top of page
library_1.jpg

சிற்பக் கலையில் உத்திகள் - மிகை அமைப்பு

Writer's picture: Angelica Angelica

இந்தியக் கலைச்செல்வம் - 8

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்


 

சிற்பக் கலையில் உத்திகள் - மிகை அமைப்பு


இராம கதை எல்லோருக்கும் தெரியும். கதையில் வருகின்ற பாத்திரங்களைப் பற்றியும் தெரியும். வான்மீக முனிவர் அமைத்துக் கொடுத்த சித்திரங்கள் பலவற்றை, அதி அற்புதமாக மாற்றி அமைக்கிறான் கவிச்சக்ரவர்த்தி கம்பன். காமவெறியோடு ராமனையும், லக்ஷ்மணனையும் மாறி மாறி அணுகும் வான்மீகரது சூர்ப்பனகை, கம்பனிடம் காமவல்லி கன்னியாகவே மாறுகிறாள். ராமனோடு தர்க்கவாதம் புரிகிறாள். ராமன் காலையில் நீராடச் சென்றிருக்கிறான். சீதை பர்ணசாலையில் தனியே இருக்கிறாள். இலக்குவன் வெளியே காத்து நிற்கிறான். தனக்கும் ராமனுக்கும் இடையே இருப்பவள் சீதையே. அவளை எடுத்துச் சென்றால்தான் தன்னை ராமன் விரும்புவான் என்று நினைக்கிறாள். நினைத்ததை முடிக்க விரைகிறாள். இடைபுகுந்த இலக்குவன் வாளால் அவள் மூக்கை அரிந்து விடுகிறான்.


மூக்கறுபட்ட சூர்ப்பனகை ஓடிச் சென்று, ராமன் முன்பு விழுந்து புரண்டு அழுகிறாள். கேள்வி கேட்டு ஒரு ரசமான வாதத்தை வேறு கிளப்புகிறாள். “என் மூக்கோ அறுபட்டு விட்டது. எனக்கிருக்கும் வரபலத்தால் நல்ல அழகியாக நான் மாறிவிடக் கூடும். போன மூக்கையுமே திரும்பப் பெற்றுவிட முடியும். ஆனால், பெண்ணுக்கு மூக்கு என்பதொன்று அவசியம்தானா? மூக்கில்லா விட்டால் அழகு குறைந்தா போகும்? நல்ல சம ஒழுங்கில் இருக்கும் முகத்தில் மூக்கென்று ஒன்று நீண்டு உயர்ந்திருப்பது மிகையே அல்லவா” என்று கேட்கிறாள். இல்லை, ‘மேக்குயரும் நெடுமூக்கு மடந்தையர்க்கு மிகையன்றோ?’ என்று கம்பர் சூர்ப்பனகையைக் கேட்க வைக்கிறார். வாதம் ரொம்ப ரஸமாகத்தானே இருக்கிறது?


இந்தக் கேள்வி, கலா ரசிகை சூர்ப்பனகையிடமிருந்து மட்டும் பிறக்கவில்லை. இப்படிப்பட்ட சூர்ப்பனகை ரசிகர்கள் பலர் இன்று நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். ஏதோ ஒரு கோயிலுக்குப் போய் அங்குள்ள சிலை உருவங்களைப் பார்க்கிறார்கள். ‘என்ன சார், இந்தச் சிலைகளில் எல்லாம் ஏன் இத்தனைக் கோணல் மாணல்கள், ஏன், இந்தப் பெண் வடிவத்திற்கு இவ்வளவு பெரிய மார்பகங்ள்? ஏன் சார், இந்த விக்ரகத்தில் இத்தனை தலைகள், இத்தனை கைகள்? எல்லாம் இயற்கைக்கு ஒத்ததாக இல்லையே, இவைகளைப் பார்த்துத் தானே, சூ, ஓ என்றெல்லாம் பிரமாதப்படுத்துகிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள். நல்ல வேளை, பெண்ணிற்கு இவ்வளவு விம்மிப் பெருத்த மார்பகங்கள் ஏன் என்று மட்டும் கேட்டார்களே, சூர்ப்பனகையுடன் சேர்ந்து கொண்டு, பெண்ணிற்கு மார்பகங்களே எதற்கு சார் என்று கேட்காமல் விட்டார்களே. அந்த மட்டுக்கும் கெட்டிக்காரர்கள்தான்! இப்படித்தான் சிற்பத்தில் எதை எடுத்தாலும், அது மிகை என்று சொல்லும் மனப்பான்மை, நமது ரசிகர்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. இவர்களுக்குப் பதில் சொல்வதே இன்றையப் பேச்சின் நோக்கம்.


