top of page
library_1.jpg
Writer's pictureAngelica

தமிழ்நாட்டுக் கோயில்கள் - சில சரித்திரச் சான்றுகள்

இந்தியக் கலைச்செல்வம் - 18

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்


 

தமிழ்நாட்டுக் கோயில்கள் - சில சரித்திரச் சான்றுகள்


எங்கள் ஊரில் ஒரு கோபுரம். மொட்டைக் கோபுரம் என்று அதற்குப் பெயர். நாங்கள் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் அதை அசோகர் நாட்டிய தூண் என்று கருதினோம்.


எங்கள் கருத்துக்கு சரித்திரம் துணை செய்யவில்லை. அசோக சாம்ராஜ்யம் தாமிரபருணி நதிக்கரை வரை எட்டியிருக்கவில்லைதான். என் நாலும் இந்த மொட்டைக் கோபுரம் ஒரு நல்ல ஞாபகச் சின்னம்.


பொன் திணிந்த புனல் பெருகும் தண் பொருதை எங்கள் ஊரில் தவழ்ந்து செல்கிறது. அதன் ஒரு கரையிலிருப்பவர் மறுகரைக்குக் கடந்து செல்ல ஒரு நல்ல பாலம் ஒன்று கட்டும் வித்தார் ஒரு முதலியார், எத்தனை ஆயிரம் ஆயிரம் ரூபாய்களோ செலவு செய்து இந்தப் புண்ணிய கைங்கர்யத்தை முடித்து வைத்தார் அவர். அவருடைய ஞாபகச் சின்னமாக ஒரு கோபுரம். ஆம். மொட்டைக் கோபுரம்தான் தலை தூக்கி நிற்கிறது.


இந்த மொட்டைக் கோபுரத்தின் சிற்ப வேலையை விஸ்தரிப்பது எளிது. தரை மட்டத்தில் 10 அடிச் சவுக்கம். மேலே நாலு அடிச் சவுக்கம். உயரம் சுமார் 40 அடி, கல்லால் மொக்கை மொழுக்கை என்று கட்டிய ஒரு மொட்டைக் கோபுரம் அது. மொட்டைக் கோபுரத்தை அடுத்து ஒரு ஊசிக் கோபுரம், கீரைக் கடைக்கு எதிர்க்கடை என்பது போல. இந்த ஊசிக் கோபுரம் கிறிஸ்தவர்களின் ஆலயத்தின் முகப்பு வாசலில் அமைக்கப்பட்டுள்ள கோபுரம் ஆகும். வேலைப் பாடெல்லாம் என்னவோ மொட்டைக் கோபுரத்தைப் போலத்தான். 40 அடிக்கு மேலே மொட்டையாய் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு பிரமிட்போல ‘ஒரு கோபுரத்தைக் கட்டி, இதில் மின்சார ஊசியையும் நட்டு வைத்து விட்ட காரணத்தினால், ஊசிக்கோபுரம் என்ற பெயர் நிலைத்துவிட்டது. இந்த மொட்டைக் கோபுரமும் ஊசிக் கோபுரமும் தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டின் சிற்ப வேலைக்கு ஒரு எடுத்துக்காட்டு! “கிறிஸ்து பிறப்பதற்கு 3000 வருஷங்களுக்கு முன்னாலேயே, உயர்ந்த நாகரிகமும் கலைப் பண்பும் பெற்றிருந்தவர்கள் தமிழர்கள். அவர்கள் எழுப்பிய கலைக்கோயில்கள் தமிழ்நாடு முழுவதும் தலைதூக்கி நிற்கின்றன” என்று பழம் பெருமை பேசுகிறோம் நாம்.


