கவிஞர் கருணானந்தம்
முத்துப் பந்தர்
41. சென்னையில் பொறித்த சின்னம்
42. அத்தான்! திராவிடநாடு வேண்டும்!
43. இடக்காகக் கேட்டால் மடக்குவார்
44. பிரசாதமல்ல, தின்பண்டம்
45. முதலமைச்சருக்கு முதல் விருந்து
46. நடிகர்களை அழைத்து வருவது ஏன்!
47. நீயுமா? புரூட்டஸ்!
48. தம்பி, தோழராகி விட்டார்!
49. திருச்சியில் அடிக்கல் நாட்டினார்
50. நட்பிலும் இருபக்கம் உண்டு
சென்னையில் பொறித்த சின்னம்
எங்கள் RMS ஊழியர்களின் எட்டாவது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடந்தபோது எனக்குத் தவைவர் கிரீடம் சூட்டிவிட்டார்கள். அதில் கலந்துகொண்ட விழுப்புரம் நகராட்சி உறுப்பினர் எஸ். இராகவானந்தம் இதற்காகத்தன் வீட்டில் விருந்தளித்து மகிழ்ந்தார் எனக்கு.
இக்காரணத்தில் அடுத்த ஆண்டு 4.1.1966 முதல் மூன்று நாட்கள், சென்னையில் எங்கள் ஒன்பதாவது மாநில மாநாட்டை மிகச் சிறப்போடும் சீரோடும் நடத்திக் கொண்டாடினோம். எங்குமில்லாத புதுமையாக முதல் நாளும் மூன்றாவது நாளும் பொதுக் கூட்டங்கள் நடத்தி னோம். முதல் நாள் பொதுக்கூட்டத்திற்கு அண்ணாவை அழைத்தேன். தயங்காமல் ஒத்துக் கொண்டார்கள். மூன்றாவது நாளில் கலைஞர் கலந்து கொண்டார்.
அப்போது என் நண்பர் மைனர் மோசஸ் சென்னை நகர மேயராகப் பெருமையுடன் வீற்றிருந்த நேரம். நாள் தவறாமல் மாலைநேரங்களில் அவர் அண்ணாவையும் கலைஞரையும் சந்திக்க வருவார். அவரிடம் பேசி, சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான ரெட்ஹில்ஸ் விடுதி ஒன்றை அமர்த்திக் கொண்டேன். தமிழ்நாடெங்கிலு மிருந்து வரும் பிரதிநிதிகள் கூட்டம் 3 நாளும் அங்கே செங்குன்றத்தில் வசதியாக எவ்வித இடையூறுமின்றி என் தலைமையில் நடந்தது. சாப்பாட்டுக்கான அரிசி காய்கறி மளிகை சாமான்கள் சென்னையிலேயே வாங்கிச் சென்றேன். நண்பர் மீசை கோபாலசாமி மூலமாக ஒரு சமையல் அய்யர். அருமையான எளிமையான உணவும் சிற்றுண்டியும் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டன. என்னைத் தலைமை பீடத்தில் உட்காரச் சொல்லிவிட்டு, என் பணிகளையும் சேர்த்து என் துணைத் தலைவர் எஸ். நாகலிங்கம், பொருளாளர் வீராசாமி, மாநிலச் செயலாளர் நம்மாழ்வார் ஆகியோர் பார்த்துக் கொள்வார்கள். விவாதங்கள் சூடாகவும் சுவையாகவும் இரவில் நெடுநேரம் வரை நடக்கும்.
அப்படியானால் ஆர். எம். எஸ். இலாக்கா அவ்வளவு முக்கியமானதா? இந்தக் கேள்விக்கு ஒரு மாஜிஸ்ட்ரேட் பதில் சொல்கிறார்: 1960 ஜூலை மாதம் மாயூரம் குற்றவியல் நீதிபதி கோர்ட்டில் கைதியாக அவர் முன் நான் நிற்கிறேன். “நீங்கள்தான் ஸ்ட்ரைக் கைத் துரண்டி விட்டதில் முக்கியமானவர் என்கிறார்கள். என்ன சொல்லுகிறீர்கள்?” கேட்பவர் நீதிபதி. “நான் துண்ட வில்லை. எங்கள் அனைத்திந்திய சங்கம் டெல்லியில் முறைப்படி ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்து, வேலை நிறுத்தம் செய்யுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டது. சங்கக் கட்டுப்பாட்டுக்கு இணங்க எல்லாரும் வேலை நிறுத்தம் செய்தோம்.” என் பதில் இது.
“சரி. பேப்பர்களில் ‘வேலை நிறுத்தம் வெற்றி பெறவில்லை. தபால் ஊழியர்கள் வேலைக் குத் திரும்பி விட்டனர்’-என்று செய்தி போடுகிறார்கள். ஆனால் RMS ஊழியர்கள் மட்டும் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வருகிறீர்கள். RMS இல்லாவிட்டால் தபால் இலாக்காவே இயங்காது என்பதை நானே நிதரிசனமாக உணர்கிறேன். ஒரு நாளைக்கு எனக்கு 30, 40 தபால் வருவது வழக்கம். ஆனால் ஒரு வாரமாக தினம் ஒன்று இரண்டுதான் வருகிறது. அதனால், அரசு உங்கள்மேல் குற்றம்சாட்டுவது நியாயமே என்று புரிகிறது. என்றாலும் உங்களை ஜாமீனில் விடுதலை செய்கிறேன்-” என்று , இரண்டு நாள் போலீஸ் ஸ்டேஷனில் ரிமாண்டில் இருந்த என்னை விடுவித்தார்.
மரத்துக்கு அடியில் மறைந்துகிடக்கும் வேர்போல RMS ஊழியம். இலை காய் கனிதான் தபால்துறை. எல்லாம் சேர்ந்தால்தானே மரம்?
அண்ணா அவர்கள் எங்கள் தொண்டினை உணர்ந்திருந்த காரணத்தால், நான் அழைத்தபோதெல்லாம் வந்து சிறப்பித்தார்கள். 4.1.66 சென்னை மவுண்ட்ரோடு தபால் நிலையத்துக்குப் பின்புறம் அதாவது போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலக வளாகத்தில் மேடை அமைத் திருந்தோம். (அப்போது யாருக்குத் தெரியும் இது அண்ணாசாலை அஞ்சல் நிலையம் என மாறும் என்பது!) அன்றைய கூட்டம் என் தலைமையில். நண்பர் முஸ்லிம்லீக் தலைவரான ஏ. கே. ஏ. அப்துஸ்சமது, தேசியவாதி T. செங்கல்வராயன், அஞ்சல்துறை இயக்குநர் டி. ஆர். சங்கரன், ஏ. பி. துளசிராம் ஆகியோர் மேடையில் வந்து அமர்ந்துவிட்டனர். கூட்டம் துவங்க வேண்டிய நேரம். அண்ணாவை மட்டும் காணோம்!
“நான் நேரே கூட்டத்துக்கு வந்துவிடுகிறேன். நீ கவலைப்படாமல் இரு!” என்று உறுதி சொல்லியிருந்தார் அண்ணா என்னிடம். என்னை ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கை உண்டு. ஆனாலும் காஞ்சியினின்று வர ஒருமணி அல்லது ஒன்றரை மணிநேரம் போதுமே: இன்னும் காணோமே! பதைப்பு-படபடப்பு-பதற்றம்-நடுக்கம்-பயம்-திகில்-அடுத்து மயக்கந்தான் பாக்கி!
P.M.G. அலுவலகத்தில் Returned letter பிரிவினில் உள்ள நம் இயக்க நண்பர் G. லட்சுமணன் துடிதுடிப்போடு மேலே போய் Phone-ல் விசாரிக்கிறார். அண்ணா காஞ்சியை விட்டுப் புறப்பட்டு விட்டாராம். ஆனால் இந்நேரம் வந்திருக்கவேண்டுமே! ஆ! இதோ வந்து விட்டார்!... சரியாக ஒரு மணிநேரம் தாமதமாக வந்து இறங்கி, மன்னிப்புக் கோரும் தோரணையில் “வண்டி ரிப்பேராகி விட்டதய்யா வழியில்” என்கிறார் அண்ணா என்னிடம். பத்திரிகையாளர்கள் என்றுமில்லாத திரு நாளாக நிறையப்பேர் வருகை புரிந்தது அதிசயமே அன்று. காத்திருந்தது அதனிலும் பெரிய அதிசயம்!
“நானும் நீண்ட நாட்களாக உங்களைப் பார்த்து வருகிறேன். முன்பு சொன்ன அதே குறைகளை இப்போதும் சொல்கிறீர்கள். எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. அதனால், கோரிக்கைகளை நீங்கள் அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்லும் முறை சரியில்லை என்று கருதுகிறேன். ஆகவே பின்னால் நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் என்ற தைரியத்துடன், நீங்கள் புரட்சி செய்யுங்கள்!” என்று அண்ணா எங்கள்மீது பொங்கிடும் அக்கறை உணர்வால் சிங்கநாதம் செய்தார்.
6.1.66 அன்று சென்னை சென்ட்ரல் ஸ்ஷேனில் உள்ள பெரிய RMS அலுவலகத்தில், என் தலைமையில் நடை பெற்ற நிறைவு விழாப் பொதுக் கூட்டத்திலும், கலைஞர் பேசும்போதும் இந்த பாணியில் எங்கள் கோரிக்கைகளுக்காக வாதாடினார்.
எங்கள் தொழிற்சங்க வரலாற்றிலேயே, இந்த இரு கூட்டங்களின் செய்திகள், சொற்பொழிவுகள், பிரச்னைகள் வெளியான அளவு, வேறு எப்போதும் பத்திரிகைகளில் பிரசுரமானது கிடையாது. அந்த அளவு மக்கள் கவனத்தைக் கவர, நாங்கள் எதிர்பார்த்தவாறே, சென்னை மாநாடு எங்களுக்கு ஒளிவிளக்காக வழிகாட்ட, அண்ணா உறுதுணை புரிந்தார்கள்!
அத்தான்! திராவிட நாடு வேண்டும்!
அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்றவுடனே, வெளியிலிருந்து யாரையாவது நேர்முக உதவியாளராக நியமிக்கலாம் என்று சிந்திக்கப்பட்ட நேரத்தில், ப. புகழேந்தி அங்கே இருந்தாராம். எப்படியோ அந்தச் சமயத்தில் நான் அங்கு இல்லை. அண்ணா சொல்லியிருக்கிறார்கள்- “யாரையாவது போடுவதென்றால், நம்ம கருணானந்தம் அல்லது புகழேந்தி - இந்த மாதிரி ஆட்களைத்தான் போடணும். ஏன்னா, இவுங்க எப்பவுமே எதையும் எதிர்பார்த்து, நம்மகூட இருக்கலெ! இவுங்களாலெ எனக்கு எந்த பிராப்ளமும் ஏற்படாது!” என்று. அதன் பிறகு, நண்பர் கஜேந்திரனைப் போட்டு, அவரால் அண்ணாவுக்குப் பெருமையா சிறுமையா? உதவியா உபத்திரவமா? என்பது விவாதத்துக்குரிய பிரச்சினையானது!
சில நாள் கழித்து ஒருமுறை அண்ணா என்னிடம் நேராகவே கேட்டார்கள்:- “ஏய்யா! இப்ப, செய்தித் துறைக்கு ஒரு டைரக்டர் போடணும். நீ வர்றியா?” என்று. “இல்லையண்ணா! நீங்க முதலமைச்சரா இருக்கறதையும், மற்ற நம்ம தோழர்கள் அமைச்சரா யிருக்கறதையும், இப்ப நான் இருக்கிற தொலைவிலேயே இருந்து பார்க்கத்தான் நான் விரும்புறேன். ரொம்ப நெருங்கி வந்துட்டா, இந்த மரியாதை இருக்காது! என்னை மன்னிச்சுடுங்க அண்ணா!” என்று பவ்யமாகப் பகர்ந்தேன். “நீ இல்லேன்னா, நம்ம மாறன் அல்லது செல்வம் இவுங்களைப் போடலாம். பத்திரிகை அனுபவ முள்ளவர்கள்தான் பயன்படுவாங்க!” என்று அண்ணா சொன்னதன் மூலம், என்னைக் காப்பாற்றினார்களே, அது போதும் எனக்கு.
