்ற புதிய கவிஞர்கள், கலைஞரின் அறிமுகவரிகளால் மக்கள் மனத்தில் இடம் பெற்றனர்.
இந்தச் சூழ்நிலையில்தான், ஒருநாள், என் தம்பி பரமசிவம், பம்பாயிலிருந்து வந்திருந்த B. V. ரங்கநாத் என்பவரை அழைத்து வந்தான்; ‘இவர் பாரதியார் சங்கம் அமைத்திருக்கிறார், கவியரங்கம் நடத்த விரும்புகிறார் என்று! கலைஞர் தலைமையில், அமைச்சர் மா. முத்துசாமி, நான், S. D. சுந்தரம், அப்துர் ரகுமான், கம்பனடிப் பொடி சா. கணேசன் ஆகியோர் பங்கேற்பதாக ஏற்பாடு. எனக்குத் தலைப்பு பாரதிதாசன். அமைச்சர்கள் விமானத் தில் செல்ல முடியும். மற்ற கவிஞர்களுக்கு ரயிலில் போக வர வசதியாகச் செலவுக்குப் பணம் கொடுக்க ஒப்புக் கொண்டார்கள். கலைஞர் என்னிடம் “நீங்க இதுவரை பிளேனில் போனதில்லியே! மேற்கொண்டு ஆகிற செலவை நான் போட்டுக் கொள்கிறேன். என்னோடு பிளேனில் வாங்க” என்று அழைக்கவும், அப்போதே பறக்கத் தொடங்கி விட்டேன். எங்களோடு விமானத்தில் டைரக்டர் பஞ்சு, எஸ். எஸ். ஆர். ஆகியோரும் வந்தனர்.
கலைஞருடைய டேப்ரிக்கார்டரை என் தோளில் தொங்க விட்டிருந்தேன். அப்போதெல்லாம் ‘மைக்’ தனியாக இருக்கும். பம்பாய் விமான நிலையத்தில் போய் இறங்கியதும், முதன் முறையாகப் பம்பாயைப் பார்ப்பவ னாகையால், வியப்பு மேலிட நடந்த போது, அந்த மைக்” கீழே நழுவியது எனக்குத் தெரியவில்லை. தங்குமிடம் சென்றவுடனே தெரிந்து போயிற்று! கலைஞரிடம் சொல்ல அஞ்சி, நண்பர் ரங்கநாத்துடன் பல இடங்களுக்கும் அலைந்து-அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு-புதிதாக ‘மைக்’ ஒன்று வாங்கி வந்தேன். அதற்குள், எங்களுடன் வந்திருந்த செக்யூரிட்டி ஆபீசரிடம் நான் ரகசியமாகச் சொல்லியிருந்த விஷயம், கலைஞருக்குத் தெரிந்து போயிற்று! காரணம், காணாமற்போன அதே மைக் பம்பாய் ஏர்போட்டில் கிடைத்து விட்டதாம். கலைஞர் என்னை மிகவும் கேலி செய்தார்! கவியரங்கத்தில் நான் பாடும்போது, குறுக்கே இலட்சிய நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் பந்தலில் நுழைய-அவ்வளவுதான் தமிழ் மக்கள் ரசனை! கவனம் எங்கேயோ போய் விடவே-நான் முடித்துக் கொண்டேன் பாடல்களை,
இந்தச் செய்திகளெல்லாம் முழுமையாக அண்ணாவின் காதுக்குப் போய்விட்டது போலும்! “நீ ஏய்யா கவியரங்கத் திலே நேரடியாக் கலந்துக்கிறே? நீயே படிப்பது எடு படாது! உன் குரல்வளம் போதாது! அதனாலெ, நீ எழுதிக் கொடுத்து, வேற யாரையாவது விட்டுப் படிக்கச் சொல்லு, இனிமே! பிரமாதமா அதுக்கு வரவேற்பு இருக்கும்!“ என்றார் அண்ணா. அண்ணாவின் இந்த அறிவுரையை சிரமேற் கொண்டு, அதன்பின் எந்தக் கவியரங்கத்திலும் நான் கலந்துகொள்ளவே யில்லை. அமைத்து, மேடை யேற்றி, அறிமுகம் செய்யும் நன்றி எதிர்பாராத நற்பணி யைத் தொடர்ந்து ஆற்றி வந்தேன். துவக்க நாட்களில் கூடத் தவமணி இராசனும் நானும்-நாங்கள் மேடை யேறிப் பேசுவதைவிட, மற்றவர்களுக்கு மேடையமைத்து ஏற்பாடுகள் செய்து பேச வைப்பதைப் பெருமையாகக் கருதியவர்களாவோம்.
