top of page
library_1.jpg
Writer's pictureArien

உள்ளே எதையும் ஒளிக்காதே

கவிஞர் வைரமுத்து (தண்ணீர் தேசம்)

அத்தியாயம் - 6




உள்ளே எதையும் ஒளிக்காதே.

துணிந்துவிடு. துப்பிவிடு.

ஆசையைத் துப்பு.

ஞானம் வரும்.

அச்சம் துப்பு.

வீரம் வரும்.

ரகசியம் துப்பு. தூக்கம்

வரும்.

அவள் அடிவயிற்றில் உழன்ற

வாந்தி துப்பினாள். அழுத்தம்

குறைந்தது. அமைதி வந்தது.

நெற்றியில் அடித்த சம்மட்டி

நின்றேவிட்டது. மழை நின்ற

பின்னால் இலை சொட்டும்

துளிபோல தலைபாரம்

வடிந்தது, சொட்டுச்

சொட்டாய்.

அவள் வலை நனைய

வாந்தியெடுத்தது கண்டு

பதறிய மீனவர் சிதறி ஓடினர்.

காணாமல் போன வேகத்தில்

மீண்டும் கண்ணில் தெரிந்தனர்.

பரதன் கையில் குடிதண்ணீர்

பாண்டி கையில் கோப்பைத்

தேநீர்.

இதற்குத் தேநீர்தான்

மருந்து.

குடி தாயே. குடி.

- இசக்கி வைத்திய வார்த்தை

சொன்னான்.

பருகினாள் அவள்.

பாலில்லாத தேநீர்.

அவள் களைப்பை மாற்றும்

கறுப்புத் தாய்ப்பால்.

துவண்ட கொடியைத்

தோளில் அணைத்து

வாந்தியெடுத்த

வாய்க்கடை துடைத்து

விரிந்த குழலை

விரல்கொண்டளைந்து

காதலிதுயரம் கண்களால்

அளந்து அவள் கண்ணோரம்

சிதறிய

கண்ணீர் துடைத்த கலைவண்ணன்

இப்போது

பரவாயில்லையா..? -

என்றான் இதமாக.

புலவர்க்கு மட்டுமே புரியும்

சில தமிழ்ச்சொற்கள் மாதிரி

- அவனுக்கு மட்டுமே

புரியும்படி ஒரு புன்னகை

புரிந்தாள்.

அந்தப் பாலைவனச்சாரல்

கண்டு பளிச்சென்று மலர்ந்தவன்

- எல்லாரும் ஜோராக

ஒருமுறை கைதட்டுங்கள்.

தமிழ் புன்னகைக்கிறாள். தமிழ்

புன்னகைக்கிறாள்.

- என்று தன்னைமறந்து

கத்தினான்.

அவர்கள் குழந்தைகளாய்ச்

சிரித்தார்கள்.

குதூகலமானார்கள்.

மார்கழிமாத வெயில்

மறைவதற்குள் துணிகாய

வைக்கத் துடிக்கும் ஒரு

சலவைக்காரியைப் போல

அந்தப் புன்னகை மறைவதற்குள்

அவளைக் கரைசேர்த்துவிடக்

கருதினார்கள்.

மின்னல்வேகத்தில் மீன்பிடிக்க

ஆயத்தமானார்கள்.

பாண்டி கட்டளையிட்டான்.

பரதா. விசைப்படகின்

வேகம் குறை. இந்த இடத்தின்

ஆழம் அறி. இரும்புக் குண்டை

நுனியில்கட்டிய பிளாஸடிக் கயிறு

எடு.

வீசு கடலில்.

விடு. விடு. போகட்டும்.

அது தரைதொட்ட உணர்வு

தட்டுப்படுகிறதா? இப்போது

எடு. ஆழக்கயிற்றின் நீளம்

அள. எத்தனை பாகம்?

இசக்கி அளந்து சொன்னான்.

பதினான்கு பாகம்...

பதினான்கு பாகமா?

பரவாயில்லை - இருபத்தைந்து

மீட்டர். இறக்கு, இறக்கு.

