top of page
library_1.jpg
Writer's pictureTamil Bookshelf

அப்துல் கலாமின் கவிதைகளும், மேற்கோள்களும் - I

ஏற்காடு இளங்கோ


அப்துல் கலாம்

டாக்டர் அப்துல் கலாமின் முழுப் பெயர் ஆவுல் பக்கீர் ஜெனுலாபுதின் அப்துல் கலாம் (Abdul Pakir Jainulabdeen Abdul Kalam) என்பதாகும். இவர் தமிழ் நாட்டில் உள்ள ராமேஸ்வரம் என்னும் நகரில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று பிறந்தார் . இவர் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை ராமேஸ்வரத்தில் பயின்றார். தனது பட்டப்படிப்பை திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் முடித்தார். பின்னர் உயர் கல்வியை சென்னை எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் பயின்று விண்வெளி பொறியியல் பட்டத்தைப் பெற்றார்.

அப்துல் கலாம் மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் முதன்மை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அமைப்பில் தனது ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டார். அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்தபோது இந்திய ராணுவத்திற்காக திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் ஆகிய ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டன. இந்தியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுணைகளை உருவாக்கியபோது அமெரிக்கா உள்பட பல வல்லரசுகளே பயந்துபோயின இதற்கு காரணமாக இருந்தவர் அப்துல் கலாம். ஆகவேதான் இவரை ஏவுகணை நாயகன் என்று அழைக்கின்றனர்.

விண்வெளி ஆராய்ச்சியிலும் அப்துல் கலாம் சிறப்பான பங்கினை அளித்துள்ளார் 1980 ஆம் ஆண்டு எஸ் எல் வி-3 ராக்கெட் மூலம் ரோகிணி-1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவி, இந்தியா விண்வெளியில் சாதனை புரிந்தது. இதன் மூலம் ராக்கெட் தொழில் நுட்பத்தில் உலகளவில் இந்தியா ஆறாவது நாடாக இணைந்தது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்களிப்பாளாக அப்துல் கலாம் இருந்தார். அது தவிர இந்தியா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள சந்திராயன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்ட மங்கள்யான் போன்ற விண்வெளித் திட்டங்களிலும் அப்துல் கலாமின் பங்களிப்பு அதிகம் உள்ளது.

இந்தியா பொக்ரானில் அணுகுண்டுச் சோதனையை 1998 ஆம் ஆண்டு மே 11 அன்று நடத்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம் ஆவார். இது தவிர சில அறிவியல் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியுள்ளார்.

போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு எடை குறைவான காலிபர் ஷூவை உருவாக்கினார். இதற்கான காப்புரிமையை அவர் பெறவில்லை. போலியோவால் பாதிக்கப்பட்ட அனைவரும் பயன்படுத்துவதற்காகவே அவர் காப்புரிமையை பெறவில்லை. இந்த காலிபர் ஷூ கலாம் காலிபர் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இத்துடன் இவர் பேஸ்மேக்கர் கருவியையும் உருவாக்கியுள்ளார். இது இதய நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்படும் கருவியாகும்.

இப்படி பல்வேறு சாதனைகளை புரிந்ததற்காக அப்துல் கலாமிற்கு இந்தியாவில் உயரிய விருதுகளான பத்ம பூஷண், பத்ம விபூஷண், மற்றும் பாரத ரத்னா ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. சுமார் 30 பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டங்களை வழங்கி கெளரவித்து உள்ளன.

அப்துல் கலாம் இந்திய நாட்டின் 11 ஆவது ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய ஜனாதிபதிகளிலேயே மிகமிக எளிமையான ஜனாதிபதி என்ற பெருமைக்கு உரியவர் அப்துல் கலாம் மட்டுமே. மிக எளிமையானவராகவே தனது வாழ்க்கையை நடத்தினார். எந்தவித ஆடம்பரமும் இன்றி மிக எளிமையானவராகவும் வாழ்ந்து காட்டினார்.

அப்துல் கலாம் பல நூல்களை எழுதியுள்ளார். அது தவிர அவர் ஒரு கவிஞர். இசை ஞானம் கொண்டவர். பாடல்களையும் பாடுவார். அவரின் கவிதைகள் என்பது சிறியதுமுதல் மிகப்பெரியதுவரை உள்ளன. அதாவது சில கவிதைகள் இரண்டு பக்கத்திற்கு மேல் கூட இருக்கின்றன. அவரின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழி காட்டுபவையாகவே உள்ளன. இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அவரது கவிதையின் கரு இருக்கும்.

