top of page
library_1.jpg

சேக்சுபியர் கதைகள் VOL-2

கா. அப்பாத்துரையார்

போர்ஷியா முறைமன்றம் ஏகுதல்

அங்கு அந்தோனியோ சிறையில் வைக்கப்பட்டிருத்தலை அவன் கண்டான்; மனம் நொந்து ஷைலாக்கிடம் ஓடினான்; கடன் தொகையை விடப் பன்மடங்கு கொடுப்பதாகக் கூறிப் பன்முறை வேண்டினான். அந்த யூதனோ மனம் இரங்கவில்லை. “இனி எனக்குப் பணம் எதற்காக? ஓர் இராத்தல் தசையே வேண்டும்,” என்று அவன் வற்புறுத்தினான். பஸானியோவின் முயற்சிகள் எல்லாம் வீணாயின.

வெனிஸ்மன்னன் இவ்வழக்கை ஆராய்வதற்காக ஒருநாள் குறித்திருந்தான். அந்நாளை எதிர்பார்த்துக் கொண்டு பஸானியோ அங்கே வருந்திக் கொண்டிருந்தான்.

தன் கணவன் பிரிந்தபிறகு, போர்ஷியா வாளா இருக்க வில்லை. “என்ன செய்யலாம் எவ்வாறு அந்தோணியோவைக் காப்பாற்றக் கூடும்,” என்று அவள் எண்ணி எண்ணி ஒரு முடிவுக்கு வந்தாள். அவள் தன் உறவினராகிய பெல்லாரியோ என்னும் வழக்கறிஞர் ஒருவர்க்குச் செய்தி எல்லாம் எழுதினாள்; அவருடைய கருத்தையும் தக்க வழிகளையும் அறிவிக்குமாறும் வழக்கறிஞர் உடையைக் கொடுத்தனுப்புமாறும் வேண்டினாள். அந்தக் கடிதத்தை ஒருவன் அவரிடம் சேர்த்து, உடனே உடையும், பதிலும், தனிக் கடிதம் ஒன்றும் பெற்றுக் கொண்டுவந்தான். இவற்றைப் பெற்ற போர்ஷியா மகிழ்ந்தாள்.

அவ்வுடைகளை அவள் அணிந்துகொண்டாள். தோழி நெரிஸாவுக்கும் ஆண் உடைகளை அளித்துத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வெனிஸ் நகரத்தை அடைந்தாள். அரசன் அவ்வழக்கை ஆராய்வதற்காகக் குறித்த நேரத்தில், முறை மன்றத்தை அடைந்தாள். தன் உறவினர் பெல்லாரியோ கொடுத்த தனிக்கடிதத்தை அரசனிடம் சேர்ப்பித்தாள்.

"மாண்புமிக்க முறைமன்றத் தலைவர் அவர்களுக்கு,

என் உடல்நலம் குன்றியுள்ளது. ஆதலின், தங்கள் கட்டளைப்படி அந்தோனியோ வழக்கை எடுத்துரைக்க நான் வரமுடியவில்லை; மன்னிக்க வேண்டுகிறேன். எனக்குப் பதிலாக அறிவும் ஆற்றலும் வாய்ந்த பல்தசார் அவ்வழக்கை எடுத்துரைப் பார். அதற்குத் தாங்கள் இசைந்தருளக் கோருகின்றேன்."

இதுவே அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அரசன் அதைப் படித்த உடனே அதில் குறித்திருந்த வேண்டுகோளுக்கு இசைந்தான். “இவர்தாம் அந்தோனியோவின் பொருட்டு வந்துள்ள வழக்கறிஞர். அவர் அறிவும் ஆற்றலும் வாய்ந்தவர் என்று வழக்கறிஞர் பெல்லாரியோ புகழ்கிறார்,” என்று கூறி, அங்கிருந்த சான்றோர்க்கு வழக்கறிஞர் பல்தசாரை (உருமாறி வந்த போர்ஷியாவை) அறிமுகப்படுத்தினான்.

போர்ஷியா தனக்களித்த இருக்கையில் அமர்ந்து சுற்றிப் பார்த்தாள்; யூதனையும், தன் கணவனையும் கண்டாள். பஸானியோ தன் மனைவியை அறிந்து கொள்ளவில்லை. மிகுந்த கவலையோடும் நடுக்கத்தோடும் அவன் அந்தோனியோவுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருத்தலைப் போர்ஷியா அறிந்தாள்.

எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஏற்ற உறுதியும் அஞ்சாமையும் போர்ஷியாவிடம் இருந்தன. அவள் அமைதியாக வழக்கை எடுத்துரைக்கத் தொடங்கினாள். முதலில் ஷைலாக்கைப் பார்த்து, “ஐயா! நீ கொடுத்த வழக்கு வெனிஸ் அரசியலார் சட்டப்படி பொருத்தமாக உள்ளது. அந்தோனியோவின் உடம்பின் எந்தப் பகுதியிலிருந்தாவது ஓர் இராத்தல் தசை பெறுவதற்கு உனக்கு உரிமை உண்டு,” என்று கூறினாள். இதனைக் கேட்டதும், ஷைலாக் உள்ளம் குளிர்ந்தது. வழக்கறிஞர் வயதால் இளைஞராயினும் அறிவால் முதியவர் என்று போற்றினான். போர்ஷியா தொடர்ந்து பேசினாள்: “ஆனாலும், இரக்கம் என்பது உயிரின் சிறந்த பண்பு அன்றோ? ஓர் உயிர்க்கும் துன்பம் செய்யாது வாழ்தலே உயர்ந்த வாழ்வு அன்றோ? ஆதலால் நீ எண்ணிப் பார்த்தல் வேண்டும். நீ கேட்டதைப் பெற உனக்கு உரிமை உண்டு. சட்டம் அதற்கு இடம் தருகிறது. ஆனாலும், கடவுளிடத்தில் இரக்கம் எதிர்பார்க்கின்ற நாம் நம்மவரிடத்தில் இரக்கம் காட்டுதல் வேண்டும் அன்றோ?” என்று அறிவுரை பல கூறினாள்.

கல் கரைந்தாலும் கரையும்; ஷைலாக்கின் மனம் கரைய வல்லதோ? “பத்திரத்தின்படி பெறவேண்டியதைப் பெறுதலே நான் காட்டும் இரக்கம்,” என்று அவன் சொன்னான்.

போர்ஷியா பஸானியோவைப் பார்த்து, “வாங்கிய கடனைக் கொடுக்க அந்தோனியாவிடம் பணம் இல்லையே?” என்று கேட்டாள். ஒன்பதினாயிரம் பொன் கொண்டுவந்து ஷைலாக் எதிரில் பஸானியோ வைத்தான். அந்தக் கல்நெஞ்சன் அதை வாங்க மறுத்து விட்டான். பஸானியோ போர்ஷியாவை நோக்கி “வழக்கறிஞர் அவர்களே! தாங்கள் என் நண்பன் உயிரை எவ்வாறேனும் காத்தருளல் வேண்டும்”, என்று வேண்டிக் கொண்டான். இதைக்கேட்ட போர்ஷியா, “சட்டப்படி நடந்தே ஆகவேண்டும். சட்டமே பெரியது; உன் வேண்டுகோள் பெரியதன்று,” என்று மறுத்துப் பேசினாள். பஸானியோ இதைக் கேட்டு வருந்த, ஷைலாக் பெருமகிழ்ச்சியோடு வழக்கறிஞரைப் பாராட்டிப் பேசினான்.