என்னைப் பொறுத்தவரையில் நான் என்றைக்கும் சுயமரியாதைக்காரன். 1952 முதல் முழுமையாக தி.மு.க. கைத்தறியாடை அணியுமாறு அண்ணா பணித்தது முதல் வேறு ஆடை அணிவதில்லை. அஞ்சல் துறையிலிருந்த போதே நண்பர் G. லட்சுமணனும் நானும் கருப்பு சிவப்புக் கரைபோட்ட கைத்தறி வேட்டியும் அங்கவஸ்திரமும் எப்போதும் அணிபவர்கள்.
தி. மு. கழகத்தின் பொதுக் கூட்டம், மாநாடு, தேர்தல் போராட்டம் எதுவாயினும் உதவியோ பதவியோ எதிர் பாராமல் என் பங்கைச் செலுத்தி வருபவன். எந்த நேரத் திலும் எந்தப் பயனையும் நன்றியையும் எதிர்பார்த்த வனல்லன். வாழ்நாள் முழுவதும் அரசுச் சம்பளத்தில் வாழ்ந்தவன். திராவிடநாடு கொள்கை என் குருதியில் கலந்துவிட்ட ஒன்று. என் மூச்சும் பேச்சும் அதுதான் என்பதற்கு, என் பழைய கவிதைகளே சான்று!
அண்ணா 1963-ல் ஒரு தடவை சொன்னது மறக்க வொண்ணாதது. “ஏன்யா! திராவிடநாடு பொங்கல் மலரில் ஒரு கட்டுரை எழுதப்போறேன். அதற்காக நமது கவிஞர்களின் கவிதைகளிலிருந்து சில அடிகளை மேற்கோள் காட்டத் தேர்ந்தெடுத்தேன். பொங்கல் விழா ஆகையால் பொதுவான வரிகளாயிருக்கட்டுமே என்று தேடினேன். கடைசியாக ஒன்றே ஒன்று கிடைத்தது. நீ ‘அத்தான்’ என்று தொடங்கினால் கூட, ‘ஆகையால் வேண்டும் திராவிடநாடு’ என்றுதான் உன் கவிதையை முடிக்கிறாய்” என்று கூறியது, என்பால் குறையல்லவே! என் நிறையே இதுதான்! அண்ணா தொடர்ந்து உரைத்தார்கள். இனி, சில கவிதைகளைப் பொதுவாகவும் எழுது!” என்று. அவ்வாறே அதற்குப் பின்னர் நிரம்ப எழுதியுள்ளேன்; அண்ணாவின் ஆணையை நிறைவேற்றுமுகத்தான்!
1956 “திராவிட நாடு” பொங்கல் மலரில் நான் இப்படி ஒரு கவிதையை எழுதியிருந்தேன்
உலகம் வியக்க நிலவிய புகழும்,
கழகம் வளர்த்த பழந்தமிழ் மொழியும்,
அறநெறி பரப்புங் குறள்நெறி தழுவிப்
பிறரைப் பணியாத் திறலும் படைத்த
தந்நேர் இல்லாத் தமிழக உழவர்–
பொன்னேர் பூட்டிச் செந்நெல் விளைத்தே
ஆண்டின் பயனை அடைந்திடும் பெருநாள்!
தூண்டிடும் உவகையில் துள்ளிடுந் திருநாள்!
ஆயினும், அன்னார் நாயினுங் கீழாய்
நலிந்துளம் நொந்து, மெலிந்துடல் வாடி,
வறண்ட பாலையில் இருண்ட வேளையில்
திரண்டெழுங் காற்றிற் சிக்கியோர் போலத்
திகைத்து மீளவும் வகையறி யாது,
சுதந்திரம் என்ற இதந்தரும் பெயரால்
கொடுங்கோல் ஆட்சிக்கு இடங்கொடுத்து உயர்த்தித்,
தாய்மொழி மறந்து, தனி அரசு இழந்து,
வாய்மை தவறி, வாழ்வினில் தாழ்ந்து,
உழைப்பதற் கேற்ற ஊதியம்-உயிருடன் த
தழைப்பதற்கான சாதனம் இன்றி,
நெடிய வறுமைக்கு அடியவர் ஆகி,
முன்னேறும் நிலை எந்நாள் வருமெனக்
கண்ணிர் சிந்திக் காத்திருக் கின்றார்!
பாட்டாளி மக்கள் படுத்துயர் தொலைத்து
நாட்டிலே இன்ப நன்னிலை பொங்க
மூட்டுவோம் உணர்வொடு முயற்சித் தீயே!
ஏழாண்டுகட்கு முன்னர் நான் எழுதிய இப்பாட்டை அண்ணா அவர்கள் தேடிப்பிடித்து, 1963 “திராவிட நாடு” பொங்கல் மலரில் தாம் எழுதிய ஒரு நீண்ட கட்டுரையின் இறுதிப் பகுதியில்...
“கருணானந்தம் தந்துள்ள கவிதைகாட்டுதல் போல்” என்ற தமது முகப்பு வரிகளுடன், என்னுடைய இந்தக் கவிதையிலிருந்து முதல் எட்டு வரிகளை மட்டும் எடுத்து, மேற்கோளாகக் காட்டியிருக்கிறார்கள்!
“அது சரி அண்ணா! நீங்கள்-முன்னே சொன்னிங்களே - ‘அத்தான்’ என்று ஆரம்பிச்சாலும் திராவிட நாடு வேண்டும்’னு முடிக்கிறதாக-அது எந்தக் கவிதையைப் பார்த்ததும் உங்களுக்குத் தோணிச்சுது அண்ணா? என்று கேட்டேன்.
“ஏன்? எத்தனையோ இருக்குதே! உதாரணமா, 1960 ‘திராவிடநாடு பொங்கல் மலரி’லே வந்த உன் கவிதையைத் தான் பாரேன்’ என்றார்கள் அண்ணா. எடுத்துப் பார்த்தேன். அது இதுதான் :
உள்ளதைத்தான் கேட்கின்றாள்!
நள்ளிரவில் மாளிகையின் பின்முற் றத்தில், நடுக்குகின்ற குளிர் தாக்கப் போர்த்துக் கொண்டு
வெள்ளிநிலா ஒளிவழங்க, விண்மீன் கூட்டம் விசிறிவிட்ட வைரமென மின்னல் காட்டத்,
துள்ளிவரும் சிந்தனையின் அலைகளாலே துயில்கெட்டுப் புரளுகையில், துணைவி வந்து...
பள்ளியறைக் காவியத்தைப் பாடு தற்குப் பாங்கான நேரமென்று துவங்கி விட்டாள்:
“ஏனத்தான், எத்தனையோ கால மாக எனக்காகக் கேட்டேனே, புடைவை எங்கே?
மானத்தை மறைப்பதற்குத் துகில் என் றாலும், மனங்கவரும் பட்டாடை அணிந்தா லென்ன?
வீணத்தான் பெட்டிகளில் பூட்டி வைத்தல் : விரும்புவதை எடுத்தளிப்பீர்! நான்தான் உம்மை
வானத்தை வில்லாக்கித் தரச்சொன் னேனா ! வைத்திருக்கும் பொருள் தந்தால் வறண்டா போகும்?
கண்ணாடிப் பேழைக்குள் கண்ணைக் கவ்வும் கணக்கற்ற பொன்னகைகள் இருக்கக் கண்டேன்!
எண்ணாத எண்ண மெல்லாம் எண்ணி யெண் ணி ஏங்குகின்றேன்; இருப்பவற்றை அணிந்து கொண்டால்
புண்ணான என்மனமோ ஆறும்; நானும் புதிதாக அணிமணிகள் செய்யச் சொல்லிக்
கண்ணான கணவருக்குத் தொல்லை செய்யேன்! காண்பதையே கேட்கின்றேன் தந்தால் என்ன?
நல்ல நல்ல பருப்புவகை நவதான் யங்கள் நம் வீட்டில் ஏராளம் குவித்து வைத்தோம்;
நெல்லரிசி களஞ்சியத்தில் நிறைய வுண்டு; நேற்றுமுதல் சோறில்லை, கஞ்சி யுண்டோம்!
பலவிதமாய் காய்கனிகள் தோட்ட மெங்கும் பசுமையுடன் குலுங்குகையில் பறித்தா லென்ன?
இல்லையெனச் சொல் வீரோ, அத்தான்! இங்கே இல்லாத பொருளெதையும் கோர வில்லை!
முப்புறமும் அரண் சூழ்ந்த காவ லுக்குள் மூன்றடுக்கு மேன்மாடம் முகிலைத் தீண்டும்;
எப்பொழுதும் வற்றாத நீர் ஊற்றுக் கண் ஈன்றெடுத்த தாய்போல அருள் சுரக்கும்;
ஒப்புரவாய், ஒற்றுமையாய், இனிது பேசும் உடன் வாழ்வோர் கடல் மணல்போல் ஏரா ளம்பேர்!
அப்படியும் நடுமனையில் இடமில் லாமல் அநாதையென நடத்துகின்றீர், ஏனோ அத்தான்?
உள்ளதைத்தான் கேட்கின்றேன்; இருந்தும் நீங்கள் ஒன்றையுமே அநுபவிக்கத் தருவதில்லை;
உள்ளதெல்லாம் உண்மையுடன் உரைப்பீர்!” என்றே ஊடிநின்ற துணைநலத்துக் கென்ன சொல்வேன்!
“உள்ளதைத்தான் கேட்கின்றாய்! ஆனால் கண்ணே, உரிமைநமக் கெதிலுமில்லை, அடிமை யாகி
உள்ளதெல்லாம் பறிகொடுத்தோம்! உணர்வு பெற்றால் உரிமையுடன் உலவிடலாம், உலகில்!” என்றேன்.
இடக்காகக் கேட்டால் மடக்குவார்
1967 பொதுத் தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாய்த் தெரியத் தொடங்கும் நேரம். அண்ணா ஒரு சிறிய டிரான் சிஸ்டர் ரேடியோவை அருகில் வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருக்கிறார்கள். எதிரே நாங்கள் சிறு கூட்டமாகத் தரையில் உட்கார்ந்து காதைத் தீட்டிய வண்ணம் காத்திருக்கிறோம். அப்போது யார்தான் எதிர் பார்த்தோம், காங்கிரஸ் கப்பல்,காகிதக் கப்பலாய் மூழ்கு மென்று; காங்கிரஸ் கோட்டை மணற்கோட்டையாய்ச் சரிந்து வீழுமென்று!
முதல் முடிவு, சென்னை பார்க்டவுனில் காங்கிரஸ் தோற்று, சுதந்திரக்கட்சி வேட்பாளர் டாக்டர் ஹண்டே வெற்றி என்பது. புன்னகை பூத்தார் அண்ணா. அடுத்த முடிவு வரும்போது நான் கீழே போயிருந்தேன். அண்ணா பெருங்கூச்சலிட்டு என்னை விளித்து, மாயூரம் கிட்டப்பாவின் முதல் தி.மு.க. வெற்றியை எடுத்துச் சொன்னார்கள். அப்போது மலரத் தொடங்கிய அண்ணாவின் முகம் செந்தாமரையாய் ஒளி வீசியது எனினும் தி.மு.க. வெற்றியின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, அண்ணாமட்டும் மகிழ்வினைப் பெருக்காமல், ஒரளவு கவலை படர்ந்த முகத்தினராய்க் காணப்பட்டார்! எங்கள் குதூகலத்துக்கு எல்லையுண்டோ?
திடீரென்று, விருதுநகர் தொகுதியில் பெ. சீனிவாசன் வெற்றி என்று வானொலியின் சிறப்பு ஒலிபரப்பு வெளியிட்டதும், நாங்கள் எழுந்து நின்று குதிக்கத் தொடங்கி விட்டோம். “என்னய்யா இது! உண்மையைத் தான் சொல்றானா? அப்படின்னா காமராஜ் தோல்வியா? சேச்சே! இது நடக்கக்கூடாதே! அவரு தோற்கலாமா? நாம அவரைத் தோற்கடிப்பதா?” என விசனப்பட்டு எங்கள் ஆனந்தத்தைக் கருகச் செய்தார், அண்ணா.
