top of page
library_1.jpg

சேக்சுபியர் கதைகள் VOL-4

கா. அப்பாத்துரையார்



ஆலிவர் ஸீலியாவைக் காதலித்தல்

ஆர்லண்டோ வழக்கம்போல் ரோஸலிண்ட் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தான். ஒருநாள் போகும் வழியில் மண்மீது படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஒருவனைக் கண்டான். அவன் கழுத்தில் பெரிய பாம்பு ஒன்று சுற்றியிருத்தலையும் பார்த்தான். ஆர்லண்டோ நெருங்கிவரக் கண்ட அப்பாம்பு அவன் கழுத்தை விட்டு விரைந்து ஓடி மறைந்து கொண்டது. அவன் இன்னும் நெருங்கிச் சென்றபோது, பெண்சிங்கம் ஒன்றைக் கண்டான். தூங்குகின்றவன் விழித்து எழுந்தவுடன் அவனை அடித்துக் கொல்வதற்காக அது காத்திருந்தது, ஆர்லண்டோ அஞ்சாமல் சென்று தூங்குகிறவன் யார் எனக் கண்டான்; அவன் தன் அண்ணனாகிய ஆலிவர்தான் என்று அறிந்தான். அப்போது, அவன் மனத்தில் பல எண்ணங்கள் தோன்றின. அவன் தனக்குப் பல தீங்கு செய்தது, தன்னைக் கொளுத்திக் கொல்ல முயன்றது, அவனுடைய கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் தானும் வேலையாளும் காட்டிற்கு வந்தது முதலிய எல்லாவற்றையும் அவன் நினைத்தான். “இத்தகைய கொடியவனுக்கு ஏன் உதவி செய்தல் வேண்டும்? அவனைப் பாம்பு கடித்தாலும் என்ன? சிங்கம் கொன்றாலும் என்ன?” என்று முதலில் எண்ணினான். ஆயினும் இரக்கமுள்ள அவன் மனம் உடனே மாறிவிட்டது; உடன் பிறந்த அண்ணன் என்ற அன்பு வந்தது. உடனே அவன் தன் வாளை உருவிக்கொண்டு சென்று ஆண்மையுடன் சிங்கத்தை எதிர்த்தான்; அதனைக் கொன்றான். அவ்வாறு அதனை எதிர்த்துக் கொன்றபோது அஃது அவனுடைய கையில் கீறிப் புண்படுத்திவிட்டது.

அவன் சிங்கத்தை எதிர்த்துக் கொண்டிருந்தபோது ஆலிவர் விழித்து எழுந்து தன் தம்பியைப் பார்த்தான். நிகழ்ந்தன எல்லாம் அறிந்தான்; அவன் ஆற்றிய அரிய உதவியை எண்ணி எண்ணி நெஞ்சம் நெக்கு உருகினான்; தான் செய்த கொடுமைகளை நினைந்து நினைந்து மனம் மயங்கி வருந்தினான்; குற்றம் உணர்ந்தான்; குணவான் ஆனான்; “அன்பு நிறைந்த தம்பி! எனது பொறாமையால் யான் செய்த எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்,” என்று வேண்டினான். ஆர்லண்டோ அண்ணன் மனம் மாறியதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தான். பழையன எல்லாம் மறந்து விட்டதாக அண்ணனிடம் கூறினான். எங்கிருந்தாலும் தம்பியைத் தேடிக்கொல்லும் துணிவு கொண்டு காட்டிற்கு வந்த ஆலிவர் அன்று முதல் உண்மையான அன்புடையவனாய் ஆர்லண்டோவுடன் கூடிவாழத் தொடங்கினான்.


ஆர்லண்டோவின் கைப்புண்ணிலிருந்து இரத்தம் பெருகிற்று; மிகுதியாகப் பெருகிற்று. அக்காரணத்தால், அவன் அன்று ரோஸலிண்ட் இருப்பிடத்திற்குச் செல்லவில்லை; தனக்கு உற்றதை ரோஸலிண்டுக்கு அறிவிக்குமாறு அண்ணனை அனுப்பினான்.

