கவிஞர் கருணானந்தம்
முத்துப் பந்தர்
51. காக்கை-நரி கதை, அரசியலில்
52. நான் பாடிய பாடல்
53. உயிர் பறிக்கும் துப்பாக்கி வேண்டாம்!
54. விருந்தின் இடையே வருந்தினார்
55. காய்ச்சலோடு ஏன் வந்தீர்கள்?
56. பிரிந்ததும் சேர்ந்ததும்
காக்கை-நரி கதை, அரசியலில்!
“நான் இப்ப ராஜ்யசபைக்குப் போகாமே இருந்திருந்தா, இந்தப் பிரிவினைத் தடைச்சட்டத்தை இவ்வளவு அவசரமாக் கொண்டுவந்திருக்கமாட்டாங்க” என்றார் அண்ணா. “இப்ப இல்லேண்ணாலும், எதிர்காலத்திலே எப்பவாவது கொண்டுவருவாங்களா?” என்று கேட்டேன் நான் அண்ணாவிடம். “கட்டாயம் கொண்டு வரத்தான் செய்வாங்க! ஏன்னா, கருத்துக்குக் கருத்துண்ணு சொல்லி, நம்மோட வாதம் பண்ணி, நம்ம திராவிடநாடு பிரிவினைக் கோரிக்கையிலே இருக்கிற ஞாயங்களைப் புரிஞ்சிக்க வேணுமிண்ணு அவுங்களுக்கு ஏது அக்கறை?” என்று பதில் தந்தார்.
“பிரிவினையைக் கண்டு ஏன் இப்படிப் பயப்படுறாங்க? இந்தியா சுதந்திரம் பெறுமுன்பே நாம் 1940முதல் 24 வருஷமா திராவிடநாடு பிரிவினை கேட்கிறோம். 1940-ல் நேரு பாக்கிஸ்தான் திட்டம் ஆபாசமானது. விஷமதத்தனமானது காங்கிரஸ் யோசித்துப் பார்க்குமளவு யோக்யதை உள்ள விஷயம் என்று கூட காங்கிரஸ் கருதவில்லை” என்று சொன்னாரே! இவர்களே, கிடைத்தவரை லாபம்னு, பாக்கிஸ்தான் பிரிவினைக்கு ஒத்துக்கிட்டவுங்கதானே?” என்று கேட்டேன். “அதனால்தான் சூடுகண்ட பூனைபோல் பயப்படுறாங்க, நானும் சொல்லிட்டேன். திராவிடநாடு கோரிக்கையை இப்போது நான் கைவிட்டாலும், இதைக் கேட்பதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று.” அண்ணா தந்த மறுமொழி இது.
1953-ல் அவசர அவசரமாக சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் ஒருமைப்பாட்டுக் குழு ஒன்றை அமைத்தனர். இவரே திருவாங்கூர் திவானாயிருந்த போது, அந்த சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கு எதிர்ப் பாயிருந்தவர்தானே! எனினும்,இவர் தலைமைப் பதவியை எப்படியோ(?) பெற்றார். அதன் நடைமுறை எப்படி யிருந்திருக்கும்? டெல்லியில் நடந்த மாநாட்டிலும் அண்ணாவை அழைத்துக் கருத்துக் கேட்கவில்லை. அந்தக் குழுவினர் சென்னை வந்தபோதும் நமது கோரிக்கை என்ன, ஏன் பிரிவினை கேட்கிறோம் என்று கேட்டுப் பதிவு செய்து கொள்ளவில்லை. ஒருதலைப் பட்சமாகவே பரிந்துரை கூறி, விரைவில் நாடாளுமன்றத்தில் பிரிவினைத் தடை மசோதா கொணரக் காரணமாயிருந்தது இந்தக் குழு. கருத்தை அறிந்துகொள்ளவே அவ்வளவு அச்சம் அவர்கட்கு!
அண்ணா பிரிவினைத் தடைச் சட்டத்தின் சாதக பாதகங்களை நன்கு ஆராய்ந்தார். தன் அருமைத் தம்பிமார்களுடன் மனம் விட்டுப் பேசிக், கலந்து உரையாடினார். நானும் அவ்வப்போது இருந்து, என்கருத்தைச்சொன்னேன். பிரிவினைத் தடைச்சட்டத்தை மீறிச் சிறைசென்று ஆறேழு ஆண்டுகள் வாடுவதால், உருப்படியான பலன் என்ன? அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் காங்கிரசார் சிறை சென்றதற்கும், சுதந்திர இந்தியாவில் நாம் சிறை செல்வதற்கும், பயனைப் பொறுத்த வரையில் நிரம்ப வேறுபாடு உண்டே !
அண்ணாவை நான் அறிந்த நாட்களாய், அவர் இல்வளவு கவலையுடனும், எந்த நேரமும் சிந்தனை தேக்கிய முகத்துடனும் வேறு எப்போதும் இருந்ததில்லை. திராவிடர் கழகத்தினின்று விலக நேரிட்டதுபோதும் இந்த அளவு வேதனையுற்றதில்லை!
“ஏண்ணா! இப்ப, திராவிடநாடு கொள்கை இந்தியா பூராவும்-ஏன்-உலகம் பூராவும் தெரிஞ்சி போச்சி. இதையே லாபமா நெனச்சி, இப்படி ஜனநாயக விரோதமா ஒரு எதிர்க்கட்சியை அழிக்கவே இந்தச் சட்டம் கொண்டு வாராங்கண்ணு, அவுங்களை Expose பண்ணலாமே” என்று எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன்.
“செய்யலாம். பிடிவாதமா, சட்டத்தை மீறுவேண்ணும் சொல்லலாம். இருக்கிற நம்ம ஆட்களிலே உறுதியான சிலபேர் ஜெயிலுக்குப் போய் ஏழெட்டு வருஷம் உள்ளே கிடக்கலாம். கட்சி என்ன ஆகும்? நான் அதைத் தான் யோசிக்கிறேன்” என்றார்-அண்ணா. அவர் மன உளைச்சல் நன்கு வெளிப்பட்டது. தமிழ் தேசியக் கட்சி அமைத்திருந்த சம்பத், தோழர் அண்ணாதுரை என்று அண்ணாவையும், மற்ற தி மு. க. தலைவர்களையும், திட்டியதோடு, கழகத் தொண்டர்களையும் தாக்கியதுடன் நில்லாமல், திராவிடநாடு பிரிவினைக் கொள்கையையும் கடுமையாக எதிர்த்தார். “என்னண்ணா இது விபரீதமா யிருக்கு? நீங்க அய்யாவை விட்டு வந்த பிறகும், அவரைத் திட்டவும் இல்லை; சுயமரியாதைக் கொள்கைகளை நூத்துக்கு நூறு ஏத்துக்கிட்டீங்களே ஒழிய, விமர்சிக்கவுமில்லை! இவரு ஏன் இப்படிப் போனாரு!” என்று அண்ணாவிடம் விசனப்பட்டேன். துரத்துக்குடி பொதுக் கூட்டத்தில் அண்ணா பேசினார் :- “திராவிட நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையை விட்டுவிடுமாறு தோழர் சம்பத் சொல்கிறார். நேரு கூறினார் விட்டுவிடுமாறு. அப்போது நாம் விட்டிருக்கலாம்: அகில உலகத் தலைவர் சொல் கிறாரே-அதைக் கேட்டு நடப்போமே, என்று! ராஜாஜி கூறியபோது விட்டிருக்கலாம்; ராஜ தந்திரி ஒருவர் கூறுகிறாரே என்று! காமராஜர் சொன்னாரே, அப்போது விட்டிருக்கலாம்; கர்ம வீரர் சொல்கிறாரே என்று! அப்போதெல்லாம் கைவிடாத நாம், சம்பத் சொல்கிறாரே என்பதற்காகவா விட்டுவிடப் போகிறோம்? தேவை யில்லை! நாம் தொடர்ந்து செல்வோம்!” என்று.