காமராசரை எதிர்ப்பதே முதலில் அண்ணாவுக்கு விருப்பமில்லை. கலைஞரின் பிடிவாதம் வென்றது. பெ. சீனிவாசன் எம்.ஏ., 1965 இந்திப் போரின் ஒரு தளபதி என்பதால், அவரை நிற்க வைத்துக் காமராசரைத் தோற்கடிக்கலாம் என்பது கலைஞரின் நம்பிக்கை. அண்ணா பல்வேறு நிர்ப்பந்தங்களால் ஏற்க நேரிட்டதே ஒழிய, சீனிவாசன் என்னும் யாரோ ஒரு தி.மு.க. மாணவன், இமயம் போன்ற காமராசரை வெல்லமுடியும் என அவர் நம்பவில்லை. எனக்கு நன்கு நினைவிருக்கிறது; டிரைவ் இன் வுட்லண்ட்ஸ் ஒட்டலில், ஒரு நாள் மாலை, நடிகமணி டி. வி. நாராயணசாமி சூளுரைத்தார் என்னிடம் :- “நான் வேறு தொகுதிகளுக்குப் போகாமல் விருது நகரிலேயே தங்கி, வேலை செய்து, தம்பி சீனிவாசனுடைய வெற்றியுடன் திரும்பி வருகிறேனா இல்லையா பாருங்கள், கவிஞரே!” என்று.
“என்னண்ணா நீங்க! படுத்துகிட்டேஜெயிப் பேண்ணாரு: அவ்வளவு அலட்சியம் நம்மைப்பத்தி கட்டை விர லை வெட்டணும்னு சொன்னாரு முந்தி! அவர் தோத்ததுக்கு வருத்தப்படlங்களே? ஜெயிச்சது நம்ம ஆளுங்கறதே உங்களுக்கு மறந்துடுச்சா?” என்று துணிவுடன் கேட்டேன் அண்ணாவிடம்,
“அரசியலில் அவர் எதிரிங்கறதை நான் மறுக்கலேய்யா. ஆனா தமிழ்நாட்டுக்கு அவரு எவ்வளவு செஞ்சிருக் காருங்கறதை மக்கள் மறந்துட்டாங்களே. அவர் மட்டும் தோத்திருக்கக்கூடாது” என்றார் பெருந்தன்மையின் அருந் துணைவர். அத்துடன் நின்றாரா? நாடாளுமன்றத் தொகுதியில் சி. சுப்ரமணியம் தோல்வி எனத் தெரிந்ததும், மீண்டும் வருந்தினார். “அய்யோ! தமிழர் ஒருவர் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது போயிற்றே” என இரங்கினார்.
நாமே நினைத்துப் பாராத அளவு தி. மு. க. வெற்றிச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஏதேது அண்ணாவின் மனப்பான்மையைப் பார்த்தால் முதல்வர் பக்தவத்சலம் கூட வெற்றிபெற வேண்டுமென விரும்புவாரோ, என எங்களுக்கு அய்யப்பாடு தோன்றிற்று. இல்லை! அப்போது மட்டும் அண்ணா வருத்தப்படவில்லை! அளகேசன் தோற்ற போதும் அவ்வாறே! சரி: ‘இப்போது தான் நமது அண்ணா’ என்று மகிழ்ச்சியில் ஆழ்ந்தோம்.
ஒரு வழியாக எல்லா முடிவுகளும் தெரிந்துவிட்டன. சுதந்திரம் வாங்கித் தந்து, அதனால் ஆட்சி பீடமேறிய ஒரு கட்சியை, 20 ஆண்டுகள் ஆண்டது போதம், மக்கள் மாண்டது போதுமெனக் கையைப் பிடித்துக் கீழே இறக்கி விட்ட இந்த ஏழைகள் தலைவன், எளிய எம் அண்ணனின் வன்மைதான் என்னே! காங்கிரஸ் 233 இடங்களிலும் (ஒன்று தவிர) போட்டியிட்டு மானத்தைக் காப்பாற்றிக் கொண்டது 49 தொகுதிகளில்! வலது சாரிப் பொதுவுடைமை வாதியினர் தனியே போட்டியிட்டு 33-ல் இரண்டே இடம் பெற்றனர்! தி. மு. க. ஆதரவுடன் சுதந்திரா 27-ல் 20. இடது சாரிப் பொதுவுடமைக் கட்சி 22-ல் 11, முஸ்லிம் லீக் 4-ல் 3, திராவிட முன்னேற்றக்கழகமோ தமிழகத்தின் 173 சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, 138 வெற்றிக்கனிகளைக் கொய்தது! மாபெரும் சாதனை!!
நான் பார்த்ததேயில்லை அவ்வளவு பெரியதொரு (Pressmeet) பத்திரிகை நிருபர்கள் கூட்டத்தை. அனைத்து முடிவுகளும் வெளியானவுடன் அண்ணா வீட்டில் இடமே யில்லை. எல்லாம் செய்தியாளர்களே! எத்தனை. காமெராக்கள்! தொடுத்தனர் கேள்விக்கணைகளை. அனைத்துக்கும் அண்ணா விடுத்தனர் விடைகளைச் சற்றும் தயங்காமல் திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து ஆட்சி அமைக்கும் (சுதந்திராவும் இணைந்த கூட்டணி ஆட்சி நடக்கும். அனுபவசாலியான நம்மைத்தான் முதலமைச்சராக வீற்றிருக்குமாறு அண்ணா வேண்டுவார் என்று கனவு கண்டார் ராஜாஜி) என்ற திடமான முடிவு முதலில் அண்ணாவால் அறிவிக்கப்பட்டது. பிறகு கோடைமழை போல் குளிர்விக்கும் செயல் திட்டங்கள் தெரிவித்தார். எல்லாம் முடிந்த தறுவாயில், திடீரென ஒரு செய்தியாளர் அண்ணாவை மடக்கிவிட்டதாக எண்ணி ஒரு கேள்வி அம்பை எய்தார். “இவ்வளவும் சொன்னிர்களே, எந்த Capacity யில் (தகுதியில்) ? நீங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அல்லவா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்! தி. மு. க. சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லையே?” என்றார்.
“I am speaking to you in the capacity of the General Secretary of the D. M. K.” என்று சொன்னதும், அனைவரும் வியப்பினால் விரிந்த விழிகளுடன் வாயடைத்துப் போய் நின்றனர்; அதாவது தி.மு. க.கழகத் தின் பொதுச் செயலாளர் என்ற தகுதியினால்தான் இவ் வளவும் கூறினேன்-என்று கணமும் தயங்காமல் கூறி விட்டார் அண்ணா-எம் அண்ணா-அறிஞர் அண்ணா பேரறிஞர் அண்ணா!
பிரசாதமல்ல, தின்பண்டம்
எதிரே ஒரு தட்டில் புளியோதரை, லட்டு, வடை, தேன் குழல் முதலிய தின்பண்டங்களுடன் அண்ணா ஒரு நாள் காஞ்சிபுரம் இல்லத்தில் அமர்ந்திருக்கும்போது நான் போக நேரிட்டது. “வாய்யா! இந்தா, சாப்பிடு!” என்றார்கள். “ஏதண்ணா இந்த நேரத்தில் இதெல்லாம்?” என்று விசாரித்தேன். “நம்ம வரதராஜ சாமி பிரசாதம்” என்று சாதாரணமாகச் சொன்னார். எனக்கோ பேரதிர்ச்சி! “என்னண்ணா? கோயில் பிரசாதம் என்று கூசாமல் சொல்கிறீர்கள்! நீங்கள் எப்படி இதைச் சாப்பிடலாம்? உங்கள் பேச்சைக் கேட்டதனால் நான் கோயிலுக்குப் போவதில்லை. சாமி கும்பிடுவதில்லை. பண்டிகை கொண்டாடுவதில்லை. புரோகிதர் வைத்துத் திருமணம் செய்தால் உறவினர் வீடுகளுக்குக் கூட போவதில்லை”...... என்று சிறிது பதற்றத்துடன் சொல்லிக் கொண்டே போனேன்.
சாவதானமாக அண்ணா கையமர்த்தினார். நானும் பேச்சை நிறுத்திவிட்டு, ஆவலை விழியில் கூட்டி, அண்ணா என்ன பதில் உரைக்கப் போகிறார் என எதிர்பார்த்தேன். “இரய்யா. நீ சொன்னது எல்லாமே சரிதான். ஆனா, நான் செய்யிற இந்தக் காரியம், அடியோட வேறெ சமாச்சாரம்! நான், என் வீட்டுக்கு இவ்வளவு பக்கத்திலெ இருந்தாலும், இந்த வரதராஜர் கோயிலுக்குப் போனதில்லே. எங்க ஊரிலேயே இருந்தாலும், சங்கராச்சாரியாரைப் பார்த்ததில்லே. எந்தக் கோயிலுக்கும் அபிஷேகம் அர்ச்சனை ஆராதனை பூஜை செய்றதில்லை. ஆனா இந்தப் பிரசாதம் ஏதுண்ணு கேட்டியானா, இது நைவேத்யம் செய்த பிரசாதமில்லை. பணம் கொடுத்து வாங்கி வந்த தின்பண்டம் (snacks) நொறுக்குத் தீனி ஒட்டலில் வாங்குவது போல! ஆனா ஒட்டலை விட இதெல்லாம் நல்லாயிருக்கும். அதிலும், பெருமாள் கோயில் மடைப்பள்ளிகளில் செய்தவை மிகவும் ருசியாயிருக்கும். இதிலெ தோஷமில்லை; சாப்பிடலாம்” என்றார் நகைத்துக்கொண்டே!
என்னுடைய கடுமையான விரதத்தை உடைத்தேன் அன்றையதினம்! அதற்குப் பிறகு, திருப்பதி லட்டு, பழனிப் பஞ்சாமிர்தம் - இவை விலைக்கு வாங்கிவரப்பட்டு என்னிடம் தரப்பட்டால், ரசித்துச் சாப்பிடுவேன். பிரசாதம் என வெறுத்து ஒதுக்கி வந்த என் கொள்கையால், அபூர்வமான ஒரு தின்பண்டத்தை இழக்க இருந்தேன்! திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அக்கார அடிசில் என்னும் சர்க்கரைப் பொங்கல் அது! Full திட்டம் என்று பெயராம். அதில் தண்ணிருக்குப் பதில் நெய்யை ஊற்றி அரிசியை வேக வைத்திருப்பார்களோ? அரிசியை விட முந்திரிப் பருப்பும் திராட்சையும் அதிகமோ? அடடா! என்ன ருசி! திகட்டலான ருசி!
அண்ணாவுக்குத் தூள் பக்கோடா தின்பதிலும் விருப்பம் அதிகம். சாதாரணத் தேநீர் விடுதிகளில் தயாரிக்கப்படும் பக்கோடாவை வைத்திருக்கும் பாத்திரத்தின் அடிப்பகுதியில், வெங்காயம் மிகுதியாய்க் கருகலான தூள் தங்கியிருக்கும். அண்ணாவிடம் இந்த ரகசியம் தெரிந்து கொண்ட பின்னர், சுவை கூடிய இந்தத் துரள் பக்கோடா சாப்பிடுவதை நானும் வழக்கமாக்கிக் கொண்டேன்.
காரில் பயணம் போகும்போது, உளுந்துர் பேட்டையில் முட்டை தோசை போடச் சொல்வி, அண்ணா சாப்பிடுவார்கள். அதையும் அண்ணாவிடமிருந்து புரிந்து கொண்டு சுவைத்துச் சாப்பிட்டேன், சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம்!
