top of page
library_1.jpg

மைசூர் ஹொய்சலர் கோயில்கள்

Writer's picture: Angelica Angelica

இந்தியக் கலைச்செல்வம் - 4

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்


 

மைசூர் ஹொய்சலர் கோயில்கள்


‘கவிச் சக்கரவர்த்தி கம்பனது இராமாயணத்தைப் படிக்கும்போது, மாமல்லபுரத்துச் சிற்ப வடிவங்களைக் காணும்போது பெறுகின்ற அனுபவத்தை பெறுகிறேன்’ - என்று அமரர் உ. வே. சு. ஐயர் எழுதுகிறார். உண்மைதானே? மாமல்லபுரத்துக் குடைவரைகளையும், அங்கு உருவாக்கியுள்ள சிற்பச் செல்வங்களையும், மலைகளையே வெட்டிச் செதுக்கி அற்புதம் அற்புதமான கல்ரதங்களை உருவாக்கியிருப்பதையும் பார்க்கும் போதெல்லாம் தமிழ் நாட்டில் கலை வளர்த்த பல்லவ மன்னர்களின் இதயத்தில் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருந்த கலை ஆர்வம் எத்தகையது என்று அளவிட முடியும் தானே? இவ்வளவு தானா? இந்தக் கலை ஆர்வம் நாளும் வளர்ந்து பின்னர் சோழ மன்னர்களில் தலைசிறந்தவனான ராஜ ராஜன் காலத்து எய்திய மகோந்நதமான நிலையைக் காணும்போது நமது உள்ளம் விம்முகிறதே! அந்த ராஜராஜன் உருவாக்கிய தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் நுழைந்து, அங்கு கருவறை மேலே இரு நூற்றுப் பதினாறு (216) அடி உயரம் வளர்ந்திருக்கும் தக்ஷிண மேரு என்னும் விமானத்தைப் பார்க்கும் போது தமிழராகிய நாம் அன்றையத் தமிழன் உருவாக்கிய காம்பீர்யத்தையே உணர்கிறோமே.


இந்தக் காம்பீர்யம் அமானுஷ்ய சக்தியினால்தான் உருவாகி இருக்க வேண்டும் என்றும் எண்ணத் தோன்றுகிறதே! இதே அனுபவம்தானே கம்பனது காவியத்தில் காணுகின்ற காம்பீர்யத்தை அனுபவிக்கும் போது நமக்கும் ஏற்படுகிறது!


ஆனால் ஒன்று. கம்பனது காவியம் காம்பீர்யம் உடையது என்று மட்டுந்தானா கூறலாம். இல்லையே! பிரதான சம்பவங்களையும், பாத்திரங்களையும் உருவாக்குவதில் எத்தனை திறமையைக் காட்டினானோ அத்தனை திறமையை அல்லவா சிறு சிறு சம்பவங்களை உருவாக்குவதிலும், சிறு சிறு பாத்திர சிருஷ்டியிலும் காட்டியிருக்கிறான். எப்படி பெரியதொரு கோயிலைக் கட்டுகின்ற கலைஞன், தன் சிற்றுளி வேலையின் நயத்தையெல்லாம் அங்கு வடிக்கும் சிற்ப வடிவங்கள் மூலம் காட்டுகிறானோ, அப்படியல்லவா சிறு சிறு பாத்திர சிருஷ்டியிலும் கதையின் கட்டுக் கோப்பிலும் காட்டுகிறான் கம்பன், ஆம். காவியத்தை உருவாக்கும் போது he has carved like a titan and finished like a jeweller - என்று விமரிசனம் செய்வது பொருத்தமானதுதானே? இதே எண்ணம்தான் மைசூர் ராஜ்யத்திலுள்ள ஹொய்சலர் கோயில்களைப் பார்க்கும்போதும் எனக்கு ஏற்பட்டது. விஸ்தாரமான பிரகாரங்களோடு கோயில்களைக் கட்டுவதுடன் கோயில் சுவர், தூண்கள், வாயில், விதானம் எல்லா இடத்தும் சிறிதும் பெரிதுமான சிற்ப வடிவங் களைச் செதுக்கிக் கோயில்களை உருவாக்கியிருக்கிற திறனைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.