“சரியண்ணா-இனிமே நான் கவியரங்கத்துக்குப் போறதில்லெ. இப்ப கூட நான் பம்பாய் போன காரணம் விமானப் பயண ஆசைதான்!” என்றேன், அசடு வழிய!
“விமானத்திலேதானே போகணும், சரி. இப்ப மோரீஷஸ் தீவுக்குப் போறீயா?” எனக் கேட்டபோது, அண்ணா கேலி மொழி புகன்றதாக எண்ணவில்லை நான்! விழித்தேன் புரியாததால்!!
“இப்ப, நம்ம சத்தியவாணிமுத்து அமைச்சர், மோரீஸ் நாட்டுக்கு, ஒரு டெலிகேஷன்ல போறாங்க. Short Visit தான். அவுங்ககூட நீயும் போறதானா, நானே அனுப்பறேன்!”
“அப்படி ஒண்ணும் ஆசையில்லெ அண்ணா என் மனசிலெ. இங்கேயே இருந்து, உங்களெயெல்லாம் பாத்து கிட்டிருந்தாலே எனக்குப் போதும்!”
“இல்லய்யா. மெய்யாவே உன்னை எங்காவது வெளி நாட்டுக்கு அனுப்பறேன்! ஆனா ஒண்னு ஏதாவது ஒரே ஒரு நாட்டுக்குதான் போக முடியும்னா-அது இங்லண்டா தான் இருக்கணும்!”
“ஏண்ணா! அமெரிக்கா, ஜப்பான் இதெல்லாம் வளந்த நாடுகளாச்சே?”
“வளர்ச்சிண்ணா, எதிலே? இங்கிலாந்து உலகத்துக்கே மொழியையும், நாகரிகத்தையும், ஜனநாயகத்தையும் கத்துக் குடுத்த நாடு. முடி மன்னர்களும் வாழும்போது அவர்களை மதிச்சி, மரியாதை செலுத்துறதிலே குறைச்சல் இல்லாம, குடியாட்சித் தத் துவத்தையும் கோண ல் இல்லாம ஏத்துக்கிட்டிருக்கிற நாடு: அதிக நாகரிகம் என்கிற பேரால அநாகரிகத்தை வளர்க்காத நல்ல நாடு! அங்கே ஒரு தடவை போய்வந்தாப்போதும். உலகம் பூரா சுத்தின அறிவு கெடைக்கும்” -என்று, அண்ணா ஆங்கில நாட்டின் பெருமையை அளவிட்டு, அழகுற விளக்கினார்கள்.
“அருமையான கருத்தை இப்ப தெரிஞ்சிக்கிட்டேன் அண்ணா!’ என்று சீரியசாகச் சொல்லிவிட்டு, இப்ப என்னை ஒரு நொடியிலே லண்டன் ஏர்போர்ட்டிலே கொண்டுபோய் இறக்கி விட்டுட்டிங்க, பாஸ்போர்ட் இல்லாமெ. இது போதும் அண்ணா!” என நகைப்புக் கிடையே நவின்றேன்.
நான் ‘மைக்’ தொலைத்த நிகழ்ச்சியைப் “பட்டிக் காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தது போலஎன்பது பழமொழி-ஆனால், கருணானந்தம் பம்பாய் விமான நிலையம் பார்த்தது போல-என்பது புதுமொழி” யெனத் தனது கவியரங்க முன்னுரையில் இணைத்திட்ட கலைஞர், அதனைச் சுவைபட அண்ணா அவர்களிடமும் எடுத்துக் கூறி, என்னை Laughing Stock ஆக்கினார் என்பதைப் புரிந்து கொண்டேன். அண்ணாவிடம் விடை பெற்றுப் புறப்பட்டேன் கலைஞருடன்; அவர் வீடு நோக்கித்தான்!
