top of page
library_1.jpg

சேக்சுபியர் கதைகள் VOL-5

கா. அப்பாத்துரையார்



பாங்கோவின் ஆவி அலைத்தல்

மாக்பெத் ஸ்காட்லாந்து மன்னன் ஆவான் என்பதைத் தெரிவித்த மாயக்காரிகள் பாங்கோவுக்கு வருபொருள் ஒன்று உரைத்திருந்தார்கள்; அவனுடைய மக்கள் ஸ்காட்லாந்து அரசுரிமையைப் பெறப்போவதையும் அறிவித்திருந்தார்கள். அரசனைக் கொன்று அரசுரிமை பெற்ற மாக்பெத்தும், அவன் மனைவியும் இதனை மறக்கவில்லை. “நாம் அரசுரிமை பெற்றும் பயன் இல்லையே! நமக்குப்பின் நம்முடைய மக்கள் அவ்வுரிமை பெறுதல் இயலாது அன்றோ? பாங்கோவின் மக்கள் அரசுரிமை பெறுவார்கள் என்று மாயக்காரிகள் கூறினார்களே! அவர்கள் வாக்குப் பொய்க்காதே வேறொருவனுடைய மக்கள் சிறப்படை வதற்கோ நாம் அரும்பாடுபட்டு அரசனைக் கொன்று ஆட்சியைப் பெற்றோம்? அவ்வாறு ஆகாதாவாறு நாம் தடுத்தல் வேண்டும். அதற்கு வழி என்ன? வல்லமை மிகுந்த அரசனையே ஒழித்துவிட்ட நமக்கு, இந்த இடையூறு ஒன்றை ஒழித்துவிட முடியாதோ? இஃது எளிய செயலே; பாங்கோவையும் அவனுடைய மகனையும் கொன்றுவிடுதல் வேண்டும். மாயக்காரிகள் வாக்கு நமக்குப் பலித்தது. ஆனால், அவனுக்குப் பலிக்காதவாறு நாம் தடுத்தல் வேண்டும்” என்று பலவாறு எண்ணிக் கொண்டிருந் தார்கள்.

அவர்கள் இக் கொடிய எண்ணத்தை விரைவில் முடித்துக் கொள்ளத் துணிந்தார்கள். ஒரு பெரிய விருந்து ஒன்று ஏற்படுத்தினார்கள். அவ்விருந்துக்குத் தலைவர்கள் பலரையும் வருமாறு அழைத்தார்கள்; பாங்கோவையும் அவன் மகனையும் மிக்க அன்போடு வரவேற்பது போல் நடித்தார்கள்; அவ்விருந்து இரவில் நடைபெறுமாறு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பாங்கோவும் அவன் மகனும் அரண்மனைக்கு வரும்வழியில் அவர்களைக் குத்திக் கொல்லுமாறு கொலைஞர் ஏவப் பட்டிருந்தனர். முதலில் பாங்கோ வர, அவன் கொல்லப்பட்டான். அக் கொலையால் எழுந்த ஒலியைக் கேட்டதும், பாங்கோவின் மகன் ப்ளீன்ஸ்⁸ என்பவன் விரைந்தோடி மறைந்துவிட்டான்.

விருந்து சிறப்பாக நடைபெற்றது. அரசி எல்லோரையும் தக்கவாறு வரவேற்று மகிழ்வித்தாள். வந்த விருந்தினரும் களிப்புற்றிருந்தனர்; விருந்தினர்க்கு நன்றி கூறும்போது, மாக்பெத், “நீங்கள் எல்லோரும் அரண்மனைக்கு வந்து இந்த நிகழ்ச்சியைச் சிறப்பித்தீர்கள்; உங்களுக்கு எமது நன்றி உரியதாகுக. ஆனால் எம்முடைய தோழன் பாங்கோ இப்போது இங்கு வந்து எம்மை மகிழ்விக்கவில்லை. அவன் வேண்டுமென்றே இவ்விருந்தைப் புறக்கணித்தான் என்று தெரிகின்றது,” என்று நெட்டுயிர்ப்போடு கூறினான்.