கலை என்றால் உள்ளதை உள்ளவாறே படம் பிடித்துக் காட்டுவதன்று. மதுரைப் புது மண்டபத்திற்குப் போய் அங்கிருக்கும் பொம்மைக் கடை, ஒன்றில் பன்ருட்டி மாம்பழம் ஒன்றை எடுத்துப் பார்த்து, “அட்டா, எவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது. மண்ணால் செய்யப்பட்டதென்றே சொல்ல முடியாது போல் இருக்கிறதே” என்று அதிசயிக்கிறோம். இது ஒரு நண்பருடைய போட்டோவைப் பார்த்து விட்டு “அடடே, போட்டோவில் ஆளை அப்படியே உரிச்சு வைச்சது போலல்லவா இருக்கிறது” என்று சொல்கிற கணக்குத்தான். நண்பருடைய போட்டோவும், பண்ருட்டி மாம்பழமும் கலைப் பொருள்கள் அல்ல. அப்போது கலை என்றால் என்ன? ஒரு சித்திரத்தின் முன்போ அல்லது ஒரு சிலையின் முன்போ நின்று கூர்ந்து பார்க்குங்கால், நல்ல சங்கீதத்தை, நல்ல கவிதை ஒன்றைக் கேட்கும் அனுபவத்தை நாம் பெற வேண்டும்.


சங்கீதத்தைக் கேட்கிறோம், கவிதையை அனுபவிக்கிறோம். ஏன் அனுபவிக்கிறோம்? சங்கீத வித்வானும், கவிஞனும் அவர்கள் அடைந்த ஒரு ஆனந்த அனுபவத்தை நம் உள்ளத்திலே பாய்ச்சி விடுகிறார்கள், நம் உள்ளமாம் வீணைதனில் உள்ள வீடு அத்தனையையும் ஒலிக்கும்படி செய்து விடுகிறார்கள். அதுபோலவே, நாம் ஒரு நல்ல சிற்ப உருவைப் பார்க்கும்பொழுது, அந்த வடிவத்தை ஆக்கிவனுடைய உள்ள உணர்ச்சிகளையே உணர்கிறோம். கல்லிலும், செம்பிலும் துடிதுடிக்கும் உணர்ச்சிகளை எப்படி உருவாக்குகிறான் என்பதை காண்கிறோம். அந்தச் சிற்பி எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு அப்பால் இருந்து கொண்டு நம்மோடு பேசுகிறான். நம் எண்ணங்களோடு விளையாடுகிறான். அவன் உள்ளத்தையே நமக்குத் திறந்து காட்டுகிறான். இப்படிப்பட்ட அனுபவத்தை எந்த உருவத்தின் முன்பு நாம் அடைகிறோமோ, அதுவே நல்ல சிற்ப உருவம். மற்றவை எல்லாம் வெறும் மண் பொம்மை, கல்லுருவம் அவ்வளவுதான். சிலை, சிற்பம் என்ற பெயருக்கு உரியவை அல்ல.


இந்த உணர்ச்சியை எப்படி உருவாக்குவது? வெறும் விறகுக் கட்டையைப் போல நேரே ஒரு உருவத்தை நிறுத்தினால் உணர்ச்சி வருமா? நாற்காலி மேல் கொஞ்சமும் வளையாமலும் காலையும், கையையும் ஒன்றுக்கொன்று நீட்டாமலும், அய்யனாரைப்போல் விழித்த கண் விழித்தபடியே இருக்கும் சிரமத்தோடு அமர்ந்து சிலர் தங்களைப் போட்டோ எடுத்துக் கொள்கிறார்களே... அப்படி வடிவம் சமைத்தால் உணர்ச்சி உருவாகுமா? கலைக்கு வடிவம் லளிதம். அந்த லளிதம் உருவாவது அசைவிலே என்றெல்லாம் நமக்குத் தெரியும். ஒரு பெண்ணின் கலை உருவை நாம் பார்க்கிறோம். அந்தச் சிற்ப உருவிலே உயிரைப் பெய்வதற்கு, உணர்ச்சியை ஊட்டுவதற்கு, அதன் அங்கங்களிலே குழைவை உண்டாக்குகிறான் சிற்பி.