அத்தகைய சிற்ப வேலையோடு கூடிய சிறந்த கோயில்களையும் கோபுரங்களையும் கட்டிய தமிழரது பரம்பரையில் வந்தவன் இன்று மொட்டைக் கோபுரத்தையும், ஊசிக் கோபுரத்தையும் கட்டிய பரிதாபத்துக்கு ஆளாகிறான். இருபதாம் நூற்றாண்டின் கலைவாழ்வில் தமிழன் எவ்வளவு தாழ்ந்து போயிருக்கிறான் என்றே வருந்த வேண்டியிருக்கிறது! மொட்டைக் கோபுரமும், ஊசிக் கோபுரமும் எப்படி 20ஆம் நூற்றாண்டின் கோயிற் சிற்பத்துக்கு சான்று பகர்கின்றனவோ அதே போல பழந்தமிழர் கட்டிய கோயில்கள் அந்த அந்தக் காலத்தின் கலை வாழ்வுக்கு அழியாத சான்றுகளாக விளங்குகின்றன. தென்னிந்திய சரித்திரத்தை உருவாக்க உதவியும் செய்கின்றன. கோயில், மூர்த்தி வழிபாடு என்பதெல்லாம் தமிழருடையதே. இயற்கையினிடத்தே ஆரியர் வழிபாடு நின்றது. வேள்வியே அவர்கள் செய்த பூசனை. தனித்தனியாக வழிபடுவதே அவர்கள் வழக்கம். புத்த, சமண சமயம் தோன்றிய பின்னர்தான் அவர்களின் துறவிகள் தங்குவதற்கு தவப் பள்ளிகளும், அப்பள்ளிகளின் பேரில் பல நிலை மாடங்களும் ஏற்பட்டன. புத்தருக்கும், அறத்துக்கும் உள்ள ஏற்றம் அறவண அடிகள் கழகத்துக்கும் உண்டு.


அக்கழகத்தை ஒட்டி அறப் பள்ளி, பல நிலை மாடம், அம்பலம் முதலியன எழுந்தன. புத்தர், சமணர் இவர்களிடத்தே காணக் கிடந்த நல்ல கொள்கைகளை நம்மவர் கைக்கொண்டு, இவற்றை நமது மதத்துக்கு அடிப்படையாக்கினர். புத்தர் இருந்த இடத்தே பெருமாள் புகுந்தார். அருகர் இருந்த இடத்தே சிவபெருமான் புகுந்தார். மக்கள் இறைவனை ஒன்றுகூடி, வழிபட்டனர், கூட்ட வழிபாட்டில் கோயில் உருக்கொண்டது. கோயில்களில் கோபுரங்கள், விமானங்கள் எல்லாம் எழுந்தன. இந்த விதமாகத்தான் தமிழ்நாட்டில் கோயில்கள் உருப்பெற்றன என்று சரித்திர ஆசிரியர்கள் நிர்ணயிக்கிறார்கள்.


‘பிறவா பாக்கைப் பெரியோன் கோயிலும், அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும், நீலமேனி நெடியோன் கோயிலும், மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் காவி ரிப்பூம்பட்டினத்தில் தமிழன் கட்டிய கோயில்கள்! நுதல் வழி நாட்டத்து இறையோன் கோயிலும், உவணத் சேவல் உயர்த்தோன் நியமமும், மேழிவேலன் உயர்த்த வெள்ளை நகரமும், கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும்’ மதுரை மூதூரில் உள்ள கோயில்கள் என்று சிலப்பதிகாரம் கூறும். சிலப்பதிகாரம் தமிழனுடைய தனி இலக்கியம். தமிழருடைய நாகரிகம் தமிழகடைய கலைவளம் எல்லாம் அந்தக் காவியத்தில் நன்கு சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. சிலப்பதிகார காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று முடிவு கட்டுகிறாகள். ஆகவே, இன்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்னே, தமிழ்நாட்டில் எழுந்த ஒரு காவியத்தில் தமிழ்நாட்டில் அன்று சிறந்திருந்த கோயில்களை பற்றி ஆசிரியர் இளங்கோவடிகள் பிரஸ்தாபித்திருக்கிறார். ஆனால், இந்த இலக்கியக் கோயில்களில் பல இன்று காணக் கிடைக்கவில்லை, காரணம், அதை மரத்தாலும், சுதையாலும், செங்கல்லாலும் கட்டப்பட்டு காலகதியில் அழிந்து போயிருக்க வேண்டும் என்றே கருத வேண்டியிருக்கிறது.


இன்று நாம் காணும் தென்னிந்தியக் கோயில்களில் மிகவும் புராதனமானது, பல்லவ அரசர்கள் மலைகளைக் குடைந்து அமைத்த குடைவரைக் கோயில்களே. மாமண்டூர், மகேந்திரவாடி, சிங்கவரம் முதலிய ஊர்களில் காணும் விஷ்ணு கோயில்களும், சீயமங்கலம், பல்லாவரம், தளவானூர், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில் காணும் சிவன் கோயிலும், மண்டகப்பட்டில் காணும் திருமூர்த்தி கோயிலும், சித்தன்னவாசல் சமணர் கோயிலும், பல்லவச்சக்கரவர்த்தியான மகேந்திரவர்மன். உருவாக்கியவை.