நான் இமயத்தின் சிகரத்திலுள்ள சிம்லா சென்றிருந்த போது, அங்குள்ள தையல்காரர்கள் சிலர், துணிகளிலே நுண்ணிதமான சித்திரத் தையல் வேலை செய்வதைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். ஒரிசா ராஜ்யத்தில் கட்டாக் நகர் சென்றிருந்தபோது, அங்கு வெள்ளியில் குங்குமச் சிமிழ், ஜிமிக்கி, கைப்பைகள் எல்லாம் செய்யும் ‘பிலிகிரி’ வேலையின் நுணுக்கத்தைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். ஆனால், இந்த அதிசயத்தை எல்லாம் தூக்கி அடிக்கும் வகையில், கல்லிலே கலை வண்ணம், அதுவும் மிக மிக நுண்ணிய முறையில் ஹொய்சலச் சிற்பிகள் காட்டுவதைப் பார்த்து மூர்ச்சித்தே விழுந்திருக்கிறேன். இந்த ஹொய்சலர் கோயில்கள் எல்லாம் அற்புதம் அற்புதமான கலைக் கோயில்கள். அவர்கள் கட்டிய கோயில்கள் பல இருந்தாலும், மூன்றே கோயில்களுக்கு மட்டும் உங்களை அழைத்துச் சென்று அங்குள்ள கலை அழகைக் காட்ட முனைகிறேன் இன்று.


தமிழ்நாட்டில் ராஜராஜன் முதலிய சோழ மன்னர்கள் அகண்ட ராஜ்யம் ஒன்றை நிறுவி ஆட்சி செய்து வந்தபோது கிருஷ்ணா நதிக்குத் தென்புறம் உள்ள மைசூர் பிரதேசத்தை ஹொய்சலர் மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள். கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டு வரை இவர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள், அவர்களது தலைநகரம் துவார சமுத்திரம் என்ற இடத்தில் இருந்திருக்கிறது. அந்தத் துவாரசமுத்திரம் தான் ஹலபேடு என்று இன்று அழைக்கப்படுகிறது.


முதலில் ஹொய்சலர்கள் என்பவர்கள் யார் என்று தெரிய வேண்டாமா? ஆதியில் கிருஷ்ணன் அரசாண்ட துவாரகையில் இருந்தவர்கள் யாதவர்கள் என்று நமக்குத் தெரியும். துவாரகையிலிருந்த இவர்கள், பின்னர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கமுள்ள சொசாவூர் என்னுமிடத்தில் வந்து குடியேறியிருக்கின்றனர். அப்போது இவர்கள் எல்லோருமே சமண சமயத்தை சார்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். இவர்களது தலைவன்தான் சாலா என்பவன். ஒரு நாள் அவன் காட்டிற்குச் சென்றிருக்கிறான்.


அங்கு ஒரு முனிவரைக் கண்டு வணங்கியிருக்கிறான். அப்போது அந்த இடத்திற்கு ஒரு புலி வருகிறது. புலியைக் கண்ட முனிவர் தன் பக்கத்தில் கிடந்த ஒரு கழியை எடுத்து சாலாவின் கையில் கொடுத்து ‘போய் சாலா’ என்கின்றார். அவரது பாஷையில் ‘சாலா என்பவனே இந்தப் புலியைச் சாடு’ என்று அர்த்தமாம். முனிவர் கட்டளையிட்டபடியே சாலாவும் புலியைச் சாடியிருக்கிறான். புலியைக் கொன்று தீர்க்க கழி மட்டும் காணாது என்று தெரிந்த சாலா தன் உடைவாளை உருவி புலியைக் கொன்று தீர்க்கிறான். அன்று முதல் யாதவர்கள் முனிவர் வாக்கையே தேவவாக்காக ‘போய் சாலா’ என்றே தங்களை அழைத்திருக்கின்றனர். இந்தப் போய் சாலாதான் நாளடைவில் ஹோய்சலர் என்று மாறி அவர்களது குலப் பெயராக வழங்கியிருக்கிறது.


இப்படி ஒரு கதை ஹொய்சலர் குலப்பெயர் பற்றி. இது எவ்வளவு தூரம் உண்மையோ அறியேன். கற்பனைக் கதையாக இருந்தால், எனக்கென்னவோ இதைவிட அழகாகவே கற்பனை செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது. பொய் சொல்லா அரிச்சந்திரன் பரம்பரையில் வந்தவர்கள் அவர்கள் என்று அப்படிப் ‘பொய் சொல்லார்’ என்ற பட்டமே நாளடைவில் ஹொய்சலர் என்று மாறிற்று என்று சொல்லியிருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். சரி. இந்தப் பெயர் ஆராய்ச்சி இத்துடன் இருக்கட்டும். இனி நாம் அவர்கள் கட்டிய கலைக் கோயில்களைச் சுற்றிப் பார்க்க விரைவோம்.


