top of page
library_1.jpg

கஜுராஹோ புவனேஸ்வரம் கோயில்கள்

Writer's picture: Angelica Angelica

இந்தியக் கலைச்செல்வம் - 3

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்


 

கஜுராஹோ

புவனேஸ்வரம் கோயில்கள்


தமிழ்நாட்டின் சரித்திர ஏடுகளைப் புரட்டினால் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் இறுதிக் காலம், கலை உலகில் ஒரு பொற்காலம் என்று அறிவோம். சோழ சாம்ராஜ்யத்தின் மகோந்நதமான காலம் அது. ஆம். அந்த சாம்ராஜ்யத்தை உருவாக்குவதில் பெரியதொரு பங்கு ராஜ ராஜ சோழனுடையது தானே? 985-இல் அரியணை ஏறிய அந்த ராஜ ராஜன் படை கொண்டு சென்று சேரர், பாண்டியர், பல்லவர், சாளுக்கியர் எல்லோரையும் வென்று அவரவர் நாடுகளை எல்லாம் சோழ சாம்ராஜ்ஜியத்தின் கீழ் கொண்டு வந்திருக்கிறான். காந்தளூரில் கலம் அறுத்து, பாண்டியன் அமர புஜங்களை முறியடித்து,


வேங்கை நாட்டையும் கங்கபாடியையும் அடிமை கொண்டு நுளம்பபாடி யைக் கைப்பற்றி, குடமலை நாடு, கொல்லம், கலிங்கம் முதலிய நாடுகளின் பேரிலும் படை கொண்டு சென்று வெற்றி மேல் வெற்றி பெற்றிருக்கிறான். இத்துடன் திருப்தி அடையாமல் கடல் கடந்து சென்று ஈழ நாட்டையும், மும்முடிச் சோழ மண்டலம் ஆக்கி இன்னும் அலைகடல் நடுவில் பல கலம் செலுத்தி, முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரத்தையும் கைப்பற்றி ஜயங்கொண்ட சோழனாகவே திரும்பியிருக்கிறான். இப்படி அகண்டதொரு தமிழகத்தை உருவாக்கிய ராஜ ராஜனது உள்ளம் ஏனோ நிறைவு பெற்றதாக இல்லை. அவனுக்குத் தெரியும், இந்த அகண்ட தமிழகம், தக்ஷிணப் பிரதேசம் என்றும் நிலைத்து இராது என்று. ஆதலால் அகண்ட தமிழகத்தை விட ஒரு உயர்ந்த தமிழகத்தை உருவாக்க வேண்டாமா என்று எண்ணியிருக்கிறான்.


அந்த உயர்ந்த தமிழகத்தை உருவாக்குவதில் முதற்படியாக, ஒரு பெரிய கோயிலையே கட்ட முனைந்திருக்கிறான். எண்ணூறு அடி நீளமும், நானூறு அடி அகலமும் உள்ள ஒரு பரந்த வெளியை தலைநகரான தஞ்சையிலே தேர்ந்தெடுக்கிறான். அந்தப் பரந்த வெளியிலே ஏழு வாயில்கள், நான்கு மண்டபங்களைக் கட்டியிருக்கிறான். பெரியதொரு கருவறை அமைத்து அக்கருவறையின் பேரிலே 216 அடி உயரத்திலே தக்ஷிண மேரு என்னும் விமானத்தை உயர்த்தியிருக்கிறான்.


அக்கோயிலை பெரிய கோயில் என்றே அழைத்திருக்கிறான். அக்கோயிலின் பெயருக்கு ஏற்ப அங்கே 18 அடி உயரமுள்ள பெரிய லிங்க உரு. - ஒன்றையும் பிரதிஷ்டை செய்து அவரைப் பெருஉடையார் என்று வாழ்த்தி வணங்கியிருக்கிறான். பெரு உடையாருக்கு ஏற்ற வகையில் பெரிய பெரிய சிற்பங்களை கல்லிலும் செம்பிலும் உருவாக்கியிருக்கிறான். இப்படி ஒரு உயர்ந்த தமிழகத்தை ராஜராஜன் உருவாக்கியது பத்தாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதி என்று சரித்திர ஏடுகள் சொல்லுகின்றன.