“மரமும், செங்கல்லும், இரும்பும், சுண்ணாம்பும் இல்லாமல் கட்டிய கோயில்கள் இவை” என்று ஒரு கல்வெட்டில் இக்குடைவரைகளைப் பற்றிப் பிரஸ்தாபிக்கின்றான் அவன். இந்த மகேந்திர வர்மனின் மகன்தான் மகாபலிபுரத்துக் கற்கோயில்களை நிர்மாணித்த முதலாம் நரசிம்மன். தன் தந்தை கண்ட கலைக் கனவுகளையெல்லாம் நனவாக்கியவன். மலையைக் குடைந்து குடைவரைக் கோயில்கள் அமைத்ததோடு மட்டும் நில்லாமல், மலைகளையே வெட்டிச் செதுக்கி, பிரம்மாண்டமான கோயில்களையும் கோபுரங்களையும் சிருஷ்டித்து இருக்கிறான். மாமல்லபுரத்து ‘ஏழு ரதக் கோயில்கள்’ இவன் செய்த கோயிற் சிற்பம் ஆகும்.


அவைகளின் புகழோ அழியாப் புகழ். இவன் கால்வழி வந்த இரண்டாம் நரசிம்மவர்மனே, ராஜசிம்மன் என்ற பெரும் புகழ் படைத்தவன். கல்லும் சுண்ணாம்பும் கொண்டு கோயில்களைக் கட்ட ஆரம்பித்தவனும் இவனே. இவன் கட்டிய கோயில்தான் இன்று காஞ்சியில் நாம் காணும் கைலாசநாதர் கோயில், தமிழர். கோயிற் சிற்பத்தின் முதற்படியும் இதுதான். மலைகளைக் குடைந்தும், பாறைகளைச் செதுக்கியும் கல்லால் எழுப்பியும் கோயில் கட்டினார்கள் இப்பல்லவ அரசர்கள். பெருங்கற்களைக் கொண்டு எழுப்பிய கோயில்கள் 7 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை தமிழர் கண்ட கோயிற் சிற்பம் ஆகும்.


ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னால், தென்னிந்தியக் கோயிற் சிற்பத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. பல்லவ சாம்ராஜ்யத்துக்குப் பின் எழுந்த சோழ சாம்ராஜ்யம் தமிழருடைய வாழ்விலேயே ஒரு முக்கியமான காலம். சோழ அரசர்கள் கட்டிய கோயில்கள் எல்லாம் பிரமாண்டமானவை. அலங்காரமான தூண்கள். அகலமான மண்டபங்களைத் தாங்கி நின்றன. தூண்களின் பீடங்களிலும் பொதிகைகளிலும், விசித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. பெரிய பெரிய வாயில்களையும், மாடக் குழிகளையும் சுற்றி நுணுக்கமான சிற்ப வேலைகள் காணப்பட்டன. கோபுரங்களை விட, விமானங்களுக்குத்தான் பிரதானம் கொடுக்கப்பட்டது. தஞ்சையிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் திரிபுவனத்திலும் எழுந்த கோயில்கள் இந்தச் சோழர் காலத்துக் கற்பணிகள்தாம். சோழ அரசர்கள் தமிழ்நாட்டில் எடுப்பித்த கோயில்களுள் சிறந்து விளங்குவது முதலாம் ராஜ ராஜன் தஞ்சையிலே அமைத்த பெரிய கோவில் ஆகும். இந்த ராஜராஜன் கி.பி.985 முதல் 29 ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தைப் பரிபாலித்திருக்கிறான், ராஜராஜன் கட்டிய பெரிய கோயில் ராஜராஜேச்வரம் என்று அன்று முதல் இன்றுவரை வழங்கப்படுகிறது. கோயிலைச் சுற்றி அகழியும், மதிலும் அழகு செய்கின்றன. உட்கோயிலானது, இறைவன் சந்நிதியான கர்ப்பகிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஆஸ்தான மண்டபம், நர்த்தன மண்டபம், வாத்திய மண்டபம் என்று ஆறு பகுதிகளை உடையதாயிருக்கின்றது. கோயிலுள்ள வாயில்களில் எல்லாம் 18 அடி உயரமுள்ள துவார பாலகர் நான்குபேர் காவல் புரிகிறார்கள்,