திராவிடநாடு பிரிவினைக் கோரிக்கையைத் தி. மு. க. கைவிடுகிறது என்று அண்ணா அறிவித்தவுடன், கோழைகள் என்று அதே சம்பத் ஏசினார். அண்ணா இதற்காக வருத்தப்படவில்லை. மாறாக, சம்பத் இதை ஓங்கி உரத்த குரலில் அடிக்கடி சொல்லட்டும் என்றார். காக்கை, நரி, வடை-இந்தக் கதையைக்கூட அண்ணா சொன்னார். நேரியைப் போல, நம்மை வஞ்சகமாப் புகழ்ந்து பேசுறவங்களும் இருக்காங்க. நீ பெரிய வீரனாச்சே; பிரிவினைத் தடைச் சட்டத்தை எதிர்த்துப் போராடு, என்பாங்க. இதை நம்பினா, வடையைப் பறி குடுத்த காக்கை கதைதான்! நான் காக்கையாயிருந்து என் கட்சியை அழிக்கத் தயாராயில்லேப்பா,” என்றார் அண்ணா, நாங்கள் கேட்டபோது. இவுங்க கோழைங்கறது னாலெயும் எனக்கு வெட்கமில்லே. “இவங்க விரன்னு சொல்லி என்னை உசுப்பிவிட்டாலும் மயங்கிடமாட்டேன். என் முடிவுக்குப் பேரு ராஜதந்திரம்னு நான் நினைக்கிறேன்” என்றும் அண்ணா திட்டவட்டமாகச் சொன்னார்.
கூட்டங்களில் அண்ணா பேசினார். நான் பிரிவினை கேட்டபோதும் என்னைத் திட்டினார்கள்; ஏசினார்கள்; இழித்துப் பழித்தும் தூற்றினார்கள், பேசினார்கள்: ஆனால், இன்று நான் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டேன் என்கிறபோது, என்னைப் பாராட்டுகிறார்களா என்றால், இல்லை! அப்போது திட்டிய அதே காமராஜரும், பக்தவத்சலமும், சம்பத்தும் இப்போதும் திட்டுகிறார்கள்! ஆகா! இந்திய ஒருமைப்பாட்டைப் போற்றுகிறான் பார்! என்று அவர்கள் என்னைப் புகழ்ந்தால்தான், என்னைப் பொறுத்தவரையில் நான் ஏதோ தப்பு செய்துவிட்டதாகவே கருதுவேன். அவர்கள் இப்போதும் என்னைத் திட்டுவதால்-ஒகோ, நாம் சரியான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறோம் என்று கருதுவேன்” எனப் பேசினார் அண்ணா.
நான் பாரதத்திலிருந்து ஒர் உதாரணம் எழுதினேன் :-அர்ச்சுனனுக்குத் தேரோட்டிய கண்ணன், கர்ண் னுடைய அம்பு பறந்து வந்தபோது, “மார்பைக் காட்டி, உன் வீரத்தை நிலைநாட்டுவாய் அர்ச்சுனா! என்று சொல்லவில்லை! மாறாதத், தேரைச் சிறிது கீழே அழுத்தி, அந்த அம்பின் இலக்கிலிருந்து அர்ச்சுனனைக் காப்பாற்றினான், அதேபோல அண்ணனும், இப்போதைக்குப் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டுக், கழகத்தைக் காப்பாற்றினார்-என்பதாக ஒர் கவிதை எழுதியிருக்கிறேன்.
நான் பாடிய பாடல்
மூன்றாவது திராவிட மாணவர் பயிற்சிப் பாசறையை ஈரோட்டில் நடத்தி முடித்த நோம். பெரியார் ஏற்காட்டில் தங்கச் சென்றுவிட்டார். நான் ஈரோட்டில் குடி அரசு அலுவலகத்தில் இருக்கிறேன். அண்ணா வந்தால் சண்டை போடவேண்டும் என்று, துணையாசிரியர் மாணிக்கவாசகத்திடம் சொல்விக் கொண்டிருக்கிறேன். இவர் என்னிடம் கேட்டு, திருச்சி திராவிடமணி’ பத்திரி கைக்கு, அதன் ஆசிரியர் T. M. முத்து விரும்பியதாக, என் கவிதை ஒன்று வாங்கி அனுப்பினார். அதிலிருந்து முதல் இரண்டு பாடல்களை எடுத்து, யாரோ பி. முனுசாமி என்பார், “திராவிடநாடு” இதழுக்கு அனுப்பி, அது ‘திராவிடரின் சபதம்’ என்ற தலைப்பில் 15.4.1945 இதழின் முதல் பக்கத்தில் பிரசுரமாகியிருக்கிறது. இப்படியா எழுத்தைத் திருடுவார்கள்?
அண்ணா வந்தபொழுது படபடவென ஆரம்பித்தேன். அவர் நிதானமாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, “எங்கே சொல்லுய்யா கேட்போம். உன் பாட்டாயிருந்தா, இப்ப பாக்காமெ சொல்,” என்று என்னைச் சீண்டினார்.
“பொறுத்திருந்த காலமெல்லாம் போதும்; இன்று புவியெங்கும் கமையறியப் பொங்கிச் செல்வோம்!
வெறுத்தொதுக்க வேண்டிய வீண் நூற்களையும், வேறுபடும் மக்களையும் விலக்கித் தள்ளி
அறுத்தெறிந்து தளைகளெல்லாம் அகன்று நீங்க ஆண்மையுடன் பொருதெழுந்து நமது தொண்டை
மறுத்தெதிர்க்கும் மதியிலிகள் மயங்கும் வண்ணம் மானமுடன் வாழ்வதற்கே வழிகள் செய்வோம் ......
இதைச் சொல்லிவிட்டு “அடுத்ததைச் சொல்லட்டுமா? இன்னும் ஏழெட்டு Stanza இருக்குது அண்ணா!” என்றேன். “வேண்டாம், ஒன்னெ நம்பறேன். ஏதோ தவறு நடந்துபோச்சு. பரவாயில்லய்யா ஒன் கருத்து இன்னொருத்தர் மூலமாவும் பரவுறது நல்லதில்லியா?” என்றார்-மேலும் தொடர்ந்தார் அண்ணா. முன்னே கூடச் சொன்னியே-திராவிட நாட்டுலே நீ எழுதிய ஒரு பாட்டை, யாரோ நம்ம அய்யா பேசிய கூட்டத்திலே, மேடையிலே பாடினாங்கண்ணு,”
“ஆமாண்ணா, இங்கேதான் பொத்தனூர்லெ பாடினாங்க!”
“சரி. அங்கே அவரு, இந்தப் பாட்டை எழுதினது இன்னார்; அது இன்ன பத்திரிகையிலே வந்தது அப்படின்னு (announce) அன்னவுன்ஸ் பண்ணிட்டா பாடுனார்?”
“ஒண்ணுமே சொல்லலியே எழுதின எனக்கு மட்டும் கேட்கச் சந்தோஷமாயிருந்தது!”
“இருந்ததா? அப்ப அதை அனுமதிச்ச நீ, இப்ப இது மட்டும் எழுத்துத் திருட்டுன்னு ஏன் பதைக்கிறே? சரி, போகட்டும் விடு. அது என்ன பாட்டு, கொஞ்சம் சொல்லேன். பாட முடிஞ்சாலும் பாடு, கேட்கலாம்.”
“ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க அண்ணா, ஒங்க லாஜிக்கை ஒத்துக்கறேன்! இதான் அந்தப் பாட்டு, போன ஆண்டு எழுதியது!”
இந்தத் திராவிடம் என்னுடைய நாடு என்று தினக்தொறும் கீயிதைப் பாடு
முந்தித் திராவிடர் முறையுடன் ஆண்டார்; மூடத்தனத்தாலே முழுமோசம் பூண்டார்!
வந்து புகுந்திட்ட மறையோரை நம்பி! வகையின்றி வாடினது இனிப்போதும் தம்பி!
