top of page
library_1.jpg
Writer's pictureArien

இராயபுரம் கடலோரம்

கவிஞர் வைரமுத்து (தண்ணீர் தேசம்)

அத்தியாயம் - 4


இராயபுரம் கடலோரம்.

விஞ்ஞான அன்னங்களாய்

விசைப்படகுகள்.

தண்ணீர்த் தவளைகளாய்க்

கட்டுமரங்கள்.

தாலாட்டும்

தண்ணீர்த் தொட்டிலில்

வாலாட்டும் ஒரு

கடற்கொக்கு. தண்ணீரில்

தங்கம்கரைக்கும்

சொக்கச்சூரியன்.

கடலுக்குள் தலைதூக்கும்

கரும்பாம்பாய்

நீண்டுகிடந்த அந்தத்

தார்ப்பாலத்தின் முடிவில்

கலைவண்ணன் மார்பில் தழைந்து

மடியில் மாலையாய்க்

கிடந்தாள் தமிழ்ரோஜா.

அழுது அழுது கடைசியில்

தூங்கிப்போகும்

ஒரு குழந்தைமாதிரி

விசும்பி விசும்பிக் கிடந்தவள்

கண்ணீர்தீர்ந்து மெளனமானாள்.

சத்தியம்செய். இனி என்

நேசத்தைச்

சந்தேகிக்க மாட்டாயே.

அவளைக் காதுக்குள் காதலித்த

கலைவண்ணன்

அவள் அங்கங்களில் எதுவும்

அவனுக்கு வெளியே

வழியாதவண்ணம் வாரி எடுத்து

வசதி செய்து கொண்டான்.

இரண்டு ஒட்டுமாஞ்செடிகளைக்

கட்டுவதுபோல்

அவளைத் தன் மார்போடு

பதித்து முத்தப்பசையிட்டு

ஒட்டிக் கொண்டான்.

அவள் உடம்பெங்கும் ஒரு

பத்திரமான

பாதுகாப்புணர்ச்சி

பரவியது.

அதுதான்.

ஒவ்வொரு பெண்ணின்

உயிர்த்தேவை அதுதான்.

அந்த இதம்... அந்தக்

கதகதப்பான

உத்தரவாதம்...

அந்தத் தடம்பதியாத

தடவல்... பாசம் குழைத்த

ஸபரிசம்...

ஒவ்வொரு பெண்ணின் உள்ளாசை

அதுதான்.

பெரிதும் பெண்கள் ஆராதிப்பது

அதிரப்புணரும்

அந்நிகழ்வை அல்ல.

அவர்கள் அதிகம் விரும்புவது

இந்த நேசம்

நிஜம் என்னும் நினைப்பை.

அவர்கள் பெரிதும்

பிரியப்படுவது பின்கழுத்தில்

விரல்பதித்துக்

கூந்தல் ஆழத்தில் செய்யும்

கோதுகையை.

பூக்களுக்குச்

சுளுக்கெடுப்பதுபோல்

விரல்களுக்குச்

சொடுக்கெடுக்கும் அந்த

வேடிக்கையை.

தனக்குரியவனின்

முடிகொண்ட மார்பில்

முகம் புதைத்து

விழித்துக்கொண்டே உறங்கும்

ஒரு மயக்கநிலையை.

அந்த மனோநிலையில்

மயங்கிக் கிடந்தாள்

தமிழ்ரோஜா.

இமைகளை விழியிலிருந்தும்

தன்னை அவன் மார்பிலிருந்தும்

விலக்கிக்கொள்ள விரும்பாமல்

வினவினாள்.

எனக்கு ஏனிந்த

வெயில்குளியல்?

காதலரைச் சுடுவதில்லை

என்பது காலங்காலமாய்

நிலவிவரும்

சூரியத் தீர்மானம்.

எப்போதும் என்னை

இங்கேதான் அழைக்கிறீர்கள்.

மெரீனா பிடிக்காதா?

அவன் அவள் கன்னத்துக்கும்

உதட்டுக்கும்

இரண்டங்குல இடைவெளியில்

பதில் பேசினான்.

மெரீனா - திருமணத்தின்மீது

நம்பிக்கையில்லாதவர்கள்

சந்திக்கும் இடம்.

அவள் தளும்பிச் சிரித்ததில்

அவள் கன்னம்

அவன் உதட்டில் விழுந்தது.

சரி... சாந்தோம்?

அது காதல்மீதே

நம்பிக்கையில்லாதவர்கள்

சந்திக்கும் இடம்.

ஓகோ. இது?

நம்பிக்கைமீது

நம்பிக்கை உள்ளவர்கள்

சந்திக்கும் இடம்.

