top of page
library_1.jpg
Writer's pictureAngelica

தஞ்சைக் கோயில்கள்

இந்தியக் கலைச்செல்வம் - 17

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்


 

தஞ்சைக் கோயில்கள்

தஞ்சாவூர் என்றால் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று நாம் அறிவோம். ஆனால், அதே தஞ்சை வெறும் நெற்களஞ்சியம் மட்டுமன்று, கலைக் களஞ்சியமும் கூட என்றே சொல்ல வேண்டும். சிற்பம், சித்திரம், இசை, பரதம் போன்ற பல அரிய கலைகளை எல்லாம் வளர்க்கும் பண்ணையாகவே தஞ்சை விளங்கி வந்திருக்கிறது என்று வரலாறு கூறுகிறது. தஞ்சை மாவட்டத்திலே தடுக்கி விழுந்த இடமெல்லாம் கோயில்கள்தாம். எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல் விளங்குவது தஞ்சைப் பெரு உடையார் திருக்கோயில். அந்தக் கோயில் பிறந்த கதை சுவையானது. இன்றைக்கு ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு ஒரு நாள் மாலை சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்தியான இராஜராஜன் தன் தமக்கையார் குந்தவைப் பிராட்டியாருடன், நகர்ப்புறத்திலே உலாவி வரச் செல்கிறான். தான் பெற்ற வெற்றிகளையும் போர் நிகழ்ச்சிகளையும் பற்றித் தமக்கையுடன் உரையாடிக் கொண்டே நடக்கிறான் இராஜராஜன்.


அவற்றையெல்லாம் கேட்டு, தம்பியின் வெற்றி எல்லாம் தன் வெற்றி எனவும், சோழப் பேரரசின் வெற்றி எனவும் எண்ணிப் பெருமிதம் கொள்கிறாள் குந்தவைப் பிராட்டி. “சேரர், பாண்டியர், பல்லவர் எல்லோரும் அடிபணிந்துவிட்டனர். காந்தளூரில் கலம் அறுத்து, பாண்டியன் அமர புஜங்களை முறியடித்து, வேங்கி நாட்டையும் கங்கபாடியையும் அடிமை கொண்டு, நுளம்பபாடியைக் கைப்பற்றி, குடமலை நாடு, கொல்லம், கலிங்கம் முதலிய பிரதேசங்களின் மீது படை கொண்டு சென்று வெற்றியைத் தனதாக்கியதோடு அவன் நிற்கவில்லை. கடல் கடந்து சென்று ஈழ நாட்டையும் வென்று, அதனை மும்முடிச் சோழ மண்டலமாக்கி இன்னும் அலை கடல் நடுவில் பல கலம் செலுத்தி, முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரத்தையும் கைக் கொண்டு ஜயங்கொண்ட சோழனாக வல்லவா திரும்பியிருக்கிறான். தன் தம்பி” என்றெல்லாம் இப்படி ஒரு அகண்ட தமிழகத்தையே உருவாக்கிவிட்ட தம்பியைப் பலவாறு பாராட்டிப் பேசிக் கொண்டே அவனுடன் வழி நடக்கிறாள் தமக்கை. சற்று நேரத்தில் இருவரும் ஒரு சோலை நடுவே தனித்ததொரு கோயிலாக இருந்த தஞ்சைத் தளிக் குளத்தை அணுகுகிறார்கள். அங்கு லிங்கத் திருஉருவில் எழுந்தருளியிருந்த இறைவனை வணங்குகிறார்கள். ‘விண்ணிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கொளியாய், எண்ணிறந்து எல்லை இலாதானாகப் பரந்து நிற்கும் இறைவனுக்கா இவ்வளவு சிறிய கோயில்?’ என்று எண்ணுகிறான் ராஜராஜன்.