வலைகளை இறக்கு. அய்யா

பேனாக்காரரே.

அம்மா தமிழ்ரோஜா.

ஓரமாய் ஒதுங்குங்கள்.

வலையோடு சேர்த்துக்

கடலோடு எங்கள் இரும்புவடம்

இறங்கும். தலையில்

மோதலாம். தள்ளியிருங்கள்.

ஏ இசக்கி. ஏ சலீம்.

வலைவிரிய வசதியாய்ப்

பக்கப்பலகை இறக்கு.

கவனம். ஒவ்வொரு பலகையும்

தொண்ணூறு கிலோ.

நகர்த்திவிட்டு நகராவிட்டால்

முகத்தைப் பிய்க்கும்.

மீன் விழும் முன்னே நீ விழக்கூடாது.

சுறாக்கள் உன்னைச்

சுவைத்துவிடக் கூடாது.

அப்புறம் உன்

வைப்பாட்டிக்கெல்லாம் நான்

வாழ்வுதர முடியாது.

இரும்புவடத்தில் வேகம்

இருக்கு. பக்கப் பலகையைப்

பார்த்து இறக்கு...

கடலில் எறிந்த வலை

காணாமல் போக - மிதந்த

மிதவைகள் அமிழ்ந்துபோக -

பக்கப்பலகைகளின் பாரம்

அழுத்த ஆடிக்காற்றில்

பாவாடையாய் அகலப்பட்டது

வலை.

விழித்த விழி விழித்தபடி

வியந்துநின்ற தமிழ் ரோஜா -

படகுக்கு வால்முளைத்த

மாதிரி வலை மிதந்து

கொண்டே வருமா?

என்றாள்

ஆமாம். கடலின் தரையை

வலை தடவிக்கொண்டே வரும்.

வலைநீளும் எல்லைக்குள் எந்த

மீன் வந்தாலும் அது

வலைப்படும். வலையில்

மாட்டிய மீனும்

அரசியல்வாதியிடம் மாட்டிய

பணமும் ஒன்றுதான். சிக்கினால்

மீளாது.

வெண்கல உண்டியலில்

வெள்ளிக்காசுகளாய்த் ததும்பிச்

சிரித்தாள் தமிழ்ரோஜா.

இதுவல்லவோ நான்

எதிர்பார்த்தது. இதுவல்லவோ

என் மனம் கேட்டது.

இதற்காகவல்லவோ நான்

தண்ணீரில் தவமிருப்பது.

சிரி பெண்ணே சிரி. இந்தக்

கடல் இத்தனை யுகமாய்

எத்தனை சிரித்ததோ

அத்தனைச் சிரிப்பையும்

மொத்தமாய்ச் சிரி...

சுக்கான் அறையில் பரதன்.

சமையல் அறையில் சலீம்.

விசைப்படகின் வெளித்தளத்தில்

அணில் மனிதர்களாய் -

பாண்டியும் இசக்கியும்.

விசித்திர வாழ்க்கை

இவர்களுக்கு என்றாள்

தணிந்த குரலில் தமிழ்.

இல்லை. வேதனை

வாழ்க்கை இவர்களுக்கு

என்றான் தடித்த குரலில்

கலை.

விளங்கவில்லை.

உனக்கு மட்டுமில்லை.

உலகுக்கே விளங்கவில்லை.

இவர்கள் இந்த மண்ணின்

பூர்வகுடிகள். காற்றை

எதிர்த்துக் கடல்

கிழித்தவர்கள். கிழக்கிலும்

மேற்கிலும் நம் நாகரிகத்தை

நடவுசெய்தவர்கள்.

பூமியின் மையக்கோட்டுக்கு

மேலே போனவர்கள். ஆனால்

இன்னும் வறுமைக்கோட்டுக்குக்

கீழே வாழ்பவர்கள்.

மனிதனின் முதல்தொழில்

மீன்பிடித்தல்தான். வேட்டையே

மீன் வேட்டையில்தான்

ஆரம்பித்தது.

இன்னும் பசிபிக் தீவுகளில் சில

பழங்குடிகள் அம்பு

தொடுத்துத்தான் மீன்

பிடிக்கிறார்கள்.

