top of page
library_1.jpg

அஜந்தா - எல்லோரா

Writer's picture: Angelica Angelica

இந்தியக் கலைச்செல்வம் - 2

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்


 

அஜந்தா - எல்லோரா சில வருஷங்களுக்கு முன் நமது பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு அமெரிக்கா சென்றிருக்கிறார். அவரை ஸ்ரீமதி கோல்ட் (Mrs. Gould} என்ற அம்மையார் ஒரு விருந்தில் சந்தித்திருக்கிறார். அப்போது அவர் கேட்டிருக்கிறார் நேருவிடம், ‘நான் இந்தியா வருவதாக இருக்கிறேன்; அங்கு வந்தால் நான் முதலில் முக்கியமாக பார்க்க வேண்டியது என்ன?’ என்று. ‘நிச்சயமாக அஜந்தா - எல்லோராவைத்தான் பார்க்க வேண்டும்’ என்பதுதான் நமது பிரதம மந்திரியின் பதிலாக இருந்திருக்கிறது. இப்படி ஒரு தகவல். ஆம், உண்மைதான், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுக்காரர்களிடம் நாம் காட்ட வேண்டியது இமயத்தின் சிகரத்தையும், அகன்று பரந்த கங்கை நதியையும் அல்ல. அவையெல்லாம் இறைவன் அருளால் இயற்கையில் அமைந்தவை. சலவைக்கல் கனவு என்று புகழப்படும் தாஜ்மகாலைக் காட்டக் கூடாதோ? காட்டலாம். ஆனால், அது இந்திய கலாச்சாரத்தையோ, இந்திய மண்ணில் ஊறிய கட்டிடக் கலைக்கு சான்றாகவோ அமையாதே. இந்தியனது சிந்தனையில் பிறந்து, இந்திய நாகரீகத்திலே தவழ்ந்து இந்தியப் பண்பாட்டிலே வளர்ந்து இந்திய மண்ணிலே சிறப்புடன் கொலுவிருக்கும் கோயில்களைத் தானே காட்ட வேண்டும்? அதிலும் சிற்பக் கலை எல்லாம் கிரேக்கர்களுடையது தான், சித்திரக் கலை எல்லாம் இத்தாலியர்களுடையதுதான் என்று படித்து அதே எண்ணத்தில் ஊறியிருக்கும் மேலை நாட்டு ரஸிகர்களையும் மூக்கிலே விரலை வைத்து அதிசயத்து நிற்கும்படி செய்ய வல்ல கலைக் கூடங்களைத் தானே காட்ட வேண்டும். அத்தகைய கலைக் கூடங்கள்தான் அஜந்தா - எல்லோரா. அதனால்தான் இன்று தான் உங்களை எல்லாம் அஜந்தாவுக்கும் எல்லோராவுக்கும் அழைத்துச் செல்வதாக இருக்கின்றேன். கொஞ்சம் தொலைவிலுள்ள இடங்கள்தான் என்றாலும் மானசீகமாக அத்தனை தூரம் வருவதிலோ, அங்குள்ள அற்புதச் சித்திரங்களையும் சிற்பங்களையும் கண்டு களிப்பதிலோ களைப்பு ஒன்றுமே தோன்றாது தானே! அஜந்தாவும் எல்லோராவும் பம்பாய்க்குக் கிழக்கில் இருநூற்று ஐம்பது மைல் தூரத்தில் இருக்கிறது. இரண்டிடங்களையும் போய்ப் பார்க்க வசதியாக தங்குமிடம் அவுரங்காபாத்தான். அவுரங்காபாத் போய்விட்டால் அங்கிருந்து காரிலோ, அல்லது பஸ்ஸிலோ இரண்டு இடங்களுக்கும் சென்று வரலாம். ஆனால், இரண்டும் வேறு திசையில் இருப்பதால் ஒரே