அப்துல் கலாம் மாணவர்களையும் இளைஞர்களையும் அதிகம் நேசித்தார். மாணவர்களை சந்திப்பதற்காக நாடு முழுவதும் பயணம் செய்தார். சுமார் 1.5 கோடி மாணவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றும்போதெல்லாம் கவிதைகள் இல்லாமல் பேசியது கிடையாது. அதுமட்டுமல்லாமல் உலகின் எங்காவது ஒரு கூட்டத்தில் பேசும்போதுகூட கவிதை வரிகள் இடம்பெறும். தன்னம்பிக்கை, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழியிலேயே இவருடைய கவிதைகள் இருந்தன என்பதே சிறப்பு.

ஒவ்வொரு மனிதனும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பது இவரின் லட்சியமாக இருந்தது. ஒற்றுமையுடன் வாழ்ந்தால் வளமையான, அமைதியான தேசத்தை உருவாக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். இந்தியாவை 2020 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பாடுபட்டார்.

அப்துல் கலாம் எனது பயணம் என்கின்ற நூலையும் எழுதியுள்ளார். அந்த நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. கலாம் மீது அதிக பற்றுகொண்டவர்கள் அவருடைய கவிதைகளையும், மேற்கோள்களையும் தமிழாக்கம் செய்து இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

அப்துல் கலாம் எழுதிய கவிதைகளில் ஆறு மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு இசை ஆல்பம் தயாரித்துள்ளனர். பட்டுப் பாதை (Silk Root) என்ற தலைப்பில் இந்த ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தில் உள்ள பாடல்களைப் பிரபல கிதார் இசைக் கலைஞர் மோகித் சவுகான் என்பவர் இசை அமைத்து பாடியுள்ளார்.

அப்துல் கலாம் ஆசிரியர் பணியை மிகவும் நேசித்தார். மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று மாணவர்களிடையே அப்துல் கலாம் உரையாற்றும்போது மயங்கி விழுந்தார். அதன்பின்னர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அவருடைய உடல் ஜூலை 30 அன்று ராமேஸ்வரத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

1. இலட்சிய சிகரம்

நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்.

எங்கு இருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா?

நான் தேடிக்கொண்டே இருக்கிறேன்.

எங்கு இருக்கிறது அறிவுப்புதையல், என் இறைவா?

நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன்,

எங்கு இருக்கிறது அமைதித்தீவு, என் இறைவா?

இறைவா, நூறு கோடி மக்கள்

இலட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும்,

இன்ப அமைதியையும், உழைத்தடைய அருள்வாயாக.

இந்திய பாராளுமன்றத்தில் பேசும்போது இயற்றிய கவிதை இது. இக்கவிதையை அவர் மாணவர்களிடம் வாசித்துக்காட்டி விளக்குவார். நாம் வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டிருக்கிறோம் பணி செய்து கொண்டிருக்கிறோம். இவைகளைச் செய்யும்போது நமக்கு வாழ்வில் ஒரு இலட்சியம் வேண்டும்.

•••••

2. நான் பறந்துக்கொண்டேயிருப்பேன்

பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழி வகுக்கும். இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்களை பார்க்கிறேன். நீங்கள் எல்லோரும் வெற்றியடைய, வளமான வாழ்வு பெற ஓர் சிறு கவிதை மூலம் என் கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்த கவிதையின் தலைப்பு “வாழ்வில் நான் பறந்துக்கொண்டிருப்பேன்” என்பதாகும். இதை என்னோடு சேர்ந்து பாடுங்கள் என அப்துல் கலாம் முதுகுளத்தூர் பள்ளி மாணவர்களிடம் பாடினார். மாணவர்களும் அப்துல் கலாமுடன் இணைந்து இப்பாடலை பாடினார்கள்.

நான் பறந்துகொண்டேயிருப்பேன்

நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்,

நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்,

நான் பிறந்தேன் கனவுடன்,

வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்,

நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த,

நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்,

நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க,

நான் பூமியில் ஒருபோதும் தவழமாட்டேன்

தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்.

பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்துகொண்டே இருப்பேன்.

3. அறிவின் இலக்கணம்

முதுகுளத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் அப்துல் கலாம் மாணவர்களிடையே நீ நீயாக இரு என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அறிவின் இலக்கணத்தைப்பற்றி விளக்கியதோடு ஒரு கவிதையையும் வாசித்தார்.

அறிவைப்பெற்று அறிவார்ந்த சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்றால்

அதற்கான அறிவின் இலக்கணம் என்ன என்று பார்ப்போம்.

அறிவின் இலக்கணம் என்ன தெரியுமா அதற்கு மூன்று தன்மைகள் அவசியம். அது என்னவென்றால் அதற்கு ஒரு

சமன்பாட்டை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அறிவு = கற்பனை சக்தி + மனத்தூய்மை + உள்ள உறுதி

கற்பனை சக்தி

கற்றல் கற்பனைச் சக்தியை வளர்க்கிறது

கற்பனைச்சக்தி சிந்திக்கும் திறனை தூண்டுகிறது

சிந்தனை அறிவை வளர்க்கிறது

அறிவு உன்னை என்ன ஆக்குகிறது தெரியுமா?. . .

மகானாக்குகிறது.

4. எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அஞ்சலி

தமிழ்நாட்டில் 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று மதுரை மாநகரில் மதுரை சண்முக வடிவு சுப்புலட்சுமி பிறந்தார். இவரை எம்.எஸ். சுப்புலட்சுமி என்றே அழைத்தனர். இவர் புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி ஆவார். பல மொழிகளில் பாடும் திறமை கொண்டவர். இவரின் இசைக்கு மயங்காதவர்களே கிடையாது. இவர் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று இயற்கை எய்தினார். திருமதி.எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களுக்கு காணிக்கையாக அப்துல் கலாம் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று விமானத்தில் பயணம் செய்யும்போது எழுதிய கவிதை.

யாழிசையில் பிறந்த இறையிசை

வானுலகிலும் இசையாய் இருப்பாய்

யாழிசையில் பிறந்த ஏழிசைக் கீதம் நீ

உன்னிசைக் கொடுத்ததோ அமைதியும் இனிமையும்

இசைச்செல்வத்தோடு பொருட்செல்வத்தையும்

எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்தாய்

மானிடக்குரலின் மகத்துவத்தை இறைவனும் வியந்திட வாய்ப்புமளித்தாய்

ஆயிரமாயிரம் மானிடரெல்லாம் உன் காவியக் கருணையில் நனைந்து மகிழ்ந்தோம்

செவியில் செல்வம் மனதில் மகிழ்ச்சி நெஞ்சில் நெகிழ்ச்சி அள்ளிவழங்கிய

உன் சங்கீதக்குரலின் இனியநாதத்தில் கொழித்துமகிழ்ந்தது எங்கள் உள்ளம்

வசந்தபருவமாய் யாழிசைகீதமாய் எண்பது ஆண்டாய் இதயங்கவர்ந்த

ஏழிசைநாதம் நீ நிறைவற்றாலும் எம் நெஞ்சமெல்லாமும் நிறைந்தாய்

மத்தியமாவதியில் மாலைகள் சூடிய மங்கையர் திலகம்

ஸ்ரீராகத்தில் சிறப்புகள் செய்து பக்திகீதத்தில் சாதனைபடைத்த பாரதரத்னம்

தான்சேன் கானத்தை நாங்கள் உணர்ந்திட காலந்தந்திட்ட மாபெரும்கொடை நீ

அன்னமாச்சாரியார் புரந்தரதாசர் அற்புதம் படைத்திட்ட ஏழிசைமூவர்

உள்ளங்கவர்ந்த தமிழிசையெல்லாம் உன்குரலாலே உயிர்பெற்று மலர

வாரி வழங்கிய வள்ளலாறு போல காலக்கடலில் நீ கலந்துவிட்டாலும்

நீ போற்றிவளர்த்த இசைப்பயிர் எம் உள்ளம்,உடல், உதிரத்தில் கலந்து

காலங்காலமாய் உயிர்பெற்று வளம்பெற்று உலகத்தில் வாழும்

இசைக்கு இசைகொடுத்த நீ இவ்வுலகைநீங்கி இறையுலகு ஏகினாலும்

கோடிகோடி உள்ளத்தில் உணர்வாய் வாழ்ந்த நீ வானுலகிலும் இசையாய் இருப்பாய்.