அந்தப் பழந்தொழில் செய்த

இனம் இன்னும் பழையதாகவே

இருக்கிறது.

இந்த மீன்நாற்றத்தில் முக்கு

முடிக்கொள்கிற சில

மனிதர்களைப் போலவே -

இவர்களைப் பார்த்துக்

கண்முடிக் கொண்டது காலமும்.

இயற்கை தாலாட்டினால்

இந்தக் கடல் இவர்களுக்குத்

தொட்டில்.

இயற்கை தள்ளிவிட்டால் இந்தக்

கடல் - கல்லறை.

கரை மீண்டால் இவர்கள்

மீன்தின்னலாம். கரை

மீளாவிட்டால் இவர்களை

மீன்தின்னும்.

வேட்டையாடு. அல்லது

ஆடப்படு.- இதுதான்

இந்தத் தண்ணீரில் எழுதப்பட்ட

அழியாத வாசகம்.

அதோ பார். இந்த உப்புக்

காற்றில் துருப்பிடித்துவிட்டது

இரும்புவடம்.

சுக்கான் இரும்பில் துரு.

சமைக்கும் அடுப்பில் துரு.

நட்ட கம்பியில் துரு.

விசைப்படகின் விளிம்பில் துரு.

இன்னும் துருப்பிடிக்காதிருப்பது

இவர்களின் எலும்பு

மட்டும்தான்.

அவன் பேச்சிலிருந்த உண்மையும்

உள்ளார்ந்த கண்ணீரும்

தடுமாறவைத்தன தமிழை.

இப்போது புரிகிறது. என்

வாழ்க்கை எவ்வளவு

மெல்லியதென்று.

என் வீட்டுக் கூண்டுக்கிளிகூட

எவ்வளவு பத்திரமாயிருக்கிறது?

என் வாழ்க்கை என்

சாப்பாட்டு மேஜைக்கே

வந்துவிடுகிறது. ஆனால்,

இவர்களோ கரையில்

தொலைத்த வாழ்க்கையைக்

கடலில் தேடிக்

கொண்டிருக்கிறார்கள்.

மெல்லிய வாழ்க்கை என்

வாழ்க்கை. பனித் துளிக்குள்

பள்ளிகொள்ளும் வாழ்க்கை.

என் குரோட்டன்ஸ - என்

செல்ல நாய் - ஆயிரம்

டாலர் இலைகளின் மேலே

அள்ளித் தெளித்த புள்ளிகள் -

காற்றாடும் மொட்டைமாடி -

கண்ணடிக்கும் நட்சத்திரம் -

சுருக்கம் விழாத படுக்கை -

சுதந்திரமான குளியல் -

கைநிறையக்காசு -

பைநிறையக் கனவுகள் - இந்த

சந்தோஷவட்டத்தில் நான்

செளகரியமாயிருக்கிறேன்.

ஆனால், இவர்களுக்காக நான்

இரக்கப்பட முடியும். என்னால்

இவர்களாக இருக்க முடியாது.

என் சுவாச உறுப்புகள்

தரைக்கு மட்டுமே ஏற்றவை.

தண்ணீருக்குள் தள்ளாதீர்கள்.

அவள் சத்தமிட்டுப்

பேசவில்லை. ஆனால் அவள்

கருத்து உரத்துநின்றது. உண்மை

சொல்கிறேன் உணர்ந்து

சொல்கிறேன் என்ற உறுதி

இருந்தது.

வாடிய கீரையைத்

தண்ணீர்தெளித்து வைப்பது

மாதிரி

வாடிய அவள் முகத்தில்

வேர்வை தெளித்தது வெயில்.

தன் கசங்காத கைக்குட்டையில்

அவளின் கசங்கிய

முகம்துடைத்தான்.

தாயின் முதுகைக் கட்டிக்

கொண்டு முதன்முதலாய்

யானைபார்க்கும் ஒரு

குழந்தையைப் போல்

கலைவண்ணன் முதுகைக்

கவசமாய்க் கொண்டு அவள்

கடல்பார்த்தாள்.