ஆலிவர் அவ்விடம் சென்று அவர்களைக் கண்டு நிகழ்ந்தன எல்லாம் கூறினான்; தான் செய்த தீங்குகளையும் அவன் செய்த பேருதவியையும் விளக்கமாக உரைத்தான்; அவன் கையினின்றும் பெருகிய இரத்தத்தைத் துடைத்த சிறு துணியைக் காட்டினான். அச்சிறு துணியைக் கண்டதும், ரோஸலிண்ட் மயங்கிச் சோர்ந்தாள். ஆனால், ஆலிவர் மனம் உருகிப் பேசின பேச்சைக் கேட்ட ஸீலியா அவன் மீது பேரன்பு கொண்டாள்; அவளுடைய அன்பைக் குறிப்பால் அறிந்த ஆலிவரும் அவளை மணக்க விரும்பினான். ரோஸலிண்ட் மயக்கம் தெளிந்து எழுந்தபின், “எனக்கு உண்மையாக மயக்கம் வரவில்லை. மயக்கம் வந்ததுபோல் நடித்துக் காட்டினேன். இதை ஆர்லண்டோவுக்குச் சொல்லுக,” என்றாள்.

ஆலிவர் மீண்டு சென்றதும், தன் தம்பிக்கு அவ்வாறே ரோஸலிண்டின் மயக்கத்தைப் பற்றிக் கூறினான்; தான் ஸீலியாமீது காதல் கொண்டதையும் உரைத்தான்; “நான் அவளை மணந்து கொண்டு இக்காட்டிலேயே வாழ ஆவல் கொண்டிருக்கிறேன்,” என்று தெரிவித்தான். ஆர்லண்டோ அவ்விருப்பம் நிறைவேறுமாறு தான் முயற்சி செய்வதாகக் கூறினான். இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, ரோஸலிண்ட் வருதலைக் கண்டான் ஆர்லண்டோ. “அண்ணா இது நல்ல சமயம் இவன் வந்து விட்ட படியால், இவனுடைய தங்கை தனியாக இருப்பாள். நீ சென்று அவள் திருமணத்திற்கு உடன்படுகின்றாளா என்று தெரிந்துகொண்டு வரவேண்டும்,” என்று அண்ணனிடம் சொன்னான். ஆலிவரும் உடனே புறப்பட்டுச் சென்றான்.

ரோஸலிண்ட் வந்ததும், அவனுடைய கைப் புண்ணைக் குறித்துக் கேட்டு அறிந்தாள். பிறகு, ஆலிவர் காதலைப்பற்றிய பேச்சு நிகழ்ந்தது. அப்போது ஆர்லண்டோ, “நாளையே அவர்கள் இருவர்க்கும் திருமணம் நடைபெறும். ஆனால், எனக்கும் ரோஸலிண்டுக்கும் திருமணம் என்று நடைபெறுமோ? நாளையே அதுவும் நடைபெறக் கூடுமானால், எவ்வளவு மகிழ்ச்சி அடைவேன்,” என்று உண்மையாகவே தான் கொண்ட பேராவலைத் தெரிவித்தான். “நீ உண்மையாகவே காதல் கொண்டு ரோஸலிண்டை மணக்க விரும்பினால், என்னால் ஓர் உதவி செய்ய முடியும். எனக்கு என்னுடைய சிறிய தந்தையார் கற்றுக்கொடுத்த மந்திர வலியால் நாளையே அவளை இங்கு வருவிக்கின்றேன்,” என்று ரோஸலிண்டு கூறினாள். ஆர்லண்டோ அதனை நம்பவில்லை. ரோஸலிண்ட் அவனுக்கு உறுதி கூறினாள்.

ஆலிவர் ஸீலியாவின் உடன்பாடு பெற்று மீண்டான். ஆர்லண்டோ அவனுடன் சென்று அரசனிடம் எல்லாம் கூறினான்.