நழுவிப் போன நாடக மேடை
வாடிக்கையாக உடன்வரும் வேடிக்கை நண்பர் சி. வி. ராஜகோபாலுக்குப் பதில் இந்த முறை அண்ணா மாயூரம் வந்தபோது அவருடன் டி. கே. பொன்னு வேலுவைக் கண்டதும், வியப்பாயிருந்தது எனக்கு! அதிகம் பேசாமல், ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு, ஒரு பக்கம் ஒதுங்கக் கூடியவர் அவர். அண்ணா K. P. சண்முக சுந்தரம், பேராசிரியர் கந்தசாமி, டாக்டர் சந்திர சேகரன் சகோதரர்களின் வீட்டில் தங்கினார்கள். அங்கே கண்டிப்பாக மரக்கறி உணவுதான். ஒரே நாளில் பொன்னு வேலுவுக்கு bore அடித்து விட்டதாம். மெதுவாக “என்னிடம் வந்து “என்னங்க கவிஞர்! மாயவரம் வந்தால், கவிஞர் வீட்லெ வரால் மீன் குழம்பு ரொம்ப Famous என்று கேள்விப்பட்டேன். எப்ப உங்க வீட்லெ சாப்பாடு?” என்று கிசுகிசுத்தார்.
இதைக் கவனித்து விட்டார் அண்ணா. “என்ன கருணானந்தம்! பொன்னுவேலுவுக்கு என்ன வேணுமாம்? non விஜிடேரியன் சாப்பாடா? நீ கொடுத்து விடாதே! நான் சொல்றேன்; நாளைக்கு மதியம் உங்க வீட்லெ எங்களுக்குச் சைவ சாப்பாடு போடணும்! வத்தக் குழம்பு, ரசம், பருப்புத் துவையல், கீரை இந்தமாதிரி-உன் wife சில ஸ்பெஷல் அய்ட்டம்ஸ் செய்வாங்க இல்லியா-அதெல்லாம் செய்யச் சொல்லு: அதென்ன பொன்னுவேலு. உனக்கு அப்படி ஒரு பிடிவாதம், அவுங்க வீட்டுச் சைவ சாப்பாடு ரொம்பப் பிரமாதமாயிருக்கும்! மீன் சமையல் செய்யச் சொன்னா, நமக்காக, ஆனா, அவுங்க இஷ்டத்துக்கு மாறாக, ஆள்வச்சி செய்வாங்க, பேசாம இரு!” என்று கடிந்து கொண்டார் அண்ணா.
முளைக் கீரையில் பூண்டு சேர்த்துக் கடைவது வெண்ணெய்போல இருக்கும் என்று சொல்வார்களே அது -சீரக ரசம் மணத்துடன் தெளிவாகத் தோன்றும், ஆனால் சுவை மிகுதி. தண்ணீர் போலவே அண்ணா சூடாக அதைத் தம்ளரில் ஊற்றச் சொல்லிக் குடிப்பார்கள். சுண்டைக்காய் வற்றல், மணித்தக்காளி வற்றல் சேர்த்து, பூண்டு ஏராளமாய்ப் போட்டு, நிறைய மிளகு அரைத்து ஊற்றிக் காரமான ஒரு வற்றல் குழம்பு வைப்பதில் என் துணைவியார் ஸ்பெஷலிஸ்ட். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ஆர். ஒருமுறை இதை ஒரு டப்பாவில் கேட்டு வாங்கிச் சென்று, 2, 3 நாள் வைத்திருந்து சாப்பிட்டார்.
அதேபோல அண்ணா, பொன்னுவேலுவை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து, எங்கள் வீட்டில் சைவ உணவு சாப்பிட வைத்தார்கள். மிகவும் (Relaxed) ரிலாக்ஸ்டாக, வெறும் பனியன் அணிந்து, திண்ணையில் உட்கார்ந்து, நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள் அண்ணா. கேட்டு மகிழ்ந்தோம் யாவரும்!
