கவிஞர் வைரமுத்து (தண்ணீர் தேசம்)
அத்தியாயம் - 2
மருத்துவமனை.
குடல் குடையும் மருந்துவாசம்.
துடைத்துவைத்த சோகம்.
வெள்ளைவெள்ளையாய்
அவசரங்கள். ஆங்கிலத்தில்
அகவும் அழகுமயில்கள்.
அறை எண் 303.
மேகத்தில் நெய்தெடுத்த
மெல்லிய போர்வையின்கீழே
சோர்ந்துகிடந்தது
சுடிதார்ரோஜா. அவள்
கண்கள் செயற்கை உறக்கச்
சிறையிலிருந்தன.
பாரிஜாதப் பூவில்
பட்டாம்பூச்சி
உட்காருவதுபோல் படுக்கையில்
பைய அமர்ந்து அன்புமகள்
நெற்றிதொட்டார் அகத்தியர்.
மாலை நேரத்து வெயிலாய்
அது சூடுகுறைந்து சுட்டது.
உடம்பில் இப்போது
உப்புநீர் இல்லை. சுவாசப்பை
சுத்தம், நுரையீரல் தரைவரை
பிராணவாயு பிரயாணம்.
ஓய்வுதான் தேவை.
உறங்கவிடுங்கள்.
செவிலியின் வெள்ளை அறிக்கை
அவரை வெளியேற்றியது.
அறைக்கு வெளியே தூரத்தில்
தெரிந்த துண்டுவானத்தையே
பார்த்துச் சலித்த கலைவண்ணன்
தன் பக்கத்திலிருந்த
பூந்தொட்டியில் தன்
இதயம்போல் துடிதுடிக்கும்
இலைகளுக்குத் தாவினான்.
சிகரெட் புகை சிந்தனை
கலைத்தது. புகைக்குப் பின்னே
அகத்தியர் தோன்றினார்.
நல்ல உயரம். நாகரிகத்
தோற்றம். நாற்பதுகளில்
நட்சத்திரமாய்த் தொடங்கிய
வழுக்கை - ஐம்பதுகளில்
முழுமதியாய்
முற்றுகையிட்டிருந்தது.
தடித்த கண்ணாடி.
தங்கஃபிரேமுக்காக
மன்னிக்கலாம்.
பெருந்தொழில் அதிபர்.
நாடாளுமனறத்தில் -
வரிபாக்கிப்
பட்டியலில் வந்து வந்து
போகிறவர்.
கலைவண்ணனுக்கு அவரிடம்
பிடித்தது அவர் பெண்.
பிடிக்காதது அவர் பிடிக்கும்
சிகரெட்.
தமிழை இன்னும் கொஞ்சம்
மென்மையாய்க்
கையாண்டிருக்கலாம்
என்றார் அகத்தியர் புகைசூழ.
இப்படி நீரச்சம்கொண்டவள்
என்று நினைக்கவில்லை
நான்.
கனவுகள் நிஜங்களாகவும்,
நிஜங்கள் கனவுகளாகவும்
தோன்றும், அந்தப்
பள்ளிவயதில் கொடைக்கானல்
ஏரியில் பள்ளித் தோழிகளோடு
இவள் படகில் போனாள். அது
கவிழ்ந்தது. மீட்கப்பட்டவள்
இவள் மட்டும்தான். சில
நாட்களில் ஏரியெங்கும்
சீருடைப்பிணங்கள் மிதந்தன.
அன்று கொண்ட நீரச்சம்
இன்றும் தீரவில்லை.
நீரச்சம் நிரந்தர அச்சம்
அல்ல. நிச்சயம் களையலாம்.
இல்லையென்றால் அந்தப் பயம்
உடலையும் மனதையும்
உள்ளிருந்தே தின்றுவிடும்.
இந்தத் தண்ணீர்பயத்தைத்
தவிர்த்தாக வேண்டும்.
கவனம்.
