இந்தியக் கலைச்செல்வம் - 6
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
தமிழர் வளர்த்த நுண் கலைகள்: சிற்பமும் - ஓவியமும் என்னுடைய நண்பர் ஒருவர் சிறந்த ரசிகர். அவருக்கேற்ற மனைவி. நல்ல அழகு வாய்ந்தவள். அத்துடன் நண்பரைவிடச் சிறந்த ரசிகை. இருவரும் இணைந்து வாழ்கிறார்கள். என்றாலும் ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில் இவர்களுக்குள் ஒரு பிணக்கு. ஆம். சிறு பிணக்குத்தான். காரணம், அன்பர் மாலை வேளைகளில் நடக்கும் இலக்கியக் கூட்டத்திற்கோ, இசைக் கச்சேரிக்கோ, நடன அரங்கிற்கோ, அல்லது நல்ல சினிமாப் படம் ஒன்று பார்ப்பதற்கோ புறப்படாமல் இரார்.
போகும் பொழுது மனைவியையும் உடன் கூட்டிச் செல்வார். மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி என்றால் நாலு மணிக்கே மனைவியைப் புறப்படத் தயாராகும்படி சொல்வார். அம்மையாரும் உடனேயே நல்ல உடை உடுத்தி, அணிமணி புனைவார். ஆனால், முகத்தைக் கழுவி பொட்டு இட்டுக் கொள்ள நிலைக் கண்ணாடி முன் சென்று நின்றுவிட்டால், அவ்வளவுதான். பொட்டிடுவது எளிதான காரியமாக அம்மையாருக்கு இருப்பதில்லை. நன்றாக நெற்றியைத் துடைத்து கேசத்தை எல்லாம் ஒதுக்கி பொட்டிடுவதற்கு ஆரம்பிப்பார். வலது கை நடு விரலில் நல்ல குங்குமத்தையோ சாந்தையோ எடுத்துக் கொள்வார். அப்படியே நெற்றியில் பொட்டிடுவார். பொட்டிட்ட பின் கையை எடுத்துப் பார்த்தால், பொட்டு சரியாய் இட்டிருப்பதாகத் தோன்றாது. ஒன்று நெற்றியின் நடுவில் இராது. அல்லது அளவோடிராது. அதனால் திருப்தியும் ஏற்படாது. ஆதலால் இட்ட பொட்டை அழித்து விட்டுத் திரும்பவும் இட்டுக் கொள்வார். அதிலும் திருப்தி ஏற்படாவிட்டால் இன்னொரு முறை... இப்படியே அழிப்பதும் இடுவதுமாக ஒரு மணி நேரம் கழியும்.
நண்பருக்கோ கோபம் கோபமாக வரும். காரில் ஏறி இருந்து கொண்டே கத்துவார். கடைசியாக அம்மையார் வருவார் வெளியே ஆறு மணிக்கு. காரில் ஏறி உட்காருவார். இருவரும் சென்று சேரும்போது ஒன்று இசை நிகழ்ச்சி ஆரம்பித்திருக்கும்; அல்லது படம் பாதி ஒடியிருக்கும். ஆனால், வீடு திரும்பும் போது இந்தப் பிணக்கு எல்லாம் தீர்ந்து இணைந்து விடுவார்கள் மறுபடியும். மறுபடியும் மறுநாள் மாலை பிணக்கு அதே காரணத்தால் வரும். இந்த நண்பர் வீட்டிற்கு ஒரு நாள் மாலை போயிருந்தேன். அன்பர் தலை வாயிலில் வெளியே புறப்படத் தயாராயிருந்தார். அம்மையார் வீட்டின் உள்ளே நிலைக் கண்ணாடி முன் நின்று கொண்டிருந்தார். நண்பர் முகத்திலோ எள்ளும், கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. காரணம் வினவினேன். சொன்னார். 'இவளுக்கு பொட்டு இட்டுக் கொள்வதற்கு ஒரு மணி ஒன்றரை மணி ஆகிறது சார்' என்று அங்கலாய்த்தார். விஷயம் விளங்கிற்று எனக்கு. அம்மையார் வெளியே வந்தபின் அவரிடம் சொன்னேன்.