பதவி ஏற்ற பின்னர் 1968 ஏப்ரலில் ஒரு விடுமுறை நாளில் கோட்டையில் அண்ணா முதலமைச்சர் அறையிலும், கலைஞர் பொதுப் பணித்துறை அமைச்சர் அறையிலும் அமர்ந்து files பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, கோவிந்தப்ப நாயக்கர் தெருவிலுள்ள ரசிக்லால் கடையில் ஒரு பாக்கெட் dried fruits (உலர்ந்த பழங்கள்) வாங்கி வந்தேன். கல்கண்டு, திராட்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா, பேரீச்சை முதலியன கலந்திருக்கும் அந்தக் கதம்பத்தில். முன்பு எப்போதோ அண்ணா இதைக் கையில் வைத்துக்கொண்டு, விருப்பமாகச் சாப்பிட்டதைப் பார்த்தேன். அது நினைவுக்கு வரவே இதை வாங்கி, நேரே அண்ணாவின் அறைக்குப் போய் அவர்களிடம் நீட்டினேன். “என்னய்யா இது?” - “பாருங்கள்; உங்களுக்குப் பிடித்ததுதான்!” - “அது சரி; இப்ப இதைக் குடுக்க என்ன காரணம்?” - காரணம் என்ன சொல்லலாம். வெளியில் கேள்விப்பட்ட ஒரு புதுச் செய்தி உதவிற்று. “கோ. சி. மணி M. L. C. தேர்தலில் வெற்றியாம் அண்ணா!” என்று சமயோசிதம் பேசினேன். பாதி எடுத்துக் கொண்டு “மீதியைக் கருணாநிதிக்குக் கொடு” என்றார்கள்.
அண்ணா ரசிக்லால் மிக்சரைத்தான் விரும்பிச் சாப்பிடுவார்களா! அப்படியும் சொல்லிவிடமுடியாது. ஒரு நாள் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் மன்றத்தில் சிறப்புரை யாற்றச் செல்ல வேண்டும் மாலை 4 மணிக்கு, அண்ணா! அப்போதுதான் உறங்கி எழுந்தவர்கள், வீட்டுத் தோட்டத்தில் காய்த்த மாங் காய்களில் இரண்டு மூன்று பறித்துவரச் செய்து, எதிரே ஒரு தட்டில் உப்புத் தூள் மிளகாய்த்தூள் வைத்துக் கொண்டு, கத்தியால் அரிந்த மாங்காய்த்துண்டங்களை அவற்றில் அமுக்கி, ருசித்து ரசித்துச் சாப்பிடுகிறார்கள்! எதிரில் சென்ற என்னிடம் கொஞ்சம் தந்தார்கள்.
“மாங்காயா முக்கியம்? கூட்டம் துவங்கும் நேரம் கடந்துவிட்டது. காலேஜ் function ஆச்சே அண்ணா! புறப்படுங்க!” என்றேன்.
“காலேஜ் மாணவர்களுக்கும் என் பழக்கம் தெரியுமய்யா! ஒரு மணி நேரம் லேட்டாய் போகலாம்! சாப்பிடு மாங்காயை!” என்கிறார்களே ஒழிய, பதற்றப்படவில்லை.
நிரந்தினிது சொல்லுதல் வல்ல அந்தப் பேரறிஞரின் சீர்மொழிகளை, இந்த ஞாலம் காத்திருந்து கேட்டதுதான் வரலாறு கூறும் செய்தியாகும்!
முதலமைச்சருக்கு முதல் விருந்து
“காங்கிரசைப் பூண்டோடு அழிப்பதுதான் இனி என். வேலை. எந்தக் காங்கிரசை இந்தத் தமிழ் நாட்டில் வளர்த் தேனோ, அந்தக் காங்கிரசை இந்தத் தமிழ் நாட்டில், வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தி ஒழிக்கப் பாடுபடுவேன். வருகிறேன்! என்று காஞ்சி மண்ணில் 1925-ல் கர்ச்சித்துத், தடியை ஓங்கித் தரையில் தட்டிச் சூளுரைத் தார் தந்தை பெரியார். அந்தக் காஞ்சித் தளபதியோ, தந்தையின் கொள்கைச் செல்வங்களின் வாரிசல்லவா அதனால், தந்தையின் சூளுரையைத் தனயன் மெய்ப்படுத்துவேன் என வெஞ்சினங் கூறித் தனிவியூகம் அமைத்துத், தளராது போரிட்டு, 1967-ல் காங்கிரசைப் புறங்கண்டு விட்டாரே!
6. 3. 1967 அன்று அண்ணா பதவி ஏற்பதாக அறிவிப்பு வந்து விட்டது. ஆர். எம். எஸ். ஊழியர்களின் நீங்காத் துணைவரல்லவா? நான்கு மாதங்களுக்கு முன்புதானே மருத்துவமனையில் இருந்து, யாருக்கும் தெரியாமல் புறப்பட்டுக், காய்ச்சலின் உச்சக்கட்டத்திலும், காரில் ஏறிச் சென்னையிலிருந்து சோலையார்பேட்டை வந்து திரும்பி னார். வேறு எப்போதும் அண்ணா, இவ்வாறு உடல் நலிவு ஏற்பட்டபோது அய்யோ, ஒத்துக்கொண்டோமே, போய்த் திரவேண்டுமே என்று போனதில்லையே!
சரி. அண்ணா வெற்றியை நாம் எப்படிக் கொண்டாடு வது? ஒரு விஷயத்தில் நாம் முந்திக் கொள்வோமே என்று. என் மாநில சங்கத் துணைத்தலைவர் திருச்சி எஸ்.ஏ. ரகீம், ம்ாநிலச் செயலாளர் C. நம்மாழ்வார் ஆகியோருடன் துங்கம்பாக்கம் இல்லம் சென்றேன். அன்று 5.3.67. கையில் என்னிடம் ஒரு பாக்கெட் மில்க் அல்வா இருந்தது. நேரே அண்ணாவிடம் சென்று “அண்ணா வாயைத் திறங்க” என்றேன். திறந்தார். “அண்ணாந்துகிங்க அண்ணா!” அண்ணாந்தார். கைநிறைய அல்வாவை எடுத்து வாயில் போட்டேன். “அட இது எதுக்குய்யா” என்று சொல்லிச் சிறிது மென்றவர்-மெல்ல விழுங்கி விட்டு “அடடே, நல்லாவேயிருக்கிறதே! இன்னும் கொஞ்சம் போடுய்யா!” எனச் சொல்லிய வண்ணம் வாயை அகல விரித்தார். எனக்கென்ன தயக்கம்! கொஞ்சங் கொஞ்சமாக வாயில் இட்டேன். ரசித்துத் தின்றார். அருகிலிருந்த நடிப்பிசைப் புலவர் கே ஆர். ராமசாமிக்கு மிச்சமிருந்த அல்வாவில் சிறு அளவு தந்தேன்.
“இது அச்சாரந்தான். அடுத்தபடியா பெரிய சங்கதி இருக்கு எங்க RMS Union சார்பா ஒங்களுக்கு ஒரு விருந்து கொடுக்கணும். அதுக்குத் தேதி, நேரம் வேனும் இப்பவே சொல்லிடுங்க!” என வற்புறுத்தினேன்.
“இப்ப எங்கய்யா விருந்துக்கெல்லாம் நேரம் இருக்கப் போகுது?”
“நீங்க சட்டப்படி நாளைக்குத்தான் முதலமைச்சர், அதனாலெ, எங்க அண்ணாவா இருக்கும்போதே சம்மதம் சொல்லிடுங்க.”
“சரிய்யா. 14.ந்தேதி வச்சிக்க. ராத்திரியாயிருந்தா வம்பிருக்காது. எங்கே? மெட்ராஸ்லதானே?”
“ஆமாண்ணா ஒங்களுக்கு அதிகத் தொந்தரவு இல்லாமெப் பாத்துக்கிறேன்! வருகிறோம்!“
இசைவு கிடைத்தது. யாருக்கு வரய்க்கும் இந்த நற்பேறு! தலைப்பிள்ளை பெற்ற தாயின் மகிழ்ச்சியும் இதற்கு ஈடோ? முதல் விருந்து எங்கள் விருத்தில்லவா! ஆகா! ஆகா துள்ளிக் குதிக்காத குறைதான்!
மூவரும் தனியே அமர்ந்து சிந்தித்தோம். அமைதியாக விருந்து நடைபெற வேண்டும். ஒட்டலில் அவ்வளவு நாகரிகமாகாது. யாருடைய வீட்டிலாவது செய்தால்தான், Privacy இருக்கும். கழகத் தலைவர்கள் வீட்டில் செய்வது முறையல்ல...ம்...நண்பர் ரகீம் கைகுலுக்கினார். “இங்கே எங்க மாமா வீடு ஒண்னு இருக்குதுகக. அநேகமா, அது இப்ப காலியாதான் இருக்கும். இங்கே தான், ஜெமினி ஸ்டுடியோவுக்குப் பின்னாலே. வாங்க, இப்பவே போய்ப் பார்ப்போம்! எனவே, புறப்பட்டோம். தனியான சிறிய பங்கள்ா. போதும் அருமை, அருமை” என்றேன். திருச்சியில் ஒய்வுபெற்றுத் தங்கியிருந்த எங்கள் தலைவர் ஏ. பி. துளசிராம் அவர்களையும் அழைத்துக் கொண்டோம். RMS ஊழியர்களில் முக்கியமானவர்கள் பங்கு பெற்றனர். கலைஞர் இல்லாமலா? அவரும் வந்தார் விருந்துக்கு!
ரகீமின் நேரடிப் பார்வையில் நெய் மணக்கும் மட்டன் பிரியானி, தக்க பக்கவாத்தியங்களுடன் பிரமாதம். நமது இயக்கத்தின் சிறந்த தொண்டரும், புகைப்பட நிபுண்ருமான நண்பர் சாமுவெல் அன்று எடுத்த படங்கள் என்னிடம் உள்ளன. அண்ணா எவ்வித இடையூறுமின்றிக் குறைந்த துர்ரமே வந்து செல்ல வேண்டியிருந்தது. கலைஞரும் இணைந்து சிறப்பித்தார். எங்கள் ஆனந்தத் துக்கும் அளவிண்டோ?
எந்த விளம்பரமும் இல்லாமல்தான் இந்த விருந்தை நடத்தினோம். ஆனால் அஞ்சல் துறையாயிற்றே-செய்தி பரவாமல் போகுமா? அனைத்து இந்திய மட்டத்தில், தொழிற்சங்க ரீதியாக, எங்களுக்கு எதிரிகள் வலது கம்யூனிஸ்ட் அனுதாபிகளான எங்கள் ஊழியர்கள். ஆனால் இடது கம்யூனிஸ்ட் அனுதாபிகள், என்றும் எங்கள் கூட்டணி. தி.மு.க. அனுதாபிகளின் கைதான் தமிழகத்தில் உயர்வு.
அஞ்சல் துறைத் தோழர்களான G. லட்சுமணன் C. M. பரிபூரணம், கடலூர் N. C. அம்பலவாணன், திருச்சி மாணிக்கவாசகம், தொலைபேசித்துறை கண்க சொரூபன், முத்துராக்கப்பன் ஆகிய பல அருமை நண்பர்கள் என்னிடம் சண்டைக்கே வந்து விட்டனர். அண்ணா எங்களுக்கும் சொந்தமில்லையா என்று! இண்ங்குவது தவிர இவர்களோடு பிணங்க முடியுமா?
சரியென்று துணிந்து, அண்ணாவிடம் அடுத்த மாதமே. இதற்காகச் சென்று, விவரம் சொன்னேன். அருகில் - அப்போது பேராசிரியர் மா.கி. தசரதன், மாயூரம் தொகுதி. நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரவேலு இருந்தனர். “விருந்தை என் வீட்டில் வைத்துக்கொள்ளலாம் கவிஞர்” என்றார் தசரதன். அவர் சுத்த சைவம். பயமில்லை யல்லவா? அண்ணா ஒத்துக்கொண்டார்கள் வருவதற்கு.
இந்த விருந்தில் பிரியாணியில்லை. எல்லாமே மீன், மீன், மீன். பல்வகைத் தயாரிப்புகள். “எங்கே கருணா னந்தத்தைக் காணோம்” என்று அண்ணா வேடிக்கை யாகக் கேட்க, “அவரை மீன் மறைத்துக் கொண்டிருக்கிறது” என்று கலைஞர் கேலியாகப் பதில் கூற, நண்பர் சுபாசுந்தரம் ‘கிளிக்’ செய்துகொண்டே யிருந்தார்.
கடலூர் அம்பலவாணன் “எங்களுக்கும் உங்களுக்கும். தொடர்பு நெருக்கமாக ஏற்பட, ஏதாவது ஒர் அமைப்பு வேண்டும், அண்ணா!” என்று கோரினார். அண்ணா என் பக்கம் கையைக் காட்டி, “இதோ, இவர் ஒருவர் போதுமே!” என உறுதியுடன் பதில் உர்ைத்தார்கள். அனைவர்க்கும் மகிழ்ச்சியே!