போர்ஷியா மீண்டும் ஷைலாக்கை நோக்கி, “இப்பத்திரத்தில் கண்ட கெடுநாள் கடந்தது உண்மையே. ஓர் இராத்தல் தசையை நீ அறுத்து எடுத்துக்கொள்ளலாம்,” என்று கூறினாள்: அந்தோனியோவை நோக்கி “ஐயா, உனது உடம்பிலிருந்து ஓர் இராத்தல் தசை அறுத்து எடுத்துக்கொள்ள ஷைலாக்குக்கு உரிமை உண்டு”. என்றாள். ஷைலாக் ஒரு கத்தியை எடுத்துத் தீட்டினான். அப்போது, “நீ ஏதேனும் சொல்லவேண்டுமானால் சொல்லுக,” என்று போர்ஷியா அந்தோனியோவுக்குக் கூறினாள். “நான் கூறவேண்டியது ஒன்றும் இல்லை; சாவதற்குச் சித்தமாக இருக்கிறேன்,” என்று அந்தோனியோ போர்ஷியாவுக்கு மறுமொழி கூறினான். பஸானியோவை நோக்கி, “அருமை நண்ப நலமுற வாழ்வாயாக. உனக்காக நான் துன்புற்றேன் என்று நீ கவலைப்பட வேண்டாம். உன் துணைவியிடம் என்னைப் பற்றியும் நம்மிடையே இருந்த நட்பைப்பற்றியும் சொல்லுக”, என்று சில சொற்கள் கூறினான். இச்சொற்கள் பஸானியோவின் செவியில் புகுந்தன. அவன் மனம் உருகியது. “தோழ! உன்னைக் காப்பாற்றுவதற்காக, என் மனைவியையும் என் உயிரையும் இழக்கச் சித்தமாக இருக்கின்றேன். ஆனால், இந்தக் கொடியவன் மனம் மாற வில்லையே,” என்று வருத்தத்தோடு பேசினான். இப் பேச்சைப் போர்ஷியா கேட்டு வியந்தாள். “ஐயா! இங்கு உன்னுடைய மனைவி இருந்தால் இப்படிச் சொல்லியிருக்க முடியுமா?” என்று பஸானியோவைப் பார்த்துச் சொன்னாள்.

ஷைலாக் தோல்வியுறல்

அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் வழக்கின் முடிவைக் கவலையோடு எதிர்நோக்கியிருந்தார்கள். ஷைலாக், “நேரமாகின்றதே”, என்று அவசரப்பட்டான். போர்ஷியா அவனை நோக்கி, “ஓர் இராத்தல் தசை நிறுக்க நிறைகோல் வேண்டும்; அந்தோனியோவின் உடலிலிருந்து இரத்தம் மிகுதியாக வெளியானால், உயிர் நீங்கும். ஆகையால், இங்கே மருத்துவர் ஒருவர் இருக்கவேண்டும்”, என்று கூறினாள். “பத்திரத்தில் அப்படி ஒன்றும் குறிப்பிடவில்லையே? என்று யூதன் மறுத்துச் சொன்னான்.”பத்திரத்தில் குறிக்காவிட்டால் என்ன? அறம் கருதியாவது அந்த உதவி செய்தல் வேண்டாவா?" என்று போர்ஷியா கேட்டாள். “பத்திரத்தில் உள்ளதே அறம், மற்றதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை,” என்று அவன் செருக்கோடு கூறினான்.

“அப்படியா? நல்லது. சட்டம் இடந்தருகிறது. முறை மன்றமும் ஒப்புக் கொள்கிறது. ஓர் இராத்தல் தசையை நீ அறுத்து எடுத்துக்கொள்ளலாம்,” என்று அப்போது போர்ஷியா கூறினாள். ஷைலாக் களித்தான். “அந்தோனியோ! வா, உன் மார்பைக் காட்டு.” என்று கையில் கத்தி கொண்டவனாய் அந்தோனியோவை அழைத்தான். அச்சமயத்தில், “ஷைலாக், பொறு; பத்திரத்தில் குறித்தபடியே நீ பெறுவாய். இதில் ஒருதுளி இரத்தமும் குறிக்கவில்லை. ஓர் இராத்தல் தசை தவிர, கிறித்தவன் இரத்தம் ஒரு துளி சிந்தினாலும் உனது செல்வம் முழுவதும் அரசியலார் பறிமுதல் செய்துவிடுவர்,” என்று போர்ஷியா கூறினாள். இதைக் கேட்டதும் ஷைலாக் விழித்தான்; தன் எண்ணம் நிறைவேறாது என்று அறிந்து மருண்டான். ஆனால், அங்கிருந்தோரும் அரசனும் வழக்கறிஞர் திறமையை வியந்து வாழ்த்தினர்.