சென்ற வருஷம் நான் வடநாட்டுத் தலங்களைக் காணச் சென்றபோது எனக்கிருந்த அதிசயம் என்ன வென்றால் வடநாட்டில் உள்ள பல பிரபலமான கோயில்கள் எல்லாம் அதே பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பதினோறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலுமே எழுந்தவை என்பதுதான். இவைகளில் சிறப்பானவை ராஜஸ்தானத்தில் உள்ள அபூமலையில் உள்ள டில்வாரா சமணக் கோயில்கள். ஒரிசா என்னும் கலிங்கத்தில் உள்ள புவனேஸ்வரர் கோயில்கள், மத்திய பிரதேசத்திலுள்ள கஜுராஹோ கோயில்கள். இவைகள் எல்லாமே தமிழ்நாட்டில் ராஜராஜன் பெரிய கோயில் கட்டிய போது, சற்றேறக்குறைய அதே காலத்தில் கட்டப்பட்டவைதான்.


ஆம்! பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் மாத்திரம் அல்ல இந்திய நாடு முழுவதுமே ஒரு எழுச்சி இருந்திருக்கிறது. அந்த எழுச்சியின் காரணமாகவே கலை வளர்ந்திருக்கிறது. காவியம் விரிந்திருக்கிறது. ஏன், நாட்டின் பெருமையே வானளாவ உயர்ந்திருக்கிறது, தமிழ்நாட்டுப் பெரிய கோயிலைச் சிலர் பார்த்திருப்பீர்கள். இல்லாவிட்டால் அதைப் பற்றிப் பல தடவையாவது கேட்டிருப்பீர்கள். ஆதலால் இன்று கஜுராஹோ கோயில்களுக்கும் புவனேஸ்வரம் கோயில்களுக்கும் உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.


இந்திய நாட்டின் கட்டிடக் கலையை விமர்சனம் செய்யும் இந்தியர் அதனை நாகரம், வேசரம், திராவிடம் என்று மூன்று வகைப்படுத்திக் கூறுவர். ஆனால், ஆங்கில விமர்சகர்களோ, இவற்றை ட்ரெவிடியன், இன்டோ ஆரியன் (Dravidian, - Indo Aryan) என்ற இரண்டே வகையில் அடக்கி விடுவர். இந்த முறைப்படி கஜுராஹோ புவனேஸ்வரம் கோயில்கள் எல்லாம் இண்டோ ஆரியன் கட்டிடக் கலை வகையைச் சேர்ந்தவையே. தென்னிந்தியத் திராவிடக் கட்டிடக் கலைக்கு மாறுபட்டவை என்றாலும், இரண்டு விதமான கட்டிடக் கலைகளுக்கும் ஒருமைப்பாடுகள் இல்லாமல் இல்லை.


நம் நாட்டுக் கோயில் வாயில்களில் காணும் கோபுரங்களை அங்கே காண முடியாவிட்டாலும் கருவறைமேல் நாம் கட்டியிருக்கும் விமானங்களைப் போல் பெரிய பெரிய சிகரங்களை அமைத்திருக்கிறார்கள். கருவறையை அடுத்த அர்த்த மண்டபமே அங்கு அந்தரங்கமாகிறது. அதையே ஜகன் மோகன மண்டபம் என்றும் அழைத்திருக்கின்றனர். அதனை முந்திக் கொண்டிருக்கும் மகா மண்டபமே அங்கு சபா மண்டபமாக அமைகிறது. இன்னும் நம் கோயில்களில் உள்ள நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் முதலியன அங்கு காணப் பெறாவிட்டாலும் அங்கு நர்த்தன மந்திர், போகமந்திர் என்னும் மண்டபங்கள் இருக்கின்றன. இந்த அடிப்படை ஒற்றுமை வேற்றுமைகளை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு நாம் கஜுராஹோ புவனேஸ்வரம் கோயில்களைச் சுற்றிப் பார்க்கலாம்.