கோயிலின் கர்ப்பக்கிருகத்துக்கு மேலேயுள்ள அழகிய விமானம் சதுர வடிவமானது. பதின்மூன்று மாடிகள் கொண்டது. இது ‘தட்சிணமேரு’ என்றே அழைக்கப்படுகிறது. உச்சியில் சதுர வடிவமான பிரமரந்திரத் தளக் கல்லும், அதன் மேல் கலசமும், பொன் போர்த்த ஸ்தூபியும் அமைக்கப்பட்டிருக்கின்றன. பிரமரந்திர தளக்கல் ஒரே கருங்கல். 26 அடி சதுரமுடையது. நிறை 80 டன். இதனை, தஞ்சைக்கு நான்கு மைலுக்கு அப்பாலுள்ள சாரப்பள்ளம் என்ற கிராமத்திலிருந்தே சாரம் போட்டு இச்சிகரத்தில் ஏற்றியிருக்கிறார்கள். ராஜராஜன் அளவு கடந்து சைவப்பற்று உடையவன் என்றாலும் விசாலமான மதக் கோட்பாடும் உடையவன். இதை நாம் கோயில் விமானங்களிலும் மற்றும் பல பாகங்களில் காணும் சைவ வைஷ்ணவ பௌத்த உருவச் சிலைகள், சிற்ப வடிவங்கள் ஆகிய வற்றிலும் அறிகிறோம். இராஜராஜனுக்குப் பிறகு, அவன் மைந்தன் ராஜேந்திரன் (கி.பி. 1014 - 1048) தலை நகரையே தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றியிருக்கிறான். கங்கை கொண்ட சோழீச்சரம் என்ற கோயிலை அங்கே நிறுவி, அப்பனுக்கு மகன் சளைத்தவனில்லை என்று காட்டியிருக்கிறான். இவர்களின் பின் வந்த சோழ அரசர்களும் தம் முன்னோர் செய்து வந்த நற்பணிகளைத் தொடர்ந்தே நடத்தியிருக்கிறார்கள். சதுர்வேத மங்கலம், ஜயங்கொண்ட சோழபுரம், தாராசுரம் முதலிய ஸ்தலங்களில் உள்ள கோயில்கள் இவர்கள் செய்த சேவைக்குச் சான்று பகர்கின்றன. பன்னிரண்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டுகளிலும் சோழ அரசர்கள் தங்கள் கற்பணிகளைக் கைவிட வில்லை. இந்தக் காலத்தில் கட்டிய கோயில்களில்தான் கோபுரங்கள் பிரம்மாண்டமான. உயரத்தில் கட்டப்பட்டன. விமானங்கள் உருவத்திலும் உயரத்திலும் குறைந்தன. மனிதனது சிந்தனை எப்படி வானளாவி உயர்ந்ததோ, அப்படித்தான் கோபுரங்களும் வானளாவி எழுந்தன. தாமரை மலர் போலெல்லாம் தூண்களில் பொதியல்கள் செதுக்கப்பட்டன.


பீடங்களில் எல்லாம் மெடுத்த நாக உருவங்கள் காட்சி அளித்தன. சிதம்பரம் நடராஜர் கோயிலின் சில பாகங்களும், திருவண்ணாமலைக் கோயிலும் இந்தக் காலத்தில் கட்டப்பட்டவையே. முந்திய சோழர் புதிய புதிய கோயில்களை நிர்மாணித்தால், பிந்திய சோழர் பழைய கோயில்களைப் புதுக்கி ஜீரணோத்தாரணப் பணி புரிந்தார்கள். எல்லா வகையிலும் சோழர்கள் தென்னிந்திய கோயிற் சிற்பத்தை உருவாக்குவதில் எடுத்துக் கொண்ட பங்கு, தமிழர்களுக்குப் பெருமை அளிப்பதாகவே அமைந்தது. இனி நாம் தென்னிந்திய கோயிற் சிற்ப வளர்ச்சியில் ஒரு முக்கியமான காலத்திற்கு வருகிறோம். விஜயநகரத்து மன்னர்கள் தமிழ்நாட்டை ஆண்ட காலத்து அவர்கள் செய்த ஆலயப் பணிகள், அவர்களுடைய சிற்பத் திறத்திற்கும் கடவுள் பக்திக்கும் அழியாத சான்று பகர்வதாகும். பெரிய பெரிய மண்டபங்களும் அவைகளைத் தாங்கி நிற்கும் தூண்களும் சித்திரவேலைப்பாடுகள் நிறைந்ததாயிருந்தன. ஆயிரக்கால் மண்டபம், வசந்த மண்டபம், அஷ்ட சித்தி மண்டபம், நீராழி மண்டபம் முதலியவை எழுந்தன. நீண்ட அகன்ற தாழ்வாரங்கள் அலங்காரமாகக் கட்டப்பட்டன. கோபுரங்களிலும், தூண்களிலும் சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டன.