ஹலபேடில் உள்ள ஹொய்சலேஸ்வரர் கோயில். பேலூரில் உள்ள சென்னகேசவர் கோயில், சோமநாதபுரத்துக் கேசவர் கோயில் மூன்றும், ஹொய்சலர் கோயில் கட்டிடக் கலைக்கும், சிற்பச் செல்வத்துக்கும் எடுத்துக்காட்டாக அமைபவை. இக்கோயில்களைக் கட்ட உதவியிருக்கும் கற்கள், நமது தமிழகத்துக் கருங்கல்லைப் போல கடினமானவை அல்ல, ஆனால், மாக்கல்லைப் போலப் பொடிந்து போகக் கூடியதும் அன்று. அக்கற்களை வெட்டி எடுக்கும் போது மெதுவாக இருந்திருக்கும். பின்னால் காற்றிலும் மழையிலும் அடிபட அடிபட இறுகி உறைந்து கடினமாகவும் ஆகியிருக்கிறது.


இம்மூன்று கோயில்களிலும் காலத்தால் முந்தியது ஹலபேடு ஹொய்சலேஸ்வரர் கோயிலே. ஹலபேடு தானே ஹொய்சல மன்னர்களின் தலைகரம்! அங்குதான் அம்மன்னர்கள் சமணர்களாக இருந்த காலத்தில் கட்டிய சமணக் கோயில்கள் பல இருக்கின்றன. என்றாலும் ஹொய்சலேஸ்வரர் கோயில் சிவபெருமானுக்கு என்று எடுப்பிக்கப்பட்ட கோயில். ஹலபேடு மைசூருக்கு வட மேற்கே 87 மைல் தூரத்தில் இருக்கிறது. கோயிலின் அமைப்பு நட்சத்திர வடிவில் இருக்கிறது. காத்திரத்திலும் அழகிலும் சிறந்த கோயிலாக அந்த வட்டாரத்திலே தலைதூக்கி நிற்கிறது. இக்கோயிலின் வெளிச் சுவரில் இடைவெளி இல்லாதபடி சிற்ப வடிவங்களை அடுக்கடுக்காய் அமைத்திருக்கின்றனர்.


பட்டை பட்டையாகக் கிட்டத்தட்ட பன்னிரெண்டு பட்டைகள் அக்கோயிலின் வெளிச்சுவரை அழகு செய்கின்றன. அடித்தளத்தில் யானைகள் ஒன்றையொன்று துரத்திக் கொண்டு ஓடுவது போலவும், அதற்கு மேலே குதிரைகள், யாளிகள், எருதுகள், அன்னங்கள் என்றெல்லாம் பட்டைகள் அமைந்திருக்கும். இவைகளுக்கு இடையே. ஒரு அகன்ற பட்டையில் ராமாயணம், மகாபாரதம் என்னும் இதிகாசக் காட்சிகள் பலவும் செதுக்கப்பட்டிருக்கும். மேல் தளத்திலே கல்லிலே துளை போட்டு அமைந்திருக்கும் ஜன்னல்கள் இருக்கின்றன. அதற்குக் கீழே மூன்றடி அகலம் உள்ள இடத்தில்தான் தெய்வத் திருவுருவங்கள் பலவும் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்திய சிற்பங்கள் நிறைந்த ஒரு கலைக் கூடமாக இக்கோயில்கள் விளங்குகின்றன. அதனால்தான் சிறந்த கலா ரஸிகரான . பெர்கூஸான் என்பவர் மத்திய கால மேலைநாட்டுக் கலைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு பெறாத கட்டிடக் கலை, இங்கே ஹலபேடு கோயிலிலே தான் பூரணத்வம் பெற்றிருக்கிறது என்று வாயாரப் புகழ்கிறார்.


The artistic combination ce horizontal and vertical lines and the play of outlint light and shade far surpass anything in Goethic Art. The effects are just what the medical artitechts were aiming at, but which they never attained so perfectly as was done in Haiebid என்பது அவரது விமரிசனம்.