பார்த்து வியந்து பயந்தவள்

பதறிச் சொன்னாள்.

அய்யய்யோ. இதில்

விழுந்தால்?

அவ்வளவுதான். குன்றில்

தொலைந்த குன்றிமணிதான்.

கடலில் விழுந்த

கடுகுதான்...

அவள் செல்லக் கேள்விகளால்

சீண்டினாள்.

இப்போது

புயலடித்தால்?

அடிக்காது. புயல் நல்ல

விருந்தாளி. சொல்லாமல்

வருவதில்லை...

திடீரென்று கடலுக்குள்

எரிமலைகள் வெடித்தால்?

வங்காளவிரிகுடாவில் அதற்கு

வசதி இல்லை. இது

இந்துமகாசமுத்திரத்தின்

குழந்தை. பெரும்பாலும்

ஆழமில்லை. எரிமலைகள்

எங்குமில்லை.

பர்மாக் கரையோரம்

செடுபா தீவுகளில் சின்னச்

சின்ன எரிமலைகள் உண்டு.

ஆனால், அவை அனல்

கக்குவதில்லை. மணல் கக்கும்.

முன்னாளில் இது கடல்

என்றுகூடக் கருதப்படவில்லை.

கங்கைஏரி என்பதுதான் இதன்

சின்ன வயதுச்

செல்லப்பெயர்...

விசைப்படகில் ஓட்டைவிழுந்து

விறுவிறுவென்று நீர்புகுந்து

மொத்தத்தில் எல்லாரும்

முழ்கிவிட்டால்?

கவலைகொள்ளாதே

கண்ணே. ஓர் அலையின் முதுகில்

ஏறிக்கொண்டு உலகம் சுற்றி

வருவோம்...

அவள் சலவைநிலவாய்ச்

சட்டென்று சிரித்தாள்.

அலை முதுகில்

ஏறிக்கொண்டால் உலகம் சுற்ற

முடியுமா?

ஆமாம். தென்கடலில்

தோன்றும் பேரலைகள்

இருபத்துநான்கு மணி

ஐம்பது நிமிடத்தில்

உலகத்தைச் சுற்றிவிட்டு

ஓடிவந்துவிடுகின்றன. அப்படி

எனக்கும் உனக்கும் ஓர் இலவச

அலை கிடைக்காதா? சுற்றும்

உலகத்தை நீர்வழியே

சுற்றிவரமாட்டோ மா?

எனக்கு மீண்டும்

தலைசுற்றுகிறது...

அவளைத் தாங்கிப்பிடித்துத்

தலைமுடிதடவி விசைப்படகின்

விளிம்பில் சாய்த்து நெற்றியில்

அன்பு தடவி ஆதரவு

செய்தான்.

இரண்டுமணி நேர

இடைவெளிக்குப் பிறகு

மீனவர்கள் வலையிழுத்தார்கள்.

நீரில் கிடந்த இரும்புவடங்கள்

எந்திரச் சுழற்சியில்

ஏறின மேலே.

அமிழ்ந்த மிதவை மீண்டும்

மிதக்க - பக்கப் பலகைகள்

பளிச்சென்று தெரிய -

மீனவர்கள்

இழுக்க இழுக்க நீள வலைகள்

நிறைத்தன படகை.

எந்த முகத்திலும்

உற்சாகமில்லை.

வலையில் மீன்பட்ட அறிகுறி

இல்லை.

வலையில் அங்கங்கே ஒட்டிவந்த

பச்சைப்பாசி, அது தரைதடவி

வந்ததென்றே தடயம்

சொன்னது.

கலைவண்ணன் முகத்தில்

கவலைக்கோடு.

அரசனை யாசித்து

வெள்ளைவேட்டியோடு போன

புலவன் அழுக்குவேட்டியோடு

திரும்பி வந்ததைப்போல

மீன்பிடிக்கப் போன வலை

பாசி பிடித்தல்லவா

வந்திருக்கிறது.

தமிழ்ரோஜாவும் தவித்துப்

போனாள்.