பொதியலில் இருந்த தாமரை மலர்களில் வாழைப் பூக்கள் தொங்கின. மதுரையிலும் ராமேஸ்வரத்திலும் திருநெல்வேலியிலும். இன்று காணக் கிடைக்கும் கோயில்கள் எல்லாம் இந்த நாயக்க மன்னர்களால், 16,17ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவையே. இவற்றில் சிற்பக் கலையழகில் சிறந்து விளங்கும் கோயில்கள் மதுரை மீனாட்சி கோயிலும், கிருஷ்ணாபுரத்து திருவேங்கட நாதர் கோயிலும்தான். கோயில் அமைப்பும் கோபுரங்களின் அமைப்பும் ஒருபுறமிருக்க இந்த ஸ்தலங்களில் உள்ள சிற்பங்கள் உயிரோவியங்களாக உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. கடவுளின் பெருமையையும், தெய்வீகத்தையும் பக்தர்களின் உள்ளங்களில் பதிய வைக்கத்தக்க சிலைகளைச் சிற்பிகள் செதுக்கி வைத்தார்கள்.


கிரேக்க சிலைகள் அழகு வாயந்தவைதாம். எகிப்திய சிலைகள் இற்கைக்கு முரண்படாதவைதாம். ஆனால், சிந்தனை தோய்ந்த சிலைகளைத்தான், தமிழ்நாட்டுச் சிற்பிகள் சிருஷ்டித்தார்கள். ‘குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்’ உடைய நடராஜரது சிலையிலேதான் எவ்வளவு வசீகரம்! தட்சிணாமூர்த்தியின் மௌன உருவிலேதான் எத்தகைய கம்பீரம்! எத்தகைய அமைதி! வீரபத்திரன் உருவத்தில்தான் எவ்வளவு கோபம்! உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை எழுத்தில் வடித்து கவிதையை உருவாக்கினால், அதே உணர்ச்சிகளைக் கல்லிலல்லவர் காட்டுகிறான் தமிழ்நாட்டுச் சிற்பி. கல் சொல்லும் கவிதையைக் கண்ணால் பார்க்கிறோம்; கலைச் செல்வம் நிரம்பிய தமிழ்நாட்டில் தமிழனாய்ப் பிறந்தோமே என்று மனம் பூரிக்கிறோம். கடைசியாக ஒரு வார்த்தை: எத்தனை எத்தனையோ மன்னர்கள், எவ்வளவோ பொன்னையும் பொருளையும் அள்ளி அள்ளிக் கொடுத்து கோயில்களைக் கட்டி கலை வளர்த்தார்கள். ஆனால், பொன்னும் மணியும் இல்லாமல் மண்ணும் மணலுமில்லாமல், ஒரு பக்தர் ஒரு பெரிய கோயிலைக் கட்டுவித்தார் தம் மனத்துள்ளேயே. அவர்தான் திருநின்ற ஊரில் தோன்றிய பூசலார் நாயனார். காஞ்சிபுரத்தில் ராஜசிம்மன் கட்டிய கோயிலில் இறைவனைப் பிரதிஷ்டை செய்யவிருந்த அதே முகூர்த்தத்தில் இறைவன் பூசலார் மனத்துள் கட்டிய கோயிலில் எழுந்தருளப் போய்விட்டார்.


பூசலார் உள்ளத்தில் நினைத்து நினைத்துக் கட்டிய கோயில், காடவர் கோன் பொன்னாலும் மணியாலும் கட்டிய கோயிலைவிடச் சிறந்த கோயிலென்றே இறைவன் கண்டான். கலை வாழ்வை அறியாத நாமும், மொட்டைக் கோபுரத்தையும் ஊசிக் கோபுரத்தையும் கட்டுவதைக் காட்டிலும் பூசலாரைப் போலவே, உள்ளத்துக்குள்ளேயே பெரிய பெரிய கோயில்களை எழுப்பலாம். ‘இலங்கும் உயிரனைத்தும் ஈசன் கோயில்’ என்று பாடித்தானே நமது முன்னோர் நமக்குப் பக்தியைப் புகட்டி வைத்திருக்கிறார்கள்.



 

Comments


bottom of page