நடிகர்களை அழைத்து வருவது ஏன்?
ஈரோட்டிலிருந்து, என் பெற்றோரைப் பார்க்கத் திருத்துறைப்பூண்டி வந்திருந்தேன். மறுநாள் திருவாரூர் கருணாநிதி தியேட்டரில் அண்ணாவின் ‘சந்திரோதயம்’ நாடகம்-அதாவது 18-8-1944 இரவு. தலைவர் பழைய கோட்டை இளைய பட்டக்காரர் என். அர்ச்சுனன். பார்வையாளராக இருந்து நாடகம் பார்த்த பின், முடிவில் தான் அண்ணாவைச் சந்தித்தேன். நாடகத்தின் இறுதியில் எம். ஆர். ராதா, அண்ணாவுக்கு ஒரு மோதிரம் பரிசளித்தார். ஆனால், அண்ணா பேசும்போது, தான் மோதிரம், ரிஸ்ட் வாட்ச் போன்ற அணிகலன்களை அணிவதில்லை என்று கூறி, நன்றியுடன் அவருக்கே திரும்பவும் அணிவித்து விட்டார், அவர் தந்த மோதிரத்தை!
“எப்படியண்ணா இந்தப் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டீர்கள்? ஏன்?” என்று கேட்டேன். சொன்னார் “ஏன்யா! இது நல்ல பழக்கந்தானே! ஒண்ணும் பயமே யில்லை பாரு. நான் நெனச்ச இடத்திலே படுப்பேன். படுத்தவுடன் தூங்கிடுவேன். இதையெல்லாம் போட்டுக்குனு படுத்தாத் தூக்கம் வராது; பயந்தான் வரும்; எவனாவது கழட்டிக்கினு போயிடுவானோண்ணு!”
ராதாவும் இதை ஏற்றுக் கொண்டார். அவர் விரைவாக நமது பக்கம் வந்துகொண்டிருந்த நேரம் அது. சிந்தனைச் சிற்பி சி. பி. சிற்றரசு எழுதி, இவருடன் நடித்த ‘போர் வாள்’ நாடகம், பார்ப்போரைப் புல்லரிக்க வைக்கும். ராதாவின் வசனம் உணர்ச்சிப் பிழம்பாக நம்மை மாற்றி விடும். அதனால்தான் திருச்சியில் அழகிரி அண்ணன் ராதாவுக்கு “நடிகவேள்” பட்டம் தந்தார். நடிகமணி டி. வி. நாராயணசாமிக்குப் பிறகு, எம். ஆர். ராதா நம் கழகத்தில் ஒன்றியவர். பின்னர், கலைவாணர்-இவர் முழுமையாக நம் இயக்கத்தவர் என்று கூற இயலாவிடினும், நாம் தேர்தல்களில் போட்டியிடத் தொடங்கியதும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுந்தான் தேர்தல் பிரச்சாரம் செய்தார். பின்னர், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி, தமது உடல் பொருள் ஆவி மூன்றை யுமே கழகத்திற்காக ஈந்தார். பிறகு, சிறிது காலமே எனினும், நடிகர் திலகம் சிவாஜிகணேசன், கழகத்தின் நிதி திரட்ட அரும்பாடு பட்டுள்ளார். கடைசியில், இலட்சிய நடிகர் எஸ். எஸ். இராஜேந்திரன். கட்சி வளர்ச்சியில் பெரும்பங்கு இவருக்கு உண்டு.
திரைப்படத்துறையில் உச்சியில் நின்ற காலத்தில், இவர் முதன்முதலில் அண்ணாவின் பிறந்த தேதியை ரகசியமாகக் கேட்டறிந்து, அண்ணாவின் 50-ஆவது பிறந்த நாள் அன்று, 50 சவரன் அளித்துச் சிறப்பித்தவர்.
ஒருநாள் மாயூரம் பொதுக் கூட்டத்துக்கு அண்ணாவும் ராஜேந்திரனும் இவரது பிளிமத் காரில் வந்தனர். கூட்டத்தில் அண்ணா இலட்சிய நடிகரைப் பாராட்டிப் பேசினார். கூட்டம் முடிந்து என் வீடு சேர்ந்ததும், வா ராஜேந்திரன், இண்ணக்கி கருணானந்தம் வீட்லெ சாப்பா டுண்ணு, நீ வரும்போதே யூகமாச் சொல்லிட்டே, சாப்பிட்டுத் துரங்கு. காலையிலே போகலாம்’ என்றார் அண்ணா. ஆனால் எஸ். எஸ். ஆர். என்னிடம் தனியே வந்து, கையைப் பிசைந்தார். “ஒண்னுமில்லிங்க! காலையிலே ஷட்டிங் இருக்கு. மாயவரத்திலெ தங்காமெப் போனாத்தான், நேரத்திலே மெட்ராஸ் சேர முடியும். அண்ணாகிட்டெ நான் எப்படிச் சொல்வேன். இதெ நீங்கதான் சொல்ல முடியும்!” என்றார் ராஜூ. சொன்னேன். சரி, பெட்ரோல் டாங்கை full பண்ணி கிட்டு வரச்சொல்லு அர்ஜுனனை. நான் அதுவரைக்கும் தாங்குகிறேன்” என்று என்னிடம் கூறிக்கொண்டே அண்ணா படுத்து விட்டார்கள். அம்மாதிரியே சிறித் உறங்கியபின் எழுந்துவிடவே உடனே சென்னை நேர்க்கிப் புறப்பட்டனர் இருவரும்.
அண்ணா அவர்களிடம் ஒரு நல்ல பழக்கம். கார் ஒடும் போது தூங்கமாட்டார்கள். அப்படித் தூக்கம் வந்தால் “சுந்தா! காரை ஓரமா நிறுத்திட்டு, நீயும் தூங்கு” என்று சொல்லிவிட்டுத் தானும் காரிலேயே படுத்துக்கொள்வார்கள். இந்த சுந்தா என்கிற சுந்தர்ராமன் அண்ணா விடம் தன் வாழ்நாள்வரை (25.7.1961)-காரோட்டிய தல்லவர். தோற்றம் மாத்திரம் முரடாகத் தெரியும்.
கடைசியாக இயக்கத்துக்கு வந்தவராயினும், திட்டமிட்டு, உறுதியாக ஆழமாக வேரூன்றி, வாழ்விலும் பொதுப் பணியிலும் தவறுகளின்றி, நிதானமாக முன்னேறி நிலைத்தவர் புரட்சி நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன். கழகம் தேர்தலில் நிற்கத் தொடங்கிய பின்னர், இவரது இன்றியமையாமை நன்கு புலப்பட்டது. இவருடைய வளர்ச்சிக்கும் கழகம் உறுதுணையாக இருந்துள்ளது. அண்ணாவின் பரிந்துரையோடு அப்போது இவருடன் இணைந்தவர்தான் இராம. வீரப்பர். என்னைப் போன்றவர்களெல்லாம் குடும்பத்துடன் M.G.R. படம் தவிர வேறு. படம் பார்ப்பதில்லை, பிடிவாதமாய்!
இவரும் என்னிடத்திலே மிக்க அன்பு காட்டினார். நீரிழிவு நோயினால் அவதிப்பட்ட நேரத்தில் கையில் எப்போதும் பிளாஸ்கில் காப்பி வைத்துக் கொண்டு நான் அடிக்கடி சாப்பிடுவேன். இதைக் கவனித்தவர், “காப்பி உடலுக்குக் கெடுதல்தானே! இதற்குப் பதிலாக மோர் வைத்துக்கொண்டு எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடுங்க, நல்லது” என்று அறிவுறுத்தினார். நானும் ஏற்றுச் செய்ல் படுத்தி வருகிறேன் எம்.ஜி.ஆர் அவர்களின் அறிவுரையை.
இப்படி எம்.ஜி.ஆர். கட்சிக்குள் வந்த பிறகு, அண்ணாவிடம் கேட்டதுண்டு. “ஏன் அண்ணா? நடிகர்களை இந்த அளவு நம் மோடு சேர்த்துக்கொள்ளத்தான் வேண்டுமா? நடிகர்கள்-அதிலும் திரைப்படத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள்-நிறைய sentiments.க்கு இடங்கொடுத்து, மூட நம்பிக்கைகளை வளர்ப்பவர்களாயிற்றே” என்றெல்லாம் நிறைய வினாக்களை எழுப்பி வந்தோம். இவற்றுக்கெல்லாம் தனிப்பட்ட முறையில் அவ்வப்போது சமாதானங்கள் சொல்லிவந்தாலும்-இதைப் பற்றிச் சற்று விளக்கமாக 1953.செப்டம்பரில் அண்ணா நெல்லை மாவட்ட இரண்டாவது சமூக சீர்திருத்த மாநாட்டில் உரையாற்றும்போது ஒரு கருத்துத் தெரிவித்தார் :-
“சமுதாய சீர்திருத்தந்தான் அரசியல் சீர்திருத்தத்தின் அடிப்படை. சமுதாயம் மூடநம்பிக்கைகளிலிருந்து விடு பட்டுத் தெளிவு பெற்றால்தான் அரசியலில் விழிப்புடன் பங்கேற்க முடியும்.
ஆட்சிச் சகடத்தை ஒட்டுகின்ற மக்கள், தெளிவு பெற்ற திறமையாளர்களாக இருக்க வேண்டும். ஒர் அழகான வண்டியில், அரேபியக் குதிரையைப் பூட்டி, உள்ளே நான்கு நீக்ரோக்களை உட்காரவைத்து, வண்டி ஒட்டுவதற்கு ஒரு பிக்மியனை நியமித்தால், அவனால் அந்த அரேபியக் குதிரையை அடக்கி, வண்டியை ஒட்டி, ஒழுங்காகக் கொண்டுபோய்ச் சேர்க்க முடியுமா?
மூடநம்பிக்கைகளிலிருந்து மக்களை விடுவிக்கத்தான், தி.மு.க. மாநாடு என்றாலே அது ஒரு கல்லூரி வகுப்பு போலே, அறிவியலையும் தத்துவத்தையும் விளக்குகின்ற பாங்கிலே அமைந்திருப்பதைக் காணலாம். சொற்பொழிவும், இசையும், கலையும், நாடகமும் இதற்காகத்தான் நிகழ்த்துகிறோம்.
நான் நடிகர்களை நிரம்பப் பயன்படுத்துவது ஏனென்றால், ஒரு காலத்தில் இந்த நாடகத் துறையினர்தான் நாட்டில் மூடக் கருத்துகளைப் பரப்பியவர்கள். இவர்கள் ஆடிக் காட்டிய ஆட்டமும், பாடிக் காட்டிய பாட்டும், பேசிய வசனமும், பூசிய வேஷமுந்தான் நாட்டை இந்தத் தாழ்நிலைக்கு வீழ்த்தின! எனவே, இவர்கள் ஊட்டிய நஞ்சை இவர்களே உறிஞ்சி எடுக்க வேண்டும் என்ற கருத்தில்தான், இவர்களை நான் இப்போது என்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறேன்; என்னுடன் அழைத்து வருகிறேன்!“
-அண்ணாவின் இந்தக் கருத்தைக் கலையுலகினர் இன்று சிந்திக்க வேண்டும் நன்றாக!
நீயுமா, புரூட்டஸ் ?
அறுதிப் பெரும்பான்மை பெற்று உறுதியாகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கப் போகிறது என்பது தெரிந்தவுடன், நான் மாயவரத்திலேயே ஒரு பட்டியல் தயாரித்தேன். அமைச்சரவையில் யார் யார் இடம்பெறக் கூடும் என்ற என் யூகம் சரியாகவே இருந்தது; ஒன்று தவிர! அமைச்சரவைப் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு “அது யாரண்ணா, முத்துசாமி?” என்று கேட்டேன். படத்தைக் காண்பித்தார்கள். பெரிய மீசையுடன், அது வரை நான் பார்த்தறியாத முகம். அவரைத் தவிர மற்றையோர் கழகத்திற்குப் புதியவரல்லர்; அறிமுகமானவர்களே.