நாளில் இரண்டிடங்களுக்கும் சென்று வர இயலாது. மேலும் ஒவ்வொரு இடத்தையுமே நாள் கணக்காகச் சுற்றினாலும் அங்குள்ள சித்திர விசித்திரங்களையும் சிற்பச் செல்வங்களையும் - பூரணமாகக் காண முடியாதே. ஆதலால் செல்பவர்கள் அஜந்தாவுக்கு ஒரு நாள், எல்லோராவுக்கு ஒரு நாள் என்று ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நாம் முதலில் அஜந்தாவிற்கே செல்வோம். அஜந்தா அவுரங்காபாத்துக்கு வடக்கே 67 மைல் தூரத்தில் இருக்கிறது. அறுபது மைல் சென்றதுமே அஜந்தா என்னும் கிராமம் வரும். அங்கிருந்து பாதை பள்ளத்துக்குள் வளைந்து வளைந்து செல்லும். அப்படி ஏழு மைல் சென்றால் அஜந்தா மலையடிவாரத்திற்கு வந்து சேருவோம். அங்கே காரை நிறுத்திவிட்டு கிட்டத்தட்ட ஆறு பர்லாங்கு மலைமீது ஏறித்தான் செல்ல வேண்டும். நல்ல பாதை அமைத்து வைத்திருக்கிறார்கள். அதனால் ஏறுவது சிரமமாக இராது. வழி எல்லாம் பாரிஜாத புஷ்பங்கள் பூத்துக் குலுங்கும். நம் நாட்டில் பலரும் பவள மல்லிகையைத்தான் பாரிஜாதம் என்கின்றனர். ‘மலைகளும் மரங்களும் மணிக்கற்பாறையும் நிறைந்திருந்தது அந்தப் பஞ்சவடி’ என்று கம்பன் பாடுகிறான். அதைப் போல இங்குள்ள பாறைகளிடையே மணிக் கற்கள் கிடைக்கும். பச்சை நிறமுடைய கற்களே அதிகம் இருக்கும். இங்கு செல்லும்போதே இருநூறு அடிக்குக் கீழே வாகூரா நதி ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இந்த ஆறு அங்கு அர்த்த சந்திரவடிவமாக ஓடுகிறது; இந்த நதிக்கரையிலே உள்ள மலையைக் குடைந்துதான் குடவரை அமைத்திருக்கிறார்கள். அக்குடவரையில் தான் சிற்ப வடிவங்களைச் செதுக்கியிருக்கிறார்கள்; சித்திரங்களை எழுதியிருக்கிறார்கள். இந்தக் குடவரைகளில் சில இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னமையே அமைந்தது என்கிறார்கள். பின்னர் இதெல்லாம் புதர் மண்டிக் கிடந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண் டின் முற்பகுதியில் இந்த மலைக்கு வந்த ஒரு ஆங்கிலேயர்தான் இந்த குகைகளைக் கண்டு பிடித்திருக்கிறார். பின்னர் புதர்களை எல்லாம் நீக்கி அடைந்து கிடந்த மண்ணையும் வெட்டி எடுத்திருக்கிறார்கள், அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட குடவரைகள் 30. இவைகளில் 9,10,19,26,29 நம்பர் உள்ள குடவரைகள் எல்லாம் சைத்தியங்கள்; மற்றவை எல்லாம் சங்கராமாங்கள். இவைகளையே விகாரங்கள் என்றும் அழைக்கின்றனர். ஒன்று சொல்ல மறந்துவிட்டேனே! அஜந்தா குடைவரைகள் எல்லாம் பௌத்த சமயத்தைச் சார்ந்தவை, சைத்தியங்களிலெல்லாம் புத்த பகவானை வடித்து மக்கள் வணங்க வகை