தலைப்பு, முந்தியநாள் இரவு பொதுக் கூட்டம் முடித்துவிட்டு, மாயூரத்தில் ஒரு திரைப்படம் பார்த்தது பற்றி, படம் (பேர் நினைவில்லை) பார்க்கும்போதே அண்ணா குறிப்பிட்டார்கள் கவலையுடன், அந்தப் படத்தில் முக்கிய நடிகர்கள் இரண்டு பேரும் பார்ப்பனர். “இவுங்களெப் பார்த்தியா அய்யா. ஹீரோவா நடிக்கிறாங்களே. ஒரு ஆளுக்குக் கண்ணு இருக்கிற இடமே தெரியலே. இன்னொரு ஆள் மூக்கால பேசுறான். ஆனா ரெண்டுபேரும் பேசறது அசல் அக்ரஹாரப் பேச்சு. போட்டுள்ளது நாட்டுப்புற இளைஞர் வேடம். இதையெல் லாம் ஜனங்க ஏத்துக்கிறாங்க. ஆனா ஜனங்க மேல தப்பில்லே. கிடெச்ச எடத்தை நம்ம ஆளுங்க கோட்டை விட்டுட்டாங்களே!” என்றார் அண்ணா என்னிடம் தியேட்டரிலேயே.
இன்று என் வீட்டுத் திண்ணையில் அதே சப்ஜெக்ட் தொடர்ந்தது:-
ஒருகாலத்தில் Stage நம் ஆட்கள் கையில்தானே இருந்தது! பெரிய பெரிய நாடகக் கம்பெனிகள்-நவாப் ராஜமாணிக்கம், டி. கே. எஸ். சகோதரர்கள், பிறகு சக்தி நாடக சபா, என். எஸ் . கே. நாடக சபா, கே. ஆர். ஆர். நாடக மன்றம், தேவி நாடக சபா, வைரம் நாடக சபா, எம். ஆர். ராதா மன்றத்தார், எம். ஜி. ஆர். நாடக மன்றம், எஸ். எஸ். ஆர். நாடக மன்றம், சிவாஜி கணேசன் நாடகங் கள்-என்று பார்ப்பனரல்லாத தமிழ் நடிகர்கள் தமிழகத்து நாடக மேடைகளில் கொடிகட்டிப் பறந்தார்கள்.
சினிமாவளரத் தொடங்கியபோது கூட, எம். கே. தியாகஜபாகவதர், பி. யூ, சின்னப்பா, பிறகு கே. ஆர். ராமசாமி இவர்களெல்லாம் பாடி நடித்தவர்கள். அதற்கும் அப்புறம் எம்.ஜி ராமச்சந்திரன், எஸ். எஸ். ராஜேந்திரன், சிவாஜிகணேசன் நடிப்பிலே தலைசிறந்து விளங்கினார்கள்!
ஆனால், ஆனால், இன்றோ? நாடக மேடை அவர்கள் கையிலே! அனுபவமே இல் வாதவர்களைச் சினிமா நடிகராக்கி உயர்த்திவிட ஒரு கூட்டம் கட்டுப்பாடாக வேலை செய்கிறது. நம்மவர்களில் பலர் தாங்களாகவே கெட்ட பழக்க வழக்கங்களால் வீணாகி விட்டனர். ஆகவே நம் நண்பர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டுக் கலைத்துறைக்கே சம்பந்தமில்லாதவர்கள் உள்ளே நுழைந்து விட்டனர். நாமும் வேறு வழியில்லாமல் இதுதான் தமிழ்த் திரைப்படம் என்று, பார்க்க வேண்டியதாகி விட்டது......”
அண்ணா காரில் ஏறும்போது பொன்னுவேலு என்னிடம் சொல்கிறார்:- “கவிஞர்! எங்கே நான் மறுபடி யும் உங்களிடம் மீன் குழம்பு சாப்பாடு கேட்டுவிடுவேனோ என்றுதான், அண்ணா இன்றைக்கு ஒரு Diversion கொடுத் துட்டார் என்று நினைக்கிறேன். Anyhow ஒரு நல்ல Serious Subject பற்றி இன்று ஆழமாகச் சிந்திக்கும்படி செய்துட்டார். Thank you வருகிறேன்” என்று அவரும் புறப்பட்டார்.
அண்ணா விடைபெற்றுச் சென்றபோது, முகத்தில் கவலை படர்ந்த தோற்றம் தென்பட்டது. என் வீட்டுப் பிள்ளைகள் ராசகோபால், ராணி, மாதவி, குலோத் துங்கன் நால்வருமே அதுவரையில் சாப்பிடாமலிருந்து, அண்ணாவின் பொருள் செறிந்த உரையாடலைக் கேட்டு மகிழ்வுற்றனர்.
-Continue to page five
Comments