இழந்த உரிமை எய்தப் பெறுதல்

திருமணங்கள் இரண்டனையும் காண்பதற்காக அரசனும் நண்பர்களும் கூட்டினார்கள்; மணமகள் ஒருத்தி இருத்தலும் மற்றொருத்தி இல்லாமையும் கண்டு வியந்தார்கள்! “இடையன் கனிமீட் வேண்டுமென்றே ஆர்லண்டோவை ஏமாற்றுகின்றான்,” என்று எல்லோரும் எண்ணினார்கள். அரசன் ஆர்லண்டோவை அழைத்து, “கனிமீட் கூறுவதை நீ ஏன் நம்பினாய்?” என்று கேட்டான். இதற்குள் கனிமீட் ஆகிய ரோஸலிண்ட் வந்துவிட்டாள். அவள் அரசனை நோக்கி, “தங்கள் மகள் இவனை மணப்பது தங்களுக்கு உடன்பாடுதானா?” என்று கேட்டாள். அரசன், தன் மகள் எவ்வாறு இங்கு வரமுடியும் என்று வியந்தவனாய், “அவ்வாறு அவள் ஆர்லண்டோவை மணப்பது எனக்கு உடன்பாடே, அவளுடைய திருமணத்தின் போது சீர் சிறப்பாக அளிக்க என்னிடம் ஒன்றும் இல்லையே. நாட்டை இழந்து காட்டில் வாழும் நான் என்ன செய்தல் கூடும்?” என்று வருந்தினான். உடனே அவள் ஆர்லண்டோவை நோக்கி, “நீ விரும்புகின்ற ரோஸலிண்ட் இங்கே வந்துவிட்டால், அவளை மணக்க உடன்பட்டிருக்கிறாய் அல்லையோ?” என்று வினவினாள். “எனக்கு அது முற்றிலும் உடன்பாடே. ஆனால் அவளை மணப்பதற்கு ஏற்றவாறு எனக்கு அரசுரிமை இல்லையே என்று வருந்துகின்றேன்,” என்றான் அவன்.

தமக்கையும் தங்கையும் அங்கிருந்தவர்களை விட்டுச் சென்றனர்; இடையனும் இடைச்சியுமாக உடுத்தியிருந்த உடைகளைக் களைந்தனர்; தங்களுடைய பழைய உடைகளை அரண்மனையில் வாழும்போது அணிந்திருந்த அழகிய உடைகளை எடுத்து உடுத்தினர். மந்திரமும் மாயமும் இன்றியே இடையன் பெண் ஆனான். பிறகு இருவரும் திருமணக் கூட்டத்தாரிடம் வந்தனர்.

அவர்கள் அங்கு வந்து சேர்வதற்குள், அரசன் தன் மனத்தில் எழுந்த ஓர் ஐயத்தை ஆர்லண்டோவிடம் வெளியிட்டான். “அந்த இடையன் கனிமீட் என் மகள் ரோஸலிண்ட் போன்று தோன்றுகிறான் ,” என்று சொன்னான். “ஆம்; அவ்வாறுதான் தோன்றுகிறான்,” என்றான் ஆர்லண்டோ. இவ்வாறு இருவரும் பேசிக் கொண்டிருக் கையில், ரோஸலிண்ட், ஸீலியா இருவரும் அங்கு வந்துவிட்டனர்.

ரோஸலிண்ட் அங்கு வந்தவுடன் அரசனை வணங்கி, “தந்தையே எனக்குத் தங்கள் நல்வாழ்த்து வேண்டும்,” என்று வேண்டினாள். “இஃது என்ன விந்தை!” என்று அங்கிருந்தோர் அனைவரும் வியந்தனர். அப்போது ரோஸலிண்ட் ஒன்றையும் மறைக்காமல் தன் சிற்றப்பன் தன்னை வெறுத்துக் காட்டிற்குப் போக்கியது, தங்கை ஸீலியாவும் தன்னைத் தொடர்ந்து வந்தது காட்டிற்கு வந்தபின் இடையனும் இடைச்சியுமாக வாழ்ந்தது ஆகிய எல்லாவற்றையும் தந்தையிடம் விரிவாக உரைத்தாள். இவற்றை அறிந்த எல்லோரும் வியப்பும் களிப்பும் கொண்டனர். திருமணங்கள் இரண்டும் நடைபெற்றன. மர நிழலில் அமர்ந்து எல்லோரும் வியந்து உண்டனர்.

அப்போது, அங்கு ஒருவன் வந்து அரசனுக்கு ஒரு செய்தி அறிவித்தான். “அரசே வாழ்க, வாழ்க! தங்கள் நாட்டைத் தங்களுக்கே கொடுத்துவிட்டார் தங்கள் தம்பியார்; தாங்கள் முன்போலவே முடிசூடி நாட்டை ஆண்டருளல் வேண்டும். இதனைத் தெரிவிக்கவே நான் இப்போது வந்தேன்” என்றான்.