செய்திருக்கிறார்கள். விகாரங்கள் எல்லாம் பௌத்த பிக்ஷூகள் வந்து தங்க ஏற்பட்ட மடங்கள் போன்றவை. பௌத்த மத்த்திலும் இரண்டு பிரிவு இருந்திருக்கின்றன. ஹினாயனா பௌத்தம், மகாயானா பௌத்தம் என்று, ஆதியில் புத்தரை வடிவில் அமைத்து வணங்கி வரவில்லை. பின்னரே புத்தரைச் சிலை வடிவில் அமைத்து வணங்கி வழிபட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆதலால் முதன் முதல் வெட்டிச் செதுக்கிய குடைவரைகளில் புத்தர் சிலை வடிவில் இருக்கமாட்டார், 8, 9, 10, 12, 13, 30 குகைகளே முதல் முதல் அமைக்கப்பட்டவை என்று சரித்திர ஆசிரியர்கள் கருதுகின்றனர். இவைகளிலும் காலத்தால் முந்தியது 10ஆம் நம்பர் குடைவரையே. இது கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மற்றவை எல்லாம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னும் அமைக்கப்பட்டவை. இக்குடைவரைகளை அமைக்க முதலில் குந்தாலி {Pick Axe} என்னும் கோடரியை உபயோகித்திருக்க வேண்டும். பின்னரே உளியும் சுத்தியும் கொண்டு சுவர்கள் அமைத்தும் சிற்ப வடிவங்கள் வடித்தும் உருவாக்கியிருக்க வேண்டும். இந்தியக் குடைவரை அமைப்புக்களை ஆராய்பவர்களுக்கு அஜந்தா குடைவரை ஒரு அற்புதமான நிலைக்களனாக அமையும். அஜந்தா குடைவரைகளின் சிறப்பான அம்சம் அங்குள்ள சித்திரங்களே. சித்திரங்கள் எல்லாம் இத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் அழியாத வண்ண ஓவியங்களாக இருப்பது அதிசயிக்கத்தக்கதே. இந்தச் சித்திரங்களிலும் காலத்தால் முந்தியவையாக இருப்பது 9, 10 குடைவரைகளேதான். காலத்தால் இச்சித்திரங்கள் வேறுபட்டிருந்தாலும் வேலைத் திறனில் ஒன்றுக்கு ஒன்று குறைந்ததாகவே இல்லை. அவைகளிலுள்ள அழகு, உணர்ச்சிகளை உருவாக்கும் திறம், பெண்கள் நிற்கும் கோலம் எல்லாவற்றையும் பற்றி எவ்வளவு சொன்னாலும் மாளாது. சித்திர உலகிலேயே ஒரு அற்புத சாதனை என்று அறுதியிட்டுக் கூறலாம். அஜந்தா சித்திரங்கள் எல்லாம் புத்தர், போதிசத்தவர் - இவர்கள் வாழ்க்கையோடு ஒட்டிய வரலாறுகள், புத்த ஜாதகக் கதைகள் இவைகளை ஒட்டிய சித்திரங்களாகவே இருக்கக் காண்போம். சொல்லால் விளக்க முடியாத அரிய விஷயங்களை எல்லாம் வண்ணத்தால் விளக்க முனைந்திருக்கிறார்கள் இந்த சித்ரீகர்கள். எல்லா நிலையிலும் உள்ள ஆடவர், பெண்டிர், குழந்தைகள் அவர்களது ஆசாபாசங்கள், மனித வாழ்க்கையிலுள்ள மேடு பள்ளங்கள், இன்ப இந்தியக் கலைச் செல்வம் துன்பம் முதலிய மனித உணர்ச்சிகள், இந்நிலவுல கில் மக்கள் படும் துயரங்கள் இன்னும் என்ன என்ன எல்லாமோ உருவாகியிருக்கின்றன