இந்தியக் கலைச்செல்வம் - 10
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
கலையும் கலை மெருகும்
சிற்பத்தில் - காவியத்தில்
எங்கள் ஊரில் ஒரு முருகன் கோயில். அங்கு சோமவாரம் தோறும் சந்தனக் காப்பு. மாலை ஐந்து மணி முதல் ஏழு மணி வரை திரையிட்டு அலங்காரம் நடந்துகொண்டிருக்கும். திரை விலகியதும், தமிழ்க் கடவுள் முருகனைக் காண எண்ணற்ற பக்தர்கள் சந்நிதியில் காத்துக் கிடப்பார்கள். ஏன் இத்தனை கூட்டம் இந்தக் கோயிலில் என்று எண்ணுவேன் நான். எனக்கோ மூர்த்தி ஆடை அணிகள் இல்லாமல், அலங்கார ஆடம்பரம் இல்லாமல் இருக்கும்போதுதான் அழகாய் இருப்பதாகத் தோன்றும். இந்தச் சந்தனக்காப்பு என்பதெல்லாம் பக்தர்கள் அன்பு மேலீட்டால் செய்வதே ஒழிய மூர்த்தியை அலங்கரிப்பதாகாது என்று எண்ணுபவன் நான்.
இன்னும் சொல்லப்போனால் இவர்கள் அலங்கோலமே செய்வதாகக்கூடச் சொல்வேன். இப்படி எண்ணிக்கொண்டே ஒரு சோமவாரத்தன்று இரவில் கோயிலுக்குள் நுழைந்தேன். சந்தனக் கோட்டிங்குக்குள் புதைந்து இருந்தாலும் முருகன் புன்னகை பூத்து அருணதளபாத பத்மம் அனுதினமுமே துதிக்க, அறிய தமிழ் தானளித்த மயில் வீரனாக நிற்கிறான். கண்களில் கருணை நிறைந்திருந்தது. எனக்கோ, இத்தனை அழகையும் சந்தனக் காப்பிட்ட பின்னும் எப்படிக் காட்ட முடிந்தது என்று அதிசயமாயிருந்தது. அதற்காக அடுத்த வாரம் திரை விலக்கப்படுவதற்கு முன்னாலேயே கோயிலுக்குச் சென்றேன்.
அர்ச்சகர் அனுமதி பெற்று, சந்தனக் காப்பிடும்போது நானும் கூடவே இருந்தேன். அளவாகச் சந்தனத்தை எடுத்து மிக்க கவனத்தோடு காப்பிட்டார் அர்ச்சகர். முகம் முழுவதையும் சந்தனக் குழம்பால் மறைத்துவிட்டார். பின்னர் தன் சிறு விரலால் கண்களில் இருந்த சந்தனத்தை அகற்றினார். சிற்பி செதுக்கிய கண்கள், அற்புதமாக அமைந்த கருணாரஸத்தை வெளிப்படுத்தின. அதன் பின்னர் மூர்த்தியின் உதட்டிலிருந்த சந்தனக் குழம்பை லாவகமாக அகற்றினார். கொஞ்சம் குங்குமத்தை எடுத்து அளவுக்கு மேற்படாமல் அங்கு தடவினார். கடைசியாக கொஞ்சம் குங்குமத்தை விரல் நுனியில் எடுத்து இதழ் கடைகளில் வைத்து அந்த இதழ்க் கடைகளை மேல் நோக்கி கொஞ்சம் தூக்கினார். இதுவரை ‘உம்’ என்று நின்றுகொண்டிருந்த முருகன் புன்னகை பூக்க ஆரம்பித்துவிட்டான். எத்தனை சாந்தி அந்தத் திரு உருவைப் பார்ப்பவர்களுக்கு! விஷயம் விளங்கிற்று எனக்கு. அலங்காரக் கலையை அடியோடு வெறுக்கும் நானும், சரிதான் இந்த அர்ச்சகர் கலை மெருகை உணர்ந்தவர் என்று கண்டேன். சித்திரக் கலாசாலை மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிக்கும்போது அவர்கள் எழுதிய உருவத் தில் புன்னகையை வருவிக்க இதழ்க் கடையைக் கொஞ்சம் தூக்கு என்பார்கள். இந்தப் பாடத்தை இந்த அர்ச்சகர் சித்திரக் கலாசாலையில் மழைக்குக் கூட ஒதுங்காமல் எங்கோ கற்றிருக்கிறார். சிற்பி செய்த சிலை அற்புதமாக இருக்கலாம்; ஆனால், அதை ஆடை அணிகளால் அலங்கரிப்பதால் அதன் அழகையே மறைக்கலாம்.