அப்படியே நினைக்கிறாள் அருமைத் தமக்கையும். தம்பியை முந்திக் கொண்டு குந்தவை, “தம்பி! உனது அகண்ட சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரான தஞ்சையில் இப்படி ஒரு சிறிய கோயிலில் இறைவன் இருக்கலாமா? அது உன் புகழுக்கு ஏற்றதாகுமோ?” என்று பேசுகிறாள். “அப்படியேதான் நினைத்தேன் அக்கா நானும்" என்று கூறிவிட்டு "இந்தத் தளிக் குளத்து இறைவனையே ஒரு பிரஹதீஸ்வரனாக, பெரு உடையாராக அமைத்து அந்தப் பெரிய உருவிற்கு ஏற்ற வகையில் பெரிய கோயில் ஒன்றையும் கட்டிவிட வேண்டியதுதான்” என்று முடிக்கிறான். அன்றே கோயில் கட்டும் பணி துவங்குகிறது. 800 அடி நீளமும், 400 அடி அகலமும் உள்ள ஒரு பரந்த வெளியிலே, ஒரு வாயில், மகா மண்டபம், அர்த்த மண்டபம், நர்த்தன மண்டபம், தாபன மண்டபம் எல்லாம் அமைத்து நல்ல விசாலமான கருவறை ஒன்றையும் கட்டி அதன் பேரில் 216 அடி உயரத்தில் தக்ஷிண மேரு என்னும் விமானத்தையும் உயர்த்தி அந்த விமானத்தின் பேரில் எண்பதுடன் நிறையுள்ள பிரமரந்திரத் தளக்கல்லையும் பரப்பி அதன் பேரில் பொன் போர்த்த ஸ்தூபியையும் நிறுவி, கோயில் கட்டி முடிக்கிறான் ராஜராஜன்.


அக்கோயிலிலே 54 அடி சுற்றளவுடைய ஆவுடையாரிலே 18 அடி உயரமுள்ள லிங்கத் திருவுருவையும் பிரதிஷ்டை செய்கிறான். அத்திருஉருவை பெருஉடையார் என்றே வணங்குகிறான். இப்படித்தான் ‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’ என்னும் பொய்யா மொழியின் வாக்குக்கு இணங்க பெருவுடையாருக்கு ஏற்ற ஒரு பெரிய கோயில் கட்டி, ஒரு அகண்ட தமிழகத்தைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததைவிட, ஒரு உயர்ந்த தமிழகத்தையே உருவாக்கியவன் என்ற புகழுக்கு உரியவனாகிறான். தஞ்சைப் பெரிய கோயில் தமிழ்நாடு முழுவதிலுமே சிறந்த ஒரு பெரிய கோயிலாக அன்று முதல் இன்று வரை நிலவி வந்திருக்கிறது. இப்படி ஒரு கோயில்தானா இந்தத் தஞ்சை மாவட்டத்தில்? விண் மறைக்கும் கோபுரங்களோடு கூடிய வினை மறைக்கும் கோயில்கள் நிறைந்த மாவட்டம் என்னும் புகழுக்கு உரியது இந்தத் தஞ்சை மாவட்டமே. இங்கு மூவர் முதலிகளால் பாடப் பெற்ற கோயில்கள் 160 உண்டு.


அத்தோடு ஆழ்வார்களால் மங்களா சாஸனம் செய்யப் பெற்ற திவ்வியம் விளைந்த திருப்பதிகளும் 33 உண்டு. இன்னும் ஆறுபடை வீடுகளில் ஒன்றான ஏரகம் என்று கருதப்படும் கோயிலும் இந்த மாவட்டத்தில் தானே? சரயு நதிக்கரையில் பிறந்து கங்கைக் கரையில் தவழ்ந்த இராமன் வந்து நிரந்தர வாசம் செய்யும் காவிரிக் கரையில் உள்ள ராமர் கோயில்கள் எத்தனை எத்தனை. இந்தக் காவேரி தீர ரஸிகனான ராமனைக் கல்லிலும் செம்பிலும் வடித்து வைத்திருக்கும் கோலங்கள்தான் எத்தனை, சிற்பக் கலை உலகிலே பிரசித்தி பெற்ற சோழர் காலத்துச் செப்புப் படிமங்கள் {Chola Bronzes) தாம் எத்தனை. இத்தனையையும் பற்றி இன்றே உங்களுக்குச் சொல்லிவிடப் போவதில்லை நான். ஒரு சில கோயில்களை மட்டும் சுட்டிக்காட்டி விட்டு, மற்றவைகளை நீங்களே சென்று காணும் ஆவலைத் தூண்டிவிட்டு விடுவேனானால் அதுவே போதும் என்று மகிழ்வேன் நான். தஞ்சை மாவட்டத்தின் தனிச் சிறப்புக்குக் காரணமான தஞ்சைப் பெரிய கோயிலை விட்டு விட்டால் மற்ற கோயில்கள் எல்லாம் ராஜராஜன் காலத்துக்கு முந்தியவை, அவன் காலத்துக்குப் பிந்தியவை என்று இரண்டு பகுதிகளாகப் பார்க்கலாம். மண்ணாலும், மரத்தாலும் கட்டிய கோயில்கள் அழிந்து போய்விடுகின்றன என்பதை அறிந்த பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் மலைகளையே குடைந்து குடைவரைகள் அமைத்தான் என்பது வரலாறு.


