சேக்சுபியர் கதைகள் VOL-3
- Tamil Bookshelf
- Jan 12, 2022
- 1 min read
கா. அப்பாத்துரையார்
விரும்பிய வண்ணமே மற்போரில் ஆர்லண்டோ¹ வெற்றி பெறுதல்
பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதியை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான்; அவனுடைய தம்பி பிரடரிக்² என்பவன் அவனுக்குப் பகைவன் ஆனான். பிரடரிக் தமையனைக் காட்டிற்குத் துரத்தி விட்டுத்தானே அரசனாக ஆளத் தொடங்கினான்.
நாட்டை இழந்த மன்னனுக்கு நெருங்கிய நண்பர் பலர் இருந்தனர். அவர்களும் அவனுடன் காட்டிற்குச் சென்றார்கள். அந்த மன்னன் மீது அவர்கள் கொண்டிருந்த பேரன்பினால், தங்கள் செல்வத்தைத் துறந்து காட்டில் வாழ்வது அவர்களுக்கு இன்பமாகவே இருந்தது. இயற்கை வாழ்வு அவர்கள் நெஞ்சில் அன்பை வளர்த்தது. காட்டில் வாழும் மான் முதலிய விலங்குகளை அவர்கள் கொல்லவில்லை; அவைகளை அவர்கள் அன்போடு போற்றினார்கள். அங்குக் கிடைக்கும் காய்கனி முதலியவை களைத் தங்கள் உணவாகக் கொண்டார்கள். மன்னனும் அவர்களோடு கூடி மகிழ்ந்து காலத்தைப் போக்கி வந்தான்.
இவ்வாறு காட்டில் காலங்கழித்த மன்னனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் ரோஸலிண்ட்.³ பிரடரிக் அவளைக் காட்டிற்கு அனுப்பவில்லை. தன் மகளாகிய ஸீலியா4 என்பவளுக்குத் தோழியாக இருக்குமாறு தன் அரண்மனையில் நிறுத்திக் கொண் டான். தந்தை பெரிய தந்தைக்குச் செய்த தீங்கு ஸீலியாவுக்குத் தெரியும். அவள் தன்னுடன் இருந்த ரோஸலிண்ட் வருந்தும்போதெல்லாம் அவளுக்குத் தேறுதல் கூறிவந்தாள்; அவளை மகிழ்விப்பதற்காகத் தன்னால் இயன்ற முயற்சி யெல்லாம் செய்துவந்தாள்.
ஒருநாள் பிரடரிக் மன்னன் முன்னிலையில் மற்போர் ஒன்று நிகழ்ந்தது. அதனைக் காண்பதற்காக ரோஸலிண்ட், ஸீலியா இருவரும் சென்றனர். புகழ்பெற்ற ஒரு பெரிய வீரனுடன் ஓர் இளைஞன் மற்போர் செய்யக் காத்திருப்பதைக் கண்டனர். அரசன் இவர்களைக் கண்டதும் அழைத்தான். அழைத்து, “இப்போரில் ஈடுபடும் இளைஞனைக் குறித்து நான் மிக மிக வருந்துகின்றேன். இந்த வீரனோ, பெயர் பெற்றவன்; பலரைக் கொன்று வெற்றி பெற்றவன். அவனோ சிறுவன்; ஒன்றும் அறியாதவன். நீங்கள் அவனை வரவழைத்து இன்மொழிகள் கூறித் தடுக்க முயற்சி செய்யுங்கள். அவன் இந்த மற்போருக்கு இரையாவது நன்றன்று,” என்று சொன்னான்.