இந்தச் சில நாள் இடைவெளிக்குள் எவ்வளவோ ஆரூடங்கள் சோதிடங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் உந்துதல்கள் கெஞ்சுதல்கள்! .-- தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து மந்திரிசபை பதவி ஏற்ற காலம் வரை, தினமும் குறிப்பிட்ட ஒருவரை அமைச்சராக்க வேண்டுமென்று கோரி நாளொன்றுக்கு 50, 60 தந்திகள் வந்த வண்ணம் இருந்தன, அண்ணா பெயருக்கு! அருகிலிருந்த எங்களுக்கு இவற்றை வாங்குவதும் பிரிப்பதும் படிப்பதும் ஒரு வேடிக்கை நிகழ்ச்சியாகவே இருந்தது, இவ்வளவுக்கும், அந்தப் பெயர் கட்சியில் அறிமுகமான பெயரும் அல்ல, ‘அவர் மீனவக் கிறிஸ்துவர். பெயர் ஜி. ஆர், எட்மண்ட், அவரை மந்திரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ -- அண்ணா வேதனையோடு குறிப்பிட்டார் -- இந்த மாதிரி முறையிலே ஒருத்தர் மந்திரியாகி விடலாம்னா, நாமெல்லாம் எவ்வளவு ஏமாளிகள்னு” நெனக்கிறாங்க பாருங்கய்யா! என்று.
இதேமாதிரியான இன்னொருவித முறையை, ஏற்கனவே ஒரு நண்பர் கையாண்டார். அதாவது தென் சென்னைத் தொகுதியில் நாடாளுமன்றத்துக்கு அண்ண்ர் போட்டியிட வேண்டும் என்று கழகம் தீர்மானித்தது. அண்ணாவுக்கு வழிவிடும் பொருட்டு நாஞ்சில் மனோகரன் தென்சென்னையிலிருந்து மாறி, வட சென்னைத் தொகுதியில் போட்டியிடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டு விட்டது. இவ்வளவுக்கும் பிறகு, நுங்கம்பாக்கம் அவென்யூ தெருவில், நாள்தோறும் ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் வரிசையாக அணிவகுத்து நிற்பதும், விண்ணப்ப மனு ஒன்றை அண்ணாவிடம் அளிப்பதும் வழக்கமாகியிருந்தது. என்ன கோரிக்கை என்றால், ‘எங்கள் தொழிற்சங்கத் தலைவர் எஸ். இராகவானந்தம் அவர்களுக்குத் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி தரப்பட வேண்டும்’ என்பது!
இதனால் எங்கள் எல்லாருக்கும் தாங்க முடியாத எரிச்சல் ஏற்பட்டது. “என்னய்யா, இப்படியெல்லாம் Irritate செய்கிறதா? தொழிற்சங்கத்தின் வேலையிதுவா? இது நமக்கெல்லாம் புரியாத் வேலையா? நம்மையெல்லாம் தற்குறி என்று நினைத்துக் கொள்வதா?” என்று அண்ணர் ஒருநாள் வேதனையை, வெளிப்படுத்தினார். 1960-களில் மிகவும் தாமதமாக தி. மு. கழகத்தில் நுழைந்த ஒரு தோழரின் கைங்கர்யம் இது. அவர் அத்துடனில்லாமல் கலைஞரிடம் நேரிலேயே கேட்டார்-“அண்ணா எங்கு வேண்டுமானாலும் நின்று ஜெயிக்கலாம். நான் தென் சென்னையில் மட்டுமே நிற்க முடியும். அதனால் எனக்கே தரப்பட வேண்டும்” என்று. கலைஞர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று யூகிக்கலாமே
Black Prince of Annamatai – அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கருப்பு இளவரசன் என்று பெயர் பெற்ற கடலூர் இரெ. இளம்வழுதி-வழக்கறிஞர். அவர் சாக்கடைத் தண்ணீரில் பேனாவைத் தோய்த்து எழுதியது போல், எப்படியெல்லாம் கடிதங்கள் வரைந்தார் கழகத் தலைவர்களுக்கு! அவரை அமைச்சரவையில் சேர்க்க வில்லையாம். அதற்காக இழிமொழிகள் வசவுகள் சாபங்கள் தாபங்கள்!
இவரைவிட நீண்ட நாட்களாகக் கட்சியிலிருந்து வந்த இன்னும் இருவர், மேலும் அநாகரிகமாக நடந்து கொண்டனர். அவர்களிருவருக்கும் தாமே நேரில் வந்து அண்ணாவிடம் கேட்க அச்சம். தத்தம் துணைவியார், மக்கள்-இவர்களை அனுப்பினார்கள். பட்டிக்காட்டுப் பெண்களைப் போல் அவர்கள் அழுது அரற்றிப் புலம்பி மாரடித்து மண்ணை வாரி இறைத்து அண்ணாவின் வீட்டில் அட்டகாசம் செய்தனர். எல்லாரும் பார்த்துக் கொண்டுதாணிருக்கிறோம்; அண்ணாவும் அமைதியாக அமர்ந்திருக்கிறார்!
இதே போன்றுதான், தேர்தலில் நின்று தோற்றுப் போனவர் ஒருவர், “அய்யய்யோ! நான் ஜெயிக்கலியே! நான் என்ன செய்வேன்! என்னை மந்திரியாக்க மாட்டீங்களா? அய்யோ! நீங்க உள்ளே போயி உக்காரும்போது நான் வெளியிலேயே நிற்கிறதா?” என்று சுயநினைவு அற்றவராய்த் தள்ளாடி மயங்கி ஓவென்று கதறிக் கதறிப் பல நாட்கள் அழுதார்!
அண்ணாவிடம் கேட்டேன் தனியாயிருக்கும் போது “அண்ணா! எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொன்னிங்களே - இதையெல்லாம் தாங்கிக்கதான் வேணுமா? பாக்கிறபோதே எங்களுக்கெல்லாம் ஆத்திரமும் கோவமும் வருதே-அவுங்களை நாமே தண்டிக்கலா மாண்ணு! இப்படி நம்ம அருமைத் தோழர்களே செய்றாங்களே? பதவின்னாபத்தும் பறந்து போயிடுமா? தொலைவிலிருக்கிற வெற்றி பெற்ற தோழர்களோ, ஒட்டுப் போட்ட மக்களோ என்ன நெனப்பாங்க? ஒங்களாலே இதை, எப்படித் தாங்கிக்க முடியுது?” என்று. அவர் சொன்னார் -“ஷேக்ஸ் பியர் Play ஜூலியஸ் சீசர் படிச்சோமே! வெறும் பாடமாவா படிச்சோம்; படிப்பினைண்ணு நெனைச்சிதானே படிச்சோம்! ‘நீயுமா புரூட்டஸ்’ணு சீசர் கேட்டான்-நானும் கேட்க வேண்டியதுதானா? ‘நீயுமா நடராஜன்? நீயுமா சின்னராஜ்? நீயுமா தர்மலிங்கம்ணு: ஆனா, நான் கேட்கலை கேட்கமாட்டேன். ஏண்ணா; நான் சீசரில்லை! வெறும் அண்ணாத்துரை!” என்றார்ட் பொறுமையின் பிறப்பிடம், அமைதியின் இருப்பிடம், கண்ணியத்தின் உறைவிடம்-எண்ணற்ற சோகச் சிதறல்களை மென்று விழுங்கிவிட்டு!
தம்பி, தோழராகி விட்டார்!
ஈ.வெ.கி. சம்பத் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகிவிட்டர் என்ற பலமான வதந்தி திருச்சி மாநாட்டுக்கு முதல்நாள் பரவியிருந்தது. 1956-ல். அண்ணாவிடம் கேட்டேன். அதெல்லாம் இருக்காது என்று அலட்சியமாகச் சொன்னாலும், அண்ணாவின் உள்ளத்தில் சலனம் உண்டாகி விட்டது என்பதை முகம் காட்டியது.
ஆனால், மாநாட்டில் உரையாற்றும்போது சம்பத் “நான், அண்ணாவின் கையைப் பிடித்துக்கொண்டுதான் நடக்கக் கற்றுக் கொண்டவன். என் கையைப் பிடித்து, என்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர் அவர்தான். அவர் தின்றுவிட்டு மிச்சமாகத் தந்த எச்சில் பக்கோடாவைத் தின்று வளர்ந்தவன் நான். அவரை விட்டு விலகி நான் வேறெங்கே போவேன்?” -என்ற பாங்கில் பேசினார். நம்பும்படியாகவே இருந்தது அப்போது!
டிக்கட் விற்கும் பெரிய Counter என் தலைமையில். தலைமைக் கழக சண்முகம், தேவராஜ், மாயூரம் காந்தி ஆகியோர் என் உதவிக்கு. பணம் எண்ணிக் கட்டி வைக்கது. ப. அழகமுத்து உதவி. நாவலர் புதிய பொதுச் செயலாளர்-மாநாட்டுத் தலைவர் அவர்தானே-தலைவரை முன்மொழிந்தும், வழிமொழிந்தும், பலரும் உரை நிகழ்த்துவது எங்கள் காதில் லேசாக விழுகிறது. நாங்கள் கருமமே கண்ணானவர்கள். எழுந்து போக முடியாது; கடைசியாக அண்ணா வழிமொழிவாரே - அந்தப் பேருரையை மட்டும் எப்படியாகிலும் கேட்டுவிட வேண்டும். என்ற ஆவல் எனக்கு. இவர் எங்கள் மாவட்டத்தில் பிறந்தார், படித்தார், பெண் எடுத்தார்-என்ற ரீதியில் பலரும் நாவலரைச் சொந்தம் கொண்டாடிப் பாராட்டினர். அண்ணா பேச எழுந்ததும் சண்முகமும் நானும் பந்தலின் எல்லையில், ஒரு ஒலிபெருக்கி முன்பு நின்று, காதைத் தீட்டிக் கொண்டோம்.
“தம்பி வா. தலைமை தாங்க வா. உன் ஆணைக்கு அடங்கி நடப்பேன் வா.” -அண்ணா ‘மைக்’ முன்பு வந்தார். சொன்னார். திரும்பினார். நடந்தார். அமர்ந்தார்! நீண்டதொரு சொற்பொழிவை எதிர்பார்த்து, எதிரில் நெருக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்த லட்சக்கணக்கானோர் ஏமாந்தனர். எனினும், திருக்குறள் போல் உலகத்தையே தன்னுள் அடக்கிய சிறிய உரையைக் இக்ட்டோரின் கையொலி அடங்க, நெடுநேரம் ஆயிற்று.
‘என்னங்க சண்முகம்! அண்ணா பேச்சைப்பற்றி என்ன தெனக்கிறீங்க?” என்றேன். தீர்க்கமான சிந்தனையும், தெளிவான கருத்துகளும் கொண்ட சிறந்த பேனா மன்னரான இந்தச் சஆமுகத்தை அண்ணா தான் தேர்ந் தெடுத்தார். வில்லாளனை அனுப்பி, இவரைத்தாமே அழைத்துவந்து, தலைமை நிலையத்தை ஒப்படைத்தார். சண்முகத்திடம். அவர் சொன்னார்- சொல்றதுக்கு என்னங்க இருக்கு. ஆப்ரகாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரைபோல்ண்ணு சொல்லலாம். மக்களாட்சித் தத்துவத்தை இப்படிச் சுருக்கித்தர வேற யாராலும் முடியாது. இதைத் தமிழில் சொல்றதை விட, இங்கிலீஷ்ல சொல்லிப் பாருங்க. ரொம்ப உயர்வாயிருக்கும். Come on my younger brother! Come on to lead! I will obey your commands!” உலகமே, இதைக் கேட்டா, அண்ணாவின் அறிவாற்றலை உச்சிமேல் வச்சி மெச்சிக்கொள்ளும்!” என்று.
நாவலரைத் தேர்ந்தெடுத்தது சம்பத்துக்குப் பிடிக்க வில்லையோ? ஆமாம்! நான்காண்டுகளில் அது வெடித்து விட்டதே! என்னிடம் ஒருநாள் சம்பத் சொன்னார். நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லிக்கு போறவன். யாரும் கடைசிவரை நீடிக்க முடியாது கட்சியிலே! அவ்வளவு சுகபோகம், வசதிகள், வாய்ப்புகள் அங்கே! பார்லிமெண்ட் ஹவுசின் ரத்தினக்கம்பளத்திலே, காலடிபட்டாலே சுருண்டு விடுவான் எவனும்” என்று. அவரே இப்படிச் சுருள்வார் என்று நானே எதிர்பார்க்க வில்லை!