அன்று விந்தியப் பிரதேசம் என்று அமைக்கப்பட்டு இன்று மத்திய பிரதேசத்துள் இணைந்திருக்கும் பண்டல் கண்டு பகுதியிலேதான் கஜுராஹோ என்ற தலம் இருக்கிறது. இரயிலில் செல்வதானால் ஹர்பால்பூர் என்ற இடம் வரை ரயிலில் சென்று, அங்கிருந்து 60 மைல் பஸ்ஸில் பிரயாணம் செய்ய வேண்டும். கார் வசதி உடையவர்கள் ஆக்ரா, குவாலியர், ஜான்சி வழியாகச் செல்லலாம், கஜுராஹோ... கஜுராஹோ என்றால் என்ன? அதன் பெயர் நம் வாயில் நுழையமாட்டேன் என்கிறதே என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் கேட்கிறது. நம் நாட்டில் காணும் ஈச்சமரங்களை அந்தப் பிரதேசங்களில் கஜுர் மரங்கள் என்கின்றனர்.


அங்குள்ள கோயில் கதவுகளில் தங்க கஜுர் மரங்கள் இரண்டு இடம் பெற்றிருந்ததின் காரணமாக இந்தப் பெயர் வந்தது என்று வரலாறு கூறுகிறது. அதைவிட ஒரு காலத்தில் கஜுர் மரங்கள் நிறைந்து அடர்ந்த காடாக அந்தப் பிரதேசம் இருந்திருக்க வேண்டும், அதனால் அந்த வட்டாரத்தை கஜுராஹோ என்று அழைத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது எனக்கு.


இங்குள்ள கோயில்கள் எல்லாம் ஒரு பெரிய ஏரியைச் சுற்றி நிற்கின்றன என்று ஒரு வர்ணனை. இன்று அந்தப் பிரதேசத்தில் உள்ள கஜுர் சாகர், நிறோறாதால் என்று கூறப்படும் ஏரியையே அன்று அப்படிக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. பத்தாம் நூற்றாண்டில் இந்த கஜுராஹோ ஒரு பெரிய நகராக இருந்திருக்க வேண்டும். அப்போது அந்தப் பிரதேசத்தை ஆண்ட சண்டேலா மன்னர்களே, இங்குள்ள கோயில்களைக் கட்டியவர்கள் என்று வரலாறு கூறுகிறது. இந்த சண்டேலா மன்னர்கள் ரஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். சந்திர வம்சத்து அரசர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்ட்தின் காரணமாகவே இவர்களைச் சரித்திரம், சண்டேலா வம்சத்தவர் என்று அழைக்கிறது. இவர்கள் அந்த வட்டாரத்தில், எட்டு மைல் சதுர வெளியுள்ள பரப்பில் 85 கோயில்களைக் கட்டினார்கள் என்று சொல்லப்படுகிறது. 


ஆனால், இன்று இருப்பவை எல்லாம் இருபது கோயில்களே. இவைகளே, அந்த மன்னர்களின் கலை ஆர்வத்தை விளக்கப் போதியதாகும். இக்கோயில்கள் எல்லாம் கி.பி. 950 முதல் 1050 வரை உள்ள ஒரு நூறு வருஷ காலத்திற்குள்ளேயே கட்டப்பட்டவை என்றும் தெரிகிறது. இந்த மன்னர் பரம்பரையில் முந்தியவர்கள் எல்லாம் நல்ல விஷ்ணு பக்தர்களாக இருந்திருக்கின்றனர். பிந்தியவர்களோ சிவ பக்தர்கள். ஆதலால் விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பல கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இப்படி இவர்கள் சைவ - வைஷ்ணவ பக்தர்களாக இருந்தாலும், பௌத்தம், சமணம் முதலிய பிற மதங்களையும் வெறுத்தவர்களாகக் காணோம். இன்றும் கஜுராஹோவில் உள்ள சிறப்பான கோயில்கள் சமணக் கோயில்களாக இருப் பதைக் காண்கிறோம்.


இங்குள்ள கோயில்களில் சௌசத்யோகினி என்ற கோயில் ஒன்றே கஜுரா சாகர் கரையில் இருக்கிறது. அக்கோயில் சோழர் காலத்துக் கற்றளிகள் போல் முழுவதும் நல்ல கருங்கல்லாலேயே கட்டப்பட்டது. மற்ற கோயில்கள் எல்லாம் மஞ்சள் கலந்த சிவப்பு நிறக் கற்களாலேயே கட்டப்பட்டவை. இக்கல் லையே Buff coloured sand stone என்கின்றனர்.