அவன் அடியொற்றி மலைகளையே வெட்டிச் செதுக்கி ரதங்களையும் கோயில்களையும் உருவாக்கியிருக்கிறான் மகேந்திர வர்மன் மகன் நரசிம்மவர்மன். இவர்கள் வழி வந்த ராஜசிம்மனும், பரமேஸ்வர வர்மனும், காஞ்சியில் கைலாசநாதர் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில், மாமல்லையில் கடற்கரைக் கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள். என்றாலும் உபானம் முதல் ஸ்தூபி வரை கல்லாலேயே கோயில் கட்டிய பெருமை சோழ மன்னர்களுக்கே உரியதாக இருக்கிறது, அப்படிக் கட்டிய கோயில்களில் ராஜராஜன் காலத்துக்கு முந்தியவை சில. அவைகளை - தஞ்சை மாவட்டத்திலுள்ளவைகளை மட்டும் முதலில் உங்களுக்கு இனம் காட்டி விடுகிறேன். சரித்திரக் காலத்துக்கு முற்பட்ட சங்க காலத்தில் கோச்செங்கணான் என்பவன் யானை ஏறாத் திருப்படிகள் உடைய மாடக் கோயில்கள் எழுபது கட்டினான் என்பர். எண்தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது கட்டிய பெருமகன் அவன் என்று தெய்வத் திருமுறை கூறும். ஆனால், சரித்திரப் பிரசித்தி பெற்ற சோழ மன்னர்களில் விஜயாலயன், நார்த்தாமலையில் விஜயாலய சோழீச்சரம் கட்டினான் என்பதையும் அறிவோம். அவனே தஞ்சையில் வெண்ணாற்றங்கரையில் துர்க்கைக்கு நிசும்பசூதனி என்ற கோயில் அமைத்தான் என்பதும் வரலாறு.


விஜயாலயன் மகனான முதலாம் ஆதித்தன்தான் திருப்புறம் பயத்திலுள்ள ஆதித்தேச்சுரம் என்ற கோயிலையும் பண்டார வாடையை அடுத்த திருச்சேலூரில் தேவராயன் பேட்டைக் கோயிலையும் அமைத்தான் என்பர். இவர்களை எல்லாம்விட, கோயில் கட்டுவதிலும் கோயில்களைப் புதுப்பிப்பதிலும், நிபந்தங்கள் ஏற்படுத்துவதிலும் மிக்க சிரத்தை காட்டியவர்கள் கண்டராதித்தனும் அவனது மனைவி செம்பியன் மாதேவியமே. திருவாரூர் அறநெறி, கோனேரிராஜபுரம் என்னும் திருநல்லம், திருமணஞ்சேரி, தென் குரங்காடுதுறை முதலிய கோயில்களேயன்றி இன்னும் பலப்பல கோயில்களைக் கட்டியும் புதுக்கியும் வைத்திருக்கின்றனர். செம்பியன் மாதேவியின் புகழ் என்றும் சரித்திர ஏடுகளில் நிலைத்திருக்கும். அவரே ராஜராஜனை சிவபாத சேகரன் ஆக்கியவர். அவன் கட்டிய கோயிலைத்தான் அறிவோமே. ராஜராஜனுக்குப் பின் அவன் மகன் ராஜேந்திரனும் அவன் வழி வந்த இரண்டாம் ராஜராஜன், ராஜாதி ராஜன், குலோத்துங்கன் எல்லோரும் கட்டிய கோயில்கள் இன்றும் வானளாவ அவர்கள் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. தாராசுரம் ஐராதேஸ்வரர் கோயிலும், திரிபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயிலும் அவைகளுள் சிறப்பானவை. இப்படியே கோயில்களின் ஜாபிதாவைக் கொடுத்து உங்களைத் திணற அடிக்க விரும்பவில்லை. காண வேண்டிய ஒரு சில கோயில்களை மட்டும் சுட்டிக்காட்டி விட விரைகிறேன்.