தன்மகள் ஸீலியா ரோஸலிண்டுடன் ஓடிவிட்டாள் என்பதை அறிந்ததும் பிரடரிக் சினங்கொண்டான். நாட்டில் வாழ்ந்த பெருமக்கள் பலர் காட்டிற்குச் சென்று தமையனோடு வாழ்ந்து வருதல் அவன் மனத்தைப் புண்படுத்தியது; தமையன்மீது கொண்டிருந்த வெறுப்பும் மிகுந்தது. ஆகவே, அவன் ஒரு பெரும்படையுடன் சென்று தமையனையும் அவனுடைய நண்பர்களையும் கொல்லத் துணிந்தான். அவ்வாறே அவன் படையுடன் புறப்பட்டுக் காட்டை நோக்கி வரும்போது, வழியில் துறவி ஒருவர் எதிர்ப்பட்டார். அவர் மெய்யுணர்வு உடையவர் இறைவன், உயிர், பிறவிப் பயன் இவற்றைக் குறித்து அவருடன் பிரடரிக் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தான். அவன் மனம் பெரிய மாறுதல் அடைந்தது. உண்மை ஒழுக்கமும் தூய துறவுமே உயிர்க்கு உறுதி பயப்பன என்று அவன் தெளிந்தான்; தமையனுக்கே நாட்டைத் தந்து, துறவியாய் வாழத் துணிந்தான்; தமையனுக்குத் தான் இழைத்த தீமையை எண்ணி நொந்தான்; நாட்டில் வாழ்ந்த பெருமக்கள் பலர் தங்கள் செல்வத்தைத் துறந்து காட்டில் வாழ்வதற்குக் காரணமாக இருந்த தன் கொடுமையை நினைந்து நினைந்து வருந்தினான்; உடனே, தமையனிடம் ஓர் ஆள் அனுப்பினான்; அவன் தான் மேற்குறித்த செய்தியை அரசனுக்கு அறிவித்தவன், காட்டில் வாழ்ந்த பெருமக்களும் நாட்டிற்குச் சென்று தங்கள் செல்வத்தை மீண்டும் பெற்றுச் சிறப்புடன் வாழுமாறு வேண்டிக் கொள்வதாகவும், பிரடரிக் அந்த ஆள் வாயிலாகவே செய்தி அனுப்பியிருந்தான். இச் செய்தியை எதிர் பாராமல் அறிந்த அனைவரும் வியந்து மகிழ்ந்தனர். திருமணக் கொண்டாட்டம் முன்னிலும் பன்மடங்கு இன்பமாக மாறியது.

ஸீலியா பேருவகை கொண்டாள்; தமக்கை ரோஸலிண்டை வாழ்த்தினாள். அவள் பெற்ற பெருஞ்சிறப்பு, தான் பெற்றதே ஆகும் என்று தெரிவித்தாள். ஸீலியாவின் உள்ளத்தில் பொறாமையோ வருத்தமோ எழவில்லை. தமக்கையினிடம் அவளுக்கு இருந்த உண்மையான அன்பு அத்தகையது.

அரசன் நாட்டிற்குச் சென்றான்; முடி சூடினான், தன்னுடன் காட்டிற்கு வந்து தன் பொருட்டுத் துன்பமுற்ற நண்பர்களுக்கு நன்றி கூறினான். எல்லோரும் இன்புற்றனர்; எல்லாம் விரும்பிய வண்ணமே ஆயின.

அடிக்குறிப்புகள்

1. Orlanda 2. Frederick

2. Rosalind 4. Celia

3. Sir Rowland 6. Arden

4. Ganymede 8. Aliena

5. Oliver 10. Adam

மாக்பெத் மாயக்காரிகள் வருபொருள் உரைத்தல்

ஸ்காட்லாந்து¹ என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த சிறிய நாடாகும். அதை டன்கன்² என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுடைய ஆட்சியின் கீழ் இருந்த சிற்றூர்கள் பலவற்றுள் கிளாமிஸ்³ என்னும் ஓர் ஊர்க்கு மாக்பெத்⁴ என்பவன் தலைவனாக இருந்தான். அவன் அரசனுக்கு நெருங்கிய உறவினன்; அஞ்சாமை, ஆண்மை, ஆற்றல் எல்லாம் ஒருங்கு அமைந்தவன்; எனவே, அரசன் முதலான எல்லோரும் அவனை நன்கு மதித்திருந்தனர்.