தாங்கள் பொட்டிடும்போது தங்கள் உள்ளங்கை, தங்கள் முகம் முழுவதையும் மறைத்துக் கொள்வதால் பொட்டிடும் போதே பொட்டின் அளவு, அது அமைய வேண்டிய இடம், அதனால் முகத்திற்கு ஏற்படும் பொலிவு எல்லாவற்றையும் ஒரே தடவையில் பார்க்க முடிவதில்லை. ஒரு தடவை பொட்டிட்டு அதன் பின் கையை எடுத்து எடுத்தே அதன் அழகைப் பார்த்துப் பார்த்து அதைத் திருத்த வேண்டியிருக்கிறது. பொட்டிட்டுக் கொள்வதற்கு நிலைக் கண்ணாடி முன்னால் சென்று நிற்கவே கூடாது. இடது கையில் ஒரு சிறு கண்ணாடியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலே தன் முகத்தைப் பார்த்துக் கொண்டு வலக்கை நடுவிரலில் குங்குமத்தை எடுத்து, அந்த வலக்கையை தலையைச் சுற்றி தலைக்குப் பின்புறமாகக் கொண்டுவர வேண்டும். அப்படிக் கொண்டு வந்து நெற்றியின் நடுவில் வட்ட வடிவமாய்ப் பொட்டிட்டுக் கொள்ள வேண்டும். இப்படிப் பொட்டிட்டுக் கொண்டால், ஒரே தடவையில் மிகவும் அழகாகப் பொட்டிட்டுக் கொள்ளலாம் என்றேன்.
அவ்வளவுதான். அம்மையார் நெற்றியிலிருந்த பொட்டை அழித்தார். வீட்டுக்குள் மறுபடியும் ஒடினார். சொன்னபடியே செய்தார். ஐந்து நிமிஷத்தில் நிறைந்த மனதுடனும் சிறந்த அழகுடனும் திரும்பி வந்து கணவருடன் சேர்ந்து கொண்டார். பின்னர் விசாரித்தால், இந்தத் தம்பதிகளிடையே நிலவிய மாலைப் பிணக்குத் தீர்ந்து விட்டது. நாம் சொன்ன முறையில் அம்மையார் அன்று முதல் பொட்டிட்டுக் கொள்ள முனைந்து விட்டதால் என்று அறிந்தேன். இத்தனையும் என் சொந்தக் கற்பனை அல்ல. இப்படி நண்பரது மனைவிக்குப் பொட்டிடும் கலையில் உள்ள நுணுக்கத்தைச் சொல்லிக் கொடுக்க எனக்குக் கற்றுக் கொடுத்தது ஒரு சிலை. அந்தச் சிலையை நேரில் காண விரும்பினால், நேரே ஸ்ரீரங்கத்திற்குச் செல்லுங்கள்.
தென் பக்கத்தில் உள்ள ரங்க விலாசத்தில் இடது பக்கமாக நுழைந்து அங்குள்ள வேனுகோபாலன் சந்நிதியைக் கண்டுபிடியுங்கள். அந்த வேணுகோபாலனைக் கூடக் கொஞ்சம் மறந்து அவன் கோயில் வெளிப் பிரகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றுங்கள். தெற்குப் பிரகாரத்தில் உள்ள ஒரு மாடக் குழியிலே ஒரு பெண்ணைக் காண்பீர்கள். அவள் பொட்டிட்டுக் கொள்ளும் நிலையில். ஆம். நாம் நண்பர் மனைவிக்குச் சொல்லிக் கொடுத்த அதே நிலையில் நிற்பதைக் காண்பீர்கள். ஒருவேளை நீங்கள் அழுத்தமான சைவராயிருந்து, ஸ்ரீரங்கநாதனோ அல்லது வேணுகோபாலனோ இருக்கும் திசை நோக்கிக் கூட திரும்ப மாட்டோமே என்றாலும் பரவாயில்லை. நீங்கள் தொழுகின்ற அந்தக் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கே போங்கள். தொலை தூரத்திலிருக்கும் வட காசிக்கல்ல. எங்கள் திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள தென் காசிக்குத்தான். அங்குள்ள விஸ்வநாதர் ஆலயத்தில் முன் மண்டபத்தில் மேற்கே பார்த்த தூண் ஒன்றில் இதேவிதமாக பொட்டிடும் பெண் ஒருத்தி இதே நிலையில் காட்சி கொடுப்பாள். இதையெல்லாம் கேட்டு நீங்கள் நினைப்பீர்கள். என்ன இவர் கதை அளக்கிறார் என்று. இந்தவிதமாக எந்தப் பெண் பொட்டிட்டுக் கொள்கிறாள், கொஞ்சமும் இயற்கைக்குப் பொருத்தமாக இல்லையே என்று. ஆனால் ஒன்று சொல்கிறேன். கலை என்பது உள்ளதை உள்ளபடியே உருவாக்கிக் காட்டுவது அல்ல. அந்த வேலையைத்தான் போட்டோக் காமிரா மிகவும் திறமையாகச் செய்து விடுமே. இந்த உருவம் இப்படி இருக்கிறது இன்று; இது எப்படி இருக்க வேண்டும்; எப்படி இருந்தால் அதில் அழகு நிறையும் என்று தெரிந்து உருவாக்குவதில்தான் இருக்கிறது கலைஞனின் கைத்திறம். நுண் கலைகளில் நுணுக்கத்தை அறிய நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. ஒரு சூத்திரம். எதைச் சொல்வது அல்லது எதைச் செய்வது என்பதில் எப்படிச் சொல்வது, எப்படிச் செய்வது என்பதை விளக்குவதே சூத்திரம். இந்தச் சூத்திரத்தை உரை கல்லாக வைத்துக் கொண்டு கலைகளை அறிய முனைந்தால் கலா ரசனை பெறலாம் எல்லோரும். கலை உலகிலே மிகவும் பிரசித்தி பெற்றவர்கள் பூர்வீக கிரேக்கர்கள். இவர்களுக்குப் பின் இக்கலையை வளர்த்தவர்கள் இத்தாலியர்கள். இவர்கள் உருவாக்கிய ஜூயஸ், அப்பாலோ, மெர்க்குரி, ஆப்ரோடைட், வீனஸ் இன்னும் எண்ணற்ற ஆண், பெண் உருவங்கள் எல்லாம் நல்ல தோற்றப் பொலிவு உடையவை. அந்த நிர்மாண சாஸ்திரத்திலே அனாடாமியிலே அளவு பிசகுவது என்பதே கிடையாது. இவர் கள் உருவாக்கிய சிலைகளில், இவர்கள் வளர்த்த கலையில். ஆனால், நமது தமிழர்கள் இருக்கிறாரகளே, இவர்கள் வடித்த சிலைகளில் எலும்பும், தசையும், நரம்பும், தோலும் முக்கிய இடம் பெறுவதில்லை. மனிதர்களையே இவர்கள் உருவாக்கிக் காட்டுவது இல்லையே. விண் மறைக்கும் கோபுரங்களோடு கூடிய வினை மறைக்கும் கோயில்களைக் கட்டிய தமிழர்கள் இந்தக் கோபுரங்களில் எல்லாம் தெய்வத் திருவுருவங்களை சிலை உருவமாக அமைத்தார்கள். ஆண் உருவிலும் பெண் உருவிலும் இந்தச் சிற்ப வடிவங்களை அமைத்தாலும் ஏதோ தெருவில் நடமாடும் ஆடவர் பெண்டிரைப் போல அமைக்காமல், தெய்வீக அழகு நிரம்பியவர்களாக, அசாதாரணத் தன்மை வாய்ந்தவர்கள் என்று காண்போர், கண்டு தொழுவோர் உணரும்படியாக உருவாக்கியிருக்கிறார்கள். உள்ளதை உள்ளபடி காட்டுவதோடு அவர்கள் திருப்தி அடையவில்லை.
எப்படி உருவாக்கினால் மக்கள் எண்ணத்தில் உயர்வார்கள் என்று எண்ணியிருக்கிறார்கள். கற்பனை பண்ணியிருக்கிறார்கள். கலை உருவங்களை சிருஷ்டித்திருக்கிறார்கள். கருத்துக்களை காட்டுவதற்குக் கருவியாகத்தான் கலையை உபயோகித்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் நான்கு முகமும், பன்னிருகரமும், எட்டுத் தோளும், எண்ணற்ற வடிவும் தெய்வத் திருவுருவங்களுக்கு அமைப்பானேன். 'எட்டுத் திசையும், பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய் முட்டி நிற்பவனே இறைவன்' என்பதை விளக்கத்தானே இந்த அசாதாரணமான உருவங்களை அமைத்திருக்கிறார்கள். உருமே இல்லாத கடவுளுக்கு உருவம் கற்பிக்க முனைந்தவன் கலைஞன்.