5. மனத்தூய்மை

மாணவர்களிடம் உரையாற்றும்போது எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது மனத்தூய்மையே என்றார். மனத்தூய்மையைப் பற்றி விளக்கியதோடு சம்பந்தமாக எழுதிய ஒரு கவிதையையும் வாசித்தார்.

கற்பனைச் சக்தி உருவாவதற்கு குடும்பசூழ்நிலையும், பள்ளி சூழ்நிலையும் தான் மிக முக்கிய காரணங்களாக அமையும். அந்த சூழ்நிலை உருவாவதற்கு என்ன வேண்டும். ஒவ்வொருவரது உள்ளத்திலும் மனத்தூய்மை வேண்டும். மனத்தூய்மை எங்கிருந்து வரும். மூன்றே மூன்று பேர்களிடம் இருந்து தான் இதை கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் யார்? அவர்கள் தான் தாய், தந்தை மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்.

எண்ணத்திலே மனத்தூய்மை இருந்தால்

நடத்தையில் அழகு மிளிரும்

நடத்தையில் அழகு மிளிர்ந்தால்

குடும்பத்தில் சாந்தி நிலவும்.

குடும்பத்தில் சாந்தி இருந்தால்

நாட்டில் சீர்முறை உயரும்.

நாட்டில் சீர்முறை இருந்தால்

உலகத்தில் அமைதி நிலவும்.

•••••

6. உறுதி

முதுகுளத்தூரில் உள்ள பள்ளி மாணவர்களிடம் உரையாற்றும்போது உள்ளத்தின் உறுதியைப்பற்றியும் பேசினார். உள்ளத்தில் உறுதியானது நல்ல ஆசிரியர்கள், நல்ல புத்தகங்கள், நல்ல மனிதர்கள் மூலமே கிடைக்கின்றன. நாம் எக்காரியத்தையும் செய்யலாம் , செய்ய முடியும், செய்து வெற்றி பெற முடியும் என்ற உறுதியும், நம்பிக்கையும் அளிக்கிறது. மனதில் உறுதி இருந்தால் நீங்கள் வெற்றி அடைவீர்கள், நீங்கள் வெற்றி அடைவீர்கள் எனப்பேசும்போது இக்கவிதையை அவர் பாடினார்.

புதிய எண்ணங்கள் உருவாக்கும் உள்ள உறுதி இன்று

என்னிடம் மலர்ந்துள்ளன.

எனக்கென்று ஒரு புதிய பாதையை உருவாக்கி அதில் பயணம்

செய்வேன்.

முடியாது என்று எல்லோரும் சொல்வதை என்னால் முடியும்

என்ற மன உறுதி

என்னிடம் உருவாகி விட்டது.

புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை செய்ய முடியும் என்ற உள்ள உறுதி

என்னிடம் என்றென்றைக்கும் கொந்தளிக்கிறது.

இந்த உள்ள உறுதிகள் எல்லாம் இளைய சமுதாயத்தின்

சிறப்புகளாகும், அஸ்திவாரம் ஆகும்.

இந்த நாட்டின் இளைய சமுதாயத்தின் உறுப்பினரான நான் என்

கடின

உழைப்பாலும், உள்ள உறுதியினாலும், தோல்வியை

தோல்வியடையச் செய்து, வெற்றி

பெற்று என் நாட்டை வளமான நாடக்குவேன்.

•••••

7. நாம் எங்கே?

எங்கிருக்கிறோம் நாம், என்னருமை நண்பர்களே,

இந்திய மக்களின் இதய வொலி அழைப்பிற்கு,

வரலாற்று வடிவம்தரும் மகாசபையில் இருக்கின்றோம்.

மக்கள்நமை கேட்கிறார்கள், மக்கள்நமை கேட்கிறார்கள்;

“பாராளு மன்றத்து பாரதத்தாய் சிற்பிகளே,

எங்களது வாழ்விற்கு வளங்கொடுங்கள், ஒளிகொடுங்கள்,

உங்களது நல்லுழைப்பே, எங்களுக்கு ஒளிவிளக்கு

உயர்ந்திடலாம் நாமெல்லாம், உண்மையிலே நீவிர் உழைத்தால்”

அரசன் எவ்வழியோ, குடிகள் அவ்வழியே.