ஒருமுறை உள் நாட்டில் பெரியதொரு குழப்பம் ஏற்பட்டது. அதனை அடக்கும் பொருட்டு அரசன் மாக்பெத்தையும் அவனுக்குத் துணையாகப் பாங்கோ⁵ என்னும் தலைவனையும் அனுப்பியிருந்தான். கலகப் படையுடன் அவர்கள் பெரும்போர் புரிந்தனர். மாக்பெத்தின் இணையிலா வீரம் அப்படையைச் சிதறடித்தது.

வெற்றியுடன் மீண்டுவந்த மாக்பெத், பாங்கோ இருவரும் வழியில் ஒரு காட்டைக் கடக்க நேர்ந்தது. அவ்வழியில் அவர்களுக்கு எதிரே பெண் உருவங்கள் மூன்று தோன்றின. அப்பெண் உருவங்களுக்குத் தாடி அமைந்திருத்தலை அவர்கள் கண்டார்கள். அவ்வுருவங்கள் மக்கள் உருவங்களாகத் தோன்றவில்லை. அவைகளை நெருங்கியவுடன் மாக்பெத், “நீங்கள் யார்?” என்று வினவினான். அப்போது முதல் உருவம் “கிளாமியஸ் தலைவரே! வாழ்க!” என்று மாக்பெத்தை வாழ்த்தியது. இதனைக் கேட்டதும் அவன் வியந்தான். “என் பெயர் இவர்களுக்குத் தெரியுமாறு எங்ஙனம்?” என்று எண்ணினான். இரண்டாம் உருவம். “கௌடர் தலைவரே! வாழ்க!” என்றது. இதனைக் கேட்டதும், அவன், “இப்பெயருக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லையே,” என்று எண்ணி மிகுதியான வியப்பு அடைந்தான்; மூன்றாம் உருவம், “ஸ்காட்லாந்து மன்னராகும் பேறு பெற்றவரே! வாழ்க” என்று வாழ்த்தியது. இதனைக் கேட்ட மாக்பெத் திடுக்கிட்டான். “டன்கன் மன்னனுக்கு மைந்தர் இருவர் இருக்க, நான் மன்னன் ஆவதாக வாழ்த்தியது ஏன்? இவைகள் உரைத்தவற்றை நம்புதல் இயலாது,” என்று எண்ணினான். உடனே, அவைகள் பாங்கோவை நோக்கி, “மாக்பெத்தைப் போல அரசனாகும் பேறு உனக்கு இல்லை. ஆனால், உன் மக்கள் ஸ்காட்லாந்து அரசுரிமையைப் பெறுவார்கள்,” என்று உரைத்துவிட்டு மறைந்து விட்டன. அவ்வாறு மறைந்ததைக் கண்ட படைத்தலைவர் இருவரும் அவைகளை மாயக்காரிகள் என உணர்ந்தார்கள்.

மாயக்காரிகள் உரைத்தவற்றை இருவரும் எண்ணிக் கொண்டு நின்றபோது, அரசனிடமிருந்து தூதர் சிலர் வந்தனர்; வந்து மாக்பெத்தை நோக்கி, “அரசர் தங்களுக்குக் ‘கௌடர் தலைவர்’ என்னும் பட்டத்தை அளித்திருக்கின்றார். அதைத் தங்களுக்கு அறிவிக்கும் படியாக எங்களை அனுப்பினார்,” என்றனர். “மாயக் காரிகள் உரைத்தவற்றுள் ஒன்று உடனே பலித்து விட்டதே! இஃது என்ன வியப்பு! நான் ஸ்காட்லாந்து மன்னன் ஆவதும் மெய்யாகி விடும் அன்றோ! ஒன்று பலித்தபோது, மற்றொன்றும் பலிப்பது உறுதி,”என்று மாக்பெத் தன்னுள் எண்ணினான்.

பிறகு, அவன் தன்னுடன் இருந்த பாங்கோவை நோக்கி, “உன் மைந்தர்கள் ஸ்காட்லாந்து அரசுரிமை பெறுவார்கள் என்று மாயக்காரிகள் கூறினார்களே; அக்கூற்றை நீ நம்பவில்லையோ? என்னைப் பற்றி அவர்கள் உரைத்த வருபொருள் ஒன்று மெய்ப்பட்டது. ஆகவே, உன் மைந்தர்கள் ஸ்காட்லாந்தை ஆளுவார்கள் என்பதை நம்பலாம்.” என்றான்; “இந்த நம்பிக்கை கொடியது; அரசுரிமையை நாம் பெற வேண்டும் என்ற அவாவினையும் அரசன்மீது பொறாமையையும், மற்றத் தீய எண்ணங்களையும் அந்நம்பிக்கை வளர்க்கும். மாயக்காரிகள் இத் தன்மையான நம்பிக்கையை அளித்துத்தான் மக்களைக் கெடுத்துப் பாழாக்குகின்றார்கள்,” என்று பாங்கோ கூறினான்.