அண்ட பிண்ட சராசரங்களை எல்லாம் ஆட்டி வைக்கிறான் இறைவன். அப்படி ஆட்டி வைக்கிறவன் தானும் ஆடிக் கொண்டே ஆட்டினால்தான் அண்டங்கள் ஆடும் என்று சிந்தித்தான். அப்படிச் சிந்தித்த சிற்பியே ஆடும் பெருமானை அற்புதமாக உருவாக்கியிருக்கிறான். அகிலாண்ட கோடி ஈன்ற அன்னை என்கிறார்கள் இறைவியை. அந்த அகில கோடி உயிர்களையும் காக்கின்ற பெருமாட்டி அரை நிமிஷம் கூட கண்ணை மூட முடியுமா? ஆதலால் விழித்த கண் விழித்தபடியே இமை கொட்டாது நின்று அருள் புரிகிறாள். அவள் என்றெல்லாம் எண்ணியவன் தானே, "கண் இரப்பையே இல்லாது விழித்த கண் விழித்தபடியே இயங்கும் மீன் கண்ணைப் பெற்றவள் அவள் என்று கற்பிக்க முடியும். மீனாகவி என்று அந்த அன்னைக்குப் பெயரிட்டு அழைக்கவும் முடியும். இப்படித்தான் கலைஞர்கள் சிந்தனையில் கடவுளர் எல்லோரும் உருவாகியிருக்கிறார்கள். இந்தச் சிந்தனைச் செல்வங்களே சிற்ப வடிவங்களாக நம் நாடு முழுவதும் நிறைந்திருக்கின்றன. இன்று சிற்பக் கலையை உருவாக்க கல்லையும், மரத்தையும், மண்ணையும், உலோகத்தையும் கருப் பொருளாகக் கையாண்டிருக்கிறார்கள். மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் கண்ணிய தெய்வ தம் காட்டுநர் வகுக்க
என்று பழைய இலக்கியமான மணிமேகலையே கூறி னாலும், இக்கலை சிறப்பாக வளர முற்பட்டது. பல்லவர் ஆட்சியில்தான். ஆறாம் நூற்றாண்டின் பின் பகுதியில் எழுந்த மாமல்லபுரத்துக் கற்கோயில்களில் எல்லாம் நல்ல நல்ல சிற்ப வடிவங்கள் உருவாகியிருக்கின்றன. இதையெல்லாம் உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்தவன் பல்லவ மன்னன் நரசிம்மவர்மனே. இவன் கால்வழி வந்த மன்னர்களே காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும், வைகுண்டப் பெருமாள் கோயிலிலும் அற்புதமான சிற்ப உருவங்களை உருவாக்கினவர்கள். இப்படி இன்றைக்கு ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் கலை வளர்க்கும் சிலைகள் தோன்றியிருக்கின்றன, ஆனால் இவை எல்லாம் அர்த்தசித்திரமாக அதாவது Bas relief ஆகத்தான் உருவாகி இருக்கின்றன. மலையைக் குடைந்து மண்டபங்கள் அமைக்கிறபோது அந்த மண்டபச் சுவர்களிலேயே உருவங்கள் அமைக்க வேண்டியிருந்தது. பல்லவர்களுக்குப் பின் தமிழ்நாட்டில் கலை வளர்த்த பெருமக்கள் சோழ மன்னர்களே. ‘எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது’ கட்டமுனைந்த சோழன் கோச்செங்கணான் முதல், திரிபுவனச் சக்கர வர்த்தி குலோத்துங்கன் வரை, அற்புதம் அற்புதமான சிற்பங்களைக் கல்லிலும், செம்பிலும் வடித்திருக்கிறார்கள். லிங்கோத்பவர், உமா மகேசர், கல்யாணசுந்தரர், கஜசம்ஹாரர், பிக்ஷாடனர், திரிபுராந்தகர் முதலிய தெய்வத் திருவுருவங்கள் எல்லாம் உருவானது இவர்கள் காலத்தில்தான். அழகழகான செப்புச் சிலைகளை, நடராஜரது திருஉருவங்களை எல்லாம் வடித்தெடுத்து, கலை உலகிலே தமிழர்களுக்கு ஒரு அரிய புகழையே தேடித் தந்தவர்கள் இந்த சோழ மன்னர்கள். சோழர்களோடு போட்டி போட முடியவில்லை பின் வந்த பாண்டியர்களால், ஆனால், சோழர்களது அடிச்சுவட்டில், 16,17ஆம் நூற்றாண்டுகளில் இங்கு வந்த நாயக்க மன்னர்கள் நடக்க விரைந்தனர்.