சொந்தத் தமிழரின் சுதந்திரம் நீங்க, சூழ்ச்சிகள் செய்தோரைச் சூறைசெய் ஏங்க!
இது நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையோட பாடலுக்கு ள்திர்க்கருத்து. அவர் ‘இந்திய நாடு’ என்னுடைய நாடு: என்று பாடியிருந்தார். இதேபோல, ‘சூரியன் வருவது யாராலே’ என்று தொடங்கும் பாடல் ஒன்று அவருடையது.
அதை மாற்றி நான் எழுதினேன் :-
சூத்திரன் ஆனது யாராலே சுதந்திரம் போனது எவராலே?
சாத்திரம் வேதம் இதிகாசம் சமயநூல் புராணம் இவையேது
தோத்திரம் குலம்மதம் சாதியென்றே கூட்டம்பிரித்தது யார்வேலை?
ஆத்திரம் இன்றி அடிமைசெய்தே ஆட்சி புரிபவர் யாரிங்கே?!!
இதையும் அண்ணா கேட்டார்கள். “நீ அப்பப்ப கொஞ்சம் இதுமாதிரி இசைப்பாடலும் எழுதலாமய்யா” என்று சொல்லிப் புறப்பட்டார்கள்.
கலைஞர் கல்லக்குடிப் போராட்டத்திற்குப் புறப்படு முன் ஒருநாள், சேலத்தில் கோயம்புத்ததூர் லாட்ஜில், அவரோடு கே.ஆர். செல்லமுத்துவும், நானும் தங்கியிருந்தோம். அப்போது சென்னையிலிருந்து புரட்சி நடிகர் எம். ஜி. ஆர். வந்து கலைஞரைப் பார்த்து, தான் தனியே எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் என ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க விருப்பதால், மேகலா பிக்சர்சிலிருந்து விலகிக் கொள்ள அனுமதி கேட்டார். செல்லமுத்துவும் நானும் அவர்கள் இருவரும் தனியே பேசட்டும் என எண்ணி வெளியே போய் உட்கார்ந்தோம். “நாம், திரைப்படத்தில் வரும் ‘மாரி மகமாயி’ மெட்டில் ஒரு பாட்டு எழுதுங்க அண்ணே! நான் பாடறேன்” என்றார் செல்லமுத்து. உடனே நான் எழுதித் தந்தேன். 1953ல் நிறைய மேடைகளில் முழங்கினார் இந்தப் பாடலைச் செல்லமுத்து.
சேர வருவீரே! சேர வருவீரே!
வீர ரெல்லாம் வேகமாகச் (சேர)
சேர சோழத் தென் பாண்டி நாட்டார்
தீர காவியம் தீட்டிடும் போரில் (சேர)
சரணம், டால்மியாபுரம் பெயர் மாற்றங்குறித்து 5 அடிகள்.
இந்தப் பல்லவி, அனுபல்லவியை நினைவில் வைத் திருந்து, பிறகு ஒருநாள், அண்ணா முன்பு சொல்வி யிருந்ததை மறவாமல் 4 சரணங்கள் சேர்த்து, ஒரு பாடல் எழுதினேன். அதைத் “திராவிடநாடு” ஏட்டின் முதல் பக்கத்தில் 17.7.1960ல் வெளியிட்டுச் சிறப்பித்தார் அண்ணா.
வாழும் வடக்கின் வஞ்சகச் செயலால்
தாழும் தெற்கினைச் சமன்செயும் போரில் (சேர)
செந்தமிழ்த் தாயின் சிறப்பினை அழிக்கும்
இந்தித் திணிப்பினை எதிர்த்திடும் போரில் (சேர)
நாட்டை மீட்டிடும் நற்பணி புரிய
வீட்டுக் கொருவர் விரைந்திடும் போரில் (சேர)
உறுதியோடும் நம் உரிமையைக் காக்கக்
குருதி சிந்திடும் ஒருபெரும் போரில் (சேர)
இன்று இருக்கும் சூழ்நிலையில், அண்ணா இருந்தால், இந்தப் பாடலையே பாடச் சொல்வார் அல்லவா நமது கழக மேடைகளில்? அத்தோடு அண்ணா அடிக்கடி ஆசைப் பட்டதுபோல, கைதேர்ந்த நாட்டியப் பேராசிரியர் ஒருவரைக் கொண்டு பயிற்சி கொடுத்து, ஆசான் அவர்களே நட்டுவாங்கம் செய்து, ஜதி சொல்லிப் பதம்பாட்டி அலாரிப்பு, ஜதீஸ்வரம், தில்லானா, வர்ணம்-எல்லாம் முடித்து, அபிநயம், முத்திரைகளுடன் நாட்டியமாகச் சில பெண்மணிகள் இப்பாடல்களுக்கு வடிவம் தந்தால் எவ்வளவு பிரமாதமாக இருக்கும்!
உயிர் பறிக்கும் துப்பாக்கி வேண்டாம்!
இன்று மாநிலங்களவை உறுப்பினராயிருக்கும் ஆலடி அருணா அவர்கள் எழுதிய “இந்தி ஏகாதிபத்தியம்” என்ற நூலும், வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றும் அ. இராமசாமி அவர்கள் எழுதிய “இரத்தத்தில் 50 நாட்கள்” என்ற நூலும், 1965-ஆம் ஆண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் கலிங்கத்துப் பரணிகளாகும். உலக வரலாற்றிலேயே, மாணவர்கள் தாமே சினந்தெழுந்து, பட்டிதொட்டி முதல் பட்டினங்கள் வரை அனைத்து ஊர்களிலும் கிளர்ச்சிகள் செய்ததும், தொடர்ந்து மூன்று நாட்கள் தமிழகத்தில் ரயில்களே ஓடாமல் செய்ததும், பள்ளிச் சிறார்களும் பங்கேற்று நின்றதும் கிடைத்தற்கரிய செய்தியாகும். அதேபோல, எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும், ஒரு முதல்வர், தம்மிடமுள்ள போலீஸ் படை போதாமல், ராணுவத்தையும் வரவழைத்து, மாணாக்கர்களைக் காக்கை குருவிகளைப் போலச் சுட்டுக் கொன்றதாகவும் தகவலில்லை. நமது பெரியவர் பக்தவத்சலம் என்ற மகானுபாவர் அந்த அருஞ் செயல் புரிந்து, தான் பதவியில் அமர்வதற்குக் காரணமான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தமிழகத்தில் அற்றுப் போக உறுதுணையாய் விளங்கியவர்-இன்னும் வாழ்கிறார்-வாழிய!
1965 ஜனவரி 26-முதல் இந்தி அரியணை ஏறும் என அன்றையப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அறிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகம் தனது எதிர்ப்பினை அமைதியாகத் தெரிவிக்கும் என்றார் அண்ணா. குடிஅரசு நாளில் ஏதும் செய்தல் நாகரிகமாகாது என்ற பெருங்குணத்தால், ஜனவரி 25-ஆம் நாள், கழகத் தோழர்கள் தம் சொந்த வீடுகளிலும், சொந்த அலுவலகம் அல்லது பணிமனைகளிலும் கருப்புக் கொடி ஏற்றி வைத்தால் போதும் என்பது தான் அண்ணாவின் ஆணை ! ராஜதந்திரம் தெரிந்த முதல்வராயிருந்தால், இதை அலட்சியம் செய்திருக்கலாம். ஆனால், காமராஜர் பதவி விலகியதால் இடைக்கால முதல்வரான பக்தவத்சலனார் என்ன கருதினார் தெரியுமா? இது என்ன சுண்டைக்காய் கட்சி. 1957-இல் 15 பேர். 1962-இல் 50 பேர்தானே சட்டமன்ற உறுப்பினர் என்று உதாசீனம் செய்து, “தி.மு. கழகத்தார் கருப்புக் கொடி ஏற்றினால், அரசு ஒன்றும் செய்யாது? மக்களே பார்த்துக் கொள்வார்கள்” -என்று சொன்னதன் மூலம், குண்டர்களை உசுப்பி விட்டார். G. உமாபதி போன்ற அடையாளம் தெரியக்கூடிய காங்கிரஸ் பிரமுகர்களே முன்னின்று, நமது கழகத்தார் வீடுகளையும், ‘முரசொவி’ ‘நம் நாடு’ அலுவலகங்களையும் ஆட்களையும் வெறித்தனமாகத் தாக்கியது கண்டோம். தேன்கூட்டைக் கலைத்ததுபோல் மாணவர் விடுதிகளில் புகுந்து தாக்கினர்.