பாங்கோவின் மொழிகள் மாக்பெத் மனதை மாற்றவில்லை. பாங்கோ உண்மையான நண்பன்; ஆகையால் நன்மையான அறிவுரை கூறினான். ஆனால் பொறாமையும் தீய எண்ணங்களுமே மாக்பெத் மனதில் வளர்ந்தன. ஸ்காட்லாந்து அரசாட்சியைப் பற்றிய ஆசை அவனைக் கெடுத்தது.

மாக்பெத் மன்னனைக் கொல்லுதல்

மாக்பெத் வீடு திரும்பியதும், நிகழ்ந்தன எல்லாம் தன் மனைவிக்குத் தெரிவித்தான்; மாயக்காரிகள் வாக்கு ஒன்று மெய்ப்பட்டவாறும் அறிவித்தான்; ஸ்காட்லாந்து அரசாட்சியைப் பெறுதல் திண்ணம் என்று தன் நம்பிக்கையையும் விளக்கினான். அவனுடைய மனைவி நல்லெண்ணம் உடையவள் அல்லள்; பிறர்க்குத் தீங்கு செய்யப் பின்வாங்காதவள்; ஆகையால் பேய் போல் அலையும் இயல்பினள். எனவே, எவ்வகையிலேனும் அரசாளும் உரிமையைப் பெற்றே தீரவேண்டும் என அவள் துணிந்தாள். தீய வழியில் முயற்சி செய்து அதனைப் பெறுவதில் மாக்பெத்துக்கு விருப்பம் இல்லை. “அரசனைக் கொன்று அரசுரிமை பெறுதல் நமக்குத் தகாது. மாயக்காரிகள் வாக்கு அவ்வாறுதான் நிறை வேற வேண்டுமா? அச்செயலுக்கு என் மனம் இசையாது,” என்று அவன் கூறி வருந்தும் போதெல்லாம், அவனை அவள் தேற்றி ஊக்கம் அளித்துவந்தாள்.

அரசன், அடிக்கடி மாக்பெத், பாங்கோ போன்ற தலைவர்கள் வீடுகளுக்குச் சென்று விருந்தினனாகத் தங்கியிருப்பது உண்டு. ஒரு நாள் தன் மக்களாகிய மால்கம்⁶ டனால்பின்⁷ என்னும் இருவரையும் உடன் அழைத்துக் கொண்டு அவன் மாக்பெத் வீட்டிற்கு விருந்தினனாக வந்தான். அவனுடன் ஏனைய தலைவர்களும் வேலை யாட்களும் வந்தார்கள். அவன் மாக்பெத் வீட்டிற்கு வந்தது, அவன் பெற்ற வெற்றியைப் பாராட்டி அவனைப் பெருமைப்படுத்துவதற்கே ஆகும்.

மாக்பெத் மனைவி நகைமுகமும் இன்மொழியும் உடையவளாய் அரசனை வரவேற்று மகிழ்வித்தாள். அவள் விருந்தோம்பும் முறையை அரசன் உவந்து போற்றினான். ஆனால் அவள் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று செய்தலை அரசன் அறியான். அவன் விலையுயர்ந்த நன்கொடை ஒன்றை அவளுக்கு அளித்து வாழ்த்தினான்; தன்னுடன் வந்தோர்க்கும் தக்க பரிசுகள் வழங்கினான்; வழிநடையால் களைப்புற்றிருந்தமையால், விரைவில் பள்ளியறைக்குச் சென்று உறங்கினான். அவன் அருகே வேலையாட்கள் இருவர் படுத்து உறங்கினர்.