அதிலும் கலை மெருகு தெரிந்தவன் அங்கும் தன் கைத்திறனைக் காட்டி அந்த அலங்காரத்தையும் அழகுடையதாகச் செய்யலாம். இப்படி அழகுக்கு அழகு செய்யும் திறனைத்தான். கலை மெருகு என்கிறோம் நாம். அழகான கலைக்கு அற்புதமான மெருகு ஏற்றுவது கலைஞன் கையில் இருக்கிறது. அதை அவன் கையாளும் திறமையில் இருக்கிறது இந்தக் கலை. அழகான கலைக்கு அற்புதமான மெருகு ஏற்றும் திறமையை தமிழ்நாட்டுச் சிற்பிகளும், சித்ரீகர்களும் நிரம்பப் பெற்றிருந்தார்கள். அப்படி அவர்கள் கலை மெருகு ஏற்றிய காரணத்தாலேதான் சில சிலைகள் நிரம்பப் பெருமை வாய்ந்தவையாகவும், அழகு நிறைந்தவையாகவும் இன்றும் இருக்கின்றன. “தமிழ்நாட்டுச் சிற்பக் கலையின் சிகரம் நடராஜ மூர்த்தம். சமயம், சரித்திரம், கலை எல்லாம் சேர்ந்த கலவை அது” என்று அருங்கலை மேதை ஆனந்தக் குமாரசுவாமி அறுதியிட்டுச் சொல்லிவிட்டார். நடராஜர் உருவம் இல்லாத சிவன் கோயில்கள் தமிழ்நாட்டில் இல்லை. சின்னக் கோயிலானாலும் அங்கொரு சின்ன நடராஜர் இல்லாமல் இரார். ஆனால் பல நடராஜ உருவங்கள் சாஸ்திர முறைப்படியும் கலை அழகோடும் இருப்பதில்லை. சில கோயில்களிலே உள்ளவைதான் கலை மெருகோடு கூடியவை.
நான் பார்த்த நடராஜர் திருவுருவங்களிலே சிறந்தது, பெரியது, தஞ்சை ஜில்லாவில் கோனேரி ராஜபுரத்தில் உள்ளதுதான். திருவாசியுடன் சேர்த்து எட்டடி உயரத்தில் இருப்பதோடு மட்டும் அல்லாமல், நிரம்பவும் சாஸ்திரோக்தமாகவும் இருக்கிறது. தூக்கிய திருவடியும் கஜஹஸ்தமும் கொஞ்சமும் வளைவு நெளிவுகள் இல்லாமல் அழகாய் அமைந்திருக்கின்றன. சாந்தம் நிறைந்த முகம், புன்னகை தவழும் இதழ்கள் எல்லாம் மூர்த்தியை மிக்க வசீகரமுடையதாக ஆக்குகின்றன. இந்த மூர்த்தியை உருவாக்கிய சிற்பி கலை மெருகு தெரிந்தவனாயிருந்திருக்கிறான். சாதாரணமாக நாம் நம் காலையோ கையையோ தடவிப் பார்க்கலாம். அப்படித் தடவும்போது மேலிருந்து கீழே தடவினால் மென்மையாக வழவழ என்றிருக்கும்.