எட்டுப்பேர் இந்தியை எதிர்த்துத் தீக்குளித்தும், நஞ்சுண்டும் தம் இன்னுயிர் ஈந்தனர். மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் மாண்டனர். புரட்சி அடங்கவில்லை. ஆணவ தர்பார் கொடிகட்டிப் பறந்ததால் மாணவ உலகம் மடையுடைத்த வெள்ளமாய்ப் பாய்ந்தது.
அண்ணா, மாணவர் உலகத்தின் மீது அரசின் காட்டு மிராண்டித் தாக்குதலைக் கண்டித்து அறிக்கை விட்டார். இது மாணவர்கள் தாமே நடத்தும் போராட்டம் என்பதை அரசு உணர வேண்டும் என்பதையும் வற்புறுத்தினார். ஆயினும், அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மாணவர்கள் போராட்டத் திட்டங்களை அறிவித்து - மறியல், ரயில் நிறுத்தம், பொது வேலை நிறுத்தமெனத் தேதிகள் குறித்தனர்; பிப்ரவரி இரண்டாம் வாரம்.
அண்ணா, காலையில் எழுந்தவர், மேலே சட்டையில்லாமல் படுக்கையிலேயே உட்கார்ந்திருக்கிறார். செய்தித் தாள்களிலும், வானொலியிலும், தொலைபேசியிலும் வெளியூர்களின் போராட்டச் செய்திகள் வந்தவண்ணமுள்ளன - கோவை, திருப்பூர், குமாரபாளையம், பொள்ளாச்சி இங்கெல்லாம் மாணவர் மீது ராணுவம் சுடுகிறது ஆணவமாய் என்று! நேரம் செல்லச் செல்ல அண்ணா அப்படியே சுருண்டு படுக்கிறார். எதிரிலிருந்த கலைஞரும் நானும் “அண்ணா பல் விளக்கிவிட்டு ஏதாவது சாப்பிடுங்கள்” என்று கெஞ்சுகிறோம். முகம் பொலிவும் களையும் இழந்து, கண்கள் ஒளி குன்றிக் காணப்படுகின்றன. எழவே மறுக்கிறார். “இவ்வளவு பேர் சாகிறான். சாப்பாடு ஒரு கேடா? போலீசார் சுட்டாலும் காரணம் கேட்கலாம். ராணுவம் சுடும்போது ஒன்றும் கேட்கக்கூட முடியாதே!” என்கிறார். “நாம் என்னண்ணா செய்ய முடியும்? மாணவர்களைப் போராடச் சொல்லி நாமா வேண்டினோம்?” என்கிறார் கலைஞர். “பிறகு இதற்கு என்னதான் முடிவு? எப்படி நிறுத்துவது?” -இது அண்ணா விடுத்த வினா?
“நாமே ஓர் அறிக்கை விட்டு மாணவர்களைக் கேட்டுக் கொள்வோம், நிறுத்தும்படி"-கலைஞர்.
“அப்படியானால், இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கச் சொன்னதே நாம்தான் என்ற எண்ணம் வராதா?” -அணனா.
“ஆமாம், அண்ணா! கட்டாயம் வரும்! இரண்டுங் கெட்டான் நிலையில், நாம் வருத்தப்படுவது தவிர வேறென்ன செய்வது?"-கலைஞர்.
கடைசியில், மாலையில்தான் அண்ணா பல் விளக்கினார். பின்பு, ஓர் அறிக்கை வெளியிட்டார். பயன்? அடுத்து, கலைஞர் கைது செய்யப்பட்டுப், பாளையங் கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார், தனியே!
தாம் எதிர்க்கட்சியாயிருந்தபோது, ஆளுங்கட்சியினரின் துப்பாக்கிச் சூடுகளினால் மாணவர்கள் மடிந்தார்களே என்று மட்டும் அண்ணா மனங்கலங்கினாரா? தாம் ஆட்சிக் கட்டில் ஏறிய பின்னர், ஒரு துப்பாக்கிப் பிரயோகமும் அவரை மிகவும் வருத்திவிட்டது!
ஒருநாள் முன் காலை நேரம். நான்மட்டும் நுங்கம் பாக்கம் சென்றேன். தனிமையிலிருந்த அண்ணா மாடிக் கூடத்தில் பரபரப்போடு அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்தார்; திகில் படர்ந்த முகத்தோடு!
என்னைப் பார்த்ததும், “கருணாநிதி வந்திருக்கிறதா?” என ஆவலுடன் வினவினார். இல்லை யண்ணா! நான் மட்டுந்தான் வந்தேன். ஏன்?” - “என்னய்யா! கொடுமை ஒண்ணு நடந்து போச்சு! திருவொற்றியூர்லெ போலீஸ் Firing நடந்து, ரெண்டு பேர் செத்துட்டாங்களாம். தொழிலாளர் போராட்டம் ! எங்கேய்யா, லேபர் மினிஸ்டரா ஒரு ஆளைப் போட்டோமில்ல? ஆளையே காணோமே! வரச் சொல்லுய்யா அந்த மாதவனை! அப்புறம், நீ உடனே போயி, கருணாநிதியைக் கூட்டிகிட்டுவா!” -அண்ணன் ஆணை.
“நான் இப்போ அங்கேயிருந்துதான் வர்றேன் அவருக்கு இந்தச் சேதி தெரியாதண்ணா! இதோ போயி அழைச்சிகிட்டு வாறேன். நீங்க பதறாமெ இருங்க!” என்று இறங்கி ஓடினேன்.
மென்மையான அந்த உள்ளத்தின் தன்மை-மனித உயிர்கள் அநியாயமாய்ப் பறிக்கப்படக் கூடாது என்பது தான்!
விருந்தினிடையே வருந்தினார்
தம்பி பரமசிவம் என்னிடம் ஒரு வேண்டுகோளைச் சமர்ப்பித்தான். “அண்ணாவை என் வீட்டில் சாப்பிடக் கூப்பிட வேண்டும். நீங்கள் கேளுங்கள். எனக்குப் பயமாயிருக்கிறது” என்றான். “ஆட்சிப் பொறுப்பேற்றுச் சில வாரங்களே ஆகின்றன. நான் ஏற்கனவே இரண்டு தடவை அழைத்து, இதே சென்னையில் விருந்து நடத்தி விட்டேன். நீ இப்போது வந்து கேட்கச் சொல்கிறாயே? எனக்குக் கூடத் தயக்கமாயிருக்கிறதே! சரி தக்க நேரம் பார்த்துக் கேட்டு உனக்கு Phone செய்கிறேன். நீ இருக்கும்போது தான் நான் அவரை அழைக்க வேண்டும் என்பது அவசியமில்லை, நீ போ!” என்றேன்.
பரமசிவம் அப்போது சமையல் கேஸ் ஏஜன்சி வைத்திருந்தான். சென்னையிலுள்ள நம் இயக்கத் தலைவர் களின் வீடுகளில் எரிவாயு அடுப்புகளை அறிமுகம் செய்தவன் அவனே, எல்லாருக்கும் அவன் என் தம்பி. எனவே அறிமுகம்.