அற்புதச் சித்திரங்களாக. இலை மட்டும்தானா? மக்கள் வாழ்வு, அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், ஆப்ரணங்கள், போர் வீரர்களது ஆயுதங்கள், மக்கள் உபயோகித்து வந்த பாண்டங்கள், இசைக் கருவிகள் போன்றவைகளையும் சித்திரத்தில் உருவாக்கி நமது முன்னோர்களின் நாகரிகத்தையும் கலாச்சாரத்தையும் அறிய ஒரு அரிய சரித்திர ஏடாகவும் இச்சித்திரங்கள் அமைந்திருக்கின்றன. மக்கள் மட்டுமல்ல; அந்த மக்கள் மனதில் உருவாகியிருந்த யக்ஷர்கள், கின்னரர்கள், கந்தருவர், அப்சரஸ்கள் எல்லாம் அங்கே நமக்குத் தரிசனம் கொடுக்க வந்து விடுகிறார்கள். இத்தனையும் அஜந்தா குடைவரையிலுள்ள சுவரிலேதான். விதானங்களில் தாமரைகள், அன்னங்கள் எல்லாம் நிறைந்த அழகிய கோல வடிவங்கள். எல்லாவற்றிலும் பரிணமிப்பது அழகு, அழகு, அழகு என்பது தான். கல்லின் மீது சாந்து பூசி அந்தச் சாந்தின் ஈரம் உலர்வதன் முன்னே மூலிகைகளும், மணிக் கற்பொடிகளும் சேர்த்து அரைத்த வண்ணத்தைக் கொண்டு சித்திரம் தீட்டியிருக்க வேண்டும். அதனாலேயே ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகியும், அச்சித்திரங்கள் எல்லாம் அழியாத வண்ண ஓவியங்களாக இருக்கின்றன. சித்திரங்களின் ஜாபிதாவைக் கொடுத்து உங்களைத் திணற அடிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. ஆனால், அதே சமயத்தில் கட்டாயம் காண வேண்டிய சித்திரங்கள் என்ன என்ன என்று சொல்லாமல் இருக் கவும் விருப்பம் இல்லை. முதல் குடைவரையிலே உள்ள சித்திரங்களில் கையில் தாமரை மலர் ஏந்தி நிற்கும் போதிசத்துவர் மிகவும் அழகு வாய்ந்த சித்திரம்; அவரையே பத்மபாணி என்றும் கூறுவர். அதே குடைவரையில் தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவிற்காக தன் சதையையே அறுத்துக் கொடுத்த சிபிச் சக்ரவர்த்தியின் வரலாறும் சித்திரமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. இரண்டாவது குடைவரையில் ஒரு சாம்ராஜ்ய சக்ரவர்த்தியின் காலடியில் ஒரு பெண் வீழ்ந்து வணங்கி மன்னிப்புப் பெறும் காட்சி உருவாகி இருக்கிறது. இந்தச் சித்திரம் யாரைக் குறிக்கிறது என்று தெரியவில்லை என்றே பலரும் கருதுகிறார்கள். என்றாலும் அமரர் கல்கி அவருடைய சிவகாமி சபதம் என்ற அற்புத நவீனத்தில், இது தமிழ்நாட்டு நடன சிங்காரியாம் சிவகாமி, புலிகேசியின் காலடியில் விழுவதாக புலிகேசி கற்பனை செய்து எழுதியது என்று குறிப்பிடுகிறார். பதினேழாவது குடைவரையில் தன்னை அலங்கரிக்கும் அரசிளங்குமரி ஒருத்தியும் அவளைச் சுற்றி நிற்கும் பணிப் பெண்கள் நால்வரையும் சித்திரித்திருக்கிறார்கள். அஜந்தா