உடனே, அங்கே ஒன்று தோன்றி அங்காந்த வாயுடன் வந்தது. அது மாக்பெத்தை விடாமல் தொடர்ந்து சென்றது; அவனுக்கு முன் சென்று அவனுடைய இருக்கையில் அமர்ந்தது. வஞ்சனையால் கொல்லப்பட்ட பாங்கோவின் ஆவிதான் அவ்வாறு வந்து அமர்ந்தது. அஞ்சாமைக்கும் ஆண்மைக்கும் பெயர் போன மாக்பெத் அஞ்சினான்; நடுங்கினான்; வெளுத்தான்; அந்த ஆவியை உற்று நோக்கினான்; திகைத்தான் ஆனால், அவனுடைய மனைவியும் விருந்தினரும் அந்த ஆவியைக் காணவில்லை. “நன்றாகப் பேசிக் கொண்டிருந்த அரசர் திடீரென்று பேச்சின்றிச் செயலின்றி நாற்காலியைப் பார்த்துக்கொண்டு வாளா நிற்கின்றாரே!” என்று அனைவரும் வியப்புற்றனர். அவன் மனைவி மட்டும் அருகே சென்று, அவன் அவ்வாறு விழித்துக்கொண்டு நிற்பதைக் கடிந்து கூறினாள்: முன்பு பலமுறை கண்ட மாயத்தோற்றங்கள் போன்றே இது; அஞ்சவேண்டா," எனப்பிறர்க்குக் கேட்காமல் சொல்லித் தேற்ற முயன்றாள். அவனோ, விழித்துப் பார்த்துக் கொண்டே நின்றான்; சற்றும் திரும்பவில்லை; பித்தன் போல் பிதற்றத் தொடங்கினான்; அவ்வாறு பிதற்றும் போது, கொலையைக் குறித்த சொற்களும் கலந்தன. அச்சொற்களைக் கேட்டதும், அவன் மனைவியும் அஞ்சினாள். “யாரும் அறியாமல் மறைவாய் இருந்த கொலைச் செய்திகள் வெளியாகி விடுமே! அந்தோ, என் செய்வேன்,” என்று அவள் கவலையுற்றவளாய், விருந்தினர் அனைவர்க்கும் விரைந்து விடை கொடுத்து அனுப்பினாள்.

கொலைஞன் மனம் பலவாறு மயங்குதல் இயற்கை. அதனால், மாக்பெத் பல கொடிய காட்சிகளை அடிக்கடி கண்டு கலங்கினான். அவன் மனைவியும் கொடுமை நிறைந்த கனாக்கள் பலவற்றைக் கண்டு அஞ்சினாள். அவர்களுடைய ஆற்றல் அழிந்தது. தங்கள் நெஞ்சே தங்களைச் சுட்டதனால், அவர்கள் வாடி வருந்தினார்கள். “பாங்கோவைக் கொன்றது போல், அவன் மகனையும் கொல்ல முடியாமற் போயிற்றே! அவன் தப்பி ஓடிவிட்டானே! இப்போது நாம் என்ன செய்வோம்? மாயக்காரிகள் உரைத்தவாறே நமக்குப்பின் பாங்கோவின் மகன் அரசுரிமை பெறுவானோ?” என்று பற்பல எண்ணித் துயர்க்கடலில் ஆழ்ந்தார்கள்; இரவும்பகலும் உறக்கமின்றி ஏங்கினார்கள்; இறுதியில் மாயக்காரிகளை மீண்டும் கண்டு எதிர் காலத்து நிகழ்ச்சிகள் பலவற்றையும் அறிய எண்ணி மாக்பெத் புறப்பட்டான்.

மாக்பெத் வாழ்க்கையை வெறுத்தல்

மாயக்காரிகளைத் தான் முதலில் கண்ட அந்தக் காட்டிற்கே அவன் சென்றான். அங்கு ஒரு குகையில் அவர்கள் இருப்பார்களென்று தேடினான். இவன் வருகையை முன்னமே அறிந்த மாயக்காரிகள், வினாக்களுக்கு ஏற்ற விடைகள் கொடுப்பதற்காகச் சில ஆவிகளை வருவிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். மாக்பெத் அருகே வந்து சேர்ந்தான். “உன் வினாக்களுக்கு நாங்களே விடைகள் கூறவேண்டுமா? அல்லது ஆவிகள் கூறவேண்டுமா?” என்று மாயக்காரிகள் கேட்டார்கள். மாக்பெத் அஞ்சாமையுடன், “அந்த ஆவிகள் எங்கே?” என்று கேட்டான். அவர்கள் வருவிக்க, மூன்று ஆவிகள் அங்கு வந்தன.

அவற்றுள், முதல் ஆவி, “மாக்டப்⁹ என்னும் தலைவனைக் குறித்து நீ சாக்கிரதையாக இருப்பாயாக,” என்றது. மாக்பெத்துக்கும் மாக்டப்புக்கும் பெரும்பகை இருந்தது. ஆதலால், மாக்பெத் அந்த ஆவியின் கூற்று நன்மையானதே என்று கருதி, அதற்கு நன்றி கூறினான்.