அண்ணர் அவரிடம் எவ்வளவு எதிர்பார்த்தார்! தர்மலிங்கமும் அவரும், இரண்டுபேர்தான் நமது பிரதிநிதிகள் என நாடாளு மன்றத்தில் வாழ்ந்தபோது, சம்பத்தைத் திருப்திப்படுத்தக் காரில் டெல்லிவரை பயணம் போனார் அண்ணா. தாம் விலகுவதற்கு முன் கழகப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நீண்டதொரு விள்க்கக் கடிதம் அனுப்பினாரல்லவா-சம்பத், மாயூரம் கிட்டப்பா பொதுக்குழு உறுப்பின்ராகையால், அவருக்கும் அந்தக் கடிதம் ஒன்று வந்தது. அத்துடன், ஒரு துண்டுச் சீட்டில் “இந்தக் கடிதத்தை நண்பர் கருணானந்தம் அவர்களிடம் காண்பித்து, அவருடைய எண்ணத்தைத் தெரிவிக்குமாறு சொல்லுங்கள்” -எனவும் வரைந்தனுப்பி வைத்திருந்தார்.
அதை நன்கு படித்துவிட்ட நான், ஒரு பத்துப்பக்கம் உள்ள பெரிய கடிதம் எழுதினேன். அண்ணாவுக்கும். அவருக்கும் இடையே பிறந்து வளர்ந்த பாசம், நேசம். பற்று உறவு, அன்பு ஈடுபாடு இவற்றை ஒவ்வொன்றாக விளக்கி-நீங்கள் இப்படி நடந்து கொள்ளக்கூடாது. இந்த மாதிரி ஒரு கடிதம் எழுதியதே தவறு. எவ்வளவுதான். மனக்குறையிருப்பினும், அண்ணர்விடம் நேரில் பேசி விவாதம் செய்திட உங்களுக்கு, முழு உரிமையும், கடமையும் உண்டு-என்றெல்லாம் எழுதிச் சம்பத்துக்கு அனுப்பியதுடன், ஒரு பிரதி நகல் எடுத்து, அண்ணா அவர்களின் பார்வைக்கும் கொடுத்தனுப்பினேன். என்னுடைய இந்தக் கடிதத்தை அண்ணா அவர்கள் படித்ததும் வெகுவாகப் பாராட்டினார்கள் என்று கேள்விப்பட்டேன்.
பயனில்லாமல் போயிற்றே! ஒரு காலத்தில், பெரியாரின் வாரிசாகச், சட்டப்படித் தத்துப்பிள்ளையாக வருவார் என எதிர்பார்த்தேன். பெரியாரைப் பகைத்துக் கொண்டு, அண்ணா வெளியேறியபோது, அண்ணாவின் வாரிசாகவாவது சம்பத் நிலைத்திருப்பார் என்று நம்பினேன். அவர் தி. மு. கழகத்தில் தொடர்ந்து இருந் திருந்தால் ஆட்சிப் பொறுப்பில் சிறந்த நிர்வாகியாக விளங்கியிருப்பாரே! காமராஜர் வாழ்ந்த வரையில் அவரிடம் விசுவாசம்.அவர் பிணமாகி வீழ்வதற்குள் இந்திராகாந்தியிடம் விசுவாசம் என்று அவரது தேசியப் பற்றும் தடம் புரண்டுதான் போயிற்று!
கோடம்பாக்கம் இந்தி எதிர்ப்பு மாநாட்டை அவர் நடத்தியபோது, மாயூரத்திலிருந்து ஓடோடி வந்தேன். வழக்கமான டிக்கட் விற்கும் பணி என்னிடம் தரப்பட வில்லை. அண்ணா முன்னிலையில் சம்பத்திடம் ஏனென்று கேட்டேன். “நீங்க இப்பதானே ஜெயில்ல இருந்துட்டு வந்திருக்கீங்க. ரெஸ்ட் எடுங்க” என்றார் சம்பத், இது 31.7.1960ல். அன்றைய மாநாட்டில், “தம்பி சம்பத் சொன்னான்” என்றுதான், வழக்கப்படியே பேசினார் அண்ணா! ஆனால்... ஆனால்... ஆனால்!
அடுத்து ஆறு மாதங்களுக்குள் சடசடவென்று முன்னேறி, உண்ணாநோன்பு தொடங்கிவிட்டார் சம்பத், அண்ணா அளவிறந்த உளைச்சலுற்ற மனத்தினராய்இனிச் சம்பத்துத் தேறமாட்டான் என்று இறுதியாகப் புரிந்துகொண்டு “தோழர் சம்பத், தன் உண்ணா நோன்பைக் கைவிடுவார் என்று நம்புகிறேன்” என்று, பாஷையை மாற்றிக்கொண்டாரே!.24.2.1901ல் தன் அறிக்கையில்!
பிரிந்து சென்றபிறகு அண்ணாவும் சம்பத்தும் சந்தித்துக் கொண்டார்களோ என்னவோ எனக்குத் தெரியாது. நான் பார்க்கவில்லை இருவரையும் ஒரேயிடத்தில்!
திருச்சியில் அடிக்கல் நாட்டினார்
நான் ஒரு விண்ணப்பம் கொடுத்தேன் முதலமைச்சர் அண்ணா அவர்களிடம், “என்னய்யா, நீ கூட மனு கொடுக்க ஆரம்பித்து விட்டாய்?” என்றார். “நீங்கள்தானே சொல்லியிருக்கிறீர்கள், ஜனநாயக ஆட்சியில் பொது மக்கள் விண்ணப்பம் கொடுப்பதும் தவறல்ல. சிபாரிசுக்காகத் துண்டுத்தாள் தருவதும் குற்றமல்ல என்று.” “சொன்னது மெய்தான். ஒட்டுப்போட்டு ஆட்சியில் அமர்த்திய மக்கள், நம்மிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வார்கள்? அதற்காக, அவர்கள் சொல்வது அனைத்தையும் செய்துவிடவும் முடியாது! நியாயமான கோரிக்கையா எனப் பார்த்து, உரிய முறையில் முடிக்கவேண்டும். உதாரணமாக, ‘ஒரு அதிகாரி சரியில்லை; அவரை எங்கள் ஊரிலிருந்து மாற்ற வேண்டும்’ என்பார்கள். சரி. அவரை வேறொரு ஊருக்கு மாற்றினால் அங்கு போனால் மட்டும் அவர் நல்லவராகி விடுவாரா? அதனால், அம்மாதிரி கோரினால் நான் ஒத்துக் கொள்ளமாட்டேன். ஆனால், அவர் ஊழல் செய்கிறார் என்று நிரூபிக்க முடிந்தால், அவரை வீட்டுக்கு அனுப்பவும் தயங்கமாட்டேன். சரி, இப்போது உன் மனு என்ன? சொல்லு!” என்று கேட்டார் அண்ணா.
“திருச்சியில், பிளாசா டாக்கீஸ் அருகில், எங்கள் RMS சூப்பரிண்டெண்டெண்ட் அலுவலகம் இருக்கிறது. அதன் எதிரே சிறிது புறம்போக்கு நிலம் தனியார் உபயோகத்தில் இருந்து வருகிறது. அந்த இடம் எங்களுக்குக் கிடைத்தால், தொழிற்சங்கத்துக்கு ஒரு சிறு கட்டடம் கட்டிக் கொள்வோம். திருச்சியிலுள்ள எங்கள் கோட்டக் கிளையினர் இப்போதே 5000 ரூபாய் நிதி திரட்டி வைத்துள்ளனர்- என்றேன். உடனே ஆவன செய்யுமாறு திருச்சி கலெக்டர் திரு. ஹரிபாஸ்கர் அய். ஏ. எஸ். அவர்களுக்குப் பரிந்துரைத்தார் அண்ணா.
அண்ணாவிடம் நேரே இந்தச் சிறு விஷயத்துக்காக வர வேண்டிய சூழல் எப்படி நேர்ந்தது? திருச்சியிலுள்ள என் நண்பர் H. பித்சை ஒருநாள் மாயூரம் ஓடிவந்து என்னிடம் ஓவென அழுதார். தேற்றி, விவரம் கேட்டேன். மேற்படி புறம்போக்கு நிலம் சம்பந்தமாக வருவாய்த்துறை சிறு அலுவலர்களிடம் போய் விசாரித்தபோது, அவர்கள் மரியாதையின்றிப் பேசிவிட்டார்களாம். “இதை உங்களுக்குப் பெற்றுத் தருவது இனி, என் கடமை” என உறுதி கூறி அவரை அனுப்பினேன். நடந்தது!
இந்தக் கட்டடத்துக்கு அண்ணாதான் அடிக்கல் நாட்ட வேண்டுமெனவும் திருச்சி நண்பர்கள் விழைந்தனர். “இது சிறிய நிகழ்ச்சியாகும்; இதற்காக அண்ணாவின் நேரத்தை வீணாக்கிடக்கூடாது; திருச்சிக்கு வேறு சந்தர்ப்பத்தில் வரும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்” - என்று சொன்னேன். அவ்வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அன்றைக்கு அங்குள்ள தொலைபேசி ஊழியர்களின் வேண்டுகோளுக்கிணங்க, (மச்சான்) அன்பில் தர்மலிங்கம் வேறொரு விழா ஏற்பாடு செய்திருந்தார். நான் ஊடே புகுந்து, அதனை ரத்துசெய்து, எங்கள் கால்கோள் விழாவுக்கு மட்டும் அண்ணாவிடம் ஒப்புதல் பெற்றேன்.
எங்கள் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தின் உள்ளேயே மேடை அமைத்து விழா நடத்தினோம். அப்போது திரு. தியோடர் பாஸ்கரன் அவர்கள் அதிகாரி. என்பால் பேரன்பு பூண்டவர். இவரே சிறந்த இயற்கை விஞ்ஞானி. ஆங்கில எழுத்தாளர். எங்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கியதோடு, விழாவிலும் பேசினார். என் தலைமையில் கூட்டம். நமது பழம் பெரும் தொழிற் சங்கவாதி பொன்மலை பராங்குசம், தொலைபேசிச் சங்கத்தின் செயலாளர் பத்மாவதி நடேசன் ஆகியோரும் உரையாற்றினர். நண்பர் பிச்சை, தானே அப்போது மெட்டமைத்த தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி, தன் 5 வயது மகன் மனோகரனைக் கொண்டு அண்ணாவுக்கு மாலை சூட்டினார். பத்மாவதி நடேசன், தங்கள் சங்கத்திற்கும் இடம் வேண்டுமெனக் கோரினார்.
அண்ணா பேருரையில், எங்கள் கண்காணிப்பாளர் திரு எஸ். டி. பாஸ்கரன் அவர்களைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள்.
“ஒரு குடும்பத்தில் மகனுக்குத் தந்தை சில சலுகைகள் செய்யும்போது, மகள் சும்மாயிருக்குமா? தனக்கும் ஏதாவது கேட்க எண்ணுமல்லவா? அதே போல, இன்று நான், RMS மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்குச் சிறியதொரு இடத்தை வழங்கியது போல், தங்களுக்கும் அளித்திட வேண்டுமெனத் திருமதி பத்மாவதி நடேசன் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் விருப்பமும் நிறைவேற ஆவன செய்கிறேன்” என வாக்குறுதி தந்தார்கள் அண்ணா.
அந்த அடிப்படைக் கல்லை, எதிரிலுள்ள புறம்போக்கு நிலத்தில் புதைத்து வைத்தோம், ஒரு மூலையில், மிகுந்த நம்பிக்கையோடு, கட்டடம் எழுப்ப எண்ணி! ஆனால் அண்ணா அவர்களே அப்போதைய மாவட்ட ஆட்சியரிடம் நேரில் எங்கள் முன்னிலையில் ஆணை பிறப்பித்தும், செயலளவில் எங்களுக்கு ஒன்றும் நடைபெறவில்லை.