பெரிய பெரிய கோயில்களை, மண்டபங்களை, நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த சிலை உருவங்களை எல்லாம் நிர்மாணிக்க ஆரம்பித்தனர். அவர்கள் நிர்மாணித்த சிற்பக் கலைக் கூடங்களே தென் காசி காசிவிஸ்வநாதர் கோயில் மண்டபம், கிருஷ்ணாபுரத்து திருவேங்கடநாதன் சந்நிதியின் ரங்கவிலாசம், மதுரை மீனாக்ஷி கோயிலின் கம்பத்தடி மண்டபம், புது மண்டபம் முதலியவை. இப்படி ஆயிரம் வருஷத்திற்கு அதிகமாகவே அதாவது 6ஆம் நூற்றாண்டிலிருந்து 17ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் சிற்பக் கலை நன்றாக வளர்ந்து அதி உன்னத நிலை அடைந்திருக்கிறது. அதன் பின்தான் சென்று தேய்ந்திறுதல் என்றபடி இக்கலை வளரவில்லை, வளர்ப்பார், ஆதரிப்பார் இன்மையால். சிற்பக் கலை உலகில் நாம் யாருக்குமே தாழ்ந்தவரில்லை என்று தலை தூக்கி நிற்கிற தமிழன் அதே பெருமையோடு சித்திர உலகில் மார்தட்டிக் கொள்ள முடியாது.
சித்திரக் கலை மேல்நாட்டில் வளர்ந்த அளவிற்குத் தமிழ்நாட்டில், வளர்ந்து இருக்கிறது என்று கூற இயலாது. லியார்னாடோவின்சி, ரபேல், டிஷியன், ரூபன், ரெம்பிராண்ட் முதலிய பண்டைச் சித்ரீகர்களுக்கு உலகில் என்றும் அழியாத பெருமை உண்டு. நமது இந்திய நாட்டிலோ, அழியா அழகு நிரம்பிய அஜந்தா ஓவியங்கள் உண்டு. இவையுடன் போட்டி போடத் தமிழன் என்றுமே முனைந்ததில்லை என்றாலும் ‘நானும் சளைத்தவனில்லை’ என்று வீம்பு பேசிக் கொண்டு இந்தச் சித்திர உலகத்திலும் முன் நடந்திருக்கிறான் அவன். இங்கும் சித்திரம் தீட்ட இவர்கள் தேடிய இடம் கோயில் பிரகாரத்தில் உள்ள சுவர்கள்தான். பண்டைய இலக்கியமான பத்துப்பாட்டு, புறநானூறு, சீவக சிந்தாமணி முதலிய நூல்களிலிருந்து சித்திர மாடங்கள், சித்திரக் கூடங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் அன்றே இருந்தன என்று அறிகிறோம்.
என்றாலும் இந்தச் சித்திர உலகில் பழம் பெருமையுடையது புதுக்கோட்டையை அடுத்த சித்தன்னவாசல் குடைவரைக் கோயிலில் உள்ள ஓவியங்களே. இவற்றை ஜைனனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சைவனாக மாறுவதற்கு முன் எழுத ஏற்பாடு பண்ணியிருக்க வேண்டும், ‘சாமவ சரவணப் பொய்கை’ என்று ஜைனர்கள் புகழும் தடாகத்தை அங்குள்ள விதானத்தில் வரைந்து வைத்திருக்கிறான். அத்துடன் அங்கு தீட்டியிருக்கும மகேந்திரவர்மன் உருவமும், நடன மாதின் அற்புதத் தோற்றமும் தமிழர் வளர்த்த சித்திரக் கலைக்கு நல்ல சான்றாக அமைந்திருக்கின்றன.