ஒரு காலை ஊன்றி மற்றொரு காலை அடியெடுத்து வைப்பது போல் அமைக்கிறான். இவ்விதம் நடமாடும் நிலையில் இருக்கும் அந்தப் பெண்ணின் பிட்டியில் ஒரு பாகத்தைக் கொஞ்சம் பெரிதாக்கி தூக்கிக் காட்டுகிறான். ஒரு கையிலே தாமரை மலர் ஒன்றை ஏந்த வைக்கிறான். மற்றொரு கையை வீசி நடக்கும் நிலையில் அதில் ஒரு லளிதத்தையே கொடுக்கிறான். எந்த அம்சத்தில் ஆடவர் உள்ளம் பதிந்து நிற்குமோ அதைக் கொஞ்சம் பெரிதாகவே அமைக்கிறான். ஏன் கடைசியில் அவள் தலையையே கொஞ்சம் சாய்த்து அவள் நோக்கில் ஒரு கவர்ச்சியை உண்டு பண்ணுகிறான். இத்தனையையும் சும்மா வம்புக்கா செய்கிறான் அவன். ஒரு பெண் எவ்விதக் கடைக்கண் நோக்கினால், எவ்விதமான முறுவலினால், எவ்விதமான அங்க வளைவினால், கூந்தலை எவ்விதம் பரப்புவதனால், ஆடையை எப்படி அணி வதனால் ஆண்களின் நெஞ்சம் துடித்து எழச் செய்கிறாள் என்பதை அறிவான் சிற்பி.


அதற்காகவே சில அங்கங்களை மிகைப்படுத்துகிறான். சில நெளிவு சுழிவுகளை அழுத்தமாக எடுத்துக் காட்டுகிறான். ‘வதனம் மைதீர் கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள், வீழ்காமன் தேரோடும் வீதி எனச் சந்ததமும் நற்கால் வழங்குகின்ற நாசி, மண்டர் விற்றொடர் வந்தழகு பார்க்க வைத்த கண்ணாடி போலும் கபோலம், மெச்சு கலை மதியின் வெண் வீசு தத்தில் கச்சு புனைந்த கனதனம்’ என்றெல்லாம் பெண்கள் அம்சங்களை மிகைப்படுத்திக் கூறுவது கவிஞர்களுக்கு மட்டும் ஏகபோக உரிமையல்ல. சிற்பி உட்பட்ட எல்லாக் கலைஞர்களுக்குமே உரிய உரிமைதான். இன்னும் ஒரு விஷயம். ஒரு பொருள், ஒரு நிகழ்ச்சி எப்படி இருந்தது என்பதைக் காட்டுவது மட்டும் கலைஞன் தொழில் அல்ல. எப்படி இருக்க வேண்டும், எப்படி இருந்தால் காண்பவரது உள்ளத்தைக் கவரும், கேட்பவரது உள்ளத்தை உருக்கும் என்றெல்லாம் தெரிந்து அதன்படி அமைப்பதுதான் அவனுடைய தொழில்.


ஒரேயொரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு பெண், ஆம் மறுபடியும் பெண் தான். அவளே ஒரு கலைப் பொருள்தானே. தன் நெற்றியில் திலகம் இட்டுக் கொள்கிறாள். எப்படி இட்டுக் கொள்கிறாள்? வீட்டில் இருக்கும் ஒரு சிறு கண்ணாடியைத் தன் இடது கையில் எடுத்துக் கொள்கிறாள். வலது கையில் உள்ள நடு விரலால் குங்குமத்தையோ, வர்ணச் சாந்தையோ குழைத்து எடுத்து ‘பிறை’ போன்ற நெற்றியிலே நல்ல மத்திய ஸ்தானத்தைக் கைக் கண்ணாடி மூலம் பார்த்துப் பொட்டிட்டுக் கொள்கிறாள். இதைத் தினமும் நாம் பார்க்கிறோம், ‘நல்ல திலகம் கிடந்த திரு நுதல்’ என்றும் பாடுகிறோம். இப்படிப் பொட்டிட்டுக் கொள்ளும் போது, வலது கை அநேகமாக முகம் முழுவதையும் மறைத்துக் கொள்கிறது.