வளருங்கள் எண்ணத்தில், உயருங்கள் செயலில் நீர்.

வாய்மைமுறை உங்களுக்கு, வழித்துணையாய் ஆகட்டும்.

நீவிர் எல்லோரும் வாழ்க! இறைகருணையால் என்றென்றும்.

•••••

8. இளைஞர்கள்

அப்துல் கலாம் இளைஞர்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டவராக இருந்தார். இந்தியாவை சக்தி வாய்ந்த நாடாக மாற்ற முடியும் என்றால் அது இளைஞர்களாலேயே முடியும். துடிப்பான இளைஞர்களால் மட்டுமே இந்தியாவை மறுமலர்ச்சி கொண்ட நாடாக மாற்றமுடியும் என அப்துல் கலாம் கூறிவந்தார். அப்துல் கலாம் இளைஞர்களுக்காக இப்பாடலையும் எழுதியுள்ளார்.

இளைஞர் பாடல்

இளைய உள்ளங்களின் எழுச்சி கீதம்

வளமான நாடாக்குவோம்

இள உள்ளங்கள் பொறி ஏற்றியே!

வளமான நாடாக்குவோம்

இள உள்ளங்கள் பொறி ஏற்றியே!

அறிவாற்றலும் தொழில் மாட்சியும்

எங்கள் லட்சியம் ஈட்டிடும் ஆயுதமே

சிறு லட்சியந்தனில் சிந்தனைகள்

வீணாவதை மாபெரும் குற்ற மென்போம்

வளமான நாடாக்குவோம்

இள உள்ளங்கள் பொறி ஏற்றியே!

பொருள் வளமொடு நன்னெறியோடு

நம் பாரதம் உயர்ந்திட உழைத்திடுவோம்

கோடிகள் பல நூறாகிலும் இந்த

லட்சியச் சுடரினை பரப்பிடுவோம்

வளமான நாடாக்குவோம்

இள உள்ளங்கள் பொறி ஏற்றியே!

வளமான நாடாக்குவோம்

இள உள்ளங்கள் பொறி ஏற்றியே!

•••••

9. கிராமத்தின் உயர்வு நாட்டின் உயர்வு

என்னுடைய உண்மையான உழைப்பு

என் கிராமத்திற்கு உயிர் கொடுக்கும்.

எங்கள் கிராமங்கள் உயர்ந்தால்

எங்கள் குடும்பங்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும்.

எங்கள் குடும்பங்கள் சிறப்பாக வாழ்ந்தால்

எங்கள் மாநிலம் உயரும்.

எங்கள் மாநிலம் உயர்ந்தால்

எங்கள் நாடு வளமான நாடாகப் பரிணமிக்கும்.

நாம் உழைத்து

கிராமத்தை, மாநிலத்தை, இந்திய நாட்டை உயர்த்துவோம்.

•••••

10 கனவு

என்றன்று நாம் கணித்த

விமானங்கள், பூமியதிர யதிர

பாரிமா நகர் விண்ணில் இடியிடிந்த

மின்னலென ஏவுவோம்;

கனவுகள் நனவாகும், நம்முள்ளங்கள்

ஒன்றுபட்டு உழைத்து உயர்வு காணில்.

•••••

11. இனிய மரம்

அப்துல் கலாம் வெளிநாடுகள் சென்று உரையாற்றும் போது கவிதைகள் மற்றும் மேற்கோள்கள் இல்லாமல் மாணவர்களிடம் பேசுவது கிடையாது. அவர் அயர்லாந்து பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவியர்களிடம் உரையாற்றும் போது வாசித்த கவிதை இது.

ஓ! என் இல்லத்தின் இனிய மரமே!

எல்லா மரங்களிலும் நீ தான் பெருமைக்குரியவன்!

எத்தனை தலைமுறைகளை நீ வளப்படுத்தி இருக்கின்றாய்!

வருடங்கள் பலப்பலவாய் பாசமுடன் பயன் தருகின்றாய்

உன் அக்கறை கவனிப்பில் இன்றும் வாழ்பவை எத்தனையோ?!

உன் வாழ்வின் கீதத்தை நானும் பாசத்துடன் கேட்கின்றேன்!

ஓ. . . என் நண்பனே! கலாம்!