தஞ்சையில் என் எதிர்விட்டுப் பையன். பால்யத்திலேயே பெற்றோர் மறைந்தனர். என் தம்பியுடன் படித்தவன். என்னை அண்ணனென அழைத்தவன். அங்கிருக்க இயலாமல், படிப்பைத் துறந்து, பிரகதி ஸ்டுடியோவில் ஸ்டோர் கீப்பராகச் சென்னை வந்தடைந் தவன், நீண்ட காலத்துக்கு முன்பே சிவாஜிகணேசன், நாடகக் கம்பெனியிலிருந்த நாட்களில், தன்னைச் சினிமா வில் சேர்த்து விடுமாறு பரமசிவத்துக்குக் கடிதம் எழுதியது உண்டு. ராஜசுலோசனாவைப் பரமசிவம் காதலித்துத் திருமணம் செய்தபோது, நானும் கரந்தை சண்முக வடிவேலுவும் சென்னை வந்திருந்து, 1951-ல் செயிண்ட் மேரிஸ் ஹாலில் திருமணத்தைப் பதிவு செய்து, கலைஞர், மதியழகன் ஆகியோர் வாழ்த்துரைக்கச் செய்தோம். முதலாவது தி.மு.க. மாநில மாநாட்டில், ராஜசுலோசனா வின் பரதநாட்டியம் ஒரு நிகழ்ச்சியாக நடத்தியிருக்கிறோம்.
இருவரும் ஒரு மகனுக்குப் பெற்றோரான பின்னர், ஒத்துப் போக முடியாமல், மணவிலக்குப் பெற்றனர். 1965-இல் மந்தைவெளியில் தனியே வீடு கட்டினான். பின்னர், மலேசியாவிலிருந்து பத்மா என்னும் பெண்ணை மணந்திருந்த நேரம்; அண்ணாவும் கலைஞரும் விருந்துக்கு வந்தால் தனக்குப் பெருமையாயிருக்கும் என விழைந்தான் பரமசிவம்.
நான் அண்ணாவிடம் கேட்டபொழுது, “என்னய்யா, இது. நீ கேட்பதைத் தயங்காமல் ஒத்துக் கொள்கிறவன் நான்! ஆனால் பரமசிவம் வீட்டுக்கெல்லாம் என்னை ஏன் அழைக்கிறாய்? நான் மறுக்க வேண்டியிருக்கிறதே!” என்றார்கள் சற்றுச் சங்கடத்துடன். கலைஞர் உதவிக்கு வந்தார். “அப்படியில்லை அண்ணா! கருணானந்தம் ஏதாவது விருந்து சாப்பிட வேண்டும். அதற்கு நம்மைப் பயன்படுத்துகிறார்” எனக் கூறினார். நான் தொடர்ந்து “தவறில்லை அண்ணா. இது நான் நடத்தும் விருந்தாகவே கருதலாம். என் தம்பிதானே அவன். மேலும் இந்த விருந்து சைவம். வேறு யாரையும் அழைக்க மாட்டேன். என் நெருங்கிய சொந்தக்காரர்கள்தான் இருப்பாங்க” என்று சில பல விளக்கங்கள் தந்த பின்னர் அண்ணாவின் ஒத்துழைப்பைப் பெற்றேன். நண்பர் டார்ப்பிடோ ஏ. பி. சனார்த்தனம் என்னை அப்பூதியடிகள் என்று கேலி செய்வார். அந்த அளவு இயக்க நண்பர்களை உபசரிப்பதில் எனக்கு மகிழ்வு.
மதியம் அந்த விருந்து. அண்ணாவுடன் கலைஞரும் மன்னை மாமாவும் வந்தார்கள். முதலில் ஏதோ எண்ணி அண்ணா தயக்கம் காட்டியிருக்கிறார்கள், இங்கு வந்தபின் அந்தத் தயக்கம் காணப்படவில்லை. இயல்பாகப் பழகினார்கள். என் ஒரே தங்கையின் கணவர் பழநிவேலு, அவரது அக்காளின் கணவர் டி. ஆர். பாலசுப்ரமணியம், இவர்கள் எல்லாரையும் மற்றும் குடும்பத்தினரையும் அண்ணாவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அப்போது பரமசிவம் எடுத்த புகைப்படங்கள் நன்றாக இருக்கின்றன, அவன் வீட்டு மாடியிலேயே எடுக்கப்பட்டவை.
அன்று அண்ணா அவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட என் தங்கை கணவர் பழநிவேலு, ஏற்கனவே கலைஞருக்குத் தெரிந்தவர். தாம்பரம் ரயில்வே காலனி யில் பல ஆண்டுகள் வசித்தவர். முனு ஆதி தாம்பரத்தில் பால் வியாபாரம் செய்து வந்தபோதே தெரியும். அவர் அன்று மிகவும் களிப்புக்கடலில் மிதந்து கொண்டிருந்தார். சென்னை பெசண்ட் நகர் அமைக்கப்பட்ட போது, வீட்டுவசதி வாரியத்தின் முதல் தொகுதி வீட்டிலேயே குடியேறியவர். மஞ்சட்காமாலை நோய்க்குப் பலியாகி 1969-சனவரி 29 அன்று சென்னை பொது மருத்துவமனையில் இயற்கை எய்திவிட்டார். என் வாழ்வில் இதனினும் பெரிய சோகம் இதுவரை ஏற்படவில்லை. அண்ணா அவர்கள், நோயின் கடுமையான பிடியில் சிக்கி அவதிப்பட்டு, அடையாறு மருத்துவமனையில் இருந்த அதே காலகட்டத்தில், இவர் G. H-ல் இருந்தார். இரண்டு ஆடுகளில் ஊட்ட நினைத்த குட்டியைப்போல நான் பரிதவித்தேன். ஓரிடத்தில் வீட்டுத் தலைவர். ஓரிடத்தில் நாட்டுத் தலைவர். இருவர் நலிவும் நான் வருந்திக் குமைந்து நைந்துருகச் செய்தவையாகும். டாக்சியில், ஒருநாளில் பலமுறை, இரு இடங்களுக்கும் விரைவேன். ஆயினும், அண்ணா நம்மை ஏமாற்றிச் செல்வதற்கு நான்கு நாள் முன்னரே, என் வீட்டு மாப்பிள்ளை தனது நாற்பத்து அய்ந்தாவது வயதிலேயே எங்களைப் பிரிந்தார். துயரச் சிறுபொறி பெருந்தீயாக மாறிச் சுட்டெரித்ததில், என் உள்ளம் சாம்பலாகிப் பறந்தது அடுத்த சில நாட்களில்!
பரமசிவம் வீட்டில் அண்ணாவுடன் நாங்களெல்லாம் அமர்ந்து உணவருந்தியதையும், நின்றதையும் புகைப் படத்தில் காணுந்தொறும் என் மனம் அலைபாய்கிறது. இதற்குப்பிறகு அண்ணா அவர்களை எங்கும் விருந்துக்கு அழைத்துச் சென்றதாக நினைவில்லை எனக்கு!
ஆனால் முதலமைச்சர் அண்ணா, செங்கற்பட்டு மாவட்டத்தின் தலைநகராகக் காஞ்சிபுரத்தைத் தேர்ந்தெடுத்துப் புதிய வரலாறு படைத்தாரல்லவா? பல்லவர் புகழை மீட்டாரல்லவா? அதே மாவட்டத்தைச் சார்ந்த பக்தவத்சலம் முதலமைச்சராகியும் செய்யாத ஒன்றை அண்ணா சாதித்தாரல்லவா? அன்றைய தினம் காஞ்சி மாநகர் விழாக்கோலம் பூண்டிருந்தது. வாதாபியை வென்று திரும்பியபோது பல்லவ மன்னனுக்கு வரவேற்பளித்தது போல!