கீழிருந்து மேல் நோக்கித் தடவினால் சொரசொர என்றிருக்கும். ரோமக் கணைகள் இருப்பதுதான் இதற்குக் காரணம். இந்த நுணுக்கத்தை அறிந்திருக்கும் சிற்பி, செப்பு விக்கிரகங்களை வார்க்கிறபோது ரோமக் கணைகளை எப்படி உருவாக்குகிறது? இதை நேரில் தொட்டுத் தடவி அறிய அர்ச்சகர் அனுமதிக்கமாட்டார். நாம் எத்தனைதான் அவரை விட பக்தி உடையவர்களாக, தூயவர்களாக இருந்தாலும்கூட அவருக்கு டிமிக்கி கொடுத்து, அசந்திருக்கும்போது தடவிப் பார்த்துவிட வேண்டும். அப்படிப் பார்த்தவன் நான். அதற்கு இயலாவிட்டால் அர்ச்சகரைக் கொண்டே தூக்கிய திருவடியின் பேரில் ஒரு மெல்லிய துணியை மேலிருந்து கீழும், கீழிருந்து மேலுமாக ஓடவிட்டு உண்மை தெரிந்துகொள்ளலாம். மேலிருந்து கீழே வரும்போது துணி மெதுவாக வழி யும். கீழிருந்து மேலே போகும்போது சொரசொர என்று ஏறுவதையும் காணலாம். கேட்கலாம். இது ஒரு நல்ல கலை மெருகுதானே? இதைவிட அற்புதமான கலை மெருகுடைய இன்னொரு நடராஜத் திருவுருவமும் உண்டு. அது இருப்பது தஞ்சைப் பெரிய கோயிலில். இந்தச் சிலையை, இந்த ஆடவல்லானை அமைத்த சிற்பி கோனேரி ராஜபுரத்து நடராஜர் திருவுருவை அமைத்த சிற்பியைவிடக் கலை உணர்ச்சி நிரம்ப வாய்ந்தவன். தமிழ்நாட்டில் உள்ள எல்லா நடராஜர் உருவங்களிலும் முகம் கோணாமல், திரும்பாமல் நேரே பார்ப்பதாகத்தான் இருக்கும். நடராஜரது ஆனந்தத் தாண்டவம் இடது கையையும், இடது காலையும் வலப்புறமாக வீசி ஆடும் ஆட்டம் என்பது எல்லாருக்கும் தெரியும்.
அந்த ஆட்டத்தில் அமையும் சுழற்சிதான், அண்டங்களில் உள்ள சுழற்சி என்பதையும் அறிவோம். அணுவுக்குள் அணுவாக நின்று அண்டங்களை ஆட்டும் அண்ணல், சுழன்று சுழன்று ஆடுவதினாலேதான் அண்டங்கள் ஆடுகின்றன என்பதையும் கூடத் தெரிந்திருக்கிறோம். ஆம்; எல்லாச் சுழற்சியும் வலப்புறமாக அமைந்த சுழற்சிதான். இந்தச் சுழற்சிக்கு இன்னும் அதிக வேகம் கொடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்திருக்கிறான் சிற்பி. எல்லா அவயங்களும் வலப்புறமாகச் சுழலும்போது முகம் மட்டும் கொஞ்சம் இடப்புறம் திரும்பிவிட்டால் சுழற்சியின் வேகம் அதிகப்பட்டுவிடுமல்லவா? இதை உணர்ந்து இந்த நடராஜன் திருமுகத்தை மட்டும் கொஞ்சம் இடப்பக்கமாகத் திருப்பியிருக்கிறான் சிற்பி. உடனாடும் அம்மை சிவகாமியின் பக்கம் முகம் திரும்பி கடைக்கண்ணால் அருள்புரிகிறார் என்றெல்லாம் விளக்கம் கூறுவர் அறிஞர். ஆனால், இப்படித் திருப்பிய சிற்பியின் திறன், அவன் கலை மெருகு கைவரப் பெற்றவன் என்பதைக் காட்டுகிறது. கலை மெருகு என்றால் கற்பனைத் திறனோடு கைத்திறனும் சேர்ந்ததுதானே. சிற்பக் கலை மெருகுக்கு உதாரணமாக இன்னும் ஒரு சிலையைப் பார்க்கலாம். மேலே சொன்ன ஆடவல்லான் கோயில் கொண்டிருக்கும் அதே தஞ்சையிலே சமீபத்தில் ஒரு கலைக்கூடம் நிறுவியிருக்கிறார்கள். நூற்றுக்கு மேற்பட்ட சிலைகளை, ஆம் கல்லிலும், செம்பிலும் அமைந்தவைகளைத்தான் பல இடங்களில் இருந்து கொண்டுவந்து சேர்த்து வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று சிவபார்வதியின் சிலை. சந்திரசேகரர் என்று கூறுவர் சிற்ப நூல் வல்லார்; திருவையாற்றில் ஐயாறப்பன் கோயிலில் உள்ள குளத்தில் மூழ்கி கைலாசக் காட்சியைக் கண்டவர் அப்பர் பெருமான். அவர் கண்ட காட்சியைச் சொல்கிறார்: காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்