கும்பகோணத்தில் உள்ள குடந்தைக் கீழ்க் கோட்டம் என்னும் நாகேஸ்வர சுவாமி கோயில் ராஜராஜன் காலத்துக்கு முந்தியக் கலைக் கோயில், அங்குள்ள அர்த்தநாரி, பிக்ஷாடனர் எல்லாம் கலைப் பிரசித்தி உடையவர்கள். அங்குள்ள நடராஜரது செப்புப் படிமம் அழகு வாய்ந்தது. கோனேரி ராஜபுரத்து நடராஜரும், திரிபுராந்தகனும் ராஜராஜன் அமைத்த செப்புப் படிமங்கள் என்று தெரிகிறது. அவைகளைக் ‘காணாத கண் என்ன கண்ணே’ என்றுதான் கூறவேண்டும். தாராசுரத்துக் கோயிலில் உள்ள அன்னபூரணி முதலியோர் எல்லாம் கலை உலகில் அமரத்வம் வாய்ந்தவர்கள். அங்குள்ள சிவனது விசுவரூப தரிசனம் எங்கும் காணமுடியாத அற்புதச் சிற்பம். அங்கிருந்த சிலைகள் எல்லாம் தன் நடைபெயர்ந்து இன்று தஞ்சைக் கலைக் கூடத்தை அழகு செய்து நிற்கின்றன. திரிபுனத்திற்கும் நடையை எட்டிப் போட்டால் சரபரையும் அவர் சந்நிதியில் உள்ள ஜல பாஞ்சிகைகள் இருவரையும் தரிசிக்கலாம். அவைகளை ஆக்கிய சிற்பிகளுக்கு வணக்கமும் செலுத்தலாம். கலையை மறந்து, பக்தி சிரத்தையோடு கோயில்களை அணுகுபவர்கள் என்றால் நேரே சீர்காழி சென்று சம்பந்தருக்கு அருள் செய்த தோணியப்பரையும் புள்ளிருக்கும் வேளூர் என்று புராணப் பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் சென்று வைத்திய நாதனையும் வணங்கலாம், அவகாசம் இருந்தால் திருப்புன்கூர் சிவலோகநாதன், வெண்காடு மேவிய விகிர்தன், திருக்கடையூர் கால சம்ஹாரர் முதலியவர்களையும் கண்டு வணங்கலாம். வழியில் உள்ள திருத்தலங்களில், வேள்விக் குடியில் கல்யாண சுந்தரர், சாய்க்காட்டில் வில்லேந்திய வேலன், வழுவூரில் கஜ ஸம்ஹாரர், பிக்ஷாடனர் முதலிய அரிய வடிவங்களுக்கும் வணக்கம் செலுத்தலாம். திருவாரூரில் தியாகராஜர் சந்நிதியும் அங்கு நடக்கும் பூசை புனஸ்காரங்களும் மிகமிகப் பிரசித்தி வாய்ந்தவை ஆயிற்றே! ‘என்ன, இப்படியே ஒரே சிவம் பெருக்கும் கோயில்களையே குறிக்கிறீரே’ என்று நீங்கள் முணு முணுப்பது காதில் விழுகிறது. வைணவத் தலங்களையுமே பார்க்கலாம். கம்பன் பிறந்த ஊராகிய தேரழுந்தூர் ஆமருவியப்பன், திருக்கண்ணபுரத்துப் பெம்மான், கண்ணமங்கை காராளன், விண்ணகரத்து ஒப்பிலியப்பன், திருச்சேறை சாரநாதன், நாச்சியார். கோயில் நாச்சியார் எல்லாம் கண்டு தொழ வேண்டியவர்ளே. அடடே, இந்தத் தஞ்சை மாவட்டத்தில் காவிய நாயகனாகிய ராமனுக்குத்தான் எத்தனை. எத்தனை சந்நிதிகள்! குடந்தையிலே ஒரு ராமசாமி கோயில், தில்லைவிளாகத்திலே, வடுவூரிலே, முடி கொண்டானிலே, அடம்பரிலே, எல்லாம் சர்வ அங்க சுந்தரனான ராமன் சீதா லட்சுமண சமேதனாக அல்லவா எழுந்தருளியிருக்கிறான். இம்மட்டோ! வேளூர் முத்துக்குமரன், சிக்கல் சிங்காரவேலன், சுவாமிமலை சாமிநாதன் எல்லாம் மக்கள் உள்ளத்திலே முருக பக்தியை ஊட்டி ஒரு முருக பக்த சாம்ராஜ்யத்தையே அல்லவா உருவாக்கிவிடுகிறார்கள்! இன்னும் இங்குள்ள கோயில்களை எல்லாம் சொல்லி முடியாது. நிறைந்த அவகாசத் தோடு அங்கு சென்று, ஆர அமர இருந்து கண்டு வணங்க வேண்டும். அந்தப் பேறு எனக்குக் கிடைத்தது, என் உத்தியோக வாழ்விலே. ஆம்! ஐந்து வருஷங்கள் அல்லவா அம்மாவட்டத்தில் தங்கியிருந்து பணியாற்றியதோடு, கலை வளர்க்கும் காதலிலும் திளைத்து இருந்திருக்கிறேன். அது என் பாக்கியம் என்று நினைந்து நினைந்து மகிழ்ச்சியடைகிறேன்.


 

Comments


bottom of page