அரசு அதிகாரிகள் அனைவருக்கும், அன்று மதியம், அண்ணா ஒரு பெரிய விருந்தளித்தார்கள். ஏதோ ஒரு கல்யாண மண்டபத்தில் என்று நினைவு. நூற்றுக்கணக் கான அலுவலர்கள் உள்ள பந்தியில் ஒரு ஓரத்தில் தரையில் அமர்ந்து நான் சாப்பிடத் தொடங்கினேன். அண்ணா என்னைத் தேடிக் கண்டுபிடித்துக் குனிந்து என் அருகில் வந்து, “அடடே sorry கருணானந்தம்! இது சைவ சாப்பா டல்லவா? சாப்பிட உட்கார்ந்துட்டியே! கொஞ்சம் இரு! ஒனக்கு மட்டும் பிரியாணி வாங்கிவரச் சொல்றேன். வெய்ட் எ மினிட்” என்கிறார், தமிழகத்தின் முதலமைச்சர்!
நான் “வேண்டாம் அண்ணா பரவாயில்லை; இதுவே நன்றாயிருக்கிறது!” என்று பதில் உரைப்பதற்குள் என் கண்களில் நீர் கசிந்து, உள்ளம் உருகிக் கரைகிறது. அன்பினை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து மகிழ்ந்து திக்கு முக்காடிப் போகிறேன்.
“அண்ணா, அண்ணா! உனை எண்ணாத மனமே யில்லை-நீதானே அன்பின் எல்லை! அண்ணா, அண்ணா!
“காய்ச்சலோடு ஏன் வந்தீர்கள்?”
இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்ததால் 1965-ஆம் ஆண்டில் நடத்தமுடியாமல் போன RMS ஊழியர்களின் 9.வது மாநில மாநாட்டைச் சென்னையில் 4.1.66 முதல் 5.1.66 முடிய நடத்தினோம். அதனால், இதே ஆண்டின் இறுதியிலேயே பத்தாவது மாநில மாநாட்டைச் சோலையார் பேட்டையில் நடத்த நேரிட்டது. அங்கிருந்த லோகநாதன் போன்ற தோழர்கள் எல்லா ஏற்பாடுகளும் செய்தனர் ஆர்வத்துடன். துணைச் செயலாளர் கோவை ஞானப்பிரகாசம் ஒத்துழைத்தார்.
மலைகள் சூழ்ந்த இயற்கை கொலு வீற்றிருக்கும் எழில் மிகு ரயில்வே சந்திப்பு அருகே ரயில்வே இன்ஸ்டிட்யூட் கட்டடத்தில் மாநிலப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்று வந்தது. இரண்டாம் நாள் இறுதிக் கட்டமாகச் சிறப்புப் பொதுக் கூட்டம்; 20.11.1966 அன்று மாலை. இதில் பங்கேற்று எங்கள் பிரச்சினைகளை மக்களுக்குத் தக்கவாறு எடுத்துரைக்கப் பேரறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் ஆகியோரை அழைத்திருந்தோம். ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக நீண்ட நாள் அனுபவம் பெற்று, முன்பு பெரியார் ஆதரவுடன் தென் பகுதி ரயில்வேத் தொழிலாளர் சங்கம் தொடங்கிப் பின், அதிலிருந்தும் விலகி, இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதிதாக இணைந்ததன் பயனாய்ச் சென்னையில் சில தொழிற்சங்கங்களின் தலைவராக விளங்கிய நண்பர் இராகவானந்தம் ஒரு சொற்பொழிவாளர். மற்றும் திருப்பத்தூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், திருப்பத்தூர் நகரமன்றத் தலைவருமாகிய நண்பர் சி. கே. சின்னராஜூ இன்னொரு பேச்சாளர். எங்கள் வரவேற்புக்குழுத் தலைவரோ நாடாளுமன்ற உறுப்பினரான அரூர் முத்து அவர்கள்.
ஜோலார்பேட்டைக்குச் சென்னையிலிருந்து எங்கள் மாநிலச் சங்க நிர்வாகிகள் 19.11.66 அதிகாலை பிருந்தாவனம் எக்ஸ்பிரசில் செல்லத் திட்டமிட்டிருந் தோம். இவ்வாறு புறப்படுவதற்கு முதல் நாள், நுங்கம்பாக்கம் சென்று, அண்ணா அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு, அவர்கள் எப்படி, எப்போது ஜோலார் பேட்டை வந்து சேருவார்கள் என்பதனை அறிந்து வரலாமென, மாநிலச்செயலாளர் நம்மாழ்வாரும் நானும் சென்றோம். ராணி அண்ணியார் மிக்க வருத்தத்துடன், “ஏம்ப்பா ஒங்களுக்குத் தெரியாதா? ஒங்க அண்ணனுக்கு ரொம்ப ஜூரம் வந்து, வீட்லெ ரெஸ்ட்டா இருக்க முடியாதுண்ணு, இசபெல்லா ஆசுபத்திரியிலே சேர்ந்திருக்காங்களே” என்றார்கள்.
இடி விழுந்தாற்போலிருந்தது எனக்கு மாநாட்டுக்கு அண்ணா வரமுடியாமற் போய்விட்டதே என்ற ஏமாற்றம் ஒர்புறம்! அண்ணா செயிண்ட் இசபெல் நர்சிங் ஹோமில் சேரவேண்டிய அளவுக்குச் சுரம் வந்துவிட்டதே என்ற கவலை மறுபுறம்! உடனே மயிலாப்பூர் விரைந்தோம். அண்ணா தனியே படுத்திருக்க, அருகே நிழல் நின்றிருந்தது? (நண்பர் சி. வி. ராசகோபால்) சென்னையில் இச் செய்தி அதிகம் பரவாததால், மருத்துவமனையில் மக்கள் கூட்டம் திரளவில்லை.
அண்ணாவைத் தொட்டுப் பார்த்தேன். உடல் அனலாய்க் கொதித்தது. “எப்படியண்ணா சுரம் வந்தது? என்ன சுரமாம்?” என்று கேட்டேன். ஃபுளுமாதிரித் தெரிகிறது. 104 டிகிரி ஏறிவிட்டது. சரி போகட்டும். நீ எப்போ ஜோலார்பேட்டை போகிறாய்? என்று வினவிய போது, அண்ணாவின் நினைவு அந்த நிலையிலும் குன்றா திருந்ததை எண்ணி வியந்தவனாய் நாளைக் காலை புறப்படுகிறோம். அதற்கும் மறுநாள்தான் பொதுக் கூட்டம். அதைப்பத்தி நீங்க நினைக்கவே வேண்டாம் அண்ணா! சமாளிச்சிக்கிறோம்!” என்றேன். “ஒண்ணு செய்யேன். இந்த மாதிரி நான் வரமுடியலேங்கிறதை எடுத்துச் சொல்லி, மனோகரனை அழைச்சிகிட்டுப் போயிடேன்“ என்ற ஆலோசனையை அன்புடன் வழங்கினார்கள்.
1957-ல் மாயூரம் தொகுதியில் நாடாளுமன்றத்துக்கு நாஞ்சில் மனோகரனைப் போட்டியிடச் செய்து, அவரை அரசியல் பிரவேசம் செய்யவைத்தோம். அங்கே தோல்வி யுற்றார். எனினும், என் ஆருயிர் நண்பர் சம்பத் செய்த தவற்றால், தென் சென்னையில் 1962-ல் போட்டியிட்டு, அமோக வெற்றி கண்டார். அண்ணாவுக்குப் பதிலாக அவரை அழைப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை என்றாலும், அண்ணாவே சொல்லிவிட்டதால் உடனே வெளியில் சென்று, அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைத்தும் விளக்கினேன். தனக்கு வேறு வேலையிருப்பதாகச் சொல்லி, வர மறுத்து விட்டார் மனோகரன் M.P. திரும்ப அண்ணாவிடம் இதைத் தெரிவித்து, “பரவாயில்லை அண்ணா! ராகவானந்தம் வருவார். அவரை வைத்துக் கூட்டத்தை நடத்தி விடுகிறேன். 21-ந் தேதி காலையில் நேரே இங்கே வந்து உங்களைப் பார்க்கிறேன். நீங்க ஒடம்பைக் கவனிச்சிக்கீங்க-” என்று கூறியவாறே புறப்பட்டேன். சிந்தனை ரேகை படர்ந்த சோகமுகத்துடன் அண்ணா தலையசைத்தார்கள்.