பெண்கள் எல்லாம் அழகு வாய்ந்தவர்கள்; ‘அழகுக்கு அழகு செய்யும் தலை அலங்காரக் கலையில் வல்லவர்கள் என்பதை இந்தச் சித்திரம் நன்கு விளக்குகிறது’ என்று மேல் நாட்டு விமர்சகர்கள் வாயாரப் புகழ்கிறார்கள். இந்த பதினேழாவது குடைவரை யிலே தன் மனைவி யசோதரையையும் தன் மகன் ராகுலனையும் பிக்ஷைப் பாத்திரத்துடன் சந்திக்கும் புத்த பகவானையும் பார்க்கிறோம். தாய் - சேய் இவர்கள் உள்ளத்தில் புத்தர் எவ்வளவு உயர்ந்திருக்கி றார் என்பதை உருவகிக்க புத்தரை மிகப்பெரிய உருவில் சித்திரித்து இருக்கிறார் சித்ரீகர். இப்படி எண்ணற்ற சித்திரங்களைத் தீட்டி ஒரு அற்புதக் கனவு உலகத்தையே சித்திரிக்கிறார்கள் அஜந்தா சித்ரீகர்கள். சித்திரத்தில் மாத்திரம் அஜந்தா சிறந்திருக்கிறது என்றில்லை; இங்குள்ள சிற்ப வடிவங்களும் சிறப்பானவையே. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, முதல் குடைவரையிலேயுள்ள புத்தர் சிலை ஒன்றை மட்டும் பார்த்தால் போதும். ஒரே சிலைதான் என்றாலும் மூன்று கோணத்தில் நின்று பார்த்தால் முகத்தில் மூன்று பாவங்கள் தெரியும். நேரே நின்றால் நம்மைப் பார்த்து புன்னகை புரிவார். வலது புறம் ஒதுங்கினால் அப்படியே தியானத்தில் இருந்து விடுவார். இடப்புறம் ஒதுங்கினால் முகத்திலே ஒரு சாந்தியை நிலவ விடுவார். இப்படி உள்ளத்தில் உள்ள உணர்ச்சிகளை எல்லாம் உருவாக்கிக் காட்டும் அற்புத சிற்பமாக முதல் குடைவரையிலே புத்த பகவான் நமக்குத் தரிசனம் கொடுக்கிறார். அஜந்தாவில் உள்ள அதிசயச் சிற்பங்கள் பல வற்றை நான் உங்களுக்குக் காட்டக் கூடும் என்றாலும் சிற்ப உலகில் அஜந்தாவைவிடச் சிறப்பான எல்லோராவிற்கும் இன்றே செல்ல திட்டமிட்டிருக்கிறோமே! ஆதலால் அஜந்தாவிலேயே உங்களை நிறுத்தும் ஆசையை அடக்கி இனி உங்களை எல்லோராவிற்கு அழைத்துச் செல்ல விரைகிறேன். அஜந்தாவிற்குத் தென் மேற்கே அறுபது மைல் தூரத்தில் எல்லோரா இருக்கிறது. ஆனால், அஜந்தாவிலிருந்து குறுக்கு வழியாக எல்லோரா செல்வதற்குப் பாதை இல்லை. அஜந்தாவிலிருது அவுரங்கா பாத்திற்குத் திரும்பி அதன் பின் பதினேழு மைல் மேற்கு நோக்கிச் சென்றால் எல்லோரா வந்து சேருவோம். எல்லோராவின் சிறப்பு அங்குள்ள குடைவரைகளில் இந்து, சமணம், பௌத்தம் என்னும் மூன்று சமயங்களும் ஒன்றி உறவாடுவதுதான். தேசீய ஒரு மைப்பாட்டைப் பற்றி. இன்று அதிகம் பேசும் நாம், எவ்வளவோ காலத்திற்கு முன்னாலேயே சமயம் மூலம், கலை மூலம் அந்த ஒருமைப்பாட்டை உருவாக்க நமது கலைஞர்களும் அவர்களை ஆதரித்த மன்னர்களும் முயன்றிருக்கிறார்கள் என்று