உன் தாய் தந்தையைப் போல நான் வயது நூறைக் கடந்துவிட்டேன்.

ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு மணி நேரம் நீ நடை பயில்கின்றாய்!

முழு நிலாப் பொழுதுகளிலும் நான் உன்னைக் காண்கிறேன்

சிந்தனையில் ஆழ்ந்தபடி நடக்கின்றாய்

என் நண்பனே.. உன் மன ஓட்டத்தை நான் உணர்வேன்..

“நான் என்ன கொடுக்க இயலும்”

ஏப்ரல் மாதப்பொழுதில், என்னை நீ ஏறிட்டுப் பார்த்தாய்!

மீண்டும் மீண்டும் நீ, மீளாப் பார்வை பார்த்தாய்!

ஆயிரம் ஆயிரமாய் இலைகள் உதிர்ந்திருக்க, நீ என்னைக் கண்டாய்!

என் நண்பனே, என்னிடம் கேட்டாய் நீ…

என் பாரம் எதுவோ?

இலைகளை நான் கழித்தது, புத்திலைகள் பிறப்பெடுக்கின்றன!

மலர்களின் மலர்ச்சி, வண்ணத்துப்பூச்சிகளையும் வண்டுகளையும் கவர்கின்றது.

எனவே, கலாம், இது எனக்குப் பாரம் அன்று!

இது என் வாழ்வின் அழகான ஒரு கட்டம்!

கலாம் ... இப்போது நீ என்னைச் சுற்றி வா!

அடர்ந்து செழித்த என் கிளைகளின் வழியே புகுந்து, அகத்தில் ஆழ்ந்து பார்.

தேன் நிரம்பித் ததும்பும் ஒரு தேனடையைக் காண்பாய்.

ஆயிரமாயிரம் வேலைக்காரத் தேனீக்களின் அயராத உழைப்பால் விளைந்தது

அந்தத் தேனடை!

அவற்றின் ஓயாத உழைப்பால் சொட்டுச்சொட்டாகச் சேர்ந்தது.. அங்கே தேன்!

தித்திக்கும் தேன் துளிகள் நிரம்பிய தேனடையின் பாரம் அபாரமானதுதான்!

ஆயிரமாயிரம் தேனீக்களின் காவலால் காக்கப்படுகிறது.

யாருக்காக இந்தத் தேன் சேகரிக்கப்பட்டது? பாதுகாக்கப்பட்டது?

அது உமக்காக, எத்தனையோ ஏழையருக்கு.. சீமான்களுக்கு!

எல்லா உயிர்க்கும் பகிரப்பட வேண்டும் என்பதுதானே நம் நோக்கம்!

கலாம்! நீ பார்த்திருக்கிறாயா?

என் கிளைகளின் பல பாகங்களில் பல பறவைகள்

எத்தனை எத்தனை கூடுகளைக் கட்டியிருக்கின்றன..?

என் பெரும்பாலான நுனிக் கிளைகள் எத்தனை வசீகரமாயிருக்கும்?

நூற்றுக்கணக்கான கிளிகள் அதனைத் தம் வீடுகளாக்கியிருக்கின்றனவே!

எனவே, என்னை நீ கிளிமரம் என்று அழைப்பாய்.

இப்போதும் என்னை நீ தேன் மரம் என்பாய்

என்னைப் பற்றி உன் பேரனிடம் நீ பேசியதைக் கேட்கும்போது

நான் முறுவலிப்பேன்.. புன்னகைப்பேன்.

என் மர பொந்துகளிலும் கிளைகளிலும் பறவைகளின் வீடுகளுக்கு இடமளித்தேன்

நான் பறவைகளின் கீதத்தை செவிமடுத்திருக்கிறேன்....

அவற்றின் பிறப்பிலும் வளர்ச்சியிலும் காதலாகிக் கண்டிருக்கிறேன்.....

அவை என்னைச் சுற்றிச் சுற்றிச் சிறகடித்துப் பறந்து

மகிழ்ச்சிப் பெருக்கை பரிமாறியிருக்கின்றன.

இப்போதெல்லாம் கலாம்… உன் நித்திய நடைப்போதுகளில்

என் அருகே வருவாய் இன்னும் அருகே வந்து என் வேர்ப் பற்றை பரிவோடு பார்ப்பாய்.