அண்ணாவின் உடல் காய்ச்சலால் அவதியுறுவதை எண்ணியபடியே, எங்கள் மாநாட்டு நடவடிக்கைகளில் மூழ்கினேன். அண்ணா வருவதாக ஏற்கனவே செய்யப்பட்ட விளம்பரத்தால் ரயில்வே சந்திப்பு எல்லை. முழுதும் திரளாக மக்கள் குழுமி நின்றனர், என் தலைமையில் பொது நிகழ்ச்சி துவங்கிற்று. அரூர்முத்து, சி.கே.சி., இராகவானந்தம், ம.பொ.சி. ஆகியோர் பேசியதும், நான் அண்ணாவின் உடல் 104டிகிரி சுரத்தினால் துன்பமுறுவதை எடுத்துச் சொல்லி, கூட்டம் அத்தோடு முடிவுறுவதாக அறிவித்தேன். மக்கள் கூட்டமும் கரையத் தொடங்கியது. அந்த நேரத்தில்......
“அண்ணா வாழ்க! அறிஞர் அண்ணா வாழ்க!” என்று வெளியே இடைவிடாத முழக்கம் செவிகளில் நிறைந்தது. பரபரப்புடன் வாயிற்புரம் நாங்கள் வருவதற்குள் ஒரு fiat காரிலிருந்து அண்ணா இறங்குகிறார். உடன் சி. வி. ராசகோபால் மாத்திரம்!
ஒரு வார இளைப்பும் களைப்பும், சுமார் 150 மைல் கார் பயண அலுப்பும், முகத்தில் தாடி மீசையும், வாரப்படாத கலைந்த தலையும், மேலே கம்பளிச் சால்வையுமாய் அண்ணாவைப் பார்த்ததும், கண்கள் கலங்கிவிட்டன. வாருங்கள் அண்ணா என மகிழ்வோடு வரவேற்பதற்கு மாறாக, அனைவரும் ஒரே குரலில் ஏன் அண்ணா வந்தீர்கள்?’ என்று அச்சத்துடன் கேட்டோம். திரும்பிப் போய்க்கொண்டிருந்த மக்கள் மீண்டும் விரைந்து ஓடோடியும் வந்து அமர்ந்தனர். முடிவுற்ற கூட்டம் மீண்டும் துவங்கியது.
“நான் எந்த வேலையை எப்போது சொன்னாலும் தட்டாமல் செய்பவர் என் தம்பி கருணானந்தம். அவர் அழைத்து இதுவரை நான் வரத் தவறியதே இல்லை. அதனால்தான், இப்போதும், என் காய்ச்சலுக்கிடையிலும் வந்தேன்” எனத் தொடங்கி, “இவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப் புரட்சி செய்ய வேண்டும் என்று முந்திய மாநாட்டிலேயே யோசனை சொன்னேன். எத்தகைய புரட்சி என்பதை அப்போது சொல்லவில்லை. அதை இப்போது சொல்கிறேன். அந்தப் புரட்சி, நாம் கோரு வதைத் தராத ஆட்சியை மாற்றுவதாக இருக்கட்டும்!” என்று முடித்தார் அண்ணா.
அண்ணா பேசி அமர்ந்ததும் வலது காதில் நான் இவ்வாறு கிசுகிசுத்தேன். ஏண்ணா நீங்க இந்த நெலை மையிலே, இவ்வளவு தூரம் Risk எடுத்து Car travel பண்ணி வந்தீங்க? உள்ளதைச் சொல்லுங்கண்ணா!” என்று.
“வேற ஒண்ணுமில்லே அய்யா. ஒரு ஆள் வரமாட்டேன் என்றது. இன்னொரு ஆள் வந்திருக்கிறது. இது இரண்டுக்கும் பயந்துதான் வந்தேன்” என, உள்ளத்தின் எரிச்சலை அடக்கமாக உணர்த்தினார் அண்ணா.
நான் புரிந்து கொண்டேன்!
“என்னங்க சி. வி. ஆர்! நீங்க அண்ணா வர்றதைத் தடுத்திருக்க வேணா மா? காய்ச்சலோட இவ்வளதூரம் அழைச்சி வந்துட்டீங்களே?” என நான் அவரைக்கடிந்து கொண்டபோது, “அட, நீ ஒண்ணுய்யா! திடீருண்ணு கார்ல ஏறுண்ணார். சிட்டியிலேதான் எங்கேயோ போகக் கூப்பிடறார்ணு ஏறினா, கார் நேர இங்கே வந்துதான் நிக்குது” என்றார் அவர்!
பிரிந்ததும், சேர்ந்ததும்
1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது. அந்த நேரத்தில் பெரியாரைத் துறந்து அண்ணா தன்னுடன் இணைந்தவர்களைக் “கண்ணிர்த்துளிகள்” என்று தலைப்பிட்டு “திராவிட நாடு” இதழில் வாரந் தோறும் பட்டியல் வெளியிட்டார். மணியம்மையாரை மணம் புரிந்தபின், பெரியார் இரண்டு முறை மாயூரம் வந்து ஒய்வாக என் வீட்டில் சில நாள் தங்கினார்கள், அம்மையாருடன்.
நான் இந்தக் கால கட்டத்தில் அண்ணாவையும் சந்திப்பேன். “அய்யாவைப் பார்த்தாயா? வந்திருந்தாரா? என்ன சொன்னார்?” என்று பெருந்தன்மையுடன் அண்ணா என்னிடம் விசாரிப்பார். ஆயினும், நான் “கண்ணிர்த் துளிகள்” பட்டியலில் சேரவில்லை. 1932.ம் ஆண்டுக்குப் பிறகுதான் தி. மு. க. வளர்ச்சியில் பங்கேற்றேன்.
என்னைப் பொறுத்தவரையில், திராவிடர் கழகத்தி விருந்து பகைமையால் பிறந்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. காலத்தின் கட்டாயத்தினால், அண்ணா ஒர் அரசியல் பிரிவை ஏற் படுத்தியுள்ளார் என்றே கருதினேன். இதற்குச் சான்று பகரும் சில எடுத்துக்காட்டுகள், என்னால் இருதரப் பினின்றும் காண்பிக்க இயலும்,
தி. மு. க. தோன்றிய இரண்டொரு ஆண்டுகட்குப்பின் ஒருநாள் அண்ணா, சம்பத், நான் மூவரும் இருக்கிறோம். அப்போது வெளியாகிய ஒர் திரைப்படத்தில் இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் ‘எதுவேண்டும் சொல் மனமே’ என்று ஒருபாடலை அற்புதமாகப் பாடியிருந்தார். அது எப்போதும் என் செவிப்புலனை நிறைத்திருந்தது. நான் தனியே உட்கார்ந்து ஒரு சிறு தாளில் எழுதத் தொடங்கினேன்:–
எது வேண்டும் எம் தலைவன்-தலைவா (எது!)
மதி வேண்டும் என்ற உம் கொள்கையா-இல்லை
மணம்வேண்டி கின்ற உம் வேட்கையா (எது)
பணிசெய்வோர் விசுவாசமா-இல்லை
மணியம்மை சகவாசமா? (எது)
இதை எழுதும் போதே படித்துப் பார்த்த சம்பத், சட்டென்று அந்தத் தாளை உருவி, அண்ணாவிடம் தந்தார். அண்ணாவின் முகம் மாறியது! “செச்சே! இது மாதிரி எழுதாதேய்யா! அய்யா ரொம்ப வருத்தப் படுவார். அதிலேயும் நீ இப்படி எழுதுனேண்ணு தெரிஞ்சிதோ-அப்புறம் அவருக்குத் தூக்கமே வராது!” என்று சொல்லிக் கொண்டே, அந்தத் தாளைக் கிழித்து எறிந்து விட்டார். சம்பத்தும் அண்ணாவையே ஆதரித்தார்!