என்று ஏதோ களிறும், பிடியும், குயிலும் பெடையும் சேர்ந்து வரும் தோற்றம் எல்லாம் சிவனும் சக்தியுமாக தோன்றுகிறது அவருக்கு. சேர்ந்து வருவது என்றால் ஒருவரை விட்டு ஒருவர் விலகி, அகல நடந்து அமுத்தலாகவா வருகிறார்கள். களித்துக் கலந்ததோர் காதல் கனிவுடன் வருகிறார்கள். ஒருவரோடு ஒருவர் பின்னிக்கொண்டு வருகிறார்கள். இப்படி உருவாகியிருக்கிறது சிலை, அப்பர் பாட்டிற்கு விளக்கம் கொடுப்பதுபோல. இந்த சிற்பம் உருவான கதை தெரியுமா? உருவாக்கிய சிற்பியே சொன்னான்: எல்லாம் மானசீக உலகில்தான். “முதலில் நான் சிவன் பார்வதி இருவரையும் சேர்த்து உருவாக்க எண்ணவில்லை. சந்திரசேகரனை மட்டும்தான் உருவாக்க எண்ணினேன். கல்லில் உருவை வரைந்து வலப்பக்கத்தைச் செதுக்கி வேண்டாத பாகத்தையெல்லாம் வெட்டி எடுக்கும்போதுதான், இடப்பக்கத்திலும் வெட்டிச் செதுக்கி எடுக்கவேண்டிய பாகம் அதிகம் என்று கண்டேன். அப்போது உதயமாயிற்று ஒரு கற்பனை. ஏன் இந்த இடப்பக்கத்தில் இருக்கும் சிறு இடத்தில் ஒரு உமையைச் செதுக்கிச் சேர்த்துவிடக் கூடாது என்று. பின்னர் என் சிற்றுளி வேலை செய்தது. இருக்கும் இடத்தினுள்ளேயே அந்தப் பார்வதியும் சமாளித்துக்கொள்கிறாள். ஆம், இட நெருக்கடி காரணமாக சிவபிரானைத் தழுவி நிற்கும் ஒரு கொடியாகவே உமை அமைந்துவிடுகிறாள்” என்று சொன்னான் சிற்பி! நான் சொன்னேன் சிற்பியிடம், “ஆம்; இந்தக் கொடியையும், இந்தக் கொடியை அணைத்துக்கொள்ளும் கொம்பையும் கண்டால், மஞ்சிடை வயங்கித் தோன்றும் பவளத்தின் வல்லி அன்ன குஞ்சரம் அனைய வீரன் குலவுத் தோள் தழுவிக் கொண்டாள்
என்று கம்பனது வர்ணனை ஞாபகத்திற்கு வருகிறது” என்று. “ஆம், வரும் ஐயா வரும் உமக்கு” என்று சொல்லிக் கொண்டே மறைந்துவிட்டான் சிற்பி, என் கற்பனை உலகிலிருந்து. இந்தச் சிற்பியும் கலை மெருகை நன்குணர்ந்தவனே. இன்னும் இதுபோல் எத்தனையோ உதாரணங்கள் சிற்ப உலகில் காணும் கலை மெருகுக்குக் கொடுக்கலாம். இனி, சித்திர உலகிற்கு வரலாம். சிற்பக் கலையில் தமிழன் அடைந்திருக்கும் உன்னத ஸ்தானத்தை அவன் அன்றும் சரி, இன்றும் சரி, சித்திரக் கலையில் பெறவில்லை. சித்தன்ன வாசல், தஞ்சைப் பெரிய கோயில், பனைமலை முதலிய இடங்களில் எல்லாம் நல்ல சித்திரங்கள் ஆயிரம் வருஷங்களுக்கு முன்னமேயே எழுதப்பட்டு இன்னும் அழியா வண்ணத்துடன் இருக்கிறது என்பது பெருமைப்படுவதற்கு உரியதுதான்.
அத்தோடு சேரநாட்டில் பத்மநாபபுரம் அரண்மனையிலும், திருச்சூர் வடுகநாதன் கோயில், திருவஞ்சைக்களம் நடராஜர் சந்நிதியிலும் உள்ள சுவர் சித்திரங்கள் எல்லாம் தமிழ்நாட்டின் சித்திரக் கலைக்கு பெருமை தேடிக் கொடுப்பவைதான் என்றாலும், அஜந்தா வண்ண ஒவியங்களோடு போட்டி போடும் தன்மை வாய்ந்தவை அல்ல என்று சொல்வதற்கு நாம் வெட்கப்பட வேண்டியதில்லை. ஆதலால் சித்திரக்கலை சம்பந்தப்படுவது மட்டில் நாம் பழமையை மறந்து புதுமைக்கு வரலாம். இந்திய நாட்டுச் சித்திரக் கலை வெறும் வண்ணத்தையும் சுண்ணத்தையும் மட்டும் கொண்டு ஆக்கப்பட்டவை அன்று. அவற்றிற்கு அப்பால் சிறந்த எண்ணத்தையும் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.