நுணுக்க வேலைப்பாடுகள் செய்வதற்கே ஏற்றவகையில் அவை சிற்றுளிக்கு ஈடு கொடுத்து, நிற்கக் கூடியவை என்றும் தெரிகிறது. இக்கோயில்களுக்குப் பெரிய மதில்கள் ஒன்றும் கிடையாது. பிரம்மாண்டமான அளவிலும் அமைந்தவை அல்ல. இங்குள்ள பெரிய கோயிலான கந்தூரியா மகாதேவர் கோயிலே 102 அடி நீளமும் 66 அடி அகலமும் உள்ள ஒரு பெரிய மேடை மீதுதான் கட்டப்பட்டிருக்கிறது. அக்கோயில் சிகரமும் 101 அடி உயரமே. இனி இங்குள்ள கோயில் களைச் சுற்றிப் பார்க்கலாம்.


கஜுராஹோ சாகர் கரையில் உள்ள சவுசத் யோகினி கோயில் என்று ஒன்றை முன்னமே குறிப்பிட்டேன். அது ஒரு காளி கோயில் - 'சவுசத்' என்றால் அறுபத்தி நான்கு என்று பொருளாம். 64 யோகினிகள் அங்குள்ள காளியின் செடிகளாய் இருக்கிறார்கள் என்பதினாலேயே சவுசத் யோகினி கோயில் என்கின்றனர். 18 அடி உயரமுள்ள ஒரு மாடத்தின் மீது கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பாதாளக் கோயிலைச் சுற்றி 64 யோகினிகளுக்கும் சிறு சிறு குடில்கள் அன்று அமைத்திருக்கிறார்கள். ஆனால், இன்று இருப்பது 34 குடில்களே. மற்றவை எல்லாம் காலக் கதியில் அழிந்து போயிருக்க வேண்டும். இக்கோயிலுக்கு வடபுறம் உள்ள ஒரு திறந்த வெளியிலேதான் இங்குள்ள பிரதான கோயில்கள் எல்லாம் இருக்கின்றன.


அவைகளில் எல்லா வகையிலும் சிறப்பான கோயில் கந்தேரியா மகாதேவர் கோயில் தான். இதுவும் ஒரு பெரிய மாடத்தின் பேரிலே கட்டப்பட்டிருக்கிறது. நான்கு மூலைகளிலும் கட்டப்பட்ட சிறு குடில்கள் இடிந்து போய் விட்டன என்றாலும், பிரதான கோயில் அழியாமல் நிற்கிறது. அக் கோயிலின் ஒவ்வொரு அங்கமும் இந்தியக் கலைக் கோயில்களின் அருமையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. கோயில் முகப்பில் கல்லாலேயே அமைத்த ஒரு தோரண வாயில். அதில்தான் எத்தனை எத்தனை சங்கீத விற்பன்னர்கள், எத்தனை வாத்தியங்களை வாசித்துக் கொண்டு நிற்கின்றனர். ஒருவரை ஒருவர் நெருக்கமாகவே அணைத்துக் கொண்டிருக்கும் காதலர் வடிவங்கள் தாம் எத்தனை எத்தனை? இன்னும் விண்ணில் பறக்கும் கந்தருவர்கள், யக்ஷ யக்ஷிகள் என்னும் பல வடிவங்கள் நிறைந்ததாக அத்தோரண வாயில் அமைந்திருக்கிறது.


கோயில் சுவரில் எல்லாம் காத்திரமான நல்ல சிற்ப வடிவங்கள் பட்டை பட்டையாக மூன்று நான்கு அடுக்குகளில் காணப்படுகிறது. இவைகளில் எல்லாம் சிறப்பாயிருப்பவை பெண்களின் வடிவங்களே. அப்பெண்களின் அங்கங்கள் ஒவ்வொன்றுமே உயிர்த் துடிப்போடு விளங்கும். பார்க்கும் ஆடவர், உள்ளத்தை எல்லாம் கொள்ளை கொள்ளும், இவர்களுக்கு இடையில் கோயிலில் கருவறையிலே சலவைக் கல்லாலே லிங்க உருவில் மகாதேவர் எழுந்தருளியிருப்பார்.