வெல்வெட் மெத்தையாய் புல்படுக்கை … சுற்றிலும் அடர்ந்த பூக்காடு!

அங்கே ஓர் அழகுப் பெண்மயில்

அது உள்ளக் களிப்பால் ஈந்த முட்டைக்கு க்தகதப்பைத் தந்தது.

எல்லாப்போதுகளும் … அங்கே தாய்ப்பாசம் மீதுற அரவணைக்கும் அழகுக் காட்சி!

உன் வீட்டின் உள்ளிருந்து நோக்கும் அருமைக்காட்சி!

அந்தப் பெண்மயில் ஏழு குஞ்சுகளுடன் உலவியது

என்னைச் சுற்றிச்சுற்றி கம்பீரமாய் உலா வந்தது…

பகலும் இரவும் தன் குஞ்சுகளைப் பாதுகாத்தபடி!

இப்போது, ஒரு கேள்வி கலாம்…

என் குறிக்கோள்… எனக்கான கட்டளை என் பிறவியின் நோக்கம்.. எது?

நூறு வருடங்கள் உயிர்ப்போடு திகழ்வதா?

நான் பெற்றதை வைத்து ஆனந்தமாகக் கழிக்கிறேன் என் பிறவிப் பயனை!

நான் பரிமாறினேன்.... பூக்கள் மற்றும் தேனை!

இருப்பிடம் தந்தேன், நூற்றுக்கணக்கான பறவைகளுக்கு!

நான் கொடுப்பேன் கொடுப்பேன் இன்னும் கொடுப்பேன்....

எனவே, நான் இருப்பேன்...

இன்றும் இளமையாக!

என்றும் இன்பமாக!

(அர்ஜுனா என்ற இந்த மரத்தின் அறிவியல் பெயர் Terminalia arjuna - தமிழில் இதன் பெயர் மருத மரம்)

தமிழில்: செங்கோட்டை ஸ்ரீராம், நன்றி: தினமணி வலைப்பூ

•••••

12. நினைவுகள்

அப்துல் கலாம் எந்த ஊரில் இருந்தாலும், நாட்டில் இருந்தாலும் அவருடைய நினைவுகள் எப்போதும் மாணவர்கள் மீதும், இளைஞர்கள் மீதும், இந்திய நாட்டின் மீதும், தனது குடும்பத்தினர் வாழும் தனது சொந்த ஊரான ராமேஸ்வரத்தின் மீதே இருந்தது. அவர் தான் பிறந்த ராமேஸ்வரத்தை மிகவும் நேசித்தார். தன்னுடைய இளம் பருவத்தில் ராமேஸ்வரத்தில் நண்பர்களோடு பழகியது, விளையாடியது, கடற்கரை ஆகியவற்றை அடிக்கடி நினைவு கூர்வது அவரது வழக்கமாக இருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டே இக்கவிதையை அவர் எழுதியுள்ளார்.

1. இந்த மாபெரும் நாட்டில்

நான் நன்றாகவே இருக்கிறேன்

இதன் கோடிக்கணக்கான

சிறுவர் சிறுமிகளைப்

பார்க்கிறேன்.

எனக்குள்ளிருந்த அவர்கள்

வற்றாத புனிதத்தை முகந்து

இறைவனின் அருளை

எங்கும் பரப்ப வேண்டும்.

ஒரு கிணற்றிலிருந்து

நீர் இறைக்கிற மாதிரி.

2. இனிய எண்ணங்களே, போய்விடுங்கள் !

கவலை கொண்ட நெஞ்சமும்

இனி வேண்டாம் !

விழித்திருக்கும் இரவுகளுக்கு

வேலை காத்திருக்கிறது.

பகற் பொழுதுகள்

பரபரப்பாக இருப்பினும்

எனது நினைவகள் எல்லாம்

ராமேசுவரம் கடற்கரையில்

நிலைகுத்தி நிற்கின்றன !

3. களைப்படையச் செய்யும்

என்றும் ஏறி அறியாத

நெடுந் தொலைவில் –

ராமேசுவரத்தின்

சிவந்த மணல் வெளிகளில்

அலைந்த கால்களால்

கடக்க முடியுமோ ?