சித்திரக் கலை உலகில் ரவிவர்மாவின் பெயர் பிரபலமானதுதான் என்றாலும் அவருடைய சிருஷ்டிகளில் இந்தியப் பண்பாடு அதிகம் இல்லை. உபயோகித்துள்ள வர்ணம் கண்கவர் வனப்புடையதாக இருக்கும். படத்தில் இருக்கும் ஆண்களும், பெண்களும் உருண்டு திரண்ட மேனியுடையவர்களாக இருப்பார்கள். காட்சி ஜோடனைகள் பிரமாதமாக இருக்கும். என்றாலும் அவைகளில் ஒரு ஜீவகளை, உயிர்த்துடிப்பு இருக்காது. காரணம் முழுக்க முழுக்க அவர் மேல் நாட்டுப் பாணியிலேயே பயின்று மேல் நாட்டார் கண்ட வர்ண விஸ்தாரணத்திலேயே முழுகிவிட்டதனால்தான். ஆனால், அதே சமயத்தில் வங்காளத்தில் தோன்றிய அவனிந்திரநாத் தாகூர், நந்தலால் போஸ், பம்பாயைச் சேர்ந்த மஜூம்தார் முதலியவர்கள் எல்லாம் சிறந்த சித்திரங்களை இந்திய பண்பாட்டிற்குக் கொஞ்சமும் முரண்படாது உருவாக்கி, சித்திர உலகில் ஒரு நிரந்தர ஸ்தானமே பெற்றுவிட்டார்கள். இந்தத் துறையில் சாந்தி நிகேதனத்து கலாபவனத்தின் சேவை சிறந்தது. இந்தக் கலாபவனத்தில் உருவான ஒரு சித்ரீகரின் கலை மெருகு ஒன்றை மட்டும் சொல்லி என் பேச்சை முடித்துவிடுகிறேன். மைசூரிலே வெங்கடப்பா என்ற ஒரு கவிஞர். அவர் மைசூரின் முன்னைய மகாராஜாவால் கெளரவிக்கப்பட்டவர். கலாபவனத்து அவனிந்திரரின் அபிமான சிஷ்யர். சித்திரக் கலையில் சிறந்த தேர்ச்சி அடைந்ததோடு அந்தக் கலையின் நுணுக்கங்களையும் நன்றாகத் தெரிந்தவர். அவருடைய மாயமான் படம் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. அவரும் அவருடன் சேர்ந்த இரண்டு பிரபல சித்ரீகர்களும் டார்ஜீலிங் கில் தங்கியிருந்தார்கள். பல வருஷங்களுக்கு முன்னால் பனி படிந்த அந்த இமய மலையின் தோற்றங்களை சித்திரங்களாகத் தீட்டிக்கொண்டிருந்தார்கள். எழுதினார்கள் படங்களை.
ஆனால், அந்தச் சிவப்புக் கலந்த நீல நிறத்தை தங்கள் படங்களில் கொண்டுவரவே முடியவில்லை. எழுதி எழுதிச் சோர்ந்துபோய்விட்டார்கள் எல்லோரும். மூவரும் படுக்கைக்குச் சென்றுவிட்டார்கள். விடிந்து எழுந்து பார்த்தால் வேங்கடப்பாவின் மூளை வேலை செய்திருக்கிறது. இரவுக்கிரவாகவே அவர் தன் படத்தை அந்த வர்ணத் தண்ணீரிலேயே தோய்த்து எடுத்திருக்கிறார். அவ்வளவுதான். தூரிகையால் சாதிக்க முடியாத ஒன்றை தோய்த்து எடுத்து சாதித்துவிட்டார் என்று தெரிந்தது. இது கலை மெருகோடு கூடிய கைத்திறன்தானே. கலையும் கலை மெருகும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதோ என்று தோன்றும், என்றாலும் கலைக்குக் கற்பனை வேண்டும். கலை மெருகுக்கு கைத்திறன் வேண்டும். இரண்டும் ஒன்றுக்கொன்று உறுதுணையாக நின்றால்தான் கலா சிருஷ்டி தோன்றும். அப்படிப்பட்ட சிருஷ்டிகள் சிற்பக் கலையில் எண்ணிறந்தவை உண்டு. சித்திரக் கலையில் இப்போது அவ்வளவு அதிகம் இந்த மெருகு இல்லாவிட்டாலும் நாளடைவில் சித்திரக் கலை வளர வளர புதுப்புது மெருகுகளும் ஏற்படத்தானே செய்யும்?
留言