ரோஸலிண்ட், ஸீலியா இருவரும் இளைஞனை வரவழைத்தனர். முதலில் ஸீலியா அவனிடம் பேசினாள்; மற்போரில் ஈடுபடாதவாறு தடுக்க முயன்றாள். பிறகு, ரோஸலிண்ட் அவனை நோக்கி, “நீ இந்த வீரனோடு போர்புரிவது எங்களுக்கு வருத்தத்தைத் தருகிறது. உன்னுடைய வாழ்வு வீணாக அழிந்து விடுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை; நன்றாக எண்ணிப் பார்த்து, மற்போரில் அகப்படாமல் விலகுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என்று வேண்டினாள். இம்மொழிகள் இளைஞனுக்கு ஊக்கம் ஊட்டின. “எவ்வகையிலும் நான் வெற்றி பெற்று என் வலிமையை இவர்களுக்கு அறிவித்தல் வேண்டும்,” என்று அவன் தன்னுள் எண்ணினான். “நீங்கள் என்னிடம் காட்டும் அன்புக்காக நன்றி கூறுகின்றேன். ஆனால், உங்கள் விருப்பத்தின்படி நான் விலகமாட்டேன். என்மீது சினம் கொள்ளல் வேண்டா. வெற்றி பெறுமாறு என்னை வாழ்த்துங்கள். ஒருகால் நான் தோற்று மாள நேர்ந்தால், என்னைக் குறித்துக் கவலைப்படும் நண்பர் ஒருவரும் எனக்கு இல்லை. ஆகையால் வெற்றி ஆயினும் ஆகுக; தோல்வி ஆயினும் ஆகுக. நான் பின் வாங்குதல் இல்லை,” என்று அஞ்சாது மறுமொழி உரைத்தான்.
மற்போர் தொடங்கிவிட்டது. ஸீலியாவும் ரோஸலிண்டும் கவலையோடு நோக்கிக் கொண்டிருந்தனர். ஸீலியாவைவிட ரோஸலிண்ட் மிகுந்த கவலை கொண்டாள். தன்னைக் குறித்துக் கவலைப்படும் நண்பர் ஒருவரும் தனக்கு இல்லை என்று இளைஞன் கூறிய சொற்கள் அவள் உள்ளத்தில் பதிந்து கிடந்தன. தானும் அவனைப்போலவே திக்கற்றவளாக இருத்தலை எண்ணி மனம் உருகினாள்; அவளுடைய அன்பும் இரக்கமும் மிகுந்தன.
இவ்விருவருடைய அன்பும் ஊக்கம் அளித்தமையால், அவன் மனத்திட்ப முடையவனாய் மற்போர் செய்து, இணையிலா வெற்றி பெற்றான். அவனோடு பொருத வீரன் உடல்முழுதும் புண்பட்டு வருந்திச் சோர்ந்தான்.
பிரடரிக் மன்னன் இளைஞனுடைய வீரத்தை மிகப் போற்றினான். “நீ யார் மகன்? உன் பெயர் என்ன?”என்று அவனை அன்போடு வினவினான். “பெருந்தகையே! சர்ரோலண்ட்5 என்ப வருடைய இளைய மகன் நான். என் பெயர் ஆர்லண்டோ,” என்று இளைஞன் வணங்கி விடையிறுத்தான்.
சர் ரோலண்ட் என்ற பெயரைக் கேட்டதும், அரசன் கொண்டிருந்த அன்பு அகன்றது; அவன் உள்ளத்தில் வெறுப்பு நிறைந்தது. “என் தமையன் காட்டிற்குச் சென்றபோது அவனுடன் சென்று வாழ்ந்த நண்பர்களுள் சர்ரோலண்ட் என்பவனும் ஒருவன் அல்லனோ? இந்த இளைஞன் அவனுடைய மகனாக இருக்கின்றானே!” என்று வருந்தித் தன் அரண்மனை சேர்ந்தான்.
மகளிர் இருவரும் காட்டில் வாழ்தல்
தன் தந்தைக்கு நண்பனான சர்ரோலண்ட் என்பவன் மகனே இவ்விளைஞன் என்று அறிந்த ரோஸலிண்ட் பெரிதும் உவந்தாள்; ஸீலியாவுக்குத் தன் மகிழ்ச்சியை அறிவித்தாள். இருவரும் அவனிடம் சென்றனர். தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கச் சென்றவர்கள் அவன் முகவாட்டத்தைக் கண்டு வருந்தினார்கள். அரசன் வெறுப்பே அவன் வருத்தத்திற்குக் காரணமென்று அறிந்தார்கள். “உன்னுடைய வீரத்தை வியந்து வாழ்த்துகிறோம்; உனக்குக் கவலை ஒன்றும் வேண்டா; மகிழ்ந்திரு,” என்று அவனைத் தேற்றினார்கள். அப்போது ரோஸலிண்ட் தன் கழுத்தில் அணிந்திருந்த மணிவடத்தை அவனுக்குத் தந்து, “இதனினும் சிறந்த பரிசிலை உனக்குக் கொடுக்க முடியவில்லையே என்று நான் மிகவும் வருந்துகின்றேன்,” என்று கூறினாள்; பிறகு இருவரும் அரண்மனைக்குத் திரும்பினர்.