சித்திரக்காரப் புலி என்று புகழ் பெற்ற மகேந்திரவர்மன், சித்தன்னவாசலில் இந்த அழியா ஓவியங்களை எழுதி, தமிழ்நாட்டிற்குள்ளே அஜந்தாவையே கொண்டுவர முனைந்திருக்கிறான். சித்தன்னவாசல் சித்திரத்துக்கு பிற்பட்ட காலத்தவை காஞ்சிபுரத்துக் கைலாசநாதர் கோயில் சுவர் ஓவியங்கள். இந்தக் கோயிலைக் கட்டி சித்திரங்களை தீட்டி வைத்தான். ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்த ராஜசிம்மன். என்னும் இரண்டாம் நரசிம்மவர்மன். இந்த ஓவியங்களில் பல இன்று சிதைந்து அழிந்து விட்டன. உருப்படியான சித்திரங்களே இங்கு காணப்படவில்லை. சித்திர உலகிலும் தமிழர்களுக்குப் பெருமை தேடிக் கொடுப்பவர்கள் சோழ மன்னர்களே. ராஜராஜன் கட்டிய அந்தத் தஞ்சைப் பெரிய கோயிலிலே கர்ப்பக்கிரகத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்திலே அற்புத அழகோடு கூடிய சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. பின் வந்த நாயக்க மன்னர்கள் இவற்றின் மீது சுதை பூசி, தங்கள் கைத்திறனைக் காட்டியிருந்தாலும் தமிழர்கள் செய்த தவப்பயனால் இந்தச் சுதை நீக்கப்பட்டு அந்தப் பழைய ஓவியங்கள் வெளிவந்திருக்கின்றன. சுந்தரமூர்த்தி நாயனாரது சரிதையில் உள்ள முக்கிய சம்பவங்கள் இங்கு சித்திரமாகத் தீட்டப்பட்டிருக்கின்றன.
அத்துடன் திரிபுர சம்காரத்திற்காக இறைவன் புறப்படும் காட்சி பெரிய அளவில் அழகாக உருவாகி இருக்கிறது. சிவபாத சேகரனான ராஜராஜன் கலை மூலம் பக்தியை வளர்க்கலாம் என்று கண்டவன். அதற்காக பெரிய கோயிலைக் கட்டியிருக்கிறான். பெரிய பெரிய சிலை உருவங்களை நிர்மாணித்திருக்கிறான், பெரிய சித்திரங்களையும் தீட்டியிருக்கிறான். சோழர்களுக்குப் பின் நாயக்க மன்னர்களும் மதுரை மீனாக்ஷியம்மன் கோயில் முதலிய இடங்களில் சித்திரங்களைத் தீட்டி வைத்திருக்கிறார்கள். ஆனால், இவை எல்லாம் சிறந்தவை என்று கூற இயலாது. இன்று தமிழ்நாட்டில் ஒரு புதிய உணர்ச்சி பிறந்திருக்கிறது. அதன் மூலமாகச் சித்திரம் தீட்டுபவர்கள் பலர் தோன்றியிருக்கிறார்கள். வண்ண ஓவியங்கள் வரைபடமாகத் திரைச் சீலையில் எல்லாம் எழுதப்படுகின்றன. சமீப காலத்தில் கேரளத்தில் ரவிவர்மாவும் வங்காளத்தில் அவனீந்திரரும் வளர்த்த இந்தக் கலையை இன்று தமிழ்நாட்டில் எண்ணற்ற இளைஞர்கள் வளர்த்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவு தருவார் தொகையும் பெருகி வருகிறது. சித்திரம், சிற்பம் முதலிய கலை வளர்ப்பதன் மூலமாக தமிழர்களது கலை ஆர்வத்தை வளர்க்கலாம், வாழ்வின் தரத்தையே உயர்த்தலாம் என்பது என் நம்பிக்கை. அதற்கு ஆவன செய்ய வேண்டியது தமிழர் கடமை.
ความคิดเห็น