( தி இந்து நாளிதழில் ஜூலை 28-2015)

•••••

13. என் அன்னை

அப்துல் கலாம் தனது அன்னையர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார். அவரின் தாயார் இறந்ததால் மிகவும் மனமுடைந்தார். இருப்பினும் தனக்கு இருக்கும் பணிகளைக் கருத்தில் கொண்டு மனதைத்தேற்றிக்கொண்டார்.தனது தாயார் மறைந்ததை ஒட்டி ஒரு கவிதையையும் எழுதினார். அது மிக நீண்ட கவிதை. 54 வரிகளைக் கொண்டது. அக்கவிதையை தனது புத்தகமான அக்னிச் சிறகுகள் என்ற புத்தகத்தில் என் அன்னை என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். அப்புத்தகம் காப்புரிமைக்கு உட்பட்டதால் அக்கவிதையை இங்கு கொடுக்க முடியவில்லை. இருப்பினும் அக்கவிதை இணைய தளத்தில் உள்ளது. அக்கவிதையை இணையதளத்திலும் மற்றும் அக்னிச் சிறகுகள் புத்தகத்திலும் நீங்கள் படிக்கலாம்.

கடல் அலைகள், பொன் மணல்

எனக் கவிதை தொடங்கி

என் அன்னையே,

நாம் மீண்டும் சந்திப்போம்

அந்த மாபெரும் நியாயத் தீர்ப்பு நாளில்!

என கவிதை முடிக்கிறது.

நன்றி ; டாக்டர். அப்துல் கலாம்

(அக்னிச் சிறகுகள்)

•••••

14. அறிவு

கற்றல்

பயன் தரும்போது

கற்பனை வளம்

மலர்கிறது.

கற்பனை வளம்

மலர்கிறபோது

சிந்தனை

மேம்படுகிறது.

சிந்தனை

மேம்படும்போது

அறிவு

ஒளி வீசுகிறது.

அறிவு

ஒளி வீசும்போது

பொருளாதாரம்

வளம் பெறுகிறது.

15. வாழ்க்கையில் வெற்றி பெற . . .

வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும்

சிறு லட்சியம் குற்றமாகும்

லட்சியத்தை அடைய கடுமையாக

உழைக்க வேண்டும்.

விடாமுயற்சி வேண்டும் . . .

தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து,

வெற்றி பெற வேண்டும்.

16. என்னால் முடியும் . . .

நம்மால் முடியும் . . .

நம்மால் முடிந்தால்

நாட்டால் முடியும் .!

•••••

17.ஆங்கில கவிதைகள்

அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது அவருடைய ஆங்கிலக் கவிதைகள் அனைத்தும் தேசிய தகவல் மையம் மற்றும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இக்கவிதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. ஆகவே ஆங்கிலத்திலேயே இக்கவிதைகள் உள்ளன.

Our mission is water

My mother called me Blue Nile

I am also named by mother White Nile

When we grew and we asked

Oh mother, Oh mother

Tell us, why did you name us Nile

Our mothers said lovingly

Oh our children

You travel and travel

Cross mountains, forests and valleys

Thousands of miles, enriching nine countries

You reach Khartoum

You Blue and white Niles confluence with a mission

God has commanded you to give a message

You give a beautiful message

When we rivers confluence

Oh humanity why not your hearts confluence

And you blossom with happiness.

•••••

18. Indomitable sprit

I was swimming in the sea,

Waves came one after the other

I was swimming and swimming to reach my destination.

But one wave, a powerful wave, overpowered me;

It took me along in its own direction,

I was pulled long and along.

When I was about to lose amidst the sea wave power,

One thought flashed to me, yes, that is courage

Courage to reach my goal, courage to defeat the powerful

Force and succeed;

•••••

19. Song of youth

As a young citizen of India

Armed with technology, knowledge and love for my nation,

I realize, small aim is a crime.

I well work and sweat for a great vision,

The vision of transforming India into a developed nation,

Powered by economic strength with value system

I am one of the citizens of the billion;

Only the vision will ignite the billion souls.

It has entered into me;

The ignited soul comapared to any resource

Is the most powerful resource on the earth,

Above the earth and under the earth.

I will keep the lamp of knowledge burning

To achieve the vision- Developed India

If we work and sweat for the great vision with ignited minds,

The transformation leading to the birth of vibrant developed

India will happen.

I pray the Almighty:

“May the divine peace with beauty enter into our people;

Happiness and good health blossom in our bodies, minds and souls”.


 


20 views0 comments

Comments


bottom of page