ரோஸலிண்ட் அடிக்கடி ஆர்லண்டோவைப் பற்றித் தன் தங்கையிடம் பேசினாள். அவள் அவன் மீது காதல் கொண்டிருத்தலை ஸீலியா அறிந்தாள்.
ஸர் ரோலண்டின் மகனைக் கண்டது முதல் அரசனுக்குத் தமையன் மீதுள்ள வெறுப்பு வளர்ந்து வந்தது. தமையனுடைய மகளாகிய ரோஸலிண்டைப் பற்றி யாரேனும் புகழ்ந்து பேசினால், அஃது அவனுடைய பொறாமையைத் தூண்டும். ஒருநாள் அவன் ஸீலியாவின் அறைக்குச் சென்றபோது, ரோஸலிண்ட் ஆர்லண்டோவைப் பற்றிப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அப்பேச்சைக் கேட்ட மன்னன் வெகுண்டு, “ரோஸலிண்ட்! நீயும் காட்டிற்குச் சென்று உன் தந்தையோடு இரு; இங்கு இருத்தல் கூடாது,” என்று கட்டளையிட்டான். ஸீலியா மிக்க மனவருத்தம் அடைந்தாள். தமக்கையாகிய ரோஸலிண்ட் தன்னைவிட்டுப் பிரிதல் கூடாது என்று தந்தையைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். பிரடரிக் தன் மகளின் வேண்டுகோளையும் பொருட்படுத்தவில்லை; ரோஸலிண்ட் காட்டிற்குச் செல்லவேண்டும் என்று பிடிவாதமாகக் கூறினான்.
தந்தையின் மனத்தை அறிந்த ஸீலியா தானும் தமக்கை யுடன் காட்டிற்குச் செல்லத் துணிவு கொண்டாள். இருவரும் அன்றிரவு ஆர்டென்⁶ என்ற காட்டிற்குப் புறப்பட்டனர். அவ்விடத்தில் தந்தையைக் காண வேண்டுமென்பது ரோஸலிண்ட் விருப்பம். வழியில் ஏதேனும் இடையூறு நேராதவாறு தடுப்பதற்காக, வழக்கமான உடைகளை அவர்கள் உடுக்கவில்லை. ரோஸலிண்ட் ஆண் உடை உடுத்தாள்; கனிமீட்⁷ என்று பெயர் வைத்துக் கொண்டாள். ஸீலியா அலைனா⁸ என்று பெயர் பூண்டு, நாட்டுப் புறத்துச் சிறுமிபோல் தோன்றினாள். இவ்வாறாக நெடுந்தூரம் நடந்து சென்ற அவர்கள் அக்காட்டை அடைந்தார்கள்.
அங்கே அவர்கள் பசியால் வருந்தினார்கள். ஸீலியா மிகக் களைப்பு அடைந்தவளாய்ச் சோர்ந்தாள். ரோஸலிண்ட் தன் நிலையை வெளியே சொல்லாதவளாய் வருந்தினாள்; என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தாள்; அப்போது அவ்வழியே ஒருவன் வரக்கண்டாள். அவனிடம் தந்தையின் நிலைமையைக் கூறி எங்கிருந்தாவது சிறிது உணவு பெற்றுத் தருமாறு வேண்டினாள். அவன் ஓர் இடையனுடைய வேலையாள். அவனிடம் உணவு சிறிதும் இல்லை. அவன் அவர்களைத் தன் தலைவனிடம் அழைத்துச் சொன்றான். தலைவனாகிய இடையன் தன்னுடைய வீட்டையும் ஆட்டையும் விற்று விடமுயன்றான். அதனை அறிந்த அவர்கள் அவற்றை விலைகொடுத்து வாங்கிக்கொண்டு, உண்ண உணவும் இருக்க இல்லமும் கிடைக்கப் பெற்றவளாய் மகிழ்ந்தார்கள்; தந்தையைத் தேடிக் காணும் வரை அங்கு இருக்கத் துணிந்தார்கள்.
ரோஸலிண்ட் இடையனாகவும், ஸீலியா இடைச்சி யாகவும் வாழ்ந்த வாழ்வு அவர்களுக்கே புதுமையாக இருந்தது. ஆனாலும் ரோஸலிண்ட் ஆர்லண்டோவை மறக்கவில்லை; அடிக்கடி அவனைக் குறித்து எண்ணி வந்தாள்.