இரண்டாம் ஆவி, “மாக்பெத்! நீ அஞ்சற்க, உறுதியோடு இரு; கொலைக்குப் பின்வாங்காதே; உன்னை எவனும் கொல்லுதல் இயலாது” என்று கூறியது.

இதைக்கேட்டதும் மாக்பெத் மனம் தேறினான். “மாக்டப்! உன் பகை என்னை ஒன்றும் செய்யாது. இனி நான் அஞ்சுவேன் என்று கருதவேண்டா. நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை. உன்னை நான் கொல்வது திண்ணம்; உன்னை ஒழிப்பது உறுதி,” என்று வஞ்சினம் உரைத்தான்.

மூன்றாம் ஆவி தோன்றி, “மன்னவ! நீ ஒருவர்க்கும் அஞ்சாதே. பலருடைய பகையும் உன்னை ஒன்றும் செய்யாது. பர்னம்¹⁰ காடானது டன்ஸினேன்¹¹ மலை நோக்கி வந்து, உன்னை எதிர்க்கும் வரை உனக்குக் கேடு இல்லை,” என்று கூறியது. மாக்பெத் மனம் மகிழ்ந்தான். “காட்டைப் பெயர்த்து வந்து என்னை எதிர்க்கவல்லவன் ஒருவனும் இலன்; என் வாழ்நாளைப் பற்றி எனக்கிருந்த கவலை ஒழிந்தது. எனக்குள்ள மற்றோர் ஐயம் பெரிதாக வருந்துகின்றது. அந்த ஐயத்தைப் போக்க முடியுமானால் சாலவும் மகிழ்வேன். பாங்கோவின் வழித் தோன்றுவோர் இந்த அரசுரிமையைப் பெறுவாரோ? கூறுக,” என்று அவன் வேண்டிக்கொண்டான். அந்த ஆவி மறுமொழி கூறாமல் மறைந்துவிட்டது.

அப்போது மாக்பெத் இன்னிசைக் கருவிகள் ஒலித்தலைக் கேட்டான். அவன் எதிரே அரசர் எண்மர் நிழலுருவங்கள் தோன்றின. அவற்றுள் எட்டாம் உருவம் பாங்கோவின் உருவமாக இருந்தது. அது கையில் கண்ணாடி ஒன்று வைத்திருந்தது. அக்கண்ணாடியில் அரசர் பலருடைய நிழலுருவங்கள் காணப்பட்டன. பாங்கோ உடல் முழுவதும் இரத்தக்கறை உடையவனாய்க் காணப்பட்டான்; அவன் புன்சிரிப்புடன் அவ்வுருவங்களை மாக்பெத்துக்குக் காட்டினான். மாயக்காரிகள் மாக்பெத்துக்கு விடை தந்து, இன்னிசை ஒலிக்க மறைந்து விட்டனர்.

பாங்கோவின் நிழலுருக் காட்டிய அரசர்கள் ஸ்காட்லாந்தை ஆளப்போகின்றவர்கள் என்றும், அவர்கள் பாங்கோவின் வழித் தோன்றுவோர் என்றும் மாக்பெத் உணர்ந்தான். அன்றுமுதல் அவனுடைய எண்ணங்களும் செயல்களும் மிகக் கொடியவை ஆயின.

அவன் குகையை விட்டு அப்பாற் சென்றான். வழியில் தூதன் ஒருவன் வந்து, “பெருமானே! மாக்டப் இங்கிலாந்துக்குச் சென்று விட்டார். அங்கே மால்கம் தங்களுக்கு எதிராகப் பெரும்படை திரட்டுகின்றாராம். அப்படையில் மாக்டப் சேர்ந்துகொண்டாராம்,” என்று தெரிவித்தான். உடனே, மாக்பெத் வெகுண்டெழுந்தான்: மாக்டெப் வாழ்ந்த அரண்மனைக்குச் சென்றான். அங்கிருந்த அவனுடைய மனைவி மக்களைக் கொன்றான்: உறவினர் பலரையும் கொன்றுவிட்டான்.