எல்லோரும் உறங்கிவிட்டனர்; எங்கும் அமைதி நிலவிற்று. கொடிய விலங்குகளும் கொலைஞரும் கள்ளரும் நள்ளிரவில் விழித்திருத்தல் உண்டு. மாக்பெத் மனைவியும் கொடிய எண்ணமும், கொலை முயற்சியும் உடையவளாய் நள்ளிரவில் விழித்து எழுந்தாள். தன் கணவன் இரக்க முடையவன் என்றும், அரசனைக் கொல்லத் துணியான் என்றும் அவள் எண்ணி, கையில் கட்டாரி எடுத்துக் கொண்டு, அரசனது படுக்கையருகே சென்றாள். அவள் கொடுத்திருந்த கள்ளைக் குடித்த மயக்கத்தால் வேலையாட்கள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவள் அரசனை உற்றுப் பார்த்தாள்; தன் தந்தையை நினைத்துக் கொண்டாள்; “இவர் முகம் என் தந்தையின் அன்பான முகம் போலவே தோன்றுகின்றதே!” என்று எண்ணிக்கொண்டே திரும்பி வந்து விட்டாள்; கணவனையே தூண்டி அனுப்ப முயன்றாள்.

ஆனால், மாக்பெத் மனம் இரங்கி “அந்தோ! அரசரை நான் எப்படிக் கொல்வேன்? அவருடைய உப்பை உண்டு வாழ்கின்ற நான் அவரை எங்ஙனம் கொல்வேன்? நன்றி கெட்ட பாவி ஆவேனோ? அவர் என்னைக் காத்த அரசர்; எனக்கு நெருங்கிய உறவினர். அன்பு மிக்கவர்; அருள் நிறைந்தவர்; நம்பிக்கை கொண்டவர்; ‘கௌடர் தலைவர்’ என்ற பட்டம் அளித்தவர், என்னைப் பெருமைப் படுத்தியவர். அவரைக் கொன்றுவிட்டு நான் வாழவேண்டுமோ? என் பெருமை பாழ்படுமே! குடிகளின் பகையை விலை கொடுத்து வாங்கினவன் ஆவேனே! தகாது, தகாது; இந்த எண்ணம் தகாது,” என்று பலவாறு கூறத் தொடங்கினான்.

இம்மொழிகளைக் கேட்டவுடன் அவனுடைய மனைவி திடுக்கிட்டாள்! “என்னுடைய முயற்சி வீணாகும் என்று தெரிகின்றதே,” என்று எண்ணினாள். ஆயினும், அவள் தீத் தொழிலில் திண்மை உடையவள். ஆதலால், உறுதி தளரவில்லை. “தங்களால் இப்பொழுது காரியமே கெடப்போகின்றது. போர்க்களத்தில் தாங்கள் காட்டும் வீரத்தை இன்றிரவு ஒரு நொடிப் பொழுது காட்டுதல் கூடாதோ? இன்றிரவு செய்யும் ஒரு செயல் என்றென்றும் இன்பம் தருமானால், அதனைச் செய்ய பின்வாங்குதல் ஆண்மையோ? எனக்குள்ள அஞ்சாமையும் தங்களிடம் இல்லை போலும்! பழி நேருமே என்று தயங்குதல் வேண்டா. அந்தப் பழியை வேலையாட்களின் மீதுசுமத்திவிடுதல் எளிது அன்றோ? இச்சமயம் தவறினால் எச்சமயம் வாய்க்குமோ? வேலையாட்களும் குடிவெறியால் நன்றாக உறங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். எழுங்கள்; உடனே முடித்துவிடுங்கள்,” என்று அவள் பற்பல கூற அவனைத் தூண்டினாள். அவனும் ஒருவாறு இசைந்தான்.

மாக்பெத் கையிற் கட்டாரி எடுத்துக்கொண்டு அரசனுடைய பள்ளியறையை நோக்கிச் சென்றான். அப்போது அவனுடைய மன மயக்கத்தாற் பற்பல தோற்றங்களைக் கண்டான். வேறுகட்டாரி ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போலவும், அதிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருப்பது போலவும் அவன் தன் எதிரே கண்டான். அதைக் கையில் பிடிக்கச் சென்றான் மாக்பெத். அது உடனே மறைந்துபோயிற்று. அவன் மேற்கொண்டிருந்த கொடிய செயலால் இத்தகைய மனமயக்கம் அவனுக்கு ஏற்பட்டது. இத்தோற்றங்களுக்கு அவன் ஒரு சிறிதும் அஞ்சிலன்; அரசன் படுத்திருந்த இடத்திற்குச் சென்று அவனைக் குத்திக் கொன்றான்.