ஆர்லண்டோ அரசனுடன் வாழ்தல்
ஆர்லண்டோவின் தந்தை இறந்துவிட்டார்: அவர் இறக்கும் போது, மூத்த மகனாகிய ஆலிவர்9 என்பவனைப் பார்த்து, ‘நீதான் உன் தம்பி ஆர்லண்டோவைக் காப்பாற்ற வேண்டும்,’ என்று கூறினார். ஆனால், ஆலிவர், அதற்கு முற்றிலும் மாறாக நடந்தான்; தம்பியின்மேல் பொறாமை கொண்டான். நன்மை ஒன்றும் செய்திலன்; தீமை மிகப்பல செய்தான். மற்போரில் ஆர்லண்டோவை ஈடுபடுமாறு வற்புறுத்தியவனும் இவனே. ஆர்லண்டோ அறிவிற் சிறந்தவனாக விளங்கினான். அவன் அண்ணனுடைய கொடுமையை நினைந்து நினைந்து வருந்தினான். அவன் வெற்றிமேல் வெற்றி பெற்று ஊக்கமுடன் வாழ்வதைக் கண்டு ஆலிவர் மனங் கொதித்தான்.
ஒருநாள் ஆர்லண்டோ இல்லாதபோது, “அந்தப் பயலை நான் தொலைத்துவிடவேண்டும். அதற்கு வழிகண்டேன். அவன் உறங்கும் போது அந்த அறைக்குத் தீ வைத்துக் கொளுத்தி விடுவேன்,” என்று ஆலிவர் வாய்விட்டுச் சொல்லிக் கொண்டான். இதைக் கேட்டறிந்தான் ஆதம்¹⁰ என்னும் வேலையாள்; ஆர்லண்டோ வீடு திரும்பியதும் அவனுக்குத் தெரிவித்தான். என்ன செய்வது என்று இருவரும் எண்ணி ஒரு முடிவிற்கு வந்தனர்.
அந்த முடிவின்படி, ஆர்லண்டோ, ஆதம் இருவரும் அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர்; நெடுந்தூரம் அலைந்தனர்; இறுதியில் ஆர்டென் காட்டிற்கே வந்து சேர்ந்தனர். வழி நடந்த களைப்பு ஒருபுறம்; பசியின் கொடுமை ஒரு புறம்; இவற்றால் அவர்கள் வாடினார்கள் ஆதம் வயதானவன்; ஆகையால் அடி எடுத்துவைக்கவும் முடியாத அவ்வளவு சோர்வு உற்றான்; கீழே விழுந்தான், “பசி மிகக் கொடியது; என்னை வாட்டுகின்றது; எனக்கு இடுகாடு இதுதான் போலும்,” என்று கூறினான். உடனே, ஆர்லண்டோ அவனைத் தூக்கிச் சென்று, மரநிழலில் இருக்கச் செய்து, “இதோ வந்துவிட்டேன்; நான் உணவு கொண்டுவந்து உன்னைக் காப்பாற்றுவது உறுதி. நீ அஞ்சாதே,” என்று சொல்லிவிட்டு விரைந்து ஓடினான்.
விரைந்து ஓடின ஆர்லண்டோ ஓர் இடத்தில் சிலர் அமர்ந்து உணவு உண்பதைக் கண்டான். “அந்த உணவை நீங்கள் உண்ணலாகாது; பொறுங்கள்,” என்று சொல்லிக்கொண்டே, தன்வாளை உறையிலிருந்து எடுத்துக்காட்டி அச்சுறுத்த முயன்றான். அங்கு இருந்தவர்களில் பிரடரிக் தமையனாகிய அரசனும் ஒருவன். அவன் ஆர்லண்டோவின் செயலைக் கண்டு வியந்தான். “நீ யார்? ஏன் இப்படிச் செய்கின்றாய்?” என்று வினவினான். “பசியின் கொடுமையால் இவ்வாறு செய்கிறேன்” என்று ஆர்லண்டோ விடை கூறினான். “எங்களுடன் நீயும் அமர்ந்து உண்ணலாமே,” என்றான் அரசன். இச்சொற்களைக் கேட்டதும் ஆர்லண்டோ வெட்கமுற்று, வாளை உறையில் இட்டு, அரசரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான், “ஐயா, இவ்வாறு அச்சுறுத்தினால் உணவு பெற முடியும் என்றும், இங்கே வாழ்கின்றவர்கள், அப்படிப்பட்ட கீழ்மக்களாக இருப்பார்கள் என்றும் தவறான எண்ணங் கொண்டிருந்தேன்,” என்று கூறினான்.