தூசு எடுக்கும் அவசரத்தில்
கருமணியே
தூர்ந்துவிடக்கூடாது. எனக்கு
அவள் ஒரே பெண்.
இதுதான் அடிக்கடி கேட்கும்
அப்பாமொழி.
ஒரே பெண் என்றால்
நூறுசதம் அன்பா? இரண்டு
பெண்கள் என்றால் ஆளுக்கு
ஐம்பதுசதம் அன்பா? நான்கு
பெண்கள் என்றால் இதயத்தை
நான்காக்கி இருபத்தைந்து
சதமா?
ஒரே பெண் என்றால்
உயிர்ப்பாசம் வருமா?
இன்னொரு பெண் இருந்தால்
இவள் இறந்துபோகச்
சம்மதமா?
உங்கள் ஆண்மைகலந்த
அறிவுதான் என் மகளைத்
தலைசாயவைத்தது. என்னைத்
தலையாட்ட வைத்தது. ஆனால்
தர்க்கம் வேறு. தர்மம்
வேறு.
சில குணங்களை
எதிர்த்திடக்கூடாது.
ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இயல்புகளை
ஏற்றுக்கொள்ளலாம்.
திரிபுகளை ஏற்றுக்கொள்ள
முடியாது.
எனக்கு நீல விழிகள் பிடிக்கும்.
ஆனால், தமிழ்ரோஜா விழிகள்
கருமை. இருள் உறைந்த
கருமை. நிறம் என்பது
நிறமிகளின் வேலை. அது
இயல்பு. ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் நீரச்சம் என்பது
திரிபு. அது விழியின்
கருமைபோல் இயல்பானதல்ல.
துணியில்
அழுக்கைப்போல் திரிபானது.
மனச்சலவை ஒன்றே
மருந்து.
சலவை செய்யும் ஆர்வத்தில்
சல்லிசல்லியாகிவிடக் கூடாது.
அவள் மென்மையானவள்.
அப்பாக்கள் செய்யும்
இரண்டாம் தவறு இது.
மென்மையை நீங்கள்
கற்பிக்கிறீர்கள். பெண்களின்
செருப்பைக்கூட
மெல்லியதோலில்
வடிவமைக்கிறீர்கள். பதினாறு
வயதுக்கு மேலும் பலூன்வாங்கி
வருகிறீர்கள்.
சில்லென்று முளைக்கும்
சிறகுகளைக்கூட வேண்டாத
ரோமங்களென்று வெட்டி
விடுகிறீர்கள்.
அதனால்தான் காற்று
கடுமையாக அடித்தாலே பல
பெண்களுக்கு ரத்தம்
கசிந்துவிடுகிறது.
ஒன்று சொல்கிறேன்
உங்களுக்கு. என் உயிரின்
கடைசிச்சொட்டுவரை
அவள்தான் நிறைந்திருக்கிறாள்.
என்
நீண்ட பயணத்திற்குத் தகுதியாக
அவளைத்
தயாரிக்கவேண்டும்.
அவள் உங்களுக்குத் தகுதி
இல்லாதவளா?
அப்படியில்லை.
அன்பில் - குணத்தில் -
காதலில் அவள் என்னிலும்
மிக்கவள். ஆனால், என்
வாழ்க்கைக்குத் தயாராய்
அவள் இன்னும்
வார்க்கப்படவில்லை.
என்னுடையது புயல்யாத்திரை.
அவள் பூஜையறைக்
குத்துவிளக்கு. அணைந்து
போகாமலிருப்பது எப்படி
என்பதைச் சுடருக்குச்
சொல்லிக்
கொடுக்கவேண்டும்.
அகத்தியர் பேசவில்லை.
தன் மெளனத்தைப் புகையாய்
மொழி பெயர்த்தார்.
பிறகு வேர்களில் வீழாமல்
இலைகளைமட்டும் நனைக்கும்
சாரலாய் - கலைவண்ணன்
காதுதொடாமல் தனக்குத்
தானே பேசிக்கொண்டார்.