“அண்ணா! சும்மாதான் கிறுக்கினேன்; மன்னிச்சுடுங்க. இந்த மெட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததாலே எழுதிப் பார்த்தேன். நான் intensional ஆக அய்யாவைப் பற்றி எழுதுவேனா?” என்று சொன்னேன். அண்ணாவின் அரும்பெரும் பண்பினை எண்ணி எண் ணி வியந்தேன். இவரா அய்யாவை விட்டு விலகி வந்தவர்?
1947-ல் ஆகஸ்ட் 15 மகிழ்ச்சிநாள் என்று அறிவித்த அண்ணா, பெரியார் துக்கநாள் என்று கூறிய கருத்துக்கு முரண்பட்டாரல்லவா? அப்போது கூட அண்ணா வெளியிட்ட முக்கியமான அறிக்கையை எப்படி முடிக்கிறார் தெரியுமா? :–
“தலைவரும் கட்சியும் என் போக்கு தவறு என்று கருதி, என்னைக் கட்சியை விட்டு நீக்கினாலும், நான், சமூக சீர்திருத்தம், பொருளாதார சமத்துவம், திராவிடத் தனியரசு எனும் அடிப்படைக் கொள்கைகளைக் கட்சிக்கு வெளியே இருந்தாகிலும் செய்து வருவேன் என்பதைக் கூறி இந்த அறிக்கையை முடிக்கிறேன்!
அன்பன்
சி. என். அண்ணாதுரை
(“திராவிடநாடு” 10.8.1947)
1951-ல் மாயூரத்தில் தி. மு. க. தஞ்சைமாவட்ட முதல் மாநாடு நடந்தது. அங்கு தமது உரையினிடையே அண்ணா குறிப்பிட்ட ஒர் கருத்து மறக்க வொண்ணாதது. அண்ணா சொன்னார்: “தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் எல்லாம், பட்டினக்கரைகளில் எல்லாம், மூலை முடுக்குகளிலெல்லாம், தெருத்தெருவாகக் கருப்பு சிவப்பு இரு வண்ணக்கொடி பறக்க வேண்டும். அது திராவிட முன்னேற்றக் கழகக் கொடியாகத்தான் இருக்கவேண்டும் என்பதல்ல! திராவிடர் கழகக் கொடியாகவும் இருக்கலாம். ஆனால் இந்த இரண்டில் ஏதாவது ஒரு கொடி-கருப்பு சிவப்புக்கொடி கட்டாயம் பறந்தாக வேண்டும்!” என்றார் பெருந்தன்மையுடன், எதிரிகள் தாக்கும்போது திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகப் (double barrel gun) பயன்படும் என்றாரே. திராவிடர் கழகத்துக்கும், தானே அதிகாரி போன்ற உரிமையுடன்! வேறு யாரால் இங்கனம் பேச இயலும்? அண்ணா இப்படியெல்லாம் பேசியபோது, நான் மட்டும் ஆச்சரியப்படுவதில்லை. அண்ணா என்றாவது ஒரு நாள் வந்து அய்யாவைச் சந்திப்பார் என்றே நான் நம்பி வந்தவன்.
சென்னையில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில் தலைமையுரையாற்ற எழுந்த அண்ணா “இந்த நேரத்தில் நம்மையெல்லாம் ஆளாக்கி, உருவாக்கிய பெரியார்......” என்று அதற்கு மேல் தொடர இயலாமல் கண்ணிர் சிந்த வில்லையா?
இதே போன்றுதான், குழித்தலையில் கலைஞர் போட்டியிட்ட 1957-ல் இரண்டு முறை, பெரியார் காங்கிரஸ் காரர்களின் அழைப்பினை ஏற்று வந்து கூட்டங்களில் பேசினார்; நான் கலைஞரின் தலைமைத் தேர்தல் அலுவலக நிர்வாகியாதலால், வெளியில் செல்வதில்லை; இரண்டு பொதுக்கூட்டங்களையும் கேட்டேன்; அய்யா கலைஞரை எதிர்த்து அங்கே ஒரு சொல் கூட உதிர்க்க வில்லை!
இது இருக்கட்டும்; 1950-ல் ‘பெரியார் பொன்மொழிகள்’ வழக்கில் அய்யாவும், ஆரியமாயை வழக்கில் அண்ணாவும் தண்டிக்கப்பட்டுத் திருச்சி சிறையிலிருந்த போது, அய்யா, அண்ணாவுக்கு பிஸ்கட், பழங்கள் அனுப்பியதும் 28.9.1950-ல் விடுதலையானபோது அண்ணாவுக்குக் கார் வராததால், அய்யாவே தம் வேனில் அழைத்துச் சென்று அண்ணாவைச் சங்கரன் பங்களாவில் விடச் சொன்னதும், தி. மு. க. பிரிந்த பிறகுதானே?
1956-ல் திருச்சி மாநில மாநாட்டில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் கலைவாணர் என். எஸ். கே. அவர்கள் பாடும் போது
புத்தர் சொன்னதும் அய்யா சொல்வதும் ஒன்று
அய்யா சொல்வதும் அண்ணா சொல்வதும் ஒன்று
இந்த இருவரும் இணைந்தால் மிகவும் நன்று
என்று குறிப்பிட்டார். பிறகு அண்ணா இதுபற்றிப் பேசிய பொழுது “நாங்களிருவரும் இணையவேண்டும் என்ற கலைவாணர் பாடினார். இணைவோமா என்னும் கேள்வியைக் கேட்டால், பதிலாக ஒரு பெருமூச்சுதான் வருகிறது” என்று அண்ணா தனது ஏக்கத்தை வெளிப் படுத்தினார். இணைய வேண்டும் என்பது அவரது நோக்கம் என்பதைத்தானே அந்தப் பெருமூச்சு உணர்த்தியது.
உலக முழுதும் தெரிந்துள்ள Prodigal son என்ற கதை கூடத், தந்தையிடமிருந்து பிரிந்து சென்ற மகனொருவன் சீர்கெட்டு, வறுமையில் வாடி, வாழ வழியின்றி மீண்டும் தந்தையை நாடித் திரும்பியவனைத், தந்தை அரவணைத்து ஏற்றார் என்பதுதானே! ஆனால், இங்கு நடந்தது என்ன? பிரிந்து சென்ற மகன் ஆட்சியைக் கைப்பற்றி, முதலமைச்ச ராகவும் ஆனபின்னர், தந்தையைக் காணத் தானே சென்ற செய்தி வரலாற்றில் கிடையாதே! கேட்டதுண்டா? கண்டதுண்டா?
திருச்சியிலிருந்த தந்தை பெரியாரைக் காணவேண்டும் என்று விரும்பிய அண்ணா, தம்முடன் நாவலர், கலைஞர், ஆகிய இருவரை மட்டும் அழைத்துக் கொண்டு திடுமெனப் புறப்பட்டுத் திருச்சி சென்று அன்பிலையும் அழைத்துக் கொண்டு அய்யாவைச் சந்தித்தாரே இரா. செழியன் போன்றோர் தடுத்தும் கேளாமல!
இந்தச் சமயத்தில் நான் சென்னையிலோ, திருச்சியிலோ இல்லை. ஆனால் அய்யாவைச் சந்தித்துத் திரும்பியவுடன், அண்ணாவை வீட்டில் பார்த்தபோது, “என்னண்ணா! அய்யாவை விட்டுப் பிரிஞ்சப்ப ஊரையே கூட்டிகிட்டு வந்திங்க, ஒங்களோட! இப்ப திரும்பப்போயி அவரோட சேரும்போது, தனியே போயிட்டீங்களே?” என்று கேட்டேன். என்னைத் தம் அருகில் அழைத்துக், காதோடு, “கல்யாணந்தாய்யா எல்லாருக்கும் எதிரிலே நடக்கும். அடுத்தது?” என்றார். குபிரென்று சிரித்தேன். இப்போது நினைத்தாலும் என்னால் சிரிப்பை அடக்க முடிவதில்லை.
-Continue to page seven
Comentarios