பின்னர் அங்கு கலெக்டராக வந்த திரு. வைத்தியலிங்கம் I. A. S. என்னிடம் கேட்டுக் கொண்டார். “அந்த இடத்தில் ஜவான்பவன் வருகிறது. உங்களுக்கு வேறு நிலம் தருகிறேன்” என்று தரவில்லை அவரும்.
அவர் மேலும் தவறில்லை: follow up action என்பார்களே அந்தத் தொடர் நடவடிக்கை இரு புறத்திலும் இல்லாமல் போயிற்று. எங்கள் தோழர்களும் சிலர் மாற்று தலுக்கு ஆளானார்கள். சங்கமும் பிளவுற்றது. ஆனால் அந்தப் பணம் மட்டும் இன்னும் காத்திருக்கிறது!
அண்ணா திறந்துவைத்த அந்த அடிக்கல்லில் என் பெயரும் இருக்கிறது. விழாவில் எடுத்த அருமையான புகைப்படங்கள் திருச்சியில் என் நண்பர் முத்துக்குமாரிடம் உள்ளன.
ஆமாம், அந்தக் கல் இப்போது எங்கே? கட்டடம் எழும்பாவிட்டால் பரவாயில்லை! அந்த அடிப்படைக் கல்லே ஒரு நினைவுச்சின்னமாகுமே! யாராவது கண்டு பிடித்துச் சொல்லுங்களேன்! இது நடைபெற்றது 1967 ஆகஸ்ட் திங்களில். தேதி ஞாபகமில்லை!
(இந்த விழாவின் புகைப்படமும் 161-ஆம் பக்கத்தி லுள்ள நிகழ்ச்சியின் புகைப்படமும் நூலின் பின்புற அட்டையில் உள்ளன.)
நட்பிலும் இருபக்கம் உண்டு
பேராசிரியர் மா.கி. தசரதன் சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வராயிருந்து அண்மையில் மாண்டுபோனார். இவர் முதலில் காஞ்சியில் தமிழாசிரியராயிருந்தபோது அண்ணாவுக்கு அறிமுகமானார். பின்னர் நெருக்கம் அதிக மாகி, ஈழத்தடிகள் போன்றார் அண்ணாவுடன் சீட்டு விளையாடும்போது இவரும் அங்கு இணைந்துகொள்வதைப் பார்த்துள்ளேன். ஒரளவு இவருக்கு இயக்க ஈடுபாடும் இருக்கட்டுமென அண்ணா என்னிடம் சொன்னதைச் செயல்படுத்திட என். எஸ். இளங்கோ தஞ்சை மாவட்டச் செயலாளராக இருந்தபோது நடத்திய ஒரு தி. மு. க. மாநாட்டின் ஊடே, தசரதன் தலைமையில் ஒரு கவியரங் கம் நடத்தி, நானும் திராவிடம் பற்றிப் பாடினேன், காரைக்காலில்.
அண்ணா துங்கம்பாக்கத்தில் குடியேறிய சமயத்தில், இவரும் சென்னைக்கு மாற்றுதல்பெற்று அடிக்கடிஅண்ணா வீட்டில் தென்படுவார். 1967 தேர்தலுக்கு வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் பணி நடை பெற்றுவந்தபோது, ஒருநாள் அண்ணாவுடன் நான் மட்டும் இருந்த நேரத்தில் தசரதன் “அண்ணா, நான் வேலையை விட்டுவிலகி, நாடாளுமன்றத் துக்குப் போட்டியிட எண்ணுகிறேன்!” என்று மெல்லிய குரலில் அறிவித்தார். “வேண்டாம் தசரதன்! பேசாம வேலையைப் பார்!” என்று பதிலிறுத்ததன் வாயிலாக, அண்ணா அவர் கூற்றை serious ஆக எடுத்துக் கொள்ள வில்லை என்பதை நான் உணர்ந்தேன். ஒரு வாரம் சென்றது. வாய்ப்பு நழுவிப் போய்விடுமோ என்ற அச்சத்தினால், இதே மாதிரி ஒரு தருணத்தில், தசரதன் தனது கோரிக்கையைப் புதுப்பித்தார். “எங்கள் மாத்தூர் இந்தத் தொகுதியில் தான் வருகிறது. நிறைய உறவினர்களும் இருக்கிறார்கள் அண்ணா!” என்று கெஞ்சும் பாவனையில் கேட்டபோது, அண்ணா சிறிது சினமுற்றவராய்த் தொந்தரவு “செய்யாதே தசரதன்! உனக்கு ஏன் தேர்தல் ஆசையெல்லாம்? என்னுடன் இருப் பதை advantage ஆக எடுத்துக் கொண்டுவிடாதே!” என்றார் குரலைச் சிறிதளவு உயர்த்தி, மிகக் கண்டிப்புடன்! எவ்வளவு உயர்வானதொரு பாடத்தைத் தன்னிடம் பழகு வோர்களுக்குக் கற்பித்தார் அண்ணா!
இதே அண்ணாவின் மறுபக்க மனத்தில், நட்புக்காகத் தன்தம்பிமார்களிடம் போராடும் பண்பும்மறைந்திருந்ததை வேறொரு நிலவரம் உணர்த்தியது. அது என்ன? தெனாலி ராமன் அல்லது கோமாளி என்றே (அண்ணாவை அறிந்த அனைவராலும்) கருதப்பட்டவர்- சி. வி. ராஜகோபால் உண்மையில் இவரை அண்ணாவின் இடிதாங்கி அல்லது shock absorber என்றே சொல்லலாம். இவருக்கு M.L.C பொறுப்பு தரப்பட வேண்டுமென அண்ணா தெரிவித்த போது, அண்ணாவுக்கு அடுத்த நிலையிலிருந்த கழகத்தலைவர்கள் அனைவருமே விளையாட்டாகவும் கேலியாகவும் கருதினர். தர விரும்பவில்லை. இது அண்ணாவின் கோபத்தைக் கிளறிவிட்டது.
சிவியார் “என்னப்பா கருணானந்தம்! அண்ணா சொல்லிக்கூட எனக்கு M. L. C. தரமாட்டாங்களாமே? நானா கேட்டேன் உங்களை? அண்ணாவே ஆசைப்பட்றாரு எனக்குத் தரணும்னு! நான் அண்ணா கூடவே மாட்டு வண்டியிலே போயி படிச்சி வந்தவன். இத்தனை வருஷமா பிரியாமெ இருக்கறதே எனக்கு disqualification என்று நினைக்கிறீங்களா? என்னோட weakness சிலதை அண்ணா பகிரங்கமாக் கண்டிக்கிறதாலே உங்களுக்கு இளக்காரமாப் போச்சா? நீங்க யாருமே நான் செய்கிற இந்தத் தவறு களைச் செய்றதில்வியா?” என்று என்னிடம் உரக்கக் கத்தினார், ஒருநாள் கொத்தவால்சாவடி அருகில்!
தி.மு.க. சார்பில் ராஜாஜிக்குக் கருப்புக் கொடி காண்பிக்க முடிவெடுத்த நேரம், காஞ்சி நகர மன்ற வரவேற்புக் காக ராஜாஜி வருகிறார். கழகத் தோழர்கள் யாவரும் முன் கூட்டியே கைது. நகரசபை மண்டபத்தினுள், உறுப்பினர் என்ற தகுதியோடு நுழைந்துவிட்ட C.W.R. தனது கைக் குட்டைபோல் பையில் வைத்திருந்த ஒருகருப்புக் கொடியை நேரே ராஜாஜி கையில் கொடுத்துப் புரட்சியை உண்டாக் கியவர். இந்த வீரசம்பவத்தையெல்லாம் தம்பிமார்களுக்கு நினைவு படுத்தவேண்டிய நிலைமைவந்தது அண்ணாவுக்கு. ராஜகோபாலும் சட்ட மேலவை உறுப்பினரானார் பிறகு. இப்படி, ஒரு நண்பருக்காக வாதாடிய அண்ணாவே, தனது இன்னொரு நண்பரை அவர் தமது கடமையினின்று வழுவியமைக்காகச் சினத்தின் எல்லைக்கே சென்று, சுடு சொற்கள் கொண்டு தாக்கியதையும் நான் கண்ணுற்றேன். அண்ணா முதலமைச்சர். அவருடைய கல்லூரிச் சகாவான நாராயணசாமி (முதலியார்) அட்வகேட் ஜெனரல்; இரண்டொரு கழகச் சார்பான கிரிமினல் வழக்குகளில் ஆஜரான தகுதியினால் பெற்ற பதவி இது. பிற்காலத்தில் இவர் உயர் நீதிமன்றத்துக்கு உயர்த்தப்பட்டும், திருப்தியடையாமல் உச்சநீதி மன்றம், அமைச்சுப்பதவி என ஆசைப்பட்டவர்.
அரசு வழக்கறிஞர் என்ற நிலையில் தமது கடமையை உரிய முறையில் ஆற்றத் தவறினார் என்பதை அண்ணா அழுத்தமாகச் சுட்டிக் காண்பித்ததுடன், அவர் என்னென்ன செய்திருக்கவேண்டும் என்பதையும், தமது சட்ட அறிவு துணுக்கத்தால் எடுத்துரைத்துக் கண்டித்தார். என்னைப் போன்ற சாமான்யனுக்கே அந்த வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை! அவரோ நேரிலேயே அமர்ந்து எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார். ராஜினாமா செய்து விட்டுப் போங்கள் என்று மட்டுந்தான் சொல்ல வில்லை அண்ணா!
கழகப் பொதுச் செயலாளரான அண்ணாவிடம் யாரா வது எனக்கு வேண்டிய நண்பர்களை வேட்பாளராகச் சிபாரிசு செய்தால், நான் சொல்வதற்கு அண்ணா இசைவார் என்பதில் அய்யமில்லை. ஆனால் நான் அப்படிப்பட்ட பரிந்துரைகளுக்காகப் போனதில்லை. அதற்கு மாறாக 1967.ல், குறிப்பிட்ட ஒருவருக்கு seat தரவேண்டாம் எனக் கேட்டேன்.
அவர் யார்? அண்ணாவின் எதிரொலி என எங்களால் சிறப்பிக்கப் பெற்ற தத்துவமேதை டி. கே. சீனிவாசன் 1962-ல் கும்பகோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்; 1967-ல் அதே தொகுதியைத் தனக்குக் கேட்கும் உரிமை அவருக்கே உண்டல்லவா? ஆனால் 1966-ன் இறுதிப் பகுதியில் அவர் உடல்நிலையும், மனநிலையும் குன்றித், தஞ்சையில் வாழ்ந்து வந்தார். அவர் நன்மையில் அக்கறையுடைய நண்பர்களான வழக்கறிஞர் சாமிநாதனும் மாணிக்கவாசகமும் ஒருநாள் அவரை அழைத்து வந்து, மாயூரத்தில் என் வீட்டில் விட்டு, நிலைமையை எடுத்து விளக்கினர். அதாவது அவரே கேட்டாலும் தேர்தலில் அவர் நிற்க அனுமதிக்கூடாது என. அண்ணா மாயூரம் வந்திருந்தார்கள், சீனிவாசனை என் வீட்டில் இருக்க விட்டுத், தனியே அண்ணாவைச் சந்தித்து, விவரங்களைக் கூறினேன். அண்ணாவும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டாமென நாங்கள் முடிவு செய்தோம். யாவுமே டி. கே. சி. யின் நன்மைக்காகத்தான்! அவரைத் தஞ்சைக்கு ரயிலேற்றி அனுப்பிய பின்னர் அண்ணாவை என் வீட்டுக்குச் சாப்பிட அழைத்து வந்தேன் இரவு. பின்னர் மாநிலங் களவை உறுப்பினர் பொறுப்பினில் கலைஞர் சீனிவாசனை அமர்த்தியபோது நானே, அதனை ஆதரித்தேன். அப்போது அவர் நலமடைந்து விட்டார்.
நாணயத்தின் இருவேறு பக்கங்களைப் போல அண்ணா வின் நட்பிலும் இருவேறு பக்கங்கள் உள்ளனவே!
அழிவினவை நீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
என்னும் 787-ஆவது திருக்குறள், அண்ணாவின் இப்பேர்ப்பட்ட நட்பினடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு, நல்ல எடுத்துக்காட்டு ஆகுமன்றோ?
-Continue to page six
Comments