உடனே, அங்குப் படுத்திருந்த வேலையாட்களில் ஒருவன் உறக்கத்திலே சிரித்தான். மற்றொரு வேலையாள், “கொலை, கொலை,” என்று உறங்கிக்கொண்டே கத்தினான். இருவரும் விழித்தனர்; கனவில் பயந்ததாகத் தேறி, கடவுளை வணங்கிவிட்டு மீண்டும் உறங்கத் தொடங்கினர். இவ்விருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான் மாக்பெத். அவனுக்கும் கடவுளைப்பற்றிய எண்ணம் எழுந்தது; அவனும் கடவுளை வணங்கி, அவரிடம் மன்னிப்புக் கேட்க முயற்சி செய்தான். ஆனால், அவனால், “கடவுளே” என்று வாயால் கூறமுடியவில்லை; எண்ணம் தோன்றியும் நா எழாமல் நின்றது.

“மாக்பெத் இனி உறங்குதல் இல்லை. அவன் உறக்கம் ஒழிக, அவன் தூக்கத்தைக் குலைத்தான்,” என்று ஒரு குரல் அவனுக்குக் கேட்டது. அந்த ஒலி எல்லோரும் கேட்கும்படி இருந்ததாக மாக்பெத் எண்ணினான்.

உடனே, அவன் தன் மனைவியிடம் சென்றான். “இவர் அந்தக் காரியத்தை நிறைவேற்றவில்லை என்று தெரிகிறது. இவ்வளவு நேரம் ஆகியும் திரும்பி வராத காரணம் யாதோ? என்ன தடை ஏற்பட்டதோ?” என்று எண்ணிக் கொண்டிருந்தாள். அவள், தன் கணவன் திரும்பியதும், அவனுடைய முகக்குறியைக் கண்டு, “ஏன் இவ்வளவு வருத்தத்தோடும் கவலையோடும் வருகின்றீர்கள்? தாங்கள் செய்த செயல் தங்களைக் கோழை ஆக்கிவிட்டதோ? ஆண்மையோடு இருங்கள். விரைந்து சென்று கைகளைக் கழுவிக் கொள்ளுங்கள். இரத்தத்தை மற்றவர்கள் பார்த்தல் ஆகாது; அஞ்சாமல் இருந்து இன்னும் செய்வன திருந்தச் செய்தல் வேண்டும்” என்று சொன்னாள். அவனுடைய கையிலிருந்த கட்டாரியை அவள் வாங்கிக் கொண்டு, அதில் இருந்த இரத்தத்தை உறங்கிக் கொண்டிருந்த வேலையாட்களின் முகங்களில் தடவிவிட்டு, கட்டாரியையும் அருகே வைத்துவிட்டு விரைந்து மீண்டாள்.

இரவு கழிந்தது; பொழுது விடிந்தது. கொலையைப் பலரும் அறிந்தனர்: அதை மறைத்து வைத்தல் இயலாது அன்றோ? மாக்பெத்தும் அவன் மனைவியும் துயர்மிக்கவராய்த் தோன்றினர். வேலையாட்களின் முகங்களிலிருந்த இரத்தக் கறையும். அருகே இருந்த கட்டாரியும் அவர்களைக் குற்றவாளிகளாகக் காட்டின. ஆயினும், பலரும் மாக்பெத் மீது ஐயுற்றனர். வேலையாட்கள் அரசனைக் கொல்லக் காரணம் இல்லை என்றும், அதனால் அவர்கள் பெறும் பயன் ஒன்றும் இல்லை என்றும், மாக்பெத்தே அரசுரிமையைக் கவரும் எண்ணங்கொண்டு இவ்வாறு செய்தான் என்றும் தம்முள் பேசிக் கொண்டனர். அரசனுடைய மைந்தர் இருவரும் ஓடிச் சென்றுவிட்டனர்; அவருள் மூத்தவன் மால்காம் இங்கிலாந்து அரசனிடம் அடைக்கலம் புகுந்தான்; இளையவன் டனால்பின் அயர்லாந்து சேர்ந்தான்.

பட்டத்துக்குரிய மைந்தர் இருவரும் அஞ்சி ஓடவே, மாக்பெத் எதிர்ப்பாரின்றி முடி சூடினான்; மாயக்காரிகள் வாக்கு மெய்யானது கண்டு மகிழ்ந்தான்.


Comentarios


Subscribe here to get my latest posts

Thanks for submitting!

© 2023 Powered by Tamil Bookshelf

  • Facebook
  • Twitter
bottom of page