ஓர் அலை ஓங்கி எழுந்துவந்து

கைதட்டிவிட்டு

மீண்டும்

கடலுக்குள் போனது.

அந்த அலைஓசை அச்சத்தில்

அவன் உடம்புக்குள்

ஓடிஒளிவதுமாதிரி

அவனுக்குள் ஒட்டி ஒடுங்கினாள்

அவள்.

ஓ, கடலே. நீ இன்னும்

சில அலைகளை

அடுத்தடுத்து எனக்காக

அனுப்பிவைக்கக் கூடாதா?

புல்லாங்குழலின் காதில்

உதடு ஊதுவதைப் போல

அவன் அவள் காதில்

குறைந்த குரலில்

குனிந்து பேசினான்.

உனக்குப் பிடித்த ஒரு

செய்தியும் பிடிக்காத

ஒரு செய்தியும்

சொல்லட்டுமா?

ஒருமுறை கண்திறந்து

ம்... சொல்லிவிட்டு

மறுபடி முடிக்கொண்டாள்.

உனக்குப் பிடித்த

செய்தி...

நீ கடைசிப் பரீட்சை

எழுதியதும் தேர்வு

மண்டபத்திலேயே

நம் திருமணம்.

சரி, பிடிக்காத

செய்தி?

கடலுக்குள் நம் முதலிரவு.

அய்யோ.

அவள் அவனை

நிஜமாய்க் கிள்ளிப்

பொய்யாய் அழுதாள்.

தூரத்தில் கரையோரத்து

விசைப்படகு ஒன்று

கடல்புக

எத்தனித்துக்

கொண்டிருந்தது.

அதன் எந்திரஓசை, ஓரத்தில்

மேய்ந்த மீன்களையெல்லாம்

ஆழத்தில் அனுப்பிவைத்தது.

கலைவண்ணன் மீண்டும்

கடல்பார்த்தான். மடியில்

கிடக்கும் புதையலை

மறந்துபோனான்.

அவள் அவனை உதறி

எழுந்தாள். ஊடல் கொடி

பிடித்தாள்.

உண்மையில் நீங்கள்

நேசிப்பது கடலையா? -

என்னையா?

உன்னைத்தான். நிச்சயமாய்

உன்னைத்தான். கடலைவிட

மதிப்புடையவள் என்

காதலியே

நீதான்.

கடலைவிட

மதிப்புடையவளா? அவள்

கண்விரிந்தாள்.

ஆமாம். ஒரு டன்

கடல்தண்ணீர் 0.000004

கிராம்

தங்கம் வைத்திருக்கிறது.

ஆனால், 72 சதவிகிதம்

மட்டுமே தண்ணீர் கொண்ட

உடலில்

நீ 50 கிலோ கிராம்

தங்கமல்லவா

வைத்திருக்கிறாய்.

நான் உன்னைக்

காதலிப்பேனா? கடலைக்

காதலிப்பேனா?

அவள் காதுகள் முடிக்

கத்தினாள். போதும்.

போதும். உங்கள் புள்ளிவிவரம்

போதும்.

கடலுக்குள் நுழைவதற்குத்

தூரத்து விசைப்படகு துடித்துக்

கொண்டிருந்தது.

நான் கடல்பார்த்தபோதும்

உன் கண்பார்த்தபோதும்

மட்டும் பிரமித்திருக்கிறேன்

தமிழ்.

நீலக்கடல்பற்றி

நிறையப் படித்தேன். உன்னைப்

படித்துக்கொண்டேயிருக்கிறேன்.

என் ஒவ்வொரு கனவிலும்

உலாவரும் கடல் தேவதை

நீதான்.

நீ கடல். நான் பூமி.

என் மீது உன் அலைகளை

அனுப்பிக்கொண்டே

இருக்கிறாய்.

நீதான் என்மீது

புயல்வீசுகிறாய். நீதான்

என்மீது

மழைதூவுகிறாய்.

ஒவ்வொரு நாளும் என்

ஓரக்கரைகளை அரித்து

அரித்து என்னை உன்

உள்ளிழுத்துக்

கொண்டிருக்கிறாய்.

கடல் இல்லையென்றால்

வானுக்கு நிறமில்லை. நீ

இல்லையென்றால் என்

வாழ்க்கைக்கு நிறமில்லை.

நீ கடல். நான் பூமி என்பது

வெறும் உவமை

அல்ல. உண்மை.

சூரிய வெப்பத்தை உடனே

உள்வாங்கி

உடனே வெளிவிடுகிறது பூமி.

உடனே கொதித்து

உடனே குளிர்ந்துவிடும்

என்னைப் போல.