மாக்பெத் கொண்ட கொலை வெறியைக் கண்ட தலைவர்கள் அவனை வெறுத்தார்கள். அவர்களுள் பலர் இங்கிலாந்துக்கு ஓடிச் சென்று மால்கமுடன் சேர்ந்து கொண்டனர்; நாட்டில் இருந்த ஏனையோரும் மாக்பெத்துக்குக் கீழ்படிவது போல் நடித்து, உள்ளத்தில் வெறுத்தனர்: “மால்கம் வெற்றி பெற்று முடி சூடும் திருநாள் என்று வருமோ?” என்று எண்ணிக் காத்திருந்தனர். மாக்பெத் கொடுங்கோல் மன்னனாக நாட்டை ஆண்டுவந்தமையால் குடிகள் எல்லோரும் அவன் அழியும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்.

மாக்பெத் பிறர்க்குச் செய்த தீவினை எல்லாம் அவனையே சூழ்ந்து வருத்தத் தொடங்கின. அவன் தன் நிலையை அறிந்து தன்னை வெறுத்துக் கொள்ளத் தொடங்கினான். தான் கொன்ற டன்கன் அரசன் துன்புறவில்லை என்றும், பகையும் பழியும் பயமும் தன்னைச் சூழ்ந்து வருத்துதலால் தானே துன்புறுகின்றவன் என்றும் அறிந்து துயருழந்தான். “டன்கன் மன்னனே! உன் நிலையே சிறந்தது. எத்தகைய படையும் இப்போது உன்னை என்ன செய்ய இயலும்? என்னை எல்லாம் துன்புறுத்துகின்றனவே! உன்னைக் கொன்ற நன்றி கொன்ற பாவியாகிய நான்தான் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றேன்,” என்று நினைத்து வருந்தினான்.

மாக்பெத்துக்குத் துணையாயிருந்த டன்கன் அரசனைக் கொல்வித்த அவன் மனைவியே அவன் வருந்திய போதெல்லாம் தேற்றி வந்தாள்; அவன் கனாக்கண்டு அலறியபோதெல்லாம் அவனுடைய நடுக்கத்தைப் போக்கி வந்தாள்; இரவிலும் பகலிலும் அவனுடைய கவலை எல்லாவற்றையும் போக்கி ஊக்கம் அளித்து வந்தாள். அவளுக்கு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டது. தன்னை எல்லோரும் வெறுப்பதை அறிந்தவுடன் அவள் தற்கொலை செய்து கொண்டாள். மாக்பெத் அரசன் உற்ற வருத்தத்திற்கு எல்லை இல்லை மனைவி தவிர வேறொரு துணையும் இல்லாதவனாய் வாழ்ந்த அவன் சோர்ந்தான். அவனிடம் அன்பு செலுத்திய ஓர் உயிர் அவனிடம் நம்பிக்கை கொண்ட ஓர் உயிர் நீங்கியபின், அவன் வாழ்தலை விரும்பு வானோ? சாதலையே விழைந்தான். என்ன என்னவோ எண்ணி மனக்கோட்டை கட்டிவந்த மாக்பெத் எல்லாவற்றையும் வெறுத்தான். அரசுரிமையைப் பெறும்பொருட்டு பலருடைய வாழ்வைக் குலைத்த மன்னன் உயிருடன் வாழும் ஓர் உரிமையையும் இழக்க எண்ணினான்.

காடு மலை நோக்கி வருதல்

அப்போது, மால்கம் அவனை எதிர்க்கும் பொருட்டு இங்கிலாந்தில் இருந்து பெரும்படையுடன் புறப்பட்டு வந்தான். அதனை அறிந்த மாக்பெத் இழந்த ஊக்கத்தை மீண்டும் எய்தினான், “பர்னம் காடு பெயர்ந்தது வரும்வரை எனக்கு அழிவில்லை என்று ஆவி கூறியது பொய்யாகுமோ? யார் வரினும் வருக; அஞ்சாது கொன்று குவிப்பேன். ஒரு கால் நான் மாள நேர்ந்தாலும், என் மனைவியைப் போலவே இறப்பேன்? இறுதிவரைக்கும் போர் செய்து கொண்டே உயிர்விடுவேன். ஆனால், காடு பெயர்ந்து வரப்போவதும் இல்லை; நான் அழிவதும் இல்லை,” என்று அவன் எண்ணினான். மால்கம் வருகையை எதிர்நோக்கியவனாய்ப் போருக்குச் சித்தமாக இருந்தான்.