கோயில் வாயிலில் உள்ள நந்தி மண்டபமும், அங்கே சந்நிதியை நோக்கிப் படுத்திருக்கும் நந்தியும் அழகானவை. இக்கோயில் வாயில் ‘கவுதத்தில்’ எல்லாம் நல்ல சிற்ப வடிவங்கள். இவைகளில் மன்னன் வரும் தெற்கு வாசலையே மிக்க அழகோடு அமைத்திருக்கின்றனர். அந்த வாயிலுக்கு மேலே முகப்பிலே தான் ஆடும் பெருமான் உருவாகி இருக்கிறார்: இரண்டு பக்கங்களிலும் மகர வளைவுகள் இருக்கின்றன.


ஹொய்சல மன்னர்களின் முத்திரைச் சின்னமான காலா புலியைக் கொல்லும் காட்சியைக் கல்லில் வடித்து, ஒவ்வொரு வாயிலின் இருபுறத்தும் அமைத்திருக்கிறார்கள். நர்த்தன விநாயகர், நர்த்தன சரஸ்வதி, நரசிம்மன், கோவர்த்தன வடிவங்கள் எல்லாம் சுவர்களிலும் தூண்களிலும் உருவாகி இருக்கின்றன. இத்தனை வடிவங்களுக்கும் இடையில்தான் கருவறையில் அருவமான லிங்க வடிவில் ஹொய்சலேஸ்வரர் எழுந்தருளியிருக்கிறார். இந்த ஹலபேடிலேயே, கேதாரேஸ்வரருக்கும் ஒரு கோயில், அதுவும் ஹொய்சலேஸ்வரர் கோயிலைப் போலவே அமைப்பும் சிற்ப வடிவங்களும் நிறைந்தது. ஹொய்சலேஸ்வரர் கோயிலைக் கட்டியவன் வீர நரசிம்மன் என்று சரித்திர ஏடுகள் பேசுகின்றன.


ஹலபேடிலிருந்து தெற்கு நோக்கிப் பத்து மைல் வந்தால் பேலூர் சென்னக்கேசவர். கோயிலையும் பார்க்கலாம். இந்தச் சென்னக்கேசவர் கோயில் ஹலபேடு ஹொய்சலேஸ்வரர் கோயிலைவிட அளவில் சிறியதுதான் என்றாலும், இங்குள்ள கட்டிடக் கலையும் சிற்ப வடிவங்களும் ஹலபேடு கோயிலைவிட உயர்ந்தவை. ஹலபேடைப் போலவே இந்தக் கோயில் வெளிச் சுவரில் வரிசை வரிசையாய், பட்டை பட்டையாய் சிற்ப வடிவங்கள் பல செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வடிவங்களில் சிறப்பானவை மேல் வரிசையில் உள்ள ‘மதனிகை’ வடிவங்களே. கிட்டத்தட்ட நாற்பது பெண்கள் அங்கே உருவாகியிருக்கின்றனர். இவர்களில் ஒரு சிலரே தெய்வ மகளிர், மற்றவர்கள் எல்லாம் சாதாரணப் பெண்களே. எல்லோருமே நல்ல அழகிகள். எல்லோருமே ஏதோ. நடனம் ஆடப் புறப்பட்டவர்கள் போலவே பல ‘போஸ்’களில் - நிற்கிறார்கள்.


பொட்டிடும் நங்கை, கிளியேந்திய பெண், கொடியடியில் நுடங்கும் மடக்கொடி, காதலன் வரவை எதிர்நோக்கி நிற்கும் காரிகை, ஆடையில் தேள் ஒன்றிருக்கிறது என்று அறிந்து அந்த ஆடையை உதறிவிட்டு நிற்கும் மங்கை - இப்படி எண்ணற்ற பெண்கள் உயிரோவியங்களாக அங்கே நிற்கின்றனர். எல்லா வடிவங்களிலுமே சிற்றுளியின் நயம் தெரியும். நுணுக்க வேலைப் பாடுகளோடு கூடிய வடிவங்களாக அவை அமைந்துள்ளன. ஆதலால் இந்த மதனிகைகள் பேரில் வைத்த கண்களை எடுத்து விட்டு மேலும் நடப்பது என்பது ரசிகர்களால் முடியாத காரியம். ஆனால் ஒன்று, இந்த அழகிகளையும் வெல்லும் அழகிகள் அல்லவா கோயிலுள் நிற்கிறார்கள் என்ற எண்ணமே, நம்மைக் கோயிலுள் இழுத்துச் செல்லும். கோயிலுள் இருக்கும் நவரங்க மண்டபம், கட்டிடக் கலையில் ஒரு அற்புத சாதனை,