“ஐயா, எனக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டால் அதுவே போதும்,” என்று வாடிய முகத்துடன் ஷைலாக் கேட்டான். பஸானியோ பணங்கொடுக்க முன்வந்தான். ஆனால், போர்ஷியா தடுத்தாள். அவள் ஷைலாக்கை நோக்கி, மீண்டும் பின்வருமாறு கூறினாள். “ஷைலாக்! பத்திரத்தில் குறித்தபடியே நீ பெற வேண்டும். ஓர் இராத்தல் தசையை அறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஒரு துளி இரத்தமும் சிந்தக்கூடாது. அது மட்டுமன்று. நீ அறுக்கும் தசை ஓர் இராத்தலுக்கு மிகுதலும் கூடாது; குறைதலும் கூடாது; மிகுந்தாலும் அல்லது குறைந்தாலும் உன் உயிரே போய் விடும்; உன் செல்வமெல்லாம் இழந்து விடுவாய்,” இம்மொழிகளைக் கேட்ட ஷைலாக், “என் பணத்தைக் கொடுத்தால் போதும்; நான் போய்விடுவேன்,” என்று வேண்டினான். அப்போது பஸானியோ பணங்கொடுக்க முன்வந்தான்; ஷைலாக் அதைப் பெற்றுக்கொள்ளச் சென்றான்; ஆனால், போர்ஷியா தடுத்தாள்.

“யூத! பொறு; உன்னை எளிதில் விடமுடியாது. நீ வெனிஸ் குடிகளுள் ஒருவன் உயிரைப் போக்க முயன்றாய்; இது மிகப்பெரிய குற்றம். அதனால், உன் செல்வம் எல்லாம் இழந்துவிட்டாய்; அச் செல்வம் அரசியலார்க்குச் சேர்ந்ததாயிற்று. உன் உயிரையும் நீ இழக்கவேண்டும். ஆனால், அதைக் குறித்து நீ அரசர் பெருமானிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்,” என்று போர்ஷியா ஷைலாக்கை நோக்கிக் கூறினாள்.

அப்போது அரசன், “ஷைலாக்! கிறித்தவர்கள் இரக்க முயைடவர்கள். நான் கிறித்துவனாகையால், உனக்கு மன்னிப்பு அளிக்கின்றேன். உன் செல்வத்தில் ஒரு பகுதி அரசியலார்க்கும், ஒரு பகுதி அந்தோனியோவுக்கும் சேரும்,” என்றான். இதை அறிந்த அந்தோனியோ, “ஷைலாக்கின் செல்வம் எனக்கு வேண்டாம். இவனுக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள் தனியே பிரிந்து சென்று ஒரு கிறித்தவனை மணந்தாள். அவளுக்கு இந்தப் பகுதி சேர்வதாக,” என்று கூறினான்.

யூதனுக்கு வேறு வழி இல்லை. அவன் எல்லாவற்றுக்கும் உடன்பட்டான், “என் உடல் நலமாக இல்லை; நான் வீட்டுக்குப் போகவேண்டும்,” என்று விடைதருமாறு மன்னனை வேண்டினான். “யூத! நீ இனியேனும் இரக்கமுள்ளவனாக வாழ்வாயாக. நீ நல்லவழிக்குத் திரும்புவாயானால், உன் செல்வத்தின் மற்றப்பகுதி உனக்கே திருப்பி அளிக்கப்படும்,” என்று அரசன் கூறினான். ஷைலாக் முறை மன்றத்தை விட்டுச் சென்றான்.

கணையாழியால் வந்த பிணக்கமும் இணக்கமும்

உடனே, அரசன் அந்தோனியோவை விடுதலை செய்து விட்டு பல்தசார் என்று பெயர்பூண்ட வழக்கறிஞரைப் புகழ்ந்து பேசித் தன் வீட்டிற்கு விருந்தினராக வருமாறு அழைத்தான். தான் விரைந்து திரும்ப வேண்டியிருப்பதாகவும் வரமுடியாமைக்கு வருந்துவதாகவும் கூறி, அப்பொழுதே போர்ஷியா விடைபெற்றுச் சென்றாள். பஸானியோ அவளைத் தொடர்ந்து சென்று, “ஐயா! தங்களுடைய அரிய உதவிக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? ஷைலாக்குத் தரவேண்டிய தொகையைத் தாங்கள் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்,” என்று சொல்லி அத்தொகையைக் கொடுக்க முயன்றான். அந்தோனி யோவும் தனது நன்றியறிதலைக் கூறினான். போர்ஷியா அத்தொகையைப் பெற மறுத்த போது, பஸானியோ வருந்தி, “தாங்கள் விரும்புவது எதுவாயினும் நாங்கள் தயங்காமல் தருகிறோம்; அதைக் கூறியருளுங்கள்,” என்று வேண்டினான். அவன் கையிலிருந்த கணையாழியைத் தருமாறு போர்ஷியா கேட்டாள். “இந்தக் கணையாழியைவிட விலையுயர்ந்தது, சிறந்தது வேறு எதுவானாலும் எங்கிருந்தாலும் தேடி வாங்கித் தருவேன்; இஃது என் மனைவியால் அளிக்கப்பட்டது; இதனை என்றும் பிரியேன் என்று நான் அவளிடம் வாக்களித்துள்ளேன். தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்,” என்று பஸானியோ வேண்டிக் கொண்டான். ஆனால், அந்தோனியோ அதனைப் பொருட்படுத்தாமல் கொடுத்துவிடுமாறு கூறினான். பஸானியோ மன வருத்தத்தோடு அதனைக் கழற்றிக் கொடுத்து விட்டான். இதைக் கவனித்துக் கொண்டிருந்த நெரிஸாவும் கிராஷியானோ விடம் கணையாழி கேட்டுப் பெற்றுக்கொண்டாள்.