அவன் இருந்த அரண்மனை பகைவரால் அழிக்கலாகாதது; முற்றுகைக்கு எளியது அன்று. அத்தகைய அரண்மனையில் மாக்பெத் இருந்தான். அதை நோக்கி மால்கம் படை வந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அது நெருங்கி வந்துவிட்டதைக் கண்ட தூதன் ஒருவன், விரைந்து சென்று மாக்பெத் முன்னிலையில் நடுநடுங்கி நின்றான். ஒன்றும் கூறமுடியாமல் நடுங்கிக்கொண்டு நின்ற தூதனை நோக்கி, “என்ன செய்தி? உடனே சொல்,” என்றான் அரசன். “மலைமேல் ஏறிக் காவல் புரிந்து வரும்போது, பர்னம் காட்டை நோக்கினேன். அது நகர்ந்து வருதலைக் கண்டேன்,” என்றான் அத்தூதன். அரசன் அவனைப் பொய்யன் என்று வெறுத்துரைத்து அனுப்பி விட்டான்.

தூதன் சென்றுவிட்ட பிறகு, அரசன் பலவாறு எண்ணத் தொடங்கினான். “ஆவிகளின் மொழிகள் பொய்யாகுமோ? அந்தக் காடு இந்த மலையை நோக்கிப் பெயர்ந்துவரும் வரைக்கும் அழிவு இல்லை என்று ஆவிகள் கூறியதை உண்மை என்று நம்பியிருந்தேனே! அந்தக் காடு பெயர்ந்து வருகின்றது என்று தூதன் கூறுகின்றான். காடு பெயர்ந்துவருமோ? என்ன வியப்பு! கேட்டறியாத புதுமையாக இருக்கின்றதே! அப்படிக் காடு பெயர்ந்து வருமானால், நான் அழிவது திண்ணம் அன்றோ? அதைத் தடுக்க முடியுமோ? எங்காவது ஓடிச் சென்றுவிடுதல் என்றால் அது வீரனுக்குத் தகுமோ? அத்தகைய இழிந்த செயலை நான் செய்வேனா? இதோ, புறப்படுவேன்; போர்க்கோலம் பூண்டு எதிர்த்துப் போர் செய்வேன். ஆறிலும் சாவு நூறிலும் சாவு; எனக்கும் வாழ்க்கையில் வெறுப்பு மிகுந்துவிட்டது. என் வாழ்வு இன்றோடு முடிந்தாலும் நலமே,” என்று அரண்மனையை விட்டுப் புறப்பட்டான். அதற்குள் மால்கம் படையும் அரண்மனையை நெருங்கிவிட்டது.

அரசன் அப்படையின் தோற்றத்தைக் கண்டான். வியந்தான்; பர்னம் காடு பெயர்ந்து வருதல்போலவே தோன்று தலைக் கண்டு தன் நம்பிக்கை இழந்தான்.

மால்கம் தன் படையுடன் புறப்பட்டு, பர்னம் காட்டு வழியாகத் தான் வந்தான்; தன் படையின் அளவு எதிரியின் கண்ணுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்று விரும்பினான்; அதற்காக அக்காட்டிலிருந்த மரக்கிளைகளை வெட்டி வீரர் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு கிளையைக் கையில் ஏந்திவருமாறு கட்டளை யிட்டான். அவ்வாறே வீரர் அனைவரும் செய்யவே, பர்னம் காடு நகர்ந்து வருதல் போலத் தோன்றியது. ஆவியின் வாக்கு உண்மையாயிற்று.

கேடுசூழ்ந்தவனே கெடுதல்

போர் மூண்டது. மாக்பெத்துக்குப் பெரும்படை இருந்த போதிலும் அப் படையிலிருந்தோர் எல்லோரும் அவன்மீது கொண்ட வெறுப்பால், ஊக்கமுடன் போர் செய்யவில்லை; அவனுடைய கொடுங்கோன்மையைப் பொறுக்கமுடியாமல், “எப்போது மால்கம் வருவார்! எப்போது நாம் அவருடன் சேர்ந்து கொள்வோம்!” என்று எண்ணிக்கொண்டிருந்தார்கள். அரசனும் அவர்களை நம்பவில்லை. அவன் வீரமுடன் பகைவரை எதிர்த்தான்; தன்னை எதிர்த்தவர் எல்லோரையும் வாளுக்கு இரையாக்கினான்.