சூரிய வெப்பத்தை

மெல்லமெல்ல உள்வாங்கி

மெல்லமெல்ல வெளிவிடுகிறது

கடல் - அணு

அணுவாக அன்புவயப்பட்டு

உயிர்நிறையக்

காதலிக்கும் உன்னைப்

போல.

கலைவண்ணனுக்குப்

புனைபெயர் கடல்மைந்தன்

என்று வைக்கலாம்.

நான் மட்டுமல்ல.

ஒவ்வொரு மனிதனும் கடலின்

மைந்தன்தான்.

ஒவ்வொரு பெண்ணும்

கடலின் புத்திரிதான்.

ஒன்றை மறந்தேன். இன்னொரு

வகையிலும் நீதான் கடல்.

நான்தான் பூமி.

எந்த வகையில்?

முன்றில் இரண்டுபங்கு தண்ணீர்

இருந்தும் மிச்சமுள்ள பூமி,

தாகத்தால் தவிக்கிறதே...

அதைப்போல -

அமிர்தப் பாத்திரமாய் நீ

அருகிருந்தும் தாகப்பட்ட மனசு

தவியாய்த் தவிக்கிறதே.

தள்ளியிருந்த தமிழ்ரோஜா

தாவும் குழந்தையாய்

அருகில் வந்தாள்.

அதுதான் எனக்கும்

ஆச்சரியம். தண்ணீர்

இவ்வளவிருந்தும்

தாகம் ஏன் தீரவில்லை?

புள்ளிவிவரம் சொன்னால்

பொறுத்துக்கொள்வாயா?

கொள்வேன்.

சொல்வேன். பூமியின்

தண்ணீரில் 97 சதம்

கடல்கொண்ட

நீர். உப்பு நீர். குடிக்க

உதவாத நீர்.

மிச்சமுள்ள 3 சதம்தான்

நிலம்கொண்ட நீர்.

அதில் 1 சதம் தண்ணீர்

துருவப்பிரதேசங்களில்

பனிமலைகளில்

உறைந்துகிடக்கிறது.

1 சதம் தண்ணீர் கண்டுகொள்ள

முடியாத ஆழத்தில்,

மொண்டுகொள்ள முடியாத

பள்ளத்தில் கிடக்கிறது.

மனிதகுலம்

பயன்படுத்துவதெல்லாம்

மிச்சமுள்ள 1

சதத்தைத்தான்.

அய்யய்யோ. அந்த 1

சதமும் தீர்ந்துவிட்டால்?

தீராது. தண்ணீர் பூமிக்கு

வெளியே போய்விட முடியாது.

ஒவ்வொரு மனிதனும் பருகுவது

பயன்படுத்தப்பட்ட பழைய

தண்ணீரைத்தான். தண்ணீரும்

காதலைப்போலத்தான். அதன்

முலகங்கள் அழிவதில்லை.

தூரத்து விசைப்படகு

தண்ணீர் கிழிக்கத் தயாரானது.

கிழக்கு நோக்கித் தன் முக்கை

மொத்தமாய்த் திருப்பியது.

கலைவண்ணன் கரையில்

இருந்துகொண்டே

மீண்டும் கடலில் முழ்கினான்.

விழித்துக்கொண்டே கனவில்

பேசினான்.

கடல்.

அது ஒரு தனி உலகம்.

பள்ளிகொண்ட விஸவருபம்.

எண்பத்தையாயிரம் உயிர்வகை

கொண்ட உன்னத அரசாங்கம்.

அடுத்த நூற்றாண்டு

உணவுத்தேவையின்

அமுதசுரபி.

முத்துக்களின் கர்ப்பப்பை.

பவளங்களின் தொட்டில்.

மங்கனீஷ பாறைகளின் உலோக

உலகம்.

பெட்ரோல் ஊற்றின

பிறப்புறுப்பு.

கலங்கள் நகரும்

திரவத்திடல்.

அது கவிஞர்களின் கனா.

விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடம்.

ஞானிகளின் தத்துவம்.

விசைப்படகு அந்தக்

காதலர்பாலம்

கடந்துதான்

கடல்புக வேண்டும்.

இப்போது ததும்பித் ததும்பி

அவர்களை நோக்கித்

தவழ்ந்து வந்தது அந்த

டீசல்பறவை.

தூரத்துச் சித்தரங்களாய்

அதன்

விளிம்பில் சில மீனவர்கள்.

படகு நெருங்க...

நெருங்க...

ஓ....

அவனுக்குத் தெரிந்தவர்கள்.

அவனை நேசிப்பவர்கள்.

மீனவர் போராட்டத்தில்

கைதாகி

அவன்

எழுத்துக்களால்

மீட்கப்பட்டவர்கள்.

