இந்தியக் கலைச்செல்வம் - 5
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
தமிழர் சிற்பக் கலை “சுவாமி எனக்கு சிற்பக் கலையை சொல்லித் தருகிறீர்களா?” “ஓ, பேஷாய் சொல்லித் தருகிறேன். ஆனால், சிற்பக் கலையை கற்றுக் கொள்வதற்கு முன்னால் சித்திரக் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டுமே.” “அப்படியானால் சரி. சித்திரக் கலையையே கற்றுக் கொடுத்து விடுங்கள்.” “அதுவும் சரிதான். ஆனால், சித்திரக் கலையைக் கற்றுக் கொள்வதற்கு நடனக்கலை தெரிந்திருக்க வேண்டுமே.” “சரி சுவாமி! நடனக் கலையையே கற்றுக் கொடுங்களேன்.” “நடனக் கலையையா? நடனக் கலை கைவர வேண்டுமானால் முதலில் ஸங்கீதமல்லவா கற்றுக் கொள்ள வேண்டும்?” “என்ன ஸ்வாமி ஸங்கீதத்தையே கற்றுக் கொள்கிறேன். அதன் பின் நடனம், சித்திரம், சிற்பம் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறேன். எப்படியும் சிற்பக் கலை கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.” “எல்லாம் சரிதான். ஸங்கீதம் கற்றுக் கொள்ளுமுன் கவிபாட கற்றுக் கொள்வது அதி முக்கியமாயிற்றே! சாஹித்யமில்லாமல் உருவாகும் ஸங்கீதம் உயர்ந்ததாகாதே.” “சரி சுவாமி.... கவி பாடவே கற்றுக் கொடுத்துவி டுங்களேன்.” “அதில் தான்ப்பா சங்கடம் இருக்கிறது. கவி பாடும் கலை ஒருவரால் கற்பிக்கப்படுவது அல்லவே. கவிதையை இன்னார் இப்படித்தான் பாட வேண்டும் என்றெல்லாம் நியதி கிடையாதே. கருவிலே அமைந்த திருவாக அல்லவாக இருக்க வேண்டும். இறையருளினால்தானே ஒருவருக்கு அக்கலை சித்தியாக வேண்டும். ‘Poetry is not born of rules. Rules are deducable from Poetry. Poetry is the gift of the Gods’ என்று மேல் நாட்டு மேதை அரிஸ்டாட்டில் கூட முடிவு கட்டி விட்டானே.” இப்படி ஒரு பேச்சு சிற்பக் கலை கற்க வந்த ஒரு அரசகுமாரனுக்கும், சிறந்த கலா வல்லுநரான ஒரு முனிவருக்கும். இது என் சொந்தக் கற்பனை அல்ல. சில்ப ரத்தினத்தில் உள்ள ஒரு கதைதான். இதிலிருந்து நமக்குத் தெரிகிறது சிற்பம் என்றால் எவ்வளவு அருமையானது, எவ்வளவு சிரமமானது என்றெல்லாம். இப்படிப்பட்ட சிரம சாத்தியமான ஒரு கலையைத்தான், ஒரு செல்வத்தைத் தான் நமது தமிழ் மக்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாலே தேடி வைத்திருக்கிறார்கள் இந்தச் செல்வம் எவ்வளவு பெருமை உடையது, எவ்வளவு அருமையானது என்பதைத்தான் இன்றும் நம்மிடையே நின்று நிலவும் கோயில்களும் அங்குள்ள அதி அற்புதமான உருவங்களும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. விண் மறைக்கும் கோபுரங்கள் வினை மறைக்கும் கோயில்கள் வேறு எந்த நாட்டில் உண்டு வேலையின் விசித்திரம்?