அறிகிற போது மிக்கதொரு உவகையையே அடைகிறோம். இங்கு இருப்பது 34 குடைவரைகள், அவைகளில் சரிபாதி - ஆம், பதினேழு குடைவரைகள் இந்து சமயச் சார்புடையவை; பன்னிரெண்டு பௌத்த மதச் சார்பும், ஐந்து சமண மதச் சார்பும் உடையவை. இவைகளில் காலத்தால் முந்தியது பௌத்த குடைவரைகளே. அவை கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டிற்குள் உருவாகி இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர் கலை விமர்சகர்கள், இவைக ளில் பல மகாயான பௌத்தர் காலத்தியவை என்றும் கணக்கிடுகின்றனர். பௌத்த குடைவரைகளில் எல் லாம் சிறப்பானது பத்தாவது குடைவரையே. அதனையே விஸ்வ கர்ம சைத்தியம் என்கின்றனர். வாயிலையே பிரமாதமான அழகுடன் சிற்பி செதுக்கியிருக்கிறான்; அதனைப் பார்த்தால் ஏதோ மரத்தில் செய்து ஒண்டித்து வைத்திருக்கும் வேலைதானோ என்று தோன்றும். கல்லில் அதுவும்; ஒரு பெரிய மலையைக் குடைந்து அமைத்திருக்கிறார்கள் என்று எண்ணவே முடியாது. அந்த சைத்தியம் 26 அடி அகலமும் 85 அடி நீளமும் 34 அடி உயரமும் உள்ள குடைவரை. அதன் கூரை 50 அடி உயரத்தில் கஜப்பிரஷ்ட ஆகிருதி உடையது. இந்த சைத்தியத்தின் மத்தியில் பதினாறு அடி உயரத்தில் ஒரு ஸ்தூபம்; அந்த ஸ்தூபத்தின் முன்னால் பன்னிரெண்டடி உயரத்தில் ஒரு புத்த விக்கிரகம் உட்கார்ந்திருக்கும் பாணியில் அதனை உருவாக்கியிருக்கிறான் சிற்பி. போதி மரத்தடியில் ஞானோதயம் பெற்ற நிலையில் புத்த பகவான் அங்கே இருந்து நமக்குக் காட்சி தருகிறார். விதானங்களில் எல்லாம் கந்தருவர்களும் வித்யாதரர்களும் அந்த சைத்தியத்தில் நின்று கொண்டு மெதுவாக 'புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி' என்று சொன்னால் அந்த ஒலி எதிரொலித்து நம் காதுகளை மாத்திரம் அல்ல, நம் உள்ளத்தையே பரவசப்படுத்தும். அங்குள்ள புத்த பகவானுக்கு நம் வணக்கத்தைச் செலுத்தி விட்டு கொஞ்சம் காலை எட்டிப் போட்டால் பதினாறாவது குடைவரை வந்து சேருவோம். அதுதான் உலகப் பிரசித்தி பெற்ற கைலாயக் குடைவரை. இக்குடைவரைதான் உலகம் முழுவதிலும் உள்ள மிகச் சிறந்த குடைவரை என்று கலைஞர்கள் கூறுகிறார்கள். இக்குடைவரை மற்றைய குடைவரைகளைப் போல மலைச்சரிவின் பக்கத்திலிருந்து குடைந்து எடுக்கப்பட்டது அன்று. வானுலகில் இருந்து இறங்கிய விஸ்வகர்மன் ஒரு மலையின் உச்சியில் இறங்கியிருக்கிறான். அவன் இறங்கிய இடத்திலிருந்து மலையை வெட்டிச் செதுக்கியே பூமியின் தளத்திற்கு வந்திருக்கிறான். இதனால் சாரம் கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் எல்லாம் இல்லாமல் அவனால் இக்குடைவரை