அவர்களும் அவனைக்

கண்டுகொண்டார்கள்.

கலைவண்ணன்.

கலைவண்ணன்.

எந்திரஓசை கிழத்துக்

குரலெடுத்துக்

கூவினார்கள்.

அவன் மடியில்

படுத்துக்கிடந்தவள்

வெடித்துப்

பூத்தாள்.

விசைப்படகை வெறித்துப்

பார்த்தாள்.

பிறகு கண்களால் கேள்விகேட்டு

மெளனம் காத்தாள்.

கண்ணிமைக்காத கலைவண்ணன் -

தோழர்கள். என் மீனவத்

தோழர்கள் என்றான்.

என்ன பேனாக்காரரே.

கடலோடு

போய்விடுவோம்.

வாருங்களேன்.

விசைப்படகிலிருந்து வீசிய

அழைப்பு காற்றுவழி

மிதந்து கரையேறியது.

பாலம் நோக்கியே படகும்

வந்தது.

காதலியே. தமிழ்ரோஜா.

கடல்சென்று வருவோமா?

கண்ணடித்துச் சிரித்தான்

கலைவண்ணன்.

அய்யோ.

அவள் பெங்குவின் பறவைபோல்

பின்வாங்கினாள்.

கொஞ்சதூரம் போகலாம், சுத்தமான காற்று

சுகமான தாலாட்டு, தரையில் விழுந்த

ஆகாயமாய்க் கடல்பார்க்கலாம்.

ஓராயிரம் பறவைகளின் ஊர்வலம் பார்க்கலாம்

உடனே திரும்பலாம்.

கால்கள் பின்னுக்கிழுக்க - அச்சத்தில் முகம்

வியர்க்க - வேண்டாம் அந்த விபரீதம்

என்று விலகி ஓடினாள்.

படகு பக்கத்தில் வந்துவிட்டது.

கலைவண்ணனைப் பார்த்துக் கத்தினார்கள்.

கடலுக்குள் போய்வருவோம் மீன்விருந்து

வைப்போம் மாலைக்குள் கரைசேர்ப்போம்

ஒரே கதியில் உரைநடையில் பாடினார்கள்.

படகு நின்றது பாலம் உரசி.

தயவுசெய்து வா தமிழ் கலை கெஞ்சினான்

வேண்டாம் வேண்டாம்

மாட்டேன. மாட்டேன்.

அவள் சுடுமணலில் விழுந்த ஒற்றை

மழைத்துளியாய் ஓடி மறையப்பார்த்தாள்.

நீங்களும் வாருங்கள் தங்கையும் வரட்டும்

அழைப்புக் குரல்கள் அதிகமாயின.

இப்படி அஞ்சினால் எப்படி?

பாதுகாப்பான பயணம் இது. சின்னச்சின்ன

அனுபவங்கள் வேண்டாமா? சிறகடி

என்னோடு. வா தமிழ். வா.

அவள் சுருங்கினாள்

இவன் நெருங்கினான்.

அவள் அஞ்சி விழித்தாள்

இவன் கெஞ்சி

அழைத்தான்.

அவள் விழித்தாள்.

இவன் அள்ளினான்.

அங்கே அரங்கேறியது ஓர் அகிம்சை இம்சை

அவளை மார்போடு அள்ளி கவனமாய்க்

கால்வைத்து விசைப்படகில் குதித்தான்.

தாலாட்டும் படகில் தடுமாறி விழுந்தான்.

வீழ்வது அவனாக இருப்பினும்

வாழ்வது தமிழாக இருக்கட்டும்

தமிழ் காயப்படாமல் கட்டிக்கொண்டான்.

அவள் உள்ளாடிய அச்சத்தில்

ஊமையானாள். மீனவர்கள் கைதட்டி

ஒலிஎழுப்ப கிலிகொண்டது கிளி.

பயப்படாதே தமிழ். பார் என் தோழர்களை.

அவர் பாண்டி இவர் பரதன் இவர் இசக்கி

அவர் சலிம்.

எல்லோரையும் அவள் வேர்த்த

முகத்தோடு வெறித்துப் பார்த்தாள்.

அவளை அவர்களுக்கு அறிமுகம் செய்தான்

இவள்தான் தமிழ்ரோஜா. இப்போது

மனைவிபோல் இருக்கும் என் காதலி.

பின்னாளில் காதலிபோல் இருக்கப்போகும்

என் மனைவி.

விசைப்படகு விரைந்து படபடத்தது

தமிழ்ரோஜா இதயம் இரண்டுமடங்கு

துடிதுடித்தது.


 



Comments


bottom of page