இக்கோயிலுக்கு வடபுறமே தேவி ஜகதாம்பாள் கோயில். ஆதியில் இக்கோயிலில் மகாவிஷ்ணுவே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்திருக்கிறார். பின்னரே அவரை எடுத்துவிட்டு கருத்த வடிவமான காளியைப் பிரதிஷ்டை செய்து, அவளை ஜகதாம்பாள் என்று அழைத்திருக்கின்றனர். இக்கோயிலுக்கு வடபுறம் உள்ள கோயிலை சித்த குப்தர் கோயில் என்கின்றனர். அங்கே மூல மூர்த்தியாய் நிற்பவர் சூரிய நாராயணனே. 5 அடி உயரத்தில் கம்பீரமாக ஏழு குதிரை பூட்டிய தேரில் ஏறிக் கொண்டு பவனி வருகிறார். இந்த இரண்டு கோயில் சுவர்களிலுமே எண்ணற்ற சிற்ப வடிவங்கள்.


இந்த முற்றத்தின் வடகிழக்குக் கோடியில் இருப்பது விஸ்வநாதர் கோயில். இந்த விஸ்வநாதர் கோயிலுக்கு எதிரேதான் பெரியதொரு நந்தி மண்டபம். இந்த விஸ்வநாதர் கோயில் சுவர்களில்தான் ஒரு பழக் குலையையும், கிளியையும் ஏந்திக் கொண்டு பெண்ணொருத்தி நிற்கிறாள். இன்னும் குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் மங்கை ஒருத்தியும், வேணுகானம் செய்யும் நங்கை ஒருத்தியும் நிற்கிறார்கள். இங்குள்ள நந்தி ஆறு அடி உயரமே உள்ளது என்றாலும், நல்ல கம்பீரமான வடிவம். இந்த விஸ்வநாதர் கோயிலுக்கு தென்மேற்குப் பகுதியிலேதான் பார்வதி கோயில் இருக்கிறது.


இதற்கும் தென் பக்கத்தில்தான் லக்ஷ்மணன் கோயில் என்று அழைக்கப்படும் விஷ்ணு கோயில் இருக்கிறது. கந்தாரியா மகாதேவர் கோயிலுக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய கோயில் இதுதான். இக்கோயிலில் தான் மகாவிஷ்ணு லட்சுமி சமேதராக எழுந்தருளியிருக்கிறார். இன்னும் இங்கேயே பிரம்மாவும் சிவனும் வேறே தனித் தனி சந்நிதியில் நிற்கிறார்கள். வாயிலில் அமிருத மந்தன வரலாறு சிற்ப வடிவில் இருக்கிறது. கோயிலில் மூலவராக நிற்பவர் மூன்று திருமுகங்களுடனும் நான்கு திருக்கரங்களுடனும் நிற்கிறார்.


மூன்று முகத்தில் ஒரு முகம் மனித முகம். மற்றவை இரண்டும் நரசிம்ம முகமும், வராக முகமும். இத்தகைய ஒரு வடிவம் தென் தமிழ்நாட்டிலோ, அல்லது வடநாட்டிலோதான் உள்ளது. வேறு இடங்களில் காணக் கிடைப்பது அன்று. இந்த லட்சுமணன் கோயிலுக்குத் தெற்கே மதங்கேஸ்வரர் கோயில் என்று ஒரு சிவன் கோயில் இருக்கிறது. அக்கோயிலின் எதிரே உள்ள மண்டபத்தில் ஒரு பெரிய, வராகம் நிற்கிறது. ஒன்பது அடி நீளமும், 6 அடி உயரமும் உள்ள இந்த வராகத்தின் உடலிலே எண்ணற்ற தெய்வ வடிவங்கள். அண்டங்கள் முழுவதையுமே உண்டவன் உரு அல்லவா அது!