அமைக்க முடிந்திருக்கிறது. இக்குடைவரையை உரு வாக்கக் குறைந்தது ஒரு நூறு வருஷமாவது ஆகியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. இக்குடைவரையைக் குடைந்து கிட்டத்தட்ட 300 லட்சம் கன அடியுடைய கற்களை அப்புறப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் கணக்கிடுகின்றனர், இது. எல்லாம் அதிசய சாதனைதான். என்றாலும் இப்படி ஒரு குடை வரையை உருவாக்கத் திட்டமிடுவதற்கு எவ்வளவு சிந்தனை செய்திருக்க வேண்டும், எவ்வளவு கற்பனை அந்தச் சிந்தனையில் உதித்திருக்க வேண்டும் என்றெல்லாம் நம்மால் கற்பனை பண்ணவே இயலவில்லை. இக்குடைவரை மற்றக் குடைவரைகளைப் போல் அல்லாமல் ஒரு பெரிய வெளிப் பிரகாரம் அமைத்து அந்தப் பிரகாரத்தின் நடுவிலே 150 அடி நீளமும் 100 அடி அகலமும் உள்ள ஒரு பெரிய கோயில் ஒன்றையே உருவாக்கியிருக்கிறான். பிரதான கோயிலே சோழ நாட்டு மாடக் கோயிலைப் போல 25 அடி மாடத்தின் மேல்தான் செதுக்கப்பட்டிருக்கிறது. அந்த 25 அடி உயரம் உள்ள மலைச் சுவர்களில் எல்லாம் யானைகளும் யாளிகளும், சிங்கங்களும் உருவாகியிருக்கின்றன. இந்தக் கைலாயத்தை உருவாக்குவதற்கு கற்பனை, அன்று இராவணன் கைலை மலையையே அசைத்த கதை நின்று உதவியிருக்கிறது. கறித்தவன் கண் சிவந்து கயிலை நன்மலையைக் கையால் மறித்தலும் மங்கை அஞ்ச வான்வர் இறைவன் நக்கு நெறித்தொரு விரலால் ஊன்ற நெடுவரை போல வீழ்ந்தான்

என்று நமது நாவுக்கரசர் பாடுகின்ற கவிதை அங்கே கல்லாலே வடித்த காவியமாக மலர்ந்திருக்கிறது. இந்த அற்புத சிற்பவடிவில் பல பகுதிகள் சிதைந்திருந்தாலும் அதைக் காணும் நம் உள்ளத்தில் ஒரு உன்னத எழுச்சியையே தருவதாக இருக்கிறது. இந்தச் சிற்ப வடிவின் அழகிலேயே மெய்மறந்து நின்று விடாமல் பக்கங்களிலுள்ள படிகளில் ஏறி., மேலே சென்று, அங்கு லிங்க வடிவில் உருவாகியிருக்கும் கைலாய நாதனை வணங்கலாம். அஞ்சாத கயிலாய மலை எடுத்த அரக்கர்கோன் தலைகள் பத்தும் மஞ்சாடு தோள் நெறிய அடர்த்த அந்த கைலாயர், தஞ்சைப் பெருவுடையாரைப் போல் பெரிய ஆகிருதி படைத்தவர் அல்ல என்றாலும் ஏழு எட்டு - அடி உயரத்திற்குக் குறையாத வடிவினர். சதுரமான ஆவுடையார் பேரில் அவர் உருவாகி இருக்கிறார். இவர் இருக்கும் கருவறைக்கு முன்னாலே ஒரு பெரிய மகா மண்டபம்; இம் மண்டபத்தைப் பதினாறு தூண்கள் தாங்கி நிற்கின்றன. அம் மண்டபத்துச் சுவர்களில் ராமாயண வரலாற்றுச் சித்திரங்கள் எல்லாம் உப்புச உருவில் உருவாகி இருக்கின்றன. இந்த மகா மண்டபத்தையும் முந்திக் கொண்டு இருபது அடி சதுரமுள்ள ஒரு மண்டபத்தில் சிவபிரானின் வாகனமான