அப்படி முகத்தை மறைத்துக் கொண்டு பொட்டிட்டால் அந்தப் பொட்டு தன் முகத்திற்கு எவ்வளவு சோபையைத் தருகிறது என்பதை அந்தப் பெண் அப்பொழுதே தெரிந்து கொள்ள முடியுமா? பொட்டிட்டு விட்டு ஒவ்வொரு தடவையும் தன் கையை எடுத்து எடுத்துத்தானே, அப்பொட்டால் ஏற்படும் அழகை அவள் காண வேண்டியிருக் கும்? பொட்டிடுகின்ற அந்த நேரத்திலேயே, அந்தப் பொட்டு தன் முகத்திற்கு எத்தகைய களை ஒன்றைக் கொடுக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்படும் பெண் என்ன செய்வாள். இல்லை, என்ன செய்ய வேண்டும். இதைத்தான் சிந்தனை செய்திருக்கிறான் ஒரு சிற்பி. இடது கையில் கண்ணாடியை ஏந்திக் கொண்டு வலது கையில் நடுவிரலால் சாந்தைத் தொட்டு எடுத்து, அந்தக் கையை முதுகின் புறமாகத் தலைக்கு மேல் கொண்டு வந்து, முகத்தைக் கொஞ்சமும் மறைக்காமல் நெற்றியில் பொட்டிட்டுக் கொள்ளலாம் அல்லவா என்று தோன்றியிருக்கிறது அவனுக்கு. அப்படி அவள் பொட்டிட்டுக் கொள்ளும் போது அவள் அங்கங்கள் எல்லாம் எப்படிக் குழையும், விரல்கள் எல்லாம் எப்படித் துவளும் என்று! கற்பனை பண்ணவும் முடிந்திருக்கிறது அவனால்.


அப்படிப்பட்ட கற்பனை உருவொன்றே நல்ல கருங்கல் உருவில் இன்று தென்காசி காசிவிசுவாநாதர் ஆலயத்தில் காட்சி கொடுக்கிறது. இதைப் பார்த்து விட்டு இப்படி யார் சார் பொட்டிட்டுக் கொள்கிறது. இப்படி சிலையை உருவாக்குதல் மிகை தானே, அதிகப் பிரசங்கித்தனம் தானே என்று நண்பர்கள் சொன்னால் அவர்களைப் பற்றி நாம் என்ன சொல்வது? எப்படிப் பொட்டிட்டுக் கொண்டால் நன்றாயிருக்கும் என்னும் விஷயத்திற்கு அழுத்தம் கொடுத்து, சாதாரண வாழ்க்கைக்குக் கொஞ்சம் மிகையாகவே இச்சிலையை அமைத்திருக்கும் காரணத்தால் அந்தச் சிலையைப் பாராட்டுகிறோம். அதை ஆக்கிய சிற்பி யைப் போற்றுகிறோம். இப்போது தெரியும் சிற்பக் கலையில் மிகை அமைப்பு ஏன் ஒரு உத்தியாகக் கையாளப்படுகிறது என்று.


இன்னும் ஒரு விஷயம். நம் நாட்டுச் சிற்பக் கலை பெரும்பாலும் சமயத் தொடர்புடையது. சைவம், வைணவம், பௌத்தம், சமணம் என்னும் நான்கு சமயச் சார்புடைய சிற்ப உருவங்கள் நம் நாட்டில் காணப்படுகின்றன. பௌத்த, சமண சிற்பங்கள் எல்லாம் சார்ந்த நிலையிலே தியாகத்திலே இருக்கும் உருவங்களாகவே பெரும்பாலும் அமைக்கப்பட்டிருக்கின்றன. புத்தர், பார்ஸ்வநாதர், தீர்த்தங்கரர், கோமதேஸ்வரர் சிலைகள் எல்லாம் நாட்டின் பல பாகங்களில் காணப்படுகின்றன. சரவண பெலகோலாவில் இருக்கும் கோமதேஸ்வரர் உருவம் 60 அடி உயரம். அதற்குத் தகுந்தாற்போலுள்ள காத்திரம், தேவ அம்சம் பெற்றவர்கள் சாதாரண மனிதர்களை விட எத்தனையோ மடங்கு பெரியவர்கள் என்று சாதாரண மக்களுக்கு எடுத்துக்காட்டவேதான் உருவங்களை இத்தனை பெரிதாக ஆக்கியிருக்க வேண்டும். பாமர மக்களின் உள்ளங்களில் ஒரு அசாதாரணமான உணர்ச்சியை உண்டுபண்ண இந்த மிகை அமைப்பு அவசியமாக இருந்திருக்கிறது.