என்றெல்லாம் பிறரைப் பார்த்து நாம் கேட்க முடிகிறது. கேள்விக்கு பதில் சொல்லும் பெருமை மற்றவர்க்கு இல்லாத காரணத்தினால் நாம் தலை நிமிர்ந்து நடக்கவும் முடிகிறது. தமிழ்நாட்டுச் சிற்பக் கலை வளர்ச்சியைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் நமது புராதனக் கோயில்களுக்குத்தான் போக வேண்டும்.
சித்திரத்தில் மிக உயர்ந்த சிற்ப நூலின் அற்புதம் சின்னச் சின்ன ஊரில் கூட இன்றும் எங்கும் காணலாம் அல்லவா? தமிழ்நாட்டுக் கலைகள் எல்லாமே சமயச் சார்புடையவை. ‘போரென்று வீங்கும் பொறுப்பென்ன பொலன் கொள் திண்டோள்’ படைத்திருந்த பண்டைய அரசர் பெருமக்கள் பகையரசர்களுடன் போர் புரியாத காலத்தில் எல்லாம் இக்கலையை வளர்த்திருக்கிறார்கள். பல்லவ மகேந்திரவர்மனும் அவன் மகன் மகாமல்லனும் நமக்கு நன்றாக அறிமுகமானவர்கள் தானே. தந்தை பெரிய பெரிய மலைகளைக் குடைந்து குகைக் கோயில்களை வெட்டிக் கொண்டிருந்தான் என்றால், மகனோ மலைகளையே செதுக்கி, வெட்டிக் குடைந்து அதி அற்புதமான ரதக் கோயில்களையெல்லாம் உருவாக்கிக் கொண்டிருந்திருக்கிறான். அப்படி வெட்டிச் செதுக்கிய கோயில்களின் சுவர்களில் - நல்ல கற்பாறைகளில்தான் - பகீரதன் தவத்தையும், கோவர்த்தன தாரியையும் அனந்த சயனனையும், மகிஷமர்த்தினியையும் உயிர் பெறச் செய்திருக்கிறான். கோயில் நிர்மாணத்தையே அடிப்படைத் திட்டமாக வைத்துக் கொண்டு அற்புத உருவங்களை அமைத்துக் கொடுத்தவர்கள் பல்லவ அரசர்கள். அவர்கள் புகழ் என்றும் நிலைத்து நிற்கும், அவர்கள் அமைத்த கற்கோயில்களைப் போலவே. இவர்களுக்குப் பின் வந்த சோழ மன்னர்களும் இந்தச் சிற்பக் கலையை வளர்ப்பதில் கொஞ்சமும் சளைத்தவர்களாக இருக்கவில்லை. மலையைக் குடையவோ, பாறைகளை வெட்டிச் செதுக்கவோ முனையாவிட்டாலும், உபானம் முதல் ஸ்தூபி வரையிலும் கல்லாலேயே கோயில் கட்டிய பெருமை இவர்களைத்தான் சாரும். ‘எண்தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட கோச்செங்கணான்’ பரம்பரையில் வந்த , சோழர்கள் அமைத்த கற்றளிகள் சோழ வளநாடு முழுவதும் இன்றும் நிறைந்திருப்பதைப் பார்க்கிறோம். சோழ மன்னர்கள் காலத்தில் அவர்களது சாம்ராஜ்யம் எவ்வளவு உன்னத நிலையில் இருந்தது என்பதை அவர்கள் கட்டிய கோயில்களின் மூலமும், அக்கோயில்களின் கர்ப்பக் கிருஹங்களின் பேரில் கம்பீரமாக வானளாவ வளர்ந்து நிற்கும் விமானங்களின் மூலமுமே தெரிந்து கொள்ளலாம்.
ராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோவில், அவன் மகன் ராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழீச்சரம், இவர்கள் கால்வழி வந்த இரண்டாம் ராஜராஜன் கட்டிய தாராசுரம் ஐராவதேச்வரர் கோவில் எல்லாம் சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் உடையவை என்பது மட்டுமல்ல; ஒவ்வொன்றும் சிறந்த சிலை உருவங்களைத் தாங்கிய கோயில்களாகவே விளங்குகின்றன. இங்கெல்லாம் விநாயகரும், ஆறுமுகப் பெருமானும், பிக்ஷாடனரும், தக்ஷிணாமூர்த்தியும், நடராசரும், சண்டீச்வரரும், மார்க்கண்டேயரும், அற்புதம் அற்புதமாக உருவாகியிருக்கிறார்கள், இந்தச் சிலை உருவங்களில் காணுகின்ற கம்பீரம் வேறெந்த நாட்டிலும், வேறெந்த சிலை உருவத்திலும் காண இயலவில்லை. இதை நான் சொல்லவில்லை . Fergusson, Percy Brown முதலிய மேல் நாட்டு அறிஞர்களே சொல்லி மகிழ்கிறார்கள். பல்லவர், சோழர் இவர்களைப் பின்பற்றி பாண்டியர்கள், நாயக்க மன்னர்கள் கட்டிய கோயில்கள், நிர்மாணித்த சிலை உருவங்கள் எல்லாம் சிறப்புடையனவே, பாண்டியர்கள் கோயில்கள் சில கட்டினார்கள் என்றாலும் சிற்பக்கலை வளர்ச்சியில் சிரத்தை அதிகம் காட்டவில்லைதான். ஆனால், நாயக்க மன்னர்கள் அமைத்த கோயில்கள் சிற்பங்கள் எல்லாம் சோழ மன்னரது. கோயில்கள், சிற்பங்களோடு போட்டி போடுவது போலவே அமைந்துள்ளன. சோழர் சிலைகளில் உள்ள கம்பீரம் இவைகளில் இல்லாவிட்டாலும் நுணுக்க வேலைப்பாடுகளும், உணர்ச்சியை வெளியிடும் முகபாவங்களும் இந்த நாயக்கர்கள் அமைத்த சிற்ப உருவங்களில் அதிகம் காண்கிறோம்.
மதுரை மீனாக்ஷி கோயிலில் உள்ள புது மண்டபம், கம்பத்தடி மண்டடம், ஆயிரங்கால் மண்டபம், , திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில். கிருஷ்ணாபுரம் திருவேங்கடநாதன் சந்நிதி, தென் காசி காசிவிஸ்வநாதர் கோயில் தூண்களில் எல்லாம் அமைந்திருக்கும் வீரபத்திரர், மன்மதன், ரதி, கர்ணன், அர்ச்சுனன் முதலிய சிலைகள் அதி அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் அமைந்தவை. இவைகளைப் பார்ப்பதற்கென்றே ஒரு சுற்றுப் பிரயாணம் தொடங்கலாம். சுற்றுப் பிரயாணம் முடிந்து திரும்பி வரும்போது உள்ளத்தில் ஏற்படுகின்ற உவகையால் நாமும் ஒரு சுற்றுப் பெருத்து வந்தால் ஆச்சரியமும் இல்லை. அதிசயமும் இல்லை. தமிழ்நாட்டுச் சிற்பச் செல்வங்கள் அவ்வளவு அருமையானவை, அற்புதமானவை. அத்தகைய செல்வத்தைப் பெற்ற தமிழர்கள் சிலர் இன்று கடல் கடந்து சென்று கலை வளர்க்கிறார்கள் என்று அறியும் போது எவ்வளவோ மகிழ்ச்சி. அதில் தமிழ்நாட்டிற்கும் மலேசியா முதலிய நாடுகளுக்கும் பூர்வத்திலிருந்தே இருக்கின்ற கலாச்சாரத் தொடர்பை எல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்க வேண்டியன எல்லாம் செய்கிறார்கள் என்றால் அந்த முயற்சி வரவேற்கத்தக் கதுதானே. அந்த முயற்சிக்கெல்லாம் என் ஆசி. அவர்கள். ஆர்வத்திற்கெல்லாம் என் வணக்கம்.
コメント