இம்மண்டபத்தின் விதானத்திலே ஒரு விரிந்த தாமரை மலர் தொங்குகிறது. ஆம். குளத்தில் மலர்ந்த தாமரை அல்ல. கல்லிலே மலர்ந்த தாமரைதான். இங்குள்ள ஒரு தூணில் நரசிம்மரும், மற்றொரு தூணில் நாட்டிய சரஸ்வதியும் பெரிய அளவில் உருவாகியிருக்கின்றனர். இக்கோயிலைக் கட்டிய சிற்பி ஜக்கண்ணா ஆச்சாரி என்று! தெரிகிறது. அவன் தன் திறமையில் அசாத்திய நம்பிக்கை உடையவனாக இருந்திருக்கிறான்,


அவன் அங்குள்ள தூண்களில் ஒன்றில் மட்டும் ஒரு இடத்தைக் காலியாக வைத்துவிட்டு, மற்ற எல்லா இடங்களையும் அலங்காரங்களாலும் சிற்ப வடிவங்களாலும் நிறைத்திருக்கிறான். தன்னை விட அழகாகவும், அற்புதமாகவும் வேறு யாரும் செய்ய முடியாது. முடியுமானால் செய்து பார்க்கட்டும் என்றுதான் இந்த இடத்தை ஒதுக்கி ஒரு சவால் விட்டிருக்கிறான் என்று தெரிகிறது. இங்குள்ள மூல மூர்த்தி சென்ன கேசவர். இவரையே விஜய நாராயணன் என்றும் அழைக்கின்றனர். ஆறடி உயரத்தில் கம்பீரத்தோடு நிற்கிறார். இந்தக் கம்பீர வடிவினைச் சுற்றி அமைத்திருக்கும் பிரபா வழியிலே தசாவதார வடிவங்களையும் சிறிய சிறிய வடிவில் அமைத்திருக்கிறான் சிற்பி.


இந்தக் கேசவன் இருக்கும் கருவறை வாயிலிலே இரண்டு துவாரபாலகர்கள், இருவரும் நல்ல கம்பீரமான வடிவினர். இக்கோயிலின் வெளிப் பிரகாரத்திலே, சென்னக்கேசவர் கோயில். அங்கும் வேணுகோபாலன் லட்சுமி நாராயணன், சரஸ்வதி, விநாயகர், மகிஷ மர்த்தனி எல்லாம் உருவாகி இருக்கின்றனர். இக்கோயிலைக் கட்டியவன் விஷ்ணு வர்த்தனன். கட்டப் பட்ட வருஷம் 1117. அவன் ஆதியில் சமணனாக இருந்து பின்னர் தமிழ்நாட்டிலிருந்து சென்ற ராமானுஜரால் வைஷ்ணவனாக்கப்பட்டவன். இருவரும் சேர்ந்து உருவாக்கிய கோயில் இது. இதனால்தான் கலை அழகு நிரம்பியதாய் இக்கோயில் அமைந்து இருக்கிறது.


இந்தச் சென்னக்கேசவர் கோயில் கட்டி சுமார் நூற்று ஐம்பது வருஷங்களுக்குப் பின்னர் அதாவது 1268-இல் மைசூருக்குக் கிழக்கே 20 மைல் தூரத்தில் சோமநாதபுரத்தில் ஒரு கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. மூன்றாம் நரசிம்மவர்மன் காலத்தில் மன்னனின் உறவினனும் மந்திரி பிரதானிகளில் ஒருவனாகவும் இருந்த சோமநாதனே இங்கு ஒரு நகரையும் நிர்மாணித்து இந்தக் கோயிலையும் கட்டியிருக்கிறான். அதனால்தான் ஊரும் கோயிலும் சோமநாதன் பெயராலேயே வழங்குகிறது. பேலூரிலும் ஹலபேடிலும் காணாத விமானங்கள் இக்கோயிலில் உருவாகி இருக்கின்றன.