போர்ஷியாவும் நெரிஸாவும் பெல்மாண்ட் அடைந்து, ஆண் உடைகளைக் கழற்றிவிட்டு, வழக்கம் போல் உடுத்திக்கொண்டு, கணவன்மாரை எதிர்நோக்கியபடி மிக மகிழ்ச்சியோடு இருந்தனர். பஸானியோ அந்தோனியோவுடன் பெல்மாண்ட் சென்றான். வீட்டிற்குள் நுழைந்ததும், “போர்ஷியா! இவர்தாம் நம்முடைய நண்பர் - உயிர்த்தோழர் அந்தோனியோ,” என்று அந்தோனி யோவைத் தன் மனைவிக்கு அறிமுகப்படுத்தினான். எல்லோரும் கூடி மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்தனர். அதற்கிடையே, கிராஷியானோ நெரிஸா இருவர்க்கும் ஒரு சச்சரவு நிகழ்ந்தது. “இவள் திருமணத்தின் போது கொடுத்த கணையாழி எங்கே என்று கேட்கிறாள். அதை வழிக்கறிஞருடன் வந்தவருக்குக் கொடுத்ததாகச் சொன்னேன். அதை எப்படிப் பிரிந்தீர்? என்று இவள் கேட்கிறாள். வேறொன்றும் இல்லை,” என்று கிராஷியானோ கூறினான். “உயிருள்ள வரைக்கும் அதைப் பிரிவதில்லை என்று அவர் உரைத்த சூள் பொய்த்து விட்டது. அதை வேறொரு பெண்ணுக்குத்தான் கொடுத்திருப்பார். அதை நான் அறிவேன்,” என்றாள் நெரிஸா. “இல்லை இல்லை. உன் அளவு உயரமுள்ள ஓர் ஆண்மகனுக்கே அதை நான் கொடுத்தேன். இஃது உண்மை. அந்தோனியோவின் அருமையான உயிரைக் காப்பாற்றினார் அந்தச் சிறந்த வழக்கறிஞர். அந்த உதவியை நாம் மறக்கலாமா! அவருடன் வந்தவர் என் கணையாழியைக் கேட்ட போது, கொடுக்கமாட்டேன் என்று மறுப்பது தகுதியா?” என்று கிராஷியானோ உண்மையை உரைத்தான்.

இவற்றைக் கேட்ட போர்ஷியா கிராஷியானோவை நோக்கி, “நீ செய்தது குற்றமே. உன் மனைவி அளித்த கணை யாழியை நீ பிரிந்தது குற்றமே. என் காதலர் அவ்வாறு ஒரு காலும் செய்ய இசையார், என்று கூறினாள். உடனே கிராஷியானோ,”அம்மையே! அவர்தாம் முதலில் வழக்கறிஞர்க்குத் தமது கணையாழியைக் கொடுத்தார். அவரைப் பின்பற்றியே நானும் அவ்வாறு செய்தேன்", என்றான்.