முழுவலையும் இழுத்து

முடித்தார்கள். இல்லை.

பெருமீன்கள் இல்லை.

ஏழைக்கிழவியின் சுருக்குப்பையில்

முலையில் அங்கங்கே முடங்கிக்

கிடக்கும் சில்லறைகளைப்போல

வலையின் ஆழத்தில் சில

சில்லறை மீன்கள்

சேர்ந்திருந்தன.

வலை உதறினார்கள்.

வா வா தமிழ்.

வந்துபார்...

அவள் தட்டுத்

தடுமாறிக்கொண்டே

ஆடும்படகில் ஓடிவந்தாள்.

தட்டை மீன்கள் குட்டி மீன்கள்

உருளைஉயிர்கள் பெயரிடப்படாத சில

பிண்டப் பிராணிகள் சின்னச் சின்ன

ஜெல்லி மீன்கள் அங்கொன்றும்

இங்கொன்றுமாய் ஆக்டோ பஸகள் .. குதித்தும்

ஊர்ந்தும் நகர்ந்தும் தவழ்ந்தும் பல

வண்ணங்களில் படங்காட்டின.

சரியாய் விழவில்லை - பாண்டி

சமையலுக்கே காணாதே - சலீம்

இன்னொரு முறை வலைபோட நேரமில்லை

தங்கை பாவம் தாங்காது கரை திரும்ப

வேண்டியதுதான் - இசக்கி.

எல்லார் முகத்திலும் கவலை வலைவரித்து.

கலைவண்ணன் தமிழ்ரோஜாவைத் தனியே

அழைத்தான்.

அவள் உள்ளங்கைகளைத் தன்

கன்னங்களில் ஒற்றிக் கொண்டு சொன்னான்.

இதோ பார் தமிழ். முப்பது கிலோ மீட்டர்

கடல் கடந்து வந்தபிறகு வெறுங்கையோடு

கரைதிரும்புவது காலவிரயம் - காசுவிரயம்-

டீசல் விரயம். பல்லைக் கடித்துப் பொறுத்துக்

கொள். இன்னொரு வலைவீச்சுக்கு

வாய்ப்புக்கொடு ... - அவன் கெஞ்சினான்

தலையை அழுத்திப் பிடித்து உட்கார்ந்தவள்

சற்றுநேரப் போராட்டத்திற்குப் பிறகு சரி,,,

என்றாள்.

உப்புக்கரித்த அவள் கன்னத்தில் இனிக்க இனிக்க

முத்தமிட்டான்.

மீண்டும் பிளாஸடிக் கயிறு இறக்கி ஆழம்

அறியப்பட்டது. இப்போது இருபத்திரண்டு

பாகம் - நாற்பது மீட்டர் மீண்டும் இரும்புவடம்

இறங்க - பக்கப்பலகை குதிக்க - வலைகள்

மறைய - மிதவைகள் அமிழ நிகழ்த்தப்பட்டது

இரண்டாம் வலைவீச்சு.

இந்தமுறை மீன் விழும் என்றான் பாண்டி

எப்படி? என்றான் கலை.

ஆழமறியும் இரும்புக்குண்டு தரைதொடும்

போது தரை சகதியா பாறையா என்று

சொல்லும் தரை பாறையாயிருந்தால் மீன்

வீழாது. சகதியாயிருந்தால் மீன் வீழும்.

வலை முதலில் விரிந்தது பாறையில்.

இப்போது விரிந்திருப்பது சகதியில் மீன் விழும்

அவன் நினைத்ததும் நடந்தது, நினைக்காததும்

நடந்தது,

அவன் நினைத்தபடி - விரித்த வலையில்

மீன்கள் விழத் தொடங்கின.

அவன் நினைக்காத ஒன்றும் நிகழ்ந்தது.

எந்திரத்திற்கு டீசல் விநியோகத்தைச் சீர்செய்து

அனுப்பும் டைமிங் பிளேட் உடைந்து

விசைப்படகு நின்று விட்டது.

அது-

நீலக்கடலில் கறுப்பு இரவு கவியும் நேரம்.


 

10 views0 comments

Comments


bottom of page