நந்தி ஒன்று உருவாகியிருக்கிறது. இவற்றையெல்லாம் பார்த்து விட்டு அடுத்த பக்கத்திலுள்ள படிக்கட்டுகள் வழியாக இறங்கி வெளிப்பிரகாரத்தைச் சுற்றினால் அங்கு பக்கத்திற்கு ஒன்றாக உருவாகியிருக்கும் தத்ரூபமான யானைகள், துவஜ ஸ்தம்பங்களைக் காணலாம். சிதைந்திருப்பதினால்தான் அந்த யானைகள் உயிர் உள்ளவை அல்ல என்றும் தெரிந்து கொள்ளலாம். இந்த வெளிப் பிரகாரத்தை அடுத்து கல்லிலே குடைந்து அமைத்திருக்கும் வராந்தா போன்ற மண்டபத்திலேதான் எண்ணிறந்த சிற்ப வடிவங்கள் அர்த்தநாரி, கங்காதரர், திரிபுராந்தகர் முதலிய சிவ மூர்த்தங்கள் மகாவிஷ்ணுவின் பல கோலங்கள் ஹரியும் ஹரனும் இணைந்து நிற்கும் கோலம் எல்லாம் காணலாம். எத்தகைய ஒருமைப்பாட்டு உணர்ச்சியோடு இந்த கைலாசக் குடைவரை உருவாகியிருக்க வேண்டும் என்று அதிசயித்தும் நிற்கலாம். இந்து சமயச் சிறப்பை எல்லாம் காட்டும் இந்தக் கைலாசக் குடைவரையைக் காட்டிய பின் மற்றக் குடைவரைகளுக்கும் உங்களை இழுத்தடிக்கும் நோக்கம் எனக்கில்லை. என்றாலும் சமணக் குடைவரை ஒன்றையாவது காட்டாமல் விட்டுவிடுவேனானால் இந்தப் பேச்சு பூரணத்துவம் பெற்றதாகாதே! ஆதலால் இப்போது என்னுடன் விறுவிறு என்று வடக்கு நோக்கி ஒன்றரை மைல் நீங்கள் நடக்க வேண்டும். அங்குதான் சமணக் குடைவரைகளில் சிறந்ததான இந்திர சபா இருக்கிறது. இதுவும் இருநூறு அடி தூரம் மலையைக் குடைந்து அமைத்த குடைவரைதான். இதற்கு ஒரு மாடிக் கட்டடம் வேறே இருக்கிறது. மாடியில் உள்ள மண்டபத்தைச் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பன்னிரெண்டு தூண்கள் தாங்கி நிற்கின்றன. அம்மண்டபத்தைச் சுற்றியே 24 தீர்த்தங்கரரின் வடிவங்கள் உருவாகியிருக்கின்றன. அம்மண்டபத் தில் இந்திரன் கொலு இருக்கிறான். அவன் காலடியில் ஐராவதம் நிற்கிறது. இந்த இந்திர சபாவே எல்லோராவில் உள்ளவைகளில் கலை அழகு நிரம்பியது என்று சிலர் கருதுகின்றனர். எல்லோராவில் உள்ள குடைவரைகளில் அதிமுக்கியமான குடைவரைகளுக்கு எல்லாம் உங்களை அழைத்துச் சென்றுவிட்டேன். அவகாசமும் வசதியும் உள்ளவர்கள் ஒரு நடை செல்லலாம். ஆற அமர இருந்து குடைவரை குடைவரையாகச் சுற்றலாம். எப்படி அஜந்தா சித்திரக் கலையில் மகோந்நத ஸ்தானம் வகிக்கிறதோ அப்படியே சிற்ப உலகில் மகோந்நத ஸ்தானம் வகிக்கும் எல்லோராவையும் பார்த்து விட்டோம் என்ற நிறைந்த மனதிருப்தியோடு ஊர் திரும்பலாம்.


 

Comments


Subscribe here to get my latest posts

Thanks for submitting!

© 2023 Powered by Tamil Bookshelf

  • Facebook
  • Twitter
bottom of page