இத்தனை கோயில்களை ஒரே மைதானத்தில் பார்த்த நாம், இனி கிழக்கு நோக்கி ஒன்றிரண்டு மைல் நடக்க வேண்டும், அங்குதான் பிர்மா, வாமனர், ஜாபேரி என்ற மூன்று கோயில்களையும் இன்னும் கண்டை, ஆதிநாதர், பார்ஸவ நாதர் என்னும் மூன்று பெரிய சமணக் கோயில்களையும் பார்க்கலாம். போகிற வழியில் ஒரு பெரிய அனுமானையும் காணலாம். இங்குள்ள கோயில்களில் சிறப்பானது பார்ஸவ நாதர் கோயில்தான். இக்கோயிலின் சுவரில்தான் காதல் கடிதம் எழுதும் கன்னி, காலில் தைத்த முள்ளை எடுக்கும் பாவனையில் மோகினி, குழந்தையைக் கொஞ்சும் கோகிலம், தலைவாரிப் பொட்டிட்டுக் கொள்ள முனையும் நங்கை முதலிய பெண்ணரசிகளை எல்லாம் காணலாம். ஒவ்வொருவரும் ஒரு அழகுப் பெட்டகம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல?


நேரம் ஆகிறதே! இன்னும் நாம் புவனேஸ்வரம் செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோமே. ஆதலால், மனோவேகம், வாயு வேகமாய் புவனேஸ்வரத்திற்கே செல்வோம். பழைய கலிங்கமே, இன்றைய ஒரிஸ்ஸா ராஜ்ஜியமாக இருக்கிறது. புவனேஸ்வரத்துக்கு ரயிலில் செல்வதுதான் வசதி. ரோட்டில் சென்றால், கட்டாக்கில் மகாநதியை எல்லாம் கடந்தாக வேண்டும், ரயிலில் சென்றால், ஜம்மென்று புவுனேஸ்வரம் ஸ்டேஷனிலே இறங்கலாம். ஒரிஸ்ஸா ராஜ்ஜியத்தில், கோனாரக் பூரியில் எல்லாம் கோயில்கள் இருந்தாலும் புவனேஸ்வரம் தான் கோயில்கள் நிறைந்த நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள கோயில்கள் எல்லாம், தமிழ்நாட்டுக் கோயில்களைப் போன்று பிரம்மாண்டமானவையே.


இங்கு அன்று 7,000 கோயில்கள் இருந்தன. அவற்றில் இன்று இருப்பது 500 என்றெல்லாம் உபசாரமாகச் சொல்வார்கள். இங்குள்ள கோயில்கள் பல நல்ல சிற்பங்களோடு கூடிய கலைக் கோயில்களே. இங்குள்ள கோயில்களில் பிரதானமானது, பிரம்மாண்டமானது லிங்கராஜ் கோயில்தான், இக்கோயில் பிரகாரம் 520 அடி நீளமும், 465 அடி அகலமும் உள்ளது. ஆம் கிட்டத்தட்ட தஞ்சைப் பெரிய கோயில் அளவிற்கு, இருக்கிறதே என்று அதிசயிப்போம். இக்கோயில் பிரகாரத்திலேயே 65 சிறு சிறு கோயில்கள், இக்கோயில் விமானம் 127 அடி உயரம். உருண்டு திரண்டு நிற்கும் கோயில் விமானம், சிகரம் எல்லாம் அழகுக்கு அழகு செய்யும்.


மூன்றுலகத்திற்கும் சக்கவர்த்தியான திரிபுவனேஸ்வரருக்கு, எடுப்பித்த கோயில் அது. அத்திரிபுவனேஸ்வரரை லிங்க உருவில் அமைத்து அவரை லிங்கராஜ் என்றே அழைத்திருக்கின்றனர். இங்கும் கருவறையை முந்திக் கொண்டு நிருத்த மண்டபம், போக மண்டபம் எல்லாம் இருக்கின்றன. கோயில் உட்புறச் சுவர்களில் சிற்ப வடிவங்களே கிடையா. ஆனால், அதற்கு வட்டியும் வாசியுமாக, வெளிப்புறம் எல்லாம் எண்ணற்ற சிற்ப வடிவங்கள். லிங்கராஜ் கோயிலைச் சுற்றி பகவதி, பார்வதி, ஆனந்த வாசுதேவர், பிரம்மேஸ்வர், பாஸ்கரேஸ்வரர், கேதர்ரேஸ்வரர் கோயில்கள் இருக்கின்றன. இவைகளில் பரசுராமேஸ்வரர் கோயில்தான் காலத்தால் முந்தியது என்கின்றனர். இக்கோயிலில் பல சிற்ப வடிவங்கள் உள்ளன. அவைகளில் சிறப்பானது சிவபார்வதி திருமணக் கோலம்.


