இந்தியக் கலைச்செல்வம் - 16
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
கோயில் வளர்த்த கலைகள் - ஓவியம்
குழலும், தும்புரு நாரதர் பாடலும் குனித்துச் சுழலும் கொம்பனார் ஆடலும் மூவர் வாய்த்துதியும் விழவில் செல்வமும் சுருதியும் திசையெலாம் விழுங்கும் முழவம் கண் துயிலாதது முன்னவன் கோயில்
என்று மதுரை நகரத்துக் கோயில் சிறப்பை பரஞ்சோதி முனிவர் பாடுகிறார். ஆடலும், பாடலும் சித்திரமும், கவிதையும், இசையும் கலந்திருக்கும் நிலைக்களமாக மதுரை மாநகர் பெருந்திருக்கோயில், இலங்கிற்று என்பதே திருவிளையாடற் புராணம் எழுதியவர் கண்டது. இதேநிலைதான் தமிழ்நாட்டின் எல்லாக் கோயில்களிலும். கோயிலை மய்யமாக வைத்தே நம் நாட்டு அழகுக் கலைகள் எல்லாம் உருவாகியிருக்கின்றன். கோயில்கள் இல்லாவிட்டால் தேவாரம், திருவாசகம் ஏது? திவ்யப் பிரபந்தப் பாடல்கள் ஏது? கோயில் என்று ஒன்று இல்லாவிட்டால் இன்னிசை எழுவது ஏது, சித்திரமும் சிற்பமும், நடனமும், நாட்டியமும் உருவாவதுதான் ஏது? நம் நாட்டு கவின் கலைகள் எல்லாமே சமயச் சார்புடையவையாகத்தான் இருந்திருக்கின்றன. அதனால்தான் அருங்கலைகளைப் பற்றி ஆராய்பவர்க்கு எல்லாம் கோயிலே நிலைக்களமாக அமைகின்றன. கோயிலைச் சுற்றி எல்லாக் கலைகளும் எப்படி வளர்ந்தன என்று நான் சொல்லப் போவதில்லை. கோயில் வளர்த்த ஓவியக் கலையைப் பற்றியே ஒரு சில வார்த்தைகள். தமிழ்நாட்டுக் கலைகளில் மிகவும் சிறந்திருப்பது சிற்பக் கலைதான். உலகில் உள்ள எல்லா சிற்ப வடிவங்களுக்கும் முதுகுக்கு மண் காட்டும் வகையில் சிற்பக்கலை இங்கு உருவாகியிருக்கிறது. இது சிற்பக் கலை நிபுணர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்ட உண்மை. இந்த அளவிற்கு ஓவியக்கலை உச்சநிலையை எய்தவில்லை என்பதும் வெள்ளிடைமலை. என்றாலும், பலரும் போற்றும் வகையில் அக்கலை உருவாகியிருக்கிறது என்பதும் மறுக்க முடியாதது. ஓவியம் என்றால் சுவர்களிலும், திரைச்சீலைகளிலும் வண்ணத்தைத் தீட்டி, வடிவங்களையும் காட்சிகளையும் வரைவதாகும். இக்கலையை மேலை நாட்டினர் மிகவும் திறமையுடன் வளர்த்திருக்கிறார்கள்.
பழைய இத்தாலி நாட்டிலே மைக்கேல், ஆஞ்சலோ ரப்பேல் போன்ற அரிய சித்திரக் கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள், பின்னரும் சர்ஜோஷுவா, ரெய்னால்ட்ஸ் போன்ற சித்ரீகரது சித்திரங்கள் எல்லாம் மேலை நாட்டு ஓவியக் கலைக்கு வளம் தருவதாகும். இந்த நிலைக்கு தமிழனோ இல்லை வேறு இந்தியனோ உயரவில்லை. அஜந்தா ஓவியங்கள் அருமையானதுதான் என்றாலும் வாடிகான் (Vatican) மண்டபத்தை இன்று அலங்கரித்து நிற்கும் சித்திரங்களுக்கு இணையாகாதுதான். ஆயிரம் வருஷங்களுக்கு மேலாகியும் அழியாது நிற்கும் பெருமையுடையது என்பதே அஜந்தாவின் பெருமை. தமிழ்நாட்டிலோ அஜந்தா அளவிற்குக்கூட ஓவியக் கலை உருவாகவில்லை. தமிழ்நாட்டின் அஜந்தா என்று புகழ் பெற்றது சித்தன்னவாசல் ஓவியங்கள், இவைதான் தமிழ்நாட்டில் காலத்தால் முந்தியவை. தொண்டைமான் புதுக்கோட்டைப் பகுதியில் உள்ள குடைவரைக் கோயில் ஒன்றில் இச்சித்திரங்கள் எழுதப் பெற்றிருக்கின்றன. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் ஆதியில் சமணனாக இருந்து பின்னர் நாவுக்கரசரால் சைவனாக்கப்பட்டவன். அவன் சமணனாக இருந்த காலத்திலே அமைந்த இந்த சித்தன்னவாசல் குடைவரையிலே தான் பல சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. குடைவரையில் உட்புறத்திலேயுள்ள விதானத்தில் சமணர்களது மோட்ச சாம்ராஜ்யம் என்னும் சாமவ சரவணப் பொய்கை தீட்டப்பட்டிருக்கிறது. அள்ளற் பழனத்து அரக் காம்பல் வாயவிழ வெள்ளம் தீப்பட்டது என வெறீ இ
என்று அன்று முத்தொள்ளாயிரக் கவிஞன் பாடினானே, அதுபோல தாமரை மலர்கள் நிறைந்த தடாகம் அங்கு புதுப்புனல் குடையும் ஆடவர் பெண்டிர் எல்லோரையும் அழியாவர்ணத்தில் எழுதி வைத்திருக்கிறான் ஓவியன். இந்த சாமவ சரவணப் பொய்கைச் சித்திரம் இன்று மங்கி வருகிறது. இங்குள்ள ஓவியங்களில் சிறப்பானவை என்று கருதப்படுபவை அங்குள்ள தூண்களிலே தீட்டப்பெற்றவைதாம். ஒரு தூணை மகேந்திரவர்மனும் அவனது துணவியரும் அலங்கரித்தால், இன்னும் இரண்டு தூண்களை நடன மாதர் இருவர் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். நடனப் பெண்களில் ஒருத்தி இடக்கையை அபய முத்திரையிலும் வைத்துக் கொண்டிருக்கிறாள். அவள் காதுகளிலே இலைக் குண்டலங்கள் தொங்குகின்றன. தலையை மலர்கள் அலங்கரிக்கின்றன. அவள் ஆடும் நிலை அந்த ஆடும் பெருமானையே நினைவூட்டுவதாக இருக்கிறது. இன்னொரு நடனக்காரி அர்த்தமத்தளி என்ற முத்திரையைக் காட்டும் கைகளோடு, ஒரே ஆனந்தக் களிப்பில் ஆடிக் கொண்டிருக்கிறாள். இச்சித்திரங்கள் தாம் தமிழ்நாட்டில் காலத்தால் முந்திய சித்திரங்கள், அஜந்தா சித்திரப் பாணியில் அமைந்திருப்பவை என்று பெருமையோடு பேசுவதற்கு உரியன. இதனை அடுத்து, பல்லவர் காலத்திலேயே உருவானதுதான் காஞ்சி கைலாசநாதர் கோயில் ஓவியங்கள். மகேந்திர வர்மனது சித்தன்னவாசல் ஓவியங்கள் ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்றால், கைலாச நாதர் கோயில் ஓவியங்கள் ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவை, ராஜசிம்ம பல்லவன் கட்டிய கோயிலின் கருவறையைச் சுற்றிய சுவர்களிலே சில சித்திரங்கள் தீட்டப் பெற்றிருக்கின்றன. அவைகள் எல்லாம் மங்கி மறைந்துவிட்டன.
இரண்டே இரண்டு வடிவங்கள்தான், இப்போது. அரைகுறையாய்க் காணக் கிடைக்கின்றன. அதில் ஒன்று மலர் எந்திய கையனாய் கம்பீரமாக நிற்கும் மகாபுருஷன் ஒருவன். மற்றொன்று சோமாஸ் கந்தவடிவம். இவ்வடிவங்களில் பல பகுதிகள் சிதைந்து போயிருக்கின்றன. இந்தக் கைலாச நாதர் கோயில் சித்திரங்களுக்குப் பிந்தியவையே தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள பனைமலைக் கோயில் சித்திரங்கள். அங்கு தீட்டிய சித்திரங்களில் இன்று கொஞ்சம் உருப்படியாக இருப்பது குடை பிடித்த அரசியின் வடிவம் ஒன்றுதான். பல்லவர் காலத்துக்குப் பின்னாலே கலை வளர்த்த பெருமன்னர்கள் சோழர்களே. அவர்கள் கவனம் எல்லாம் அரிய சிற்ப வடிவங்களை செப்புப் படிவமாக வடிப்பதிலே சென்றிருந்தது. கல்லிலும் செம்பிலும் கண்ணுதலைக் காட்ட முனைந்து வெற்றி கண்டவர்கள் அவர்கள். சோழ மன்னர்களில் தலைசிறந்தவரான ராஜராஜன் கட்டிய பெரிய கோயிலில் பெருவுடையார் கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்திலே ராஜராஜன் காலத்திலேயே அழியா ஓவியங்கள் சில உருப்பெற்றிருக்கின்றன. இந்த ஓவியங்களின் அருமை அறியாத சிலர் இச்சித்திரங்களின் மீது சுதையைப் பூசி அதன் பேரில் தங்கள் கை வண்ணத்தைக் காட்டியிருக்கின்றனர். இந்தச் சுதைகளை அகற்றியே பழைய சித்திரங்களை வெளிக்கொணர்ந்திருக்கின்றனர். இன்றைய புதைபொருள் இலாகாவினர். இவர்களை இப்பணியில் ஊக்கியவர்தான் பிரபல சரித்திர ஆசிரியர் அமரர் எஸ்.எக்ஸ்.கோவிந்தசாமிப் பிள்ளையவர்கள் சோமாஸ் கந்தர் வரலாறு சித்திரமாக உருவாகியிருக்கிறது,
இன்னும் ராஜ ராஜன், கருவூர்த் தேவர், நடராஜரது வடிவம், யோக தக்ஷிணாமூர்த்தி, நடமாடும் அப்ஸ்ரசுகள், விண்ணில் இசை மிழற்றும் வித்யாதரர்கள் கின்னரர்கள் எல்லாம் உயிர் ஓவியங்களாகத் திகழ்கின்றன. இவற்றையெல்லாம் தூக்கியடிக்கும் வகையில் திரிபுராந்தகரது போர்க் கோலமும் உருவாகியிருக்கிறது அங்கே ன்பூமியையே தேராகக் கொண்டு, பிரமனையே சாரதியாக அமைத்து, கணேசனையும். கார்த்திகேயனையும் துர்க்கையையும் சேனைத் தலைவர்களாக முன் நடத்தி, கம்பீரமாக தேரில் ஆரோகணித்து வரும் திரிபுராந்தகரது வடிவம் கண்கொள்ளாக் காட்சி. இச்சித்திரம் ஒன்றுதான் மேல்நாட்டு ஓவிய விமர்சகர்களும் கண்டு அதிசயித்து நிற்கும் அழகோடு விளங்குகிறது. ஓவிய உலகில் ஒரு ஒப்பற்ற சாதனை இக்காட்சி. ராஜராஜனுக்கு முந்திய சோழ மன்னர்களும் பிந்திய சோழ மன்னர்களும் ஓவியக் கலையில் அக்கறை காட்டியவர்களாகக் காணோம். பல்லவர்களும் சோழர்களும் தானா ஓவியக் கலைக்கு உயிர் கொடுத்தார்கள், பாண்டியர்களுக்கு இக்கலை வளர்ச்சியில் பங்கே இல்லையா? என்று தானே கேட்கிறீர்கள். பாண்டியர்களது ஓவியங்கள் சில திருநெல்வேலி மாவட்டத்தில் திருமலைப்புரத்தில் உள்ள கோயிலில் இருக்கின்றன. அவை எல்லாம் வேடர்களின் வடிவங்களும் தாமரை மலர்களுமே. சிறப்பாகச் சொல்வதற்கு என்று ஒன்றும் இல்லைதான். பாண்டிய மன்னர்களுக்குப் பின்புதான் தமிழ் நாட்டின் பெரும் பகுதியை ஆண்ட நாயக்க மன்னர்கள் சிலரும் இக்கலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் பெரிய பெரிய கோபுரங்களை எழுப்புவதிலும், பெரிய பெரிய பிரகாரங்களை அமைப்பதிலும், நூற்றுக்கால் ஆயிரக்கால் மண்டபங்கள் அமைப்பதிலுமே அக்கறை காட்டியவர்கள். மதுரை மீனாட்சி கோயிலின் சுவர் ஓவியங்கள் எல்லாம் இவர்கள் காலத்தவையே. இன்று இந்த ஓவியக் கலை கோயில்களில் சிறப்பாக விளங்கக் காணோம். திருப்பணி நடக்கும்போது வண்ணங்களை வாரி இறைக்கக் கற்றிருக்கிறார்களே தவிர வேறு சிறப்பு மிக்க சித்திரங்கள் தீட்டக் கற்றுக் கொள்ளவில்லை. வண்ணத்தையும் சுண்ணத்தையம் கடந்து எண்ணத்தையும் புகுத்தி உருவாக்கிய சித்திரங்களே தமிழனது ஓவியக் கலையை உயர்த்துவதாகும். அந்த ஓவியங்களே நமது. கோயில்களில் உருவாகியிருக்கின்றன. கோயில் வளர்த்த கலைகளில் சிறப்பானதொரு பங்கு இந்த ஓவியக் கலைக்கும் உண்டு என்று தெரிந்து கொண்டோமானால் அது போதும் நமக்கு.
Comentários