கோயில் பேலூர் கோயிலைவிடச் சிறிதுதான் என்றாலும் கோயிலைச் சுற்றி மண்டபத்துடன் கூடிய பிரகாரம் ஒன்றும் அமைந்திருக்கிறது. அந்த மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் பல இருக்கின்றன. மண்டபத்தையும் கடந்து வெளிப்பிரகாரத்தில் இறங்கித்தான் கோயிலை வலம் வரவேண்டும். கோயில் சுவர்களில் மற்ற இரண்டு கோயில்களிலும் பார்த்தது போலவே ஓடும் யானைகள், குதிரைகள், யாளிகள் எல்லாம் வரிசை வரிசையாக இருக்கும். வடபக்கத்துச் சுவரில் ராமாயணக் காட்சிகளும், தென்பக்கத்துச் சுவரில் மகாபாரதக் காட்சிகளும் நிறைந்திருக்கும். இன்னும் எண்ணற்ற தெய்வ வடிவங்களும் அச்சுவர்களில் உப்புச உருவில் உருவாக்கி நிற்கும் கோயிலுள் நுழைந்தால், அங்குள்ள தூண்களும் விதானமும் பலபல விசித்திர வேலைகள் நிரம்பியதாய் இருக்கும். இக் கோயிலுள் மூன்று சந்நிதிகள். பிரதானமாக நிற்பவன் கேசவன். வட பக்கத்தில் தெற்கே பார்க்க நிற்பவன் ஜனார்த்தனன். தென் புறத்தில் வடக்கே பார்க்க நிற்பவன் கோபாலன்.


இங்குள்ள ஜனார்த்தனனும், கோபாலனும் மிக அழகு வாய்ந்தவர்கள், அத்தனை அழகை கேசவன் பெற்றிருக்கவில்லை. காரணம் ஆதியில் செய்யப்பட்ட கேசவன் இன்று அங்கு இல்லை. அவன் மிக்க அழகுள்ளவனாகவும், கோயில் பூரணப் பொலிவுடையதாகவும் அமைந்து விட்ட காரணத்தால், வானுலகிலுள்ள தேவர்கள் இக்கோயிலைத் தாங்கள் இருக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்ல விரைந்திருக்கின்றனர். கோயிலுக்கு இறக்கைகள் முளைத்து வான் வீதியில் கிளம்பியிருக்கிறது. இதை அறிந்த சிற்பி, கேசவன் வடிவிலே ஒரு ஊனத்தை ஏற்படுத்தி, அதன் பூரணத்துவத்தைக் குலைத்திருக்கிறான். அது காரணமாக வான வீதியில் எழுந்த கோயில் திரும்பவும் பூமியில் இறங்கியிருக்கிறது.


இறங்கும் போது கொஞ்சம் விலகி இறங்கிவிட்டதினாலேதான் கோயில் வாயிலில் இருக்க வேண்டிய கருட கம்பம், வாயிலை விட்டு விலகியிருக்கிறது. இப்படி ஒரு கற்பனைக் கதை. கோயிலையும் அங்குள்ள சிற்ப வடிவங்களையும் கண்டால் இந்தக் கதை கூட உண்மையாகவே இருக்குமோ என்றுதான் தோன்றும். இக்கோயில்தான் ஹொய்சலரது கோயில் கட்டிடக் கலையில் சிகரம் என்கின்றனர், கலா ரசிகர்கள்.


சரி, இந்த ஹொய்சலர் கோயில்களைப் பார்க்கும் போதெல்லாம் தஞ்சையில் ராஜராஜன் கட்டிய பெருவுடையார் கோயில் விமானத்திலுள்ள காம்பீர்யமும் அங்கு பின்னர் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட அறுமாமுகவன் கோயில் சுவர்களில் உள்ள நுணுக்கமும் ஒன்றாகச் சேர்ந்து உருவானதாகவே தோன்றும்.


இந்தியாவிலே உள்ள கலைக் கோயில்கள் பலவற்றிலும் நுணுக்க வேலைப்பாடு சிறந்திருப்பது இந்த ஹொய்சலர் கோயில்களே, இருநூறு வருஷ கால எல்லைக்குள்ளே அதி அற்புதமான கோயில்களைக் கட்டி அழியாப் புகழ் தேடிக் கொண்டவர்கள் ஹொய்சல மன்னர்கள்தான். அவர்கள் நமது அண்மையில் உள்ள நாட்டையும் அரச பரம்பரையையும் சேர்ந்தவர்கள் என்கிறபோது நமக்கும் அது பெருமை தருவதுதானே.


 

Comentarios


Subscribe here to get my latest posts

Thanks for submitting!

© 2023 Powered by Tamil Bookshelf

  • Facebook
  • Twitter
bottom of page