போர்ஷியா சினங்கொண்டவள் போல், “அவரும் அவ்வாறு செய்தாரா? அப்படியானால், நெரிஸா கூறுவது உண்மையே. ஒரு பெண்ணுக்கு அவரும் அதைக் கொடுத்திருக்கக் கூடும்,” என்று பஸானியோவை வெறுத்துக் கூறினாள். பஸானியோ அப்போது உற்ற வருத்தம் பெரிது. “உன் மனதைப் புண்படுத்திவிட்டதற்காக நான் மிகவும் வருந்துகின்றேன். அந்த வழக்கறிஞர் நமக்குச் செய்த அரிய உதவிக்காக நான் மூவாயிரம் பொன் தர முயன்றேன். அவர் அதைப் பெற மறுத்துவிட்டு அந்தக் கணையாழியையே கேட்டார். நீ அங்கே இருந்திருந்தால், அதைக் கொடுத்து விடுமாறு நீயே வற்புறுத்தியிருப்பாய்,” என்று அவன் போர்ஷியாவைப் பார்த்துக் கூறினான். “அந்தோ! இவ்வளவு துன்பங்களுக்கும் காரணமாக உள்ளவன் நான்தானே,” என்று அந்தோனியோ வருந்தினான்.

“தாங்கள் ஒன்றும் அதற்காக வருந்தவேண்டா,” என்று போர்ஷியா அந்தோனியோவுக்குக் கூறினாள். “உன் கணவனுக்காக நான் எனது உடலையே ஈடு கொடுத்தேன். என்னைக் காப்பாற்றிய அறிஞர்க்குத் தன் மோதிரத்தை அவன் கொடுத்தான். இனி என்றும் உன் கணவன் இத்தகைய தவறு செய்யான் என்று உறுதி கூறுகிறேன்,” என்று அந்தோனியோ சொன்னான். “தங்கள் உறுதி மொழி நன்று; இக்கணையாழியை அவர்க்குக் கொடுங்கள்; இதையேனும் போற்றி வைத்திருக்குமாறு கூறுங்கள்,” என்று சொல்லி, அந்தக் கணையாழியையே அவள் அந்தோனியோ கையில் கொடுத்தாள். பஸானியோ அதைக் கண்டான் “தான் வழக்கறிஞர்க்குக் கொடுத்த கணையாழி போர்ஷியாவிடம் எவ்வாறு வந்து சேர்ந்தது,” என்று எண்ணி எண்ணி வியந்தான். அப்போது போர்ஷியா உண்மையைக் கூறினாள்; அந்தோனியோவும் பஸானியோவும் கொண்ட மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. தன் மனைவியின் அறிவையும், ஆற்றலையும் பஸானியோ பலவாறு போற்றிப் புகழ்ந்து பாராட்டினான்.

அப்போது, போர்ஷியா தன் கையிலிருந்த சில கடிதங்களை அந்தோனியோவிடம் கொடுத்தாள். அவற்றில், அவனுடைய கப்பல்களைப் பற்றிய செய்தி இருந்தது. கப்பல்கள் அழியவில்லை என்றும் எல்லாம் வெனிஸ் வந்து சேர்ந்துவிட்டன என்றும், அவை தெரிவித்தன. இச்செய்தியை அறிந்த அனைவரும் அளவிலா உவகை அடைந்தனர்.

தங்களை இன்னார் என்று அறிந்துகொள்ளாமல் வழக்கறிஞர் என்றும், அவருடன் வந்தவர் என்றும் எண்ணிப் புகழ்ந்த கொழுநரைக் குறித்துப் போர்ஷியாவும் நெரிஸாவும் நகைத்து நகைத்து மகிழ்ந்தார்கள். ஆண் உடை உடுத்து முறைமன்றம் எய்தித் தங்களால் முடியாத அருஞ்செயலை முடிப்பித்த மனைவியரைக் குறித்துப் பஸானியோவும் கிராஷியோனாவும் எண்ணி எண்ணி வியந்தார்கள். கணை யாழியால் வந்த பிணக்கமும் இணக்கமும் அவர்களுக்கே ஓர் இன்பக் கதையாக விளங்கின. இவை எல்லாவற்றிற்குங் காரணமாக இருந்த வெனிஸ் வணிகன் அந்தோனியோவை அவர்கள் வாழ்த்தினார்கள்.

அடிக்குறிப்புகள்

1. venice

2. Shylock

3. Antonio

4. Bassanio

5. Portia

6. Belmot

7. Gratiano

8. Nerissa


Comments


Subscribe here to get my latest posts

Thanks for submitting!

© 2023 Powered by Tamil Bookshelf

  • Facebook
  • Twitter
bottom of page