இங்குள்ள கோயில்களில் எல்லாம் அழகானது ராஜா ராணி கோயில்தான். லிங்கராஜ் கோயிலுக்கு கொஞ்சம் தூரத்திலேயே வயல்களுக்கு இடையே இருக்கிறது. இங்குதான் அற்புதம் அற்புதமான சல பாஞ்சிகை வடிவங்கள் இருக்கின்றன. கொடியடியில் நிற்கும் மடக் கொடியார் எல்லாம் அழகு வாய்ந்தவர்கள்.


அவர்களது எழிலும், அவர்களது நிறமும் ஒயிலும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். இப்புவனேஸ்வரத்தில் உள்ள கோயில்களைச் சுற்றிப் பார்க்க ஒன்றிரண்டு நாட்கள் காணாது. அத்தனையையும் பார்க்க அவகாசமில்லை என்றாலும், லிங்கராஜ் கோயிலுக்கு வடபுறம் உள்ள முக்தேஸ்வரர் கோயிலைப் பார்க்காமல் திரும்பவும் கூடாது. இது கி.பி.975 ஆம் வருஷம் கட்டப்பட்டது என்கின்றனர். கோயில் முகப்பில் கல்லிலே செதுக்கி நிறுத்தப்பட்டருக்கும் தோரணம் மிக மிக அழகு வாய்ந்தது.


அது கல்லாகத் தோன்றவில்லை. ஏதோ பட்டுத் துணியிலே சரிகை வேலைப்பாடு செய்தது போல இருக்கும். அவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடு. இங்கும் மரத்திற்கு மரம் தாவி விளையாடும் மந்தியர் உருவாகி இருப்பதோடு, பெண் வடிவங்கள் பலவும் உருவாகி இருக்கும். இன்னும் அவகாசமும் வசதியும் இருந்தால், புவனேஸ்வரத்திலிருந்து பூரி சென்று ஜகந்நாதரைத் தரிசித்து வரலாம். பிரபலமான கோனாரக் சூரியனார் கோயிலையும் கண்டு வரலாம்.


இவ்வளவு சொன்னபின், “கஜுராஹோ புவனேஸ்வரத்தில், சிங்கார மிதுனச் சிற்பங்கள் நிறைய உண்டு என்பார்களே... அதைப்பற்றி ஏன் ஒன்றுமே சொல்லவில்லை” என்று கேட்பீர்கள். உண்மைதான், கஜுராஹோவில் வாத்சாயனரது காமநூலில் சொல்லப்பட்டுள்ள கலவிக் கரணங்களை எல்லாம் சிற்பமாக வடித்திருக்கின்றனர். புவனேஸ்வரத்திலும் இச்சிற்ப வடிவங்கள் உண்டு. இச்சிற்ப வடிவங்களைக் கோயிலில் செதுக்கி நிறுத்தலாமா என்று ஒரு பிரச்சினை. அதற்கும் எத்தனை எத்தனையோ சமாதானங்கள்.


கோயிலுக்கு வருபவர்களது உள்ள உறுதியைச் சோதிப்பதற்காகவே அவை இங்கு நிறுத்தப்பட்டிருக்கின்றன என்பாரும் உளர். எனக்கென்னமோ அதெல்லாம் சரி என்றுதான் தோன்றுகிறது. கணவன் மனைவி தாம்பத்ய உறவு இருவர் உள்ளத்தும் உருவாகும் அன்பை அடிப்படையாகக் கொண்டது. அந்த உறவை, சிற்பிகள் வடிக்கும்போது யாதொரு மனோ விகற்பமும் இல்லாமல்தான் வடித்திருக்க வேண்டும். அதை விகற்பமாக எண்ணுபவர்கள் உள்ளத்தில் தான் கோளாறே தவிர வடிவங்களில் கோளாறு என்று எண்ண இயலவில்லை. எல்லாவற்றையும் கலை அழகோடு காணும் கலை உள்ளம் படைத்தவர்களாக நாம் இருக்க வேண்டும். இருந்தால் அதுவே போதும்.


 

Comments


Subscribe here to get my latest posts

Thanks for submitting!

© 2023 Powered by Tamil Bookshelf

  • Facebook
  • Twitter
bottom of page