இவைகளை விட்டு நமது சைவ, வைணவத் திருவுருவங்களுக்கு வந்தால் இன்னும் எவ்வளவோ அசாதாரணமான முறையில் எல்லாம் மூர்த்திகளை உருவாக்கியிருக்கிறார்கள். நான்கு தலை, ஆறு முகம், நாலு, எட்டு, பன்னிரெண்டு, பதினாறு கைகள் எல்லாம் உடைய உருவங்கள். பாம்பு, நெருப்பு, துடி, சூலம், பாசம் முதலியவைகளை ஏந்திய கைகள் எல்லாம். காட்சி கொடுக்கின்றன. இவைகளைத் தன் கற்பனை சென்றபடியெல்லாம் சிற்பி சும்மா அமைத்துவிட்டான் என்று சொல்வதற்கில்லை. ஒவ்வொரு உருவமும் ஒரு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது.


இந்த அடிப்படைத் தத்துவங்களையெல்லாம் தக்க அறிஞர்கள் மூலமும், சிலைகள் மூலமும்தான் தெரிந்துகொள்ள வேண்டும், நடன ராஜாவின் தாண்டவத் திருவுருவத்தின் தத்துவக் கருத்தை மீண்டும் பார்த்தால், அந்த அதி அற்புதமான சிலை உருவத்தில் காணும் மிகை அமைப்புகள் எவ்வளவு அவசியமானவை, பொருள் பொதிந்தவை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். உருவம் இல்லாத கடவுளுக்கு உருவம் கற்பிக்கும் போது, ஆகாசத்தோடு ஆகாசமாய்ப் பரந்திருக்கும் அவர் நிலை ஞாபகத்திற்கு வந்திருக்கிறது. ஆகாசத்தை உடம்பாகக் கொண்ட இறைவனுக்கு நான்கு தலைகளும், நான்கு கைகளுமாக கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. எட்டுத் திசைகளையும் எட்டுக் கையாகக் காட்டும் தாண்டவ உருவங்களும் உண்டு. திசைகள் எட்டும் திருக்கைகள் என்கிறார் திருமூலர்.


ஒலிக்கின்ற துடியிலே தோற்றமும், அபயகரத்திலே காத்தலும், எரிகின்ற நெருப்பிலே அழித்தலும், மன்றிய அடியிலே மறைத்தலும், தூக்கிய திருவடியிலே அருளும் அமையும்படி நடராஜனது நடன வடிவம் உருவாகியிருக்கிறது. சடைமுடி, நிலாப் பிறை, சூலம், வாள் முதலிய ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தைப் பற்றியே ஆக்கப்பட்டிருக்கின்றன. எல்லாம் உருண்டுகொண்டிருக்கும் உலகில் நிகழும் காரியங்களே என்பதை நடனராஜனது உருவத்தைச் சுற்றியமைந்திருக்கும் திருவாசி குறித்து நிற்கிறது. இப்படியேதான் ஒவ்வொரு உருவத்தில் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு தத்துவத்தை நினைக்க உதவியிருக்கின்றது.


வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாத பரம்பொருளை உருவாக்கும்போது அவ்வுருவத்தின் ஒரு சில பகுதிகள் மிகை அமைப்பு என்றே தோன்றலாம். என்றாலும், ஒவ்வொரு அம்சமும் ஒவ்வொரு தத்துவத்தை அழுத்தமாக எடுத்துக்காட்ட அமைந்த சின்னமாகவே இருக்கும். ஆதலால் சிற்பக் கலையின் மிகை அமைப்பு, சிற்பிகளால் கையாளப்படும் ஒரு இன்றியமையாத உத்தி. அந்த மிகை அமைப்பும், அழுத்தமும் இல்லையேல், நல்ல சிற்ப உருவங்களே நமக்குக் கிடைத்திரா.


 

Comments


Subscribe here to get my latest posts

Thanks for submitting!

© 2023 Powered by Tamil Bookshelf

  • Facebook
  • Twitter
bottom of page