மதயானைப்போல் போர்க்களத்தில் கலக்கிய மாக்பெத், இறுதியில், மாக்டப் இருந்த இடத்தை அடைந்தான்; அவனைக் கண்டவுடனே, “மாக்டப்பைக் குறித்து நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்று ஆவி கூறியதை நினைத்துக் கொண்டான். அவன் எதிரே அசையாமல் நின்றான்; திரும்பிவிட எண்ணினான்; அதற்குள் மாக்டப் இருவருக்கும் நிகழ்ந்தது பெரும்போர் ஆகும். “கீழ் மகனே! உன்னுடைய வீரத்தை என்னிடம் காட்டு; பெண் களிடத்திலும் சிறுவரிடத்திலும் வீரம் காட்டினாய் அல்லையோ! என் மனைவி மக்களைக் கொன்ற பயலே! உன்னைப் பழிக்குப்பழி வாங்குவதே என் கடமை,” என்று சினந்துரைத்தான். அப்போதும் மாக்பெத் ஓடிவிட முயன்றான். மாக்டப்பின் மனைவி மக்களைக் கொன்ற கொடுஞ் செயலைப்பற்றிய நினைவு அவனைத் திகைத்து நிற்கச் செய்தது. மாக்டப் கடுஞ்சினங் கொண்டவனாய் அவனைத் தாக்கினான்.

இவ்வாறு மாக்டப்பிடம் அகப்பட்டுக் கொண்டு திகைத்து நின்ற மாக்பெத், அப்போது, ஆவி கூறிய தொன்றை நினைத்துக் கொண்டான். “உன்னை எவனும் கொல்ல முடியாது,” என்ற ஆவியின் கூற்றை மாக்டப்பிடம் கூறி, “நீ என்னைக் கொல்ல முடியாது. உன் முயற்சி வீணாகும்,” என்று வீரம் பேசினான்; அதற்கு மறுமொழி கூறும்போது மாக்டப், “உன்னை எவனும் கொல்ல முடியாது என்றா சொல்லுகின்றாய்? அப்படியானால், உயிருடன் இரு. உன்னை ஒரு கூட்டினில் அடைத்துவைத்து, அதன் முகப்பில் ஒரு பலகையில்”மாக்பெத் கொடுங்கோல் மன்னன்" என்று எழுதிப் பலர்க்கும் காட்டுவோம்," என்றான்.

அதற்கு மாக்பெத் இசைந்தானா? இல்லை. “அஃது உன்னால் ஆகாத செயல். அந்த மால்கம் காலில் நான் விழுந்து வணங்குவேன் என்று எண்ணுகின்றாயோ? எனக்கு மானம் இல்லை என்று நினைத்து விட்டாயோ? நான் வாளா இருப்பேனா? என் உயிருள்ள வரைக்கும் என் ஆண்மையைக் காட்டிப் பொருதே மாள்வேன். பர்னம் காடு டன்சினேன் மலை நோக்கி வந்தால் எனக்கு அழிவு உண்டு என்பதை அறிவேன். அவ்வாறே காடு மலைநோக்கி வந்துவிட்டது. இன்னும் என்ன என்ன நடப்பதாயினும் நடக்க தலைக்குமேல் போகும் வெள்ளம் சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன? நான் அஞ்சுவேன் என்று கருதவேண்டா,” என்று சொல்லிக் கொண்டே மாக்பெத் மாக்டப்பைத் தாக்கினான். இருவருக்கும் நிகழ்ந்த கடும்போரின் முடிவில் மாக்டப் மாக்பெத்தின் தலையை வெட்டி அதனைக் கையிற்கொண்டு போய் மால்கமுக்குப் பரிசாகக் கொடுத்தான்.

மால்கம் மாக்டப்பைப் புகழ்ந்து போற்றினான். அவன் ஸ்காட்லாந்து அரசுரிமை பெற்று, முடிசூடினான். டன்கன் அரசனாகிய அவனுடைய தந்தையின் நற்பண்புகள் பலவும் அவனிடம் இருந்தன. ஆதலால் குடிகளும் தலைவர்களும் அளவிலா மகிழ்ச்சி அடைந்து அரசனை வாழ்த்தினார்கள். “கெடுவான் கேடு நினைப்பான்”, என்ற பழமொழிக்கு எடுத்துக் காட்டாக இருந்த மாக்பெத்தின் கொடுங்கோன்மை ஒழிந்து செங்கோன்மை நிலவிற்று

அடிக்குறிப்புகள்

1. Scotland

2. Duncan

3. Glamis

4. Macbeth

5. Banquo

6. Malcom

7. Donalbin

8. Fleance

9. Macduff

10. Birnam

11. Dunsinane.


Comments


Subscribe here to get my latest posts

Thanks for submitting!

© 2023 Powered by Tamil Bookshelf

  • Facebook
  • Twitter
bottom of page