“அப்பா! எங்களைக் காட்டு விலங்குகள் என்று கருதவேண்டா. நாங்கள் பட்டணங்களில் வாழ்ந்த மக்களே; ஏழைகளின் துன்பம் எங்களுக்குத் தெரியும். விருந்தோம்பும் அறமும் எங்களுக்குத் தெரியும். ஈகையும் இரக்கமும் எங்களுக்குப் புதியன அல்ல. எங்களோடு உண்டு பசி தீர்க. பிறகு எல்லாம் பேசலாம்,” என்று அரசன் அவனை உண்ணுமாறு அழைத்தான்.
“ஐயா! உங்கள் அன்பே அன்பு! நான் எனக்காக உணவு கேட்கவில்லை. என்னோடு நடந்து வந்து சோர்ந்து பசியால் நலிந்து இறக்குந் தறுவாயில் உள்ள கிழவன் ஒருவனுக்காகவே உணவு கேட்டேன்,” என்று ஆர்லண்டோ தெரிவித்தான். “அப்படியானால் விரைந்து சென்று அவனை அழைத்து வருக; அவன் வருகின்ற வரைக்கும் நாங்களும் உண்ணாமல் காத்திருப்போம். விரைந்து செல்க,” என்று வேண்டினான் அரசன். ஆர்லண்டோ கார் எனக் கடிது சென்றான். கிழவனைத் தூக்கிக் கொண்டு விரைந்து மீண்டான். கிழவன் கண்திறந்து நோக்கினான். அனைவரையும் கண்டான். அரசனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி ஆதமும் ஆர்லண்டோவும் உண்டனர். அப்போது அரசனுடைய நண்பன் ஒருவன் இன்னிசை பாடினான். வாயுணவும் செவியுணவும் பசியையும் களைப்பையும் போக்கின; ஊக்கமும் மகிழ்ச்சியும் அளித்தன.
அரசன் ஆர்லண்டோவை அன்போடு நோக்கி “உன் வரலாற்றை இனிக்கூறுக,” என்றான். தான் சர் ரோலண்டின் மகன் என்பதை அவன் அறிவித்தவுடன், அரசன் அன்புமிக்கவனாய், தனக்கும் சர் ரோலண்டுக்கும் இருந்த நட்பை நினைந்து உருகினான்; ஆர்லோண்டாவையும் கிழவனையும் தன்னுடன் இருக்கச் செய்தான்.
ரோஸலிண்ட் தந்தையைக் காணுதல்
அங்கே இருந்துவரும் நாளில், ஆர்லண்டோ ரோஸலிண்ட் என்பவள் மீது தான் கொண்ட அன்பைப் பெருக்கினான்; நாள்தோறும் பலமுறையும் அவளை நினைத்துக் கொண்டான்; பல பாட்டுக்களையும் பாடினான். அக்காட்டில் இருந்த பல மரங்களிலும் அவளுடைய பெயரைப் பொறித்து வந்தான்.
அரசன் முதலானவர்கள் இருந்த இடம் காடு. ஆகையால் அங்கே இடையர்கள் பலர் வந்து போவது உண்டு. இடையர்களில் ஒருவனாக வாழ்ந்துவந்த ரோஸலிண்ட், தன் பெயர் இவ்வாறு மரங்களில் பொறிக்கப் பட்டிருதலை அறிந்தாள். “இவ்வாறு யார் எழுதி வைத்திருக்கக்கூடும்? அவர் நோக்கம் என்ன? இதன் காரணத்தை அறிவது எப்படி?” என்று பலவாறு ரோஸலிண்டும் ஸீலியாவும் எண்ணத் தொடங்கினார்கள்.