நான் தவறான இடத்தில்
தலையாட்டி விட்டேனா?
காற்றில் கசிந்த வார்த்தை
அவன் காதுகளில்
விழுந்துவிட்டது. சுள்ளென்று
ஏதோ சுட்டது.
பொங்கிவழியாமல்
புலனடக்கம்கொண்டான்.
மோனோலிசாவின்
புன்னகைதிருடி உதடுகளில்
ஒட்டிக்கொண்டான். மெல்ல
மெல்லச் சொல்லவிழ்த்தான்.
நீங்கள் தலையாட்டியது
தப்பானவனுக்கல்ல.
சரியானவனுக்குத்தான்.
எனக்குக் கிராமத்துக்
குட்டிச்சுவர் வாழ்க்கையும்
தெரியும். நகரத்து நட்டசுவர்
வாழ்க்கையும் தெரியும்.
எனக்குச் சோளக்கூழில்
மிதக்கும் மிளகாயும் தெரியும்.
உங்கள் சாராயக் கிண்ணங்களில்
முழ்கிமிதக்கும் பனிக்கட்டிகளும்
தெரியும்.
எனக்கு மழையில் நனைந்த
வைக்கோல் வாசமும்
தெரியும். சொட்டுக்கு ருபாய்
நூறு தந்தால் மட்டுமே
மணக்கும் அரேபிய அத்தரும்
தெரியும்.
செருப்பில்லாத எனது
பாதத்தில் காட்டுப்பாதையில்
குத்திய கருவேலமுள்ளை
நகரத்துத் தார்ச்சாலையில்
வந்து தேய்த்தவன் நான்.
நீங்கள் விதையில்லாத
திராட்சைகளை விழுங்கி
வளர்ந்தவர்கள். நான்
கற்றாழைப்பழத்தின்
அடியிலிருக்கும் நட்சத்திரமுள்
பார்த்தவன்.
நான் சென்னை வந்தது என்
அறிவுக்கு அங்கீகாரம் தேடி
அல்ல. உடல் உழைப்புக்கும்
முளை உழைப்புக்குமான
வித்தியாசத்தின் வேர்காண
வந்தேன்.
சென்னை நூலகங்களில்
வாடகைதராமல் வசித்தேன்.
இரைப்பையைப் பட்டினியிட்டு
முளைக்குப் புசித்தேன்.
சமுகத் தேடல் கொண்ட
பத்திரிகையில் சேர்ந்தேன்.
ஒரு கல்லூரி விழாவில் உங்கள்
மகளைச் சந்தித்தேன்.
முதன் முதலில் என் உயிர்மலரக்
கண்டேன்.
மென்மைச் சிறையைவிட்டு
அவளை மெல்ல மெல்ல மீட்க
நினைக்கிறேன்.
ஏனென்றால் நான் பயணிப்பது
மயிலிறகு பரப்பிய மல்லிகைப்
பாதையல்ல.
நான் சகாராவின்
சகோதரன்.
பகல் சுடும் - இரவு குளிரும்
- இதுதான் என் பயணம்.
நான் பத்திரிகைக்காரன்.
பேனாவின் முடிதிறந்தபோதே
என் மார்பையும் திறந்துவைத்துக்
கொண்டவன்...
அவன் பேசப்பேச, துடிக்கும்
ரத்தம் துடிக்கிறதுஎன்று
அகத்துக்குள் சிரித்த அகத்தியர்
அவன் முச்சுவாங்கவிட்ட
இடைவெளியைத் தனதாக்கிக்
கொண்டார்.
தமிழை
மணம்செய்துகொண்டால்
உங்கள் பாலைவனம் கடக்கச்
சொந்த விமானம் ஒன்று
தந்துவிட
மாட்டேனா?