ஒருநாள் அவர்கள் காட்டில் சென்றுகொண்டிருந்தபோது, இளைஞன் ஒருவன் வருதலைக் கண்டார்கள். அவன் நெருங்கி வந்தவுடன், கழுத்தில் அணிந்திருந்த மணிவடத்தைக் கண்டு, அவன் ஆர்லண்டோ என்பதை அறிந்தார்கள். ஆனால், இவர்கள் யார் என்பதை அவன் தெரிந்து கொள்ளவில்லை. யாரோ ஓர் அழகான இடைப்பையன் என்று எண்ணி, அவன் ரோஸலிண்டுடன் பேசினான். அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது, “யாரோ ஒரு பித்தன் எங்கள் மரங்கள் எல்லாவற்றிலும் என்ன என்னவோ எழுதிப் பாழ்படுத்துகிறான். அவனைக் கண்டால் நான் வாளாவிடேன்,” என்று ரோஸலிண்ட் கூறினாள்.
“நான்தான் அந்தப் பித்தன்”, என்றான் ஆர்லண்டோ, “அத்தன்மையான பித்து உன்னிடம் இருப்பதாகத் தெரிய வில்லையே,” என்றாள் ரோஸலிண்ட், “உண்மையாகக் கூறுகின்றேன், அப்பித்து என்னிடம் உள்ளது. அதற்காக எனக்கு நீங்கள் சொல்லக்கூடிய நன்மொழிகள் என்ன?” என்று ஆர்லண்டோ கேட்டான். “நீ நாள்தோறும் எங்களிடம் வரமுடியுமானால், அதை ஒழிக்க வழி கூறுகின்றேன். அவ்வாறு வந்தால், நாளடைவில் நீயே வெட்கமடையும் படியாகச் செய்துவிடுவேன்; உன்னுடைய பித்து ஒழியும்,” என்று ரோஸலிண்ட் கூறினாள்.
அவளுடைய பேச்சில் அவனுக்கு நம்பிக்கை ஏற்பட வில்லை. ஆனாலும், அவ்வாறே வருவதாக அவன் உடன் பட்டான்; நாள்தோறும் அவர்கள் இருந்த வீட்டிற்கு வந்து வந்து போனான். அவன் மனம் சிறிதும் மாறவே இல்லை. அவன் அவர்களோடு நாள்தோறும் பழகி விளையாடிக் கொண்டு வந்தான். ஆனால், அந்த இடைப்பையன்தான் ரோஸலிண்ட் என்பதை அறியவே இல்லை; தான் ரோஸலிண்ட் மீது கொண்டிருந்த அன்பை மறக்காமல் சொல்லிக் கொண்டிருந்தான். ரோஸலிண்ட் அவன் உள்ளத்தில் இருந்த உண்மை அன்பை உணர்ந்துகொண்டாள்; இவ்வாறே நாட்கள் பல கழிந்தன.
ஆர்லண்டோவின் பழக்கத்தால், தன்னுடைய அன்பான தந்தை வாழுமிடம் வாழும்வகை முதலியவைகளை ரோஸலிண்ட் தெரிந்து கொண்டாள். எனினும், அந்த அரசனே தன்னுடைய தந்தை என்பதை அவனுக்குத் தெரிவிக்கவில்லை. ஒருநாள் ரோஸலிண்ட் காட்டு வழியில் தந்தையைக் கண்டாள். அரசன் தன்னுடைய மகளைப் பற்றி ஒன்றும் அறிந்துகொள்ளவில்லை. அவள் ஆண் உடை உடுத்தி இருந்தமையால், அவளை ஓர் இளைஞன் என்றே அவன் கருதினான். “தம்பி! நீ யார்?” என்று அவன் ரோஸலிண்டைக் கேட்டபோது, அவள், “ஐயா! தங்களைப்போல் நானும் உயர்குடியில் பிறந்தவனே,” என்றாள். இவ்விடையைக் கேட்ட அரசன் வியந்தான். “இவனைப் பார்த்தால் இடையனாகத் தெரிகின்றான்; நம்மைப் போல உயர் குடியில் பிறந்தவன் என்று கூறுகின்றான்,” என்று சிரித்தான். ரோஸலிண்ட் தொடர்ந்து ஒன்றும் கூறாமல் வாளா இருந்தாள். “இப்போது உண்மையைக் கூறாமல் இருத்தல் வேண்டும்; பொறுத்திருந்து பிறகு கூறலாம்,” என்று அவள் எண்ணினாள்; ஒன்றும் கூறாமல் வந்து விட்டாள்.
Comments