சொந்தத்தில் விமானம்
வாங்கலாம். அனுபவம் வாங்க
முடியுமா?
உங்கள் பணம் எனக்குக்
குடைவாங்கித் தரலாம்.
மழைவாங்கித் தர முடியுமா?
உங்கள் பணம் மின்னல்.
அதிலிருந்து வெளிச்சம்
வரலாம்.
ஆனால், வெளிச்சமெல்லாம்
தீபமாகுமா?
அகத்தியர் அவன்
தோள்தொட்டார். அந்தத்
தொடுதலில் அனுபவம்
கனத்தது.
பணம் இல்லாதவன்தான்
பணத்தை மதிப்பதில்லை.
சொல்லிலும் உதட்டிலும் சிந்தி
வழிந்தது சில்மிஷம்.
நான் பணம்
உள்ளவனைத்தான்
மதிப்பதில்லை.
ஒவ்வொரு பணக்காரனின்
ஆழத்திலும் கண்ணுக்குத்
தெரியாத
ஒரு குற்றம்
கால்கொண்டிருக்கிறது.
பணம் ஒரு விசித்திரமான
மாயமான். அது தன்னைத்
துரத்துபவனுக்குக்
குட்டி போட்டுவிட்டு
ஓடிக்கொண்டேயிருக்கிறது.
குட்டிகளில் திருப்தி அடையாத
மனிதன் தாய்மானைப் பிடிக்கும்
வேட்டையில் தவிக்கத் தவிக்க
ஓடிச் செத்துப் போகிறான்.
இந்தப் பிரபஞ்சமே
எனது பெட்டி
என்கிறேன் நான். இல்லை
உங்கள்வீட்டுப் பெட்டிக்குள்தான்
பிரபஞ்சம் என்கிறீர்கள்
நீங்கள்.
உங்களைப் பிரபஞ்சமாய்
விரியவிடுங்கள். பிரபஞ்சத்தை
உங்களாய்ச் சுருக்கி
விடாதீர்கள்.
எப்போதும் வெப்பம்.
எதிலும்
ஆவேசம். எதையும்
அறிவாகவே
பார்க்கும் அவசரம். இது
தகாது
கலைவண்ணன்.
நீங்கள் புன்னகையைக்
கழற்றிவிட்டுப் போர்வாள்
தரித்திருக்கிறீர்கள்.
போர்தான். அடுத்த
நூற்றாண்டு
யுத்தம்தான். மிருகவாழ்க்கை
மனிதனுக்குத் திரும்பும். வலிமை
உள்ளது மட்டுமே தப்பிக்கும்.
அன்பு - அறம் - எல்லாம்
அன்றில் - அன்னம் பட்டியலில்
காணாமல்போகும்.
அடுத்த நூற்றாண்டில் எவனும்
சைவனாய் இருக்கமாட்டான்.
நரமாமிசம் தின்பான்.
டீக்கடைகளின் மனிதரத்தம்
விற்கும்.
இந்த நூற்றாண்டு மனமும்
உடம்பும்
அடுத்த நூற்றாண்டுக்காகாது.
நகரவாழ்க்கை என்னும் இந்தத்
தார்ப்பாலைவனம் கடக்க
தோல் - தோள் இரண்டும்
தடித்திருக்கவேண்டும்.
இனி வருவது போராளிகளின்
காலம். மனிதர்களோடு
மனிதர்களும் -
எந்திரங்களோடு
எந்திரங்களும்,
தொடர்ந்து யுத்தம்
புரியும் ஒலிகளின் நூற்றாண்டு.
அந்த யுத்தத்திற்குத் தங்களைத்
தயாரித்துக் கொண்டவர்கள்
மட்டுமே ஜீவிதரயிலின் அடுத்த
நூற்றாண்டுப் பெட்டியில் ஏறிக்
கொள்ளலாம். முடியாதவர்கள்
இந்த நூற்றாண்டின்
இறுதியிலேயே
இறங்கிக் கொள்ளலாம்.
வாழ்க்கையின்மீது
நீங்கள்மட்டுமே
நிறைவேற்றிக்கொள்ளும்
அவநம்பிக்கைத் தீர்மானம்
இது.
இந்தத் தீர்மானத்தை ஆதரித்து
உயர்வது உங்கள்
ஒருகரமாய்த்தானிருக்கும்.
இன்னொரு கரம் உயர்ந்தால்
அது உங்கள் இடக்கரமாய்
இருக்கலாம்.
அவ்வளவுக்கு வாழ்க்கை இன்னும்
அழுகிவிடவில்லை. அழுகப்
போவதுமில்லை.
வேட்டையாடுகிற
வேட்டையாடப்
படுகிற இரண்டு இனங்களும்
உயிர்கள் தோனறிய
காலந்தொட்டு
உலவிக்
கொண்டுதானிருக்கின்றன.
ஆனால், சிங்கம்
அழிந்துவிடவுமில்லை. முயல்
முடிந்துவிடவுமில்லை.
வலைகளின் எண்ணிக்கை
அதிகமானதற்காய் மீன்களின்
எண்ணிக்கை
குறைந்துவிடவில்லை.
ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால் வலைகளை அறுக்கத்
தெரிந்தவைமட்டுமே
வாழ்கின்றன
என்கிறேன்.
நம் வாழ்க்கை முறை உடம்பை
வாழையாய் வளர்த்துவிட்டது.
மனதைக் கோழையாய்
வளர்த்துவிட்டது. உடம்புக்கும்
மனதுக்கும் ஒருமைப்பாடு
இல்லை.
செருப்புக் கடித்துச்
செத்துப்போகும்
தேகங்களை
வளர்த்துவிட்டோ ம்.
தந்திவந்தால் இறந்துபோகும்
இதயங்களை
வளர்த்துவிட்டோ ம்.
தேகம் வன்மை செய்து இதயம்
செம்மை செய்யும் பயிற்சிகள்
இல்லை.
இனிவரும் நூற்றாண்டுகளில்
மழை
நிறைய இருக்குமோ
இல்லையோ -
இடி நிறைய இருக்கும்.
கற்பகவிதைகள் வாங்கிக்
காளான் சாகுபடி செய்யும்
இந்தக் கல்விமுறையும் -
ஈசல் பண்ணைகளாகிவிட்ட பல்கலைக்
கழகங்களும் மாணவர்களுக்குத் தந்தனுப்புவது
அடுத்த நூற்றாண்டு ஆயுதம் அல்ல
கடந்த நூற்றாண்டுக் கவண்வில்.
உங்கள் பெண்ணும் விதிவிலக்கல்ல அவள்
ஈசல் உடம்புக்காரி காளான் மனசுக்காரி
என்னிடம் விட்டுவிடுங்கள் எனக்கு
அவளை இணை செய்து கொள்கிறேன்.
அகத்தியர் அவன் கண்களைக் கவனித்தார்
அவற்றில் நம்பிக்கை நட்சத்திரங்கள்
மிதந்து மிதந்து மின்னின.
அவனது சொல்லின் உஷணம் அவரைச்
சுட்டாலும், நெல்லிக்காயின் ஆழத்திலிருக்கும்
இனிப்பை நேசிப்பதுபோல் - அவன்
சொல்லின் உள்ளிருக்கும் அசையாத
நம்பிக்கையை ஆராதித்தார்.
என்ன அது சத்தம்?
என்னை விட்டுவிடுங்கள். தண்ணீரில்
கொல்லாதீர்கள். நீங்கள் என்னை நேசிக்க
வில்லை. நீங்கள் என்னை நேசிக்கவில்லை.
தமிழ் ரோஜாவின் கதறல் அவர்களின்
காதுமடல் திருகியது. அவர்கள் கால்களால்
பறந்தார்கள்.
Comentários